13 March 2025
subaKS 25

ஜீவின் பிரிவின் பின்னர்தான் லச்சுமி என்னிடம் வந்தாள். இளைய மாமாவிற்கு வளர்ப்புப் பிராணிகளிடத்தில் அதிகப் பிரியம். நான் சிறுமியாக இருந்தபோது எனக்கு ரஜீவைக் கொண்டுவந்து தந்தது அவர்தான். பிறகு லச்சுமியை அழைத்து வந்தது, நான் வளர்ந்தபின் லுமாலாச் சைக்கிள் வாங்கித் தந்தது எல்லாம் அவர்தான். ரஜீவ் இளையமாமாவின் அச்செழு வீட்டு ஊர்ப் பெட்டை நாயும், அவர்களின் அயல்வீட்டுச் சாதிக்கார நாயும் காதல் கொண்டதால் பிறந்தது. இதனால் கலப்புத் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளின் அழகும், கம்பீரமும், அறிவும் அவனிடம் இருந்தது. 

நாய், குட்டியாகச் சரசாலை கனகன்புளியடிச் சந்தி வீட்டிற்கு வந்தபோது நானும் குட்டிப் பிள்ளை. எண்பதுகளின் தொடக்க காலம். விசயம் விளங்காத ஈழத் தமிழர்கள் இந்திரா காந்தியைத் தம்மைப் புரக்க இருக்கும் தெய்வத் தாயாக நினைத்திருந்த நாட்கள். இந்திரா காந்தியின் மறைவிற்கு உணர்ச்சிக் குவியலாகத் துக்கம் கடைப்பிடித்தனர். இந்திராவின் குடும்ப விடுப்புக்களைத் தமது நெருங்கிய சொந்தங்களின் விடயங்கள் போல அலசி ஆராய்ந்தனர். வெள்ளையும் சொள்ளையுமாக இருந்த இந்திரா காந்தியின் மகன் ரஜீவை ஒருவித சிலிர்ப்புடன் ஆசைப்பட்டனர். ரஜீவ் காந்தி வெளிநாடு படிக்கச் சென்று, இத்தாலிப் பெண்ணில் மையல் கொண்டு, அவளோடு நாடு திரும்பிய போது, பக்கத்து வீட்டில் பார்த்து வளர்ந்த பெடியன், வெளிநாட்டிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெட்டையைக் கட்டிக் கூட்டிவந்தது போல குறுகுறுப்புடன் அதைப்பற்றிக் கதைத்துப் பொழுது போக்கினர். எங்கேயாவது பணக்கார வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளில் சோனியா தலைமயிரும், சேலைத் தலைப்பும் பறக்க ஒய்யாரச் சுறுசுறுப்புடன் விமானத்தால் இறங்கும் காட்சியையும், பத்திரிகையில் வருகின்ற படங்களையும் பார்த்துப் பார்த்து ஒருவித பரவசத்தோடு எம் தமிழ் மக்கள் கதைத்துக் கொண்ட நாட்கள் அவை. 

இந்தக் காலப் பொழுதிலேயே கனகன்புளியடிச் சந்தியில் எங்கள் வீட்டிற்கு நாய்க்குட்டி வந்து சேர்ந்தது. பெயர் வைப்பதற்காகத் தலையைப் பிய்த்த போது ‘ரஜீவ்’ என்ற பெயர் இளையமாமாவால் முன்மொழியப்பட்டு, மறு பேச்சின்றி எம்மால் வழிமொழியப்பட்டது. இந்திராவின் மகன் ரஜீவை எல்லோருக்கும் பிடித்திருந்த காலம். இளையமாமா அரசியல், சமூகவியல் அறிவில் சுழியோடி வேறு. 

என் ரஜீவிற்கும், எனக்குமான உறவைச் சொல்லி மாளாது. அது பிறிதாய்ச் சொல்லவேண்டிய ஒரு பெருங்கதை. சந்தி வீட்டிலிருந்து எம்முடன் இடம்பெயர்ந்து தாத்தா வீட்டில் வசிக்கும் போதுதான் ரஜீவின் இயற்கை மரணம் அவனது ஒன்பதாவது வயதில் நிகழ்ந்தது. எனக்குப் பன்னிரண்டு மட்டில் என நினைக்கிறேன். அந்தப் பிரிவில் பட்ட பெருந் துன்பத்தை விளக்க வார்த்தைகளில்லை. 

