21 November 2024
Kiruthika Story

நாற்பது  என்பது  பொய்தானே?’ என்று  டொப்  சத்தத்துடன்  அந்த  கேள்வி  வந்து  விழுந்தபோது நர்மதாவுக்கு  சிரிப்பு  வந்தது. காதுகள்  கூர்மையடைந்து  விடைத்தன. வாட்சப்பில்  அவனுடைய  மெசேஜிக்கு  ஒருவிதமான  சத்தத்தை  நிறுவியிருந்தாள். நீர்  சொட்டும்   துல்லிய சத்தம்.

” ட்ராப்லெட்  விழுது…”

ஸ்ருதி  சொல்லிவிட்டுப்  போவாள். அவள்  கையிலிருந்த  அலைபேசியில்  வெப்சீரிஸ்  ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும்  எதிராளி  கேள்வி  கேட்கும்போது  ட்ராப்லெட்ஸ்  நெஞ்சில்  விழுந்து  குறுகுறுத்தது. இரண்டு  நாட்களில்  இருபத்தைந்துக்கும்  மேற்பட்ட  கேள்விகள்.

ஃபேஸ்புக்கில்  நட்பும், மெசஞ்சரில்  அறிமுகமும், எண்  பரிமாற்றமும்  அதற்குப்  பின்பான  வாட்சப்  சம்பாஷணைகளும்  நெடுநாள்  பழகிய  உணர்வின்  சாரலை  தன்  மேல்  தெளித்ததாய்  அவள்  உணர்ந்தாள்.

‘ சொல்லு, நாப்பதுங்கறது  பொய்தானே….?’

மீண்டும்  அதே கேள்வி.

நர்மதா  பார்த்துவிட்டுப்  பேசாமலிருந்தாள். ஒரு  சிரிப்பு  உதிர்ந்து  காற்றில்  அலைந்தது. அடுப்பு  ஜுவாலையின்  சூட்டில்  சிவந்த  முகத்தில்  மேலும்  சிவப்பின்  ஆதிக்கம்.

” கோடைவெயில்  சுட்டெரிக்குது. ”

முந்தானையில்  கழுத்தைத்  துடைத்துக்கொண்டாள்.

” சாப்பிடலாமா…நேரமாச்சு….”

அறைக்குள்ளிருந்து  மதன்  சத்தமாக  குரல்  கொடுத்தபோது  டிவியில்  ஷின்சான்  யோஷினாக்காவைப்  படுத்திக்கொண்டிருந்தான். தருணுக்கு  மூவர்  அமரும்  சோபா  சரியாக  இருந்தது. ஒரு  தலையணையை  சாய்த்து  வைத்து  வசதியாக  அமர்ந்து  பொழுதுக்கும் டிவி பார்ப்பது அவனுக்குக் கொரோனா காலத்துப்  பொழுதுபோக்காகிவிட்டிருந்தது. மூன்று  மணிநேர  ஆன்லைன்  வகுப்புக்குப்  பின்  அவன்  சோபாவே  கதியென்று  கிடந்தான்.

” டயமாச்சு. ஊத்திட்டியா…?”

மதன்  பரபரத்தான். வீட்டிலிருந்து  வேலைப்  பார்ப்பதொன்றும்  இனிக்கும்  விஷயமாயில்லை.

” வீட்ல  இருந்துதானே வேலை  பாக்குறீங்க. அப்புறமென்ன…”

அவன்  அந்தக்  கேள்வியை  தவிர்க்க  விரும்பினான். நர்மதா  தோசைக்குத்  தக்காளிச்சட்னி  அரைத்திருந்தாள். மதன்  நின்றபடியே  சாப்பிட்டு  முடித்தான். அதற்குள்  கேள்விகள்  காளான்களாய்  முளைத்துக்  கிடந்தன. மிக்சி  மேலிருந்த  அலைபேசி  அரவம்  காட்டாதிருந்தது. மதனின்  குரல்  கேட்டதுமே  நர்மதா  ம்யூட்  மோடுக்கு  மாற்றியிருந்தாள். சாப்பிட்டுக்  கைகழுவி  மதன்  அறைக்குள்  புகுந்து  கொண்டான். லாப்டாப், செல்போன், சார்ஜர், ஹெட்போன்ஸ்   இத்தியாதிகள்  மெத்தை  மேல்  பரவிக்கிடந்தன. இனி  இரண்டு  மணிக்குதான்  தலைகாட்டுவான்.

ஸ்ருதி  இன்னொரு  அறைக்குள்.  ஆன்லைன்  வகுப்பும், வெப்சீரிஸும்  சங்கமம். தருணுக்கு  சோபாவே  சுகம். நர்மதா  அலைபேசியில்  சத்தம்  கூட்டினாள். இரண்டு  தோசைகளுக்கு  சட்னி  கிண்ணத்தை  வழித்தெடுத்துக்  கொண்டாள். ட்ராப்லெட்  விழுந்தது. கவனியாததுபோல  டைனிங்டேபிளுக்கு  வந்தாள்.

‘ நாற்பது  என்பது  பொய்தானே…’

கேள்வி  குடைக்கம்பியாய்  நடு  மார்பில்  குத்திற்று. ஃபேஸ்புக்  ப்ரொஃபைலில்  புதிதாய்  மாற்றிய  புகைப்படம்  முந்தின  வருடம்  நடந்த  ஒரு விசேஷத்தில்  எடுத்தது. மயில்  கழுத்து  வண்ணப்பட்டு  புடவையில்  சன்னமான  பவளமாலை  அணிந்து  மல்லிகைச்சரத்தை  முன்னாலிட்டுக்கொண்டு  அவள்  கண்கள்  மலர  சிரித்து  நின்றிருப்பாள்.

” காலேஜில  படிக்கிற  பொண்ணு  இருக்கறமாதிரியே  தெரியல. எத்தனை  ரிக்வஸ்ட்  வரப்போவுதோ…” என்று  மதன்  கிண்டலடித்தான்.

‘ உங்க  சிரிப்பு  கொல்லுதுங்க.’

ஒரு  ஆள்  அனுப்பியிருந்தான். ஐம்பது வயதிருக்கும். நர்மதாவுக்கு  எரிச்சல்  பற்றிக்கொண்டு  வந்தது.

” இதுக்கே  காத்திருப்பானுங்க….” எரிச்சலோடு  முணுமுணுத்தாள்.

மதன்  சொன்னதுபோல்  பதினெட்டு  வேண்டுகோள்கள்  வந்திருந்தன. நான்கு  பெண்களும், பதினான்கு  ஆண்களும்…..சலிப்பாயிருந்தது. கடைசியில்  இருந்த   அந்த  முகம்  தொடுதிரையில்  விரலை  நிறுத்தியது. துறுதுறு  கண்களுடன்  தலைசாய்த்துக்  கன்னத்தில்  வலக்கரத்தைப்  பதித்தபடி  பார்த்துக்கொண்டிருந்தது  அந்த  முகம். அந்திவானின்  இளவெயிலின்  சாயல்.

