28 January 2025
ootakoothan 13

1

சந்தனச் சட்டையும் கருப்பு பேண்ட்டும் அணிந்திருந்த பேராசிரியர் மேடையிலே அர்ப்பணிப்புடன் நின்றுகொண்டிருந்தார். நெற்றியில் சாந்திட்டு, வலப்பக்கம் வகிடெடுத்த சிகை. நாற்பது தாண்டியிருக்காது. ஒரு கையில் சிறிய தாளும் மறுகையில் பேனாவும். அவ்வப்போது ஒலி வாங்கியையும் மேடையின் மறுமுனையிலுள்ள வாசலையும் பார்த்தவாறு இருந்தார். ஏ.சி அரங்கின் குளுமை வெளியின் உஷ்ணத்துக்கு இதமாய் இருந்தது. நிகழ்ச்சி இனிதே தொடங்கவிருக்கிறது என்ற பாரம்பரிய வரவேற்புக்கு முன்னரே தேநீர் வந்துசேர்ந்தது. கைக்கடக்கமாக அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கியிருந்த குறிப்பேட்டின் முகப்பினை நோட்டமிட்டேன்.

ஸ்ரீ ஸ்ரீ வெங்கடேசன் கல்லூரி (தன்னாட்சி)

தமிழ்த்துறை

தொல்லிலக்கியமும் புத்திலக்கியமும்

கருத்தரங்கப் புரவலர்: கொடை வள்ளல் வரதராசன்

என்று அச்சிடப்பட்டிருந்தது.

உலை கொதிப்பு கண்டதுவிட்டதுபோல் அரங்கில் திடீரென சலசலப்பும் அமைதிப்படுத்தும் உச்சொலியும் எழுந்தன. மேடையிலும் கீழும் உலவிக்கொண்டிருந்த பேராசிரியர்களும் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களும் சிலையொத்த பணிவுடன் அமைதியாகினர். இரு கைகளையும் கூப்பியபடி சிரிப்பே வடிவாய் திடகாத்திரமான முதியவர் மேடையின் மத்தியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்தமர்ந்தார். அவரது இருபக்கமும் சூட் அணிந்தவர்கள் அமர்ந்துகொண்டனர். அனேகமாக கல்லூரி முதல்வர்களாக இருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன். தமிழ்த்தாய் எல்லோரையும் ஒருமுறை எழுந்தமர வைத்தாள்.

‘எத்திசையும் புகழ்மணக்கும் இப்புனித மண்ணில்; வானோர் வாழ்த்தும் இக்கல்விப் பேராலயத்தில்; தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்டாம் நம் கல்லூரியை நிறுவிய மரியாதைக்கும் பெருமதிப்புக்கும் சால்புக்கும் நன்றிக்கும் உரிய நிறுவனர் மற்றும் தாளாளர்  திரு.வெங்கடேசன் ஐயா அவர்களை நிகழ்ச்சிக்குழுவின் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்’ என்றார் ஒலிவாங்கியைப் பரவசத்தோடு பற்றியிருந்த பேராசிரியர். 

அப்பெரியவரின் கூப்பிய கைகள் மார்புக்கு மேல் உயர்ந்து சபையை வணங்கின. ‘வான்புகழ் கொண்ட நம் கல்லூரியின் தமிழ்த்துறைக்குத் தேவையான சகல உதவிகளையும்  கேட்ட மாத்திரத்தில் செய்துகொடுக்கும்  நிர்வாகத்தினர்க்கும் கல்லூரி முதல்வருக்கும் பாசத்திற்குரிய துறைத் தலைவி அம்மா அவர்களுக்கும் நன்றிகலந்த வணக்கங்கள்’ என்றார். முன்வரிசைகளில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களின் கைதட்டல் ஒலிகளுக்கு ஒச்சிசைத்தாற்போல் நாங்களும் கரகோஷம் எழுப்பினோம். திரையரங்கில் நல்ல காட்சிகளுக்குக் கூட கைத்தட்ட மனமொப்பாமல் அமர்ந்திருக்கும் பிரவீனின் கைகள் சலிப்புடன் இசைந்துபிரிந்தன.

