20 January 2025
kalaiyarasi sp

ஒரு காடு. அங்கே கண்ணைக் கவரும் பல வண்ணப் பூக்கள். அந்தப் பூக்களில் தேன் குடிக்கப் பல வண்ணத்துப் பூச்சிகள் வந்தன. அவை மஞ்சள், சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களில் இருந்தன. 

அவை ஒற்றுமையாக இல்லை. வேறு வேறு நிறம் காரணமாக, அவை பிரிந்து இருந்தன. மஞ்சள் வண்ணத்துப் பூச்சி ஒரு குழு; சிவப்பு ஒரு குழு; வெள்ளை ஒரு குழு; நீலம் ஒரு குழு என நான்கு குழுக்கள் அங்கே இருந்தன. காடு நான்கு பகுதியாகப் பிரிந்தது. ஒவ்வொரு பகுதியிலும், ஒரு குழு வசித்தது. 

ஒரு நாள் ஒரு கறுப்பு வண்ணத்துப்பூச்சி (Black Swallowtail) பூக்களில் தேன் குடிக்க அங்கே வந்தது. அதன் உடலில் நீலம், சிவப்பு, சந்தன மஞ்சள் என பல வண்ணப் புள்ளிகள் இருந்தன. கறுப்பு உடலில் வெள்ளைப் புள்ளிகள் பளீர் என்று தெரிந்தன. 

“நீ யார்? கறுப்பாக இருக்கிறாய்! எதற்காக இங்கே வந்தாய்? உன்னை நாங்கள் இது வரை பார்த்ததே இல்லையே?” என்று ஒரு வெள்ளைப் பூச்சி கேட்டது.  

“கூட்டுப் புழுவாக இருந்தேன். இன்று தான் வெளியே வந்தேன். ரொம்ப பசிக்குது. எனக்குத் தேன் வேணும்” என்றது கறுப்பு அழகன்.

இங்கே நீ தேன் குடிக்க முடியாது. நீ கறுப்பு. நாங்கள் வெள்ளை. இது எங்கள் பகுதி. உன்னை நாங்க சேர்க்க மாட்டோம்” என்றது ஒரு பூச்சி. 

“என் நிறம் கறுப்பு தான். நான் வெள்ளை இல்லை தான். ஆனால் நானும் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன் தான்; தயவு செய்து, என்னையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சியது கறுப்பு அழகன்.  

“முடியாது. நீ எங்களோடு சேர முடியாது; வெளியே போ” என்றன வெள்ளைப் பூச்சிகள். 

கறுப்பு அழகன் இன்னொரு பகுதிக்குச் சென்றது. அங்கே மஞ்சள் பூச்சிகள் வரக் கூடாது என்று விரட்டின. அது காட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றது. ஆனால் கறுப்பு நிறத்தைக் காரணம் காட்டி, எந்தக் குழுவும் அதைச் சேர்க்கவில்லை.

“வித்தியாசமாக இருப்பது, என் தவறா?” என்று வருத்தப்பட்டது, கறுப்பு அழகன். பின்னர் பக்கத்து மலைக்குப் பறந்து போனது. அங்கே தனியாக வசித்தது. சில நாட்கள் கழிந்தன.

குளிர்காலம் வந்தது. ஒரு நாள் காலையில் கடுமையான பனி பெய்தது. மலை மேலே இருந்த கறுப்பு அழகன், கீழே குனிந்து பார்த்தது. காடே தெரியாமல், பனி மூடி இருந்தது.

காட்டில் இருந்த வண்ணத்துப் பூச்சிகளுக்குக் குளிர் தாங்கவில்லை. வெள்ளையாகப் பனி மூடி இருந்தது. அதனால் காட்டை விட்டு வெளியே வர வழி தெரியவில்லை. அவை குளிரில் நடுங்கித் தவித்தன.

கறுப்பு அழகன் தன் இனத்துக்கு உதவ நினைத்தது. காட்டுக்குப் பறந்து போனது. வெள்ளைப் பனியில், அதன் கறுப்பு நிறம், பளிச்சென்று தெரிந்தது.  

