19 September 2024

முன் குறிப்பு: தமிழ் நாட்டில் நாயக்கர் ஆட்சிக்காலம் கி.பி.1529-1736. ராணி மங்கம்மாள் பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சி புரிந்த இந்த காலக் கட்டத்தில் அது திருச்சியை (1695-1716) தலைநகராகக் கொண்டிருந்தது.

என்றைக்காவது அப்பா நமக்கு ஏன் இந்தப் பெயரை வைத்தார் என்று நீங்கள் வருத்தப்பட்டதுண்டா? உண்மையில் காந்தி என்று பெயர் உள்ளவர்கள் காந்தி மாதிரி இருக்க யாரும் எதிர்பார்ப்பதில்லை. ராவணன் பெயர் கொண்டவரை வில்லனாக நிஜ வாழ்க்கையில் எவரும் நினைத்ததுமில்லை. கருணாநிதி பெயர் கொண்ட பக்கா அதிமுக காரரையும் எனக்குத் தெரியும். தலைவர்கள் மற்றும் சாமி பெயரெல்லாம் இங்கு ஒரு பிரச்னையில்லை. என் கதையே வேறு. என் பெயர் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு வினோதம்.

“ஹலோ, யார் பேசறது.”.

“நான் குறுநில மன்னன்”

“உங்க பேர சொல்லுங்க சார், நீங்க குறுநில மன்னனா, சக்கரவர்த்தியா அதெல்லாம் எனக்கு அவசியமில்லை.”

“சார், என் பேரு தான் குறுநில மன்னன்..”

“பேரே குறுநில..”

“ஆமா, குறுநில மன்னன்..”

“ஸாரி சார், நான் தான் தப்பா புரிஞ்சிட்டேன்..”

மேலே உள்ள உரையாடல் ஒரு சாம்பிள். என் பெயரை வைத்து தினம் தினம் விதவிதமான உரையாடல், கிண்டல்கள், அனுபவங்கள். பள்ளிக்காலங்களில், சொல்லவே தேவையில்லை. பையன்கள் பின்பக்கம் வந்து ‘மன்னா.. குறுநில மன்னா..’ என்று கூப்பிடுவார்கள். அட்டெண்டன்ஸ் எடுக்கும் ஆசிரியர்கள் முகத்தில் என் பெயரைப் படித்த அடுத்த வினாடி ஒரு நமட்டுச் சிரிப்பு தோன்றும். சிலர் உடனே ஏதாவது கேனத்தனமான ஜோக் ஒன்றை சொல்வார்கள். வகுப்பு மாணவர்களும் அடக்க முடியாதபடி ஆர்ப்பாட்டமாகச் சிரிப்பார்கள். மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்னை குரு என்று தான் அழைப்பார்கள். சிலர் மன்னன் என்றும் பெருவாரியானவர்கள் முழுப் பெயரை குறுநில மன்னன் என்று சிரமப்பட்டு சொல்வார்கள். கல்லூரி நாட்களில் யாராவது பெயரென்ன என்று கேட்டால் வெறுமனே மன்னன் என்று தான் சொல்வேன். அதற்கே புருவத்தை உயர்த்தி அட என்று ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். இந்த லட்சணத்தில் முழுப் பெயரைச் சொன்னால்..

குறுநில மன்னன் என்ற பெயருடைய ஒருவனை எந்தப் பெண்ணாவது காதலிப்பாளா என்ற சந்தேகம் எப்போதுமே எனக்கு இருந்ததால் அந்த முயற்சியில் அறவே ஈடுபடவில்லை. கல்லூரியில் என்னுடன் படித்த ஷாலினி என்ற பெண்ணுடன் லேசாகக் காதல் அரும்பி அவள் என் பெயரை கேட்க, நான் சொல்ல அவள் அதிர்ச்சியா, ஆச்சரியமா என்று தெரியாத ஒரு வினோதமான முகபாவம் காட்டி உதடுகளை சுழித்து”என்னது?..என்றாள். மீண்டும் குறுநில மன்னன் என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல “என்னப்பா இது, நண்பன் படத்துல வர விஜய் பேருக்கே டஃப் குடுக்குறா மாதிரி இருக்கு.” அதற்குப் பிறகு அவள் வேறு காரணங்களால் என்னிடமிருந்து விலகினாளா இல்லை, பெயர் பிடிக்காமல் என்னைக் கழற்றி விட்டாளா என்று நிஜமாகவே எனக்குத் தெரியாது.