இது நடந்து ஏறக்குறைய இரண்டு வருடங்களின் பின்னர் இளைய மாமா  லச்சுமியை அழைத்து வந்தார். நாம் அப்போது தாத்தா வீட்டிலிருந்து பக்கத்தில், எமது காணிக்குள் முழுதாகக் கட்டி முடிக்கப்படாத எங்களது புது வீட்டிற்கு மாறியிருந்தோம். 

அம்மாவிற்கு வீட்டில் ஆடு வளர்க்க அந்த நேரத்தில் தூண்டற விருப்பம் இல்லை. நான் தினமும் மினக்கெடுகின்ற வீட்டு வேலைகள் தவிர்த்து மேலதிக சுமை, அதனுடனேயே இழுபடுவேன் என்று தெரியும். எனக்கு ஆடு, மாடு என்றால் உயிர். இளைய மாமா எனக்கு ஆட்டுக்குட்டி கொண்டு வந்து தரப்போவதாக அம்மாவை நச்சரித்தபடி இருந்தார். நான் வேறு நாய் வளர்க்கச் சம்மதிக்கவில்லை. அம்மாவின் மனதுக்குள் கொஞ்சம் கல்லுப்புரளும் நேரம் பார்த்துத் தனது ஆடு சினைப்பட்டு ஈனும் குட்டிகளில் மறி இருந்தால், எனக்குக் கொண்டு வருவதாகச் சம்மதம் எடுத்துவிட்டார். 

இப்படித்தான் லச்சுமியை அச்செழுவிலிருந்து சைக்கிளில் பெட்டி கட்டி அழைத்து வந்தார். ஆட்டுக்குட்டிக்கான பெயர் எவரும் யோசித்துத் தீர்மானமெடுத்து ஒன்றும் வைக்கவில்லை. தன்பாட்டுக்கு ‘லச்சுமி’ என்று கூப்பிடுவதாக அமைந்து விட்டது. ஊரில் கால்நடைகள் வளர்ப்பவர்களிடத்தில் லச்சுமி என்ற பெயரில் ஏதாவதொன்று எப்படியும் இருக்கும். லச்சுமி வரும்போது பால்குடி மறந்து இலைகுழைகளை நன்னி, நன்னிச் சப்பத் தொடங்கிய பருவம். பெதும்பை. கறுப்பி. செம்பாட்டுப் பூமியிலிருந்து தாயைப் பிரிந்து, குழைக்காட்டுக்கு வந்து இறங்கியதும் பயந்துபோய்த் தவிப்புடன் அலைந்த குட்டியை நான் அணைத்துக் கொண்டேன். அன்றிலிருந்து லச்சுமிக்கு நான் எல்லாமுமாக ஆனேன். நிழல் போல என் இருப்பு இருக்க வேண்டுமென லச்சுமி அடம்பிடிக்கத் தொடங்கினாள். என் அண்மை இல்லாவிட்டால் கூப்பாடு போட ஆரம்பித்தாள். 

நான் பள்ளிக்கூடம் சென்று திரும்புகிற வரையில் அவளை அமைதிப்படுத்த முடியவில்லை. அம்மாவால் சமையல் வேலையில் நிம்மதியாக ஆற, அமர ஈடுபட முடியவில்லை. வளவு முழுக்கப் புல், வேலியெங்கும் சீமைக்கிளுவைக் கிளைகள், கஞ்சி, கழுநீர் என்று நிறைந்த சாப்பாடு. ஆனால் என்னைக் காணாத நேரமெல்லாம், றம்சானுக்கு அடிப்பதற்காக வாங்கிவந்து  கட்டிய ஆடுபோல அவளின் ஓலம் ஆரம்பித்து விடும். 

