சில அடிப்படைகள்: 01
மகவே,
நம் சுற்றம் ‘குற்றம் கண்டறிதல்’ என்பதை ஒரு கலையாகவே கைக்கொள்ளும். நாம் ‘எதை’ செய்தாலும் அதிலொரு அபத்தம் இருப்பதாகவே சொல்லும். உதாரணமாக, ‘எழுதினால் – கோணல்; பேசினால் – திக்கல்; உண்டால் – சிந்தல்; உறங்கினால் – உளரல்’ எனப் பட்டியல் நீளும். இங்கு, ‘சுற்றத்திற்காக மட்டுமே வாழ்தல் என்பது ஆகாது மகவே. அது தகாததும்கூட. ‘சுற்றம் வெறும் சுற்றம் மட்டுமே என்பதை உணர்ந்து நமக்கான வாழ்வை வாழப் பழகுதல் நல்லது’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 02
மகவே,
‘இவ்வுலகில் நம் சுயம் அறிதல் முதன்மையானது. நாம் யார் என்று உணர்தல் வேண்டும். நாம் இங்கு உருவாதலின் தேவை இப்பிரபஞ்சத்திற்கு எதற்கு என வினா எழுப்பல் அவசியம். எதன் பொருட்டு நம் உயிர் இங்கு இயங்கிக்கொண்டுள்ளது எனச் சிந்திப்போம். அதற்கேற்ப நமக்கான பணியினை மேற்கொள்வோம்’. ஆம், இங்கு ‘சுயம் மட்டுமே நம்மை உயிர்ப்பித்து வைத்திருக்கும். கண்டடைவோம். வாழ்வோம்’.
முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 03
மகவே,
ஒரு இடரை எவ்வாறு அணுகல் வேண்டும்? உதாரணமாக ஒரு குறிப்பிட்ட இடரைப் பாறை எனக் கொள்வோம். இப்போது அதனைச் சம்மட்டி என்னும் புத்தியால் அடித்து சிறுகச்சிறுக நொறுக்குவோம். பிறகு அதனை மேலும் நொறுக்கி சோற்றுக்குள் சிக்கிய கல்லென எண்ணி மென்று விழுங்குவோம். ஆம் மகவே, இங்கு ‘எல்லா இடர்களும் செரிக்கப்படும். அதற்குச் சற்றுப் பொறுமையுடன் அதனைப் பகுத்தல் வேண்டும். அவ்வளவே. ‘எவ்விடரையும் பகுத்துச் செரிப்போம்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 04
மகவே,
‘பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்டல்’ என்று பகடியாகச் சொல்வர். உதாரணமாக நமக்கு ஒன்று வேண்டும் என்றால் அதன்பொருட்டு நாம்தான் மெனக்கெடல் வேண்டும். அதனைவிடுத்து அருகில் உள்ளோரைக் காரணப்படுத்தி அதனைச் சாதித்தல் இழுக்கு. நமக்கு வேண்டியதைப்பற்றி வெளியிடத் துப்பற்ற நாம் எதற்கு அதன்மீது மையல்கொள்ள வேண்டும்! ஆம் மகவே, ‘எங்குமே பொறுப்புத்துறப்பு ஆகாது. அது கேடு. பொறுப்பேற்கும் மனவுறிதியும் பக்குவமே நம்மைப் பண்படுத்தும்’. எனவே ‘நம் தேவைகளுக்கு நாமே பொறுப்பேற்கப் பழகுவோம்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 05
மகவே,
நாம் அதீதமாய் நேசிக்கும் ஒருவர் நம்மைக் கையாள வைத்திருக்கும் ஆயுதத்தின் பெயர் அன்பு. ஆம், சில உன்னத வேளைகளில் அவர்களே ஒப்புதல் வாக்குமூலமாக ‘அன்பால் அடித்தல்’ பற்றிக் குறிப்பிடுவர். அப்போது நாம் மீளமுடியாத பள்ளத்தாக்கில் இதயம் படபடக்க வீழ்ந்து அமிழ்ந்திருப்போம். உயிர் ஒரு சிறிய பட்டாம்பூச்சியென நம்மில் பிரிந்து தோளில் அமர்ந்து வேதனையுடன் சிரித்திருக்கும். சாதலுக்கு அஞ்சல் இழுக்கு; அதேவேளை அன்பித்தவர்களால் கொல்லப்படல் நரகம். ஆகவே, ‘நம்மை அடிக்க அன்பை ஆயுதமாக வைத்திருப்போரிடம் சரணடைதல் தீது’. ஆம், ‘அன்பைக் கண்டு அஞ்சுதலே நலம். ஓடு. தப்பித்து ஓடு’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 06
