“உனக்கு நம்ம காலனியிலே இருந்த வைரமணி அண்ணனை ஞாபகமிருக்கு தானே? அவர் பொண்டாட்டி விட்டிட்டு போயிட்டாளாம்.” ரவியின் வாழ்க்கையின் ஆழத்தில் புதைந்திருக்கும் வேர்களை உயிர்ப்பித்து வைப்பதில் பெரும் பங்காற்றும் அம்மா, அவனின் மாதாந்திர வருகையின் போது சொன்னார். பெரும்பாலும் வீட்டில் அடைந்து இருக்கும் அம்மாவின் தகவல் தொடர்பு அமைப்பு எப்படியோ செய்திகளை அவளின்பால் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தது. அவன் ஆளுமையில் அந்த நாட்களின் பல நிகழ்வுகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தாலும் அவற்றை நினைக்க தூண்டுவது பெரும்பாலும் அம்மாவாகத் தான் இருந்தாள்.
பிறந்ததிலிருந்து வாடகை வீடுகளில் வாழ்ந்து வந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு அந்தக் குடியிருப்பில் வீடு கிடைத்ததில் பெருமை கலந்த மகிழ்ச்சி. வீட்டு உரிமையாளருக்கும் குடியிருப்பவருக்குமான உறவிலிருக்கும் சுமுகம் நாள்பட எப்படியும் குறைந்து விடுகிறது. வயது முதிர்ந்தவர்கள் இதை சாதாரணமாக கடந்து விடுவதுபோல் தெரிந்தாலும் குழந்தைகளுக்கு இது பெரிய மன அழுத்தம் அளிப்பது தான். அதிலும் குடியிருப்பில் பல வீடுகள் இருப்பின் அங்கு நிலவும் குழு அரசியலும் அது தொடர்பான மறைமுகப் பழி வாங்கல்களும் அந்த இளம் மனதில் மறைக்க முடியா வடுக்களாக படிந்து விடுகின்றன.
காலம் காலமாக குடம் கணக்கில் அளந்து அளிக்கப்படும் உப்புத் தண்ணீரும் சில கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்து சைக்கிளில் கயிற்றில் இணைந்து தொங்கும் குடங்களில் எடுத்து வரப்படும் நல்ல தண்ணீரும் பயன்படுத்தி வந்த அவர்களுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் நல்ல தண்ணீர் அனைத்து உபயோகங்களுக்கும் அளவற்று கிடைக்கும் என்பது நம்ப முடியாததாக இருந்தது. குடியிருப்பினை திறந்து வைத்த அமைச்சர் இனி மேல் தண்ணீர் பிரச்சனை காரணமாக கேரளாவைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு பெண் கொடுக்கத் தயங்கியவர்கள் வலிய வந்து சம்பந்தம் பேசுமளவுக்கு தண்ணீர் விநியோகம் தடையின்றி இருக்கும் எனச் சொன்னதாக ரவியின் அப்பா பெருமை பொங்க சொன்னார். எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டுடன் இணைந்த நவீனக் கழிப்பறை, ஒரு மருத்துவ மனையின் சூப்பர் டீலக்ஸ் அறை ஒன்றில் மட்டுமே அவன் கண்டிருந்த சொகுசாக இருந்தது. .
புது இடம் என்றாலும் குடியிருப்பின் ஒரே தொகுப்பில் இருக்கும் அனைவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்பதாலேயே ஒரு நிறுவப்பட்ட அன்னியோன்னியம் நிலவியது. அதிலும் பெண்கள் தான் இந்தச் சூழலை மிகவும் அனுபவித்து கொண்டாடினர். மேலாகப் பாரக்கும்பொழுது எல்லாம் மிகவும் இணக்கமாகத் தெரிந்தாலும் ஒவ்வொரு குடும்பமும் தங்களின் வாழ்வு தான் சிறப்பானது என நிறுவ முயல்வது நுட்பமான பார்வைக்கு தெரிந்து விடும்.
“ஏய், ரவி வர்றாப்பிலே சீக்கிரம் எழுந்து வழி விடுங்கடி.” என சரஸ்வதி அக்கா சொல்லவும் மாடிப்படியில் அமர்ந்து கதையடித்துக் கொண்டிருந்த பெண்கள் அவசரமாய் எழுந்து ஒதுங்கி நின்றனர். அவன் மையமாக அனைவரையும் பார்த்தாலும் யார் முகத்திலும் பார்வை நிலைக்காமல் மெல்லிய இதழ் நெகிழ்வுடன் விரைவாக அனைவரையும் கடந்து சென்றான். மிகவும் உள்ளொடுங்கிய ரவியின் வாழ்வின் மீது ஒரு தவறான, மிகையான, அறிவுஜீவி பிம்பம் கடமைக்கப் பட்டிருந்தது.