பள்ளிக்கூடத்தால் வந்த கையோடு ஓடிப்போய் அவளுடன் இருக்க வேண்டியதாயிற்று. வேறு எந்த அலுவலும் பார்க்க முடியவில்லை. புத்தகம், கொப்பியுடன் வளவிலுள்ள மரக்குற்றியில் இருப்பது தினசரிக் கடமையானது. என்னைப் பார்த்தால் திருவிழாவில் தொலைந்த குழந்தை தாயைக் கண்டது போல லச்சுமி தன்னுடனேயே இறுக்கிக் கொண்டாள். செல்லம் மெத்தி ஆட்டம் போட்டாள். முதுகிலும், மடியிலுமாக ஏறி நின்று தலைமயிரைக் கடித்திழுத்துக் கழுத்தை முகர்ந்து கிச்சு கிச்சு மூட்டினாள். எவ்வளவு பதிவாக இலை குழை இருந்தாலும் என் முதுகின் மேலே முன்னங்கால்கள் வைத்து ஏறி நின்று எட்டிச் சாப்பிட்டாள். 

அம்மாவிற்கு இந்த ஆட்டம் சினம் ஏற்படுத்தியது. வயதுக்கு வந்த மகள், நம்பிப் பழக விட்ட அயல்வீட்டுப் பெடியனுடன் காதலில் ஈடுபட்டதைக் கண்ட தாயைப் போல மனுசி கடுகடுக்கத் தொடங்கி விட்டது.

“உதோடையே எப்பவும் கிடக்கப் போறியே. இருளுமட்டும் வளவுக்குள்ளயே கிடந்தால் காலமெங்க, நேரமெங்க? எப்படிப் படிச்சுத் துலைக்கப் போறாய்? மற்ற அலுவலையெல்லாம் எப்ப பாக்கிறது? என்னால உதுண்ட கத்தலைத் தாங்க முடியேலை. ஏன் உப்பிடி இருக்குதோ தெரியாது”

“நான்தான் அதோட இருக்கேக்க படிக்கிறன்தானே. வேற என்ன செய்யச் சொல்லுறியள்?”

“அதுதான் நீ படிக்கிற லச்சணம் தெரியுதுதானே”. 

என் படிப்பு இலட்சணம் என் பிழையில்லை.  ஒன்று வீடு. இன்னொன்று பாடசாலை. சமயம், சமூகக்கல்வி போன்ற பாடங்கள் நானாகவே வாசித்துப் படித்துக் கொள்ள முடியும். கணக்குதான் மிகப்பெரிய பிரச்சனை.  வேம்படியில் எங்கள் வகுப்பாசிரியையாகவும், கணக்கு ஆசிரியையாகவும் செல்வரட்ணம் மிஸ் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இருந்து கொண்டிருந்தா. நான் முழு மூளையையும் கழட்டிக் கரும்பலகையில் எழுதும் சூத்திரங்களின் மேல் வைத்தாலும் ஒரு மண்ணும் எனக்குப் புரிந்ததில்லை. அடிப்படையே புரியாத போது சந்தேகம் கேட்டுத் தெளிவுபடுத்தவும் எதுவும் இருக்கவில்லை.  குகாஜினி கெட்டிக்காரி. அச்சுவேலியில் சொந்தபந்தங்களால் நடத்தப்பட்ட ரியூஷன் சென்ரர், நல்ல வீட்டுப் பராமரிப்பு  எனச் சூழ இருப்பதாகச் சொல்லுவாள். செல்வரட்ணம் மிஸ்ஸும், குகாஜினியும் எமது வகுப்பில் ஒருவருக்கொருவர் விளங்கப்படுத்தி, சந்தேகம் தீர்த்து கணக்குப் பாடவேளையைக் கடத்துவார்கள். மற்ற நண்பிகள் நமட்டுச் சிரிப்புடன் இதனைப் படம் பார்ப்பார்கள். அவர்களும் வலிகாமம், யாழ் நகரங்களில் தனியார் வகுப்புக்கள் கிடைக்கப்பெற்றதால் பெரிதாகக் கவலைப்பட மாட்டார்கள். நான் தொலைந்து போன வெளிநாட்டு நாயைப்போல வழி தெரியாது அவதிப்படுவேன். 