‘ஆனா ஒன்னு மச்சான் புகழ்றதுல தமிழன மிஞ்ச உலகத்துலே ஆளில்ல’ என்றான் பிரவீன். இக்கருத்தரங்கிற்கு வந்தே தீர வேண்டும் என்று அடம்பிடித்து அதிகாலையே மதுரையில் பேருந்து ஏறச்செய்து இழுத்து வந்த நகுல், எங்கள் முகம் பார்ப்பதைத் தவிர்த்தவனாய்ச் சிரித்துக்கொண்டிருந்தான். பிரவீனுக்கும் எனக்கும் முனைவர்பட்ட ஆராய்ச்சியில் இது மூன்றாம் ஆண்டு. நகுலுக்கு இதுதான் முதல் வருடம். கன்னிப் பருவம். புதிய கோட்பாட்டை உண்டாக்கி அதன்வழிச் சகல திறனாய்வுகளும் நிகழுமாறு ஒரு மாயத்தைப் படைக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவன். அவன்தான் வம்படியாக, இக்கருத்தரங்கிற்குச் சென்றுவரலாம் என மூவருக்குமாய் இணையத்தில் முன்பதிந்து தலைக்கு ஐந்நூறுவீதம் ஆயிரத்தைந்நூறு கட்டியது. கருத்தரங்கு பிடிக்கவில்லை என்றால் உனக்குப் பணம் திருப்பித்தர மாட்டாது என்று சொல்லியே புறப்பட்டிருந்தோம்.

‘சோல்லேர் உழவர்; தாராள மனத்தவர்; மாணவர் நலனுக்காகவே வாழும் உத்தமர்; இலக்கணக் கொண்டல்; காப்பியப் பேரொளி; நவயுக பாரதி; தாயுள்ளம் படைத்த நம் துறைத்தலைவி முனைவர் மாதவி தேவி அம்மையார் அவர்களை நல்லதொரு நோக்கவுரை நல்க, பட்டாசுச் சொற்களால் பெருமையுடன் அழைக்கிறோம்’ என்றார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். 

அம்மையார் பக்தி சிரத்தையுடன் கல்லூரித் தாளாளரை வணங்கிவிட்டு ஒலிவாங்கிப் பக்கம் வந்தார். பலத்த இரைச்சலுடன் இடிமுழங்கும் தொனியில் பதினைந்து நிமிடங்கள் தொல்லிலக்கியமாவது தொன்மையானது; புத்திலக்கியமாவது புதுமையானது என்று நீட்டிமுழக்கிவிட்டு அமர்ந்தார். அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைப் பாராட்டும் வண்ணம் தாளாளர் இருக்கையைவிட்டு அகலாமல் சற்றே முதுகை வளைத்து தன் கையைக் குலுக்கி வாழ்த்தைப் பகிர்ந்துகொண்டார். தாளாளரின் மனம் அறிந்த முதல்வர், அவரை ஒட்டிய தன்னிருக்கையை அம்மையாருக்கு வழங்கிவிட்டு அடுத்த இருக்கைக்கு நகர்ந்தார்.

‘இந்தத் தமிழாசிரியைகள் ஏன் தேங்காய்ச் சிரட்டைப் பிசிறுபோல உடுத்திக்கிறாங்களோ, தெரியல. சேலைதான் அணியணும்னா மைசூர் சில்க், சாஃப்ட் சில்க், ஜூட் புடவையெல்லாம் அணிஞ்சு புடவை நிறத்துக்கேத்த மாதிரி நகை செட் போட்டுக்கலாம்ல,’ என்றான் நகுல். முன் வரிசையிலிருந்து இரு மாணவிகள் திரும்பினர். அவர்களுள் காட்டன் சேலை அணிந்திருந்தவள், ‘சரியா சொன்னீங்க!’ என்று புன்னகைத்துவிட்டுத் திரும்பிக் கொண்டாள். முன்பிருந்த இடைவெளி மறைந்து நாற்காலிக்கிடையே அலைபேசி எண்ணைக் குறித்துக்கொள் எனக் காட்டிக்கொண்டிருந்தாள். நகுலின் விரல்கள் வேகவேகமாய் படிக்கட்டுகளில் இறங்கும் லாவகத்துடன் தொடுதிரையில் பதிந்துகொண்டிருந்தன.