ஒரு முறை ஒரு சிறு கம்பெனிக்கு வேலைத் தேடிச் சென்றது நினைவுக்கு வருகிறது. இன்டர்வியூ முடிந்து போய் கிட்டத்தட்ட எனக்கு வேலை கிடைக்காது என்று தீர்மானமாகி விட்டது புரிந்து அறையை விட்டு வெளியே வரும்போது நேர்காணல் செய்த நபர்களில் ஒருவர் ‘குறுநில மன்னனுக்கு இப்போது இங்கே வேலை இல்லை. போர் வரும்போது சொல்லி அனுப்புவோம்’ என்றது காதில் விழுந்தது.

இப்படி ஒரு வினோதமான பெயரை எனக்கு வைத்த என் அப்பா பெயர் பிரேம்குமார். சேலம் பள்ளிப்பாளையம் அருகில் ஒரு உயர் நிலைப்பள்ளியில் தமிழ் மற்றும் சரித்திர ஆசிரியராக இருந்தார்.

இந்தப் பெயர் பிரச்னையால் அவர் சாகும் வரை அவரிடம் நான் சரியாக முகம் கொடுத்துப் பேசியது கூட இல்லை. பலமுறை என்னிடம். “உனக்கு பிடிக்கலைன்னா.. வேணும்னா கெசட்டில் பெயரை மாற்றிக்கொள், எனக்கு ஆட்சேபனை இல்லை” என்று சொன்னார். ஆனால் அதற்கு என் மனம் ஒப்பவில்லை. கல்லூரி காலங்களில் பெயரை சுருக்கி கே.மன்னன் என்று வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது காதல் மன்னனை சுருக்கி வைத்தது போல் இருக்கும் என்றெல்லாம் யோசித்து கடைசியில் பெயர் மாற்றும் எண்ணத்தைக் கைவிட்டேன். எனக்கும் என் அப்பாவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை அல்லது உரையாடல்கள் மிகக் குறைவு. அப்படியே இருந்தாலும் அவை அனைத்தும் பொதுவாக என் பெயர் குறித்த என்னுடைய கோப வெளிப்பாடுகளாகவே இருக்கும். எனக்கு ஏன் இந்த பெயரை வைத்தார் என்று பலமுறை நேர்ந்த அந்த விவாதங்களில் சரியான பதிலை அவர் சொன்னதே இல்லை. நம் பரம்பரை முழுக்க இப்படித்தான் பெயர் என்று மழுப்புவார்.

“சரி, ஏப்படியும் ஏடா கூடமா பேர் வெக்கணும்னு தீர்மானம் பண்ணிட்டே.. அப்புறம் என்ன கஞ்சத்தனம், பேரரசன் இல்லாட்டி மாமன்னன்னு வெக்க வேண்டியது தானே.” அப்பா எதற்கும் பதில் சொல்லாமல் மௌனம் காப்பார். கோபத்தையும் பெரிதாக வெளிப்படுத்த மாட்டார்.

“உனக்கு மட்டும் உங்கப்பா நல்லா ஸ்டைலா பேர் வெச்சிருக்கார்?”

“அவருக்கு அவரோட அப்பா பொழிலன் கோமான்னு பேர் வெச்சது பிடிக்காத கோபத்துல எனக்கு அப்படி வெச்சிட்டார். ஸ்டைலான பேர்னு நீ சொன்னாலும் எனக்கு என் பேர் பிடிக்காது. நம்ம குடும்பத்துக்கு சம்மந்தமில்லாத பேர். உனக்கு உன் கொள்ளு தாத்தா பேர் என்ன தெரியுமா?”

“என்னது, ராஜராஜ சோழனா..”