சில நேரங்களில் நாம் எல்லோருமாக ஏதாவது குழப்படி செய்து அதிபர் அறை வரை அது இழுபட்டால், மிஸ் எம்முடன் அல்லாடிக் களைத்து விடுவா. கரும்பலகையில் எழுதுவதைப் பார்த்து முழுசிக்கொண்டிருப்பதை விட, எமது சேட்டைகளால் போகும் வகுப்பின் மானத்தை நிலைநிறுத்துவதற்கு வகுப்பாசிரியை முயற்சி செய்வதில் பாட நேரம் வீணாவது எனக்கு மிகுந்த விருப்பத்தை அளித்தது. யாழ் இந்துக் கல்லூரி, சென். ஜோன்ஸ் போன்ற ஆண்கள் பாடசாலையில் உள்ள சில வாத்திமாருக்கு இருக்கும் கற்பிக்கும் திறனும், மாணவரில் காட்டும் பாரபட்சமற்ற அக்கறையும் ஏன் எமது ஆசிரியைகளிடம் இல்லை என்ற ஆதங்கம் ஏற்படும். ஒரு உபாத்தியாயர் எப்படி இருக்கக்கூடாது என்பதை மிக முக்கியமாக எனது பாடசாலையில் நான் கற்றுக் கொண்டேன். பின்னாளில் கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் சிலகாலம் நான் படிப்பித்தபோது மாணவிகளின் உலகினுள் தொலைந்து போன, முரண்டுபிடித்த அதிபரோடு அவர்களுக்காக மல்லுக்கட்டிய பொழுதுகள் மறக்க முடியாதவை. 

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குச் சில மாதங்கள் இருந்தபோது நானும், சரசாலை நண்பி தயாளினியுமாகச் சிறிது காலத்திற்கு முன்னர் தனது வீட்டில் கணக்குப் படிப்பிக்கத் தொடங்கிப் பின்னர் வகுப்பை நிறுத்திவிட்ட நிதியன் சேரிடம் போய்க் கெஞ்சத் தொடங்கினோம். நிதியன் சேர் அப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞான மாணவன். ஒருவாறு அவரை கணிதத்திற்கும், அத்தானை விஞ்ஞானத்திற்கும், அவர்களின் உதவியுடன் தமிழ், சமூகக்கல்வி, ஆங்கில பாடங்களுக்கு வேறு ஆசிரியர்களையும் சேர்த்துக் ‘கலைமகள் கல்வி நிலையம்’ ஆரம்பித்தோம். சரசாலை கோபால் சகல வசதிகளுடனும் கட்டிய பெரிய புது வீடொன்று, இயக்கக் காம்பாக இருந்து பிறகு வெறுமையாக இருந்தது. அதனைப் பார்த்துக்கொண்ட கண்ணாடி அம்மம்மாவிடம் அனுமதி பெற்று நாம் சில மாணவர்களுடன் தொடங்கிய கல்வி நிலையம், பின்னர் இடப்பெயர்வு வரைக்கும் எமது ஊரில் மாணவர்களால் நிறைந்து நின்றது. தயாளினியும், நானும் பின்னாட்களில் இதனைக் காணும் போதெல்லாம் தாய்க்கிழவிகளாகப் பூரிப்படைவோம். 

என் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஓரளவு நன்றாக வந்ததற்கு முழுக் காரணமும் கலைமகள் கல்வி நிலைய ஆசிரியர்களே. கல்வி நிலையம் தொடங்கிய நாளிலிருந்து, பரீட்சைக்குச் சில மாதங்களே இருந்தன. இதனால் ஆசிரியர்கள் இயலுமானவரை முக்கியமான பாடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, பலவற்றைச் சுருக்கி எமக்குப் பாடமெடுத்தனர். எனக்குக் கணக்கில் ஆதியந்தம் தெரிந்திருக்கவில்லை. எப்போதும் பாடசாலையின் தவணை, அரைத்தவணைப் பரீட்சைகளில் புள்ளிகள் முப்பதைத் தாண்டியதில்லை.  நிதியன் சேர், கணிதம் இரண்டாம் பாகம் பரீட்சைத் தாளில் கேள்விகளாக வரக்கூடிய பாடங்களை மட்டும் தேர்ந்தெடுத்தும், மிகுதியைக் கொஞ்சம் விரைவான முறையிலும் மிக விளக்கமாக எமது மண்டைக்குள் ஏற்றினார். ஓலெவலில் கணிதம் ஃபெயில் விட்டால் யாழ்ப்பாண சமூகத்தில் நிலைமை சொல்லி வேலையில்லை. 

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு கணிதத்தில் எனக்கு அதி திறமைச் சித்தி கிடைத்தது. செல்வரட்ணம் மிஸ் கணக்கு ‘டி’ எடுத்தவர்களுக்குத் தனது பரிசாகக் கொடுக்குமாறு சிறிய வண்ணத்துப்பூச்சி வடிவ புரோச் வாங்கி குகாஜினியிடம் கொடுத்து விட்டிருந்தா. குகாஜினி ஒவ்வொருவராக அழைத்தழைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். “உனக்கு எப்படியடி ‘டி’ வந்தது” என்று அதிசயப்பட்டாள். எனக்கே அது அதிசயமாக இருந்தது. அந்த அழகிய குட்டி வண்ணத்துப்பூச்சி புரோச் இப்போதும் என்னிடம் உள்ளது. அது நிதியன் சேரை நன்றியுடன் நினைவுகொள்ள வைக்கிறது. 

லச்சுமி என் வீடு வந்தபோது நான் எட்டாம் வகுப்புத் தொடக்கம் என நினைக்கிறேன். அதிகாலை எழுந்து கூட்டல், துடையல் முடித்து, யாழ்ப்பாணம் வரை வில்லங்கத்துக்குப் பாடசாலை சென்று களைத்துத் திரும்பும் எனக்கு இது அதிகம் தான். ஆனால் வீடு எனக்கு சகாராவாகவும், வளவு அமேசனாகவும் இருந்தது.  லச்சுமியின் குதூகலம் மண்டை விறைப்பை மாற்ற உதவியது. 

அரிவு வெட்டு முடிந்தால் ஊர்க் கால்நடைகளை வயலுக்குள் ஓட்டி மேய விட்டு விடுவார்கள். அவை தாமாகவே மாலையில் வீடு திரும்பும். அடுத்த விதைப்புக்கு முன் நிலத்துக்கும் பசளை கிடைக்கும். நானும் அம்மாவும் லச்சுமி வெளி உலகம் பழகுவதற்கு இது நல்ல சந்தர்ப்பம் என்று தீர்மானித்தோம். வேறு ஆடுகளுடன் சேர்ந்து கொண்டால் கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து விடுவாள், வாழ்க்கை பிடிபட்டுவிடும் என நினைத்தோம். நான் தாத்தா வளவு தாண்டி, ஒற்றையடிப்பாதை வயலில் முடியும் எல்லைவரை லச்சுமியை அழைத்துச் சென்று, பரந்த வயல் நிலத்தையும், சுதந்திரமாகத் திரியும் ஆடு மாடுகளையும் காட்டினேன். லச்சுமி துள்ளிக் குதித்து ஓடுவாள் என நினைத்தேன். வெருண்டு போன ஆடு என் இழுப்புக்கு வர மறுத்தது. வீடுநோக்கித் தலைதெறிக்க ஓடத் தொடங்கியது. கயிறு சிக்குப்பட்டு என் ஆள்காட்டி விரல் லச்சுமியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெட்டிக் காயம் ஏற்பட்டது. வலி உயிர் போயிற்று. முதல்முறை எனக்கு லச்சுமியில் பற்றிக்கொண்டு வந்தது. “சனியன், மாட்டு ஆடு! உன்னை ஆர் என்ன பண்ணப் போயினம்? எதுவும் விளங்காம என்ன கோதாரியே உனக்கு?” திட்டித் தீர்த்தேன். லச்சுமி எந்த எதிர்வினையும் காட்டாமல் என் முதுகில் ஏறித் தலைமயிரைச் சப்பி விளையாடிக் கொண்டிருந்தாள். 