“ரவீ, வேலைக்கா?” தரை தளத்தில் வைரமணி அண்ணன் நின்றுக் கொண்டிருந்தார்.
“ஆமாண்ணா.”
அண்ணனுக்கு அவனை விட ஒன்றிரண்டு வயதாவது அதிகம் இருந்திருக்க வேண்டும். இளங்கலைப் பட்டம் பெற்று வேலையில் இருந்தார். இருவரும் காலனி வாசிகளிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்து வந்ததாலோ என்னமோ அவர் தன் மீது தனி வாஞ்சை கொண்டிருப்பதாக ரவிக்குத் தோன்றியது.
ரவி வெளியில் சென்று திரும்பிக் கொண்டிருந்த பொழுது வைரமணி அண்ணன் வீட்டு ஜன்னலிலிருந்து யாரோ பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் அவர்களின் வீட்டு வாயிலை அடைந்ததும், காத்திருந்து திறந்தது போல் கதவினைத் திறந்ததுக் கொண்டு வைரமணி அண்ணன் வந்தார்.
“என்ன ரவீ இப்பத் தான் வர்றீங்களா?” என்றார். எதிர்பாராத இந்தக் கேள்வியினால் திடுக்கிட்டுப் போய் திக்கியவாறே ஆமாம் என்றான்.
“வாங்க டீ சாப்பிட்டு போவீங்களாம்.”
“பரவா இல்லீங்க. வீட்டில போய் சாப்பிட்டுக்கறேன். ” என்று கூச்சத்துடன் தவிர்க்க முனைந்தான்.
“இன்னைக்கு ஒரு நாள் இங்கே தான் டீ சாப்பிடணும்” என்றவாறே உரிமையுடன் அவன் கையினைப் பற்றி உள்ளே இழுத்தார் அண்ணன். பிடி கொஞ்சம் அழுத்தமாக இருக்கவே அவனும் கூச்சத்துடன் உள்ளே சென்றான்.
“உக்காந்து இதைச் சாப்பிடுங்க, டீ போடறேன். வீட்டில யாரும் இல்லை” என்றபடி ஒரு பிளேட்டில் தயாராக இருந்த சில பிஸ்கட்களை அவன் முன் வைத்து சமையலறைக்குள் சென்றார் அண்ணன். ரவி இருக்கையின் விளிம்பில் அமர்ந்து தயக்கமாக பார்வையைச் செலுத்தினான். வீடு துப்புரவாக இருந்தது. அங்கங்கு அந்த நாட்களில் பிரபலமாக இருந்த பிளாஸ்டிக் ஓயர் பின்னல்களில் பூ ஜாடி, நாய்க்குட்டி போன்றவை செய்து வைக்கப்பட்டிருந்தன.
“எல்லாம் அழகா இருக்கா? நான் போட்டது” என்று ஒரு தம்ளரில் டீ கொண்டு வைத்தார் அண்ணன்.
“அய்யே என்ன பிஸ்கட் தொடக் கூட இல்ல” என்றபடி ஒரு பிஸ்கட் எடுத்து அவனுக்கு ஊட்டி விட முயன்றார். கைவிரல் நகங்களுக்கு உறுத்தும் சிவப்பில் வண்ணம் தீட்டியிருந்தார். அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து யாரும் இவ்வளவு அன்போடும் உரிமையாகவும் ஊட்டியதில்லை. அவசரமாக டீ குடித்து வெளியேறித் தப்பினான் ரவி.
வழக்கம் போல தன் வெளியுலகத் தொடர்பாளர் அம்மாவிடம் அவர்களைப் பற்றி விசாரித்தான். அண்ணனும் பெற்றோரும் மட்டும் தான் இப்பொழுது அவர்கள் வீட்டில். அவரின் அண்ணன் ஒருவர் திருமணமாகி இவர்களுடன் தங்கியிருந்தார். வைரமணி அண்ணனுடன் ஏதோ தகராறு ஆகி தனியாக போய் விட்டதாக பக்கத்து வீட்டினர் சொன்னார்களாம்.