கண்கள்  எப்போதுமே  ஒரு  பெரும்  மனதைத்  திறந்து  விடுகின்றன. அந்தக்  கண்களுக்கும்  அப்படியொரு  சக்தியிருந்ததில்  நர்மதா  தன்னியல்பாக  கோரிக்கையை  ஏற்றுக்கொண்டாள்..


மூகசேவகியின்  முகத்துக்குக் கருணைக்கண்கள்  அவசியம்” என்பாள்  தோழி  ரோஸி. திருமணம்  மறுத்து  பொதுச்சேவையில்  ஈடுபடுபவள். அவளுக்குச்  சாம்பல்  நிற  விழிகள். பார்ப்போரைக்  கவர்ந்திழுக்கும்  இளமை  பூரித்தாடும்  உடலோடு  அவள்  சமூக  சேவை  செய்யக்  கிளம்பியபோது  தோழிகள்  கிண்டலடித்தனர்.

” நீ   குடும்பச்சேவை  செய்யத்தான்  லாயக்கு….”அவள்  அம்மா  புலம்பினார்.

” நீயாவது  சொல்லக்கூடாதா…. இந்த  வயசுல  இவளுக்கு  இதெல்லாம்  தேவையா….”  நர்மதாவுக்குச் சொல்லி  வாய்  வலித்துவிட்டது.

” அம்மா  மனசை  நோகடிச்சிட்டு  நீ  பொதுச்சேவை  செஞ்சி  பிரயோஜனமில்ல. ” பிரசங்கங்கள்  எடுபடவில்லை.

“ இந்தக்  கண்ணுல  காண்டாக்ட்  லென்ஸ்  போட்டுக்கட்டுமாடி…அப்பயாவது  கருணைப்  பொங்குதான்னு  பாக்கலாம்.”

கண்ணாடியில்  அந்த  முகம்  புருவம்  சுருக்கிற்று.

” கண்ண  மறைச்சிடுவ. உடம்பு  முழுக்க  கொட்டிக்  கிடக்கற  இளமையை  என்னடி  செய்வ…..?”

நர்மதா சுள்ளென்று  கேட்க, ரோஸி  விழுந்து, விழுந்து  சிரித்தாள். அடக்கமுடியாத  சிரிப்பு. கண்கள்  வழிந்தன.

கண்கள்…. பொங்கும்  கண்கள். இந்தக்  கண்கள்  மாய  வலைப்  பின்னுகின்றன. துறுதுறு  விழிகளின்  ஈர்ப்பு  விசை  விசுக்கென்று  இழுத்துக்கொள்கிறது.


வன்  திலீபன். இன்ஜினியர், பெங்களூரில்  வாசம்  என்று   விபரங்கள்  கூறின. கோரிக்கையை  உறுதி  செய்தவுடன்  மெசெஞ்சரில்  நன்றி  வந்தது.

ளம்பெண்களெல்லாம்  பொதுச்சேவை  செய்யக்கூடாதா….?” ரோஸி  பிஸிபேளாபாத்தை  வழித்து  வாயில்  போட்டுக்கொண்டாள்.

” உன்  வயசு உன்னை  கனிவோட  நோக்க  வைக்காது. கவர்ச்சியின்  பிம்பமாத்தான்  எடை  போட்டுக்  காட்டும். ”

எத்தனை  வார்த்தைகள். இரு  பொன்னிற  மடல்களிலும்  ஈக்கள்  போல  வார்த்தைகள்  மொய்த்தன. ரோஸி  ஒரே  மகள். ஓரளவு  வசதி  உண்டு. அவள்  அம்மாவுக்கு  ஆயிரம்  கனவுகளிருந்தன. வைக்கோல்  போர்  பற்றியெரிவது  போல்  அத்தனையும்  எரிந்தபோது  வயிற்றெரிச்சல்  தாங்காமல்  கத்தினாள்.

” என் வம்சத்த தழைக்க வுடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியாடி. வேர்ல நெருப்பள்ளிக் கொட்டிட்டு நீ போயி சேவகம் செஞ்சி என்ன பிரயோஜனம்…..? ” மனம் தாளாமல் குமுறினாள். நர்மதாவுக்கு பார்க்க சகிக்கவில்லை.


” சாப்பிட்டாச்சா….?” அடுத்த  கேள்வி  வந்தது.

‘ ஆச்சு….அப்புறம்,  உண்மையிலேயே  எனக்கு  நாப்பது  வயசுதான். ‘

நர்மதா  தட்டிவிட்டுக்  காத்திருந்தாள். சிறிது நேரத்துக்குப்  பதிலேதும்  வராதுபோக,

‘ வயசு  கன்ஃபார்ம்  ஆனதும்  சாட்  பண்ணப்  பிடிக்கலையா?’ என்று  ஒரு  கேள்வி  அனுப்பினாள். உடனே  பதில்  வந்தது.

‘ பைத்தியம்…… ஒரு  கால்  வந்தது.   அட்டன்ட்  பண்ணிட்டு  வந்தேன்.’

அவன்  ஒரு  முத்தமிடும்  ஸ்மைலியை  கூடவே  அனுப்பினான். வாயருகில்  இதயம்  உள்ள  ஸ்மைலி. நர்மதாவும்  நாலு  ஸ்மைலிகள்  அனுப்பினாள். உள்ளே  ஒருவித  உணர்வு. ஃபில்டரில்  கொதிக்கும்  நீரூற்றினால்  காபித்தூளின்  மேல்  காற்றுக்குமிழிகள்  புருபுருத்து  வெடிக்குமே. அதேமாதிரி  அடிவயிற்றில்  புருபுருத்தது.

பிறப்பு, குடும்ப  விபரம்  ஏற்கனவே  விசாரித்தாகிவிட்டிருந்தது. ஆரம்பகட்ட  விசாரணையே  அதுதான்.

‘ எனக்கு  இருபத்தஞ்சு  வயசு, இன்ஜினியர், ஐடியில  ஒர்க்  பண்றேன். இப்ப  ஒர்க்  ஃபிரம்  ஹோம்.’

அவன்  சரசரவென்று  அடித்தான். நர்மதாவுக்கு  வேகம்  வரவில்லை. தவறான  எழுத்துக்களில்  விரல்பட்டு  தப்பு, தப்பான  வார்த்தைகள்  வந்தன. அவற்றைத்  திருத்தி  சரிசெய்து  அனுப்ப  நேரம்  பிடித்தது.  இரண்டாம்நாள்  மாலையிலிருந்து  நீங்க, நீயாக  மாறியது.

‘ கெழவிக்குக் கை  நடுங்குதா…… டைப்  பண்ண  இவ்ளோ  நேரமாகுதே .’ அவன்  கிண்டலடித்தான். நர்மதா  கோப  முகத்தை  அனுப்பினாள். உடனே  அந்தப்புறமிருந்து  பதில்  வந்தது.

‘ சாரி  டியர்… சும்மா  விளையாட்டுக்கு.’