திட்டம் இரண்டு, அடுத்த வேலி உமா அன்ரி வீட்டு ஆட்டுடன் பழக வைப்பது என்று முடிவானது. ஆட்டுக்குட்டி, கன்று, பருந்தை ஏமாற்றவென்று வண்ணம் வண்ணமாய்ச் சாயம் பூசிய கோழிக்குஞ்சுகள் என நாம் பினைந்து, அளைந்து விளையாடுவது உமா அன்ரி வீட்டில்தான். இவை எல்லாவற்றையும் கெங்கா அக்கா கண்ணும் கருத்துமாகப் பராமரித்தா. ஒவ்வொரு முறையும் ஆடு அல்லது பசு குட்டி ஈனும் அதிசயத்தைப் பார்ப்பதற்காக கெங்கா அக்காவிடம் சொல்லி வைத்துக் காத்திருப்போம். ஆனால் எல்லாமே சாமத்தில் ஈன்றுபோட்டு ஏமாற்றிவிடும். காலை எழுந்து ஓடிப்போய் தவ்வல் குட்டிகளையும், கெங்கா அக்கா கிடங்கு வெட்டி இரத்தம் தோய்ந்த இழையங்களைப் புதைப்பதையும் விழி விரியப் பார்ப்போம். 

கெங்கா அக்காவிடம் அப்போது இருந்த மறி, அரிவைப் பருவத்தில், பேரிளம் பெண்ணின் முதிர்ச்சியுடன் இருந்த அமைதியான தாய் ஆடு. இரண்டு கிடாய்க் குட்டிகளுக்குச் சொந்தக்காரி. கெங்கா அக்கா தனது ஆட்டையும், குட்டிகளையும் எங்கள் வளவுக்குள் லச்சுமியுடன் சேர்த்துக் கட்டி விட்டா. அவவின் ஆடு மிகவும் பெருந்தன்மையானது. லச்சுமியையும் கவனித்துக் கொள்ளத் தொடங்கியது. முதன்முதலாக வகுப்புக்கு ஒரு நல்ல வாத்தியின் வருகையைக் கண்ட மாணவரைப் போல லச்சுமி கொஞ்சம் கொஞ்சமாகப் படியத் தொடங்கினாள். எனக்கு நம்பிக்கை பிறந்தது. கெங்கா அக்கா நான் இல்லாத போது லச்சுமியையும் பார்த்துக் கொண்டா. மெல்லமாய்க் கிளப்பித் தமது வளவிலும் விட்டுப் பழக்கினா. 

நிலைமை கட்டுக்குள் வரத்தொடங்கியிருந்தும், பலதும் பத்தும் யோசித்து அம்மாவிடமிருந்து ஒருநாள் என் லச்சுமியைச் சின்னத்தம்பியிடம் விற்றுவிடப் போவதாக அறிக்கை வந்தது. நான் ஆடிப் போனேன். எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். கெங்கா அக்காவின் வழிகாட்டலில் நான் லச்சுமியைப் பெருங் குடும்பமாக்கி நிறைக்கும் நினைப்பில் இருந்தேன். அவவின் கிடாய்க்குட்டிகள் விடலையானதும், லச்சுமி நிச்சயம் ஒன்றில் மையல் கொள்வாள் எனக் காத்திருந்தேன். 