மகவே,
நாம் எப்போது வளர்வோம் என்பதன் அடிப்படையைத் தெரிந்துகொள்வோம். ஆம், ‘நம் வளர்ச்சிக்கு அடிப்படை நாம் நம்மைப்பற்றி அறிந்துகொள்ளலில் உள்ளது. அது நம் பலத்தையும் பலவீனத்தையும் உணரச்செய்யும். அவ்வுணர்தலில் பலவீனங்கள் முறைபடுத்தப்பட்டுப் பயிற்சியின் வழி பலவானாக நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும்’. இங்கு, ‘சுயமறிதலே வளர்ச்சி. அறிவோம். வளர்வோம்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 07
மகவே,
வளர்த்தல் என்பதற்கும் வளரவிடல் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. அதாவது ‘ஒன்று எப்படி வளர வேண்டும் என நாம் முடிவு செய்தால் அது வளர்த்தல்; மாறாக தன்போக்கில் வளர ஒன்றிக்கு இடம்(space) அளித்து அதனை ஊக்கப்படுத்தல் வளரவிடல்’. இங்கு குடுவையுள் வளர்க்கப்படும் தாவரத்தின் வேரைவிடச் சுயமாய் வளரும் தாவரத்தின் வேர் நிலையானது. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 08
மகவே,
‘அறிவுத் திருட்டுதான் உள்ளதிலேயே பெரிய திருட்டு’. உதாரணமாக உனக்குச் சொல்வதை இங்கு பார்க்கும் நம் அதி உன்னத நட்புகள்’ சப்தமின்றி இதைக் கழற்றி எடுத்து, ஷேர் சேட்டில், ஃபேஸ்புக்கில் எனத் தங்களது சொந்த கணக்கில் தம் பெயர்கொண்டு பதிவேற்றுவர். இவர்கள் யாவரும் நம் எதிரிகள் அல்லர்; அன்புக்குரிவர்கள். அகவேதான் மகவே ‘அன்பைக் கண்டால்’ பயந்து நடுநடுங்கிப்போகிறது இவ்வுடல். ‘இந்தக் கருத்து இவர் சொன்னது எனச் சொல்ல துப்பற்றவர்கள் தம் சொந்தக்கருத்தெனச் சொல்லி தலையில் வைத்து ஆடுவர்’. ஆம் மகவே ‘அறிவைத் திருடும் இவர்கள் துரோகிகளினும் கொடியோர்; காறி உமிழ்ந்து நம் வழி தொடர்வோம்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள் :09
மகவே,
‘நம்மை நாமே கொன்றுகொள்வதற்கே நமக்கு உரிமை இல்லை; இதில் நம்மூலம் இவ்வுலகிற்கு வந்தவர்களை ‘நாம் இல்லாத இவ்வுலகில்’ அவர்களால் வாழ இயலாது என்று எண்ணி கொல்லத்துணிவது அபத்தத்திலும் அபத்தம் இல்லையா! இந்த வாழ்க்கை மறதிகளால் ஆனது மகவே; நாம் இல்லாது போனாலும் நம் இருப்பை மிக நிச்சயமாக ஏதோவேறொன்று ஈடுசெய்யும். இதன் பொருள் நம்மை நாமே கொன்றுகொள்வதல்ல; மாறாக ‘தற்கொலை தீது; அதனினும் தீது சார்ந்தோர் கொலை’ என்பதை உணர்வது. இங்கு, ‘வாழ்க்கை எளிமையானதல்ல; ஆனால் வாழ்தல் எளிமையானது; வாழப்பழகுவோம்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்:10
மகவே,