அப்பா சிரித்தபடி “நம்ம பேமிலி ட்ரீய ரொம்பக் கஷ்டப்பட்டு ஒரு முன்னூறு வருசத்துக்கு போட்டு வெச்சிருக்கேன்” ஒரு குட்டி டைரி ஒன்றை ஜோல்னாப் பையிலிருந்து எடுத்துக் காட்டினார். “பார்க்கிறியா?”

“ஆமா, பெரிய சோழ பரம்பரை.. நாலு காசுக்கு வழியில்ல. விசித்திரமா பேர் வைக்கிற நல்ல குடும்பம். இதுக்கு பேமிலி ட்ரீ ஒண்ணுதான் குறைச்சல். நீயே அதைக் கட்டிட்டு அழு”

அவர் மீதான இந்தக் கோபம் அவர் இறந்த பிறகு இன்னும் அதிகமானதே ஒழிய குறையவில்லை. காரணம் ரிட்டயர்மென்ட் போது தனக்குக் கிடைத்த பிஎஃப், கிராஜுவிட்டி இவற்றையெல்லாம் பாதிக்கு மேல் திருச்சியில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்திற்கும் மதுரை தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மையத்திற்கும் தானமாகக் கொடுத்தார். சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருந்த என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. நோய்வாய்ப்பட்டிருந்த அம்மாவைப் பற்றியும் அவர் பெரிதாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அடுத்த ஆண்டு அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போன பிறகு நானே ஓடி அலைந்து என் சொந்த முயற்சியில் தேர்வு எழுதி இந்த லேண்ட் சர்வேயர் பணிக்கு சேர்ந்தேன். அங்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாள் எல்லோரும் என் பெயர் குறித்து ஆச்சரியப்பட்டாலும் ‘பேருக்கு ஏத்த வேலைக்குத்தான் வந்திருக்கே.. சின்ன சின்ன நிலங்களையெல்லாம் அளக்கிற மன்னன்’ என்று சொல்லி சிரித்தாரகள்.

அம்மா காலமான பின்னர் சங்கீதாவை திருமணம் செய்த புதிதில் ஒரு நாள் அவளிடம் என் பெயர் குறித்து ஏதாவது கூச்சம் இருந்ததா என்று கேட்டபோது, “மொதல்ல கொஞ்சம் பயமாத் தான் இருந்தது, கோபமான பேர்வழியா இருப்பீங்களோன்னு.. அப்புறம், எப்படியும் உங்கள நான் ஏங்க.. ஏங்கன்னு தானே கூப்பிடுறேன். அதுக்கு உங்க பேரு எதுவா இருந்தா என்ன” என்றாள்.

எப்போதும் வித்தியாசமான பெயர் உள்ளவர்களைப் பார்த்தால் அவர்களிடம் சிறிது நேரம் பேசுவது வழக்கம். ஒரு முறை நான் நில அளவையாளனாக பணிபுரியும் சேலம் நகராட்சி அலுவலகத்துக்கு ஒரு பையன் வந்திருந்தான். அவனது பெயர் பொன்னியின் செல்வன். இனிமையான தமிழ் பெயர் தான். இருந்தாலும் அவனிடம் அவன் பெயரினால் ஏற்படக்கூடிய சங்கடங்களைப் பற்றிக் கேட்டபோது அவன் சொன்னது.. எல்லோரும் அவனிடம் கேட்பது பொதுவாக ஒரே கேள்வி தானாம். நீ கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் படித்திருக்கிறாயா என்று. இவர்களுக்காகவே அவன் கல்லூரியில் படிக்கும்போது மூன்று பாகங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்தானாம். “பிறகும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. இப்போது கூடுதலாக படம் பார்த்து விட்டாயா என்று கேட்கிறார்கள், அவ்வளவுதான்” என்றான்.

அதைவிட மிகவும் சுவாரஸ்யமான ஒருவரை என் அலுவலகத்தில் சந்தித்தேன். அவரது பெயர் வழக்கறிஞன். பேசும்போது அவர் சொன்ன அனுபவங்கள் சில. சிறு வயதில் பள்ளியில் அவர் பெயரைக் கேட்டதும் ஆசிரியர்கள் தலை நிமிர்ந்து யாரது என்று பார்ப்பார்களாம்.

