27 December 2024
Chellapandi 13

நீண்ட நாட்களாகவே அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டுமென்றிருந்த வளர்மதி அன்றுதான் அதற்காக வாய் திறந்தாள். அவள் பக்கத்தில் சில சிலவர் தட்டுகள் ஒன்றின்மேல் ஒன்றாக ஒழுங்கின்றிச் சிதறிக் கிடந்தன.அந்த சில்வர் தட்டுகளின் பக்கத்திலேயே பல சைஸ்களில் சில்வர் கிண்ணங்கள், கிளாஸ்கள், பிளாஸ்டிக் தட்டுகள், ஒரு வெண்ணிறக் காபி சல்லடை, பாத்திரங்களைச் சுத்தப்படுத்தும் நவீனப் பாத்திரப் பொடி, ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் பிளிச்சிங் பவுடர் என ஏதேதோ தென்பட்டன.

அவள் காலுக்குக் கீழே இருந்தே சிமெண்ட் தரை தண்ணீர் பட்டு, பட்டு சில்லென இருந்தது. அந்தத் தரையில் பல சோற்றுப்பருக்கைகள் , கருவேப்பிலைகள் , காய்கறித் துண்டுகள் சிதறிக்கிடந்தன.

அவள் பின்னாடி தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் குடங்கள், பாதிமட்டம் தண்ணீர் கொண்ட பிளாஸ்டிக் பக்கெட்கள், ஒரு சிமெண்ட் தண்ணீர்த் தொட்டி.

இந்த வீட்டில் குளிப்பதற்கு, பாத்திரம் கழுவதற்கு,, இரவு நேரத்தில் அவசரத்தில் ஒன்னுக்குப்போவதற்கு என எல்லாவற்றிற்கும் ஒரே இடம் இப்போது வளர்மதி நின்றிருக்கும் இந்த இடம்தான். நகரத்தில் உள்ள வீடுகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அறை இருக்கும். கிராம வீடுகளில் அந்த வசதியுடன் இருக்கும் வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

கையில் வைத்திருந்த தட்டின் உள்பகுதியை உற்றுப்பார்த்தாள். அதில் முத்துமாரி என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அது மாதிரி கீழே சிதறிக்கிடக்கும் ஒவ்வொரு தட்டுகளிலும் மாரீஸ்வரி, வளர்மதி, லட்சுமி எனப் பொறிக்கப்பட்டிருந்தன.

அம்மா பெயர், தன் பெயர், தங்கைகளின் பெயர்களைக் கண்ட அவள், ஒரு தட்டில்கூட கந்தசாமி என்கிற தன் அப்பாவின் பெயரைக் காணமுடியவில்லை. அப்போதுதான் அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டுமென்று அவள் வாய் திறந்தாள்.

அவளின் அம்மா அடுப்படி வேலைகளில் மும்முரமாக இருந்ததால், இவள் கேட்ட கேள்வியைச் சரியாகக் காதில் வாங்கவில்லை. மீண்டும் சத்தமாக வளர்மதி கேட்டாள்.”அம்மா தட்டுல ஓம்பேரு, ஏம்பேரு, தங்கச்சி பேரெல்லாம் இருக்கு. எந்த தட்டுலயும் அப்பா பேரு மட்டும் இல்ல. ஏன்ம்மா..?

“ஏன்டி இப்படிச் சத்தம்போட்டுக் கேட்கிற. எனக்கினா காது கேக்காதா”என்று சத்தமாகக் கோபத்துடன் வளர்மதியைத் திட்டினாள் அம்மா.

“நீ ஏன்ம்மா இவ்வளவு சத்தம்போட்டு என்ன வையுற. எனக்கென்ன காது கேக்காதா” என்றாள் வளர்மதி.

“வர வர உனக்கு வாய் கூடுது. வாயக் கிழிக்கப்போறேன் பாரு”.

இவங்க ரெண்டு பேரு சத்தத்தையும் கவனித்துக்கொண்டே விளையாடிக்கொண்டிருந்தார்கள் வளர்மதியின் தங்கைகள். ஒரு தங்கைக்கு வயது மூன்று. இன்னொரு தங்கைக்கு வயது எட்டு. வளர்மதிக்கு வயது பதின்மூன்று.

யாராவது வளர்மதியிடம் “நீ அம்மா பிள்ளையா..? நீ அப்பா பிள்ளையா ..?” என்று கேட்டால், யோசிக்காமல் சொல்வாள் நான் அப்பா பிள்ளையென்று. அப்பா என்றால் அவளுக்கு உயிர். அவள் உண்மையிலே பிதாமகள்.

