12 March 2025
Malaysia Srikanthan KS 25

நான், இப்போது உருக்குழைந்து கொண்டிருக்கிறேன். என்னையே எனக்கு அடையாளம் தெரியவில்லை!. 

ஒரு கொலையைச் செய்துவிட்டு இரண்டு வாரங்கள் நிம்மதியாக இருந்தேன்.  

எவ்வளவு அவமானங்களை எத்தனைக் காலம் தாங்கிக்கொண்டிருந்தேன்?.

ஒரு கொலைக்காரனால் இப்படியெல்லாம் நிம்மதியாக இருக்க முடியுமா என்று நீங்கள் சந்தேகம் கொள்ளலாம்!. ஒரு மனைவியின் நச்சரிப்பை அனுபவித்திருக்கிறீர்களா?. அப்பா, அது ஒரு நரக வேதனை!. தற்கொலைக்கூட செய்துக்கொள்வீர்கள், தைரியம் இருந்தால்?.

‘நான் கோழை!.’ 

ஆனால், அவ்வளவு நிம்மதியும் இரண்டே வாரங்களில் தொலைந்து போய், செய்தக் கொலைக்கு  அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. இரண்டு வாரங்களாகவே நான் நித்திரையும், நிம்மதியும் கெட்டு, அரண்டக் கண்களால் இருட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!.  

 

சொன்னால் நம்பமாட்டீர்கள்!. நாங்கள், காதலித்துத் திருமணம் செய்துக்கொண்ட காதலர்கள்!. 

– அவளுக்கு உடன் பிறந்தவர்களென்று யாருமே கிடையாதாம். இரண்டு வயது குழந்தையாய் இருக்கும்போதே அப்பா, விபத்தொன்றில் இறந்து போனாராம். தாய், ஒற்றைத் தனிமனுசியாக யார் யாரிடமோ விட்டு அவளை வளர்த்தெடுத்தாளாம். அந்த வளர்ப்பில் சில ஆண்கள், அவர்களின் வக்கிரத்திற்குத் தன்னைப் பாவித்து திகைக்க வைத்தச் சம்பவங்கள், இப்போதும் கொடுங்கனவுகளாய் வந்து அவள் தூக்கத்தைக் கெடுக்கின்றனவாம்!. அவளுக்கு உறவு என்று யாருமே கிடையாதாம். கடந்த வருடம், ஒரு நோயில் தாய் இறந்த போது, சக அலுவலக ஊழியர்களே வந்து காரியம் செய்து உதவினார்களாம்!.  அவள் ஓர் அநாதையாம்!. 

ஓரு நாள், என் தோளில் சாய்ந்துகொண்டு கண்கள் கலங்கி, குரல் கம்ம, தனது நிராதரவைச் சொல்லித் தேம்பியழுதாள். நான் உருகிப் போனேன். அவளுக்குள் இவ்வளவு சோகமா?. அனுதாபம் பீரிட்டெழுந்தது!, தனிமையில், முத்தத்தைத் தவிர வேறு சரசங்களுக்கு இடங்கொடுக்காமல் தன்மேல் மிகுந்த மரியாதையையும், லயிப்பையும் ஏற்படுத்தியிருந்தவள். பூசை, புனஸ்காரங்களில் மிகுந்த நாட்டமும் கொண்டிருந்தாள். 

எனக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது. திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதைச் சொன்னேன். ஏனோ பலத்த தயக்கத்திற்குப் பின்னரே -அன்றாட வற்புறுத்தலுக்கிடையேயே- சம்மதித்தாள். அப்போதே வயது எனக்கு 38-ம், அவளுக்கு 35-ம் ஆகியிருந்த காலத் தாமதம் வேறு!.

காதலில் முத்தத்திற்கு மட்டுமே இடங்கொடுத்து என்னைப் பைத்தியமாக்கியவள் முதலிரவிலும் அதையே செய்தபோது நான் திடுக்கிட்டுப் போனேன். முதலில், ‘களைப்பாக இருப்பதாகச்’ சொன்னாள். பின்னர், ‘தலை வலிப்பதாகச்’ சொன்னாள். ‘இன்றே இதையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டுமா?.’ என்று கேட்டாள்.  அவள், ஏதோ குறும்பு செய்கிறாள் என்றே எண்ணினேன். ஆசையுடன் அவளின் முலைகளைப் பற்றினேன். அவள், உடனே என் கரங்களைத் தடுத்துப் பிடித்துக்கொண்டாள்!. நான் வியப்புடன் அவளைப் பார்த்தேன்!. அவள் என் பார்வையைத் தவிர்த்தாள்.     

