கந்தன் காட்டூரில் வாழும் இளைஞன். வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு வெட்டிக்கதை பேசி ஊர் சுற்றித் திரியும் சோம்பேறி..அவன் நண்பர்கள் அவனை கனவுக்காரன் என்று கேலி செய்வர். காரணம் தான் கண்ட கனவுகளைப் பற்றி கதை போல விவரிப்பது அவன் வழக்கம். நண்பர்கள் எவ்வளவு கிண்டல் செய்தாலும் தன் கனவுகள் பலிக்கும் என்று உறுதியாக நம்புவான்.
கனவு பலிக்குமா?
ஒரு நாள் அவன் கனவில் குரல் ஒன்று கேட்டது. “ஒரு பெண்மயில் இனிய குரலில் பாடிக்கொண்டே தோகை விரித்து ஆடுவதைக் , கண்டால் நீ பணக்காரன் ஆகி விடுவாய் “, என்றது அந்த குரல். இதை அவன் நண்பர்களிடம் சொன்னதும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“ஏன்டா பெண் மயிலுக்கு தோகையை கிடையாது. அது எப்படி தோகை விரித்தாடும்? குயில்தான் பாடும். மயிலால எப்படி இனிமையா பாட முடியும் ?” என்று கேட்டான் முனியன்.
“அது வேற ஒண்ணுமில்லடா, இவன் இந்த ஜென்மத்துல பணக்காரனாக முடியாதுனு சொல்றதுக்கு பதிலா இப்படி சொல்லியிருக்கு அந்தக் குரல்”, என்றான் நாதன்.
எல்லோரும் கொல்லென சிரிக்கவே கோபத்தில் அவர்களிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டான். உழைக்காமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டவனுக்கு கனவு நம்பிக்கையைத் தந்தது.எப்படியாவது கனவில் கண்டது பலிக்க வேண்டும் . அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
தனியே காட்டுக்குச் சென்று, தேடி அலைந்து ஒரு பெண் மயிலைப் பிடித்து வந்தான். தன் வீட்டு தோட்டத்தில் அதை அடைத்து வைத்தான். மயில் தப்பி விடாதிருக்க பெரிய வேலி அமைத்தான்.
மயிலுக்கு நிபந்தனை.
“ப்ளீஸ் என்னை விட்டுடு, என் வீட்டில் என்னைத் தேடுவாங்க ” என்று மயில் கெஞ்சியது.
கந்தன்.அதற்கு, ” நீ எனக்கு ஒரு உதவி செய்தா நிச்சயம் உன்னை விட்டுடுவேன்” என்றான் .
“என்ன செய்யணும் சொல்லு?” என்றது மயில்.
“நீ இனிய குரலில் பாட்டு பாடிக்கிட்டே தோகை விரித்து ஆடனும். அதை நான் பார்த்தா பணக்காரன் ஆகிடுவேனாம் .எனக்காக நீ இதை செய்தா உன்னை விட்டுடுறேன்.” என்றான்.
‘ஹே ஹே ஹே ஹே …. ‘ என்று மயில் சத்தமாக சிரித்தது.
கந்தன் காதைப் பொத்திக் கொண்டு, ” ஏன் இப்படி கத்துற” என்றான் .
“இயற்கையிலேயே என் குரல் இப்படித்தான், இதை வெச்சிச்சுக்கிட்டு என்னை இனிமையா பாட சொன்னா எப்படி நான் பாடுறது? தோகையே இல்லாத நான் எப்படி தோகை விரித்து ஆட முடியும்? நீ பணக்காரனாக நீதான் உழைக்கணும். அதை விட்டுட்டு என்னை இதெல்லாம் செய்ய சொன்னா, வாய்ப்பே இல்லையே ராசா” என்றது.
கந்தனுக்கு கோபம் வந்தது. “அதெல்லாம் எனக்குத் தெரியாது, தோகை வளர என்ன செய்யணும்னு யோசி. குரலை இனிமையாக்க பயிற்சி செய். இன்னும் மூனு நாள்தான் உனக்கு கெடு. அதுக்குள்ள நீ செய்யாட்டா, உன்னை பிரியாணி செஞ்சு சாப்பிட்டுடுவேன்” என்றான்.