பின்னர் “என்னப்பா.. இப்பதான் பள்ளிக்கூடமே வந்திருக்கிற. அதுக்குள்ள வழக்கறிஞன் என்று சொல்கிறாயே. ஸ்கூல் முடிக்கணும். லா காலேஜ்ல சேரணும். எவ்வளவோ இருக்கு” என்பார்கள். இப்படி அவரது பெயரை வைத்து ஒரு அரை மணி நேரம் கிண்டலும் கேலியுமாக கூத்தடிப்பார்கள். இவர்களுக்காகவே மிகவும் முனைந்து ஒரு வழக்கறிஞராக மாறினாராம்.

முதல்முறையாக கீழ் கோர்ட்டில் ஒரு கட்சிக்காரருக்கு அவர் ஆஜரான போது, ஜட்ஜ் “யாருப்பா இவருக்கு வக்காலத்து” என்று கேட்க இவர்,

“நான் தான்..”

“உங்க பேரு”

“நான் வழக்கறிஞன்”

“அது தெரியும், வக்காலத்துக்கு டாக்டராக வருவார். பேர சொல்லுப்பா,”

“அதான் சார், வழக்கறிஞன்,”

“அட, பேரும் அதானா? எப்படிப்பா, இந்த பேரு வெச்சதால வழக்கறிஞனா வந்தியா? வழக்கறிஞன் ஆனபிறகு பேர மாத்திட்டயா..ஒருவேளை நீதிபதி ஆயிட்டா என்ன செய்வ”

என் அப்பாவுக்கு அவரது அப்பா கோபத்தில் செய்ததை நான் என் ஒரே பெண்ணுக்கு பெயர் வைக்கும் போது செய்தேன். லேகாஶ்ரீ என்று மாடர்னாக பெயர் வைத்து என் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டேன்.

ஒரு வெள்ளிக்கிழமை காலை லீவில் இருந்த என் அலுவலக நண்பன் சண்முகம் போன் செய்தான்.

“குரு, திருச்சி ஸ்ரீரங்கம் பக்கத்துல ஒரு என்ஜிஓ வேலை. ஒரு நாள்ல முடிக்கலாம். இன்னைக்கு சாயந்திரம் கிளம்பினா சனிக்கிழமை ராத்திரிக்குள்ள திரும்பிடலாம். அவங்க கவர்ன்மெண்ட் கெஸ்ட் ஹவுஸ்லயே தங்கலாம். சாப்பாடு மத்த செலவெல்லாம் அவங்களே பாத்துப்பாங்க. ஜீப் இருக்கு. உன் கூட ஆர்க்கியாலஜி டிபார்மெண்ட் ஆள் ஒருத்தரும் என்ஜிஓ லருந்து ஒருத்தரும் வருவாங்க. ஏதோ ஏரி ப்ராஜெக்ட்டாம். என்ன சொல்றே?”

சிறிது தயங்கிய என்னிடம் அந்த வேலையை அவன் தான் செய்வதாக இருந்ததாகவும் தவிர்க்க முடியாத வேறு ஒரு அவசரப் பணி நிமித்தம் அவனால் போக முடியாமல் போனதால் என்னை மிகவும் வற்புறுத்தி வேண்டிக்கொண்டான்.
வெள்ளிக்கிழமை ராத்திரி திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் போய் சேர்ந்ததும் என்னை அழைத்துச் செல்ல ஜீப்போடு ஒரு வயதான டிரைவர் வந்திருந்தார்.

