மதிய நேரத்தின் மஞ்சள் வெயில் மாநகரத்தை நிறம் மாற்றிக் கொண்டிருந்தது. வெக்கையைக் கடிந்தும்; காறி உமிழ்ந்தும்; மற்றவர்கள் உமிழ்ந்ததை மிதித்தும் மந்தை மந்தையாய் பெருங்கூட்டம் நகர வாழ்க்கையின் பரபரப்பைப் பல்லிளித்தது. கொடூரமான வெக்கையிலும் டீக்கடையில் கூட்டத்திற்கு ஒன்றும் குறைவில்லை. டீ மட்டும் ஆகா(தா)ரமாய் கொண்டு உயிர் வாழ்ந்திடும் மனித ஜீவராசிகள் ஏராளம். உருவத்திலும், அளவிலும் மட்டும் வேறுவேறாக இருந்த போண்டாவும், பஜ்ஜியும் டீயுடன் கூட்டணி வைத்துச் சுட்டெரிக்கும் வெயிலில் சக்கை போடு போட்டன. சுடச்சுட எண்ணெய்ச் சட்டியிலிருந்து எடுத்த ஆவி பறக்கும் போண்டாவையும் பஜ்ஜியையும் காலியாவதற்குள் போட்டிப் போட்டுக் கொண்டு அவசர அவசரமாகத் தூக்கிக் கொண்டிருந்த கரங்களின் இடைவெளியில் அவன் தெரிந்தான்.
எலும்புகளை இறுக்கமாய் கோர்த்துத் திணித்துக் கட்டியிருக்கும் தோல். அவ்விறுக்கத்தில் துருத்தி நிற்கும் எலும்புகள். ஓர் எலும்புக்கும் மற்றொன்றுக்குமான இடைவெளி, சென்னையின் மழைக் காலத்துத் தார்ச் சாலையை போல் ஆங்காங்கே பள்ளமாகவும், சிறுசிறு குழிகளோடும் தோன்றின. ஏட்டியும் தாட்டியுமாக வாசலில் கட்டிய மாலையைப் போல பட்டன் அணியாத மேற்சட்டை தொங்கியது. இடுப்புக்கு மேலே தொடங்கிப் பாதிக் கால்கூட மறைக்காமல் அந்தரத்தில் நின்றது சராய். செருப்பின்றி வெகு நாட்கள் நடந்திருந்ததால் மரத்துப் போய் அதன் அடையாளமாக கருங்கோதுமை நிறக் கோடுகள் அடிப்பாதத்தை மீறி கணுக்காலை நோக்கி நீண்டிருந்தன. பற்கள் தன் சுய நிறத்தை இழந்து அல்லது மறந்து பல மாதங்கள் ஆகியிருக்கலாம். எண்ணெய் காணாத பரட்டைத் தலையில் ஆங்காங்கு வெடிப்புகள். அக்குளில் சின்ன மஞ்சப் பை. முகத்தில் சாந்த சொரூபம்.
நேராக மாஸ்டரிடம் போய், “அண்ணே. ஒரு ‘டீ’ கெடைக்குமா.?” எனப் பத்து ரூபாய்த் தாளை நீட்டினான்.
“காசு தந்தால் கொடுக்கப் போகிறார்கள். இதற்கு ஏன் ‘கிடைக்குமா’ எனக் கேட்கிறான். கொடுங்கள் என உரிமையாகக் கேட்கலாமே” குழப்பமாகப் பார்த்தேன்.
‘காச அங்க கொடு’ என்று கல்லாப் பெட்டியில் அமர்ந்திருப்பவரைச் சுட்டிக் காட்டினார் மாஸ்டர்.
