வழித்தடம்


ந்நாளும் காலை வேளையில் அந்த பொதுவழித்தடம் தன்னுள் நடந்து போகிறவர்களின் பாதங்களிற்கு இரவெல்லாம் காற்றிடமிருந்து கிரகித்து வைத்திருந்த குளிர்ச்சியை தந்துக் கொண்டிருந்தது. எந்த நாளும் அது தன் குளிர்ச்சியை அம்மக்களின் பாதங்களுக்கு கொடுக்கத் தவறியதேயில்லை. எப்போதும் அந்த வழித்தடம் ஆட்கள் நடந்தபடியே காணப்படும். அந்த வழித்தடம்தான் அந்த ஊரின் மக்களுடைய அல்ல அவசரங்களை தீர்த்து வைக்கும் ஒன்று. அந்த வழியாக சென்றால் சிறிது நேரத்தில் பேருந்து நிலையம். அதைக் கடந்து கொஞ்ச தூரத்தில் ரயில் நிலையம். அருகிலேயே சந்தை. கிராமமான அந்த ஊரின் பாங்கு அந்த வழித்தடத்திலிருந்துதான் ஆரம்பிக்கின்றது. அங்கேதான் முடிகின்றது.   அதைத் தாண்டினால் நகரமயமாக்கலின் தாக்கத்திற்கு உட்பட்டப் பகுதியாக இருந்தது. இந்த இடத்திற்கு வந்துதான் பெரும்பாலும் மக்கள் பேருந்தையோ ரயிலையோ பிடித்து தத்தம் பிரயாணத்தைத் தொடங்குகின்றனர். ஆனால் அது ஒன்றும் பெரிய சாலையல்ல. சாதாரணமான குறுக்கு வழித்தடம். தடத்தின் இரண்டு பக்கமும் சில ஓட்டு வீடுகள் இருந்தன

ஊரைச்சுற்றிக் கொண்டு ஒரு சாலை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்து நிலையத்திற்கு செல்கிறது. புதியதாகப் போட்ட இந்த தார் சாலை தன் பயன்பாட்டை முழுமையாக அடையவில்லை. ஏனெனில் அது ஊரரைச் சுற்றிக் கொண்டு செல்கிறது. ஆனால் இந்த மண்தடமோ இரண்டு கிலோ மீட்டர் சாலையின் மூன்றில் ஒரு பங்கு தூரம் மட்டும் இருந்தது. அழகான மண்தடம். நடப்பவர் கால்களுக்கு இதமான வழித்தடம்பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் வேலைக்கு செல்வதற்காக பேருந்தையும் ரயிலையும் பிடிக்க வேகவேகமாய் வருகிற பாமரர்களுக்கு அந்த குறுக்கு வழித்தடம்தான் எளிமையாய் இருந்தது. சுற்றிப்போகிற நேரத்தைவிட இதில் சென்று சீக்கிரம் வண்டியைப் பிடிக்கலாம் என்று அந்த ஊர் மக்கள் நிறையபேர் அந்தப் பாதையைத்தான் பயன்படுத்தினர். அந்த வழித்தடத்தின் ஓரங்களில் பாதி வீடுகள் இருந்தன. மீதி தடம் வயல்வெளியின் பொழிக்கரைப்போல போதுமான அளவுக்கு பெரியதாக இருந்தது.

அந்த வழித்தடத்தில் இதுவரை யாருக்கும் இடைஞ்சல் இல்லை. ஆனால் இடைஞ்சல் ஒரு புதியக் குடித்தனத்தால் வந்தது.

அந்த வழித்தடத்திலிருந்த கடைசி ஓட்டு வீட்டை  சொந்தமாக வாங்கிக்கொண்டு குடி வந்தனர் கரியனும் அங்கம்மாளும். தங்களது பூர்வீக வீட்டை தங்களது இரண்டு மகன்களுக்கும் கொடுத்துவிட்டு இந்த இடத்திற்கு குடிவந்தனர்