கூடவே  இரு  கைகளாலும்  அணைத்துக்கொள்வது  போன்ற  இமோஜிக்கள்  நாலு  இணைந்திருந்தன. மார்பின்  மத்தியில்  படபடத்த  வண்ணத்துப்பூச்சியொன்று  ஜிவ்வென்று  கீழிறங்கிப்  பறந்தது. அது தன்  ஜரிகை  போன்ற  இறகுகளால்  அடிவயிற்றில்  துழாவிவிட்டு  அதனினும்  கீழேப்  பறந்தது.

‘ என்ன  பேச்சையே  காணும்.’

‘ வேலை  இருக்கு, அப்புறம்  பாக்கலாம்.’

நர்மதா  அலைபேசியை  அணைத்து  வைத்தாள். அதன்பிறகு  மூன்று  ட்ராப்லெட்ஸ்  விழுந்தன. மதன்  தண்ணீர்  கேட்டு  குரல்  கொடுத்தான். பாட்டிலில்  நிரப்பிக்  கொண்டு  சென்றவளைத்  தன்பக்கம்  வளைத்து  இழுத்தான். அவள்  பதற,

” பிரேக்தான்…” என்று  இடுப்பில்  கைவைத்து  சாய்த்து  இதழோடு  இதழ்  பொருத்திக்கொண்டான்.

” இதென்ன  நேரங்கெட்ட  நேரத்துல….” நர்மதா  திமிறினாள்.

” இதுக்கெல்லாம்  நேரங்காலம்  உண்டா, என்ன….”அவனின்  பிடி  இறுகியது.

” பசங்க  வெளியில  இருக்காங்க. ஞாபகமிருக்குல்ல….”

அவளின்  குரலோடு  அலைபேசி  இழைந்தது. மதன்  வேண்டா வெறுப்பாக  நகர்ந்தான்.

ரோஸிக்குத்  தருணுடன்  விளையாடப்  பிடிக்கும். குழந்தையாய்  இருந்தபோது  அடிக்கடி  வந்து  தூக்கி  வைத்துக்கொள்வாள். மார்பில்  போட்டு  தூங்கப்பண்ணுவாள். இப்போதும்  வந்துவிட்டால்  அவனை  இழுத்து  மடியில்  அமர்த்திக்கொள்வாள்.

” பன்னெண்டு  முடிஞ்சி  பதிமூணு  ஆரம்பமாயிட்டுது. உதட்டு  மேல  லேசா  பூனை  மயிர்  வளர்த்தி  வேற. அவன்  பெரியவனாயிட்டே  வர்றான். உனக்குப்  புரியலையா….?”

நர்மதா  மிக்ஸர்  தட்டை  அவளிடம்  நீட்டினாள். தருண்  கூச்சமாய்  அமர்ந்திருந்தான்.

” எவ்ளோ  வயசானாலும்  இவன்  எனக்குக்  குட்டிப்பாப்பாதான். எத்தனைநாள்  இவனை  அங்கத்  தொட்டுக்  கொஞ்சியிருக்கேன்  தெரியுமா….”

தருண் முகம்  சிவந்து  எழுந்தோடினான். ரோஸி  ஆர்ப்பட்டமாய்  சிரித்தாள். கண்கள்  பொங்கும்  சிரிப்பு. நாற்பதுக்குத்  தளதளக்காத  தேகம். புதிதாய்  கட்டிய  வேலிப்படலைப்  போல  அவ்வளவு  நறுவிசு. புடவையை  மீறித்  தெரியும்  பிரசவ  ரேகைக்கோடுகளை நர்மதா  அவசரமாக  மறைத்துக்கொண்டாள் .

” உனக்கும்  இந்த  வயசுல  ஒரு  பிள்ளை  இருந்திருக்கலாம். நீயா  கெடுத்துக்கிட்ட… ”

ரோஸி  அலட்சியமாக  மிக்ஸரைக்  கொறித்தாள். தன்னிலை  விளக்கமளித்து  அலுத்துவிட்டது. அன்பு  காட்ட  அவளுக்குப்  பிடிக்கவில்லை. கொட்டத்தான்  பிடித்திருந்தது. மேலிருந்து  தொப, தொபவென்று  கொட்டும்  அருவி  நீர்  போல. சொட்டும்  நீரல்ல  அது, கொட்டும்  நீர். அதற்கு  ஒருவன்  தாங்க  மாட்டானென்று  சொல்லிச்  சிரிப்பாள். சிரிப்பு, நெஞ்சம்  திறந்த  சிரிப்பு.


ரு  போட்டோ  போடு….’ திலீபன் கேட்டிருந்தான்.

‘ சிரிச்சமாதிரி…’

அடுத்த  ட்ராப்லெட்  இடைவெளியில்லாமல்  விழுந்தது. காலரியில்  பல  போட்டோக்கள்  கொட்டிக்  கிடக்கின்றன. எதை  அனுப்புவது…நர்மதாவுக்கு  ஜாக்கிரையுணர்வு  தொற்றிக்கொண்டது. நின்று, உட்கார்ந்து, சாய்ந்து  பலவித  போஸ்களில்  எக்கச்சக்க  போட்டோக்கள். எதிலும்  அழகுக்குக்  குறைச்சலில்லை. அதிலொன்றை  தேர்ந்தெடுத்தபோது  இதயத்துடிப்பு  அதிகரித்தது. ஒருமுறைக்கு  நான்கு  முறைகள்  போட்டோவைப்  பார்த்து  திருப்தியுற்ற  பின்  அதை  அவனுக்கு  அனுப்பினாள்.

‘ வாவ்….பியூட்டிஃபுல்…’

‘ ரொம்ப  அழகு…’

‘ இருபத்தஞ்சுதான்  சொல்லலாம். ‘

‘ அதுக்குமேல  ஒரு  மாசம்  அதிகம்  சொல்லமுடியாது.’

கடகடவென்று  அடுத்தடுத்து  ட்ராப்லெட்ஸ்  விழுந்தன. கடைசியாக  துடிப்பது  போன்ற  இதயம். இங்கே  இதயம்  உண்மையிலேயே  படபடக்கத்தான்  செய்தது. வார்த்தைகளில்  வசீகரம். அது  உணர்வுகளைச்  சுமந்து  வருகிறது. உணர்வு….அது  உள்ளோடி,  இல்லாத  கனவுகளைத்  திறந்து  விட்டுவிடுகிறது. அது  ஆனந்திக்க  செய்வதற்காகவே  வார்த்தைகளில்  சமர்த்தாக  பொருந்திக் கொள்கிறது,  தடத்தில்  பதியும்  வடிவம்போல. உருண்டோடி  வந்து  விழுந்த  வார்த்தைகளில்  சாதம்  குழைந்து  போனது  கவனத்திலில்லை.

ம்மா, விசில்  வந்துக்கிட்டேயிருக்கு…”

தருண், டோரிமானுக்கு   இணையாக  கத்தினான். நர்மதா  திகைத்து  அடுப்பை  நிறுத்தினாள்

‘ என்  போட்டோ  கேக்க  மாட்டியா..’ அவன்  சோகமுகத்தை  அனுப்பினான்.

‘ சரி  போடு.’

