அதிகாலை நேரம் ஆடி கார் ஒன்று கும்பகோணம் மகாமகம் குளம் அருகே வந்து நின்று பெட்ரோல் குடிப்பதை நிறுத்தியது.. விடிந்தும் விடியாத நேரமாதலால் சாலை வெறிச்சோடி ஆள் நடமாட்டம் குறைவாக மணிக்கூண்டு அருகில் மாடுகள் நடமாட்டம் மாநாடு நடப்பதைப் போல் திசைக்கு ஒன்றாகப் பல் தெரிய அசை போட்டவாறு நின்றும் அமர்ந்தும் பார்க்க முடிந்தது.
எங்கோ பள்ளிவாசலிலிருந்து பாங்கு ஒலியைத் தொடர்ந்து ‘அல்லாஹு அக்பர்’ என்று ‘நமாஸ்’ ஓதுவது தெளிவாகக் கேட்டது. அப்போது ராகவன் காரிலிருந்து இறங்கி, நெட்டி முறித்து நீண்ட பெருமூச்சு விட்டபடி சுற்றி ஒரு பார்வை பார்த்தான். குளிர்ந்த காற்று அவனைத் தழுவி, இது மார்கழி மாதம் என்று சொல்லிச் செல்ல எங்கோ பஜனை பாட்டுக் கேட்டதும்; எந்தக் கோவிலிலிருந்து சத்தம் வருகிறது என்று உன்னிப்பாகக் கவனித்தான். ஏகாம்பரேஸ்வரர் கோவிலாகத்தான் இருக்கும் என்று கணித்தவனாக டிரைவரிடம் இங்கேயே இருக்குமாறு சைகை காட்டி விட்டு நடக்கலானான் ராகவன்.
இப்போது ராகவன் மனம் பால்ய நினைவுகளை அசை போடத் தொடங்கியது.
அன்று மூன்றாம் எண் ரப்பர் செருப்பு போட்டு நடந்ததற்கும்; இன்று ஒன்பதாம் எண் ஷூ போட்டு நடப்பதற்கும் நடுவில் 6 எண் வித்தியாசம் மட்டும் இல்லை, ராகவன் வாழ்க்கையில் 60 வருடம் கடந்து விட்டிருந்தது.
சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை என்று தெரிந்தும்; தன் உயிர் ஜனித்த நிலம், தான் பிறந்த ஊர்.. பால்யத்தில் படர்ந்த வேரில் ஈரம் வேண்டி., சொந்த மண் தேடி தன் தடம் பதித்து நடந்து கொண்டிருந்தான் ராகவன்.
அம்மாக்கள் இறந்து வருடம் பல கடந்திருந்தும், ஐயப்பன் எங்கே?, என்ன செய்து கொண்டு இருப்பான்? என்று தெரியாதவனாக; இன்று, இப்போது துக்கத்திற்கு வந்தவனைப் போல விம்மி அழ வேண்டும் போலிருந்தது. நல்ல வேளை அதற்குள் பழைய பேருந்து நிலையம் முகப்பில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வந்து விட்டிருந்தான் ராகவன். தன் ஷூ கழட்டி கோவில் வாசலில் விட்டவன், ஏகாம்பரநாதரை காண முதல் அடியெடுத்து வைத்ததும்….
“ஓம் நம பார்வதி பதயே
ஹர ஹர மகாதேவா ”
கோயில் உள் பிரகாரத்தில் மார்கழி பஜனை பாடல்கள் பாடிக்கொண்டே; சிலர் ராகவனை கடந்து சென்றனர்.ராகவன் மனமும் உடலும் புல்லரிக்க கொடிமரம் முன் நின்று
”என் அப்பனே, ஓம் நமச்சிவாய!” என்று தலைக்கு மேல் கை குவித்து வாய்விட்டுச் சிலாகிக்கும்அதே நேரம் கோவில் மணி ஓசை ‘டன் டன்’ என்று ஒலித்து காத்திருந்த அவன் செவி இரண்டிலும் வாழ்த்தாய் நிறைந்தது.
‘நானும் உனை கண்டேன் மகனே என்பதாய்’
செவி வழி கிடைத்த செய்தியால் கண்ணீர் பெருகி, இமை இரண்டும் ஒரு கணம் இணைந்து மனம் சிவனை ஆரத் தழுவிக் கொண்டது. அங்கு இருக்கும் ஏகாம்பரேஸ்வரருக்கும் அவனுக்குமான பந்தம் அப்படியானது.
அப்போது அசைபோட்ட நினைவுகள் இப்போது நினைவுகளை மீட்டெடுத்தது.
ராகவன் வீடு கோவிலுக்கு மிக அருகில் இருக்கும் உப்புக்கார தெருவில் முதல் வீடு.
அங்கு நடம்மா, பட்டம்மா, ஐயப்பம்மா, ராகவனம்மா. இவர்களுடன் பிள்ளைகள் ஐயப்பனும் ராகவனும்.