அவன் கல்லாப் பெட்டியை நோக்கிச் சென்றதும், “ரெண்டு வாரமா ஏதாவது வேல இருக்குமான்னு வந்து கேட்டுட்டு கேட்டுட்டு போறான். பாக்கவே பாவமா இருக்கேன்னு ஓனர்கிட்ட கேட்டேன் . ‘யாரு எவன்னே தெரியல. ஆளு பாக்கவும் ஒரு தினுசா இருக்கான். பணத்த எடுத்துட்டு ஓடிட்டானா எவன் பதில் சொல்றது. ஏற்கனவே கோபால் தெருவுல ரெண்டு மூணு கடைல வெரட்டி விட்ருக்கானுங்க. நமக்கெதுக்கு சும்மா இருக்காம சூத்த புண்ணாக்கிற வேல” என ஓனர் சொல்லிவிட்டதாக அக்கடையின் வாழ்நாள் உறுப்பினர்களில் ஒருவனான என்னிடம் கமுக்கமாகச் சொன்னார் ‘டீ’ மாஸ்டர்.
திரும்பி அவனைக் கவனித்தேன்.
காலம்காலமாக சொந்த ஊரையும், நிலத்தையும் துறந்துவிட்டு ‘பிழைப்பிற்காக’ சென்னையைத் துரத்தி வரும் சபிக்கப்பட்ட இனத்தின் சமீபத்திய வருகை. முகத்தைப் பார்த்தால் ஏமாற்றுபவனாகவோ, பொய் சொல்கிறவனாகவோ தெரியவில்லை.
காசைக் கொடுத்துவிட்டு எதிரே இருந்த நாற்காலியில் வந்தமர்ந்தான். கண்களைச் சந்திக்க முயன்றேன். மொத்த உணர்வுகளையும் தலை நிமிர்த்தாமல் தரையிலேயே கொட்டிக் கொண்டிருந்தான். டீயைப் பெறும் போது எதேச்சையாகத் தலை நிமிர்ந்தது.
இதுதான் சமயமென்று புன்னகைத்தேன்.
அடுத்த கணமே, “அண்ணே.. வேல ஏதாவது சொல்லுங்கண்ணே..எந்த வேலையா இருந்தாலும் பரவாலேண்ணே” என்றான் கெஞ்சலாக.
உண்மையில் அவன்தான் சமயம் எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறான்.
“உன் பேரு என்ன.? எந்த ஊரு.?”
“பேரு பால்துரைண்ணே. ஊரு சேலம் பக்கத்துல வாழப்பாடிண்ணே… ஏதாவது வேல இருந்தா சொல்லுங்கண்ணே.” சன்னமான குரல் ஆனால் தெளிவாக இருந்தது.
சென்னைக்கு எப்ப வந்த.?
அது ஆச்சுண்ணே பாஞ்சி இருவது நாளைக்கு மேல. ஊருல ஸ்நேகிதக்காரனுங்க சொன்னானுங்க, “டேய். பால்துரை..! இங்க இருந்தா ஒன்னும் உருப்புடாது . கண்டிக்க ஆளில்லாம குடிச்சி கூத்தடிச்சி சாவாமலேயே செத்தொழிஞ்சி போன உங்கப்பன் மாதிரியே நீயும் போய்டுவ. பேசாம நீ சென்னைக்கு போ. அங்க போனின்னா டீ கடை, டிபன் கடைலைன்னு ஏதாவது ஒரு வேல எப்பிடியும் அமஞ்சிடும். கெட்டியா புடிச்சுகிட்டினா மேல வந்தரலாம். வாழ்க்கைல ஒரு பிடிமானம் கெடச்சிடும்”.