‘நான் எவ்வளவு கனவுகளுடனும் கற்பனைகளுடனும் அந்த நாளுக்காக காத்திருந்தேன்?.’

அந்த மறுப்பை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை!. ‘இன்று முதலிரவு!. இதில் காத்திருப்பதற்கு என்ன இருக்கிறது?’. நான் பொறுமையை இழந்தேன்!. பலவந்தமாகவே அவளுடன் உடலுறவு கொண்டேன். ஆரம்பத்தில் காட்டிய மறுப்பு பிறகு இருக்கவில்லை!. காதலனாக அவள் மேல் அவ்வளவு நேசம் கொண்டிருந்த நான், கணவனாக காட்டிய பலாத்காரத்தைக் கண்டு பாவம், மிரண்டுதான் போனாள். 

‘அவள் சிறுமியாய் இருக்கும்போது பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாகச் சொல்லியிருந்தாளே?.’ 

அது நினைவிற்கு வந்ததும் அவள்மேல் பரிவும், பாசமும் பீரிட்டெழுந்தது. நானும்கூட அதே பலாத்காரத்தைக் காட்டி, அவளின் நம்பிக்கையைச் சிதைத்துவிட்டதை எண்ணி வருந்தினேன். . 

காலில் விழாதக் குறையாக மன்னிப்புக் கேட்டு அவளைக் கட்டியணைத்தபோது, ‘சீ, என்ன தொடாத.’ என்று ஒருமையில் கத்தி, காதலியாக என்றுமே காட்டாத ஒரு முகத்தை மனைவியான உடனேயே காட்டிப் பயமுறுத்தினாள். கண்களில்தாம் என்ன வெறுப்பு!.

நான் அவமானத்தில் துவண்டுப் போனேன். அவளுடைய உதாசினம்தான் என்னை ஒரு விநாடியில் மிருகமாக்கிவிட்டது என்று பழியை அவள்மேல் போட்டு என்னைத் தேற்றிக்கொள்ளப் பார்த்தேன். 

மாதங்கள் ஆகியும் அந்தக் காயம் ஆறாததுபோல் அவள் கோபம் காட்டினாள். நான் பொறுமையுடன் அவளைச் சகித்துக்கொண்டேன். எனது அன்பால் பாவமன்னிப்பைக் கோரினேன். ஆனால் அவளுக்கு அது போதவில்லை. அடையாளமே தெரியாத வேறொருத்தியாகவே அவள் மாறிப் போனாள்.

எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுந்தாள். எதைப் பெறவும், நச்சரித்தாள். காத்திருக்க நேர்ந்த ஒவ்வொரு கணமும் சச்சரவிற்கானச் சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டாள். முதலிரவில் செய்த தவறால் அவளின் சச்சரவுகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு அவளின் அன்பை மீண்டும் பெறப் பாடு பட்டேன்.   

நாளாக நாளாக, அவள் உடலுறவில் கொஞ்சமும் நாட்டமில்லாதவளாக இருப்பதை உணர்ந்த போதுதான், எனது பலாத்காரத்திற்குத் தூபம் போட்டவளே அவள்தான் என்று புரியத் தொடங்கியது. 

உடலுறவு என்பது எனது தேவையாக மட்டுமே இருந்ததே தவிர, அவளுடைய ஈடுபாடாக இருக்கவேயில்லை. அவளைப் பராமரிப்பதற்குக் கொடுக்கும் சலுகையைப்போல் சில இரவுகள், எனது சரசங்களுக்கு இணங்கியே என்னை அவமதித்தாள்.  

 சதா காலமும் காதில் செருகிய ஒயர்களுடன் பிரம்ம குமாரிகளின் உரைகளை நேரடியாகக் கபாலத்தில் ஏற்றிக்கொண்டிருந்தாள்.

ஓர் அநாதைக்கொப்பான வளர்ப்பும், அப்போது நடந்த பாலியல் வன்கொடுமையும்தான் அவளுக்கு பாலியல் இச்சையே இல்லாமல் செய்துவிட்டன என்று நம்பத் தொடங்கினேன். 