இதில் யார் மூத்தவர்.. யார் இளையவர் என்று தெரியாதவர்களாக இருவரும் ஒரே வயதொத்தவர்கள். சிறு பிள்ளைகளான அவர்களுக்கு ஏன், எப்படி, எதற்கு என்றெல்லாம் தெரியாது. ஐயப்பனும், ராகவனும் நால்வரையும் ஒரு போல ‘அம்மா’ என்று தான் அழைப்பார்கள். சொல்லப்போனால் அருகாமையில் வசிப்பவர்கள் கூட இவர்கள் நால்வரும் அக்கா தங்கையா?, ஒரு வீட்டு மருமகள்களா? என்றெல்லாம் கூட யாரும் ஆராய்ந்ததில்லை.
தஞ்சை பெரிய கோயில் காலத்தால் அழிக்க முடியாத அடையாளம் தான். ஆனாலும் தஞ்சை, கும்பகோணம் போன்ற ஊர்கள் சுற்றிலும் அடையாளம் தெரியாமல் அழிந்த குடும்பங்கள் உண்டு. கோயில் இருக்கும் வீதிகளில் எல்லாம் இவர்களைப் போன்ற குடும்பங்கள், குடும்பத் தலைவன் யாரும் இல்லாதவர்களாக இப்படித்தான் வாழ்ந்து வந்தார்கள்..
அப்போதெல்லாம் நடம்மாவும் பட்டம்மாவும் மொட்டை பாப்பாத்திகள். வீட்டை விட்டு வெளியே வந்தால் கோயிலுக்குப் போகிறார்கள் என்று அந்தத் தெருக்காரர்கள் நினைக்கும் அளவுக்கு, கோவில் வீடு தவிர வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். மற்ற இருவரில் ஐயப்பம்மா பாட்டு சொல்லிக்கொடுப்பார். ராகவனம்மா நாட்டியம் சொல்லிக் கொடுப்பார். ஆச்சாரமான குடும்பம் என்றாலும் ஆண் துணை இல்லாத குடும்பம்.
பாட்டும் பரதமும் கற்றுக் கொடுக்கும் அவர்களுக்கு வருமானம் என்றால்; குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் சொற்ப வருமானம் மட்டுமே.. ராகவனும் ஐயப்பனும் வேத பாட சாலையில் இலவசமாக வேதம் பயின்று வருவார்கள்.. கோயில் பிரசாதம் தான் அவர்களது அன்றாடப் போஜனம். மற்றபடி மார்கழி மாதம் முழுவதும் ஏகாம்பரேஸ்வரர் படி அளப்பார்.
சிறுவன் ராகவனுக்கு அன்றும் சிவனின் அழைப்பு இப்படித்தான்
“ஓம் நம பார்வதி பதயே
ஹர ஹர மகாதேவா”
ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஐயர் மார்கழி பஜனைக்குத் தயாராக கையில் நெய் வேத்தியத்துடன் நான்கு ஜாலர் (இசைக் கருவி) எடுத்து வைப்பதற்குள் ராகவன் ஸ்நானம் முடித்து, நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டு ஆளுக்கு முதலாய் வந்து 12ம் நம்பர் ஜால்ராவை எடுத்துக்கொண்டான். ஐயப்பன் தாமதமாகத் தான் வருவான். சில நாட்கள் வராமலே போகக்கூடும் அதற்குள் பத்துப் பேர் சேர்ந்து விடுவார்கள். மூன்று முறை கோவிலை வலம் வந்து பூஜை முடித்ததும் ஐயர் பிரசாதமாய் கொண்டு வந்த வெண்பொங்கல் தருவார்.
சிவனுக்காக வந்ததை விடப் பொங்கலுக்காக வருபவன் தான் ராகவன். ஐயப்பன் வர தாமதமானாலோ வராமல் போனாலோ அவனுக்காக அரச இலையில் பிரசாதத்தை வாங்கி பத்திரப்படுத்தி, அவனுக்கான பங்கைக் கொடுக்காமல் விட்டதில்லை ராகவன். வீட்டில் அத்தனை வறுமை.. ! அன்று உண்டது தான் தனக்கான கடைசி பொங்கல் என்று ராகவனுக்கு தெரிந்து இருக்கவில்லை. அரை வயிறு நிரம்பியவனாக வீட்டிற்கு வந்த ராகவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அம்மாக்கள் நால்வரும் முற்றத்தில் ஆளுக்கு ஒரு தூணைப் பிடித்து நின்றிருக்க ஊஞ்சலில் ஓர் ஆண் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
“இந்தோ… வந்துட்டானே உங்காத்து கொழந்த” என்று அவரிடம் ராகவனை அறிமுகம் செய்து வைத்தாள் ஐயப்பம்மா.
மலங்க மலங்க விழித்த ராகவனிடம் ‘அப்பா’ டா என்று பட்டம்மா தான் அறிமுகப்படுத்தினார்.