அட முட்டாளே! என்று அவனை மனதிற்குள் திட்டிய மயில் சோகமானது.
தப்பிக்க வழி என்ன?
கந்தன் வெளியே சென்றபோது தப்பிக்க வழி தேடியது மயில்.
.புதருக்குப் பின்னால் இருந்து நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அதன் இணை ஆண் மயிலும் இரண்டு மயில் குஞ்சுகளும் வெளியே வந்தன. “கவலைப்படாதே, இங்கிருந்து தப்பிக்க நான் வழி சொல்றேன். வயதான மயில்களின் இறகுகள் காட்டுக்குள் கிடைக்கும். அவற்றைக் கொண்டு வந்து தருகிறோம். உன் முதுகில் பசை போட்டு ஒட்டிக் கொண்டால் உண்மையான தோகை போலவே இருக்கும். அதை விரித்து நீ நடனம் ஆடி விடலாம்” என்றது ஆண் மயில்.
”நல்ல யோசனை. சரி, என்னால் இனிய குரலில் பாட முடியாதே, அதுக்கு என்ன செய்றது? ”
உடனே ஒரு மயில் குஞ்சு. “அம்மா கவலைப்படாதீங்க, நீங்க வாயை மட்டும் அசைங்க. நான் குயில் அத்தையை மறைந்து இருந்து பாட சொல்றேன்” என்றது.
“என் அறிவு செல்லம்” என அதை அணைத்து கொண்டது அம்மா.
மாலை கந்தன் வந்து, ” என்ன நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா?” என்றான்.
ஓ! நல்லா ஞாபகம் இருக்கு. தோகை வளர அமேசான் மூலிகைகளிலிருந்து தயாரித்த தைலம் தடவியிருக்கேன். குரல் இனிமையாக இமயமலை சித்தர் தந்த லேகியம் சாப்பிட்டிருக்கேன். நாளைக்கு நீ வந்தா உன் கனவு பலிச்சிடும்,” என்றது.
நிஜம்மாவ சொல்ற! நாளைக்கே எல்லாம் நடந்துடுமா? என்று ஆச்சர்யமாகக் கேட்டான் கந்தன்.
ஆமா, ஆனா நான் தைலம் தேய்க்கும் போதோ, லேகியம் சாப்பிடும்போதோ யாராவது பாத்தா அது வேலை செய்யாது ” என்றது.
ஓ! சரி சரி , நீ வேலையப் பாரு , என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் கந்தன்.
திட்டமிட்டபடி ஏற்பாடுகள் நடந்தன.ஆண் மயிலும், குஞ்சுகளும் கொண்டு வந்து தந்த இறகுகள் ஒட்டப்பட்டு உண்மையான தோகை போலவே காட்சியளித்தது. புதருக்குப் பின் குயில் குமுதா பாடுவதற்குத் தயாராக இருந்தது.
அடுத்த நாள் கந்தன் கனவு பலிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்போடு வந்தான்.
பெண்மயில் தோகை விரித்து ஆடியது கண்டு மகிழ்ந்தான்.
“அழகா ஆடுற, பாடிக்கிட்டே ஆடு” என்றான்.
“சுதந்திரமாக இருந்தால் தான் என்னால் பாட முடியும். வேலியைத் திறந்து விடு. நான் வெளியே வந்து பாடுறேன்” என்றது.
”நீ வெளியே போனதும் பறந்து போய்ட்டா நான் என்ன செய்றது?” என்றான்.
”பயப்படாதீங்க. என் அம்மா பாடி முடிக்குற வரை நான் உள்ளே இருக்கேன்” என்றுது மயில் குஞ்சு.
”உன் தாய் பாசத்தைப் பாராட்டுகிறேன்” என்றபடி வேலியைத் திறந்து விட்டான் கந்தன்.
அம்மா மயில் வெளியே வந்தது. மயில் குஞ்சு உள்ளே சென்றது.
மயில் வாய் அசைக்க புதருக்குள் இருந்த குயில் குமுதா பாடியது.
