20 January 2025
sp pb

ருணுக்கு எப்போதும் தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து படிப்பது ரொம்பப் பிடிக்கும். அவனுடைய வீட்டின் பின்புறம், மா,  எலுமிச்சை,சப்போட்டா,  கொய்யா, முருங்கை , வேப்பமரம், புங்க மரம் , மகிழ மரம் என்று பல மரங்கள் இருந்தன.

இந்த மரங்கள் எல்லாம் அவன் அப்பா நட்டு வைத்து, வளர்த்து வருபவை. அருணுக்கும் இதில் ஆர்வம் அதிகமாகி அவனும் அப்பாவுடன் இணைந்து மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டினான். அவனுடைய அப்பா பாலு ஒரு பறவை  ஆர்வலர்.

மரங்களை வளர்த்தால் பறவைகள் நம்மைத் தேடி வரும் என்பார்.  மரங்கள் நிறைய அவனுடைய வீட்டில் இருப்பதால் ,   கிட்டத்தட்ட  40 வகைப் பறவைகள், அவனுடைய  வீட்டிற்குத் தினமும் வந்து செல்லும்

வேப்ப மர நிழலில் அமர்ந்து அருண்  படித்துக் கொண்டிருந்தான்.  திடீரென்று ஒரு  முனகல் சத்தம் கேட்டது. எங்கிருந்து சத்தம் வருகிறது? என்று பார்த்தான்.

கிழக்குப் பகுதியில் இருந்த  மாமரத்தின் அருகில் இருந்து சத்தம் கேட்டது. அருண் புத்தகத்தை மூடி வைத்தான். எழுந்து அங்கு சென்றான்.

அங்கு ஒரு பெரிய பறவை காலில் அடிபட்டு விழுந்து கிடந்தது. இதுவரை அந்தப் பறவையை அவன் பார்த்ததில்லை. கழுகு போன்று அவனுக்குத் தோன்றியது.

அடி பட்டப் பறவைக்கு உணவும் நீரும் வைத்தான். என்ன முதலுதவி செய்வது ? என்று அவனுக்குத் தெரியவில்லை. உடனே அப்பாவை அலைபேசியில் அழைத்தான். ஒரு புதிய பறவை அடிபட்டு, மாமரத்தின் அருகில் விழுந்து  கிடக்கும் விவரத்தை அப்பாவிடம் சொன்னான்.

அப்பாவின் அலுவலகம் வீட்டுக்கு  அருகில்தான் இருக்கிறது. அப்பா  பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விட்டார்.

அருண் அவருக்காகக் காத்திருந்தான். இருவரும் வீட்டின் பின்புறத்திற்கு வந்தனர். அடிபட்ட பறவை இருந்த இடத்திற்கு அருண் அப்பாவை அழைத்துச் சென்றான்.

அப்பா அந்தப் பறவையை ஆச்சரியமாகப் பார்த்தார்.

உடனே அருண்

” அப்பா நான் இதுவரை இந்த பறவையைப் பார்த்ததில்லை. இந்த பறவையோட பேரு என்னப்பா?” என்று கேட்டான்.

” அருண். இதன் பெயர் பாறுக் கழுகு” என்று சொன்னார்.

” இது எப்படி இங்க வந்தது?”  என்று ஆச்சரியப்பட்டார்.

” ஏம்பா இந்த பறவை இங்கெல்லாம் வராதா?” என்று கேட்டான்.

” இல்ல கண்ணா இந்த பறவை அழிவின் விளிம்பில் இருக்கு. நம்ம தமிழ்நாட்டுல நீலகிரி மாவட்டத்துல தான் அதிகமாக இருக்கிறது..அதுதான் இங்கு எப்படி வந்தது?  என ஆச்சரியப்பட்டேன் ” என்றார்.

” அழிவின் விளிம்பில் இருக்கா? புரியலப்பா விவரமா சொல்லுங்க.” என்றான்.

” முதலில் இந்தப் பறவையோட பாதுகாப்பை உறுதி செய்யலாம். இங்கிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பறவை பாதுகாப்பு மையம்  இருக்கு. அங்க இந்தப் பறவையை ஒப்படைச்சிட்டு வரலாம். பிறகு நான் இந்த பறவையைப் பத்திச்  சொல்றேன்” என்று அப்பா சொன்னார்.