நர்மதா  காத்திருந்தாள். சமையல்மேடை  வாகாக  இருந்தது. குளுந்து  கிடந்த  மேடையில்  காலாட்டியபடியே  அமர்ந்திருக்கும்  சுகம்  இதுவரை  அறிந்திராதது. இப்போது  அதுவே  ஆசனமாகிவிட்டிருந்தது. அவன்  இரண்டு  புகைப்படங்களை  அனுப்பியிருந்தான். கூலர்ஸ்  போட்டுக்கொண்டு  ஒன்று, நாற்காலியில்  திரும்பி  அமர்ந்து  ஒன்று. இருபத்தைந்தில்  இளமை  ஊறிய  முகம்.

‘ உன்னைவிட  நான்  பதினஞ்சு  வயசுப்  பெரியவ. எங்கூட  எதுக்கு  சாட்  பண்ற…’ நர்மதா  திடீரென  கேள்வி  அனுப்பினாள்.

‘ ஏன்  கூடாதா..?’

‘ உனக்கும், எனக்கும்  நடுவுல  என்ன  இருக்கு?’ இந்தக்  கேள்வி  கேட்கும்போது  வயிறு  குழைந்தது.

‘ தெரியல ‘

‘ போன  ஜென்மத்துல  அக்கா, தம்பியா  அல்லது  அம்மா, பிள்ளையா இருந்திருப்போமோ….?’

கேட்டுவிட்டு  நர்மதா  அலைபேசியை  மிக்சிமேல்  வைத்துவிட்டு  வெளியே  வந்தாள். மனசு  படபடத்தது. ஏன்  இந்தக்  கேள்வி  வந்தது. புரியவில்லை.

‘ சுய  பரிசோதனை  செய்கிறேனா…? சந்தேகம்  வந்ததா  அல்லது  எழுந்த  எண்ணத்தை  உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவா…’ அவள்  அவசரமாக  தலையசைத்து  மறுத்துக்கொண்டாள்.

‘ இதென்ன  புதுசா…இதுவரை  இல்லாதது. ஏதோ  சமைத்து, பிள்ளைகளை  வளர்த்து, டிவி  பார்த்து, மதனுடன்  சல்லாபித்து, ஒரு  சராசரி  வாழ்க்கை  வாழ்ந்து  விட்டதால்  உண்டான  சலிப்பிற்கான  வடிகாலா  இது. ‘

அவள்  உட்கார  இடம்  தேடினாள். இடங்கள்  ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. பால்கனியில்  காற்று  அள்ளியது. மதிய  வெயிலின்  உக்கிரம்  அதிகமில்லாத  பால்கனி. அருகிலிருந்த  வேப்பமர  நிழல்  கவிந்திருந்ததில்  இடம்  குளிர்ச்சியாயிருந்தது.

மகள்  ஸ்ருதி  இருக்கும்  அறையின்  பால்கனி. நர்மதா  சுவரில்  சாய்ந்து  கால்நீட்டி  அமர்ந்தாள். ரிசல்ட்  அறிந்து  கொள்ளும்  ஆவல். பதிலுக்கான  ஆப்ஷன்கள்  உள்ளே  ஓடின. எதைத்  தேர்ந்தெடுத்திருப்பான்  என்பது  குறித்தான  ஆவலாதியில்  அலைபேசியை  உயிர்ப்பித்தாள். அதற்குள்  பதினைந்து  செய்திகள்  வந்திருந்தன. அவனிடமிருந்து  ஒன்றேயொன்று  மட்டும். பதினாலு  குழுக்களிலிருந்து  வந்திருந்தன. நர்மதா  அவனுடைய  மெசேஜிக்குத்  தாவினாள்.

‘ இந்த  உறவைத்  தவிர  வேற  எதுவும்  இருக்கக்கூடாதா….’

கிளைகிளையாய்  உள்ளெங்கும்   படர்ந்த  உணர்வின்  துழாவலில்  உடல்  நெகிழ்ந்தது.

‘ சைலன்ட்டா  இருந்தா  என்ன  அர்த்தம். பதில்  சொல்லு  ப்ளீஸ்.’அவன்  கெஞ்சியிருந்தான். நர்மதா அமைதியாயிருந்தாள்.

மதனுடனான  இருபது  வருட  பந்தத்தில்  வரவர  இரவு  நேர  ஈடுபாடு  குறைந்துவிட்டதாக  அவன்  அடிக்கடி   புகார்  கூறினான்.

” மரக்கட்டை   மாதிரி கெடக்கறியே…கடுப்பா  வருது” என்ற  அவனின்  வெறுப்பு  அவளுக்கு  எரிச்சலூட்டியது.

” நாப்பத்தெட்டு  ஆச்சு. கிட்டத்தட்ட  அரைசதம். ஆனா  ஆசை  விடல….” நர்மதா  மனதிற்குள்  கறுவுவாள்.

‘ மேடம், என்ன  யோசனை.’

திலீபன்  கேட்டிருந்தான். அறிமுகத்தின்போது  மதன், குழந்தைகள்  பற்றி  விசாரித்தான். அதன்பிறகு  மூச்சு  விடவில்லை.

‘ நான்  அழகா  இருக்கப்போய்த்தானே எனக்கு  ரிக்வஸ்ட்  கொடுத்த.’

நர்மதா  கேட்டவினாடி, ஆமா  என்று  பதில்  வந்தது.

‘ உன்னை  யாருன்னே  தெரியாது.  எதேச்சையா  உன்  ப்ரொஃபைல்  போட்டோ  பார்த்தப்ப  மனசுக்கு  குளிர்ச்சியா  இருந்துச்சு. அதனால    ரிக்வஸ்ட்  குடுத்தேன்.’

நீளமாய்  அனுப்பிவிட்டு  அமைதியாயிருந்தான்.

‘ கதை படிக்கப் பிடிக்குமா?’

ஒருநாள் காலை எழுந்ததுமே குட்மார்னிங்குக்கப்புறம் இந்தக் கேள்வி வந்திருந்தது. காபி பருகியபடியே,

‘ பிடிக்கும்’ என்று அனுப்பினாள்.

உடனே அவன் ஒரு கதையை அனுப்பி வைத்தான்.

‘ மயிலன். ஜி. சின்னப்பன்ங்கற எழுத்தாளரோட கதை.  படிச்சிட்டு வா.  காத்திருக்கேன்.’

பத்து நிமிடங்களுக்குள் நர்மதா கதையை முடித்திருந்தாள்.  கல்லூரி காலத்தில் பாலகுமாரனும்,  ரமணிச்சந்திரனும் அவளை ஆக்கிரமித்திருந்தார்கள். திருமணத்திற்குப் பிறகு படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டிருந்தது. வீடு உறங்கிக் கொண்டிருந்தது. அமைதியின் ஆழ்நிலை தியானம். அந்த தியான நிலையில் அவளை தொந்தரவு செய்யாதவண்ணம் வீடு உறைந்து கிடந்தது. பத்து நிமிடங்கள் கரைந்தன.

‘ படிச்சிட்டியா டியர்.’

