குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்த நாளன்றுதான், அவர் காணாமல் போயிருந்தார். அவர் தங்கியிருந்த அறைக்கு இரு மாத வாடகையும், பல்கலைக் கழகத்திற்கும் வெளியே மேம்பாலத்தையொட்டிய சிற்றுண்டிக் கடையில் இருநூறு ரூபாயும் அவர் பெயரில் வரவேண்டிய பாக்கிகளாக இருந்தன. அறையை வாடகைக்கு விட்டிருந்தவர், “ இதுக்குத்தான் வெளிநாட்டு ஆளுவளுக்கு நான் அறைய வாடகைக்கு விடுறதில்ல” என்பதாக வெதும்பிக்கொண்டிருந்தார். அவர் காணாமல் போனவர் மீது இரக்கமோ அவர் என்னாகியிருப்பார் என்கிற கவலையோ அவரிடம் இருந்திருக்கவில்லை. “ஒரு வாரம் பார்ப்பேன். வரலையென்றால், அறையிலிருக்கிற சாமான்கள அள்ளி வெளியே எறிஞ்சிட்டு கேட்கிற ஆளுக்கு அறைய விட்டுருவேன்…” என்பதாகப் பொரிந்துகொண்டிருந்தார்.
சிற்றுண்டிக் கடைக்காரருக்கு இதயமிருக்கிற இடத்தில் கொஞ்சம் ஈவிருந்தது. அவர், வைத்துச்சென்ற கடன்பாக்கியை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அவரது பாவியங்களை நினைவுகூர்பவராக இருந்தார். ஞானசூரி காணாமல் போனச் செய்தியை எனக்கு முதலில் சொன்னவர் அவர்தான். அதைக் கேட்கையில் என் முன் கையிடத்து வளையல்கள் நழுவி கீழே விழுவதாக இருந்தன.
ஞானசூரி தமிழ்ப் பல்கலைக்கழகம் மொழிப்புலம், முனைவர்ப்பட்ட மாணவர். தமிழ் வேர்ச்சொல் ஆய்வு என்பதைப் பிறவிப் பெருங்கடல் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவாக யாரும் விரும்பி இறங்காத புலத்தில் வேர்ச்சொற்களைக் களைந்தெடுக்கும் தலைப்பின்கீழ் ஆய்வு மாணவராக இருந்தார். ஓரிரு மாதங்களில் ஆய்வேட்டை ஒப்படைக்கும் இறுதி கட்டத்திற்கு வந்திருந்தார். அவரது வழிகாட்டுநர் பேராசிரியர் சோமசுந்தரம் எனக்கும் வழிகாட்டுநர் என்பதால் அவர் மூலமாக ஞானசூரி எனக்கு அறிமுகமானார்.
பெயர்க்கேற்ப யாரையும் எளிதில் கவர்ந்திடும் முகம். முறுவல் பூக்கும் உதடுகள். கறள் நிறத்தவர். ஆதித்தமிழன் இப்படியாக இருந்திருப்பான் எனச் சொல்லும்படியான உடற்தினவு. துக்கம் ஓடிக்கிடக்கும் செந்நரம்புகளுக்கிடையில் நம்பிக்கை பூக்கும்படியான ஒளிவட்டக்கண்கள். அவரை நான் முதலில் பார்க்கையில் வேற்று மாநிலத்தவராக இருப்பாரென நினைத்து கையை உயர்த்தி, ‘ஹாய்’ என்றேன். பதிலுக்கு அவர் கும்பிட்டபடி, ‘வணக்கம்’ என்றார். அவரது வணக்கத்தில் சுத்தம் சுபாவமாக இருந்தது. ஒரு முனைவர்ப்பட்ட ஆய்வாளரிடம் கொஞ்சமேனும் இருந்தாக வேண்டிய கர்வம் அறவேயற்று பெற்றமென இருந்தார்.
‘இவளது பெயர் அமிர்தா. புதுக்கோட்டை. முனைவர்ப்பட்ட முதலாமாண்டு மாணவி’ என்பதாக அவருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ஞானசூரி என்னை ஆசிர்வதிக்கும் முகமாய் நெஞ்சுக்கு ஒரு கையைக் கொடுத்து, “என்ன தலைப்பில ஆய்வு செய்றீங்க?” எனக் கேட்டார்.
‘ ஈழத்தமிழில் ஆதித்தமிழ் மொழிச்சுவடுகள் ’ என்றேன்.