‘திருமணம் செய்துக்கொள்ள கேட்டபோது சம்மதம் சொல்ல அப்படித் தயங்கினாளே?. தினமும் வற்புறுத்தியல்லவா இணங்க வைத்தேன். திருமண உறவெல்லாம் தனக்கு ஒத்து வராது என்று அவளுக்கே தெரிந்திருந்ததோ!. பிறகு, எதற்காகச் சம்மதித்தாள்?. அவளை வீட்டில் உட்கார வைத்துப் பராமரிக்க, அவளுக்கு ஒரு துணைத் தேவைப்பட்டதோ!. அதனால்தான் கல்யாணத்திற்குப் பிறகு வேலைக்குப் போக விருப்பமில்லை என்று காதலிக்கும்போதே சொல்லி வைத்தாளோ?.’ 

அவளது போக்கில் ஏதோ ஒன்று போலியாக இருப்பதாக எனக்குப் பட்டது. 

அவள், குழந்தைகள்பால் கொஞ்சமும் விருப்பமில்லாதவளாக இருந்தாள். எங்காவது துறுதுறுவென்றிருக்கும் குழந்தைகளைப் பார்க்கும் பெண்கள், தமக்கொரு குழந்தை இப்படிப் பிறக்காதா என்று பரவசம் பொங்கப் பார்த்துக் கொண்டிருக்கும்போது இவள், கைப்பேசியில் மூழ்கிக் கிடப்பாள். 

ஒரு குழந்தைப் பிறந்தால், தாய்மையில் கணிந்து பண்படுவாள் என்று தோன்றியது. ஆனால் அவளோ, கர்ப்பமாவது தனக்குக் கொஞ்சமும் பிடிக்காதச் சமாச்சாரம் என்று சொல்லி எரிச்சலூட்டினாள். குழந்தைப் பெற்றுக்கொள்ள விருப்பமில்லாதவள் எனக்குத் தெரியாமல் கருத்தடை மாத்திரைகள் ஏதும் எடுத்துக்கொள்கிறாளோ என்ற அச்சம் எழுந்தது. 

எனக்கோ, குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை!. 

மருத்துவச் சோதனை ஒன்றைச் செய்துக்கொள்ள வற்புறுத்தினேன். அவள், அதற்கு இணங்க மறுத்த போது, தனக்குக் கருத்தரிக்காது என்பதை அவள், முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொண்டுதான் என்னிடம் மறைக்கப் பார்க்கிறாளோ என்ற சந்தேகம் எழுந்தது. பிடிவாதமாகச் சோதனையைச் செய்தே ஆகவேண்டுமென்று அடம்பிடித்து, அவளை இணங்க வைத்தேன்.

சோதனை முடிவுகள் வந்தன!. எனக்கு விந்தணுக்கள் மிகவும் பலஹீனமாக இருப்பதால் மனைவிக்கு கரு உண்டாகும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் உறுதிப் படுத்தினார். நான் திடுக்கிட்டுப் போனேன். நான் இதை எதிர்ப்பார்க்கவேயில்லை!. அவளோ, ஆனந்தத்தில் திளைப்பவள்போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 

நாள்பட்ட பரிச்சயத்தால் தோல், மேலும் தடித்துப்போய் அதிகமாகவே ஹிம்சிக்கத் தொடங்கினாள். படுக்கையில் காண விரும்பாதச் சுகத்தை, அற்பச் சச்சரவுகளில் கண்டுத் திளைத்தாள்.

மருத்துவச் சோதனைச் செய்துக்கொண்டதே தப்பாகிவிட்டது என்று நான் வருந்த தொடங்கினேன்.  

 

வளுக்கு எப்படியோ?. சில மாதங்களாகவே நான் இந்த வாழ்க்கையில் நம்பிக்கை இழந்துக் கொண்டிருந்தேன். ஆகக் குறைந்தபட்சப் பேச்சுவார்த்தையே சமாதானத்திற்கான உத்திரவாதமாக ஆகிப் போனது. நான், ஹாலிலேயே தூங்கிப் போவது அவளுக்கு உவப்பையே தந்தது. பதின்ம வயதுப் பழக்கத்தில் என்னை நான் தேற்றிக்கொண்டேன்.  

நீண்ட நாட்களுக்குப் பின்னர், ஒரு சமாதானமான இரவில் அவள்பால் இச்சைப் பிறந்தது. ஆசையுடன் அவளை அணுகினேன்.

