சுட்டிச் சுந்தரிக்கு பூச்சிகளைப் பிடித்து, அவற்றைப் பக்கத்தில் பார்ப்பதில் அலாதி ஆர்வம். அதற்கு அவள் பக்கத்து வீட்டு மஞ்சு அக்கா தான் காரணம்.
போன வாரத்தில் ஒரு நாள் அவர் அவளுக்கு ஒரு வீடியோ காட்டினார். அவர் படிக்கும் கல்லூரியில் பட்டுப் பூச்சி வளர்க்கும் இடம் உண்டு.
அவர் அந்த பூச்சிகளை வீடியோ எடுத்திருந்தார். அதைத் தான் சுந்தரியிடம் காட்டினார்.
நூற்றுக்கணக்கான பட்டுப்பூச்சிகள் இருந்தன. ஒவ்வொன்றும் மல்பெரி இலையை வேக வேகமாகச் சாப்பிட்டன.
“எவ்வளவு வேகமா சாப்பிடுது? கிட்டப் பார்க்கும் போது ரொம்ப கியூட்டா இருக்கு ” சுந்தரி வாய் பிளந்து பார்த்தாள்.
இப்படித் தான் பூச்சிகளை பக்கத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்கு வந்தது. பாட்டிலில் பூச்சிகளைக் கொஞ்ச நேரம் அல்லது ஒரு நாள் வைத்துக்கொண்டு பின்னர் விட்டுவிடுவாள்.
முதலில் பிடிக்க பயமாக இருந்தது. முதல் நாள் அம்மாவைத் தான் உதவிக்குக் கூப்பிட்டாள். அவள் கேட்டது ஒரு தும்பியை.
“இது என்ன புதுப் பழக்கம்? அதெல்லாம் பிடிக்க வேண்டாம்” அம்மா சொன்னவுடன், லிட்டர் லிட்டராகக் கண்ணீர் விட்டாள்.
“கண்ணுக்குள்ள என்ன அருவியா ஒளிச்சு வச்சிருக்க?” அம்மா வேற வழி இல்லாமல் தும்பியைப் பிடித்துக் கொடுத்தார்.
அதிலிருந்து எப்ப பார்த்தாலும் அவள் பூச்சிகளின் பின்னால் சுற்ற ஆரம்பித்தாள். யார் சொல்லியும் கேட்பதில்லை.
அன்று சூரியன் மறைந்து லேசாக இருட்ட ஆரம்பித்தது. சுந்தரி கொல்லைப் பக்கம் போனாள். கையில் கண்ணாடி பாட்டிலிருந்தது. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்தாள்.
“எங்கே, ஒன்னையும் காணல?”
“ஆ..ங்.. அதோ அங்க இருக்கு”
அவள் பார்த்த திசையில் ‘மினுக் மினுக்’, ஒரு மின்மினிப் பூச்சு மினுக்கியது.
பூனை நடை போட்டு அதன் அருகில் போனாள்.
“டபக்…” ஒரு நொடியில் அதைப் பிடித்து கண்ணாடி பாட்டிலில் அடைத்தாள்.
வீட்டிற்குள் போய் லைட்டை அணைத்தாள்.
இருட்டில் “மினுக்.. மினுக்…” பூச்சி அழகாக மினுக்கியது.
“சுந்தரி லைட்டை எதுக்கு அணைச்சிருக்க?” கேட்டபடி அம்மா வந்தார்.
“இப்ப மின்மினி பூச்சியை பிடிச்சிட்டு வந்துட்டியா? அது பாவம் சுந்தரி, அதைப் பறக்க விடு” அம்மா சொன்னார்.
“இது எவ்ளோ அழகா இருக்கு!!” சுந்தரி அம்மா சொன்னதைக் காதில் வாங்கவே இல்லை.
“இன்னைக்கு காலைல தான ஒரு பட்டாம்பூச்சியை பிடிச்சிட்டு வந்த?” அம்மா கோபமாகக் கேட்டார்.
“ஆமாம்மா, அதைப் பிடிக்கவே முடியல, இங்கயும் அங்கேயும் பறந்துட்டே இருந்தது. கஷ்டப்பட்டு பிடிச்சேன்” ஏதோ பெரிய சாகசம் செய்ததை போலச் சொன்னாள்.
