14 March 2025
Manimala ks25

பொருளாயிருந்தாலும் சரி, புருசனாயிருந்தாலும் சரி, பொம்பளைக்குதான் எதையும் தூக்கி எறியத் தோணாதே. அப்புடித்தான ஞானாம்பா இத்தினி வருசமா வாழ்ந்திருக்கா. ஊரு சனத்தோட வாய்க்குப் பூட்டா? தொறப்பா? பொம்மனாட்டிக்கு இம்புட்டு அகம்பாவம் ஆவாதும்மான்னு பேசிச்சிவோ. ஆரு என்னா பேசினாலும் அவ எதையும் காதுல வாங்கலயே. ம்…. எதத்தான் சனம் பேசல? கட்டுனவன் கண்ண மூட, அவ வாவுட்டு அளுவலன்னு நாக்குமேல பல்ல போட்டுப் பேசித் தீக்குதுவோ.

“நல்லாத்தான இருந்தாரு… திடீருன்னு என்னாச்சி…?”

“எங்க நல்லா இருந்தாரு? படுக்கையில வுளுந்து ஆறேழு மார்கழி கழிஞ்சிருக்குமே?

“அது தெரியும். ஒரு பக்கம் கைகால் வுளுந்தும் வேளாவேளைக்கு இன்னது வேணும்னு கேட்டு வாங்கித்தான சாப்பிட்டுக்கிட்டிருந்தாரு. பெறவு எப்புடின்னு கேட்டேன்?”

“ம்… சாவு என்னா சொல்லிக்கிட்டா வருது?

“அத்தினி வருசம் வாழ்ந்த வாழ்க்கைக்கு கண்ணுல சொட்டு தண்ணிக்கூடவா பொம்பளைக்கி வராது?

ஞானாம்பா அப்படியொண்ணும் கல்லு மனசுக்காரில்லாம் கெடையாதுன்னு பேரம்பாக்கத்து சனங்களுக்கு அத்துப்படிதான். அம்பது வருசத்துக்கு முந்தி, நாலு குட்டியப் போட்ட தெரு நாயி ஒண்ணு மதுராந்தவத்துக்குப் போன லாரியில அடிபட்டு செத்துடிச்சி. ரோட்டோரமா எருக்கஞ்செடிகிட்ட கெடந்த அந்த நாலு குட்டிங்களயும் என்னவோ பெத்தப் புள்ளையாட்டமா ஏந்திக்கிட்டுல்ல வூட்டுக்குப் போனா. நாலு குட்டியையும் வூட்டுக்குப் பின்னாடியிருந்த மாட்டுக் கொட்டாயில வுட்டு கறந்த பால வேளா வேளைக்கு ஊட்டி ஆளாக்கிவுட்டவளாச்சே. 

தோ… இப்ப நாலைஞ்சி மாசத்துக்கு முந்தி, வண்டியில போன வயசுப் பையன் ஒருத்தன் லாரியில அடிபட்டு ரத்தமும் சதையுமா ரோட்டுல கெடக்க, நூத்தியெட்டு வரும்னு எல்லாரும் காத்திருந்திருக்காவோ. கொல தெய்வத்த கும்புட்டுட்டு காருல அந்த வழியா போனவ அடிபட்டவன தன்னோட வண்டியில ஏத்தச் சொன்னா. நாளபின்ன பிரச்சினையாவும்னு சுத்தி இருந்த சனம் சொல்ல, ஐயாவுக்குத் தெரிஞ்சா கோவப்படுவாருன்னு டிரைவரு கையப் பெசைய எல்லாத்தையும் தான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டா. குடுகுடு கெளவிக்கு இருக்குற தெகிரியத்த பாரேன்னு சனம் அன்னிக்குந்தேன் பேசிச்சிவோ. ஆரு செஞ்ச புண்ணியமோ அவ கண்ணுல பட, அந்தப் பயலோட உசுரு ஒடம்புல தங்குனது.

இருந்தாலும் இன்னிக்கி, இந்த நெலமையில இப்புடி இருக்கலாமான்னுதான் ஆளாளுக்குப் பொலம்புதுவோ. தாலி கட்டுன மனுசன் நடு வூட்டுல கெடக்க, அவரோட உசுரு போனப்ப செவுத்துல சாஞ்சி உக்காந்தாளே, அப்புடியே அங்கன இங்கன அசங்காம உக்காந்திருக்கா. 

“இப்புடி ஈவு எரக்கமுன்னு இல்லாமப் போனதால்தான் வவுத்துல ஒரு குஞ்சி, குளுவான்கூட தரிக்கலபோல” குசுகுசுன்னு பேசுறமாதிரி அவ காதுல படணும்னே ஆரோ சொன்னாவோ.

“அந்த மனுசனுக்கும் இது வேணும்தான்…”

“என்னா பேச்சி பேசுதே…?”

“எச்சக் கையால காக்கா ஓட்டாத மனுசன்… தோ மேலோகத்துக்கு என்னாத்த தூக்கிட்டுப் போனாரு…?”

“ஆமாம்… வச்சிருக்குறத இங்க எல்லாரும் தூக்கி கண்டவங்களுக்கும் குடுக்குறாங்களாக்கும்?”

“ஒன்னோட நொண்ணன சொன்னதும் மூக்குக்கு மேலக் கோவம் பொத்துக்கிட்டு வருதாக்கும்? நா என்னா இல்லாததையா சொல்லிப்புட்டேன்? ஊரே பேசுறதுதான…?”

“யம்மாடி… ஓங்கிட்ட வாயக் குடுக்க முடியுமா?”