“ஒரு புள்ளைக்கு வக்கில்ல.. இந்த லட்சணத்துல இது எதுக்காம்..” என்று அவள், கூர் தீட்டிச் சொன்ன வார்த்தைகள் என் ரோஷத்தைச் சீண்டி விட்டன!. நினைக்க நினைக்க ரத்தம் கொதித்தது. நேற்றுவரை குழந்தைப் பெற்றுக்கொள்ளவே பிடிக்கவில்லையென்று சொன்னவள், எனது குறை தெரிந்த மறுகணமே இப்படி சொன்னதைக் கேட்டுக் கொந்தளித்துப் போனேன். எனக்கு வெறி பிடித்துக்கொண்டது.

‘இவளை என்ன செய்தால் தகும்?..’

திடீரென்று, ஓர் அசரீரியைப்போல் அந்த யோசனைத் தோன்றி என்னை நிலைக்குழையச் செய்தது!.  

‘இவளைக் கொன்றுப் போட்டால்தான் என்ன?.’ 

நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். எவ்வளவுதான் சண்டைப் போட்டுக்கொண்டாலும் என்றுமே இப்படியொரு கொடூரத்தை நான் எண்ணிப் பார்த்ததேயில்லை!. காதலித்துக் கல்யாணம் செய்துக்கொண்ட காதலி ஆயிற்றே!. ஆனால், ‘ஒரு புள்ளைக்கி வக்கில்ல..’ என்ற அவமானத்தை நினைக்க நினைக்க என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கொலைதான் அவளுக்குச் சரியானத் தண்டனை என்று தோன்றியது!. 

‘என் மேல் எவ்வளவு வெறுப்பிருந்தால் இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லுவாள்?. உடலுறவைத் தவிர்ப்பதற்கு இப்படியொரு நாடகம் ஆடுகிறாளோ?. இந்த மரக்கட்டைக்கெல்லாம் புருஷன் எதற்கு?.’   

‘போதும் இந்த நரக வேதனை!. இனி, எடுத்ததற்கெல்லாம் இதைச் சொல்லியே பிராணனையை வாங்குவாள். உடலுறவில் ஈடுபாடு இல்லை!. குழந்தைகளும் வேண்டாம்!.. ஆனால், பழி என்மேல்!.’ 

இவளை விவாகரத்து செய்துவிட்டு என் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு நான் போய்விடலாம்தான். ஆனால், விவாகரத்து நடைமுறையை நினைக்கவே எனக்கு வெறுப்பாய் இருந்தது. சோம்பேறியாய் வீட்டிலிருக்கும் இவளுக்கு வேறு மாதந்தோரும் ஜீவனாம்சம் கொடுத்து அழ வேண்டும்!. அதை வாங்கிக்கொண்டு ‘சிவனே’ என்று இருந்துவிட்டாளும் பரவாயில்லை!. விவாகரத்து செய்யப்பட்டுவிட்ட ஆத்திரத்தில் தெரிந்தவர்களிடம், ‘அந்தாளுக்கு கீழ எழுந்திரிக்காது!..’ என்று அபாண்டமாகச் சொல்லி, என்னை அவமானப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!.  

‘இந்த நரகத்தை இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் பொறுத்துக் கொள்வது?. போதும்!. எனக்கு பைத்தியம் பிடிக்காமல் இருக்க வேண்டுமென்றால் ஏதாவது செய்தே ஆக வேண்டும்.’  

‘ரத்தம் சிந்தாதக் கொலையாக இருக்க வேண்டும்!. கூச்சலுக்கு இடமே இல்லை!.. குறுகிய நேரத்தில், சீக்கிரமாக உயிர் போய்விடவேண்டும்!.’

ங்கள் வீடு, மனை வாங்கிக் கட்டிய தனி பங்களா!. பக்கத்து மனைகள், வீடுகள் கட்டப்படாமல் காலியாகவே இருந்தன. 

‘அருமையான செட்டிங்!.’ 

அவளுக்கு மாம்பழமென்றால் உயிர்!. ஒரு மாமரத்தை நடும் சாக்கில் பங்களாவின் பின்புற வேலியும் வலதுபுற வேலியும் சந்திக்கும் மூலையில் ஒரு மியான்மாக்காரனைக் கொண்டு நான்கடிக்கு நான்கடி என்ற கணக்கில் குழியொன்றைத் தோண்டிக் கொண்டேன். அதில் கோழி எருவை கொட்டி, அவளுக்கு சந்தேகம் ஏதும் எழாமல் பார்த்துக்கொண்டேன். கையோடு, குழியில் காய்கறி விரயத்தையும் கொட்டச் சொல்லி நம்பிக்கையூட்டினேன். பக்கத்திலேயே நெகிழிப்பையில் மாங்கன்று!.