என் தலைப்பைக் கேட்டதும் அவரது இமைகள் நெற்றிக்கு ஏறி இறங்கின. “ உங்கள் வகிபாகத்தால் தமிழ் நற்றமிழுறும்“ என்றவர் என்னைப் பார்த்து சிரித்து வைத்தார்.
எங்களின் முதல் சந்திப்பு நடந்தேறிய இடம், ‘த’ வடிவக் கட்டிடமாக இருந்தது. கட்டிடத்தைச் சுற்றிலும் புதர், செடி, கொடிகளாக இருந்தன. கட்டிட சாளரம் வழியே மரக்கிளைகள், பூந்தாதுக்கள் தென்றலை வாரியிறைத்தன. கட்டிடத்தின் வாயிலிடத்தில் ஒரு பூவரசு மரமிருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் ஒரு குயிலும் அடைக்கலான் குருவியும் அருகருகே அமர்ந்தவாறு அலகுகளால் கொத்தி விளையாடிக் கொண்டிருந்தன. ஞானசூரி அவ்விரு பறவைகளையும் வைத்தக்கண் எடுக்காமல் பார்த்தார். வேறினப் பறவைகள் அவை. இனம் மறந்து விளையாடியதைப் பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது. எனது பார்வைக் குவியம் அப்பறவைகளைப் பார்ப்பதைக் காட்டிலும் ஞானசூரி உச்சரித்த ‘வகிபாகம்’ என்கிற சொல் மீதிருந்தது. ‘ வகிபாகம்’ என்னவோர் அழகான சொல், இதன் பொருள் என்னவென்று தேடத் தொடங்கினேன்.
பேராசிரியர் சோமசுந்தரம் என் சிந்தனையை அவர் பக்கமாகத் திருப்பினார். ஞானசூரியை அவருக்கும் அருகினில் அழைத்து தோளிட்டவராய் எனக்கு அறிமுகம் செய்தார். “இவரது பிறந்தகம் முள்ளிவாய்க்கால். யாழ்ப்பாண பல்கலைச்சாலையின் முன்னாள் மாணவர். இறுதிக்கட்டப் போரில் குடும்பத்தை இழந்து ஏதலியாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். இங்கேயே தங்கி ஆய்வு செய்து வருகிறார்”
அவரை வியப்புடன் பார்க்க ஒன்றுக்கும் மேற்பட்ட விடயங்கள் அவரிடமிருந்தன. நான் ஞானசூரியிடமிருந்து பார்வையை எடுத்து பேராசிரியரைப் பார்த்தவளாய், “அப்படிங்களா சார்?” என்றவள், சார் என உச்சரித்த நாவை இறுக ஒரு கடி கடித்து ‘ சாரி, அய்யா’ என்றேன்.
‘ ஏன் சாரி. பொறுத்தருள்க எனச் சொல்லிருக்கலாமே’ என்றார் ஞானசூரி.
‘ மன்னிக்க வேணும்’ என்றேன்.
ஞானசூரி முன் உதடுகளால் சிரித்தார். மாந்தளிரில் அசோகத்தளிர் உரசுவதைப் போல அவரது உதட்டு அசைவுகள் இருந்தன.
என் ஆய்வு, ஈழத்தமிழுடன் தொடர்புடையது என்பதால் ஞானசூரியுடன் தினமும் உரையாட வேண்டியதாக இருந்தது. அவர் உச்சரித்த வகிபாகம் சொல் குறித்து ஆராய விரும்பி, மொழிப்புல நூலக அகரமுதலிகளைப் புரட்டினேன். தற்கால, ஈழத்தமிழ், வேர்ச்சொல் அகரமுதலி…என்று பலவற்றில் தேடியும் அச்சொல்லைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இச்சொல் குறித்து ஞானசூரியிடம் கேட்டேன். “இந்தச்சொல் பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி தமிழுக்குக் கண்டுகொடுத்தச் சொல். கொழும்பு இதழியல் கல்லூரி – ஊடகத்துறை தொடர்பான ஒரு நூலுக்கு அவர் அணிந்துரை எழுதுகையில் ஏதேனும் ஒரு துறையில் யாரேனும் ஒருவர் முக்கிய பங்களிப்பு செய்வதை வரலாற்று ரீதியாகக் குறிப்பிடுவதாக இருந்தால் அதனை வகிபாகம் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென”க் குறிப்பிட்டு எழுதியதை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
ஞானசூரியின் இத்தகவல் எனக்குத் தேவையானதாக இருந்தது. இதுபோன்ற சொல்லுக்காக அவரிடம் தினமும் உரையாடினேன். நாங்கள் அதிகம் சந்தித்து உரையாடிய இடம் பல்கலைக்கழக நூலகமாக இருந்தது. இந்தியப் பாராளுமன்றம் வடிவிலான கட்டிடம் அது.