இந்நிகழ்வுக்குப் பின் வைரமணி அண்ணன் அடிக்கடி அவன் கண்களில் தென்பட்டார். நெஞ்சைக் குறுக்கி தலையினை ஒரு பிரத்யேக தாளத்தில் ஆட்டி அவர் நடப்பது சிறிது வித்தியாசமாக இருந்தது. அவர் நெற்றியில் சின்னதாக சிவப்பில் வட்டப்பொட்டு இட்டுக் கொள்வதும் அவன் கண்டுகொண்டான். இருப்பினும் அவர்கள் நேருக்கு நேர் சந்திப்பது மட்டும் சில நாட்களுக்கு நடக்கவில்லை.
ரவி நண்பர்களுடன் திரைப்படம் பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அதிசயமாக வைரமணி அண்ணன் வீட்டுக் கதவு திறந்திருந்தது.
“வெளியே போயிட்டு வர்றாப்பிலயா?” என்றார் அண்ணன். பேச்சுக்குரல் கேட்டு அவர்களின் அம்மா வெளியே வந்தார். என்னைக் கண்டதும் அவரின் முகத்தில் பெரிய சிரிப்பொன்று மலர்ந்தது.
“ஃப்ரென்ட்ஸ் கூட சினிமா போனேன்.”
“மரோசரித்ரா பாத்துட்டீங்களா?” என்றார் அண்ணன் ஆர்வமாக.
“ஒ, ஃபிரண்ட்ஸ் கூட போனேன்.”
அவர் முகம் ஏனோ ஒளியிழந்தது போல் தோன்றியது ரவிக்கு.
சில நாட்களுக்குப் பின் அவன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அண்ணனின் அம்மா வெளியே நின்றிருந்தார்.
“ரவீ, இவனைக் கொஞ்சம் அந்தப் படத்துக்கு கூட்டிட்டு போறியா? கேளு கேளு ன்னு என்னை நச்சிக்கிட்டே இருக்கான்.”
“எந்தப் படம்?” என்றான் அவன் புரியாமல்.
“மரோசரித்ரா” என்றார் அண்ணன் பின்னாலிருந்து.”டிக்கெட் நான் போடறேன். கூட வந்தாப் போதும்.”
என்ன சொல்லி தவிர்ப்பது என ரவிக்கு தெரியவில்லை. ஓராண்டுக்கும் மேலாக ஒரே அரங்கில் ஓடிய படம். அவன் பார்த்து கொஞ்சம் நாட்களாகி இருந்தது.
“அடுத்த வாரம் லீவு வருதில்ல, அன்னைக்கு ரிசர்வ் பண்ணறேன்” என்றார். சரி என ஒத்துக் கொண்டான் ரவி.
அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்தே அண்ணன் மிகவும் சந்தோஷமாக இருந்தார். இணைந்து நடக்கையில் விளையாட்டாக அவன் மீது அடிக்கடி மோதிக் கொண்டார். டவுன் பஸ்ஸில் அவர் அருகே இருக்கை காலியானதும் மிகுந்த உறச்சாகத்தோடு கூவி அழைந்து அவனை தன்னுடன் இருத்திக் கொண்டார். திரையரங்கின் வாயிலை அடைந்ததும் டிக்கெட்டினை அவன் கையில் தந்து கை கோர்த்தபடி பின்னால் வந்தார். இருக்கையில் அமர்ந்ததும் ‘சவுரியமா இருக்கா’ என்றபடி அவன் கையினை எடுத்து நடுவே இருந்த கைப்பிடியில் வைத்தார். சிறிது நேரத்தில் ஆசுவாசமாக அவர் சாய்ந்துக் கொண்ட போது அவர் கையும் கைப்பிடியின் பக்கம் நெருக்கமாக இருந்தது. விளம்பரப் படங்கள் முழுக்க அவனை தொட்டுத் தொட்டு பேசிக் கொண்டே இருந்தார்.
படம் துவங்கியதும் மிகவும் அமைதியாகி விட்டார். அது ஒரு துயரமுடிவு கொண்ட தீவிர காதல் கதை. ஆரம்பத்தில் இருந்த காதல் காட்சிகளின் போது மிகவும் இரசித்து அவன் தோளில் தலையை மோதி சத்தமின்றி சிரித்துக் கொண்டிருந்தார். இடைவேளையின் பொழுதே படத்தில் பிரச்சனைகள் ஆரம்பமாகியிருந்தது. இடைவேளையின் பொழுது மிகவும் சோர்ந்து இருந்தார். அவர்கள் இருக்கைகளிலேயே இருந்தனர். படம் நல்லாருக்கு இல்லே என மீண்டும் அவனுடன் கை கோர்த்துக் கொண்டார். இடைவேளை முடிந்தும் அவர்களின் கைகள் பிணைந்தே இருந்தன.