அடுத்ததாகப் பேசவந்த கல்லூரி நிறுவனர், ‘எல்லாருக்கும் வணக்கம். நானெல்லாம் எந்தக் கல்லூரிலயும் படிக்கலங்க. ஏழாம் கிளாஸ் வரைக்கும்தான் போனேன். வாத்தியார் திட்டிப்போட்டானேனு கல்லால மண்டைய பொளந்துட்டு வீட்டுக்கு ஓடியாந்துட்டேன். எங்க ஆயாதான் நல்ல வேலையா என்ன பள்ளிக்கூடத்துக்குப் போகாம காப்பாத்துச்சு. இல்லனா நானும் உங்க வாத்தியாருங்க மாதிரி, எடுப்பா உடுத்திக்கிட்டு டைய கட்டிக்கிட்டு எங்கயாவது சம்பளத்துக்கு மாரடிச்சிட்டு இருந்திருப்பேன்’ என்று அளவாய்ச் சிரித்தார். அவரது கண்கள் ஆசிரியராக உள்ள சகலரின் முகங்களையும் தீண்டி மறைந்ததையும் அவர்கள் அனைவரின் முகத்திலும் சிரிப்பிருந்ததையும் ஊகிக்க முடிந்தது.

‘இன்னவரைக்கும்  நான் ஒருநாள்கூட ஐயோ நம்ம படிக்கலயேனு நினைச்சதே இல்லை. நமக்குத் தெரிய வேண்டியதெல்லாம் பணஞ்சேர்க்குற திறமைதான். அது எனக்கு சின்ன வயசுலே கைவந்துடுச்சு. ஏதேதோ படிப்பெல்லாம் சொல்லுவாங்க. கரிக்குலம்னு என்னென்னவோ பேசுவாங்க. அப்பப்போ யாரையாச்சும் கூட்டிக்கிட்டு வந்து அறிவாளினு பாராட்டச் சொல்லுவாங்க. அறிவாளிக்கும் பணம் வேணுமில்லைங்களா! இங்குலீசுல கையெழுத்துகூடப் போடத் தெரியாத நாந்தான், இத்தனையும் நடத்துறேன். எல்லாத்துக்கும் என் ஆயாவுக்குத்தான் நன்றி சொல்லணும். அது மட்டும் விறகுக் கட்டைய தூக்கிக்கிட்டு நீ பள்ளிக்குப் போயே தீரணும்னு எங்கம்மா விரட்டுனப்ப தடுக்கலனா, ஐயோ நினைச்சுப் பார்க்கவே முடியல! நான் படிச்சு நாசமாப் போயிருப்பேன்…’ எனப் பெருமூச்சுவிட்டார். ‘மாணவர்கள் நீங்க எல்லாரும் நல்லபடியா பெரியவங்க பேச்சைக் கேட்டுக்கிட்டீங்கனா, எல்லா நல்லதும் உங்களச் சேரும்னு சொல்லிக்கிறேன்… வணக்கம்.’

அரங்கின் கரவொலி அடங்க முப்பது நொடிகள் பிடித்தன. மாபெரும் தத்துவம் பொழியப்பட்ட துளிர்ப்புடன் மேலும் சில கணம் கைத்தட்டலை நீட்டிக்குமாறு மேடையில் நின்றபடி கையசைத்துக்கொண்டிருந்தார் தொகுப்பாளர்.

‘ஏன்டா நகுலா. ஒழுங்கா எந்திரி. இந்த ஊர்ல சுத்திப் பார்க்க ஒன்னுமில்லாட்டியும் பரவால்ல. என்னத்தையாவது சொல்லிட்டு, சர்டிஃபிக்கேட்ட வாங்கிட்டு ஓடிருவோம். முடியல’ என்றான் பிரவீன், அவனுக்கு முன்வரிசையில் மலர்சூடி அமர்ந்திருந்த மாணவிகள் கவனிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டவனாக. அறிவு பெருத்துவிட்டதாகக் காட்டித்தரக்கூடிய முதல் அம்சமே, பொருந்தாமையை விதந்தோதிக் கொண்டிருப்பதுதான் போல.