முந்நூறு ரூவா பணத்த எடுத்துட்டு கெளம்பிடேன். டிக்கெட்டுக்கே நூத்தி அம்பது போயிடுச்சு. எக்மோர்ன்னு ஒரு ஊருல வந்து எறங்குனேன். எங்க போறதுன்னு தெரியாம வழி போற போக்குல போனேன். அன்னைக்கு நைட்டு அங்கயே பிளாட்பாரம்ல படுத்துட்டேன். போலீஸ்காரங்க நடுராத்திரி தட்டியெழுப்பி போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போயிட்டாங்க. பேரு, ஊரு விவரலாம் எழுதிக்கிட்டு கைரேக வைன்னாங்க. கையெழுத்து போடுவேன்னு சொன்னேன். அதெல்லாம் ஒரு மயிரும் வேணாம். ரேக உருட்டிட்டு கெளம்பு. அங்கெல்லாம் தூங்கக் கூடாதுனு மெரட்டி அனுப்பிட்டாங்க. ஊரெல்லாம் வேலக் கேட்டு சுத்தி கித்தி இங்க வந்து சேந்தேன். கையிலிருந்த காசும் காலியாயிருச்சு.. பகல்ல எங்க சுத்துனாலும், தூங்கறதுக்கு இந்தா இருக்குற பிளாட்பாரத்துக்கு வந்துருவேன். ஏன்னா இந்த ஏரியா போலீஸ்காரங்க நல்லவங்க. நைட் பிளாட்பாரம்ல தூங்குனா எதுவும் சொல்றதில்ல. … அண்ணே…! வேல ஏதாவது இருந்தா சொல்லுங்கண்ணே…”
சென்னை வந்து சேர்ந்த கதையை அவன் சொல்ல, பழங்கள் பறிப்பதற்காகக் காட்டுக்கு வந்த கறுப்பின ஆப்பிரிக்கன் ஒருவனை, முரட்டுத்தனமாகத் தாக்கி சங்கிலியால் கட்டி நாயைப் போல் இழுத்துச் செல்லும் வெள்ளை அமெரிக்கனைப் போல, கருணையற்ற காலச்சக்கரம் பத்து வருடம் பின்னோக்கி சுழன்று அடிமையான பிணைக்கைதியாய் என்னை இழுத்துச் சென்றது. கடந்த காலம் கண்முன்னே காட்சிகளாய் விரிய நிஜத்தில் அமர்ந்து கொண்டு நினைவுகளில் உயிர் சுமக்கத் தொடங்கினேன்.
எதைக் குறித்தும், யாரைப் பற்றியும் கவலைப்படாத நாட்கள் அவை. காலையில் சீக்கிரம் எழுவதென்பது எப்போதுமே நடக்காத ஒன்று. தூக்கம் தெளிந்து தானாக எழும் வேளையே காலை. “அந்த”க் காலை வேளையில் சட்டைப் பையில் நோட்டாக இருந்தால் ஒரு பொட்டலம் பட்ட சோறு. சில்லறையாக இருந்தால் ஒரு டீ இரண்டு சால்ட் பிஸ்கட். அதுதான் அன்றைய நாளுக்கான ஆகாரம். அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு நண்பர்கள் யாராவது அலுவலகத்திலிருந்து வரும்வரை காத்திருக்க வேண்டும். பணம் தர முகம் சுளிக்காத நண்பனாயிருந்தால் உரிமையுடன் கூடுதலாக ஒரு ஆம்லேட் இல்லையென்றால் நாலு இட்லி மட்டும்.
வேலைத் தேடி வேலைத் தேடி அலுத்திருந்தது. இல்லாத உடம்பு இன்னும் இத்துப் போகத் தொடங்கியது. நிமிடத்துக்கொரு முறை தாடியைத் தடவிக் கொள்வதும், பையன்கள் இல்லாத நேரத்தில் சுயபுணர்ச்சி காண்பதிலுமே பெரும்பாலான பகல் பொழுதுகள் கரைந்தன. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே’, “ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது” போன்ற பாடல் வரிகள் சோகத்தின் வடிகாலாகவும், சோர்ந்து கிடந்த நெஞ்சிற்குப் புதுத் தெம்பைத் தருவதாகவும் இருந்தன.