“நண்பர்களே! எல்லோரும் என் பின்னால் வாருங்கள். எனக்கு நன்றாக வழி தெரியும். நான் உங்களை வெளியே கூட்டிப் போகிறேன். ஒருவர் முதுகை ஒருவர் பிடித்துக் கொள்ளுங்கள். யாரும் வழி தவறிப் போகாமல் வெளியேறலாம்” என்றது கறுப்பு அழகன்.

உடனே எல்லாப் பூச்சிகளும், கறுப்பு அழகன் சொன்னது போல் செய்தன. ஒரு நீண்ட சங்கிலி போல், அவை வரிசையாக நின்றன. கறுப்பு அழகன் முன்னே பறந்து போனது. அதைப் பார்த்துக் கொண்டே, எல்லாம் காட்டை விட்டு வெளியே வந்தன. 

பறந்து பறந்து, ஒரு புல்வெளிக்கு வந்து சேர்ந்தன. அங்கே லேசாக வெயில் காய்ந்தது. காட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது, ஒரு வெள்ளைப் பூச்சியின் முதுகை, மஞ்சள் பூச்சி பிடித்து இருந்தது. மஞ்சள் பூச்சியைச் சிவப்புப் பூச்சி பிடித்து இருந்தது. எல்லா நிறப் பூச்சிகளும், சங்கிலித் தொடரில் மாறி மாறி நின்றன.

தங்களைப் பத்திரமாக வெளியே கூட்டி வந்த கறுப்பு அழகனுக்கு, எல்லாம் சேர்ந்து நன்றி கூறின. “சேர்த்துக் கொள்ள மாட்டோம்!” என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்டன. 

“நீ வெள்ளையாய் இருந்திருந்தால், எங்களுக்கு உதவி செய்து இருக்க முடியாது. நாங்கள் குளிரில் நடுங்கிச் செத்து இருப்போம். இனிமேல் நிற பேதம் பார்க்க மாட்டோம்; ஒற்றுமையுடன் ஒன்றாகச் சேர்ந்து இருப்போம்” என்று எல்லாப் பூச்சிகளும் உறுதி கூறின. 

“நண்பர்களே! நாம் நிறத்தால், வேறு பட்டவர்கள். ஆனால் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். வானவில்லை ஏன் அழகு என்கிறோம்? அதில் பல வண்ணம் இருப்பதால் தானே? நம் றெக்கையில் வேறு வேறு வண்ணங்கள் உண்டு. அந்த வேறுபாடு தான் அழகு!” என்றது கறுப்பு அழகன்.

“ஆமாம். உண்மை தான்; வேறுபாடு தான் அழகு!” என்றன எல்லாம், ஒரே குரலில். 

எல்லாப் பூச்சிகளும் குளிர் காய, வானத்தில் வரிசையாகப் பறந்தன. அந்தக் காட்சி ‘வண்ணத்துப்பூச்சி வானவில்’ போல் அழகாகத் தெரிந்தது.


 

எழுதியவர்

ஞா. கலையரசி .
ஞா.கலையரசி காரைக்காலில் பிறந்து, புதுச்சேரியில் வசிக்கிறார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், பணி செய்து ஓய்வு பெற்றவர். ‘மந்திரக்குடை’, ‘பூதம் காக்கும் புதையல்’, ‘பேய்த்தோட்டம்’, ‘நீலமலைப்பயணம்’, ‘சூரியனைத் தேடி’, ‘டைனோசர் சொன்ன கதை’ என்ற சிறுவர் நூல்களின் ஆசிரியர். தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை இவரது நான்கு சிறார் கதை நூல்களை வெளியிட்டுள்ளது. ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தின் ஆசிரியர் குழுவிலும், ‘பூஞ்சிட்டு’ எனும் சிறுவர் மாத மின்னிதழின் ஆசிரியர் குழுவிலும், இணைந்து பணியாற்றுகிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x