“அம்மா சொல்லும்மா தட்டுல அப்பா பெயர் மட்டும் ஏன் இல்லம்மா “என்று மீண்டும் கேட்டாள் வளர்மதி.

“அடியே ஏன்டி என் உசுற வாங்குற .நேரம் ஆயிருச்சு. வேகமா பள்ளிக்கூடம் கெளம்புடி” என்றாள் அம்மா.

“அம்மா. ஏன்ம்மா அப்ப பேரு மட்டும் இல்ல தட்டுல”என்றாள் மீண்டும் வளர்மதி.

சொந்தக்காரரின் மகளின் சடங்குக்கு வளர்மதி அம்மா, அப்பா மொய் செய்முறைக்காக அருப்புக்கோட்டைக்கு போயி பித்தளை அண்டா வாங்கி அதில் வீரபத்திரன் என்று தாத்தா பெயர் பொறித்து வந்தது ,ஞாபகம் வந்தது வளர்மதிக்கு.

“அம்மா நீ அண்டா வாங்க போவேல.. அங்க தட்டு விலை எம்புட்டுமா”என்றாள் வளர்மதி.

“இப்ப பள்ளிக்கூடம் கெளம்புறயா.. என்னவாயிருக்கு. காலையிலிருந்து தட்டு, நொட்டுனுக்கிட்டு”என்றாள் அம்மா.


ரண்டு மாதங்களுக்குப் பிறகு…..

வளர்மதி பள்ளிக்கூடம் போவதற்கு இன்று மட்டும் மனம் நோகவில்லை. அதற்குக் காரணம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. வளர்மதி போட்டியில் கலந்துகொள்வதே எழுது,படி என்று ஆசிரியர்களின் தொல்லைகளின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகத்தான்.

அதனால் என்னவோ போட்டி என்றால் முதல் ஆளாய் கலந்துகொள்வாள். பரிசு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும்.

இன்றும் மழை வலுத்ததால் ஆசிரியர்கள் வெளியே ஓட்டப்போட்டி நடத்த முடியாது என்று முடிவுக்கு வந்தார்கள். கவிதை, கட்டுரை என மற்ற போட்டிகள் எப்போதும்போல எல்லா வகுப்புகளிலும் இயல்பாக நடந்துகொண்டுதான் இருந்தன.

எட்டாம் வகுப்பிற்குச் சென்ற மதியழகன் சார் நுண்ணுணர்வு சார்ந்த போட்டி ஏதாவது நடத்துவது என்று முடிவுக்கு வந்தார். அந்த எட்டாம் வகுப்பில்தான் வளர்மதி படிக்கிறாள்.

எட்டாம் வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவ, மாணவிகளைச் சிறிது நேரம் வகுப்பை விட்டு வெளியே உள்ள வரண்டாவில் சென்று நிற்கும்படி சொன்னார்.

நம்மல எதுக்கு வெளியே போகச்சொல்கிறார்… அப்படி என்ன வித்தியாசமான போட்டி நடத்தப்போகிறார். என்ற குழப்பத்திலே மாணவ, மாணவிகள் வரண்டாவுக்கு போய் நின்று மழையை இரசிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போது வகுப்பு உள்ளே இருந்துகொண்டு மதியழகன் ஆசிரியர் வகுப்பின் கதவுகளை ஜன்னல்களை அடைத்தார். ஏன் உள்ளே இருந்துகொண்டே அடைக்கிறார் என்று மாணவர்களுக்குப் புரியவில்லை. அதற்குள் கூட இரண்டு ஆசிரியர்கள் அந்த வகுப்பை நோக்கி வந்தார்கள்.

வகுப்பின் கதவு திறக்கப்பட்டது. எல்லோரையும் வகுப்பினுள் அழைத்தார் மதியழகன் ஆசிரியர்.

“எல்லோரும் கையில ஒரு பேப்பர், பேனா எடுத்துக்கோங்க” என்று மாணவ மாணவிகளைப் பார்த்துச் சொன்னார் மதியழகன் சார்.

“எல்லோரும் ரெடியா” என்றார் இன்னொரு ஆசிரியர்.

“ம்” என்றார்கள் போட்டி பயத்தோடு மாணவ மாணவிகள்.