சென்னையில் வசிப்பதில் மிக முக்கியமான வசதி ‘கடல்’. கடல் பேரன்பு. கடலலை தத்துவ ஆறுதல். ஒவ்வொரு நாளும் அந்திசந்தி வேளையில் கடலின் மடியில் தலைவைத்துக் கிடப்பேன். சுற்றிலும் ஆயிரம் பேருக்கு மேல் இருந்தாலும் நானும் கடலும் தனியாக இருப்போம். நான் பேசமாட்டேன். கடலும் பேசாது. எங்களுக்குள் உரையாடல் நிகழ்ந்தவாறிருக்கும். யாருக்கும் தெரிந்திடாத பல ரகசியங்களை அது அறிந்து வைத்திருந்தது. குறிப்பாக அடுத்தவேளை சாப்பாட்டிற்கு என்னிடம் காசில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தது. நிகழ்காலத்தையும் இறந்த காலத்தையும் இழுத்துச் சென்று எனக்கான எதிர்காலத்தை அழைத்து வர அலைகள் பெரும் பிரயத்தனப்படுவது போன்ற கற்பனைப் பரம சுகமாக இருக்கும். அந்த நுரைச் சுகத்தில் என்னைக் கொஞ்சம் தொலைத்துவிட்டு, கடல் தடவிக் கொடுத்த ஆறுதலுடன் அடுத்த நாளைச் சந்திப்பதற்கான ஊக்கத்துடனும், புத்துணர்ச்சியுடனும் திரும்புவேன். வேலை கிடைக்கும். கண்டிப்பாக ஒருநாள் வேலை கிடைத்துவிடும்.
தான் பணிபுரியும் அலுவலகத்திலேயே என்னைப் பரிந்துரைத்திருந்த நண்பனின் அப்பா இறந்த ஒரு துர்நாளன்று அதே அலுவலகத்தில் வேலைக் கிடைத்தது. மாதம் ஒன்பதாயிரத்து நானூறு சம்பளம். சுழற்சி முறையில் பணிநேரம். அதிகாலை அல்லது இரவுமுறைப் பணியானால் ஒரு நாளைக்குக் கூடுதலாக அறுபது ரூபாய். ஆறு மாதத்திற்குப் பின் பணி செய்யும் திறனைப் பொறுத்துப் பணி நிரந்தரம். ஞாயிறு விடுமுறை. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை.
“மகன் லட்சக் கணக்கில் சம்பாதிக்க வேண்டும்” என்று சேலத்தில் பஜார் வீதிகளில், எந்நேரமும் வியர்வை வழிந்தே காணப்படும் வெற்று மேலுடம்புடன் முதுகில் சாக்கு மூட்டைகளைச் சுமந்தலையும் அப்பாவின் ஆசைக்கு நான் ஒன்பதாயிரத்துச் சொச்சச் சம்பள வேலையில் சேர்ந்திருப்பது துளியும் மகிழ்ச்சியைத் தந்திடாது என நன்றாகத் தெரியும். ஆனால் ஊர் விட்டு ஊர் வந்து சொந்தக் காலில் நின்று இரண்டு வேளைச் சாப்பிடவே அல்லாடிக் கொண்டிருந்தவனுக்கு வறுமையைப் போக்க வந்த வசந்தமாக – பெய்யப் போகும் ஆனந்த மழையின் முதல் துளியாக அந்த வேலை நம்பிக்கை தந்தது. அயர்ன் செய்த சட்டையை பாண்ட்டுக்குள் விட்டு, பெல்ட்டால் இழுத்துக் கட்டி – கால்களை பூட்ஸுக்குள் சொருகி – கழுத்தில் அடையாள அட்டைத் தொங்க – முதல் நாள் அலுவலகத்திற்குக் கர்வ கம்பீரமாய் நடந்து சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது.
“அண்ணே.. வேல ஏதாவது சொல்லுங்கண்ணே..எந்த வேலையா இருந்தாலும் பரவாலேண்ணே” என்ற குரல் சுயபச்சாதாபத்திலிருந்து மீட்டெடுக்க, நனைந்த சிறகுகளைச் சிலுப்பிக் கொள்ளும் பறவையைப் போல நினைவுகளைச் சிலுப்பிக் கொண்டு நிகழுக்கு வந்தேன்.
இப்படித்தான் ஒவ்வொரு கதைக்குள்ளும் நம் கதையும், நமக்கான கதையும் சஞ்சரிக்கிறது போல.
“சரிடா சொல்றேன். ஆனா நீ குடிப்பியா.?”