‘கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணா. இதெல்லாம் எந்தக் கல்லூரில இல்லாம இருக்கு. இவங்க போனவுடனே ரிசர்ச் பெர்சன்ஸ் பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதுவும் இல்லாம, இப்பலாம் எங்கயும் முழுநாள் இல்லினா யாரும் சர்டிஃபிகேட் தர்றதில்ல. பணம் கட்டி பிரயோஜனமில்லாமப் போய்டும்ணா. குமரா அண்ணா மாதிரி அமைதியா இருங்க’ என்று என்னை இடித்துவிட்டு வாய்மூடிக் கொண்டான் நகுல்.

சிறப்புப் பேச்சாளர்களுக்கான நினைவுப் பரிசுகள்; சால்வை போர்த்துதல்; கேடயம் வழங்குதல் உள்ளிட்ட சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர், மேடையை நிறைத்திருந்த அறுபதுகளின் முகங்கள் யாவும் அரங்கைவிட்டு வெளியேறின.

‘எம் துறையின் மாணவக் கண்மணிகளே; தமிழ்ச் சொத்துக்களே; பல்வேறு கல்லூரியிலிருந்து வருகை தந்திருக்கும் இருபால் பேராசிரியர்களே, ஆய்வாளர்களே, முதுகலை மற்றும் இளங்கலைத் தமிழ் படிக்கும் இளையோரே உங்கள் அனைவரையும் ஸ்ரீ ஸ்ரீ வெங்கடேசன் கல்லூரியின் தமிழ்த்துறைச் சார்பாக அன்போடு வரவேற்கிறேன். நிகழ்வின் முதல் அமர்வு இனிதே தொடங்குகிறது. இதுவொரு தேசிய கருத்தரங்கம் என்பதால் முதல் அமர்வுச் சிறப்பு உரைஞராகத் தில்லி பேராசிரியர் சாமிநாதன் நம்முடன் இணைய வழியில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். ஆகவே அவரது கூர்மையான பார்வைகளை அமைதிப் பேணி கேட்டுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று மேடையை விட்டுக் கீழிறங்கினார்.

கேசரி பூத்த உதடுகளால் திரை நிரம்பத் தோன்றினார் சாமிநாதன். ஜும் தளம், தன் சன்னலில் நாற்பத்தி மூன்று பங்கேற்பாளர்கள் இணைந்துள்ளதாகக் காட்டியது.

‘அனைவருக்கும் வணக்கம், இந்த வாய்ப்பை அமைத்துக்கொண்ட மாதவி தேவி அம்மையாருக்கும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேரா நல்லசிவம் அவர்களுக்கு நன்றி. கவிஞர் பர்ஃபியின் முழுக் கவிதைத் தொகுதியான ஏரிக்கரையில் எசப்பாட்டு  மற்றும் அவரது சில மொழிபெயர்ப்புகள் பற்றித்தான் இவ்வுரையைக் கட்டமைப்புச் செய்திருக்கிறேன். 

 

நிலத்தில் போரடித்து 

வயிற்றுக்கு மாரடிக்கும் 

கூலிகளுக்கு 

சொர்க்கம் என்பது

மத்திய வெயிலில் 

இளைப்பார அழைக்கும் 

வேம்பின் நிழலே என்ற பர்ஃபியின் கவிதையை விட உழைப்பாளர்கள் வாழ்வைப் பிரதிபலிக்கும் வேறு கவிதை தோன்றியிருக்குமா என்று ஐயமே…’

‘பத்ம விருதுக்குச் சொந்தக்காரரான பர்ஃபி ஐயாவின் கவிதை உலகிற்குள் செல்லும்முன் புதுக்கவிதையின் தற்போதைய நிலையை அறிவது அவசியமாகும். ந.காமராசனும் மீராவும் மேத்தாவும் கோலோச்சிய காலம் ஓய்ந்து, அறிவுமதி பழநிபாரதி போன்ற கவி வல்லார்கள் அமைதிகொண்ட பிறகு, தற்போது மௌனபத்திரன் என்றொரு கவிஞர் தோன்றியிருக்கார். வயது கூடுதலாகத் தெரிந்தாலும், முகநூலில் அசாத்திய வேகத்துடன் மக்களுக்குப் புரியும்படி எளிய தமிழில் அவர் எழுதிவரும் கவிதைகளை அன்றாடம் வாசிக்கிறேன். மீராவின் கவித்துவமும் காதலும், மேத்தாவின் சமூக எள்ளலும் இளமையும், கவிக்கோவின் ஞானமும் கோபமும், பர்ஃபியின் மொழிலயமும் இனிமையும் அவரிடம் இருக்கவே செய்கின்றன. இப்படியாக வளர்ந்துவரும் இக்கால புதுக்கவிஞர்களை நாம் தேடி வாசிப்பதும் அவர்களை அங்கீகரிப்பதும் அவசியமாகும்..’