சனிக்கிழமை காலை கெஸ்ட் ஹவுஸிலிருந்து ஜீப்பில் சைட்டுக்கு சென்றபோது அங்கு ஒய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி மகாலிங்கம் மற்றும் என்ஜிஓ ஆபீசர் ஒரு பழைய தமிழாசிரியராக பணிபுரிந்த கோபாலகிருஷ்ணன், இவர்கள் இருவரும் இருந்தனர். பெயர் என்ன என்று கேட்டு முதல்முறையாக ஆச்சரியபடும் விதமாக ‘நல்ல தமிழ்ப் பெயர்’ என்றார்கள். ஜீப்பிலேயே பயணம் செய்தபடி அளந்து முடித்து மார்க்கிங் எல்லாம் முடிந்த போது மணி மாலை நாலரையை கடந்திருந்தது. மொத்த ஏரி அமைந்த பகுதி 95 ஏக்கர் மற்றும் 3 செண்டுகள் என்று சொன்ன போது இருவரும் கை தட்டிப் பாராட்டினார்கள். இதுவரை யாரும் இவ்வளவு துல்லியமாக கல்வெட்டு சொல்லும் பரப்பளவுக்கு கிட்ட வரவில்லை என்று ஆச்சரியப்பட்டார்கள்.

ப்ராஜக்ட் மற்றும் ஸ்தல வரலாறு பற்றிக் கேட்டபோது தொல்லியல் அதிகாரி மகாலிங்கம் விளக்கினார். ஏறக்குறைய 300 வருடங்களுக்கு முன் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் அவரது படைத் தளபதிக்கு கிரயமாக இந்த நிலப்பரப்பை எழுதிக்கொடுக்க, பெற்றுக் கொண்ட தளபதி அதை தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் பயன்படுத்தாமல் ஊர் மக்களுக்காக அந்த இடத்தில் ஒரு ஏரியை அமைத்துக் கொடுத்து உதவியிருக்கிறார். காவிரியில் பெருகி வழிந்து ஓடும் உபரி நீரும் மழை நீரும் சேர்ந்து இந்த வடலேரி ஒரு காலத்தில் சுற்றுப்புற பாசனத்திற்கும் மற்றும் மக்கள் தேவைக்கும் மிகுந்த உபயோகமாக இருந்திருக்கிறது.

ஆனால் இந்த நிலப்பரப்பு. காலப்போக்கில் நில ஆக்கிரமிப்பு, நீர்வரத்துத் தடை இவற்றால் புதர்மண்டிப் போய் இப்போது பாழும் நிலமாகக் காட்சியளிக்கிறது. இதை அரசாங்க அனுமதியுடன் சரி செய்து மீண்டும் புனரமைத்து ஏரியாக மாற்ற வேண்டுமென்று இந்த வடலேரி மீட்பு இயக்கம் போராடி வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு தேவையான நிதி ஆதாரத்துக்கான நன்கொடைகளையும் பெற்றுவருகிறார்கள் என்று கூறி சொக்கலிங்க நாயக்கர் இந்த நிலப்பரப்பை கிரயம் செய்ததற்கான ஆதாரமான கல்வெட்டு ஒன்றின் புகைப்படத்தையும் காட்டினார். அதில் ‘இந்தச் சுற்றுப்பரப்பில் காணும் 72 காணி 9 குழி விஸ்தீரணம் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் கிரயம் செய்து தென்னன் பெருந்திரையன் மற்றும் அவர் வம்சாவளி வசமானது’ என்று குறிப்பிட்டிருந்தது.

“தென்னன் பெருந்திரையனா? என்று நான் முணுமுணுக்க, தமிழ் ஐயா “ஆமாம். அவர்தான் சொக்கநாத நாயக்கரின் திருச்சி சேனையின் படைத்தளபதி. இந்தப் பகுதியில ராஜா மாதிரி இருந்தவர். கடைசி ஆதாரமான கல்வெட்டு குறிப்புப்படி இன்னும் இந்த நிலம் அவருக்குப் பின் அவரது வம்சாவளி பெயரில் தான் இருக்கிறது. இதுவரை யாரும் ஏன் உரிமை கொண்டாடி வரவில்லை என்று தெரியவில்லை. அவர் வம்சாவளிக்கும் அவருடைய தயாள குணமும் கொடைப் பண்பும் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது போல” என்றார்.

கிளம்பும்போது மகாலிங்கம் “தம்பி, உங்களுக்கான அளவை ஊதியம் நாலாயிரத்து முன்னூறு ரூபாய வவுச்சர்ல கையெழுத்து போட்டு ஆபீஸில் வாங்கிக்கிடலாம்” என்று சொன்னார்.