எப்போதாவது டியர் வரும். நர்மதா ஆரம்பத்திலிருந்தே வாடா, போடா தான். வயது அந்தச் சலுகையை அவளுக்குத் தாராளமாக வழங்கி விட்டிருந்தது. நிறைய நேரம் கோபித்துக் கொள்ளவும் சில நேரங்களில் செல்லமாய் விளிக்கவும் ‘ டா’க்கள் நிறைய உதவின.

அத்துடன் இணைந்த இமோஜி நிலைமையைச் சொல்லும் சூசக மாதிரிகள்.

‘ படிச்சாச்சு.’

‘ புரிஞ்சதா?’

‘ திருமணமான ரெண்டு பேர் சினேகிக்கறது.’

‘ அவனுக்கு அவளைப் பிடிச்சிருக்கு. நட்பைத் தாண்டின ஒண்ணு. அதை அவன் தக்க வச்சுக்க விரும்பறான். ‘

‘ ஆமா.’

‘ நாமளும் அப்படித்தானே. ‘

‘ தெரியல. ‘

‘ லூசு… அப்படித்தான். வித்தியாசம் என்னன்னா எனக்குக் கல்யாணம் ஆகல. அவ்ளோதான். மத்தபடி நாமளும் அப்படித்தான்.’

‘ சரி.’

‘ நீ கேட்டியே அந்தக் கேள்விக்கு இந்தக் கதை மூலமா எனக்குப் பதில் கிடைச்சிருச்சு. உனக்கும்தான். புரியுதா?’

‘ புரிஞ்சதுடா.’

‘ தங்கம்.’

அவள் கூடவே முத்தச் ஸ்மைலிகளை அனுப்பினாள். உணர்வுகளற்ற முகங்கள் முத்தங்களைத் தாங்கி வந்தன. நர்மதாவின் உணர்வுகளைக் கொப்பளிக்கச் செய்தன. குமிழ்கள் கொப்பளித்து வெடித்தன.

“ அம்மா பசிக்குது.”

ஸ்ருதி எட்டிப்பார்த்தாள். நர்மதா அவசரமாய் எழுந்தாள்.

“ இப்பல்லாம் போன் ரொம்ப யூஸ் பண்றம்மா.”

சிரித்தபடி கை கழுவினாள்.

“ வேற என்ன பண்றது. நீ ஒரு ரூம், அப்பா அங்க. தருண் பொழுதுக்கும் டிவி தான். எனக்கும் ஒரு பொழுதுபோக்கு வேணாமா.”

“ சும்மா சொன்னேன்மா.”

அவள் தோள்களைப் பிடித்து குலுக்கி விட்டுப் போனாள். மதனும் அறையிலிருந்து எட்டிப்பார்த்தான்

”சாப்பிடலாமா….. பத்துக்கு மீட்டிங்.”

” வாங்க…”

நர்மதா டைனிங் டேபிளை நிரப்பினாள். கதை மனதில் ஓடியது.

‘ நட்பைத் தாண்டிய ஒன்று, ஆனால் காதல் இல்லை. அது ஒரு உணர்வு. சொல்லத் தெரியாத இனம்காண முடியாத உணர்வு. காமம் தேவைப்படாத உடலுக்கு நட்பைத் தாண்டின காதலைத் தொடாத ஒரு உணர்வு தேவைப்படுவது  விவஸ்தைக்கெட்டத்தனமா…….காமம் தேவைப்படாத உடம்பு……’

நர்மதாவுக்கு இதழ்க் கடையோரம் ஒரு புன்னகை உருவானது.

‘ வெறும் ஸ்மைலிகளுக்கு உடல் கிளர்வதேன்? ‘

அவள் சமாதானத்துக்கு இடைஞ்சலாக கேள்வி பிறந்தது.

‘ மதனுடனான மல்யுத்தம் ஏன் சலிக்க வைக்கிறது?’

கேள்விகள் எழும்பி மனதைக் குழப்பின. இப்படியும்,  அப்படியுமாய் ஊஞ்சலாட்டம் ஆடும் மனது. இதுதான் என்று எண்ணும்போதே அதுவோ என்று எதிர்ப்புறத்துக்குத்  தாவும்  மனதை எப்படி சமன்படுத்துவது….

அவள்  உஃப்  என்றாள். மதன் கைகழுவும் சாக்கில் அவளைப்  பின்புறம்  உரசினான். நர்மதா  திடுக்கிட்டுத்  திரும்பினாள்.

” இப்பெல்லாம்  நீ  வேற  உலகத்துல  இருக்கமாதிரி  தோணுது. என்னாச்சு…..?”

சொம்பு  நிறைய  நீரை  வார்த்துக்  குடித்தவன்  புருவம்  உயர்த்தினான். .

” அட…அப்படியா. எனக்குத்  தெரியவேயில்லையே….”கைகளை  விரித்து  சிரித்தாள்.

 

ரோஸி  வந்து  ரொம்ப  நாளாச்சுல்ல. கம்ப்யூட்டர்  பாத்து. பாத்து  கண்ணு  ரெண்டும்  எரியுது. அவ  வந்தான்னா  கொஞ்சம்   குளிர்ச்சியா  இருக்குமேன்னு  கேட்டேன்.”

மதன்  கண்ணடித்து சிரித்தபடி  அறைக்குள்  புகுந்துகொண்டான்.

திலீபன்  பாரதியார்  பாடலை  மேற்கோள்   காட்டி  ஃபேஸ்புக்கில்  பதிவிட்டிருந்தான்.

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி, நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!

‘ பாரதியாரெல்லாம்  பிடிக்குமா  உனக்கு?’

‘ நல்லா  கேட்ட  போ. எனக்கு  அவர்ன்னா  உயிர்.’

அவன்  அதை  ராகமாக  பாடி  வாய்ஸ்  மெசேஜ்  அனுப்பியிருந்தான். ஓரளவுக்கு  நன்றாகத்தானிருந்தது.

‘ சின்ன  வயசுலேருந்தே  பாரதியார்ன்னா  பெரும்  பித்து. பாரதியார்  மாதிரி  வேஷம்  போட்டு  ஸ்கூல்ல  நிறைய  போட்டிகள்ல  கலந்துக்கிட்டிருக்கேன். ‘

தலைப்பாகை  வைத்து  கருப்பு  கோட், வெள்ளை  வேட்டியுடுத்தி  கையில்  பரிசுக்கோப்பையுடன்  நிற்கும்  போட்டோக்கள்  சிலது  அனுப்பினான். பால்முகத்திலிருந்து  பருவமுகம்  வரை  பரிணாம  வளர்ச்சிகளோடு  புகைப்படங்களில்  பாரதியார்  சிரித்தார்,

‘ சின்னஞ்சிறு  கிளியே  கண்ணம்மா  பாட்டுல  உனக்கு  எந்த  வரி  பிடிக்கும்?’கேட்டு  அனுப்பினான். நர்மதா  யோசிக்காமல்,

‘ உன்  கண்ணில்  நீர்  வழிந்தால்  என்  நெஞ்சில்  உதிரம்  கொட்டுதடி’ என்று  பதில்  அனுப்பினாள்.