“என்னா சொல்லுதே? எனக்கு வாயா? என்னவோ இல்லாதத சொல்லிப்புட்டாப்புல இந்தப் பேச்சிப் பேசுதே?”

“சரி… சரி… இதான் சாக்குன்னு நீட்டி மொளக்காத… இன்னும் கொஞ்ச நேரத்துல பாடையில போவப்போற கட்ட…!” 

ஞானாம்பா செஞ்சி வச்ச செலையாட்டமாவே குந்தியிருந்தா. இந்த வயசுலயும் ஒரு நா ஒருபோதும் ஓரிடத்துல நிக்கமாட்டாளே… அவ பொறந்த வூடும் சரி, புகுந்த வூடும் சரி, ஆளு அம்புன்னு இருக்க எடம்தான். ஆனா அவளுக்கென்னவோ ஓடியாடி வேல செய்யுறதுதான் புடிக்கும். சின்னதுலேருந்தே அப்படி ஆரு கையையும் எதிர்பார்க்காம ஓடியாடி வேலை செய்வா. ஆம்பள புள்ள கணக்கா அப்பாரு கூடவே தோட்டந் தொறவுன்னு கெளம்புறாளேன்னு ஆத்தாக்காரி வையாத நாளில்ல. அந்த சத்தம் பெத்தவன் காதுலயும் மவகாரி காதுலயும் என்னிக்கு வுளுந்தது?  

அவ பொறந்த ஊரான வேப்பம்பட்டில அஞ்சாம்பு வரை மட்டுந்தேன் படிக்க முடியும். அதுக்கு மேலப் படிக்கணும்னா பஸ்ச புடிச்சி மதுராந்தவத்துக்குதான் போவோணும். பொம்பள புள்ளைய அம்மாந்தூரம் அனுப்ப ஏலாதுன்னு நிறுத்திட்டாவோ. மேல படிக்கோணும்னு அவளுக்கு அம்புட்டு ஆச. எம் பேச்சக் கேக்காட்டி தூக்குல தொங்கிடுவேன்னு ஆத்தாக்காரி சொன்னா அப்பனாலதான் என்னா செய்ய முடியும்? ரெண்டு நாள் அளுதவ, இனி ஆவப் போறதில்லன்னு சளிய சிந்திக் கெடாசிட்டு அப்பங்காரருகூட கெளம்பிட்டா. நஞ்ச புஞ்சன்னு கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அவ வூட்டு நெலபுலந்தான? எந்த நெலத்துக்கு எப்ப, என்னா மருந்தடிக்கணும்? அறுவடையான நெல்லுங்க எத்தினி மூட்ட? ஆளுவளுக்கு எவ்ளோ கூலி குடுக்கணும்? இத்தெல்லாம்  பதினாலு வயசிலேயே அத்துப்படியாச்சி. 

தம்பிக்காரன் அவளோட ரெண்டு வயசு சின்னவன். அவன் வண்டியேறி படிக்கப் போவான். அவங்கிட்ட நாலு ஆளு கூலி, ஒரம் வாங்குனதைச் சொல்லி எவ்ளோ ஆச்சின்னு கேட்டா பேப்பரயும் பேனாவையும் தேடுவான். ஆனா, ம்ங்கிறதுக்கு முன்ன ஞானம் வெரலவுட்டுச் சொல்லிடுவா. பேருக்கேத்தாப்புல எம்புள்ள அறிவுள்ளவன்னு அப்பங்காரரு பூரிச்சிப் போவாரு. அம்மாம் பெரிய பண்ணைய கட்டியாளுற அளவுக்கு இந்தப் பொண்ணுக்கு இம்மாந் தெறம எப்புடின்னு ஆத்தாக்காரிக்கும் உள்ளுக்குள்ள சந்தோசந்தேன். அத்த வெளிய காட்டிக்குவாளா என்ன?

எந்தச் சந்தோசமும் அப்புடியே காலத்துக்கும் நெலைச்சிருக்குமா? ஒரு நா பொளுது சாயுற நேரத்துல வயக்காட்டுக்குப் போயிட்டு வந்த ஞானத்தோட அப்பங்காரரு காலுல ஏதோ முள்ளுக் குத்துனாப்ல இருந்ததுன்னு சொன்னாரு. வெளக்க கொளுத்தி எடுத்துக்கிட்டு வந்து பாத்தா அதுக்குள்ள மனுசன் நொக்கும் நொறையுமா தள்ளிக் கெடக்காரு. ஆத்தாக்காரி வாயில வயித்துல அடிச்சிக்கிட்டு அளுவ, பதறிப்போன ஞானம் வைத்தியக்காரரு வூட்டுக்கு ஓடுனா. சோத்துல கைய வைக்கப்போன வைத்தியக்காரருகிட்ட என்ன ஏதுன்னு சொல்ல முடியாம நெஞ்சாங்கூடு ஏறி எறங்குனது. கையோட அவரை அளைச்சிக்கிட்டு வந்து பாத்தா அப்பங்காரருக்கு மூச்சிப் பேச்சேயில்ல. நல்ல பாம்பு வெசம் மண்டைக்கி ஏறிடுச்சாம்.