“லா லாலா லா லாலா லால லல்லாலா…. “
“ஆஹா என்ன இனிமையான பாட்டு! பெண்மயில் இனிமையாக பாடிக்கொண்டே தோகை விரித்து ஆடியதைப் பார்த்தாச்சு. ஆனா ஏன் இன்னும் நான் பணக்காரன் ஆகல” என்றான்.
ஏன்னா, “உழைக்காமல் பணக்காரன் ஆக முடியுமா , லா லாலா லா லாலா லால லல்லாலா. ” என்று பாடிக் கொண்டே தன் குடும்பத்துடன் பறந்து போனது பெண்மயில்.
அதிர்ச்சியுடன் அதைப்பார்த்த கந்தனுக்கு சில வினாடிகள் கழித்தே தான் ஏமாற்றப்பட்டது புரிந்தது.
உடனே வேலிக்குள் அடைக்கப்பட்ட மயில் குஞ்சைத் தேடினான்.
முன்கூட்டியே செய்த ஏற்பாட்டின்படி தன் பெருச்சாளி நண்பன் தோண்டி இருந்த வளைக்குள் புகுந்து தோட்டத்தை விட்டு வெளியே வந்த மயில் குஞ்சு பறந்து போய் அம்மாவுடன் சேர்ந்து கொண்டது.
ஏமாந்த கந்தன் தலையில் கை வைத்தபடி அமர்ந்தான் ..
“லா லாலா லா லாலா லால லல்லாலா “
உழைக்காமல் பணக்காரன் ஆக முடியுமா…?
என்று அவன் காதில் விழுந்து கொண்டிருந்த பாட்டுச் சத்தம் மெல்ல தேய்ந்து மறைந்தது.
எழுதியவர்
-
ஆசிரியர், எழுத்தாளர், மனநல ஆலோசகர், என்எல்பி பயிற்றுனர், தன்னம்பிக்கைப் பேச்சாளர், பொம்மலாட்டம் மற்றும் வெண்ட்ரிலாகிசக் கலைஞர் எனப் பன்முகங்கொண்டவர். தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள வாசிப்பு இயக்கத்தின் மாநில கருத்தாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வடசென்னை மாணவர்கள் கிளையின் தலைவர். நிறைவகம் என்ற டான்போஸ்கோ உளவியல் சேவை மையத்தின் குழந்தைகள் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர். கற்றல் குறைபாடுகள் குறித்த கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகளை தமிழ்நாடு முழுவதும் நடத்திவருகிறார். இவரது சேவையைப் பாராட்டி பெரும்பாலான முன்னனி தமிழ் பத்திரிகைகள் இவரது நேர்காணலை வெளியிட்டுள்ளன. சாகித்திய அகாதெமியின் சிறுகதை வாசிப்பில் மட்டுமல்லாது உலக மகளிர்தின சிறப்பு நிகழ்வான நாரிசேதனாவிலும் இருமுறை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
எழுதியுள்ள நூல்கள்:
கசக்கும் கல்வியும் கற்கண்டாகும், கண்டேன் புதையலை நன்மைகளின் கருவூலம், பெரிதினும் பெரிது கேள், அறம் செய்யப் பழகு ஆகிய கட்டுரை நூல்கள்.
நான் ஏன் பிறந்தேன்?(சிறுகதைத் தொகுப்பு),
நாளைய பொழுது நல்லதாக விடியட்டும் (மொழி பெயர்ப்புக் கட்டுரை)
இவரது நூல்கள் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், கவிதை உறவு, பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, புதுக்கோட்டை புத்தகக்கண்காட்சி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், உரத்த சிந்தனை போன்ற அமைப்புகள் நடத்திய சிறந்த நூல்களுக்கான போட்டியில் பரிசுகளை வென்றுள்ளன.
பெற்ற விருதுகள்:
கனவு ஆசிரியர், நல்லாசிரியர், டிரிக்கா2016, விமன் ஐகான் 2017, தங்க மங்கை, சேவரத்னா, சீர்மிகு ஆசிரியர், ரோநார்த் ஆசான், கல்வி மாமணி, தேசியக்கவி பாரதி, கவிச்சக்கரவர்த்தி கம்பன் விருது போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதுவரை.
- சிறார் கதைகள் சிறப்பிதழ் 202519 January 2025தோகை விரித்தாடிய பெண் மயில்