கரியன் தன் பெயருக்கு ஏற்ப ஆள் கருப்புதான். கட்டுமஸ்தான உடம்புக்காரன். எப்போதும் லுங்கியும் தலைப்பாகையும் கட்டியப்படியே இருந்தான். அவசரப் புத்திக்காரன் என்று அவனை ஊரார் சொல்லுவார்கள். எதற்கெடுத்தாலும் அவசரப்பட்டு அடித்துவிடுவான். அவன் வளர்க்கும் மாடுகள் அவனைக் கண்டாலே மிரளும். அவை அவனது அடிக்கு பயந்தன. மாடுகளுக்குத்தான் என்றால் அவனது மனைவிக்கும் அதே நிலைதான். கரியன் ஒரு கண்மூடித்தனமான மனிதன். அவனைக் கண்மூடி காட்டுக்குத்து என்று சொல்லிதான் குறிப்பிடுவர் ஊரார். கண்ணாலேயே மிரட்டி பயமுறுத்துவான். குழந்தைகள் என்றால் பார்த்த மாத்திரத்தில் பயந்துவிடுவார்கள். அவன் வீட்டு மாட்டுக்கும் மனைவிக்கும் தினசரி அடிதான். எனவே அவனிடம் அங்கம்மா என்றும் ஓரடி தள்ளி நின்றுதான் எதையும் பேசுவாள், சொல்லுவாள். எந்நேரத்திலும் கரியன் அடிப்பான் என்பதால் அவளுக்கு பயம் எப்போதும் உச்சி மண்டையில் ஊறிக் கொண்டே இருக்கும். சிறிது தூரம் தள்ளி நின்று பேசினால்தான் அவன் அடிக்க வருகையில் ஓடிவிட முடியும். இல்லையென்றால் பேயோட்டும்போது உச்சிக்குடுமியைப் பிடித்து அடிப்படுவதுபோல் ஆகிவிடும்

அதற்காக அங்கம்மா என்ன லேசுபட்ட மனுசியாஅங்கம்மா ஏதேனும் ஒரு விசயத்தை விரும்பினாலோ ஆசைப்பட்டாலோ எல்லாரையும்போல சொல்லிக் கேட்பதில்லை. அதற்கு பதில் அங்கலாயித்தே நினைத்ததை அடைவாள். பெண்களிடம் சண்டையிடுவது என்றால் அங்கம்மாளுக்கு பொங்கல் சாப்பிடுவதுபோலத்தான். சண்டை என்று வந்துவிட்டால் அவளைப்போல பேசுவதற்கு அங்கு யாருமில்லை. குழவிக்கூண்டில் சிக்கியதுபோலத்தான். அதனாலேயே வாயாடி அங்கம்மா, அங்கலாச்சி அங்கம்மா என பல பட்டப்பேர்களை சம்பாதித்திருந்தாள். அந்த ஊரின் பெண்களிடம்

அங்காயி இல்லஅவ சரியான கொங்காயி,’ என்று அவளுக்கென தனியாக ஒரு பெயரும் நிலவியது. இந்த ஓட்டு வீட்டிற்கு நேர் எதிராக ஊரின் எல்லையிலிருக்கும் வீதியில் மகன்களுடன் குடியிருந்தவள் தற்போது இங்கு வந்திருக்கிறாள். அப்படிப்பட்ட நிலையிலிருக்கும் அங்கமாளுக்கு பொதுவழித் தடத்தை இவர்கள் எப்படி  பயன்படுத்தலாம்தன் வீட்டின் மேல் செல்லும் வழித்தடத்தில் இவர்களுக்கு தடம் வேண்டுமா என்று உள்ளூர எண்ணம் வந்தது. அவள் இதுவரை இருந்த இடத்தில் பாகுபாடு காட்ட நினைத்ததில்லை. ஏனெனில் அவளது பழைய வீதியில் அந்தஇவர்களுக்குஇடமில்லை. ஆனால் இப்போது இவர்கள் பயன்படுத்தும் அந்தப்பாதையையும் தடுத்துவிட நினைத்துவிட்டாள்

எப்படி தடுப்பது என்று ஆரம்பத்தில் சில நாட்கள் யோசனையிலியே இருந்தாள். அந்த நெட்டு வழித்தடத்தில் அவர்களது ஓட்டு வீடுவரை ஒரு வீதியைப்போல காட்சியளித்தது. அதற்கு மேல் இருக்கின்ற தடம் சுருங்கி பொழிக்கரைப்போல இருந்தது. அந்த அமைப்பை பார்த்துவிட்டு திட்டமிட்டுக்கொண்டாள். இரவு நேரங்களில் அவ்வபோது தனது இயல்பில் அங்கலாயித்து கொண்டாள். அதை கரியன் காண்கிறானா என்றும் கவனித்துக் கொண்டாள். கரியன் சாப்பிடுகையில்

