ஒரு முன்னிரவு பேச்சு…
ஒரு கனைப்பொலியில்
உடல்
என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது
பேசலாமா?
என்பதற்கான சமிக்ஞை என எனக்குப் புரிந்ததால்
சற்றே பதட்டத்தோடு
எழுந்தேன்.
இனி,
அதனின் சித்திரப்பேச்சினைத் தொடங்க ஆயத்தமாகும்
தன்னைக் குளிர்ந்த குரலாகக் காட்டிக்கொள்ள
பல பிரயத்தனம் செய்து பார்க்கும்.
ஐயகோ!
இனி, மரியாதையின் பொருட்டு சில உரையாடல் நிகழும்.
பேசு பொருள்களாக,
சில தேடல்கள்
சில தேர்வுகள்
சில விருப்பங்கள்
சில தீர்வைகள்
எனப் பேச்சு நீளும்.
அவ்வப்போது
தன் குதர்க்கமொழியில்
என் உபரி ஆற்றல் விரயமாவதில்
புன்னகைத்துக்கொள்ளும்.
அதனின்
கிழிவு மனநிலை
பல படிநிலைகள் கொண்டது
உடலின் வேலைப்பங்கீடு
உடல் என்பது ஒரு காரியம்
உடல் ஆயிரக்கணக்கான ஜீன்கள் கொண்டது
சனப்பெருக்கம்
மழை தொடாத உடல் உண்டா?
எது சரி? எது தவறு?
அதிக போதை எது?
குரோமோசோம் வழங்கும் உள்ளுணர்வு
கொஞ்சம் நடப்பியல்
இப்படியாக
இதர இதர பேச்சில்
என்னைப் பொறி சுத்த வைக்கும்.
இந்த உடல்களைச் சுற்றி
எத்தனை எத்தனை
கை தட்டல்கள்? பாராட்டுகள்?
அலங்காரக் காட்சிகள்?
அந்தத் தருணம் தான்
அதைத்
தலைக்கு மேல் ஏற்றுகிறது.
தானே ஆதியென உளற வைக்கிறது.
இது போலொரு
தலையால் தான்
அன்றே, என் அம்மை
அமைதியாக வெளி கடந்தாள்.
இங்கு
எல்லாமே இருட்டாக இருக்கிறது
வழி தெரிவதற்கு
நான்
வெகு தொலைவு நடக்க வேண்டும்.
எனக்குக் கால்கள் போதும்.
தாயின் குருதி உறிஞ்சி சிசுவாக வளர
அது போதுமானது.
சிறிது
ஆசுவாசப்படுத்திக்கொண்டு
நிமிர்ந்து பார்த்த போது,
எதையோ பட்டியலிட
குனிந்து குறிப்பெடுக்கும் பாவனையில்
உடல் தெரிந்ததில்,
சிரித்துக்கொண்டே சொன்னேன்
‘இந்த உடலைத் தாங்குவதே இரு கால்கள் தானே”
என்றேன்.
அவ்வளவு தான் விசயம்.
இப்போது
ஒரு முன்னிரவு உரையாடல்
முடிவுக்கு வந்தது.
எழுதியவர்
- மருத நிலம் தஞ்சையை சொந்தமாகக் கொண்டவர். பொதுவெளியில் கவிதை,சிறுகதை என இயங்கி வருகிறார். சன்னத்தூறல் இவரின் முதல் கவிதைத்தொகுப்பு.
இதுவரை.
- கவிதை24 April 2023முன்னிரவு பேச்சு …..
- கவிதை26 November 2022ஒரு முன்னிரவு பேச்சு
- கதைகள் சிறப்பிதழ் - 20221 August 2022பூர்ணிமா என்கிற பூஷணி
- கவிதை18 October 2021அதகளத்தி
இந்த உடலைத் தாங்குவதே
இருகால்கள் தானே?
சிறப்பு
தாயின் குருதி உறிஞ்சி சிசுவாக வளற மிக வலிமையான சொற்களம். அருமை.
வலி நிறைந்த உணர்வின் வெளிப்பாடு மிக மிக அருமை.
என் நெஞ்சம் நிறைந்த அம்மா…
பேராசிரியர் அவர்களின் வரிகள் அருமை…
வாழ்த்துகள்…