அப்பாரு போன பெறவு நெலநீச்சு முழுக்க ஞானம்தான் பாத்துக்கிட்டா. வயிசுப் பொண்ண இப்புடி வெளியில வுடலாமான்னு நாலு பேரு பேசுறத கேக்க வேண்டியிருக்கே? அதுனால அம்மாக்காரிக்கு அது சுத்தமா புடிக்கல. மவகாரிக்கிட்ட முடியுமட்டும் சொல்லிப் பாத்தா. அவ கேக்குற மாதிரியில்ல. அப்பத்தான் ஞானத்த பக்கத்தூருலயிருந்து பொண்ணு கேட்டு வந்தாவோ. மவகிட்டகூட ஒரு வார்த்தைக் கேக்காம சரின்னு சொல்லி அனுப்பிட்டா. சேதி தெரிஞ்ச ஞானம் இப்போதைக்கு கண்ணாலம் வேணாம்னு அம்மாகாரிக்கிட்ட சொல்லிப் பாத்தா. வேணாமுன்னு சொன்னா என்ன பொணமாத்தான் பாப்பேன்னு பெத்தவ சொன்னா என்னா பண்ண முடியும்? அப்புடித்தான் வேலுச்சாமிய கட்டிக்கிட்டு பேரம்பாக்கத்துக்கு அடியெடுத்து வச்சா. பணம் பணத்தோடத்தான சேரும்னு அப்பவும் சனம் பேசிச்சிவோதான்.

“கோடி வருது… பொறந்த வூட்டுக் கோடி வருது… நவுருங்க… நவுருங்க…!”

நெல்லு, அரிசி, நல்லெண்ணெ, சீயக்காவ ஒரு தட்டுலயும் பொடவ, மஞ்ச, குங்குமம், கண்ணாடி வளையலுங்க, மல்லிகப் பூவு ஒரு தட்டுலயும் பச்ச மட்டய ஒருத்தருமா கொண்டுட்டு வந்தாவோ. 

“ஒன்ன இந்தக் கோலத்துலயா பாக்கணும்னு…” பொறந்தவூட்டுச் சனம் அளுவ நெடுமரமாட்டம் கோடிய எடுத்துக்கிட்டு வந்த தம்பிக்காரன் குனிஞ்ச தல நிமுராம நின்னுக்கிட்டிருந்தான். 

“இதென்னாடி இது ஊர்ல ஒலகத்துல இல்லாத அதிசயமாயிருக்கு? எப்பேர்ப்பட்ட பொம்பளையா இருந்தாலும் ஒடம்பொறப்பு கோடி எடுத்துட்டு வர்றப்ப ஒடைஞ்சி போவாங்க. இவங்க என்னன்னா இப்புடிக் கருங்கல்லு கணக்கா இருக்காங்களே…?”

“புருசன் போனா பொம்பளைக்கி எல்லாம் போச்சுதுல்ல… பொறந்த வூட்டுலயிருந்து கட்டக்கடைசியா வர்றதுன்னு நெனைச்சாவே நெஞ்செல்லாம் பதறுமே..!”

எதத்தான் ஞானம் ஏறெடுத்துப் பாத்தா? என்னிக்கி தாலி கட்டிக்கிட்டு புருசன் வூட்டுக்கு வந்தாளோ அன்னிக்கு குனிஞ்சவளோட தல என்னிக்கு நிமுந்தது? வேலுச்சாமியோட வூடும் அவ பொறந்த வூடு மாதிரிதான். ஊரு முச்சூடும் நெலம் நீச்சுன்னு பரவித்தான் கெடந்திச்சி. ஆனா, வாழப்போன வூட்டுல உள்ளவங்களோட மனசு மட்டும் சுருங்கி இருந்ததத்தான் அவளால ஏத்துக்கிட முடியல. 

வூட்டுக்கு வர்ற மக்க மனுசாளுவள கைய நனைக்காம அனுப்புற பழக்கமே அவ அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் இல்ல. அதுக்காகவே அரை படி அரிசி நாளும் சேத்து வடிக்கிற வூடு. பசியோட இருக்கவங்கிட்ட ஊழியத்த வாங்குறது பாவம்னு அவ அப்பாரு சொல்வாரு. அவ அம்மாக்காரி மட்டுமென்ன? பண்ணையாளுவ வவுறும் மனசும் நெறைஞ்சி போற மாதிரில்ல சோறு போட்டு அனுப்புவா. அவ வூட்டுக்கு கஷ்டம்னு சொல்லி வர்றவங்க மொகஞ் சொணங்கிப் போனதில்லயே. 

கட்டிக்கிட்ட வூட்டுல கணக்குப் பாத்து ஆக்க வேண்டியிருந்தது. போதாக் கொறைக்கு கொஞ்சம் சோறு மீந்துட்டாலும், குடும்ப பொம்பளைக்கி கணக்குப் பாத்து வடிக்கத் தெரியாதான்னு மாமியாக்காரிக்கிட்ட பேச்சும் வாங்க வேண்டி வந்தது. குடும்பம்னா நாலும் இருக்கதான் செய்யும்னு ஆத்தாக்காரி சொல்லி அனுப்பினது மனசுல பதிஞ்சிருந்ததால எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டா. 