‘ எனக்கு, உச்சிதனை  முகர்ந்தால்  கருவம்  ஓங்கி   வளருதடி…இதான்  இஷ்டம்.’

‘ அதைச்  சொல்லும்போதே  நமக்குள்ள   ஒரு கர்வம்  வரும்  பாரு .’

” அது  அப்படி  இருக்கும்.”

கடைசிவாக்கியத்தை  மட்டும்  பேசி  அனுப்பியிருந்தான். கரகர  குரல்  குழைந்து வந்தது. பால்  சாதக்குழைவு  போல  பஞ்சுக்குழைவு. ஆண்மை  நிரம்பிய  குரலில்  மிருதுவான  மென்ஒலி  ஏறி  ஒருவித  இதத்தைக்  கொடுத்தது.

‘ உனக்குப்  பாட  வருமா?’

கேள்வி  வந்தது.

‘ சுமாரா.’

‘ ஒரு  பாட்டுப்  பாடி  அனுப்பும்மா.’

ரொம்பவும்  நெருக்கமாய்  உணரும்போது  ம்மா  வந்து  குமியும். அது  பின்னுச்சி  மயிரை  இதமாய்  வருடுவது  போலிருக்கும். அப்பா  வாம்மா, போம்மா  என்றுதான்  விளிப்பார். அப்பாவின்  ம்மாக்களில்  உறைந்திருந்த  அதே  குளுமை  ;அவனுடைய  ம்மாவை  அவள்  வாசிக்கும்போது  உணர்ந்தாள்.

‘ முடியாது  போடா.’

உரிமையாய்  சொல்ல  எந்த  தயக்கமும்  வராதது  ஏனென்று  அவளுக்குப்  புரியவில்லை. முன்  அறிமுகமற்ற  இருவருக்குமிடையிலான  உரையாடலில்  இலகுத்தன்மை  இயல்பாய்  வந்தது  எதேச்சையான  நிகழ்வு  போலவே  தோன்றிற்று. சனி, ஞாயிறுகளில்  மதன்  இங்குமங்குமாய்  இருந்தான். திலீபனுடன்  பேச  சூழ்நிலை  ஒத்துழைக்கவில்லை.

‘ கண்டுக்கவே  மாட்டேங்குற.’ இரு  கண்களிலும்  தாரை  வார்த்திருந்தான்.

‘ சனி, ஞாயிறு  அப்படித்தான்.’

நர்மதா  டைப்  செய்து  அனுப்பிவிட்டு  போனை  ம்யூட்  மோடில்  போட்டாள்.

‘ உன்கிட்ட  பேசாம  இருக்கறது  பைத்தியம்  பிடிச்சிடும்  போலிருக்கு.’

‘ உனக்கு  வேற  ஸ்நேகிதிகள்  இல்லையா?’

‘ இருக்காங்க. ஆனா  உன்னைமாதிரி  வாஞ்சையோட  இல்ல. அவங்களுக்கு  குட்மார்னிங், குட்நைட்  பார்வேடெட்  மெசேஜோட  சரி. ‘

‘ நீ  மட்டும்தான்  ரொம்ப  நெருக்கமானவளா  என்னை  ஃபீல்  பண்ண  வைக்கிற.’

என்னவோ  தான்  சொல்ல  நினைத்ததை  அவன்  சொல்லிவிட்டது  போல  நர்மதாவுக்குப்  பட்டது. வெளி  ஆண்களிடம்  அளவான  புழக்கம்தான். அதிலும்  சொற்ப  அளவே. ஆனால்  திலீபனுடன்  சரளமாக  உரையாட  முடிந்தது.

வயது  வித்தியாசம்  தந்த  சுதந்திரமா, அவன்  பேச்சில்  தெரிந்த  உரிமையின்  மீதான  நம்பிக்கையா… புரியவில்லை. புதுப்புத்தகத்தின்  வாசனை  போல, திரும்ப, திரும்ப  நுகர்ந்து  பார்க்கத்  தூண்டும்  ஆவல்.

‘  கொப்பளித்த  ஆவலை  கட்டுப்படுத்த  என்ன  அவசியமுள்ளது. நாற்பதின்  தொடக்கத்திலுள்ள  இரண்டு  குழந்தைகளைப்  பெற்ற  தாய்  நான். எனக்கு  விரியும்  எல்லையின்  மீதான  விழிப்புணர்வு  உள்ளது . எல்லை  தாண்டிய  அத்துமீறலை  ஒருபோதும்  அனுமதித்ததில்லை. ‘

மனசாட்சி  தன்னிருப்பை  உணர்த்தும்  முனைப்பு  காட்டிற்று. நர்மதா  கண்களை  மூடிக்கொண்டாள்.

மதிய  உறக்கம்  இரண்டு  மணியிலிருந்து  மூன்று  மணிக்குள். தூங்கி  எழுந்ததும்  செல்போனைத்  துழாவும்  புதுப்பழக்கம்  அவளுக்கே  ஆச்சர்யம்  தந்தது.

” என்கூட  இருந்தவனுங்க  எல்லாரும்  சொந்த  ஊருக்குப்  போயிட்டானுங்க. இப்ப  பிளாட்ல  நான்  மட்டும்தான். சனி, ஞாயிறுல ரொம்ப  போரடிக்குது. ‘

ஒருநாள் சொன்னான்.

‘ படம்  பாக்க  வேண்டியதுதானே.’

‘ தனியா  படம்  பாக்க  பிடிக்காது. நீ  வர்றியா  சேர்ந்து  பார்க்கலாம்.’

நாக்கு  நீட்டி  ஒற்றைக்  கண்  மூடியிருக்கும்  ஸ்மைலியை  சேர்த்து  அனுப்பினான். நர்மதா  கோபமுகம்  காட்டினாள்.

‘  கோச்சிக்காத. சும்மா  கேட்டேன். சாப்பிட்டாச்சா?’

அவன்  சட்டென்று  மாற்றிக்கொண்டான். தயாரித்து  வைக்காத  கேள்விகள். மனதில்  தோன்றியதைக்  கேட்டுவிடுவதால்  அடுத்ததிற்கு  தாவும்  சுபாவம்  இயல்பாக  கைவரப்பெற்றிருந்தது  அவனுக்கு.

‘ இன்னிக்கு  சும்மா  செல்போனை  தோண்டிக்கிட்டிருந்தேன். அப்ப  திடும்னு  அந்தப்படம்  ஓட  ஆரம்பிச்சிடுச்சு.’

‘ அந்தப்  படம்னா.’

‘ அதாம்ப்பா. கெட்டப்படம். நீ  பாத்திருக்கியா.’

‘  இல்ல. பாத்ததில்ல.’

நர்மதா  பட்டென்று  பதில்  அனுப்பினாள். அவள்  அனுப்பிய  மெசேஜில்  நீலக்குறியீடு  வரும்முன்னே  அடுத்த  மெசேஜ்  அவனிடமிருந்து  வந்திருந்தது.

‘ அதப்   பாத்ததுமே  எனக்குக்  காமமாயிடுச்சு.’