அவர்கள் காரமடைக்கு அருகில் உள்ள, புஜங்கனூர் என்ற கிராமத்தில் வசித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்து மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஒரு பறவை ஆர்வலரிடம் இந்தப் பாறுக் கழுகை ஒப்படைத்து விட்டு வந்தனர்.

வீட்டுக்கு வந்த உடனேயே அருண்   பாறுக் கழுகைப் பற்றி மீண்டும் கேட்க ஆரம்பித்து விட்டான்.

“இந்த கழுகின் பெயர் பாறுக் கழுகு. இதனை கிராமங்களில் பிணந்தின்னிக் கழுகு, அழுகுண்ணி கழுகு என்பார்கள்.”

” பிணந்தின்னி கழுகா? அப்பா பேருல இருந்து எனக்கு ஒரு விஷயம் புரியுது. இந்தப் பறவை இறந்து போன விலங்குகளைச்  சாப்பிடுமாப்பா?”

” ரொம்ப சரிப்பா. இந்த வகைக் கழுகுகள், இறந்த விலங்குகளோட உடலைச் சாப்பிடும். இதுக்கு இன்னொரு பெயர் கூட இருக்கு தெரியுமா?” என்று கேட்டார்

” எனக்கு தெரியலங்கப்பா. நீங்களே சொல்லுங்க” என்றான் அருண்.

” காட்டின்  இயற்கைத் துப்புரவுப் பணியாளர்கள் அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது இறந்த உடல்கள் அப்படியே இருந்ததுன்னா பலவகை பாக்டீரியாக்கள் உருவாகும். அந்த பாக்டீரியாக்களால் நிறையத் தொற்று நோய்கள் உருவாகும். இறந்த உடலை இந்தக் கழுகுகள் சாப்பிடறதுனால, பாக்டீரியாக்கள் உருவாவது கட்டுப்படுத்தப்படுது. ” என்று அப்பா சொன்னார்.

” கேட்கவே ஆச்சரியமா இருக்குப்பா.  இயற்கையில் ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு காரணத்துனால தான் படைக்கப்பட்டிருக்கு. இல்லையா ப்பா?” என்று கேட்டான்.

” ரொம்ப சரிடா கண்ணு. ஒவ்வொரு உயிரும் மறைமுகமாக இன்னொரு உயிரை நம்பி இருக்கு. அதைத்தான் நாம உணவுச் சங்கிலி ன்னு சொல்றோம்.” என்றார் அப்பா.

” ஆமாம் பா . அறிவியல் படத்துல கூட இந்த வார்த்தையை  நான் படிச்சிருக்கேன்.

அது சரி இந்தப் பறவையை அழிவின் விளிம்பில் இருக்குன்னு சொன்னீங்களே?” என்று கேள்வி கேட்டான் அருண்.

” ஆமா அருண். நம்ம இந்தியாவில் 9 பிணந்தின்னிக் கழுகுகள் இருக்கின்றன். தமிழ்நாட்டில் மட்டும் நாலு வகையான கழுகுகள் இருக்கு.  முன்பு லட்சக்கணக்கில் இருந்த இந்தக் கழுகுகள் இப்போ 300க்கும் குறைவாகத்தான் தமிழ்நாட்டுல இருக்கு.”

அருணிடம் உரையாடிக்கொண்டே பின்வரும் தகவல்களைச் சொன்னார்.

இந்த கழுகுகள் அழிவின் விளிம்பில் இருப்பதற்கு , மிக முக்கியமான  மூன்று  காரணங்கள் இருக்கின்றன.  கால்நடைகளுக்கு வலி நிவாரணியாகப் பல மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் டைக்ளோபினாக் என்ற வலி நிவாரணி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அந்த மருந்து மிகவும் ஆபத்தானது.  அதுமட்டுமில்லாமல் அசிக்ளோபினாக், கீட்டோபுரோபேன், புளூநிக்சின், நிமுசிலாய்ட்ஸ் போன்ற மருந்துகளும்  வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த மருந்துகளைத் தொடர்ந்து வலிநிவாரணியாகப்  பயன்படுத்தும் போது, அவை கால்நடைகளின் உடம்பில் எச்சமாகத் தங்கி விடுகிறது.

கால்நடைகள் இறந்தபின் அவற்றை உணவாக இந்தக்கழுகுகள் சாப்பிடுகின்றன. அப்போது கால்நடைகளின்  உடம்பில் இருக்கும் இந்த  மருந்துகள்,  கழுகுகளின் உள்ளுறுப்புகளை முக்கியமாகச்  சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. இதனால் விரைவில் இந்தக் கழுகுகள் இறந்து விடும் அபாயம் ஏற்படுகிறது..