சின்னத்தம்பி காலங்காலமாக எங்கள் சந்தி வீட்டில் வேலி அடைப்பு, காணி வேலை, தேங்காய் பிடுங்குவதற்கு உதவிக்கு வந்து போய்க் கொண்டிருந்தது. இப்போது கிழடு தட்டிச் சில சில்லறைத் தொட்டாட்டு வேலைகளுக்கு வந்து செல்வதுண்டு. மகள் குடும்பத்தினர் பேரன், பேர்த்தி என்று வசித்த சின்னத்தம்பியை எனக்கு நான் குழந்தையாக இருந்தபோதே தெரியும். சின்ன வயதில் கதியால் நட்டுக்கொண்டிருக்கும் சின்னத்தம்பியை வேலையில் கவனம் செலுத்த முடியாமல் ஆயிரம் கேள்வி கேட்டு ஆக்கினை பிடித்திருக்கிறேன். சின்னத்தம்பி சாப்பிடுவதற்குக் கல்லை இழைக்கும் போது எமக்கும் சேர்த்து இழைத்துச் சாப்பிடுவதற்குத் தர வேண்டுமெனச் செய்வித்திருக்கிறேன். சைக்கிள் ஓடத் தொடங்கிய பின், பத்து நிமிட உழக்கலில் சின்னத்தம்பி வீடு சென்று ஏதாவது வேலியடைப்பு, காணி அலுவல் இருந்தால் வரச்சொல்லி அழைப்பு விடுத்து வருவேன். எனக்குச் சின்னத்தம்பியைத் தெரியும். ஆனால் லச்சுமிக்குத் தெரியாதே? 

சரசாலைக் காளி கோயில் வீரமாகாளி அம்மன் நேரே வந்தாலும், எனக்கு முரணாக அம்மா எடுத்த முடிவை மாற்ற முடியாது. இருந்தும் எவரென்றில்லாமல் யாருக்கென்றாலும் உள்ளுக்குள்ளே  இளகி அம்மாவிற்குக் கண்ணீர் தளும்பி விடும். சின்னத்தம்பி ஆட்டைக் கவனமாகப் பார்த்து வளர்க்கும், ஏற்கனவே ஆடு மாடுகள் வளர்க்கிறார்கள், அனுபவம் உள்ளவர்கள், எப்போதாவது போய்ப் பார்த்து வரலாம் என்று கொஞ்சம் இறங்கி வந்து அம்மா சமாதானம் செய்தா. தானும் சமாதானப்பட்டா. ஆனால் லச்சுமிக்குத்தான் சின்னத்தம்பி குடும்பத்துடன் பழக்கம் இல்லையே? 

என்னால் தடுக்க முடியவில்லை. அம்மாவிடம் லச்சுமியின் நாளாந்தக் கவனிப்புகள், வெயில், மழைக்குள் விடாமல் பாதுகாப்பது, அவள் கத்தினால் அருகில் இருக்க வேண்டிய தேவை எல்லாவற்றையும் சின்னத்தம்பியிடம் கறாராகச் சொல்லச் சொன்னேன். நான் சொன்னால் காதில் விழுத்துமோ தெரியாது. “அவனுக்கு எல்லாம் தெரியுமப்பா. அதுகள் ஒழுங்காப் பாக்குங்கள்”. அம்மாவுக்கு ஆடு என்னைவிட்டுப் போனால் போதும் என்ற நிலைமை. நெஞ்சம் பிழியக் கைகால்கள் நடுங்க நான் லச்சுமியைச் சின்னத்தம்பியிடம் கையளித்தேன். முரண்டுபிடித்த ஆட்டைச் சின்னத்தம்பி இழுக்கமுடியாமல் இழுத்துக்கொண்டு போயிற்று. லச்சுமியின் அழுகை படலை தாண்டித் தேய்ந்து தேய்ந்து சென்றது. பெரும் வலி! பரீட்சைகளின் சுமையைப் போலப் பிரித்திட முடியாத நிரந்தரத் துக்கம் ஒன்று அதன் பின்னர் என்னுடன் தங்கிக் கொண்டது. 

சில மாதங்கள் கடந்து, சின்னத்தம்பி வீட்டிற்கு லச்சுமியைப் பார்க்கச் சென்றோம். இடை நாட்களில் சின்னத்தம்பியைச் சந்திக்கவும் முடியவில்லை. எனக்கு  ஆவல் இருந்ததை விட மனம் ஏதோ அந்தரப்பட்டபடி இருந்தது. லச்சுமியை எதிர்கொள்ளும் நிலையும், மீண்டும் விட்டுவிட்டு வருவதும் மனதை நிலையறச் செய்தது. பிள்ளையைச் சந்திக்கச் சிறைக்குச் செல்லும் தாயின் மன நிலையில் நான் இருந்தேன். 