உள்ளே  சிலீரென்று  எதுவோ  இறங்கியது.

‘ இதையெல்லாம்  என்கிட்ட  எதுக்கு  சொல்ற?’

‘ சொன்னா  தப்பா. வயிறு  பசிச்சா  சொல்றதில்லையா. அதுமாதிரிதான்  இதுவும்.’

‘ எனக்குப்  பிடிக்கல. இந்தப்  பேச்சு  வேணாம்.’

” உனக்குப்  பிடிக்காமலா  ரெண்டு  கொழந்தைங்க…சாரி,  விடு….மத்தியானம்  என்ன  சாப்பிட்ட…?”.

வாய்ஸ்  மெசேஜ்  அனுப்பியிருந்தான்.

‘ சொல்ல  முடியாது  போடா.’

‘ நான்  தாண்டி  வந்துட்டேன். நீ  இன்னும்  அங்கேயே  நின்னு  அதையே  அசைப்  போட்டுக்கிட்டிருக்க. ‘

வாய்  மூடி  சிரிப்பது  போன்ற  ஸ்மைலியை  இணைத்து  அனுப்பியிருந்தான்.

நறுக்கென்று  தலையில்  கொட்டியது போலிருந்தது. நர்மதா  அசடு  வழிவது  போன்ற  ஸ்மைலியை  அனுப்பினாள்.


ரோஸிக்கு  முகம்  வாடியிருந்தது. அவள்  ஒரு  தொண்டு  நிறுவனத்தில்  வேலைப்  பார்க்கிறாள். மனவளர்ச்சிக்  குன்றிய  குழந்தைகள்  காப்பகம்  அது. நிதிப்  பற்றாக்குறையால்  தள்ளாடிக்  கொண்டிருந்தது. பிறந்தநாள், திருமணநாள்,  திதி  போன்ற  விசேஷங்களின்போது  கொடுக்கப்படும்  நிதியால்  தட்டுத்தடுமாறி  ஓடிக்  கொண்டிருந்தது. நர்மதாவும்  தீபாவளி, பொங்கல், பிள்ளைகள்  பிறந்தநாட்களின்போது  பணம்  தருவாள்.

” குழந்தைகளுக்கு  மூணுவேளை  சாப்பாட்டுக்கு  உத்திரவாதம்  கிடைச்சா  போதும். நிம்மதியா  இருப்பேன். ‘

அவள்  தரையில் கால்நீட்டி  அமர்ந்தபடி  பெருமூச்சு  விட்டாள். கொஞ்சம்  பழுப்பான, கசங்கிய  உடை  அணிந்திருந்தாள். பணத்துக்கு  எங்கோ  அலைந்துவிட்டு  வந்திருக்கிறாள்  என்பதை  முகச்சோர்வு  காட்டிக்கொடுத்தது. அவள்  அம்மா  பார்த்தால்  தலையிலடித்துக்  கொள்வார்  என்று  தோன்றிற்று.  மதன்  எட்டிப்  பார்த்து, ஹாய்  சொல்லிவிட்டு மறைந்தான்.

“மதன்  பளபளன்னு  ஆயிட்டு  வரார். நல்லா  கவனிக்கிற  போல…”

கண்ணடித்துச்  சிரித்தாள். நர்மதா  அவள்  தோளைத்  தட்டினாள். சோபாவில்   இரு  முழங்கைகளையும்  பின்புறமாக  ஊன்றி  சரிந்து  கால்நீட்டி  அமர்ந்திருந்தவளுடைய  புஷ்டியான  மார்பகங்கள்  ஏறி,  இறங்கி கவனிக்க  வைத்தன. இளமை  கலையாத  உடற்கட்டு, நாற்பது  வயதுக்கு  இந்தத்  தோற்றம்  அதிகப்படி  என்று  நர்மதாவுக்குத்  தோன்றியது. திருமணம்  பெண்களைக்  கலைத்துப்  போட்டுவிடுகிறது  என்றெண்ணி  உச்  கொட்டினாள்.

” என்னடி….?”

ரோஸி   புருவம்  உயர்த்த  நர்மதா  சிரித்தாள்.

” ஒண்ணுமில்ல. என்ன  சாப்பிடுற….டீயா, காஃபியா….?”

” எதுவும்  வேணாம். வர்ற  வழியில  ஒரு  டீக்கடையில  டீ  குடிச்சிட்டுதான்  வர்றேன்.”

” நீ….டீக்கடையில….?”

” ஆமா, என்ன  தப்பு.”

” தப்பேயில்ல  கலியுகத்துக்  கமணியே. நீ  போனதுல  டீக்கடைக்காரருக்கு  கல்லா  நெறஞ்சிருக்கும். நல்லதுதான்  பண்ணிட்டு  வந்திருக்க.”

ரோஸியின்  சிரிப்பில்  கயமையற்ற  குழந்தைத்தனம்  தெரிந்தது. குழந்தைகளோடு  ஐக்கியமாகிவிட்டவளுடைய  சிரிப்பில்  அந்த  சாயல்  ஒட்டிக்கொண்டிருந்தாய்  நர்மதா  எண்ணிக்கொண்டாள்.

 

காலையில  நூடுல்ஸ்  பண்ணினேன். பாரு  எப்படியிருக்குன்னு.’

அவன்  ஒரு  புகைப்படம்  அனுப்பினான். நூடுல்ஸ்  மஞ்சள் நிறக்கூழ்  போல் சட்டியில்  ஒட்டிக்கிடந்தது.

‘ ஃபோர்க்  வச்சு  எடுத்து  சாப்பிட்டியா?’

‘ நக்கலா…அம்மாகிட்டேயிருந்து  போன். பேசிக்கிட்டே  அதை  மறந்துட்டேன்.’

‘ அப்புறம்  என்ன  பண்ணினே?’

‘ இந்த  லாக்டவுன்  நேரத்துல  எதையுமே  வீணாக்கக்கூடாதுல்ல. அதனால  ஸ்பூன்  போட்டு  சாப்பிட்டேன். ‘

அவன்  சிரிப்பு  ஸ்மைலியை  அனுப்பினான். நர்மதாவும்  ஒன்றை  அனுப்பினாள்.

‘ ஒரு  கதை  அனுப்பட்டுமா?’

‘ வேணாம். கதை  படிக்கிற  மூடு  இல்ல.’

‘ படிச்சா  பிடிக்க  ஆரம்பிச்சிடும். அப்புறம்  கீழே  வைக்கமாட்ட.’

நர்மதா  விடாப்பிடியாய்  வேண்டாமென்றாள். மனதின்  ஊஞ்சலாட்டம்  நிற்கவேயில்லை. கதைக்கான  நியாயம்  அவனிடமிருக்கும். அதைக்  குறிப்பால்  உணர்த்த  முயல்வதுபோல்  நர்மதாவுக்குத்  தோன்றிற்று.

‘ சனி, ஞாயிறு  உன்கூட  சாட்   பண்ணாம  ரொம்ப  போரடிக்குது.’

‘ இந்த  ஒரு  மாசமாத்தானே  நான் . அதுக்கு  முன்னாடி  என்ன  செஞ்சே?’