வேலுச்சாமி கூப்பிட்டக் கொரலுக்கு ஓடியார மூக்கையனும் வேலுச்சாமியோட அம்மாகாரி சொல்ற வேலைய செய்யுறதுக்கு அவம் பொஞ்சாதியும் இருந்தாவோ. ரெண்டுவேரும் காலையில கெளம்பி வந்தா பொழுது சாஞ்ச பின்னாடிதான் வூட்டுக்குப் போவாவோ. தண்ணி எறைக்கிறது, அண்டை வெட்டுறது, மருந்தடிக்கிறதுன்னு நாலு ஆளோட வேலைய ஒத்த ஆளா செய்யக்கூடியவன் மூக்கையன். அவம் பொஞ்சாதி மட்டும் சும்மாவா? நெல்லு அவிச்சிப் போடுறது, அவிச்ச நெல்லை தல சொமையா தூக்கிட்டு மில்லுக்குப் போய் அறைச்சிட்டு வர்றது, மாவு திரிக்கிறதுன்னு ஓயாம வேலை செஞ்சிக்கிட்டுதான் இருப்பா. அப்புடிச் செய்யுறவங்களுக்கு வவுறார சோறு போடவோ சரியான கூலி குடுக்கவோ தாய்க்கும் புள்ளைக்கும் மனம் வராது. அதையெல்லாம் பாத்துப் பாத்து ஞானம் மனம் வெம்பிப் போவா. மனசு கேக்காம ஒருநா புருசங்காரங்கிட்ட கேக்கப் போவ, இந்தத் தலையண மந்திரம் போடுற வேலைல்லாம் வச்சிக்காதடின்னு மாமியாக்காரி நாலு வூட்டுக்கு கேக்குற மாதிரி பேசுனா. மூக்கையனோட அப்பங் காலத்துல பட்ட கடனாம். புருசன், பொஞ்சாதியா ஊழியம் பாத்து அடைக்காவோ. என்னத்தச் சொல்ல? 

மூக்கையனுக்கு நண்டு சிண்டுன்னு அஞ்சி புள்ளைவோ. மூத்தப் பையன் பத்தாம்பு படிக்கிறான். அடுத்த ரெண்டும் பொண்ணுங்க. ஒண்ணு எட்டாம்பு, ஒண்ணு ஆறாம்புன்னு படிக்குதுவோ. அடுத்துப் பொறந்தது ரெட்டப் புள்ள. ரெண்டும் ஆம்புளப் புள்ளைங்க. அஞ்சு வயசு இருக்கும். மூக்கையன் பொஞ்சாதி நெற மாசக்காரியா இருந்தா. புள்ள பொறந்த பொறவு பெரியாசுபத்திரிக்கிப் போய் கட்டுப்பாடு செஞ்சிக்கன்னு ஞானம் ஒருக்கா சொல்ல, அது மாமியாக்காரி காதுல வுழுந்திடுச்சி. ஆண்டவன் குடுக்குறத இப்புடி அழிக்கச் சொல்றியேடின்னு பிலுபிலுன்னு புடிச்சிக்கிட்டா.  

“என்னமோ கண்ணாலம் கட்டுன காலத்துக்கு இடுப்புல ஒண்ணும் வவுத்துல ஒண்ணும் இருக்காப்போல பெருசா பேச வந்துட்டா… நாட்டுக்கு நல்ல தொடப்பம், வூட்டுக்கு பீத்த தொடப்பம்னு சும்மாவா சொன்னாவோ? இந்தக் கேடுகெட்ட நெனப்பு இருக்குறதாலதான் வவுத்துல ஒண்ணும் தரிக்கமாட்டுது”ன்னும் கேட்டுட்டா. 

என்ன கெரகமோ? தாலி கட்டிக்கிட்ட ரெண்டு வருசமும் மாசந் தவறாம மாமியாக்காரியோட நச்சு நாக்கால ஞானம் அவுதிப்பட்டுதேன் கெடக்கா. யாரையும் தூக்கி எறிஞ்சி பேசக்கூடாதுன்னு ஆத்தாக்காரி சொல்லி வளத்ததோ காலம் முச்சூடும் திருந்தாம இருந்தவங்க யாருமில்லம்மான்னு அப்பங்காரரு சொன்னதோ ஏதோ ஒண்ணு அவள எல்லாத்தையும் முளுங்க வச்சது. என்னாத்தச் சொல்ல? 

வேலுச்சாமி மத்தியான சாப்பாட்டுக்குப் பொறவு தோட்டத்துல கெடக்க கயித்து கட்டில்ல கொஞ்ச நேரம் கண்ணசந்து கெடப்பான். தென்ன மரத்துக் காத்து இன்னும் கொஞ்சம் தூங்குன்னு சொன்னாலும் ஆடு, மாடு கொல்லையில பூந்துடப் போவுதுன்னு கெளம்பிடுவான். எம்புள்ள நாளும் பொளுதும் ஓயாம ஒளைக்கிது, அந்தச் சொத்த கட்டியாள இன்னும் ஒண்ணும் மொளைக்கிலயேன்னு மாமியாக்காரி பொலம்புவா.

“நீர் மால வருது… எல்லாரும் எழுந்துங்கோ…”

“பங்காளி வூட்டுச் சனந்தேன் நீர் மால எடுத்துட்டு வருதுவோ…”

“புள்ளையில்லாத மனுசனுக்கு பங்காளிங்கதான கைக்குடுத்தாவணும்…”

ஊருக்கு கெழக்கால இருக்குற மாரியம்மன் கோயில் கொளத்து தண்ணிய கொடத்துல சொமந்துக்கிட்டு ஈரத்துணியோட ஏழு பேர் வர, நாலு ஆம்பளைங்க வேட்டியோட மொனைய தலைக்கு மேல பந்தலாட்டம் புடிச்சிக்கிட்டு வந்தாவோ.

“நீர் மாலையக் கண்டும் மவராசி கண்ணு கலங்குலயே…”

“நெஞ்சழுத்தந்தேன்… அந்தக் காலத்துலேயே அப்பங்கூடப் போய்ப் பண்ணையம் செஞ்சவங்களாம்…!”

“அதான் ஆம்பள கணக்கா கண்ணுத் தண்ணிய வுடாம இருக்காங்கபோல…”

“ம்கூம்… இவரு மட்டுமென்ன? இம்மிய எளக்காத மனுசந்தான…”

“அப்புடிச் சேத்து வச்ச சொத்த ஆரு ஆளப் போறாவோ?”