இணைய உரைக்காக மேடையுடன் கூடிய மூன்று வரிசைகளுக்குமேல் பிரகாசித்துக்கொண்டிருந்த விளக்குகளை அணைந்துவிட்டிருந்தனர். பங்கேற்பாளர்களுக்குத் தருவதற்காக வடைப் பெட்டியை ஒருவர் சுமக்கவும் மற்றவர் கொடுக்கவுமாக வலம் வரும் மாணவிகள் அவ்வுரையின் மேன்மை இடையூறு செய்துவதுபோல் இருப்பதாகக் காதைக் கடித்தான் பிரவீன். கவிதை குறித்து யார் பேசினாலும் அவன் ஆர்வம் கட்டுப்பாட்டை மீறிவிடும். அதற்கு ஒரு தனித்த பின்னணியும் உண்டு.

மூன்று ஆண்டுகளுக்குமுன் ஜூன் மாதம் எங்கள் பிரிகேடியர் கல்லூரியின் தமிழ்த்துறைக்கு வாரிடாத சிகையுடன் கசங்கிய ஊதாச்சட்டை அணிந்து, எனது நெறியாளரிடம் தானும் முனைவர் பட்ட ஆய்வில் சேர விரும்புவதாக அவன் அறிவித்தபோது, இதே சூட்டோடுதான் இருந்தான். அவனுக்கு எதுவொன்றிலும் முழுமையாக ஈடுபட்டுவிட்டுத்தான் முடிவுக்கு வர முடியும். ஆனால் நெறியாளர், ‘அருளாநிதியின் எழுத்துகளில் கவித்துவம்,’ என்ற தலைப்பில் செய்வதானால் மட்டுமே தன்னால் உன்னைச் சேர்த்துக்கொள்ள முடியும் என்று சொல்லிவிட்டார். அதனால், தான் ஆசையாக யோசித்து வைத்திருந்த, ‘வரலாற்று நோக்கில் திணைத்தெய்வ வழிபாடு,’ என்ற தலைப்பை வெளிப்படுத்தாமலே விட்டுவிட்டான். 

இயற்கையின் கருணை கொஞ்சமும் கிடைக்கப்பெறாமல் மூப்பின் சுவடுகள் தாங்கிய சோர்வுற்ற முகத்துடன், இன்னமும் அருளாநிதியிடம் கவித்துவத்தைத் தேடிக்கொண்டிருப்பவனுக்கு நிச்சயம் சாமிநாதன் அடுக்கும் பட்டியல் புதிய கோணங்களைத் திறந்துவிட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. 

பேச்சின் அடர்த்தி காரணமாகக் கவனிக்க இயலவில்லை. கருத்தரங்கிற்கென அச்சிடப்பட்டிருந்த நாடறிந்த இலக்கியத் திறனாய்வாளர்களிடமிருந்து பெறப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துக்கட்டுரைகள் அடங்கியத் தொகுப்பு, அரங்கின் பின் நுழைவாயிலில் கல்கண்டு தட்டினருகே கிடக்கக் கண்டேன்.  என் அசைதல் சிறப்புரைக்கு இடைஞ்சல் தராதபடி சென்று, அதை வாசித்துத் தருவதாக அலைபேசியை முறைத்துக்கொண்டிருந்த பேராசிரியையிடம் சொல்லிவிட்டு எடுத்து வந்தேன்.

சாமிநாதன், அதற்குள்ளாக பைந்தமிழ்க் கவிஞர் பர்ஃபியின் மொழிபெயர்ப்பு பங்களிப்பு என்ற தலைப்புக்கு மாறிவிட்டிருந்தார்.

கருத்தரங்கச் சிறப்புக் கட்டுரைகள் தாங்கிய நூலில் தில்லி பேராசிரியரின் கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. அட்டவணைக் குறிப்பைப் பார்த்துவிட்டு, பக்கம் எழுபத்தைந்தைப் புரட்டினேன்.