மேலும் இரை பற்றாக்குறையும், இறந்த கால்நடைகளின் மீது தெளிக்கப்படும் நச்சு மருந்துகளும் இந்த கழுகுகள் அழியக் காரணம் என்பதை அருணுக்கு அவன் அப்பா பாலு விளக்கினார்.

” அப்பா எனக்கு ஒரு சந்தேகம். கால்நடைகளுக்கு வலி வந்தா  நிவாரணம் கொடுத்து தானே ஆகணும் ?”

” அது பின் விளைவுகளை ஏற்படுத்தாத மருந்தாகக் கொடுத்தால் நல்லது கண்ணா. ஒரு உயிரினம் மொத்தமா அழிஞ்சிருச்சுன்னா அதனுடைய பாதிப்பு உடனே தெரியாது. சிறிது காலம் கழித்துத்தான் தெரியும். இந்த இயற்கைத்  துப்புரவாளர்கள் அழியறதுனால, கொரோனா போல நிறைய நோய் தொற்றுகள் நமக்கு உருவாகிற அபாயம் இருக்குது.”என்றார்.

” அப்போ எப்படி இந்தக் கழுகுகளை பாதுகாக்கிறது அப்பா?” என்று கேட்டான்.

” இந்தக் கழுகுகளைப் பாதுகாக்கிறதுக்கு அரசாங்கம் இப்போ தீவிரமா முயற்சி எடுத்து இருக்காங்க. நிறைய பறவை ஆர்வலர்களும் இதற்கான தீவிரமான முயற்சியைச் செய்யறாங்க.”

” நம்ம என்ன செய்யலாம் பா? ”

” நம்ம முடிஞ்ச அளவு இயற்கைக்குத்  தீங்கில்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் போதும் கண்ணு.”

அப்போது அம்மா இருவரையும் சாப்பிட அழைப்பது கேட்கிறது.

அருண் ரொம்ப நேரம் ஆச்சு போல.  அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க. வா உள்ளே போகலாம் ” என்று அப்பா சொன்னார்.

நான் பெரியவன் ஆனதும் கட்டாயம் ஒரு பறவை ஆராய்ச்சியாளராக வரணும். நானும் முடிஞ்ச அளவு இந்தப் பறவைகளைக் காப்பாற்றுவேன் என்று மனதுக்குள் நினைத்தபடி அருண் அப்பாவுடன் வீட்டிற்குள் சென்றான்.


 

எழுதியவர்

பூங்கொடி
பூங்கொடி
BE, MBA பட்டப்படிப்புகளை பயின்ற பூங்கொடி கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றியவர். தற்போது கட்டுமானத்துறை வேலையில் அவரின் கணவருக்கு உதவியாக பணிபுரிகிறார்.
குழந்தைகளுக்கான கதை சொல்லியாகவும் திகழ்கிறார் . ‘பூங்கொடி கதைசொல்லி’ என்ற Youtube வாயிலாகவும் , அரசாங்க மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்றும், இணைய வழி நிகழ்வுகள் வாயிலாகவும் கதைகள் சொல்லி வருகிறார்.. கதைகள் வாயிலாக நற்பண்புகள் வளர்த்தல் பயிற்சியில் தமிழ் பாடம் கதைகள் மூலம் கற்பிப்பது எப்படி என்பதை அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார் சுவடு இதழில் மார்பகப் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதியுள்ளேன். இவற்றோடு கல்லூரி மாணவர்களிடம் தன்னம்பிக்கை உரைகள், ஆளுமை பயிற்சிகள் அளித்தவராகவும் திகழ்கிறார். புத்தகங்கள் குறித்தான விமர்சனங்களை தொடர்ச்சியாக சமூக ஊடகங்கள் உள்ளிட்டவைகளில் முன்வைக்கும் பூங்கொடி முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பின் தஞ்சை பிரகாஷ் நினைவு விருது, உலகத் தமிழ் பேரியக்கம் வழங்கிய தங்க மங்கை விருது, முற்போக்கு கலை இலக்கிய மேடையின் கதைசொல்லி விருது போன்ற விருதுகள் பெற்றவர்.

கண்மணிகளின் கலாட்டாக்கள், மந்திரக் கோட் ஆகிய சிறார் இலக்கிய நூல்கள் இவரின் எழுத்தில் வெளியாகி இருக்கின்றன.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x