சொந்தக்காரவுக குளுப்பாட்டுவதுக்கு ஏற்பாடு செஞ்சிக்கிட்டிருக்க, வந்த சனம் வாய்க்கு வந்தபடி பேசிட்டிருந்ததுவோ. வா சின்னம்மான்னு யாரோ ஞானத்த கைத்தாங்கலா அழைச்சிக்கிட்டுப் போனாவோ.

மூக்கையனோட மூத்த மவன் ராசு அவள சின்னம்மான்னுதான் கூப்புடுவான். அவ என்னா ஒன்னோட ஆத்தாக்காரியோட தங்காச்சியா இல்ல அப்பனோட தம்பி பொண்டாட்டியா? சின்னம்மாவாம் சின்னம்மா… ஆண்ட வூட்டம்மான்னு கூப்புடுலேன்னு மாமியாக்காரி கண்டமேனிக்கு வைவா. அத்த கேக்குறப்ப ஞானத்துக்கு கோவம் வந்தாலும் காட்டிக்கமாட்டா.

பத்தாம்பு படிக்கிற பையனுக்கு என்னா வெளங்கிடப் போவுது? மூக்கையன் புள்ளைங்க மூணும் பள்ளிக்கோடம் வுட்டுப் போறப்ப வூட்டுக்கு வந்து ஆத்தாக்காரிய பாத்துட்டுப் போவுங்க. “பொழுது சாய வூட்டுக்குதேன் வரப் போறா. அதுங்காட்டியும் என்னாத்துக்கு இங்க வர்ரீய?”ன்னு மாமியாக்காரி சிடுசிடுப்பா. அத்தோடப் போச்சா?

“பள்ளிக்கோடம் போவுதுவளாம் பள்ளிக்கோடம்… களுவிக் குளிச்சாலும் காக்கா நெறம் மாறாது, உருவிக் குளிச்சாலும் ஊத்த மணம் போவாதுன்னு சொல்லுவாங்க. இதுவோ படிச்சி கிளிக்கப் போவுதுவளாக்கும். கூடமாட ஒத்தாச பண்ணா குடுத்த கடனாவது கொறையுமில்லே?”ம்பா. மூக்கையந்தேன், “கூறுகெட்ட களுதைவோ ஆசப்படுதும்மா”ன்னு வெத்தல கற தெரியுற பல்ல காட்டிக்கிட்டே சொல்ல அவம் பொஞ்சாதி வாயே தெறக்கமாட்டா.

மாமியாதான் அப்புடின்னு பாத்தா கட்டுனவன் அதுக்கும் மேல இருந்தா ஞானந்தேன் என்னா பண்ணுவா? வேலுச்சாமிக்கு சாயந்துற நேரத்துல திங்கிறதுக்கு ஏதாவது இருக்கோணும். ஒருநா பணியாரம், ஒருநா சீயம், ஒருநா கொளுக்கட்டன்னு ஏதாவது செஞ்சி வைக்கோணும். மூக்கையன் புள்ளைங்க பள்ளிக்கோடம் வுட்டு வர்ற நேரத்துலதான் வேலுச்சாமி தட்டு நெறைய தீனிய வச்சிக்கிட்டுத் திம்பான். அறியாப் புள்ளைங்க வருதுவுளே, அதுங்கிட்ட இந்தான்னு கொஞ்சம் கொடுக்கக் கூடாதா? பச்சமண்ணுவுள பாக்க வச்சித் தின்னா ஒடம்புல ஒட்டுமா? ஆருக்கும் அள்ளிக் குடுக்க வேணாம்.. இத்துனூண்டு கிள்ளிக்கூடவா குடுக்கக்கூடாது? அட… குடுக்கக்கூட வேணாம். வூட்டுக்கு வர்ற புள்ளைங்ககிட்ட மூஞ்ச காட்டாமலாவது இருக்கலாமுல்ல? ஞானந்தேன் தனக்கு குடுத்தத ஆரு கண்ணுலயும் படாம அதுவளுக்கு குடுத்து வுடுவா. 

மாமியாக்காரியோட வாய்க்குப் பயந்து சின்னப் புள்ளைங்க ரெண்டும் கொஞ்ச நாளா வர்றதில்ல. ராசுதான் வருவான். நல்லா படிக்கிற பையங்கிறதால ஞானத்துக்கு அவம்மேல தனிப் பிரியம். ஏதாவது குடுத்தாலும் வேணாம் சின்னம்மான்னு சொல்லுவான். மாமியாக்காரிக்குத் தெரிஞ்சிடப் போவுதுன்னு பயப்படுவா. நல்லா படிச்சி நல்ல வேலைக்குப் போய் அம்மா, அப்பாவைக் காப்பாத்தணும் சின்னம்மான்னு அவன் சொல்லுறப்ப அவளுக்கு நெஞ்சே அடைக்கும்.

ஒருநா, காலையில எழுந்துனதிலேருந்து தல மயக்கமாவே இருந்தது. கூட்டிக் கழிச்சிப் பாத்தா, நாள் தள்ளிப் போயிருந்தது தெரிஞ்சது. புருசனுக்கும் மாமியாவுக்கும் தெரிஞ்சா சந்தோசப்படுவாங்களேன்னு நெனைச்சா. ரெண்டுவேருமே அப்ப வூட்டுல இல்ல. தல கிறுகிறுன்னு சுத்த, ஒரல்ல மாவு அறைச்சிட்டிருந்த மூக்கையன் பொஞ்சாதிதான் ஓடியாந்து தாங்கிப் புடிச்சிக்கிட்டா. மயக்கம் தெளிஞ்ச பொறவு அவகிட்ட வெசயத்த சொன்னா. அவதேன், அவசரப்பட்டு சொல்ல வேணாம்மா. மருத்துவச்சிகிட்ட காட்டி உறுதிப்படுத்திக்கிட்டு சொல்லுறது நல்லதுன்னு சொன்னா. அதும் ஞாயம்தானே? ஒருவேளை வெறும் தல மயக்கமாயிருந்துட்டா கட்டுனவனுக்கும் அவன பெத்தவளுக்கும் அவளால பதில் சொல்ல ஏலுமா? 