காதலுக்கு வந்த சோதனைகளினால் நாயகனும் நாயகியும் தவித்துக் கொண்டிருந்தனர். அரங்கின் பல இடங்களிலிருந்தும் அடக்கிய விம்மலகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. அண்ணன் அவன் தோளில் சாயந்தார். சிறிது நேரத்தில் அவரின் கண்ணீரின் ஈரம் அவன் சட்டையினை நனைத்தது. அவரின் உடல் கட்டுப்பாடற்று குலுங்கத் துவங்கிய நேரம் “ரவீ போலாங்க” என்றார் கம்மிய குரலில். அரங்கின் அரையிருட்டில் அனைவரின் கவனத்தினையும் ஈர்த்து வெளியேறுவது அவனுக்கு உவப்பானதாக இல்லை.
“இன்னும் கொஞ்சம் நேரம் தான். படம் முடிஞ்சுடும்” என்றான். சிறிது நேரத்தில் அண்ணனிடம் இருந்து ஒரு கேவல் வெடித்து வெளி வந்தது.
“ரவீ ப்ளீஸ், போலாங்க” என்ற பொழுது அவர் கட்டுபடுத்த முடியாமல் அழுதுக் கொண்டிருந்தார். அவனுக்காக காத்திராமல் எழுந்து வெளியேறத் தொடங்கினார். அவன் அவரை தொடர்ந்து செல்ல வேண்டியதாயிற்று. வெளியேறி வெகு நேரம் வரை தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடிந்து கொண்டிருந்ததைத் துடைத்துக் கொண்டு வந்தார். திடீரென
“ஒரு காப்பி சாப்பிடுவோமா?” என்றபடி அவன் இடுப்பில் கை போட்டு அணைத்துக் கொண்டார். அவனுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. எனினும் அவரின் கையினை விலக்க தைரியம் வரவில்லை. காப்பி குடித்துக் கொண்டிருக்கையில்
“ரொம்ப தாங்க்ஸ் ரவி. நான் யார் கிட்டையும் இப்படி நடந்துகிட்டதில்லே” என்றார் சோகமாக புன்னகைத்தபடி.
வீட்டிற்கு சென்றவுடன் அவன் அம்மாவிடம் சொன்னான்
“சமதிங்க் இஸ் ராங்க் வித் ஹிம்.”
அதன் பிறகு வெகு நாட்கள் அவர் அவன் கண்ணில் படவே இல்லை. திடீரென ஒரு நாள் அவர்கள் வீட்டைக் காலி செய்து சென்று விட்டனர்.
எழுதியவர்
- கோவையைச் சார்ந்தவர் அரவிந்த் வடசேரி , இவர் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து அளிக்கும் மலையாளம் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் ஆவநாழி இதழில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இருவாட்சி இலக்கிய மலர், கலகம் மற்றும் தாய்வீடு இதழ்களிலும் இவரது கதைகள் வெளியாகி உள்ளன.
இதுவரை.
- கதைகள் சிறப்பிதழ் 2023 - II3 September 2023அடையாளங்கள்
- சிறுகதை31 January 2022வைரமணி
தொடுதல் ஒரு நுணுக்கமான மொழி. ஒலி மூலம் உணர்த்த முடியாத செய்திகளை எளிதாக கடத்துவதற்கான ஸ்பரிசம் சில நேரங்களில் குழப்பமான விபரீதமான புரிதலுக்கும் வழி ஏற்படுத்தி விடக் கூடியது. வலுவான கதையாடலுக்கான கருவை தேர்ந்தெடுத்திருப்பது சிறப்பு. அதே சமயம் அதை பிரதிபலிக்க கூடிய இரண்டு கதாபாத்திரங்களின் பிரதிபலிப்பு தெளிவின்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துகள்…
நன்றி. முயல்கிறேன்.
LGBTQ கதை. சிறப்பாக எழுதபட்டிருக்கிறது. இது போன்ற தீம்ல அதிகம் எழுத தேவை இருக்கு.
நன்றி
வித்தியாசமான களம். வைரமணி அண்ணனின் சோகம் மனைவியை இழந்ததாலா, ரவியின் மீதான ஈர்ப்பு வேறு விதமானதா என்பதை வாசகரின் சிந்தனைக்கே விட்டு விட்டது நல்ல உத்தி. வாழ்த்துகள்!
நன்றி