தரையில் ஒரு பெரிய பொன்னாடைக்குக் கீழே எதையெதையோ மறைத்து வைத்திருந்தார் மதியழகன் ஆசிரியர். பொன்னாடையைச் சுற்றிக் கூடியிருந்த மாணவ மாணவிகளைப் பார்த்து மீண்டும்”ரெடியா’ என்றார் ஒரு ஆசிரியர்.

“ரெடி “என்றார்கள் மாணவ மாணவிகள். படாரென்று பொன்னாடையை விலக்கினார். அதனுள் சாக்பீஸ், கண்ணாடி, பூலோகப்பந்து, வாட்ச் இப்படி எண்ணற்ற பொருட்கள் ஒன்றல்மேல் ஒன்றாகப் பரவிக்கிடந்தன.

சில நொடிகளில் அந்தப் பொருட்களைப் பொன்னாடையால் மூடிவிட்டார். போயி தனியா தனியா உட்கார்ந்து நீங்கப் பார்த்த பொருள் என்னென்னு எழுதுங்க என்றார் மதியழகன் ஆசிரியர்.எழுத ஆரம்பித்தார்கள் மாணவ, மாணவிகள்.

ஆசிரியர்கள் போட்டியில் கலந்துகொண்ட எல்லா பேப்பரையும் தரம் பிரித்தார்கள். வகுப்பிலேயே முனீஸ்வரன் தான் அதிகமான எண்ணிக்கையில் பொருட்களை எழுதியிருந்தான். அதற்குப்பிறகு வளர்மதி எழுதி இருந்தாள். அதற்குப் பிறகு ரமேஷ் எழுதியிருந்தான்.

முடிவில் வளர்மதிக்குத்தான் முதல் பரிசு அறிவித்தார்கள் ஆசிரியர்கள். முனீஸ்வரனைவிட வளர்மதி எண்ணிக்கையில் பொருட்களை கம்மியாக எழுதியிருந்தாலும்; எழுத்துப் பிழையில்லாமல் எழுதியிருந்தாள்.

ஆனால் முனீஸ்வரன் எழுதியதில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள். அதனால்தான் முனீஸ்வரனுக்கு கிடைக்கவேண்டிய முதல் பரிசு தவறி வளர்மதிக்குக் கிடைத்துவிட்டது.


ழையில் நனைந்துகொண்டே வந்த வளர்மதியைப்பார்த்து ,”ஏன் இப்படி மழையில நனஞ்சுக்கிட்டே வார.. காய்ச்ச கீய்ச்ச வந்தா என்னடி பண்ணுறது” என்றாள் பொய்யான கோபத்தில் அம்மா.

வளர்மதி தன் பையினுள் கையைவிட்டு சடாரென்று மினுமினுக்கின்ற ஒரு புதுத்தட்டை எடுத்து நீட்டினாள். “என்னடி இது என்றாள்” ஆச்சரியமாக.

“எம்மா எங்க பள்ளிக்கூடத்தில போட்டி நடத்துனாங்க. அந்த போட்டியில நான்தான் முதல் பரிசு “என்றாள் வளர்மதி. பக்கத்தில் இருந்த வளர்மதி வகுப்புத் தோழியான பிரியங்கா “ஆமா அத்தை முதல் பரிசு வாங்கிட்டாள் இன்னைக்கு வளர்மதி” என்றாள்.

“என்ன போட்டி”என்றாள் அம்மா.

போட்டியைப்பத்தி சொல்ல ஆரம்பித்தாள் வளர்மதி. “ரொம்ப பொருட்களை ஒரே இடத்தில் வச்சிட்டு அதன்மேல துணியை போட்டு மூடி வச்சிருவாங்க. படிக்கிற பிள்ளைகளையெல்லாம் கூப்பிட்டுக் கொஞ்ச நேரம் காமிச்சிட்டு டப்புனு திரும்பவும் மூடியிருவாங்க. என்னென்ன பொருள்களை பார்த்தாமோ அத எழுதச்சொல்வாங்க. யாரு பார்த்த பொருள்களில் ரொம்ப பொருள்களை எழுதுறாங்களோ அவங்களுத்தான் முதல் பரிசு”என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் வளர்மதி.

“நீதான் ரொம்ப பொருள் எழுதுனயா.. “என்றாள் அம்மா சந்தோஷத்தில்.

“இல்ல என்னவிட முனீஸ்வரன் என்கிற பையன் எழுதினான் “என்றாள் வளர்மதி.

“பிறகு எப்படி உனக்கு முதல் பரிசு?”