ஆத்தாக்காரிய பாத்துட்டு வர்றேன்னு வூட்டுல கேக்க, ரெண்டுவேரும் என்னவோ அவ சொத்தையே தூக்கிட்டுப் போறாப்புல பாத்தாவோ. ரெண்டு நா போயிருந்துட்டு வாரேன்னு சொன்னா. எந்தப் புள்ள இங்க பாலுக்கு அளுவுது? ரெண்டு வருசம் வேணா போயிருன்னு மாமியாக்காரி மூஞ்சால அடிச்சா. கட்டுனவ போறாளே வண்டிச்சத்தத்துக்கு காசு கொடுப்போம்னுகூட இல்லாம வேலுச்சாமி நெலத்த பாக்கக் கெளம்ப, மாமியாவும் கண்டுக்கிடல. 

மூச்சைப் புடிச்சி வேகமா நடந்து போனா அரைமணி நேரத்துல பஸ்சு கெளம்புற எடத்துக்குப் போயிடலாம். பஸ் டிக்கட்டுக்கு அறுவது காசு வேணும். அங்கேருந்து வேப்பம்பட்டிக்கு குதிரவண்டி புடிச்சிதான் போவோணும். அதுக்கு ஒரு எட்டணா ஆவும். அது இல்லாங்காட்டியும் பரவாயில்ல. வூட்டுல போய் எறங்குன பொறவு குடுத்துக்கலாமுன்னு பொட்டிக்குள்ள துளாவிப் பாத்தா. ஒரு ரூவாய்கிட்ட சில்லற தேறவுந்தான் மனசு நிம்மதியாச்சி.

மவகாரியப் பாக்கவும் ஆத்தாவுக்கு வாப்பேச்சு கெளம்பல. அன்னிக்குப் பூத்த பூவாட்டம் அனுப்புன பொண்ணு நாரா வந்து நிக்காளேன்னு ஒருபாட்டம் அழுது தீத்தா. அம்மாக்காரிய சமாதானப்படுத்திட்டு மவ வெசயத்தச் சொன்னா. ஒடனே மருத்துவச்சி வூட்டுக்கு ஓடிப் போய்க் கையோட இட்டுக்கிட்டு வந்துட்டா. நாடிப் புடிச்சிப் பாத்த கெளவி எஞ்சியிருக்குற முன்பல்லு ரெண்டும் தெரிய சிரிச்சிக்கிட்டே புள்ளையாண்டிருக்கிறத சொன்னிச்சி. எம்மா நல்ல சேதிய சொன்னியேன்னு ஆத்தாக்காரி ஓடிப்போய் சாமிய கும்புட்டுட்டு சக்கரைய அள்ளி வாயில போட்டா. 

மறுநா, மவளுக்கு அதிரசம், முறுக்குன்னு செஞ்சி டின்னுல அடுக்கி வச்சா. மவள அனுப்ப மனசு எடங்கொடுக்கல. ஆனாலும் சம்பந்தி வாயில வுழ முடியுமா? அக்காள கொண்டு போய்வுட போமாட்டேன்னு மவங்காரன் மொரண்டு புடிச்சான். கொண்டாங் குடுத்தானா ஆச்சி, கௌரதய பாத்தா ஏலுமாய்யான்னு கெஞ்சிக் கூத்தாடுனா. அந்தப் பொம்பள பேசுற பேச்சிக்கி மானமுள்ள ஆரும் அந்தப் படிய மிதிக்கமாட்டாங்கன்னவன், அந்த வூட்டுல எப்புடி உன்னால மட்டும் இருக்க முடியுதுக்கான்னு கேட்டான். வவ்வால் வூட்டுக்கு வவ்வால் வந்தா நீயுந் தொங்கு நானுந் தொங்குன்னு தொங்கித்தான தீரணும்னு அக்காகாரி சொல்ல வாப்பேச்சிப் பேசாம கெளம்புனான். ஆத்தாக்காரி புள்ளிவுள அந்தப் பக்கம் அனுப்பிட்டு, எம்புள்ளையோட வாழ்க்கைய நானே அழிச்சிட்டனேன்னு செவுத்துல முட்டிகிட்டா. 

வூட்டுக்கு வர பொழுது சாஞ்சிருந்தது. வெளக்குக்கூட கொளுத்தி வைக்காம வூடு இருண்டு கெடந்தது. வெளக்க கொளுத்துன பொறவு தம்பிக்காரன அனுப்புனா என்வூட்டு சீதேவிய தூக்கிக் குடுத்திட்டியேன்னு மாமியாக்காரி பேசுவாளே. எல்லாரும் எங்க போனாங்கன்னு நெனைச்சிக்கிட்டே தம்பிக்காரனுக்கு சொம்புல தண்ணி கொண்டாந்து குடுக்க, வேணாமுன்னுட்டு அவன் கெளம்பிட்டான். புருசனும் மாமியாக்காரியும் எங்கியாவது போயிருந்தாலும் மூக்கையன் பொண்டாட்டி இந்நேரத்துக்கு வூட்டுல இருக்கணுமேன்னு நெனைச்சிக்கிட்டே அடுப்பாங்கரைக்குப் போனவ லாந்தரையும் சிம்னி வெளக்கயும் கொளுத்துனா. சிம்னி வெளக்க திண்ணையில வச்சிட்டு லாந்தர எடுத்தாந்தா, கூடத்து ஊஞ்சல்ல புருசனும் மாமியாக்காரி முத்தத்துப் பக்கத்துலவுள்ள தூணுல சாஞ்சிக்கிட்டும் இருந்தாவோ. அவளுக்கு ஏதும் வெளங்கல.