குடி வந்த எடமுன்னு நெனச்சா இது ஒண்ட வந்த எடமால்ல இருக்கு. ஒண்ட வந்தா எடத்தயும் காணம், ஓட்ட வுழுந்த கொடத்தையுங் காணம். கேக்குறவங்க கேட்டாதான பாடுறது பாட்டா ஆவும். ஹ்ம்..!’ என்று அங்கலாயித்துவிட்டு சென்றாள். அதைக்கேட்ட கரியன்

பொடி வச்சி பேசாதடி பொசக்கெட்டவளே. என்ன வேணுன்னு நேராச் சொல்லு,’ என்றான்

வாசத்துக்கு எடமுன்னு வாசப்படியிலயே குந்திக்கிட்டிருக்க முடியாது. முன்னாடி கூடம் எறக்குங்க. கண்டதெல்லாம் வாசல்ல போவுது,’ என்றாள்

அவளது எண்ணம் என்ன என்று புரிந்துகொள்ள அவனுக்கு தடையேதுமில்லை. அவனுக்குள்ளும் இருந்த பாகுபாட்டு மனநிலை வேலை செய்ய ஆரம்பித்தது. சில நாட்கள் கழித்து வழியில் பாதியை சிமெண்ட் அட்டைகளை இறக்கி ஆக்கிரமித்து கொண்டான். மீதி பாதியிலும் மாட்டைக் கட்டிவிட்டார். அவை நடுத்தடத்தில் இருந்ததால் அந்த வழியாகப் போகிறவர்கள் வருகிறவர்கள் என அனைவருக்கும் பயம் இயல்பாகவே இருந்தது. யாராலும் பயமின்றி அவ்விடத்தைக் கடந்து செல்ல முடியாததைக் கண்டு ஆனந்தப்பட்டாள் அங்கம்மா

இது பல நாட்களுக்கு தொடர்ந்தது. அவர்களது முன் கூடாரத்தில் பிறகு இரண்டு நாய்களைக் கட்டி வைத்தான் கரியன். அதுவுமின்றி சில நாட்களில் நாய்களை கட்டாமல் அவிழ்த்த நிலையிலேயே விட்டுவிடுவான். அந்த சமயத்தில் அவ்வழியாக யாரும் சாதாரணமாக சென்றுவிட முடியாது. நாய்கள் யாருமில்லையென்று மறைவாக ஓரிடத்தில் படுத்து கொள்ளும்போது, அது தெரியாமல் யாரேனும் அவ்வழியில் வந்துவிட்டால் போதும். ஒரே நொடியில் இரண்டு பக்கமும் நாய்கள் திடீரென்று பாய்ந்து வந்து குரைத்து பயமுறுத்தும். அவற்றின் குரைக்கும் சத்தம் இடைவெளியே இல்லாமல் இருக்கும். அந்த நேரத்தில் அந்த நாய்களிடம் மாட்டியவர்களுக்கு நீருக்குள் தங்களைப்போட்டு முக்கியதைப்போன்று இருக்கும். நாய்களைவிட்டு ஓடி வந்தாலும் பின்னால் துரத்திக்கொண்டு வரும். ஆக, அவ்வழியில் யாரும் அவ்வளவு எளிதில் இவ்வீட்டினைக் கடந்து சென்றுவிட முடியாது. இது நாளாக நாளாக அவர்களுக்கு முழு அதிகாரமாக மாறியதுபோல தோன்றியது. பொதுவழியொன்றை மறைக்க முயற்சிக்கும் திட்டத்தில் ஓரளவு வென்றிருந்தனர் என்றுதான் சொல்ல வேண்டு்ம். பள்ளிக்கு சென்று வரும் மாணவர்களுக்கு பயத்தை அள்ளி அள்ளி ஊட்டின அந்த நாய்கள்