சிலந்தி நாவல் சுட்டும் பெண்ணியப் பார்வை – முனைவர் சாமிநாதன்

Feminist perspective firing in Spider Novel – Dr.Saminathan

என்ற கட்டுரைத் தலைப்பு பளிச்சிட்டது.

‘மொழிபெயர்ப்பென்பது சொல்லுக்குச் சொல் பொருள் கூறுவதாக இல்லாமல், மூலமொழியின் செய்தியை உள்வாங்கி அதற்கு இணையான இலக்கு மொழிச் சொற்களைக் கோர்த்து வெளிப்படுத்த வேண்டும்‘ என்று பர்ஃபியின் மொழிபெயர்ப்புத் திறன் குறித்து மெச்சிக்கொண்டிருந்தார்.

 

2

’குமரா, அது எப்படிடா நகுலையே தேடி வந்து இந்தப் பிள்ளைங்க பக்கத்துல உக்காருதுங்க. நீ வேணா பாரேன் இவன் பேசிப்பேசியே அதுகள அலற வைக்கப் போறான்,’ என்ற பிரவீனின் குரலில் அயர்ச்சியே எஞ்சியிருந்தது.

நகுலுக்கு இயல்பாகவே பெண்களை ஈர்க்கக்கூடிய சாதுவான முகவெட்டு. குரலும் மழலைத்தன்மையுடன் அதிர்வுகொடுக்காமல் இருக்குமென்பதால், அவனுடன் பேசுவதற்கெனவே நெருங்குபவர்கள் உண்டு. தனக்காக எத்தனை பெண்கள் சண்டையிடுகிறார்கள் தெரியுமா என்று அவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் திறக்கையிலும் அசட்டுப் பெருமைப் பேசுவதிலும் அதிகம் கோபப்படக்கூடியவன் பிரவீனாகவே இருந்தான். 

ஒருமுறை ஆச்சரியப்படும் விதமாக கல்லூரியின் முதுகலைத் தமிழ் மாணவி பிரவீனிடம் பேச வந்திருந்தபோது, ‘அருளாநிதி எழுதுனது கவிதைகளே இல்லை தெரியுமா! அவர் எழுதுறது கவி வசனம்னு சில பேரும், வசனக் கவிதைனு சில பேரும் சொல்லிட்டு இருக்காங்க. ஆனா அதுல வரக்கூடிய கவியைக் கழட்டிடணுங்கிறதுதான் என்னுடைய தாழ்மையான நிலைப்பாடு,’ என்றிருக்கிறான். அந்த மாணவி அதற்குப்பின் எங்கள் யார் பக்கமும் திரும்பவில்லை என்பதை அறிவிக்கத் தேவையில்லை.

பிரவீனுக்குப் பதில் சொல்லாமல், நெய்ச் சோற்றுக்கு ஊறுகாயைப் போல் பரிமாறப்பட்ட அவித்த முட்டைத் துண்டை  விழுங்கினேன்.

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே’ என்று மதியத்திற்கான முதல் அமர்வில் உரையாற்றத் தொடங்கினார் சிறப்பு வருந்தினர், பழையம்பட்டி கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மோ.இயந்திரன்.

‘மரியாதைக்குரியவர்களே! நான் ஒரு தெய்வ நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதி. ஆனாலும் என்னால் திருமூலனின் சொற்களைச் சொல்லாமல் தொடங்க முடிவதில்லை. சரி, அது கிடக்கட்டும். சப்ஜெக்ட்குள் வந்துவிடுகிறேன். தமிழ் நாவல்களில் பழமையும் புதுமையும் என்பது என் தலைப்பு. நண்பர்களே! தமிழில் முதல்முதலில் வெளிவந்த நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் கிடையாது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? அது வள்ளலார் எழுதிய மனுமுறை கண்ட வாசகம்தான். நாவலுக்குரிய சகல பொருத்தப்பாடுகளும் அமைந்த அற்புதமான படைப்பு அது. ஆனால் இலக்கிய உலகம் அதை உணரவே இல்லை.’

’ஐயா ஒரு நிமிஷம், நீங்க சொல்லுற மாதிரி தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரமோ, மனுமுறை கண்ட வாசகமோ கிடையாது. அறபு லிபிகொண்டு தமிழில் எழுதப்பட்ட தாமிரப்பட்டணம் தான்,’ என்றார் முதல் வரிசையில் வெங்கடேசன் கல்லூரித் தமிழ்த்துறையின் மூத்தப் பேராசிரியர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர்.