நான், அவளைக் கொலைச் செய்யக் காத்திருந்தேன். தீர்மானம் வரையில் சுலபமாகத் தோன்றியத் திட்டம், செயல்படுத்தும் நேரம் வந்தபோது பல தயக்கங்களைத் தந்து, தடுமாற வைத்தது. திடீரென்று, அவள் நச்சரிக்காமல்  இருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.  

‘அவளுக்கு ஆயுள் கெட்டியோ?.’

 

தூரல் போட்டுக்கொண்டிருந்த ஒரு மாலை நேரம்!. 

அதுதான் நான் காத்திருந்த நாள் என்பதுபோல் எங்களுக்கிடையே சண்டை மூண்டது. அவள், வீட்டிற்கு ஐஸ்வரியம் வந்து சேரும் என்று சொல்லி, தங்க முலாம் பூசப்பட்டத் தவளைச் சிலையொன்றை ஐநூறு வெள்ளிக்கு வாங்கி வந்திருந்தாள்.  அந்த விரயம், மூட நம்பிக்கை எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. நாங்கள் வன்மத்துடன் சண்டையிட்டுக் கொள்ளத் தொடங்கினோம்.

“சீ.. ஏண்டீ தவக்கள மாரி உடாம கத்திக்கிட்டே இருக்க?. ஒனக்கு வாய் வலிக்காதா என்ன?.. ராட்சசி!..” என்று கத்தினேன்.

வார்த்தைக்கு வார்த்தை மல்லுக்கு நின்று, எங்கோ தொடங்கி, எதையெல்லாமோ பேசி, சச்சரவின் உச்சத்தில் அவள்  சொன்னாள்.

“ஒரு கொழந்தைக்கு வக்கில்ல!. நீயெல்லாம் ஒரு ஆம்பளயா?. தூ.. பொட்டப் பய!.” என்று துப்பினாள்.

எந்த வார்த்தையைச் சொன்னால் நான் உச்சக்கட்ட அவமானத்தில் புண்பட்டுப் போவேன் என்று அவள், நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள்.

‘இன்றுதான் அந்த நாள்!. நான், தீர்மானித்து விட்டேன்!.’

எனது வெறி தணிந்து போகாதிருக்க, ‘பொட்டப் பய..’ என்ற அவமானத்தை வாய்க்குள் தொடர்ந்து முணுமுணுத்துக்கொண்டேன்.    

நள்ளிரவு நேரம்!. 

நிழலைப்போல் நிசப்தமாய் அவளின் தலைமாட்டில் போய் நின்றேன். கைகளில் என்னுடைய தலையணை!. அவள், ஒரு பிணத்தைப் போலவே கட்டிலில் மல்லாந்து உறங்கிக்கொண்டிருந்தாள். வாய்க்கரிசி கோருபவள்போல் வாய்த் திறந்திருந்தது. 

‘பொட்டப் பய..’

வெறி, என் மனசாட்சியை இருட்டடிப்பு செய்தது. 

எனக்குப் பின்னால் பல்லியொன்று சகுனம் சொல்லித் தூண்டியது. இதுதான் தருணம்!.

நான், தலையணையால் அவளின் தலையை அப்படியே கட்டிலோடு அமுக்கி, கொஞ்சமும் அசைக்க முடியாதபடிக்கு அழுத்திப் பிடித்துக்கொண்டேன். 

அவள், ‘ம்.. ம்…’ என்று திணறினாள். எனக்கு அந்தப் பாஷைப் புரியவில்லை!. இரண்டு கைகளாலும் காற்றைப் பிராண்டியும், பிடிக்கவும், போராடினாள். கால்கள், வலிப்பு வந்தவைப்போல் உதறிக்கொண்டன.

‘பொட்டப் பய..’ 

எனது பிடி, இன்னும் இறுகியது. 

அவள், கடைசியாக ஒரு முறை உக்கிரத்துடன் போராடி, தளர்ந்து, ஓய்ந்தாள். நான், அவசரப்பட்டுப் பிடியைத் தளர்த்த விரும்பவில்லை. அப்படியே காத்திருந்தேன். 