“பொம்பளைங்க எல்லாம் அப்பால போங்க.”

“மறைப்பு கட்டுங்கப்பா.”

“கோடியில வந்த சாமானெல்லாம் கொண்டுட்டு வாங்க.”

“பச்ச நெல்ல குத்தி வச்சிருக்கீங்களா?”

நாலு ஆம்பளைங்க கெடத்தியிருந்த பெஞ்ச்சோட பொணத்த தூக்கிட்டுப் போய்க் குளிப்பாட்டுனாவோ. கோடி துணி உடுத்திவுட்டு ஆம்பளைங்க தள்ளிப் போவ ஞானத்த கூட்டிக்கிட்டுப் போய் உக்கார வச்சி சாங்கியம் செஞ்சாவோ. 

“இனி இந்தப் பூ எதுக்குன்னு பொம்பளைங்க பிச்சி வீசுவாங்க. இவுங்க என்னென்னா…?”

“என்னாத்தச் சொல்ல..? புதுப்பொண்ணு கணக்கா குனிஞ்ச தல நிமுராம குந்தியிருக்காங்களே?”

“புள்ளக்குட்டின்னு பெத்திருந்தா மனசுல ஈரம் இருந்திருக்கும். காய்ஞ்ச மரம்தானே?”

ஞானத்தோட கையப் புடிச்சி யாரோ வாய்க்கரிசி போட, பங்காளி வூட்டுப் பேரப்புள்ளைவோ நெய்ப்பந்தம் புடிச்சி சுத்தி வந்ததுவோ. சங்கு ஊதுற சத்தம் கேட்டப்பதான், குளுரு சொரம் கண்டாப்புல ஞானத்துக்கு ஒடம்பு தூக்கிப் போட்டுச்சி. 

“சட்டுப்புட்டுன்னு காரியத்த முடிங்க. ஈரத்துணியோட ரொம்ப நேரம் காக்க வைக்க வாணாம்.”

கண்ணத் தொறந்து சுத்தி முத்தி மலங்க மலங்க பாத்தா. அன்னிக்கும் அப்புடித்தான பாத்தா?

வூட்டுல வெளக்கக்கூட வைக்காம ரெண்டுவேரும் ஏன் ஆளுக்கொரு தெசையில இருக்காங்கன்னு ஒண்ணும் புடிபடல. அவ கேட்டதுக்கும் ஒருத்தரும் ஆங்கல ஊங்கல. சரி, ராவுக்கு ஆக்கி வைப்போம்னு அடுப்படிக்குப் போனா. மத்தியானம் ஆக்கி வச்சதுல பாதி அப்புடியே இருந்திச்சி. இப்புடில்லாம் இருக்காதேன்னு ரோசனையா பாத்தப்பதேன் சங்கு ஊதுற சத்தம் கேட்டது. ஆருக்கு என்னாச்சின்னு மறுக்கா மாமியாரையும் புருசங்காரரையும் பாத்துக் கேட்டா. அப்பவும் ஒருத்தரும் வாயத் தொறக்கல. அப்ப பக்கத்து வூட்டு ஆயா வந்திச்சி. அவகிட்ட கண்ணக் காட்டிட்டு பொறவாசப் பக்கமா போவ, இவ ஏதும் வெளங்காம பின்னாடி போனா.

எப்போதும்போல பள்ளியோடம் வுட்ட பொறவு மூக்கையனோட மவன் ராசு வூட்டுக்கு வந்திருக்கான். பசியோ ஆசைப்பட்டோ வாசல்ல காஞ்ச மள்ளாக்கொட்டயில கொஞ்சம் எடுத்து சொக்காயில போட்டிருக்கான். அத மாமியாக்காரி பாத்துட்டு மவங்காரன்கிட்டச் சொல்லிட்டா. சோறு போடுற வூட்டுல இப்புடிச் செஞ்சிட்டியேடான்னு மூக்கையன் மவன போட்டு சாவடி அடிச்சிருக்கான். ஆனாலும் வேலுச்சாமி ஊர்ப் பஞ்சாயத்துக்கு இத்த எடுத்துக்கிட்டுப் போயிட்டான். ஒரு புடி மள்ளாட்டதானன்னு செலரு கேக்க, புடி புடியா கொள்ள போனா பரவாயில்லையான்னு ஆத்தாளும் மவனும் பஞ்சாயத்துல கேட்டிருக்காவோ. தண்டனையா ஐநூறு ரூவாய்க்கு புரோ நோட்டு எளுதி வாங்கிட்டு வுடணும்னு வேலுச்சாமி ஒரேமிதியா நின்னானாம். அம்புட்டுப் பணத்துக்கு எங்க போவோம்னு மூக்கையனும் அவம் பொஞ்சாதியும் ஆத்தா, மவன் கால்ல வுளுந்து கதறி இருக்காவோ. 

ஆயா சொன்னதைக் கேக்கக் கேக்க ஞானத்துக்கு நெஞ்சு கொதிச்சது. “ஐயோ… நெற மாசப் புள்ளத்தாச்சியாச்சே…” கண்ணத் தொறந்தா கலந்தண்ணி வளிஞ்சி ஓடிச்சி.