நமக்குப் உண்மையைப் பேசத் தெரியாது அல்லது பேசினாலும் அதே பொருளில் அதைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாது. உதாரணமாக ‘கல்லு தட்டிவிட்டதெனக் குறைபட்டுக்கொள்வோம்’. அதெப்படி ஒரு கல் நாம் நடக்கும் வழியில் குறுக்கே வந்து நம் பாதத்தினை மட்டும் இடறிவிடும்! அவ்வாறு நிகழாது அல்லவா? பிறகு? நாம் நம் கவனக்குறைவால் கல்மீது மோதியிருப்போம்; இருப்பினும் நாம் அத்தவறின்மீது பொறுப்பேற்காது கல்மீது பழியினைச் சுமத்துவோம்’. ஏனெனில் இச்சமூகம் இப்படித்தான் நமக்குக் கற்பிக்கிறது. எனவே, அதிலிருந்து விலகி ‘நம் தவறுகளுக்கு நாம் பொறுப்பேற்றுப் பழக வேண்டும்’. இதுவே ‘நற்பண்பின் அடிப்படை’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 11
மகவே,
பிறழ்வு மனநிலையானாலும் நம் உடையை நாம் கிழித்துக்கொள்ளல் சரி; ஆனால் தெருவில் அவ்வளவு ஏன் நம் இல்லத்திலேயே உள்ள ஏனையோரின் உடையைக் கிழித்தல் வன்முறை. அதனை எப்படி அறியும் அம்மனநிலை என்கிறாயா? உண்மைதான். அறியாது. ஆனால், அப்பிறழ்வை நியாயப்படுத்தாது சரிசெய்ய முயல்வதுதான் அறம் அல்லவா? அதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் உதவியும்கூட. ‘உயர்த்தல் என்பதன் பொருள் தூக்கிச் சுமத்தல் அல்ல. மாறாக, உயர வழிகாட்டல்’. எளிதாய்ச் சொல்வதென்றால் ‘பிறழ்வை ஏற்றுக்கொள்ளல் அல்ல சரிசெய்ய முயல்தலே அறம்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 12
மகவே,
இவ்வுலகில் எல்லாம் உள்ளது. ஆகவே, ‘கேள் – கொடுக்கப்படாவிடின் எடு’. அறமல்ல என்கிறாயா! சரிவிடு. ‘தட்டு – திறக்கப்படாவிடில் உடைத்தெறி’. இதுவும் அறமல்ல என்கிறாயா! சரி இதையும் விடு;
‘தேடு – கண்டடைய இயலாவிடில் உருவாக்கு’. ஆம் குழந்தாய், கேட்டும், தட்டியும் கிடைக்காத ஒன்றை அல்லது பெற விரும்பாத ஒன்றை சுயமாக உருவாக்கலாம். ஏனென்றால் அந்தம்வரை சுயம்தான் நம் பெரும் ஆயுதம். கைகொள். பயன்படுத்து. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 13
மகவே,
நம்பிக்கைக்கும் அகம்பாவத்திற்கும் வேறுபாடு உள்ளது. அதாவது, ‘எந்தவொரு செயலாக இருப்பினும் நாம் செய்வது சரி என எண்ணுதலின் பெயர் நம்பிக்கை; அதேநேரம் நாம் செய்வது மட்டும்தான் சரி என எண்ணுவது அகம்பாவம்’. இங்கு, நம்பிக்கை நம்மை வளர்த்தெடுக்கும் ஊற்றுநீரென்றால் அகம்பாவம் நம்மை மட்டுமல்ல நம் தோன்றலையே அழித்தொழிக்கும் கானல்நீர். ஊற்று நீரே யாக்கைக்கும் வாழ்க்கைக்கும் நல்லது. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 14
மகவே,
இவ்வுலகில் ‘எல்லாவற்றிற்கும் இரு பக்கங்கள்’ இருக்கும். நாம் நம் கருத்தினை மதிக்கும் அதே எல்லையில் நின்று எதிர்க்கருத்தினையும் அணுகல் வேண்டும். எளிதாய்ச் சொல்வதென்றால் ‘எதிராளிக்கு அல்ல எதிர்க் கருத்துகளுக்குச் செவிசாய்த்தல் நம் கருத்துகள் மேம்பட உதவும்’. இதன் பொருள் தோற்றல் அல்ல, வலுப்படல். கற்போம். முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 15