அந்த பட்டாம்பூச்சி தும்பைப் பூவில் தேன் குடிக்க உட்கார்ந்து இருந்தது. அவள் அதைப் பிடிக்க முயன்றாள்.
ரொம்ப நேரம் ஆட்டம் காட்டியது. ஆட்டம் காட்டியதில் சுந்தரி அதைக் கொஞ்சம் அழுத்தமாகப் பிடித்து விட்டாள்.
அதன் றெக்கை சிறிது நசுங்கி விட்டது. சிறகை விரித்துப் பறக்க அது சிரமப்பட்டது. அதை உடனே பிடித்து கண்ணாடி பாட்டிலில் அடைத்தாள்.
அதைத் துன்புறுத்துவது அவள் நோக்கம் இல்லை தான், ஆனாலும் சில நேரம் அதற்கு அடிபட்டுவிடும். ரசித்துப் பார்த்துவிட்டு, அன்று இரவு பட்டாம்பூச்சியையும் மின்மினிப் பூச்சியையும் பறக்க விட்டாள்.
தோட்டத்திலிருந்து வீட்டிற்குள் ஓடி வரும் போது அவளின் கால் கட்டை விரல் சுவற்றில் இடித்து விட்டது. பெரிதாக ஒன்றும் அடி படவில்லை. மேல் தோல் லேசாக, ரொம்ப ரொம்ப லேசாக உரிந்து வந்தது.
அதற்கு அவள் செய்த அலும்பல் கொஞ்ச நஞ்சம் இல்லை. அடுத்த இரண்டு நாட்களுக்குக் கட்டிலை விட்டு கீழே இறங்கவே இல்லை.
சாப்பாடு, விளையாட்டு, டிவி பார்ப்பது, தூக்கம் என எல்லாமே அங்கேயே தான்.
“சுந்தரி, உன் காலுல அப்படி ஒன்னும் பெரிய அடி எல்லாம் படல. எப்பவும் போல நட, ஓடி விளையாடு” அம்மா சொன்னார்.
“எனக்கு வலிக்கறது எனக்கு தான் தெரியும். நீங்க அதை கண்ணால பாக்க முடியாது” எதிர் விவாதம் செய்தாள்.
இரண்டு நாள் கழித்து கட்டிலை விட்டு கீழே இறங்கினாள். நேராக தோட்டத்துக்கு தான் போனாள்.
“கால் சரியானதும் நேரா பூச்சி பிடிக்க போய்ட்டியா?” அம்மா சலித்துக் கொண்டார்.
“இந்தாங்க இந்த பாட்டில் எனக்கு வேண்டாம்” சுந்தரி காலி பாட்டிலை அம்மாவிடம் கொடுத்தாள்.
“ஏன்.. என்னாச்சு?” அம்மா அதிசயமாக பார்த்தார்.
“என் காலுல குட்டியா அடி பட்டதுக்கே எனக்கு எவ்வளவு வலிச்சது. அதே மாதிரி தான அந்த பூச்சிகளுக்கும் வலிக்கும். அதுனால இனிமே நான் அவற்றை பிடிக்க மாட்டேன். தொந்தரவு பண்ணாம பக்கத்துல போய் பார்த்துக்கறேன்” என்றாள் பெரிய மனுஷி தோரணையில்.
எழுதியவர்
-
சிறார் எழுத்தாளரான ஸ்ரீஜோதி விஜேந்திரனின் எழுத்தில் இதுவரை ஆறு சிறார் நூல்கள் வெளியாகி இருக்கின்றன. கதை சொல்லியாக கதை சொல்லல் நிகழ்வுகளும், வாசிப்பு சார்ந்த நிகழ்வுகளும் முன்னெடுத்து நடத்துகிறார். ஆங்கில மொழி பயிற்சியாளராக பள்ளி -கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வீட்டில் இருக்கும் பெண்கள், பெரியோர் என 5 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி பட்டறைகள் நடத்துக்கிறார். ViJosBooksBarn என்ற நூலகத்தின் நிறுவனராகவும் உள்ளார்.
www.vijosbooksbarn.com
இதுவரை.
- சிறார் கதைகள் சிறப்பிதழ் 202519 January 2025சுட்டிச் சுந்தரி
சுந்தரியோடு சேர்ந்து பயணித்த உணர்வு. கதையை ரொம்ப அழகு நடையில் படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் 💐💐💐❤️