யாசகம் வேண்டிக் கையேந்தி நிற்பவனை அப்படியே நிற்க வைத்துவிட்டு, மேதாவித்தனத்தை பிரதிபலிக்கும் அடுக்கடுக்கான கேள்விகளின் மூலம், இச்சமூகத்தின் முன்னால் தன்னை ஓர் ஆகச் சிறந்த பரிவுணர்வுக்காரனாக பிம்பப்படுத்திக் கொள்ள முயலும் சுயத்தின் மீது கடும் வெறுப்பு உண்டானது.
ஆனால் மறுகணமே என் மேதாவித்தனத்தின் மீது சமத்தியான சம்மட்டி அடியாய் விழுந்தது அவனது பதில்.
“ஏண்ணே நீ வேற..! எங்கப்பன் குடிகாரனா இருந்ததால தான் ஊர் பேர் தெரியாத இடத்துல பிச்சைக்காரனாட்டம் சுத்திட்டு இருக்கேன். இந்த நெலமைல நான் எப்படிண்ணே குடிப்பேன்.”
எப்பாடு பட்டாவது இவனுக்கு ஒரு வேலை வாங்கித் தந்திட வேண்டுமென்று மனதிற்குள் உறுதியாகச் சொல்லிக் கொண்டேன்.
“என்ன படிச்சிருக்க?”
“பிளஸ் 2 பாதிலேயே நிறுத்திட்டேன்.”
“நிறுத்திட்டியா.. ஏன்?”
சட்டெனப் பதில் சொல்ல முடியாமல் தவித்தான். ஓரிரு நிமிடங்களுக்குப் பின்னர் தன் கதையைத் தனக்கே சொல்லிக் கொள்ளும் தொனியில் ஆரம்பித்தான்.
“எங்கப்பன சுத்தமா புடிக்காது. போதைக்கு பொறந்த தாயோளி. மொடா குடிகாரன். குடிச்சி குடிச்சி இதயமே சீழ் புடிச்சி போனவன். ஒடம்பு புஃல்லா சாராயம். மொத்த ஒடம்பும் சாராயம் ஓட்ற சாக்கடை. அவன்கூட இத்தன வருஷம் பொறுமையா குடும்பம் நடத்தி இருக்குதுனா எப்பேர்ப்பட்ட மவராசியா இருப்பா எங்கம்மா! பாவம்.. அவளுக்கு குடுத்து வைக்கல. இப்படிப்பட்ட ஒருத்தன்கிட்ட சிக்கி, ஒவ்வொரு நாளும் சின்னாபின்னமாகி ஒரு ராத்திரிகூட நிம்மதியா தூங்காமலே செத்துபோய்ட்டா. கடைசில சாவுல தான் அவளுக்கு நிம்மதி.
நான் ஒரே பையன். கல்யாணமாகி பதினோரு வருஷம் கழிச்சுதான் பொறந்தேன்.” ..
‘கல்யாணம் ஆயி பத்து வருஷம் ஆச்சு. போன ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சேனோ. வயித்துல ஒரு கொழந்த தங்கமாட்டேங்குது. ஏறாத கோயில் இல்ல; செய்யாத பூஜ இல்ல; வேண்டிக்காத நேத்திக் கடன் இல்ல. வரலட்சுமி கோயில் மரத்துல தொட்டில் கட்டுனேன் – மாரியம்மனுக்கு தெனமும் வெளக்கு வச்சேன் – அங்க பிரதேசனம் செஞ்சேன் – மண்சோறு சாப்டேன். அம்மனுக்குப் பட்டுப் பொடவ சாத்துனேன் – சுமங்கலி பொண்ணுங்களுக்கு மஞ்சளும் குங்குமமும் தந்தேன். இவ்வளோ செஞ்சியும் அந்தச் சாமி கண்ண தெறக்கவே இல்ல.