மகவே,
இது ‘மோசமான உலகம்’ என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதே மோசமான உலகில் ‘ஒவ்வொரு கணத்திலும் ஒரு மலையில் ஊற்று கொப்பளிக்கிறது; ஒரு தாவரத்தில் அரும்பு வைக்கிறது; ஒரு மழலை தன் தலையைப் பிரபஞ்சத்தில் நுழைக்கிறது; ஒரு சருகு காற்றை மெருகேற்றுகிறது; கால் இடறி சரியும்போது ஏதோவொரு வாய் ‘பார்த்துப் பார்த்து’ என அக்கறைகொள்கிறது’. ஆம். இந்த மோசமான உலகில் ‘எல்லாமும்’ இருக்கிறது. ஆகவே, ‘புலன்களைச் சற்று திறந்து வைத்து எல்லாவற்றோடும் வாழப்பழகுவோம்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 16
மகவே,
பொய் சொல்லாமல் இருக்கப் பழக வேண்டும்; ஏனென்றால் ஒரு பொய் நம் ஒட்டுமொத்த உண்மைகளையும் சந்தேகிக்கச் செய்யும். பொய்யின்றி வாழ்தல் எளிது. அதாவது ‘பொய் சொல்வதற்குப் பதிலாக உண்மையைச் சொல்லாமல் தவிர்க்கலாம்; இதில் விதிவிலக்கென ஏதேனும் ஓர் உயிர்க்கு நன்மை ஏற்படும் பொருட்டுப் பிறருக்கு துமியளவும் பாதிப்பு ஏற்படாதென்றால் பொய்யினைச் சொல்லலாம். நம் நோக்கம் ‘உண்மையை மறைத்தல் அல்ல; பொய்யைத் தவிர்த்தல்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 17
மகவே,
எப்போதும் எதுசார்ந்தும் முடிவைத் தேர்கையில் அறிவு உதவும். ஆனால் சில நேரங்களில் அது இயலாமல் சற்றுக் குழம்பியும் போகும். அப்போது நாம் என்ன செய்வது? அப்படியான சூழல்களில் இயற்கை நமக்கு அளித்துள்ள கொடையான உள்ளுணர்வை நம்புதல் வேண்டும். ஆனால், நாம் வளர்த்துக்கொண்ட அறிவு அதனை எளிதில் ஏற்காது; சமர் புரியும். அதற்காக நாம் பின்வாங்குதல் அவசியமற்றது. ஏனென்றால் ‘அறிவினும் உள்ளுணர்வு கூரானது; அது ஞானத்தின் திறவுகோல். அது ஒருபோதும் நம்மைக் கைவிடாது’.வேறு வகையில் சொல்வதென்றால் ‘உள்ளுணர்வே நமக்கான கடவுள்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 18
மகவே,
‘எத்தவொரு நிகழ்வானாலும் அதற்கெனவொரு காரணம் இருக்கும்; இங்கு காரணமின்றி நிகழ்வோ, நிகழ்வின்றி விளைவோ இல்லை. நம்மவர்கள் நிகழ்வையும் அதன் விளைவையும் விதி என்பர். அதாவது நிகழ்வதும் விளைவதும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருப்பினும் அதை விதியில் அடக்குவர். நம் நோக்கம் விதியை நம்புவதல்ல மாறாக அவ்விதியை நமக்குச் சாதகமாக்கல். அதெப்படி முடியுமென்கிறாயா! முடியும் அன்பே. நம்மால் நிச்சயம் முடியும். நிகழ்வை நெறிப்படுத்த முயற்சிப்பதன் வழி விளைவைச் சரிசெய்து மாற்றலாம். இங்கு, ‘முயற்சி மெய்வருத்தக் கூலிதரும்’ என்னும் வள்ளுவத்தை நினைத்துக்கொள்வோம்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 19
மகவே,
