எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண பூக்கள் நிறைந்து பார்க்கவே அழகாக இருந்தது அந்தத் தோட்டம்.
அந்தத் தோட்டத்தில் பல நிறங்களில் பட்டாம்பூச்சிகளும், ஒரு வெட்டுக்கிளியும் வாழ்ந்து வந்ததன.
அங்கிருந்த பட்டாம்பூச்சிகள் எல்லாம் ஒவ்வொரு நாளும் சிரித்துப் பேசி, பாடி, ஆடி, பறந்து திரிந்து மகிழ்ச்சியாக இருந்தன. ஆனால் இந்த வெட்டுக்கிளி மட்டும் எப்போதுமே முகத்தை தொங்கபோட்டுக் கொண்டு சோகமாகவே இருந்தது.
பட்டாம்பூச்சிகள் விளையாட கூப்பிட்டால் கூட போகாது. எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தது. என்னாச்சு உனக்கு என யாராவது கேட்டாலும் பதில் சொல்லாமல் அழத் தொடங்கிவிடும்.
இந்த வெட்டுக்கிளியை பல நாட்களாக நீலநிறப் பட்டாம்பூச்சி கவனித்துக் கொண்டே வந்தது.
சாதாரணமாகவே கவலையோடு இருக்கும் வெட்டுக்கிளி, கடந்த இரண்டு நாளாக இன்னும் மோசமாகியது. அதனுடைய முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை. அடர்பச்சை நிற முகம் வெளிறிப் போய் இருந்தது.அதனுடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.
நீலநிறப் பட்டாம்பூச்சிக்கு அதைப் பார்க்கவே பாவமாக இருந்தது. ஏன் இந்த வெட்டுக்கிளி இப்படி இருக்கு? அப்படி என்ன வெளிய சொல்ல முடியாத கவலை? நம்மால் முடிந்த உதவி அதற்கு செய்யலாம் என எண்ணியது.
மெதுவாக வெட்டுக்கிளி உட்கார்ந்திருந்த முருங்கை மரத்தில் போய் அதன் பக்கத்தில் உட்கார்ந்தது நீலப்பட்டாம்பூச்சி.
” வெட்டு நீ ஏன் எப்பவுமே சோகமா இருக்க? உன்னப் பார்த்தா எனக்கு வருத்தமா இருக்கு. இந்த தோட்டத்துல இருக்கற நாங்க எல்லாம் மகிழ்ச்சியா இருக்கும்போது நீ மட்டும் அழுத முகத்தோடு இருப்பது கவலையா இருக்கு நண்பா. உனக்கு என்னதா பிரச்சனை? யார்கிட்டயாவது சொன்னாதானே தீர்வுனு ஏதாவது கிடைக்கும். சொல்லு வெட்டு நான் உனக்கு உதவ முயற்சி பண்ணுறேன்” என்றது நீலநிற பட்டாம்பூச்சி அக்கறையோடு.
“எனக்கு இருக்கற பிரச்சனைக்கு உன்னால ஏதும் செய்ய முடியாது பட்டு, நீ எவ்வளவு அழகா கலர்ஃபுல்லா இருக்க. நீல நிறத்துல அந்த கருப்பு வட்டத்தோட பார்க்கவே எவ்வளவு அழகா இருக்க. நான் மட்டும் வெறும் பச்சையா பார்க்கவே அசிங்கமா இருக்கேன்” .
“அதுமட்டுமா நாளைக்கு பக்கத்து தோட்டத்தில் வசந்த கால கொண்டாட்டம். பல தோட்டங்களில் இருந்து எல்லா பூச்சிகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. வெறும் பச்சையான உடம்போட எப்படி போவது? எல்லாரும் கலர் கலரா டிசைன் போட்ட உடம்போட அழகா வரும்போது எந்த டிசைனும் இல்லாமல் பார்க்கவே டல்லா இருக்கப் போறேன்” என சொல்லி கதறி அழுதது.
வெட்டுகிளிக்கு இருப்பது தாழ்வு மனப்பான்மை என்பதை புரிஞ்சுகிட்ட பட்டாம்பூச்சி அதற்கு ஒரு நல்ல பாடம் சொல்லித்தர முடிவு செய்தது.