சரி… இதுக்கு மேலயும் சாமி – கோயில் – பரிகாரம் – கடவுள்னு நம்பிகிட்டு கெடந்தா, போகாத ஊருக்கு வழித் தேடுன கதையா ஆயிடும்னு போன மாசம் ஆஸ்பத்திரிக்குப் போனேன். அதுவும் அந்த மனுசனுக்குத் தெரியாமதான். தெரிஞ்சா என்ன மயித்துக்குப் போனனு அதுக்குவேற காட்டுக் கத்துக் கத்துவான். டேட்லாம் கரெக்டா ஆய்டுதான்னு கேட்டுட்டு ரெண்டு மூணு டெஸ்ட் எடுக்க சொன்னாங்க, ‘அடுத்த டேட்டு டைம் ஆகுறதுக்கு பதினாலு நாளுக்கு முன்னாடிலருந்து தொடச்சியா நாலஞ்சு நாளைக்கு செக்ஸ் வச்சிக்கோங்க. ஏன்னா அதுதான் கருமுட்டை உருவாகுற சமயம். அந்த நேரத்துல செக்ஸ் வச்சுக்கிட்டா பெரும்பாலும் உறுதி ஆய்டும். அடுத்த டேட் ஆகுதா இல்ல தள்ளிப் போகுதான்னு பாத்துட்டு ஒரு புஃல் செக் அப் பண்ணி பாத்துரலாம். அடுத்த மொற வரும் போது உங்க புருஷனையும் கூட்டிட்டு வாங்க. ஒருவேள அவருக்கு எதாவது பிரச்சனை இருக்கான்னு பாக்கணும்ல’ அந்த டாக்டரம்மா சொல்லுச்சு.
அந்தம்மா சொன்ன எல்லாத்தையும் மனசுக்குள்ளயே வெச்சிக்கிட்டேன்.
பதினாலாவது நாளு. இன்னைக்கி மட்டுமாவது குடிக்காம வாயான்னு சொல்லித்தான் அனுப்பிருந்தேன். ஆனா சரியான போதைல வீட்டுக்கு வந்தான். செம நாத்தம் வேற. பக்கத்துலயே போக முடில. கொழந்தைக்காகனு சமாளிச்சுகிட்டு பக்கத்துல போயி படுத்தா, போதைல கல்லு மாதிரி படுத்துருச்சு அந்த ஜென்மம். எனக்கு அழுகத் தாங்க முடில. எப்பத் தூங்குனனே தெரியாம, அழுதுகிட்டே தூங்கிட்டேன்.
அடுத்தநாள் கொஞ்சம் நல்ல விதமா இருந்தான். இன்னைக்காவுது செஞ்சிரலாம்னு மனசுல நெனச்சுட்டு இருந்தேன். அந்தாளுக்கும் ‘அந்த’ நெனப்பு வரணுமேன்னு நானும் கொஞ்சம் சீவி சிங்காரிச்சி மல்லிப் பூவ தலைக்கு வச்சிக்கிட்டு வருவான் வருவான்னு பாத்துட்டு கெடந்தேன். அவன் என்னடான்னா அந்த நாசமாபோன கிரிக்கெட்ட பாத்துக்கிட்டு கெடக்கான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். மணி பன்னெண்டு பக்கம் ஆயிடுச்சு. நாள் முழுக்க இருந்த வேல அலுப்புல தூக்கம் வேற கண்ணச் சொழட்ட ஆரம்பிச்சிருச்சி. இதுக்கு மேல ஆகாதுன்னு, “ஏங்க. செய்லாமான்னு நானே வெக்கத்த விட்டு கேட்டேன்” அந்தாளு பதிலே சொல்லல. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு, அவன் கண்லபடுற மாதிரி நின்னு சேலைய அவுத்துட்டு, அவன் முன்னாடி போய், பாவாடைய கீழலருந்து மேல தூக்கிப் புடிச்சுக்கிட்டு அவன் கைய எடுத்து ‘அங்க’ வச்சு, “ஏங்க. செய்லாமா” ன்னு அவனோட ‘அங்க’ கை வைக்கப் போனேன்.
‘அப்டியென்னடி ஒனக்கு அடக்க முடியாத புண்ட அரிப்பு’ கைய தட்டி தள்ளி விட்டுட்டான்.