ஒருமுறை பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்த ஒரு மாணவி அவ்வழியே வரும்போது நாய்களைக் கட்டி வைத்திருக்கும் இடத்தில் காணவில்லை. எனவே சீக்கிரம் இந்த இடத்தைவிட்டு கடந்துவிடலாம் என்று ஓட்டநடைப்போட்டு வந்தாள். நாய்கள் அம்மாணவியை திடீரென பின்னிருந்து பெரும் சத்தமிட்டு குரைக்க, பயத்தில் அந்த மாணவி ஓடாமல் அப்படியே கத்திக்கொண்டும் தலையைக்குனிந்து கொண்டும் உட்கார்ந்து கொண்டாள். நாய்களின் இடைவெளியற்ற குரைப்பில் கொஞ்சம் விட்டிருந்தால் மாணவிக்கு பயத்தில் ஒன்னுக்கு வந்திருக்கும். நல்லவேளையாக பக்கத்து வீட்டார் நாய்களை அதட்டி துரத்திவிட்டனர். அங்கிருந்த ஒரு பெண்மணி அம்மாணவியைத் தேற்றி எழுப்பினாள்

நாய் வளக்குறாங்க நாய், ஊர்ல இல்லாத நாயி. ஒரு மனுசர போவ வுடுதாஎந்நேரமும் பயமுறுத்திக்கிட்டே இருக்குங்க. கட்டி வச்சாத்தான் என்ன.?’ என்று சொல்ல, அதைக்கேட்ட அங்கம்மா, இதற்காகவே காத்திருந்ததுபோல தயாராக இருந்தாள்

ஊரிலிருக்கறவங்கள கொலச்சா உனக்கு என்னாடி நோப்பாளம் வந்துச்சி.. வாயில்லா ஜீவன், அது பாட்டுக்கு வூட்டக் காப்பாத்திக்கிட்டு கெடக்குங்க. அதப்போயி வாயிலப்போட்டு வணக்குறியே, வாயி கோனிக்கப் போவுதுடி. அதுதான் தாருலயே நீட்டிவுட்டு வச்சிருக்காங்கல்ல, அதுலயே போக வேண்டியதுதானே.. இந்த கரியன் வூட்டு வாசல்மேலத்தான் போவுனுங்குதா.?’ என்றாள் அங்கம்மா. பேச்சு சாக்கிலேயே வழித்தடத்தை தனது சொந்த இடம் என்று பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டாள்

அந்த மாணவியை பிடித்தபடி இருந்த அந்த  பெண்மணி அப்படியெல்லாம் பேச்சு கேட்டதில் வாயடைத்து நின்றாள். அதையே சண்டையில் தான் வென்றதுபோல நினைத்துக் கொண்டவள் இன்னும் வசவிக்கொண்டே சென்றாள். இதுபோல இன்னும் சிலபேர் நாய்களின் கொடூர குரைப்பிற்கு பலியாயினர். அவர்கள் நாய்களைத் திட்ட, அதைக்கண்டு கரியன் திட்டுபவர்களை அடிக்க, இப்படியே அந்த மண்வீதியில் மங்கள காரியங்களும் அரங்கேறியது. ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டும் என்பதே கரியனுக்கும் அங்கமாளுக்கு எண்ணமாயிருந்தது. அப்போதுதான் சட்டைகளைக் காரணங்காட்டி பாதையைகூட அடைத்துவிட முடியும்அப்படி அடைத்துவிட்டால் எவருமே போக முடியாது. அதுதானே வேண்டும் அவர்களுக்கு. எதிர்ப்பார்த்தபடியே சண்டைகள் வந்தன. அதை வைத்தே வழித்தடத்தை அடைக்க நாள் பார்த்துக் கொண்டிருந்தனர். நாளடைவில்தான் அவ்வழி பாதசாரிகளுக்கு புரிந்தது, இந்த வழியே அவர்கள் செல்வது அந்த வீட்டிற்கு புதிதாய் குடிவந்தவர்களுக்கு பிடிக்கவில்லை. அங்கு இதுநாள்வரை யாரும் யாரையும் தடுத்ததில்லை. எவரும் தடுத்து பார்த்ததில்லை. ஆனால் இப்பாதையை விட்டுத்தரவும் முடியவில்லை. நிமிடத்திற்கு நிமிடம் உதவியாக இருக்கும் இந்த வழித்தடத்தை விட்டால் ரெண்டு கிலோமீட்டர் சுற்றுதான் ஒரே வழி