ஒரு நாள் இந்த கட்டடம் குறித்து உரையாடுகையில் எனக்குள் புகுந்து திருத்தினார். “பாராளுமன்றம் எனச் சொல்லாதீங்க. நாடாளுமன்றமென சொல்லுங்க”
“ இரண்டும் ஒன்னுதானே?“ என்றேன்.
“ எப்படி ஒன்றாக முடியும். பாராளுமன்றம் நம்மை ஆண்ட பிரிட்டிஷாருக்குப் பொருந்தும். அவர்கள் உலகை ஆண்டவர்கள். இந்தியா அப்படியல்ல“
அவரை நான் வியப்புறப் பார்த்து, “ நல்லா சொன்னீங்க” என்றேன்.
“ இது நான் சொன்னதில்ல, இராஜாஜி சொன்னது” என்றார்.
இப்படி நிறைய சொன்னவர் அவர். சேடிஸ்ட் என்கிற சொல்லின் தமிழ்ப்பதம் அஞரி ; சர்ப் என்றால் பொங்கோதம்; ஒள்ளி என்பதே ஒளியானது; மிசை என்பது மீசை,.. இப்படி.
நான் எதையேனும் தவறாக உச்சரித்தால் என்னை முற்றாள், முற்றாள் எனத் திட்டுவார். ஒரு நாள் சொன்னேன், “அய்யே, முற்றாள் அல்ல, முட்டாள் ”. என் ஒரு பக்கக் காது மடலைக் கிள்ளியவர், “முற்றாள் என்பதே முட்டாள் என்றானது. அறிவுக்கு இடமில்லாம உடல் முழுதும் வெற்று ஆள் என்பது இதன் பொருள்” என்றார். அனலி, ஓலக்கம், கறள், காலதர்,…இப்படி நிறையச் சொற்களை எனக்கு அவர் அறிமுகம் செய்தார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது என் இதயத்திற்கு அவசரத் தேவையாக இருந்தார்.
இதற்கும் முன்பு அவர் அறையெடுத்து தங்கியிருந்த பெரியகோவிலையொட்டிய அறையில் சென்று விசாரித்தேன். அவருக்கு நெருக்கமான நண்பர்கள் வல்லத்திலும் சூரக்கோட்டையிலும் இருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்துப் பாருங்கள் என்றார்கள். அவர்களது வீடுகளுக்குச் சென்று விசாரித்தேன். எங்கு விசாரித்தும், அவர் குறித்த நம்பிக்கையான செய்தி எனக்குக் கிடைக்கவில்லை.
ஞானசூரியிடம் நான் நெருங்கிப் பழகியதன் பிறகு எங்களுக்குள் எந்த ரகசியமும் இருந்திருக்கவில்லை. அவர் கண் முன்னே உடன்பிறந்த சகோதரி சீரழிந்து சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்டத் துயரத்தையும் கூட அவர் என்னிடம் பகிர்ந்திருக்கிறார். என்னிடம் சொல்லாமல் அவர் எங்கேயும் சென்றதில்லை. அப்படியே சென்றாலும் பாம்பின் காலை பாம்பறிவதாய் அதை நான் மோப்பம் பிடித்துவிடுகிறவளாய் இருந்தேன். அவரது உள்ளத்தடாகத்திலிருக்கும் எண்ணச் சுவடுகளைக் கண்டுபிடிக்க முடிந்த என்னால் அவர் தொலைந்துபோன சுவட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆளும் அரசு இரண்டாம் முறையாக ஆட்சியமைத்த நாட்கொண்டு அவர் டெல்லி அரசியலைக் கவனித்து வருபவராக இருந்தார். ஈழ ஏதிலிகளை இந்திய அரசு தன் குடிமக்களாக ஏற்கப்போகிறது என்கிற செய்தியை அவர் யார் மூலமோ தெரிந்து வைத்திருந்தார். அச்செய்தியை என்னிடம் அவர் பகிர்ந்து அகம் மலர்ந்தார். “அமிர்தா, நானும் நீயும் நாமாகப் போகிறோம்” என்றவரின் கண்கள் கலங்கி உதடுகள் கூட்டுக்கேங்கும் உயிராகத் துடித்தன.