“மூச்சு முட்டமுட்ட தண்ணீல போட்டு அமுக்குற மாதிரி நெஞ்சே அடச்சிக்கிச்சு”
‘நீயே சொல்லுக்கா, ‘வயித்துல ஒரு கொழந்த தங்கணும்னு தான’. ஆம்பள இல்லாம ஒரு பொம்பளயால கொழந்த பெத்துக்க முடியும்னு – கடவுள் ஒருத்தன் இருந்து – அவன் படைச்சிருந்தானா நான் என்ன மயித்துக்கு இவன் கால புடிச்சிக் கெஞ்சிக்கிட்டு – எட்டி ஒதச்சாலும் அவன் காலயே நக்கிட்டுக் கெடக்கப் போறேன்’
‘பொம்பளையோட அரிப்ப தீக்குற ஆம்பள, இந்த பூமில இன்னும் பொறக்கவே இல்லடி’
ரெண்டு மூணு மாசம் போச்சு… அத்திப் பூத்த மாதிரி, நிதானமான போதையில இருந்த ஒருநாள் ‘அது’ நடந்துச்சு. அடுத்த மாசம் நாள் தள்ளிப் போச்சு. சந்தோஷம் தாங்க முடில.
வீட்டுக்கு வந்தவன்கிட்ட விஷயத்த சொன்னா, ‘எவன்கூட படுத்தன்னு கேக்றான்’. என் சந்தோசமெல்லாம் அந்தாளு சந்தேகத்துலயே அடிச்சுட்டு போய்டுச்சு.
பத்து மாசத்துல ஒருநாள்கூட புள்ளத்தாச்சிக்கு தேவையான எதுவுமே பண்ணல. பொறக்க போற கொழந்த அவன் சாயல்ல இருக்கனும்னு ஒவ்வொருநாளும் சாமிகிட்ட வேண்டிப்பேன். ஏழைங்களோட வேண்டுதல் சாமிக்கு எப்ப கேட்டிருக்கு. என் சாயல்ல பொறந்துட்டான். இன்னிக்கிவரைக்கும் அந்த பையனத் தொட்டு தூக்குனது இல்ல. கொஞ்சி விளையாடுனது இல்ல. ஆசையா ஒரு மிட்டாயோ, புது துணியோ வாங்கித் தந்தது இல்ல. எல்லாம் நான் வரம் வாங்கிட்டு வந்த நேரம்.’
பக்கத்து வீட்டு வாசுகி அக்காகிட்ட பழசையெல்லாம் சொல்லி அம்மா புலம்பி அழுதுட்டு இருக்கும் போது, அவளுக்குத் தெரியாம மறைஞ்சிருந்து கேட்டேன்” நெஞ்சே வெடிக்கிற மாதிரி இருந்துச்சு. அந்தாளு மேல இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் அதோட போச்சு. அம்மாவ இனிமே தப்ப பேசுனா, அந்தாள சும்மாவிட கூடாதுன்னு தோணுச்சு.
அன்னிக்கு சாயந்தரம் ஸ்கூல் விட்டுப் போகும் போது, லைன்ல கடைசியா இருக்குற வீட்ல நடக்குற சண்ட தெரு வரைக்கும் கேட்டுச்சு.
‘தேவடியா முண்ட. புண்டைய கிழிச்சுருவேன்’
‘ஒழுங்கு மயிரா காச குடுடி’
குடிக்கப் பணம் கேட்டு அம்மாவ தொந்தரவு செஞ்சிட்டு இருந்தான் அந்தாளு. ஏற்கனேவே அடிச்சுருப்பான் போல. அம்மாவோட கன்னம் செவந்து போய் வீங்கி இருந்துச்சு.
பள்ளிக்கூட பையை கெடாசி எறிஞ்சிட்டு, ‘சும்மா இருங்கப்பான்னு கத்திட்டே தள்ளிவிட்டேன்’.
‘யாருடா ஒனக்கு அப்பா.? எவம்கூட படுத்து பெத்தாளோ.. அவகிட்ட கேளுடா யாரு உங்கொப்பனு.’