அதனிடம் ஒரு திட்டம் இருப்பதாகவும், அதை நடைமுறைப்படுத்திய பிறகு பழைய நிறத்திற்கு மாற முடியாது என்றது.
“என்னோட கலர் மாறினா போதும், என்ன ஆனாலும் பரவாயில்ல ” என்றது வெட்டு.
நீலப் பட்டு தோட்டத்தில் இருக்கிற எல்லா பட்டாம்பூச்சிகளையும் வரச் சொன்னது. வந்த பட்டாம்பூச்சிகளிடம் இருந்து பல பல வண்ணங்களை வாங்கியது. வாங்கிய வண்ணங்களை வெட்டுக்கிளியின் உடம்பில் பூசியது. பச்சை நிறமாக இருந்த நம்ம வெட்டுகிளி இப்போது கலர்ஃபுல்லாக மாறியது.
புது வண்ணத்தோடு மகிழ்ச்சியாக வசந்தகால கொண்டாட்டத்திற்கு கிளம்பியது நம் கலர்ஃபுல் வெட்டுக்கிளி. நேரம் கழித்து போனால்தான் கூட்டம் முழுவதும் தன்னைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள் என்று தாமதமாக கூட்டத்திற்கு போக முடிவு செய்தது.
வசந்த கால கொண்டாட்டம் தொடங்கியது. அருகிலிருந்த தோட்டங்களில் இருந்து
எறும்பு, பொன்வண்டு, வெட்டுக்கிளி, பட்டாம்பூச்சி, சிலந்தி, கரப்பான் பூச்சி, கொசு, மின்மினிப்பூச்சி, தேனீ, குளவி, தயிர்வடை, மூட்டைப்பூச்சி, பழப்பூச்சி, ஈசல், இரயில்பூச்சி, வண்டு, நத்தை, சுவர்கோழி அப்புறம் இன்னும் பெயர் தெரியாத பல பூச்சிகள் வந்திருந்தது.
குட்டி பூச்சிகள் எல்லா ஓடியாடி விளையாடி ஆட்டம் போட்டது. பெரியவர்கள் எல்லாம் அவர்களுக்குள் பேசி சிரித்து மகிழ்ச்சியாக இருந்தனர். சுவர்கோழியின் பாட்டு கச்சேரிக்கு ஏற்றவாரு தயிர்வடையின் நடனம், மின்மினிப்பூச்சியின் ஒளி நிகழ்ச்சி என அந்த இடமே கொண்டாட்டத்தில் திழைத்திருந்தது.
நம்ம கலர்ஃபுல் வெட்டிகிளி நேரம் கழித்து போனால்தான் கூட்டம் முழுவதும் தன்னை பார்த்து ஆச்சரியப்படுவார்கள் என்று தாமதமாகவும் பெருமிதமாகவும் வந்தது. அதற்கு கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. மற்ற பூச்சிகள் அதனுடைய அழகைப் பார்த்து வியந்து பாராட்டினால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பயிற்சி செய்துவிட்டு வந்தது.
ஆனால் அங்கு நடந்தது என்னவோ வேறு. விளையாடிக் கொண்டிருந்த குட்டி பூச்சிகள் எல்லாம் அம்மா! அம்மா! பூச்சாண்டி!? பூச்சாண்டி!? என கத்திக் கொண்டும் அலறிக்கொண்டு அங்கேயும் இங்கேயும் அவர்களது அம்மாவைத் தேடி ஓட தொடங்கியது. குழந்தைகள் அங்கேயும் இங்கேயும் ஓட ஓரே கூச்சல் குழப்பமாகியது.
வேற்றுகிரகத்தில் இருந்து வந்த ஏதோ ஏலியன் பூச்சி என வயதான பூச்சிகள் பேசத்தொடங்கினர். நம்ம வெட்டுக்கிளியை பார்த்து குசுகுசுவென பேசுவதும் குட்டி பூச்சிகள் அழுவதும் அந்த இடமே கலவரமாக மாறியது.
நடப்பவைகள் எல்லாம் வெட்டுக்கிளிக்கு அதிர்ச்சியாக இருந்தது தன்னைக் கண்டு எல்லோரும் இரசிப்பார்கள். தன்னுடைய நிறத்தைப் பற்றி கேட்பார்கள் என ஆசையாக வந்ததற்கு நேர்மாறாக இங்கு நடப்பவைகள் இருந்தது. நீல நிற பட்டாம்பூச்சி நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தது.
