“அம்மா, அம்மா, நாளைக்கு என்னுடைய பள்ளியில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் தெரியுமா? உணவுத் திருவிழா கொண்டாடப் போகிறோம்” என்று கூறியவாறே மகிழன் வீட்டிற்குள் நுழைந்தான். அதைக் கேட்ட பாட்டி, “என்னது, உணவுத் திருவிழாவா? இது என்ன புதியதாக இருக்கிறது? பொதுவாக நாம் கோவில் திருவிழா, ஊர்த் திருவிழா என கொண்டாடுவோம், ஆனால், இந்த உணவுத் திருவிழா என்றால் என்ன?” என்று கேட்க, அதற்கு மகிழனின் அம்மா பாட்டியிடம், “அம்மா, பள்ளியில் எப்படி ஆண்டு விழா, விளையாட்டு விழா என கொண்டாடுகிறார்களோ, அதே போல் தான் இந்த உணவுத் திருவிழாவும். அந்நாளன்று, பள்ளி மாணவர்கள் அனைவரும் சுவையான விதவிதமான உணவுகளை கொண்டு வந்து அனைவருடனும் பகிர்ந்து உண்டு மகிழ்வர்” என்றார்.
“என்னது, சுவையான உணவை கொண்டு போய் மற்றவர்களோடு பகிர்ந்து உண்பதா, அதைத்தானே இவன் தினமும் செய்து கொண்டிருக்கிறான். ஒவ்வொரு நாளும் அம்மா எனக்கு சப்பாத்தி வேண்டும், பாட்டி எனக்கு பிரியாணி வேண்டும் என்று விதவிதமான உணவுகளை பள்ளிக்குக் கொண்டு சென்று நண்பர்களோடு பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டுதானே இருக்கின்றான். பிறகு, எதற்கு இப்போது இந்த உணவுத் திருவிழா?” என்று பாட்டி கேட்டார்.
அதற்கு மகிழன், “ஆம் பாட்டி, நீங்கள் கூறியது போல், நான் தினமும் என்னுடைய வகுப்பு நண்பர்களோடு சுவையான உணவுகளை பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நாளை நடக்கவிருக்கும் உணவுத் திருவிழாவில் எங்கள் பள்ளிக்கூடத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒன்றாக ஒரு பெரிய அரங்கத்தில் அமர்ந்து மற்ற வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரோடும் உணவை பகிர்ந்து சாப்பிடுவோம்” என்றான்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பு ஒன்றை கொடுத்து விடுவார்கள். அந்த தலைப்பிற்கேற்ப மாணவர்கள் உணவைக் கொண்டு வருவார்கள் என்றான். உடனே மகிழனின் அம்மா அவனுக்கு என்ன தலைப்பு கொடுத்திருக்கிறார்கள் எனக் கேட்க, அதற்கு மகிழன் தன்னுடைய வகுப்புக்கு “இனிப்பு” எனும் தலைப்புக் கொடுத்திருக்கிறார்கள் என்றான்.
உடனே பாட்டி மகிழனிடம், “இனிப்பா, அப்படி என்றால் நீ பாயாசம் கொண்டுச் செல்கிறாயா?” எனக் கேட்க, அதற்கு அவனோ தனக்கு கேசரி தான் வேண்டும் என்றான். முன்பொரு நாள் அவன் நண்பன் ஒருவன் கண்களைப் பறிக்கும் விதத்தில் சுவையான ஆரஞ்சுநிற கேசரியைக் கொண்டு வந்திருந்தாகவும், அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்ததாகக் கூறினான். அதனால் அந்த கேசரியையே செய்து கொடுக்கச் சொல்லி கேட்க, அம்மாவும் பாட்டியும் சம்மதித்தனர்.
மறுநாள் காலை எழுந்து தயாராகி சமையலறைக்குச் சென்ற மகிழன் தன் அம்மாவிடம், “அம்மா, கேசரி செய்து விட்டீர்களா, எங்கே காட்டுங்கள்” என்று கேட்டான். அவன் அம்மாவும், “ஓ, செய்துவிட்டேனே, அதோ அந்த பாத்திரத்தில் பார்” எனக் காட்ட, மகிழனும் மிக ஆசையுடன் அந்தப் பாத்திரத்தை எடுத்துப் பார்த்தான். பாத்திரத்தைப் பார்த்த அவனுக்கு மிகப் பெரிய ஒரு அதிர்ச்சி, உடனே தன் அம்மாவிடம் “அம்மா என்ன இது, நான் கேசரி கேட்டால், நீங்கள் உப்புமா செய்து வைத்திருக்கிறீர்கள்” என்று பாவமாகக் குழப்பத்துடன் கேட்க, அவன் அம்மாவிற்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை.
அம்மா ஏன் அப்படி சிரிக்கிறார் என புரியாமல் நிற்க, அவன் அம்மா, அது உப்புமா இல்லை, அது கேசரி தான் என்றார். அதைக் கேட்ட மகிழன், “என்னது கேசரியா, அது ஆரஞ்சு நிறத்தில்தானே இருக்கும், ஆனால், இது வெள்ளையாய், பார்ப்பதற்கு அப்படியே உப்புமாவைப் போல் இருக்கிறது” என்றான். அதற்கு அவன் அம்மா, அவர் அந்த செயற்கை ஆரஞ்சு நிறத்தைச் சேர்க்காததால் தான் கேசரி வெள்ளையாய் இருக்கிறது என்றார்.