பொதுவழித்தடத்தை மறக்கிறாங்களேஇதுக்குமுன்ன யாரும் தடுக்கலயேகாலாகாலமா இருக்குற தடமாச்சே, அத எப்படி மறைக்கலாமா.? நாய் மாடுனு தடத்துக்கு நடுவாலயே கட்டிவக்கிறதுநாயிங்கள அவுத்து வுட்டுடுறதுயாராச்சும் கேட்டுட்டா போதும் கொழவிக் கூட்டமாட்டம் புடிச்சிக்கிறது. இவங்க மாட்ட யாராவது இழுத்துகிட்டு போனா சும்மா வுடுவாங்களா.? அந்த மாதிரிதான இந்த தடமும்…’ என்று ஒரு முதியவர் ஆதங்கப்பட்டார்

சரியான நேரத்துல பள்ளிக்கொடம் போறதுக்கு இந்த பாததானே உதவியா இருந்துச்சி. இவங்க நாயிங்கள கட்டியும் கட்டாமயும் வச்சிட்டு என்னோட நேரத்த கெடுக்குறாங்களேகாலம்பொற எழுந்ததிலிருந்து பூந்தோட்டம் கட்டுதறினு என் வேலை முடிச்சிட்டு இந்த வழியா போனாதானே சரியா இருக்கும். ஆனா இவங்க வீட்டு பக்கத்துல போனாலே நாயிங்க ரவுண்டு கட்டுதுங்களே. நான் என்ன பண்ணுவேன்.?’ மாணவர்களுக்கு இப்படியாக வருத்தங்கள் ஓடின.

போறப்போக்கப் பாத்தா கரியன் வழியும் என்னது பொழியும் என்னதுனு சொல்லிடுவான் போலிருக்கு..!’ என்று கரியனின் அண்டைவீட்டார் சொல்லிக் கொண்டிருந்தனர். இப்படியாக பேச்சுகள் போய் கொண்டிருந்தன. நாய்களுக்கு புதிதாக ஒரு பழக்கமும் வந்திருந்தது. பாதசாரிகளை குரைத்து துரத்தியும் தூரத்திலேயே அவர்களை வைத்திருப்பதையும் தளர்த்திக் கொண்டு இப்போதெல்லாம் வருபவர்களை வரவிட்டு பக்கத்தில் வரும்வரை அமைதியாக இருந்து, பின்னர் திடீரென அவர்கள்மீது பாய்வதுப்போல போய்ந்து பயமுறுத்தின

ஒருநாள் போலீஸ்காரர் ஒருவர் மஃப்டியில் வந்திருந்தபோது இந்த தடம் வழியாக நடக்க, நாய்கள் இவரிடமும் அதே வேலையைக் காட்டின. எதிர்ப்பார்க்காத வேளையில் நாய்கள் கடிப்பதைப்போலப் பாய்ந்ததால் அந்த போலீஸ்காரருக்கு மனது பதறி, நீரை வாரி இரைத்ததைப்போல மூச்சு முட்டிவிட்டது. தன்னிலை அடைவதற்கே சில நொடிகள் ஆகிவிட்டன அவருக்கு. அதற்கு மேல் சொல்லவா வேண்டும். வீட்டுக்காரர்களைப் பிடித்து தாறுமாறாக கேள்விக்கேட்டு துளைத்தெடுதார்.

ஒழுங்கா கட்டி வச்சிக்க. இல்லன்னா பஞ்சாயத்துல கம்ப்ளெய்ன்ட் பண்ணிருவேன். அப்பறம் எங்கயுமே நீங்க நாய் வளக்க முடியாது. ஜாக்கிறதை..! ஒரு பெல்ட் கூட இல்லாம நாயிங்கள வளக்குற லச்சனம் பாரு. ஊருக்கு தொந்தரவா நேந்துவுட்டு மாதிரி..’  கரியனுக்கா கோபம் தலைக்கேறிவிட்டது. ரெண்டு நாட்களாக நாய்களை கட்டிப்போட்டு சோறு போடாமல் அடித்தான்