‘ இந்த  ஒரு  மாசமாத்தான்  போரடிக்குதுன்னு  சொன்னேன்.’

‘ சீக்கிரமே  கல்யாணம்  செஞ்சிக்கோ. நல்லாப்  பொழுது  போகும்.’

‘ கல்யாணம்னு  சொன்னவுடனே  மூடு  வந்துடுது. சும்மா  இருந்தவனைக்  கிளப்பி  விட்டுட்டியே.’

நர்மதா  நாக்கைக்  கடித்துக்கொண்டாள்.

‘ உனக்கு  அதைப்பத்திப்  பேசினா  பிடிக்காது . காமம்னா  கெட்ட  வார்த்தை  உனக்கு. ‘

நர்மதா  மௌனமாயிருந்தாள்.

‘ கோவில்  கோபுரத்துல  பார்த்திருக்கியா…’

‘ சிலைகள்  புரியற  காமத்தை. ‘

‘ காமத்தைக்  கொண்டாடாத  எழுத்தாளர்களே  இல்ல, தெரியுமா… ‘

அவன்  ஒவ்வொரு  வாக்கியமாக  அனுப்பிக்கொண்டேயிருந்தான்.

‘ காமம்  ஒரு  கலை. ‘

‘ அதைப்பத்தி  பேசினா  தப்புன்னு  நினைக்கறது  உன்னோட  அறியாமை.’

‘ வீணை  நரம்பை  வருடி, வருடி  இசையைக் கசியவிட்டு  அதனுள்  ஐக்கியமாகி  உடல்  துய்த்த  நிலைக்குத்  தாவுதல்  உச்சம். உச்சத்தில்  கரைந்து  போதல்  தியானநிலை. உச்சம்  தொட்டு  விலகவே  மனசு  வராது. பிரக்ஞையின்றி  அதிலேயே  கிடந்தழியப்  பிரியப்படும்  மனதுக்கு  எதுவும் சாசுவதமில்லை என்று புரிய வெகுநேரமாகாது. சில  வினாடிகளில்  சுயத்தைக்  கண்டு  சாந்தமடையும்  மனதில்  கடவுள், தன்  தன்மையைப்  புகுத்தி  குளிரச்செய்து  விடுகிறார். அதுதான்  காமத்தின்  விளைவும். இப்ப  சொல்லு  காமம்  நல்ல  விஷயம்தானே.’

நர்மதா  கால்களைக்  குறுக்கி  அமர்ந்தாள். இட்டிருந்த  சம்மணம்  இறுகியது  இதமான  உணர்வைத்  தந்தது. மாலை  நேரக்காற்று  எங்கோ  பெய்த  மழையின்  ஈரத்தைக்  சுமந்து வந்தது. பட்டுச்சரிகையையொத்த  வெயில்  எதிர்வீட்டில்  இளஞ்சிவப்பு  காம்பவுண்டின்  மீது  விரிந்து  கிடந்தது. பால்கனியில்  அமர்ந்திருந்த  நர்மதா  அலைபேசியை  வெறித்தாள். திலீபன்  ஈஸ்  டைப்பிங்  என்ற  வாக்கியம்  மின்னிக்  கொண்டேயிருந்தது. அடுத்த  சில  வினாடிகளுக்குப்  அந்த  நீண்ட  மெசேஜ்  வந்து  விழுந்தது.

‘ என்  மனைவிகிட்ட  காமத்தைக்  கலை  போல  புரிவேன். அந்தக்  கலைக்குள்ள  அவ  ஆடி, பாடி, சிரிச்சு, குதூகலிச்சு  சன்னத  வெறியோட  உச்சத்தை  அடைய  அனுமதிப்பேன். விரல்ல  சொடுக்கெடுக்கற  மாதிரி  லேசான  வேதனையோட  அவளுக்கு  சுகம்  தரணும். அந்த  உயிருக்கு, கட்டின  தாலிக்கு  செய்யற  மரியாதை  அதுதானே  டியர்.’

நர்மதாவின்  விழியோரங்களில்  இரு  நீர்மணிகள்  அரும்பியிருந்தன.

” வலிக்குது, ரொம்ப  வலிக்குது …..”

இருளின்  அடர்த்தியில்  கரைந்துவிட்ட  குரலின்  தீனம். திருமணமான   புதிதில் அடிவயிற்றில்  சுரீர், சுரீரென  உண்டான  வலி  பகலில்கூட  அழுத்தமாய்  மனதில்  படிந்து  கிடந்த  அவலம். பொழுது  சாய்ந்த  நேரத்தில்  சொரசொரவென்று  நெஞ்சிலூரும்  பயம்  குரல்வளையைக் கவ்விக்  பிடிக்கும்போது  உடலழுந்த  இயங்கும்  அவனைக்  குத்திக்  கொள்ள  வேணும்போல  உந்துதல்  உண்டாகும்.

பொட்டென்று  இரு  நீர்த்துளிகள்  மடியில்  உதிர்ந்தன. நர்மதா  புறங்கையில்  கண்களை  ஒற்றிக்கொண்டாள்.  ட்ராப்லெட்ஸ்  விட்டுவிட்டு  விழுந்திருந்தன. அதை  கவனிக்காது,

‘ இனி  வாட்சப், மெசஞ்சர்  எதிலும்  தொடர்பு  கொள்ள  வேண்டாம் ‘ என்று  தட்டி  அனுப்பிவிட்டு  ப்ளாக்  ஆப்ஷனைத்  தேடி  அழுத்தினாள். நீங்கள்  இந்த  தொடர்பு  எண்ணை  ப்ளாக்  செய்து  விட்டீர்கள்  என்று  கீழே  வந்தது. அடுத்த  அரை  நிமிடத்தில்  ரோஸியிடமிருந்து  மெசேஜ்  வந்தது.

வீட்டுல  முன்னாடி  ரூம்  இருக்குல்ல. நாமெல்லாம்  உட்கார்ந்து  அரட்டையடிப்போமே. அந்த  ரூம்  ஜன்னல்  பக்கத்துல  சேரைப்  போட்டு  அதுவழியா  வெளியில  தெரியற  புங்கமரத்தை  வேடிக்கைப்  பாத்துக்கிட்டேயிருக்காங்க. ரெண்டு  பழைய  நைட்டி. அதைத்  தவிர்த்து  வேறெதையும்  உடுத்தறதில்ல. அப்பா  போனதுக்கப்புறம்  இதுதான்  சாசுவதமாயிருக்கு.. மனசுக்கு  ரொம்ப  வருத்தமாயிருக்குடி. கொஞ்சநாள்  அம்மாகூட  இருக்கலாம்னு  முடிவு  பண்ணி வீட்டுக்கு வந்துட்டேன். ‘


  • ஐ.கிருத்திகா

எழுதியவர்

ஐ.கிருத்திகா
திருவாரூர் சொந்த ஊர். தற்போது திருச்சியில் வசிக்கிறார். பல்வேறு இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும், வணிக இதழ்களிலும் கிருத்திகாவின் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x