தெரு நாயொன்றின் ஊளையிடும் சத்தம், ஒரு சமிக்ஞையைப்போல் என் செவிகளில் கேட்க, பிடியைத் தளர்த்தினேன். மெல்லத் தலையணையை விலக்கி, முகத்தைப் பார்த்தேன். மரண ரேகைகளைப்போல் தலையணையின் அச்சு, முகத்தில் படிந்திருந்தது. விழிகள், மரணத்தைப் பார்த்துக்கொண்டே பிதுங்கி, உறைந்து போயிருந்த காட்சி, அவளின் இறுதிப் பிரியாவிடையைப் போல் நெஞ்சில் பதிந்தது. முகப்பூச்சு எதுவும் இல்லாமல் பருக்கள் நிறைந்த சொரசொரப்பான முகத்தைப் பார்க்க அவலட்சணமாக இருந்தாள், அவள் வாங்கி வந்த தவளையைப் போல!. 

வெறியெல்லாம் தீர்ந்து போனதும் வெறுமை வந்து கவிந்தது. திடீரென்று, அவள்பால் கருணைச் சுரந்தது. சுகமான நினைவுகள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வழிந்தன. அவசரப்பட்டுவிட்டதுபோல் மனசு, திகிலில் பதறியது. உடல் நடுங்கத் தொடங்கியது. அப்படியே ஸ்தம்பித்து நின்றேன். குற்ற உணர்வு தாங்க முடியாமல் குழைந்து போவதற்குள் ‘பொட்டப் பய..’ என்று முணுமுணுத்து என்னை நான் மீட்டுக்கொண்டு, செய்ய வேண்டியக் காரியத்தில் இறங்கினேன். வெளியே, இடியும் மின்னலும் உக்கிரத்துடன் முரண்பட்டுக்கொண்டிருந்தன.

அவளின் போர்வையாலேயே உடலைச் சுருட்டினேன். அதற்குமுன், கைப்பேசியுடன் இணைந்திருந்த ஒயர்களை அவள் காதில் செருக மறக்கவில்லை. எனது ஆறடி உடம்பிற்கு அந்த ஐந்தடி உடலைத் தூக்க, யத்தனிக்கவே தேவையிருக்கவில்லை!.  

தூரல், இரவின் திண்மையை அதிகரித்திருந்ததால் சாலை விளக்குகளின் ஒளி மந்தப்பட்டுப் போய், தன்னைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அடங்கிக் கிடந்தன. 

நான்கடி குழியே என்பதால் ஒரு மூலைக்கும் இன்னொரு மூலைக்குமாக குறுக்குவாட்டமாக பிணத்தைக் குழியில் போட்டேன். குழியில் தேங்கியிருந்த தண்ணீர், ஒரு சாபத்தைப் போல் என் முகத்தில் சேற்றை வாரியடித்தது. சேற்றை வழித்து வீசிவிட்டு, மண்வெட்டியால் துரிதமாக மண்ணை இழுத்துக் குழிக்குள் தள்ளினேன். தூரல் என் வேலையை மிகவும் எளிதாக்கியது. குழைந்து போன மனதைப் போல் குழியில் சேறு சொத சொதத்தது.  

அன்றைய இரவை, அவளின் நினைவுகள் ஆக்கிரமித்துக்கொண்டு என்னை உறங்க விடாமல் தடுத்தன. எவ்வளவோ கனவுகளுடன் தொடங்கிய வாழ்க்கை, தீராதச் சச்சரவுகளால் சலிப்படைந்து இறுதியில், ஒரு கொலையில் போய் முடிந்துவிட்ட அவலத்தை நினைத்து வருந்தினேன். அந்தக் கொடுமையைக்கூட அவளேதான் வலிந்து தேடிக்கொண்டாள் என்று என்னை நான் தேற்றிக்கொண்டேன்.  

மறுநாள், குழிக்குமேல் நீர்வீழ்ச்சி ஒன்றை அவளின் நினைவாக நிர்மாணித்து பாபவிமோசனம் என்ற பெயரில் பாதுகாப்புத் தேடிக்கொள்ளும் யோசனை உதித்தது.  உடனே, உரிய ஆட்களைக் கொண்டு மூன்றே நாட்களில் அதைச் செய்து முடித்துக்கொண்டேன். நீரூற்றைச் சுற்றி மனைவிக்குப் பிடித்த ஜப்பனீஸ் ரோஸ் மற்றும் மல்லிகைப் பூச்செடிகளை நட்டு அலங்கரித்தேன். நடுவில் ஒரு துளசி மாடம்!. 