போலீஸ்காரங்கிட்டதான் உங்க வரச மயிறப்போய் கட்டுவிங்களா.? கொலச்சதுக்கே கொல்றதுக்கு கம்ப்ளென்ட் பண்ணி தூக்கிருவேன்றாங்க. இதுல உங்களுக்கு பெல்ட் வேற ஒரு கேடு.. ரெண்டு நாளைக்கு சோத்துக்கில்லாம கெடங்க,’ என்று கடிந்தான் கரியன். இதுவரையில்லாமல்  தன் எஜமான் இப்படி நடந்து கொண்டதில் நாய்கள் ஏமாற்றமடைந்தன. இருப்பது யாராயிருந்தால் நாய்களுக்கென்ன.? ஆளைக்கண்டா குரைப்பதே அவற்றின் பணி என்றிருந்த நாய்களுக்கு பட்டினி தண்டணை அதிகம்தான். அதே நேரம் சில தெரு நாய்கள் ஆளில்லாதபோது கட்டியிருக்கும் இவற்றின் மீது பாய்ந்து கடித்து வைத்தன. கட்டியிருப்பது நாய்களுக்கு எதிராக அமைந்துவிட்டன. இதெயெல்லாம் எதேச்சையாக அமைந்துவிட, பொருக்க முடியாத அங்கம்மா பாதசாரிகளை வசைந்து தள்ளினாள். இவர்களது அங்கலாயிப்புக்கு அவர்கள் பொறுப்பாக முடியாதே.!

நாட்கள் இப்படியாக கடந்தன ஊரில் பலர், இந்த பாதை ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதையெல்லாம் கரியன் கண்டுக் கொண்டவனில்லை. வேறு சிலரது குரல்கள் கரியன் இல்லாதபோது நியாயமாகவும் இருக்கும்போது அவனுக்கு சாதகமாகவும் இருந்தன. நேரடியாக பாதை ஆக்கிரமிப்பு தவறு என்று அவனிடம் சொல்ல அஞ்சினர்

இதற்கிடையில் வழித்தடம் தொடர்பாக எழுந்த பேச்சு அவர்களுக்குள் சண்டை வரக் காரணமாகிவிட்டது. அடிக்கடி கரியனும் அங்கம்மாளும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர். யாருடையது பெரியது என்று அங்கம்மாளின் அங்கலாயிப்புக்கும் கரியனின் கோபத்திற்கும் இடையில் போட்டி நிலவியது. இதனால் கரியன் இப்போதெல்லாம் ஒவ்வொருநாளும் அடிக்கிறான் என்றும் அவன் பெரும்கொடுமைக்காரன் என்றும் ஊராரின் மனதில் அவப்பெயரும் வந்துவிட்டது. ஆனால் அங்கம்மாவின் வாயாட்டம் பற்றி ஊரார் கவனிக்கவில்லை. இவர்களது மகன்களும் அம்மாவிடம் சண்டைப் போடாதிங்க என்று  சொல்லிப்பார்த்தனர். ஆனாலும் தங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் போட்டியை விட்டுவிட கரியன் தயாராக இல்லை. ஊரார் முன்பும் மகன்கள் முன்பும் கரியன் கொடுமைக்காரன் என்றப் பெயருக்கு பின்னால் சுயநலமாகத் தன்னை ஒளித்துக் கொண்டாள் அங்கம்மா. ஏனெனில் அவளும் தனது போட்டியை விடவில்லை. எனவே சண்டையும் சச்சரவுமாக இவர்கள் நாட்களைக் கடக்க, கரியன் மீது அவனது மகன்களுக்கு வெறுப்பு தோன்றி கோபமாகவிட்டது

ஒருநாள் இவர்களது சண்டை நடக்கும்போது இரண்டு மகன்களுக்கும் கோபம் தலைக்கேறி கரியனைப் பிடித்து கடைந்துவிட்டனர். இருவரின் சக்திக்கு முன்பு ஈடு கொடுக்க முடியாத கரியன் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டி தள்ளாடி தள்ளாடி எங்கேயோ சென்றான்அவனுக்கு கண்கள் மயங்கின. நெருப்பென கொதிக்கும் உடம்பெங்கும் வலி மின்னி மறைய அப்படியே விழுந்துவிட்டான். நெடுநேரம் அப்படியே கிடந்தவன் கண் முழக்கும் நேரம் அவனைச் சுற்றி குழந்தைகளும் சிலப் பெண்களும் நின்றிருக்கக் கண்டான். உடம்பை அசைக்கவே முடியவில்லை. தாகம் நாக்கைத் தின்றுவிடும் அளவுக்கு இருந்தது. இப்படியே விட்டால் உடலில் நீர் வற்றி உடம்பு சூம்பிப்போகும். மெல்ல எழுந்தான். அங்கே நிற்பவர்கள் ஒருவர்கூட வந்து அவனைத் தூக்கவில்லை. அது ஏனென்று அவனுக்கு தெரியாமலில்லை.  