இத்தனை நாளாக இல்லாத அப்பா எங்கிருந்து வந்தார் என்று ராகவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“அப்பச் சரி, நாளைக்கே சென்னைக்கு அழைச்சிட்டு போறேன். பாஸ்போர்ட் எடுக்கணும். நிறைய வேலை இருக்கு.” என்று ராகவன் கன்னத்தைத் தடவி “என்னடா அதிஷ்டக்கார பயலே! என்கூட வந்துடுறியா?” என்று பதிலைகூட எதிர்பார்க்காமல் கிளம்பிப் போய்விட்டார் ஆஜானுபாகமாக தோற்றமளித்த அந்த ஆண்.
அவர் வேறு யாரும்மல்ல, தஞ்சாவூர் மிராசு…! ஒரு காலத்தில் அவர் அடிக்கடி வந்து போகும் இடங்களில் இந்த வீடும் ஒன்றாக இருந்தது. அம்மாக்கள் நால்வரும் நாகேஸ்வரன் கோவில் தேவதாசிகள். என்ன தான் கோவில் சேவகம் தான் இவர்கள் வாழ்நாள் கடமை என்றாலும், சில கட்டாயங்களையும் வாழ்க்கையில் கடக்க வேண்டியிருந்தது.
திருமணத்திற்குப் பின் இந்தப் பக்கம் வராமல் இருந்த மிராசு, ஒரு விபத்திற்குப் பின் தனக்குக் குழந்தையே பிறக்காது என்று தெரிந்ததும் இந்தக் குழந்தை தன் வாரிசு தான் என்ற நம்பிக்கையில் வந்து கேட்டதும்; ‘அவனாவது நன்னா இருக்கட்டும்’ என்று அவருடன் அனுப்பச் சம்மதித்தார் ராகவன் அம்மா.
சொன்னது போல் மறுநாளே வந்து அழைத்துச் சென்றார் மிராசு. வெகு சீக்கிரமே அம்மாக்களை, ஐயப்பனை, சிவனை எல்லாம் மறக்கச் செய்தது அமெரிக்க வாழ்க்கை.
அன்று சென்ற ராகவன் இன்று குடந்தையில் தனக்காக யாரும் இல்லை என்று தெரிந்தும், இதோ ஒரு மார்கழியில் சிவனுக்கு முன் நின்று கொண்டு இருக்கிறான். அன்று போல் பஜனையில் குழந்தை பட்டாளம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பூசை முடிந்து வெண்பொங்கல் பிரசாதம் தொன்னையில் வைத்து அன்னதானம் செய்து கொண்டு இருந்தார்கள்.
மீண்டும் சிவனை பார்த்த ராகவன்
‘அப்பனே நமச்சிவாய,
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’
என்று வாய்விட்டுச் சொல்லி தலைக்கு மேல் கைகூப்பி சாஷ்டாங்கமாகக் கொடிக் கம்பம் முன் நமஸ்காரம் செய்து எழுந்து கர்ப்ப கிரஹம் பார்த்ததும். மீண்டும் ஒரு முறை தாயின் கர்ப்பத்திற்கே சென்று வந்த உணர்வில் கண்ணில் ஜலம் கோர்த்தது.
பிரசாதம் வாங்கிக்கொண்டு, அப்படியே கோவில் வாசலைப் பார்த்தவாறு அமர்ந்த ராகவன் கையில் இருந்த பிரசாதம் ‘எங்கே ஐயப்பன்?’ என்று கேட்டது போல ஒரு பிரமையால் மனம் தடுமாறினான்.
அதே சமயம் கோயில் வாசலில் அப்போது வந்தமர்ந்திருந்த பரதேசி ஒருவர்; ராகவனையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
முற்றும் துறந்த ஒருவனுக்கும் முழுவதும் துறந்த ஒருவனுக்கும் இடையில் ஏதோ ஓர் அதிர்வலை கடந்து செல்ல; அனிச்சையாகப் பிரசாதத்தை பரதேசி கையில் வழங்கிய ராகவன் மகாமகக் குளம் நோக்கி நடக்கலானான்.
எழுதியவர்
- தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் பிறந்து, தற்போது ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் வசித்து வரும் குடந்தை அனிதாவின் இயற்பெயர் அனிதா பாபு. ’கவிதையும் கற்று மற’ மற்றும் ’நினைவுக் குமிழிகள்’ ஆகிய இவரின் கவிதை தொகுப்புகளை ’புஸ்தகா’- டிஜிட்டல் மீடியா வெளியிட்டுள்ளது.
இதுவரை.
- சிறுகதை18 January 2024என் அப்பன்
- கதைகள் சிறப்பிதழ் 2023 - II3 September 2023அலர் முகை செம்மல்
சிறப்பு அனி
வாழ்த்துகள் ப்பா
அருமை..அனிதா
சுவரஸ்யமாக இருந்தது.