இரவின் மயான அமைதியில், உச்சியில் கொப்பளித்தத் தண்ணீர், படிகளில் இறங்கி, தொட்டியில் சங்கமித்தப் பயணம், இனிய இசையாய் மனதை வருடி மயக்கியது, எனது காதல் நினைவுகளைப் போல. 

அக்கொலை எனது மனசாட்சியிடம் நியாயம் கேட்டு நச்சரித்தபோதெல்லாம், அவள் செய்த  அவமானங்களில் என்னை நான் தற்காத்துக் கொண்டேன். அப்படியும் நித்திரை வராத நாட்களில் மாத்திரைகள் அதைத் தந்துதவின!. 

இரண்டு வாரங்கள், செய்த கொலைக்கு ஒரு நியாயம் கிடைத்தது.  

 

மூன்றாவது வாரத்தின் முதல் நாளிரவு!. 

ஆழ்ந்த நித்திரைக்கிடையே நீர்வீழ்ச்சியின் இனிய இசையையும் மீறி, சன்னமாய் ஒரு சத்தம்!. கூர்ந்து கேட்கத் தூக்கம் இடங்கொடுக்கவில்லை! காதைப் பொத்திக்கொண்டே தூங்கிப் போனேன். 

காலையில் எழுந்ததும் அந்தத் தொந்தரவு நினைவுக்கு வந்தது. ஆனால், ஆழ்ந்த நித்திரையில் கேட்ட ஏதோ ஒரு சத்தமாய் அது, அடையாளமில்லாமலேயே போனது. 

மறுநாளிரவு, அது என்ன சத்தமாய் இருக்குமேன்று நீண்ட நேரமாய் யோசித்தபடியே நித்திரையில் நழுவிக் கொண்டிருந்தேன்.

அப்போது, 

‘ஆ!. நித்திரையில் கேட்ட அதே சத்தம்!.’ 

கவனத்தைக் கூர்மையாக்கிக்கொண்டு கேட்டேன்.

‘தவளைச் சத்தம்!.’

தவளை ஒன்று, புகார் ஒன்றைச் செய்வதுபோல் விட்டு விட்டுக் கத்தத் தொடங்கியது. அந்த நச்சரிப்பு தூக்கத்தை அண்டவிடாது தொல்லைக் கொடுத்தது.

நான், பொறுமையை இழந்தேன்!. 

ரெய்ன் கோர்ட்டை அணிந்துகொண்டு, ஒரு கையில் கைலாம்பும் இன்னொரு கையில் கட்டை ஒன்றையும் எடுத்துக்கொண்டு சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்றேன்

 ‘நீர்வீழ்ச்சி!.’

அருகில் சென்றதும் சத்தம் நின்றுப் போனது. கைலாம்பிலிருந்து பரவிய வெளிச்சத்தைப்போல் அந்த இடமெங்கும் தேடினேன். தவளையைக் காணவில்லை!.  ஒரு கணம், இங்கிருந்துதான் சத்தம் வந்ததா என்றே எனக்குச் சந்தேகம் எழுந்தது.  

இரவெல்லாம் அந்த நச்சரிப்பு ஓயவேயில்லை!.. மேலும் இரண்டு முறை எழுந்து போய்ப் பார்த்து, ஏமாந்துவிட்டு வந்தேன். சத்தம், நிச்சயமாக நீர்வீழ்ச்சியின் பக்கமிருந்துதான் வந்தது. ஆனால், அருகில் சென்றால் சத்தம் நின்றுப்போவது குழப்பத்தைத் தந்தது. 

நான், நித்திரையில்லாமலும், நிம்மதியில்லாமலும், தவிக்கத் தொடங்கினேன். 

ஆபீசில், என் தோற்றத்தைப் பார்த்துப் பதறிப்போன நண்பனிடம் விஷயத்தைச் சொன்னபோது, அவன்தான் அந்த உருப்படியான யோசனையைச் சொல்லி உதவினான். 

“தவளைங்க கோல்டு பிளட்டட் எனிமல்ங்க ராம்.  நீ புதுசா ஒரு வாட்டர் ஃபீச்சர கட்டியிருக்கியா!. அதான் அங்க வருதுங்க. நீ, பேசாம தொட்டீல இருக்குற தண்ணிய எரைச்சிட்டு, அந்த நீர்வீழ்ச்சிய ஆஃப் பண்ணி உட்ரு. அப்பறம் பாரு!.  தவளிங்க இருக்குற எடம் தெரியாம ஓடீப் போயிரும்..” 