கன்னத்துலயே அறைஞ்சுட்டேன். சுருண்டுபோயி ஓரமா விழுந்துட்டான். ஆக்ரோஷமா திரும்ப வந்தவன் என்னையும், அம்மாவையும் மூச்சுவாங்க அடிஅடின்னு அடிச்சி பொளந்துட்டு கிழிஞ்ச சட்டையோட வெளிய போயிட்டான். லைட் கூட போடாம நானும் அம்மாவும் ரொம்ப நேரம் அழுதுகிட்டே இருந்தோம். அப்படியே நான் தூங்கிட்டேன். எலி மருந்து குடிச்சுட்டு கூடவே அவளும் படுத்து தூங்கிருக்கா. காலைல கண்ணு முழிக்கவே இல்ல.
‘அம்மா போனதுகப்பறம் எல்லாமே போயிடுச்சு’ ..”
கம்மிய குரலில் முடித்தான்.
நெஞ்சம் படபடத்தது. அவனது முகத்தைக் காணத் திராணியில்லாமல் எங்கோ பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தேன். இருவரின் டம்ளர்களிலும் ஆறிப் போன டீ பாதி க்ளாஸ்க்கு அப்படியே இருந்தது.
“நீ சாப்டியா.?”
“இல்லண்ணே.”
“சாப்புடுறியா.?”
“பரோட்டா வாங்கிக் கொடுண்ணே”.
“டேய்..! மதிய நேரத்துல பரோட்டா எங்கடா கெடைக்கும்.?”
“பிரியாணி சாப்புடுறியா.?”
“சரிண்ணே..!”
ஒரு மட்டன் பிரியாணி பார்சல் வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டு, நான் இந்த டீக்கடைக்கு அடிக்கடி வருவேன். என்னைய வந்து பாரு. நானும் இந்தப் பக்கம் வரும்போது உன்னப் பாக்குறேன். நீ ஒழுங்கா இருக்குற மாதிரி தெரிஞ்சிதுனா கண்டிப்பா உனக்கு ஏதாவதொரு வேல வாங்கித் தரேன்”
“ரொம்ப நன்றிண்ணே” சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
இரண்டு மூன்று நாட்களாக, அந்தப் பிளாட்பாரத்தையொட்டிய இடங்களில் நோட்டமிட்டேன்.
பால்துரை அங்கு இருக்கவில்லை.
அங்கு இரவில் டிபன் கடை போடும் அக்காவிடம் விசாரித்த போது, இரண்டு நாளைக்கு முன்பு, காவல்துறையினர் பிளாட்பாரமில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் பெண்களை விடுத்து, ஆண்களையெல்லாம் சந்தேக கேசில் கூட்டிக் கொண்டு போனதாகவும், அவர்களில் ஒருவரும் திரும்பி வரவில்லை எனக் கூறினார்.
“என்னக்கா சொல்றீங்க. நெஜமாவா?”
“ஆமா தம்பி.. என்னென்ன சித்ரவத பண்ண போறாங்களோ.. பாவம்..”
ஆளை விழுங்கும் மலைப்பாம்பாய் வெக்கையில் நெளிகிறது பிளாட்பாரம். ‘அண்ணே…! வேல ஏதாவது இருந்தா சொல்லுங்கண்ணே.’ என்ற பேய் குரல் முதலில் கெஞ்சிக் களைத்து பின் கொடூரமாகச் சிரிக்கிறது. மலைப்பாம்பின் முகத்திற்குப் பதில் பால்துரையின் முகம்.
வெக்கை வியர்த்துக் கொட்டியது.
அலுவலகத்தில் எச்.ஆர் மேனேஜரிடம் பேசி, கேன்டீனில் ‘டீ பாய் வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.
எச்.ஆர் மேனேஜரும் சேலத்துக்காரர் தான்.
எழுதியவர்
- சேலத்தை பிறப்பிடமாக கொண்ட கார்த்திக் பிரகாசம்; தற்போது சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிகிறார்.
இதுவரை.
- சிறுகதை18 January 2024சென்னையில் பால்துரை