‘தான் இதுவரைத் தடத்தை தடுத்து வைத்ததே இவர்கள் போகக்கூடாது என்றுதானே. தன்னால் எழக்கூட முடியவில்லை. இவர்கள் தனக்கு உதவுவார்களா.? தனக்கு தண்ணீர் கொடுப்பார்களா.? அல்லது பழி தீர்ப்பார்களா.?

அவனுக்குள் பல எண்ணங்கள் ஓடின. கடினப்பட்டுதான் நெஞ்சைத் தூக்கினான். காண்பவர் கண்களில் இரக்கம் தெரிந்ததே தவிர இவன் இவர்கள்மீது காட்டியதைக் காணவில்லை. அதற்குமேல் அவன் யோசிக்க ஒன்றுமில்லை

தண்ணீ…’ தடுமாற்றமான குரலில் கேட்டான். அங்கிருந்த பெண்கள் சிலர் சொம்பில் தண்ணீர் கொடுக்க வாங்கி குடித்தான். வாயில் கசிந்திருந்த ரத்தம் கரைந்து நீரோடு உட்சென்றது. உடம்பில் தண்ணீர் பட்டதும் கொஞ்சம் சிலிர்த்து தெம்பு வந்தது. குடித்துவிட்டு சொம்பைத் தந்தவன் அந்த இடத்திலிருந்தவர்களைப் பார்த்து மண்ணைத் தொட்டு ஒத்திக்கொண்டான். ஈரமான துணியை வைத்து சிலர் அவனது உடம்பைத் துடைத்துவிட்டனர். காய்ந்திருந்த ரத்தம் துணியில் கரைந்து ஒட்டிக்கொண்டது. நெருப்பென கொதித்த உடம்புக்கு இதமாக இருந்தது. கண்கள் சொருக மீண்டும் மயக்கம்.

அங்கம்மா தன் வீட்டில் தனியே அமர்ந்து கொண்டிருந்தாள். மகன்கள் இருவரும் முன்பிருந்த வீட்டிற்கு போய்விட்டனர். அன்றைய இரவு அவளுக்கு தனிமையில் கழிந்தது. மறுநாள் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் கரியன். இருவரும் அப்போது ஏதும் பேசிக் கொள்ளவில்லை. அவனுக்குள் பல எண்ணங்கள் ஓடியலைந்தப்பின் அடங்கிவிட்டன. சில நாட்கள் கழித்து மாடுகளையும் நாய்களையும் வீட்டிற்கு பின்னால் கட்டிவிட்டான். வீதியில் அடைப்பு திறந்ததுபோல இருந்தது.

கரியன் தன் மனைவியை இப்போதெல்லாம் அடிப்பதில்லை. அவனது இயல்பான கோபம் என்பது இப்போதெல்லாம் முற்றிலும் மாறிவிட்டது. அவனது மாடுகளும் அவனோடு இயல்பாக பழகின. இப்போதெல்லாம் எந்த நாய்களும் கரியன் வீட்டிற்கு முன்னால் குரைப்பதில்லை. பாதசாரிகளுக்கு எந்த தொந்தரவும் இல்லை. தடம் முழுக்க கண்ணுக்கு தெரிந்தது. வேலைக்காரர்களும் தங்களது இடம் நோக்கி சீக்கிரம் செல்ல அந்த மண்தடம் உதவியது. மாணவர்கள் யாரும் இரண்டு கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு பள்ளிக்கு தாமதமாய் போகவில்லை. அங்கம்மாவுக்கு எவ்வளவு அங்கலாயிப்பு வந்தாலும் கரியன் முன்பு வீணாகியது. அங்கலாயிப்பதே தனது இயல்பாகிவிட்டதால் மற்றவர் முன்பும் தன்னால் சாதாரணமாய் இருக்க முடியாமல் போனது அங்கம்மாவுக்கு. இதைக்கண்ட இரண்டு மகன்களுக்கும் தாங்கள் இப்போது என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் இருந்தனர்.

யார் எப்படி இருந்தாலும், மண்ணாலான அந்தப் பொது வழித்தடமும் பொழிக்கரையும் தனது பாதசாரிகளின் கால்களுக்கு என்றும்போல தனது குளிர்ச்சியினால் இதமூட்டிக் கொண்டிருந்தன.


கார்த்தி டாவின்சி©

  

ஆசிரியர்

கார்த்தி டாவின்சி

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page