‘இல்லை சார். நீங்கள் சொல்வது அறிஞர்களாலும் இலக்கிய வரலாற்றாசிரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாத அபிமான கருத்து’ என்று இயந்திரம் வாதாடினார்.

‘கால அடிப்படையில் பேசுகிறேன் வேண்டுமானால் தேடிக்கொள்ளுங்கள். உங்கள் கருத்துதான் அபிமானம்!’ என்று கேள்வி எழுப்பியவரும் பின்வாங்க மறுக்கவே, சபை சலசலப்பால் நிறைந்தது.

‘இது எதுவுமே கிடையாது. நம்ம இத்தாலி சாமி வீரமாமுனிவரோட பரமார்த்த குரு கதைதான் தமிழின் முதல் நாவல். ஒரு குருவுடன் சீடர்களான மட்டி, மடையன், மூடன், முட்டாள், மண்டு என்ற ஐந்துத் தொடர் வளர்ச்சிநிலைக் கதாப்பாத்திரங்கள் பல்வேறு சூழல்களை எதிர்கொண்டு பயணிக்கும் பனுவலே தமிழின் முதல் நாவல்’ என்றவனாக சவரம் செய்யத் தேவையில்லாத் தன் வழவழப்பான கன்னத்தை நீவியபடி, எங்கள் பக்கம் திரும்பினான் நகுல். அவனது குரல் கேட்டதும் முன்வரிசையில் அமர்ந்திருந்த மாணவிகள் சாவி கொடுத்த பொம்மைப் போல் பின்பக்கமாகத் தங்கள் தலைகளைத் திருப்பினர்.

‘இப்படியே ஒவ்வொருத்தனா ஒவ்வொன்னுக்கு சொல்லிட்டே போனா சரியா? தமிழ் நாவலுக்கு வெள்ளைக்காரன் இன்ஷியல் போடுறதா!’ என்றான் பிரவீன். 

‘டேய் நாவலே வெள்ளைக்காரன் குடுத்த இலக்கிய வகைமைதாண்டா,’ என்றேன். இம்முறை சில மையிட்ட கண்கள் என்னையும் பார்த்ததில், பிரவீனின் துடிப்பை உணர முடிந்தது.

‘எவன் சொன்னது. உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்னா என்ன, உரைநடையால் பாடல் கலந்து எழுதப்பட்ட காவியம்னு அர்த்தம். சினிமாக்கள்ல கதைக்கு மத்தியில பாடல் வரதில்லையா. அப்படி எழுதப்பட்ட சிலம்புதான் தமிழின் முதல் நாவல்’ என்றான் நகுல்.

‘அதுக்கு பேரே செய்யுள்தான். கிறுக்குத்தனமாப் பேசக்கூடாது. வேணும்னா முதல் நாவலாசிரியன்னு இறையனார் களவியலுரை உரையாசிரியரைச் சொல்லு. ஒத்துக்கிறேன்.’ என்று படபடத்தான் பிரவீன். இறுதி வரிசையில் அமர்ந்திருக்கும் ஆய்வாளர்கள் நிகழ்வைக் கவனித்து அமைதிக் காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று நிகழ்ச்சித் தொகுப்பைக் கைப்பற்றியிருந்த மாணவர்கள் அறிவுறுத்தினார். பிரவீன் தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த பாஸ் பாஸைப் பிரித்து வாயில் கொட்டிக்கொண்டான்.

‘யேய் அவரு பாக்குப் போடுறாருடி’ என்ற கிளம்பிய குரலைக் கேட்டு, மேலும் ஒன்றைப் பிரித்துக்கொட்டினான். நகுல் புன்னகைத்தவாறே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் திறந்து, தட்டிக்கொண்டிருந்தான்.

 

3

இறுதி அமர்வாக, தமிழ்க் கட்டுரையில் மரபும் புதுமையும் என்ற தலைப்பில் அவுட்ஸ்திரேலியாவில் இருந்து மெய்நிகர் வழி உரை நிகழ்த்த இருந்த மொழியரசு நாவலந்தேயனார், திகதியை மறந்து விக்டோரியா பாலைவனப் பகுதிக்குள் கார் எடுத்துப் புறப்பட்டுவிட்டதால், துறைப் பேராசிரியரே சிறிது நேரம் கட்டுரைக் குறித்துப் பேசிவிட்டு அமர்ந்தார். ‘விக்கிப்பீடியா இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கும்’ என்று பற்கடித்தான் பிரவீன்.