‘முட்கள் காலில் குத்திவிடக்கூடாது என்றுதான் செருப்பினை அணிவோம்; ஆனால் சில நேரங்களில் முட்கள் செருப்பினுள் புகுந்துகொண்டு நம் பாதங்களில் கணம் கணம் குத்திக்கொண்டே இருக்கும்’. அப்போது ‘அம்முட்களைப் பிடுங்கித் தூர எறிய வேண்டும்; ஒருவேளை முடியாவிட்டால் ஆம் அன்பே வேறு வழியில்லை எவ்வளவுதான் விருப்பத்துடன் கூடுதலான விலைக்கு அதனை வாங்கியிருந்தாலும் கழட்டித் தூர எறியத்தான் வேண்டும்’. ஆம். ‘பயிரை மேயும் வேலி எதற்கு? தேவையெனில் இதனை நம் சுற்றத்துடனும் பொருத்திக்கொள்ளலாம்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 20
மகவே,
வீட்டிற்கு வருபவன் எதிரி அல்ல துரோகியாக இருந்தால்கூட ‘வாருங்கள்’ என அழைப்பதே மாண்பு; அத்துடன் வருபவர்க்கு நீரளித்தல் அதனினும் நன்று. இதையெல்லாம் உணர பிரபஞ்சங்கள் தாண்டியுள்ள பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கத்துடன் பட்டயம் பெற வேண்டிய அவசியம் இல்லை; மாறாக மிகக் குறைந்தபட்ச பண்பிருந்தாலே போதும். சொற்களைப்போல் பெருஞ்செல்வம் வேறில்லை அன்பே; ஆக வரவேற்கப் பழகுவோம். அது நம் சுயத்தை மேம்படுத்தும்.
முத்தங்கள்.
அப்பன் மகவிற்குச் சொல்வது: 21
மகவே, அடிக்கடி வானைப் பார்; ஏதேனும் ஒரு நட்சத்திரத்தைத் தேர்ந்தெடு; இரவில் அதனோடு உரையாடு; பகலில் அது உன்னோடு உரையாடும்; ‘உரையாட உணர்வுகள்தாம் முக்கியமேயன்றி மொழியல்ல’; பின், இருவரும் நட்பாகுங்கள்; வாய்ப்புள்ளபோது அல்லது வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டு அதனோடு சேர்; ஆம் மகவே, ‘தனிமை ஒரு நல்ல துணை; அங்கு துரோகமோ கழுத்தறுப்போ இருக்காது; மாறாக எதுவுமற்ற ஒன்று எல்லாமுமாக இருக்கும்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 22
மகவே,
‘வாசிப்பது ஏன் அவசியம் தெரியுமா? இந்த வாழ்க்கை நம்மை சோர்வுறச் செய்யும்போதெல்லாம் வாசிப்பானது நம்மை உயிர்ப்பிக்கும்; ‘ஏட்டுச் சுரை கறிக்கு உதவாது என்பதை மெய்ப்பிப்பதோடு களவாழ்வில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை ஏதோவொரு கதாப்பாத்திரத்தின் வடிவில் உணர்த்திக்கொண்டேயிருக்கும். எளிமையாகச் சொல்வதென்றால் ‘விழாமல் இருப்பதற்கல்ல விழுந்தால் எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கற்பிக்கும்’. ஆகவே, ‘வா. வாசிக்கப் பழகுவோம்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 23
மகவே,
எந்தவொரு செயலையும் நமக்கு ஒரு பக்கம் இருக்கும் அதேபோல நம்ம எதிர்ல இருக்கவங்களுக்கு ஒரு பக்கம் இருக்கும்; நம்மளோட செயல்கள் நமக்கு எப்படி நியாயமாத் தெரியுமோ அதேபோலத்தான் அவங்களோட செயல்கள் அவங்களுக்கு நியாயமாத் தெரியும். எனென்றால், ‘இந்த வாழ்க்கை அனைவருக்கும் ஒரேவிதமான அனுபவங்களைத் தருவதில்லை’ அதனால் நாம அவங்களைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம்; முடியலையா பாதகமில்லை அவங்களைத் தொல்லை பண்ணாம நம்ப வேலையைத் தொடரலாம். முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 24