“முனீஸ்வரன் பதினேழு பொருள் எழுதியிருந்தான். நான் பதிமூன்று எழுதியிருந்தான். முதல்ல அவனுக்குத்தான் முதல் பரிசுனு சாரெல்லாம் எல்லாம் பேசுனாங்க.

பிறகு அவன் எழுதின பதினேழில் அஞ்சு சொல் எழுத்துப்பிழையோடு இருந்தது. நான் எழுதின பதிமூன்றும் எழுத்துப்பிழை இல்லாம இருந்தது. அதனால எனக்கு முதல் பரிசு அறிவிச்சாட்டாங்க”என்றாள் மகிழ்ச்சியில் வளர்மதி. அதற்கு பிரியங்கா “ஆமா அத்தை” என்றாள்.

“எம்மா நீ அருப்புக்கோட்டைக்கு என்னைக்காவது போனா இந்த தட்டுல அப்பா பேரு எழுதிட்டுவர்றீயா.. நம்ம வீட்ல அப்பா பேரு எழுதுன தட்டு மட்டும் இல்லேல.. அதான்..”என்றாள் வளர்மதி.

அதுக்கு அம்மா ” சரிடி “என்றாள்.

“உங்க அப்பா வந்தவுடன் இந்தப் பரிசு வாங்குன தட்டைக் காமி”.

அப்பாவின் வருகைக்காக கையில் தட்டுடன் சந்தோஷமாகக் காத்திருந்தாள் வளர்மதி. நேரம் ஆக ஆக எந்தச் செருப்பு சத்தம் கேட்டாலும் வாசலுக்கு வந்தாள் கையில் தட்டுடன்.

மழை தூறிக்கொண்டிருந்தது. சடக் சடக் என்ற ஒரு செருப்பு சத்தம் வந்தது. அந்தச் சத்தத்தை வைத்தே இது அப்பாதான் என முடிவுக்கு வந்து வாசலுக்கு வந்தாள்.

அப்பாகிட்ட பரிசு வாங்கிட்டு வந்த விஷயத்தைச் சொல்லி தட்டைக் காமித்தாள். அதைப் பார்த்து அவருக்கு கண் கலங்கிவிட்டது.

பரிசுத்தட்டு வளர்மதி வாங்கிட்டு வந்ததிலிருந்து அப்பாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம் .”இனிமே எந்த சாமிக்கு விரதச் சாப்பாடுனாலும் சரி, இனி வாழையிலைல சாப்பிடமாட்டேன். எம்பொண்ணு வாங்கிட்டு வந்த இந்த பரிசுத்தட்டுலதான் சாப்பிடுவேன்” என்று ஆத்மார்த்தமாகச் சொன்னார். அதைக்கேட்டு அவரின் மனைவி “விரதம்னு வாழையிலைலதான் சாப்பிடணும். இல்லேன்னா சாமி கோவிச்சுக்கிடும்” என்றாள்.

“சாமி கோவிச்சாலும் பரவாயில்ல. இந்த தட்லதான் சாப்பிடுவேன்” என்றார்.

“சாமியவிட. ஓம்மக வாங்கிவிட்டு வந்த தட்டு ஒசத்தியாசப்போச்சு..” என்றாள் வெற்றுக்கோபத்தில்.

“எம்மக வாங்கிவிட்டு வந்த தட்டு அந்த சாமியவிட ஒசத்திதான் எப்போதும்.” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும் சிரித்துக்கொண்டாள் வளர்மதி அம்மா.


ன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலையிலிருந்தே குடிக்க ஆரம்பித்துவிட்டார் வளர்மதியோட அப்பா. “இப்படி விட்டுனு விடியாம, வாயில ஊத்திட்டு வந்துட்டிங்களே.. “என்று கோபமாகத் திட்டினாள் வளர்மதியோட அம்மா. அதற்குப் பதில் ஏதும் பேசாமல் சிரித்துக்கொண்டார்.

பிள்ளைகளை ரோட்டுக் கடைக்கு கூப்பிட்டுப்போயி வடை, டீ வாங்கித் தந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கும்போது “எப்பா வீட்டுக்கு வாப்பா “என்றாள் வளர்மதி.

“போங்க அப்பா கெணத்த பக்கம் போயிட்டு வாரேன் “என்றார். “குளிச்சிட்டு வேமா வந்துரு” என்றாள் வளர்மதியின் தங்கை. அதற்குச் சரி என்று தலையசைத்தார்.