லச்சுமியை சின்னத்தம்பி வீட்டுப் பின் வளவுக் கொட்டிலில் மற்றைய ஆடுகளுடன் கட்டி வைத்திருந்தனர். சற்றுப் பெருத்து உருவம் மாறிக் காணப்பட்டாள். ஓடிச்சென்று நடுங்கும் கைகளால் தடவி அணைத்துக் கொண்டேன். லச்சுமி என்னைக் கண்டு செல்லம் கொஞ்சவில்லை. துள்ளிக் குதிக்கவில்லை. முதுகில் ஏறி நின்று இலையைச் சப்பி ஆட்டம் காட்டவில்லை. லச்சுமிக்கு என்னைத் தெரியவில்லை. ஆடு பிள்ளைத்தாய்ச்சி, சில மாதங்களில் குட்டி ஈன்று விடும் என்று சின்னத்தம்பி வீட்டில் கூறினர். ஆச்சரியம் கலந்த சிறு மகிழ்ச்சி. ஆனால் ஏன் என்னைக் கண்டு கொள்ளவில்லை? ஆடுகள் என்றால் இப்படித்தானோ? எப்படி இருந்தாலும் லச்சுமி ஏதோ நிலையில்லாமல் தவிப்பது போல் இருந்தது. ஆயினும், வீடு வந்ததிலிருந்து என்னை மீண்டும் கண்டு பிரிந்ததற்காக லச்சுமி அழாதது சிறு நிம்மதியையே அளித்தது. 

மீண்டும் சில மாதங்கள் சென்ற பின்னர் சின்னத்தம்பி எங்கள் வீட்டிற்கு ஏதோ அலுவலாக வர நேர்ந்தது. 

“சின்னத்தம்பி, என்ர ஆடு குட்டி போட்டுட்டுதே? எப்பிடி இருக்கு?”

“ரண்டு குட்டியள் பிள்ளை. என்னவெண்டால் அண்டைக்கு மழை பெய்யேக்க காணிக்க மேயக்கட்டி இருந்தது. நாங்கள் வெளிய போட்டு வரேக்க கொஞ்சம் செண்டு போட்டுது. ஆடும் குட்டியளும் நனைஞ்சு ஏதோ நோய் பிடிச்சுச் செத்துப் போச்சுதுகள்”.

சின்னத்தம்பி போகிற போக்கில் சொல்லிவிட்டுத் தன் அலுவலில் மூழ்கி விட்டது. சுப்பர் சொனிக் தலைக்கு மேலேயே குத்திட்டுக் குண்டு போட்டது போல் நான் வெலவெலத்துப் போனேன். ஐயோ என் லச்சுமி! பச்சை உடம்புக்காரி. அப்போதும் படித்துப் படித்துச் சொன்னேனே! அதன் பின்னர் எவ்வளவு நாட்கள் அழுது தீர்த்தேன் என்பது ஞாபகத்தில் இல்லை. 

என் லச்சுமி, என்னைப் போன்றவள். தனித்தவள். தனக்கான வட்டம் கொண்டவள். மந்தைகளின் வாழ்க்கை சரிப்படாதவள். பிழைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டாள். 

ஒருவேளை லச்சுமி என்னுடனேயே இருந்து, கெங்கா அக்காவின் கிடாயுடன் காதல் கொண்டு, குடும்பம் பெருக்கியிருந்தால், எனக்கும் அடுத்தடுத்த தவணைப் பரீட்சைகளில் புள்ளிகள் கொஞ்சம் பெருகியிருக்கும். அம்மாவுக்குத்தான் புரியாமற் போய்விட்டது.

எழுதியவர்

சுபா .
தேர்ந்த இலக்கிய வாசிப்பாளரான சுபா இலங்கையை சார்ந்தவர். பணி நிமித்தமாக வெளிநாட்டில் வசிக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x