‘நாம் தற்போது நிகழ்வின் இறுதிக்கட்டத்திற்கு வந்திருக்கிறோம்’ என்று ஆரம்பித்த மாணவர்களை அமைதி காக்கச் சொல்லிட்டு ஒலிவாங்கியைப் பற்றி மேடையேறினார் சந்தனச்சட்டைக்காரர். ‘இன்னும் சற்று நேரத்தில் மதிப்பறிக்கையுடன் கூடிய நிறைவுவிழா நடைபெற இருக்கிறது, அதற்காக கல்லூரி தாளாளரும் நிர்வாகக் குழுவினரும் வருகை தர உள்ளனர், அறிஞர் பெருமக்கள் தற்போதைய அமைதியை மேலும் காக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

‘நாள்முழுக்க உக்காந்ததுக்குச் சான்றிதழையாவது வாங்கிட்டுப் புறப்படலாம்,’ என நகுலும் ‘நீ வேணும்னா இருந்து வாங்கிட்டு வா, நான் கிளம்பறேன்,’ என பிரவீனும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். இருவரையும் பொருட்படுத்தாமல் நான் வெளியே சென்று தேநீர் அருந்திவிட்டு வந்தேன். அவர்கள் சமரசம் கண்ட புள்ளி தெரியாவிட்டலும் அமைதி நிலவியதில் நிம்மதியானது.

‘போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரிய நிர்வாகத்துடன், மாபெரும் கொடை வள்ளல், கல்வி கண் திறக்க திரைக்கடல் தாண்டுபவர், பெருஞ்செல்வந்தர், நற்குணங்களின் சீமான், நவீன பாரி, இந்நகரின் மனித நேயத் தலைவர், பெருமதிப்பிற்குரிய ஐயா வரதராசன் அவர்களை அறிமுகம் செய்திட, நம் தமிழ்த்துறையில், 316 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவரும் பதினேழு முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் நாற்பத்திரண்டு இரண்டு ஆய்வியல் நிறைஞர்களையும் உண்டாக்கிய பேராசானும் சங்க இலக்கியத்தில் கரடி, சங்க இலக்கியத்தில் அருவி, சங்க இலக்கியத்தில் மீன்கள், சங்க இலக்கியத்தில் கூந்தல் என அரிய தலைப்புகளில் நூல்களையும் எழுதியுள்ளவருமான எங்கள் பெருமைமிக்க பேராசிரியர் முனைவர் து. ராசா அவர்களை வெல்வட் சொற்களால் அழைத்து மகிழ்கிறேன்,’ என்றார். சபையெழுப்பிய பலத்த கரவோசையை வரதராசன் விரும்பவில்லை என்பதை ஓர்ந்தவராக போடியத்தில் தலைநிமிர்ந்தார் து.ராசா.

‘நண்பர்களே, சுந்தரர் பாடுகிறார் கொடுக்கிலாதானை பாரியே என்று கொடுப்பார் இலை என. நம் நவயுக பாரியை; மண்ணின் மைந்தரை; சுந்தர சுவாமிகள் மட்டும் கண்டிருந்தார் எனில் அப்பெருமானுக்குப் பதில்……

 

4

‘ஆமா நான் ஏன் அருளாநிதியின் பண்ணார் கங்கர் நாவல்ல கவித்துவம் இருக்கானு தேடக்கூடாது’

‘பிரவீன் ணா….’ என்று சன்னலில் தலைமுட்டிக்கொண்டிருந்தான் நகுல்.

அவர்கள் மிச்சம் வைத்த, மிளகாய்ப் பொடியில் ஊறிய வெள்ளரி பிஞ்சைச் சுவைத்துக்கொண்டிருக்க, நின்றுகொண்டிருந்த பேருந்தின் உஷ்ண இருக்கைகள், மூவரையும் உறிஞ்சவாரம்பித்தது.


 

எழுதியவர்

ஒட்டக்கூத்தன் .
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x