“ஐயா! தயவு செய்து அந்தப் பணத்தை ஏரி புனரமைப்பிற்காக போராடுற அந்த இயக்க நன்கொடைக்கு என் பங்காக சேர்த்துடுங்க. நான் வவுச்சர்ல கையெழுத்து போடுறேன்” என்றேன். “அவ்வளவுமா?” என்று குழப்பமான முகபாவத்துடன் ஆச்சரியப்பட்டார். “ஏரி புனரமைக்க ஏதோ என்னால செய்ய முடிஞ்ச ஒரு சின்ன உதவி” என்றேன்.

திருச்சியில் இருந்து பேருந்தில் சேலம் திரும்பி வந்த இரவு, முதல் வேலையாக வீட்டுப் பரணில் இருந்த அப்பாவின் பழைய டிரங்க் பெட்டியை கைகள் நடுங்க வெளியே எடுத்தேன். அதனுள்ளே நைந்து போன ஒரு பழைய பரிமேலழகரின் திருக்குறள் உரை, பாரதிதாசன் கவிதைகள், தொல்காப்பியர் இலக்கணம், நாயக்கர் ஆட்சி- ஒரு ஆராய்ச்சி என்ற ஒரு சிறு நூல்.. எல்லாவற்றுக்கும் கீழே அப்பாவின் பழைய பச்சை நிற பிளாஸ்டிக் உறையணிந்த குட்டி டைரி. அவசர அவசரமாக அந்த டைரியை எடுத்து பக்கங்களைப் புரட்ட, அப்பாவின் முத்து முத்தான அழகான கையெழுத்தில் எங்களது ஃபேமிலி ட்ரீ..

பிரேம்குமாரில் தொடங்கி, பொழிலன் கோமான்.. செங்கதிர் விளையோன்.. பரமன் இளங்குழலோன்..கபிலன் தேவராயன், பெருங்குமணன் (என்கிற) வல்லரையன், பரியேர் கரிமுகன், இளங்கீரன் காளமேகம்.. இப்படி பதினைந்துக்கும் மேற்பட்ட பெயர்கள்.. எல்லாவற்றுக்கும் மேலாக இருந்த பெயரைப் படபடப்போடு பார்த்தேன்.
தென்னன் பெருந்திரையன் (என்கிற) குறுநில மன்னன்.. கல்வெட்டில் பார்த்த அதே பெயர். அட, இவரது பெயரைத்தான் அப்பா எனக்கு வைத்திருக்கிறார்.

“பொண்ணுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்னு தெரிஞ்சே, வந்த காச தானம் செஞ்சிட்டு வந்து இருக்கீங்களே. உங்களுக்கு என்ன பெரிய துரைன்னு நினைப்பா?”

கொஞ்சம் காட்டமாக சொல்லிவிட்டோம் என்று உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள் மனைவி சங்கீதா. அவள் மீது கொஞ்சமும் கோபப்படாமல் “துரையா? நான் வெறும் துரை எல்லாம் கிடையாது. நான் குறுநில மன்னன்” என்று வாழ்க்கையில் முதல் முறையாக என் பெயரை அழுத்தமாக பெருமையாக உரக்கக் கூறினேன்.

“அது மட்டும் இல்ல.. எனக்கு பிறக்கப் போற பையனோட பேரு வடலேர் வேந்தன்”

“இது என்ன புதுக் கதை!” என்று கழுத்தை ஒடித்து செல்லமாக சிணுங்கினாள் நிறைமாத கர்ப்பிணியான சங்கீதா.


 

எழுதியவர்

சசி
சென்னையில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான சசிதரன் இணையதளங்களில் நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதைகளை ‘சசி’ என்ற பெயரில் எழுதி வருகிறார். ஆனந்த விகடனில் இதுவரை இவரின் ஏழு சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
நூருத்தீன்
நூருத்தீன்
1 month ago

அருமை. நெடுக மெல்லிய நகைச்சுவை. சிறப்பான நடை.

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x