“கொடுமைய சொல்லுறன் கேளு… கால்ல வுளுந்துல்லாம் ஆவப்போறது ஒண்ணுமில்ல. எரநூறு ரூவாய்க்கி புரோ நோட்டு எளுதித் தரணும். அதுமட்டுமிலாம கடன் முடியுமட்டும் மூக்கையனோட புள்ளைங்களும் பண்ண வேலைக்கு வரணும்னு ஆத்தாளும் மவனும் திட்டவட்டமா சொல்ல அதுவே பஞ்சாயத்து முடிவாச்சி.”

“அடப் பாவிங்களா….!”

“கேட்டுடப் போவுது தாயீ…”

“ஐயோ… எனக்கு இப்பவே அவங்கள பாக்கணும்போல இருக்கே ஆயா…” 

“இருந்தாதான பாக்க?”

“என்னா ஆயா சொல்லுதே?” ஞானத்தோட ஒடம்பு ஒதறிச்சி. 

“அந்த அநியாயத்த ஏந்தாயீ கேக்குற? பஞ்சாயத்து முடிஞ்சி வூட்டுக்குப் போன குடும்பமே பாலிடால குடிச்சிடுச்சிம்மா… ஏளு பேரை வரிசையா படுக்க வச்சிருந்தாங்க. இப்பதான் எடுக்கிறாங்கபோல. தோ… சங்கு ஊதுற சத்தம் கேக்குதே…!” 

நாலு எட்டுல கூடத்துக்கு வந்தா. “கொலகாரப் பாவிங்களா… இப்புடிப் பண்ணிட்டீங்களே…”ன்னு கதறுனவ நின்னமேனிக்கி அப்புடியே சாஞ்சா. காலு வளியா உதிரம் வளிஞ்சி ஓடுச்சி.

வேகமா கேட்ட மோளச் சத்தத்துக்குத் தொணையா வேட்டுச் சத்தமும் சேந்துக்க, ஞானாம்பாவோட ரெண்டு கையும் அடிவயித்த புடிச்சது.

“இப்புடிப் புடிங்கப்பா… மொகம் வூட்டைப் பாத்தும் காலு காட்டைப் பாத்தும் இருக்கோணும். புதுசாவா செய்யுறோம்?”

“தாத்தாவோட பொருளுங்க எதுனா பாடையில கொண்டாந்து வைக்கணும்னா வையுங்க…”

“சொத்துப்பத்துப் பத்திரம்தான் தாத்தாக்கிட்ட மூட்ட மூட்டையா இருக்கும்.” 

“ச்… எடுக்குறப்பகூட…!”

சொந்தக்காரங்கல்லாம் சுத்தி வந்த பொறவு பொணத்தத் தூக்கிப் பாடையில வச்சாவோ. மூணாவது சங்கும் ஊத, நாலு பேரு தோளுல பாடை ஏறினது. பொணத்த அனுப்புன சனம் உக்காந்து ஒப்பாரிய வச்சிட்டுக் கெளம்புனதுவோ.

தலைய முளுவுன ஞானம் கூடத்துல இருந்த ஊஞ்சலுக்கு முன்னாடி வந்து நின்னா. அவளுக்குள்ள இருந்த உசுரு கரைஞ்சி ஓடுன அன்னியிலிருந்து அந்த தரைய கண்கொண்டு பாக்கமாட்டா. இனியொரு உசுர தன் கருப்பையில சொமக்கமாட்டேன்னு வைராக்கியமா இருந்தவளாச்சே. 

ஊரு ஒலகத்துல இவ ஒருத்திதான் பொம்பளையான்னு மாமியாக்காரி பேசப் போவ, “ஒத்த சொல் போதும்”னு சொல்லி ஆனானப்பட்ட மாமியாக்காரியோட வாயையே அன்னிக்கி மூடுனது ஞாபகத்துக்கு வந்தது.

‘இருக்க சொத்துபத்துவ அத்தினியையும் ஊருல இருக்குற இல்லாதபட்ட புள்ளைவோ படிக்கிறதுக்கு ஏதுவா எளுதி வைக்கணும்’ வெறுந் தரைய வலது கையால அணைச்ச மாதிரி ஒருக்களிச்சிப் படுத்தா ஞானாம்பா.


 

ஆக்கம்: மணிமாலா மதியழகன்

 

எழுதியவர்

மணிமாலா மதியழகன்
இவர், உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ‘இனிய தமிழ்க் கட்டுரைகள்’ என்ற நூலையும்; முகமூடிகள், இவள், பெருந்தீ, தேத்தண்ணி, ஆழிப்பெருக்கு ஆகிய ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும்; வண்ண வண்ண ஆர்க்கிட், வாலோடு பிறந்தவன், கருப்பு வண்ணப் பூனை, ஒற்றைக் கொம்பு குதிரை ஆகிய நான்கு சிறுவர் பாடல் நூல்களையும் எழுதியுள்ளார்.

இவரது ‘இவள்’ நூலுக்காக மு.கு.இராமச்சந்திரா புத்தகப் பரிசைப் பெற்றார். ‘தேத்தண்ணி’, ‘ஆழிப்பெருக்கு’ நூல்கள் 2022, 2024 ஆண்டுகள் முறையே சிங்கப்பூர் இலக்கியப் பரிசின் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாகின.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் முத்தமிழ்விழாச் சிறுகதைப் போட்டிகள், மலேசியாவின் வல்லினம் கலை இலக்கிய இதழின் கட்டுரைப்போட்டி, ரா.கி.ரங்கராஜன் சிறுகதைப்போட்டி, வளர்தமிழ் இயக்கத்தின் தமிழ் வாழ்த்துப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x