மகவே,
“இந்தப் பூமியில் நாம் எவரிடம் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்; அது நம் உரிமை. அதேவேளை எப்படிப்பட்ட சூழலிலும் அவ்வார்த்தைகளுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும்; அது நம் கடமை”. அதாவது, ‘நம் வார்த்தைகளுக்கு நாம்தான் பொறுப்பு’. ஆம் அன்பே, ‘இங்கு வார்த்தைகள் என்பது வெற்று வாய்ச்சவடால் அல்ல. மாறாக, நம் சுயத்தை வெளிப்படுத்தும் திறவுகோல்’. புரியும் உனக்கு. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 25
மகவே,
உன் மனதிற்கு ஒரு செயல் சரியெனப்படும்; இல்லை அது அவ்வாறு இல்லை என நானோ இச்சமூகமோ மறுப்போம்; அதற்காகவெல்லாம் நீ உனது முடிவினை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், முதலில் அது உன்னைச் சார்ந்தது; ஒருவேளை அது தவறான முடிவாக இருந்தால்கூட அது உனக்குச் சிலவற்றைக் கற்றுக்கொடுக்கும். இரண்டாவது, ‘புத்தியைவிட மனமே நமக்குச் சிறந்த வழிகாட்டி’ ஆம் மகவே, ‘புத்தி அணுகூலங்களை மட்டுமே சிந்திக்கும் கருவி ஆனால் மனம் வாழ்தலைக் கற்றுத்தரும்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 26
மகவே,
‘யாவரையும் காயப்படுத்துதல் நம் நோக்கமாக இருத்தல் கூடாது; அதேவேளை ஒருவர் செய்வது பிழையென்றால் அதனைச் சுட்டலில் தயக்கமும் ஆகாது’. ‘எப்பொழுதும் நாம் நமக்குத்தான் நேர்மையானவராக இருக்க வேண்டுமேயன்றி அதனை ஏனையோருக்கும் நிரூபணம் செய்ய வேண்டியது அவசியம் இல்லை’; இதனைத்தான் வள்ளுவன் ‘தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்தபின் தன்நெஞ்சே தன்னைச்சுடும்’ என்றான். இங்கு, ‘நேர்மை / பொய்மை என்பதெல்லாம் அவரவர் மனம் சார்ந்தது’. எளிமையாகச் சொல்வதென்றால் ‘மிகக் குறைந்தபட்சம் நாம் நமக்கேனும் உண்மையானவர்களாக இருத்தல் வேண்டும்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 27
மகவே,
‘இந்த வாழ்க்கை நம்மை எவ்வாறு எதிர்கொள்கிறதோ நாம் அதனை ‘மேலும் சிறப்பாக’ எதிர்கொள்வோம்’. எளிமையாகச் சொல்வதென்றால் ‘நம்மிடம் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்கிறாரோ ‘அவரைவிடச் சிறப்பாக’ நாம் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும்’. அதாவது, ‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’, ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்பன விவிலிய தத்துவம். அதனை ‘ஒரு கண்ணுக்கு இரண்டு கண்களையும், ஒரு பல்லுக்கு இரண்டு பற்களையும் கேட்பதோடு ஒரு கன்னத்திற்குப் பதில் இரண்டு கன்னங்களையும் கொடுப்போம்’ என்று வரையறை செய்துகொள்வோமாக. விவேகானந்தன் சொல்வதுபோல ‘யாருக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ அதற்குத்தக சொல்வோமாக’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 28