வெட்டுக்கிளி கூட்டம் ஒன்றும் அங்கு வந்திருந்தது. அவைகளும் வெட்டுக்கிளியைப் பார்த்து மிரண்டு ஒதுங்கி நின்றன.
உடைந்து அழ தொடங்கியது நம்ம கலர்ஃபுல் வெட்டுக்கிளி.
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நீலநிற பட்டாம்பூச்சி இனியும் தாமதப்படுத்தக் கூடாது என வெட்டுக்கிளியை சமாதானப்படுத்த தொடங்கியது.
வண்ணமயமாக இருப்பதைவிட சொந்த நிறத்தில் இருப்பதே மேல், மீண்டும் பழைய மாதிரியே பச்சை நிறத்திற்கு மாற வேண்டும் என அழுதது. ஆனால் பழைய நிறத்திற்கு மாற முடியாது என்பதை நினைத்து இன்னும் சத்தமாக அழுதது.
தன்னுடைய தவறை புரிந்து கொண்ட வெட்டுக்கிளியை இனியும் அழவிட வேண்டாம் என பட்டாம்பூச்சி தோட்டத்தில் இருந்த அலங்கார நீரூற்று தண்ணீரை பீச்சிக் கொண்டிருந்த இடத்திற்கு கூட்டி கொண்டு போனது.
தண்ணீர் வெட்டுக்கிளியின் மீது பட்டவுடன் எல்லா நிறங்களும் கரையத் தொடங்கியது. மெல்ல மெல்ல அதன் பழைய பச்சை நிறம் வரத் தொடங்கியது.
தோட்டத்தில் மாட்டியிருந்த கண்ணாடி குடுவையில் தன்னை பழையபடி பார்த்ததும் வெட்டுக்கிளி ஆனந்தமாக க்ரிக்… க்ரிக்… க்ரிக்… என கூச்சலிட்டது. இதன் சத்தம் கேட்ட மற்ற வெட்டுக்கிளி களும் இணைந்து கொண்டது. எல்லோரும் ஒன்றுகூடி க்ரிக்… க்ரிக்… க்ரிக்… என சத்தமிட்டும், பாட்டு பாடியும் ஆடியும் மகிழ்ச்சியாக வசந்த விழாவை கொண்டாடினர்.
வெட்டுக்கிளி அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தனது தவறை உணர்ந்தது. அதனுடைய கதை எல்லா தோட்டங்களிலும் இருந்த குட்டி பூச்சிகளுக்கும் சொல்லப்பட்டது. தாழ்வு மனப்பான்மை என்பதே இல்லாமல் வாழ எல்லாப் பூச்சிகளும் பழகிக் கொண்டன. அதனால் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வசந்தகாலமாகவே இருந்தது.
எழுதியவர்
-
கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், கவிஞர் என இயங்குவதோடு சிறார் செயற்பாட்டாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளராகவும் உள்ளார். பாசமலர் மாத இதழின் ஆசிரியர், பன்முக மேடை இதழின் ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைச் செயலாளர்/ மாநிலக் குழு உறுப்பினர் என பல பொறுப்புகளில் உள்ளார்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி, வளையாபதி செய்யுள்களை , கதை வடிவில் சிறார் படிக்கும் வண்ணம் எளிய தமிழில் சிறுகதை எழுதி உள்ள நான்சி மோகன் சிறார்களின் சிறுகதைகளை கொண்ட ”பூக்களின் புதுமொழி” எனும் சிறுகதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியர் ஆவார். மேலும் “காட்சிப் பிழை எனும்” சிறுகதைத் தொகுப்பு நூலும் வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மதுரை சாக்யா அறக்கட்டளை, தளிர் இலக்கிய களம், தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம், திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் கனவு அமைப்பு உள்ளிட்டவைகளிலிருந்து பல விருதுகள் பெற்றிருக்கிறார். சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
இதுவரை.
- சிறார் கதைகள் சிறப்பிதழ் 202519 January 2025யார்டா இந்தப் பையன்