கிணற்றுக்குக் கொஞ்ச தூரம் தள்ளி சீட்டு விளையாட்டு மும்முரமா நடந்துகொண்டிருந்தது.போய் உட்கார்ந்தார் வளர்மதி அப்பா.

கொஞ்சநேரத்தில் எல்லோருடைய காசும் வளர்மதி அப்பாவிடம் வந்தது. ஜெயித்த சந்தோஷத்தில் எல்லோருக்கும் சரக்கு வாங்கிக் கொடுத்தார். அவர் ஏற்கனவே போதையிலிருந்ததால், கொஞ்சம் குடித்ததும் போதை கிச்சுனு ஏறியது.

சீட்டு விளையாட்டிலிருந்து வெளியேறி தடுமாறிக்கொண்டே கிணற்றுப் பக்கம் வந்தார் .இவ்வளவு போதையோடு வீட்டுக்குப் போகக் கூடாதென துணிமணிகளை அவிழ்த்து வைத்துவிட்டு கிணற்றுப்படியில் இறங்கினார்.

போதையில் கால்கள் தடுமாறியது. சட்டென்று மல்லாக்க கவிழ்ந்து படியில் விழுந்தார் தலையில் உளி வைத்து அடித்தது மாதிரி கல் அடித்தது. கொஞ்ச நேரத்தில் சுய நினைவை இழந்து தண்ணீருக்குள் மூழ்கினார். நீச்சல் தெரிந்தும் பயனில்லாமல் போனது அவருக்கு அந்த நொடி.

ரொம்ப நேரமாகியும் அப்பா வீட்டுக்கு வராததால் வளர்மதி கிணற்றுப்பக்கம் தேடி வந்தாள். கிணத்துமேட்டில் அப்பா துணிமணிகளை அடையாளம் பார்த்து கிணற்றை எட்டிப் பார்த்தாள்.

பிறகு சீட்டு விளையாடுபவர்களிடம் போய் விசாரித்தாள். “அவர் அப்பவே போயிட்டாரே “என்று சொன்னார்கள். கிணற்று மேட்டில் அப்பா துணிமணிகள் இருப்பதாகச் சொன்னாள் வளர்மதி.

சீட்டு விளையாட்டை விட்டுவிட்டு எல்லோரும் கிணற்றுக்கு வந்தார்கள். சந்தேகப்பட்டு உள்ளே இறங்கிப்பார்த்தார்கள். ரொம்ப தண்ணி இருந்ததாலும், எல்லோரும் அதிகப் போதையிலிருந்ததாலும் அடியாழம் வரைக்கும் மொங்கிப் போய் பார்த்து வர முடியவில்லை.

கொஞ்ச நேரத்தில் சந்தேகப்பட்டு ஊரே கிணற்று மேட்டில் கூடியது. வளர்மதி, அம்மா, தங்கை எல்லோரும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்கள். அப்போது கிணறு இராட்சத சவப்பெட்டியாய் காட்சியளித்தது.


ளர்மதி அப்பா இறந்த மூன்றாவது நாளில் காரியம் வைத்தார்கள். சுடுகாட்டுக்குப் பால் ஊற்றக் கிளம்பும்போது குவாட்டர், கடலைப்பருப்பு, சீனிமிட்டாய்- என அவருக்குப் பிடித்த எல்லாவற்றையும் கருமாதி படையலில் எடுத்து வைத்திருந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்த வளர்மதி அழுதுகொண்டே அம்மாவைப் பார்த்து “எம்மா அப்பாவுக்கு அதிகமா பிடிச்சதுனா நான் பள்ளிக்கூடத்தில வாங்கிட்டு வந்த பரிசுத்தட்டுதானும்மா. அப்ப அதையும் எடுத்து இதோடு சேர்த்து வைக்கச் சொல்லுமா”என்று சொல்லி அழுதாள். அதைப்பார்த்து அம்மா ‘ஐய்யய்யோ’ என்று தலையில் அடித்து அடித்து அழுதாள்.


 

எழுதியவர்

செல்லப்பாண்டி .
விருதுநகர் மாவட்டம் செந்நெல்குடி ஊராட்சியைச் சார்ந்த செல்லப்பாண்டி, எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் துறையில் டிப்ளமோ பயின்றவர்.

2023 ஆம் ஆண்டுக்கான எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கும் இவர் இதுவரை கைகால், ஒரு சொட்டு, பிழையான பிறவிகள் என மூன்று குறும்படங்களை இயக்கியுள்ளதாக தெரிவிக்கிறார்,
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x