மகவே,
மகவே, இந்த உலகில் கீழ்மைகள் என்று என்னவெல்லாம் உள்ளதோ எல்லாவற்றையும் தெரிந்துகொள்; அதனை அனுபவப்பூர்வமாக உணர இயலுமாயின் அது கூடுதல் அனுகூலம்; பிறகு, உன் அனுபவம் கீழ்மைகள் எனச் சுட்டப்பட்டதை அவ்வாறே உணர்கிறதா எனப் பார்; ஏனென்றால் சுட்டப்படும் ஒவ்வொன்றும் அவரவர் தனிப்பட்ட அனுபவம் சார்ந்தது. உதாரணமாக ‘கழிவு என்பது கழிவு ஆனால் அதுவே உழவிற்கு நல்லுரம்’; இங்கு, ‘ஒரு பொருள் ஒருவருக்குக் கழிவாகவும் அதே பொருள் இன்னொருவருக்கு உரமாகவும் தெரியும்’. ஆகவே, ‘மேன்மை கீழ்மை என்பதெல்லாம் அவரவர் தேவை சார்ந்தது. அத்துடன் நம் தேவையையும் நாம்தான் தீர்மானிக்க வேண்டும்’. முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 29
மகவே,
ஒப்பனைகள் மலினமானவை; போகப் பொருளுக்கும் பொய்ப் பொருளுக்கும்தான் ஒப்பனைகள் அவசியம்; இங்கு, அழகியலில் மட்டுமல்ல ‘எல்லாவற்றிலும்’ ஒப்பனை உண்டு; ஒப்பனைகள் எப்போது வேண்டுமானாலும் கலையும்; உண்மை எப்போதும் சுடரும்; எனவே, ஒப்பனைகளைத் துடைத்தெறி; அதாவது ‘ஒப்பனைகள் புறத்திற்கு மட்டுமல்ல அகத்திற்கும் கேடு.’ முத்தங்கள்.
சில அடிப்படைகள்: 30
மகவே,
மானுடச் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பற்பல கதைகளைச் செவியுறுவாய்; ஆம் மகவே, ‘இவர்கள் சொல்லும் பரிணாம வளர்ச்சியை நான் பயங்களின் வளர்ச்சியாகவே பார்க்கிறேன்’. மானுடனுக்கு எல்லாவற்றின் மீதும் பயம்; அந்தப் பயம் ஏனைய சுற்றத்தின்மீது எல்லையற்ற அவநம்பிக்கையை விதைக்க அதீத சுயநலத்துடன் ஒவ்வொன்றாய்க் கொல்லத் துவங்கினான்; இவ்வாறு பயம் பரிணாமமாகி நவீன நாகரீகமெனச் சொல்லித் திரிகின்றனர். இதல் நீ தெரிந்துகொள்ள வேண்டியது ‘வளர்ச்சியின் உண்மை முகம் வீழ்ச்சியைச் சுட்டுவதையே’. ஆகவே, ‘சுற்றம் நம்மை மடயர் என்றழைத்தாலும் கூட நாம் நம்மைப்போல் பிறவற்றையும் நேசிக்கப்பழக வேண்டும்’. முத்தங்கள்.
எழுதியவர்
- திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சுஜித் லெனின் சிறுகதைகள் அச்சு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி இருக்கிறது. இவர் எழுதிய ‘பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும் (எதிர் வெளியீடு) என்னும் சிறுகதை தொகுப்பு 2023 ஜனவரியில் வெளிவந்துள்ளது.
வாழ்வின் எதார்த்தங்களோடு அப்பா மகள் அடிப்படை கடமைகளை அழகாய் முப்பது வரிகளில் முத்து முத்தாய் முப்பது அடிப்படை கடமைகளை தெளிவாக அழகாக நம் எதார்த்த பேச்சு வழக்கில் அருமையாக சொல்லி இருக்கிறார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அவர் நடை தொடர மென்மேலும் வாழ்த்துக்கள்