“அம்மா, ஏன் நீங்கள் அந்த ஆரஞ்சு நிறத்தை சேர்க்கவில்லை” என்று மகிழன் கேட்க, அவன் அம்மா அவனிடம் அது போன்ற செயற்கை நிறமூட்டிகள் எல்லாம் உடல் நலத்துக்கு மிகவும் கேடு விளைவிப்பவை என்றும், அதனால்தான் அவர் அதை பயன்படுத்தவில்லை என்றார். உடனே அவன், “அம்மா, நாம் அதை சிறிதளவுதானே பயன்படுத்துகிறோம், அதனால் என்ன ஆகப் போகிறது?” என்று கேட்க, அதற்கு அவன் அம்மா அவனிடம், “மகிழா, ஒரு சிட்டிகை என்றாலும், ஒரு கரண்டி என்றாலும் விஷம், விஷம்தான்” என்றார்.
பிறகு, பள்ளிக்கூடத்திற்குச் சென்ற மகிழன், அனைவரோடும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடத் துவங்கிய போது, எப்படி தன்னுடைய கேசரியை மற்றவர்களுக்கு கொடுப்பது என தயங்கினான். அப்போது அங்கே வந்த அவனது ஆசிரியை, “என்ன மகிழன், இன்னும் உணவை எடுக்காமல் இருக்கிறாய்?” என்று கேட்டவாறே அவனுடைய உணவு டப்பாவை எடுத்து திறக்க அவருக்கு ஒரே அதிர்ச்சி. உடனே மகிழனிடம், “என்ன இது, நான் உன்னை இனிப்பு கொண்டுவரச் சொன்னால், நீ உப்புமா கொண்டு வந்திருக்கிறாய். நம்முடைய வகுப்பிற்கு கொடுத்த தலைப்பை நீ மறந்துவிட்டாயா?” என்று கேட்டார்.
அப்போது அவ்விடத்திற்கு வந்த தலைமை ஆசிரியை சாப்பிடாமல் ஆசிரியரும் மாணவனும் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டவாறே, மகிழனின் உணவை எடுத்து சுவைத்தார். உணவை சுவைத்த அவருக்கு மிகுந்த ஆச்சரியம், “என்ன இது, உப்புமா மிகவும் இனிப்பாக இருக்கிறது!” எனக் கேட்க, அவரருகில் இருந்த மற்ற சில ஆசிரியர்களும் “என்னது, இனிப்பு உப்புமாவா! புதியதாக இருக்கிறதே”, என எடுத்து சுவைத்துப் பார்த்தனர்.
அப்போது மகிழன் அது இனிப்பு உப்புமா இல்லை என்றும் அது கேசரி என்றான். தலைமை ஆசிரியரும், “ஆம், இது கேசரி தான், அதன் சுவை அப்படியே இருக்கிறது. ஆனால், இதில் நிறம் சேர்க்கப்படாததால் தான் இது பார்ப்பதற்கு உப்புமா போல் இருக்கிறது” என்றார். உடனே ஒரு ஆசிரியர், “ஏன் மகிழா, உன் அம்மா இதில் நிறம் சேர்க்க மறந்துவிட்டாரா?” எனக் கேட்க, அதற்கு மகிழன், தன் அம்மா அந்த செயற்கை நிறங்கள் உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிப்பவை என்று கூறினார் என்றான். அதற்கு மற்றொரு ஆசிரியர் ஒரு சிட்டிகை அளவு நிறம் போட்டாலே போதுமே என கூற, அதற்கு அவன், ஒரு சிட்டிகை என்றாலும், ஒரு கரண்டி என்றாலும் விஷம், விஷம் தான் என்று தன் அம்மா கூறினார் என்றான்.
இதைக் கேட்ட தலைமை ஆசிரியர் மகிழனின் அம்மா கூறியது முற்றிலும் உண்மை என்றும், இப்படி சுவை மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் தரும் கேசரியை செய்ததற்கு நாம் அனைவரும் அவரை வாழ்த்த வேண்டும் என்று கூறினார். மேலும் அவர், உணவுத்திருவிழா என்பது சுவையான விதவிதமான உணவுகளை ரசித்து ருசிப்பது மட்டுமல்ல, இப்படி ஆரோக்கியமான உணவுகளை வெளி கொண்டு வருவதிலும் தான் இருக்கிறது என்றும், அதை மகிழனின் அம்மா இன்று செய்திருக்கிறார் எனக் கூறி அவரை வாழ்த்தியதோடு மட்டுமின்றி, மகிழனின் இனிப்பு உப்புமாவை, இல்லை, இல்லை, அந்த கேசரியையே இந்த உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற தலைசிறந்த உணவு என தேர்வு செய்து அவனுக்கு சிறப்புப் பரிசு அளித்தார்.
அன்று மாலை வீட்டிற்குச் சென்ற மகிழன் மிக்க மகிழ்ச்சியோடு, “அம்மா, பாட்டி, இங்கே பாருங்கள், எனக்கு உணவுத் திருவிழாவின் சிறந்த உணவுக்கான பரிசு கொடுத்திருக்கிறார்கள்” என்று கூற, அவன் பாட்டி, “ஓ, உன் கேசரிக்கா! என்று கேட்க, அதற்கு அவன் “இல்லை பாட்டி, என், இனிப்பு உப்புமாவிற்கு” என்றான்.
எழுதியவர்
- தற்போது உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் ஆராய்ச்சி அறிஞராக வேளாளர் மகளிர் கல்லூரியில் பணியாற்றி வரும் தாரணி ஶ்ரீ; குழந்தைகளுக்கான சிறுகதைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு பல சிறுகதைகளை எழுதியுள்ளார் . இவரின் சிறுகதைகள் ’ பொம்மை’ போன்ற மாத இதழ்களில் வெளியாகி உள்ளன.
இதுவரை.
- சிறார் கதைகள் சிறப்பிதழ் 202519 January 2025இனிப்பு உப்புமா