பெரும் மழை பெய்த நாளில் காட்டுக்குள் இருந்த ஓடையில் வெள்ளம் வந்தது. காட்டு விலங்குகள் பயந்து காட்டின் நடுப் பகுதிக்கு ஓடிப் போயின.
ஓடையில் விளையாடிக் கொண்டிருந்த குரங்கு குட்டிகளை அதன் தாய் குரங்குகள் இழுத்துக் கொண்டு மரமேறி மரக்கிளையை இறுகப் பற்றிக் கொண்டன.
விளையாட்டைப் பாதியில் நிறுத்தும்படி ஆயிற்றே என்று குரங்குகுட்டிகளுக்கு வருத்தம்! மரத்தின் மீதிருந்தே வெள்ளப் பெருக்கை அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன.
அதில் குட்டிக் குரங்கான குணா ஓடையில் ஏதோ மிதப்பதைக் கண்டது. அது என்ன என்று தன்தாயிடம் கேட்டது. தாய்க் குரங்கால் யூகிக்கமுடியவில்லை.
“தெரியவில்லை” என்றது.
வெள்ளப் பெருக்கு நின்றதும் காடு பழைய இயல்பு நிலைக்கு வந்தது.
குரங்கு குட்டிகள் ஓடைப் பக்கம் ஓடின. அங்கு கரை ஓரத்தில் ஒரு ஆமைக்குஞ்சு அசைவின்றி கிடந்தது. பக்கத்தில் போய் தொட்டபோது அது நகர்ந்தது. குட்டிகளுக்கு ஏக மகிழ்ச்சி!
இது வரை காட்டிற்குள் ஆமை வந்ததில்லை என்பதனால் அளவில்லாத சந்தோசம் அடைந்தன. ஆனால் ஆமைக் குஞ்சு தன் தாயைப் பிரிந்த வருத்தத்தில் இருந்தது.
ஆமைக்குஞ்சு பற்றிய செய்தி காடெங்கும் பரவியது. மற்ற விலங்குகளும் ஆா்வமாக வந்து ஆமைக்குஞ்சைப் பார்த்தன. அதைத் தங்களோடு வரச் சொல்லி கேட்டபின்பும் அது வர மறுத்தது.
ஆமைக்குஞ்சுக்கு பிந்து என்று பெயரிட்டார்கள். பிந்து யாரிடமும் ஒட்டாமல், பழகாமல் தனித்தே இருந்தது.குட்டிக் குரங்கு குணா மட்டும் அதை விடாமல் சென்று பார்த்தது. அதனுடன் பேசிப்பேசி தோழமையை ஏற்படுத்திக் கொண்டது.
ஒருசில மாதங்களில் பிந்து மற்ற விலங்குகளுடனும் பழக ஆரம்பி்த்தது. நாட்கள் நகர்ந்தன!
பிந்து காட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது என்று குணா நினைவுப்படுத்தியது. காட்டில் உள்ள விலங்குகள் பிந்து காட்டிற்கு வந்த நாளை அதன் பிறந்தநாளாகக் கருதி முதல் பிறந்தநாள் விழாவாகக் கொண்டாட முடிவெடுத்தார்கள். பிந்துவிடம்வந்துதங்கள்ஆசையைசொன்னார்கள். பிந்துவைப் பார்த்துப் பேசி ஒப்புதல் பெற்றார்கள்.
விழா மேடையை அமைக்கும் பணியை யானைகள் பொறுப்பேற்றுக்கொண்டன.
மேடை அலங்காரத்திற்கான பூக்களை புல்புல் பறவைகளும், மைனாக்களும் சேகரித்து வருகிறோம் என்றன.
விருந்திற்கான தேனை தேனீக்களும், மீனை கொக்குகளும் கொண்டு வருவோம் என்றன.
கனிகள் பறித்து வருவதாக குரங்குக் கூட்டங்கள் ஒத்துக்கொண்டன.
இசை நிகழ்ச்சிக்கு குயில் கூட்டமும், நடன நிகழ்ச்சிக்கு மயில்கூட்டமும் ஒத்திகை பார்க்க ஆரம்பித்தன.
முந்தைய நாள் இரவே மேடை அமைத்தாயிற்று. காலையில் அன்று மலா்நத பூக்களால் மேடையை அலங்கரிக்க ஆரம்பித்தன அணில்கூட்டங்கள்.
வகை வகையான கனிகளை குரங்குகள் கொண்டு வந்து குவித்தன.
விழா ஏற்பாட்டால் காடே கலகலப்பாயிற்று! எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு பிறந்தநாள் விழா நாயகி பிந்துவிற்குக் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
வெகு நேரமாகியும் பிந்து வந்து சேரவில்லை. எல்லோரும் காத்திருந்தே களைத்துப் போனார்கள்.
சிங்கம்,குரங்கிடம் “நீ போய் பார்த்து வா” என்றது. குரங்கும் மரத்திற்கு மரம் தாவி ஓடைப் பக்கம் சென்று பார்த்தது. பிந்து ஓடையை விட்டு கொஞ்ச தூரத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்து திடுக்கிட்ட குரங்கு மீண்டும் மரம் விட்டு மரம் தாவி மூச்சிரைக்க வந்து செய்தியை சொன்னது.
“இந்த வேகத்தில் வந்தால் இன்று இரவுகூட வந்து சேர முடியாதே?” என்று கவலைப்பட்டன விலங்குகள்.
“கவலையை விடுங்க!” என்று நாரை முன் வந்தது.
“நான் போயி செல்லத்த தூக்கிட்டு வந்திர்றேன் ” என்று வேகமாய் பறந்து சென்றது.
சிறிது நேரத்தில் நாரை தன் அலகில் பிந்துவைச் சுமந்து விழா மேடைக்கு வந்தது. எல்லா விலங்குகளும் மகிழ்ச்சியில் ஆா்ப்பரி்த்தன!
பிறகென்ன! குயில்கூட்டங்கள் பாட, மயில் கூட்டங்கள் ஆட பிந்துவின் பிறந்தநாள் விழா இனிதே ஆரம்பமானது.
குட்டீஸ் நீங்களும் பிந்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிருங்க!
எழுதியவர்
- ஓய்வு பெற்ற முதுகலை தாவரவியல் பட்டதாரி ஆசிரியை. 90களின் இறுதியில் சுட்டி விகடனில் இவரின் கதைகள் வெளிவந்துள்ளது. 2022 ல் ’இறுதி சொட்டு, சிறுகதை தொகுப்பு வெளிவந்தது. 2024 ல் மூன்றாம் விதி என்ற சிறுகதை தொகுப்பு சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாகி உள்ளது.
இதுவரை.
- சிறார் கதைகள் சிறப்பிதழ் 202519 January 2025பிந்துவின் பிறந்த நாள்
Nice story. I like it