நண்பன் சொன்னது நியாயமாகவே பட்டது. நீர்வீழ்ச்சி இல்லாதபோது தவளைகளின் தொல்லையே இல்லையே?.

அன்று மாலையே நீர்வீழ்ச்சியை ஆஃப் செய்து, தொட்டியைக் காலியாக்கி, கற்களையும் மண்ணையும் கொட்டி மூடினேன். நீரின் சலசலப்பைக் கேட்க முடியாதது ஓர் ஏக்கமாய் நெஞ்சை வாட்டியது. 

‘இனியும் நித்திரை இல்லாமல் அல்லல்பட்டால் நான் தாங்கமாட்டேன்!.’

அன்றிரவு, நிம்மதியாக உறங்கப் போனேன்!. நித்திரையைத் தூண்டும் குளிர்ச்சி, அறையெங்கும் நிறைந்திருந்தது.  எப்போதும் கேட்கும் இரவு பூச்சிகளின் இடையூறுகூட இல்லாது போன இரவு அது!. 

நான் படுத்து, கொஞ்ச நேரத்திலேயே உறங்கியும் போனேன். அந்த அளவிற்கு தூக்கம் கெட்டுக் கிடந்தேன். கனவுகளின் தொந்தரவுகூட இல்லாத நித்திரையில் நான்!. 

திடீரென்று, தவளையின் கரகரப்பான நச்சரிப்புச் சத்தம் நித்திரையைக் கலைத்துப் போட்டது. ஒரு கணம், பிரம்மையோ என்று தடுமாறிப் போனேன். 

நீர்வீழ்ச்சியின் பக்கமிருந்துதான் கேட்டது. 

‘தண்ணீரும் இல்லாதபோது தவளை எதற்கு வந்தது?.’

நித்திரையைக் கசக்கி, நீக்கிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தேன். 

மணியைப் பார்த்தேன். அவளைக் கொன்று புதைத்த நேரம்!.

அலாரத்தின் பக்கத்திலேயே சண்டைக்குக் காரணமானத் தவளைச் சிலை!, 

அது, வாயில் கவ்வியிருந்த பொற்காசுகளோ இப்போது, வெளியில் கேட்ட தவளைச் சத்தத்திற்கேற்ப நுரைத்துக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றின.

சிலை மேல் பதிந்த பார்வையை என்னால் மீட்கவே முடியவில்லை!. 

‘பிதுங்கிக்கொண்டிருப்பவைப்போல் தெரிபவை, தவளையின் கண்களா!.’ 

எனது உடல், மெல்லப் பதறத் தொடங்கியது. கிலி பிடித்துக்கொண்டவன்போல் காதுகளைப் பொத்தி, தலையை உதறிக்கொண்டேன்.

தவளையின் நச்சரிப்புச் சத்தம் என்னைப் பொறுமை இழக்கச் செய்தது.

எழுந்து, தலைமாட்டிலிருந்த கட்டையை எடுத்துக்கொண்டு, மழையில் நனைந்தபடியே ஆவேசத்துடன் நீர் வீழ்ச்சியை நோக்கி நடந்தேன். வாய், தானாகவே பற்களை நரநரத்தபடி முணுமுணுத்துக்கொண்டது. 

‘அந்தத் தவக்கள மட்டும் கையில கெடைக்கட்டும்!..’


 

எழுதியவர்

மலேசியா ஸ்ரீகாந்தன்
மலேசியா நாட்டை சார்ந்த இவர் எழுத்தாளர் ஜெயகாந்தனின் பாதிப்பால் 'மலேசியா ஸ்ரீகாந்தன்' என்ற புனைப் பெயரில் அயல் நாடுகளுக்கும் 'ஸ்ரீகாந்தன்' என்ற பெயரில் உள் நாட்டிலும் படைப்பாக்கங்கள் எழுதுகிறார். இவரின் இயற்பெயர் ஸ்ரீராமுலு.

காலச்சுவடு, சொல்வனம், வனம், கனலி, வல்லினம், மலேசிய நாளிதழ்கள் தமிழ் நேசன், தமிழ் மலர், மலேசிய நண்பன் மற்றும் வானம்பாடி ஆகியவற்றில் இவரது சிறுகதைகள் பிரசுரம் ஆகியுள்ளன.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x