“ஒரு நாள் கரிகாற்சோழன் அரங்கத்தில் கவிதைப் படித்தேனே நினைவிலிருக்கிறதா அமிர்தா. நீ வசிக்க வீடு இல்லையென தவிக்கிறாய். நான் வாழ நாடில்லையென தவிக்கிறேன்“
“ ஆம், இருக்கிறது சூரி”
“அக்கவிதை விரைவில் பொய்க்க இருக்கிறது” என்றவர் எனது இரு கைகளையும் இறுகப் பிடித்துக்கொண்டு ஈரம் கசிய கண்களில் ஒற்றிக்கொண்டார்.
“ ஒரு வேளை, நீங்கள் நினைக்கிறது நடக்காது போனால்?” இதை நான் சொல்கையில் ஒரு நகரப் பேருந்து உரக்க ஒலியெழுப்பியபடி சென்றது.
“ என்னவோ கேட்டாயே?” என்றார் இமைகளை அத்தனை வேகமாகச் சிமிட்டிக்கொண்டு.
நான் சொன்னது அவருக்குக் கேட்காதது, ஒரு வகையில் நல்லதாக இருந்தது.
“ சரி, கிளம்பலாமா?” என்றேன்.
ஞானசூரி கைகளைத் தட்டிக்கொண்டு சிரித்தார். ஞானக்கூத்தன் வகைச் சிரிப்பு அது. இலட்சத்தில் ஒருவருக்குத்தான் இப்படியாகச் சிரிப்பு வரும். “இந்தப் பூமி சுற்றுவது உண்மைதான் அமிர்தா” என்றார். அவர் அப்படியாகச் சிரித்ததற்கும் சொன்னதற்கும் ஒரு காரணமிருந்தது. “சரி, கிளம்பலாமா?” என்பது அவர் வழக்கமாக என்னிடம் கேட்கும் கேள்வி. அன்றைய தினம் அவரது குரலில் நான் கேட்டிருந்தேன்.
ஒரு நாள் இருவரும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்குச் சென்றோம். நான் பார்க்க வேண்டிய இடமாக அது இருந்தது. ஒரு நகரப் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்தபடி பயணித்தோம். முற்றத்திற்குள்ளாக காலெடுத்து வைக்கையில் வானத்தில் ஒரு ஜெட் விமானம் இறைந்து சென்றது. அவர் பதற்றத்திற்கு உள்ளானார். என்னை விட்டுவிட்டு மறைவான இடத்திற்கு ஓடினார். அவர் பின்னே ஓடி, அவரது கையைப் பற்றினேன். “ வேண்டாம் அமிர்தா ”
“ ஏன்? ”
அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. ஜெட் விமானத்தின் பேரிரைச்சல் அவரை நிலைகுலையச் செய்தது.
“ ஞானசூரி, நானொன்று கேட்கலாமா?”
அவரது கண்கள் என் பக்கமாகத் திரும்பி, என்ன என்று கேட்பதைப் போல பார்த்தன.
“ இப்படியாக இன்னொரு முறை என்னை விட்டுட்டு ஓடிட மாட்டீங்களே?”
அவர், முகத்தைச் சட்டென திருப்பிக்கொண்டார். நான் அவரது கையை இறுகப் பிடித்தவளாய்,
தோளில் சாய்ந்துகொண்டேன். அவரிடமிருந்து எழுந்த வியர்வை, உடலின் தகிப்பு, என் மூச்சுக்கு இதமாக இருந்தது. எங்கள் இருவரின் இதயத்துடிப்புகளும் ஒன்றுபோலத் துடித்தன.
அவரது தோளில் நான் சாய்ந்திருக்க அவரது விரல்கள் என் கூந்தலைக் கோதிக் கொடுத்தன. பேருந்து சாளரம் வழியே உடுக்கை இடையென வளைந்தோடும் காவிரி, காவிரி கரையோர ஞாழல் மரங்கள்; அதில் பூத்துச் சொரிந்திருக்கும் வெண்சிறு கடுகைப் போன்ற சிறு பூக்கள்; மருத மரத்தின் செம்மலர்கள், பழம், பூ, மீன் கடைகள்,… என யாவற்றையும் ரசித்தவர்களாய் திரும்பினோம்.
எனக்கும் அவருக்குமான உறவுக்கு என்ன பெயர்? அருள் என்பதா, அன்பு என்பதா? தொடர்பில்லாதவரிடம் உண்டாகும் இரக்கம் அருள். தொடர்புடையாரிடம் உண்டான காதல் அன்பு, முன்னோர் சொன்னது நினைவுக்கு வந்தது. அருளா, அன்பா? நான் அருளெனும் அன்பீன் குழவியோ, திருவள்ளுவர் போக்கில் தேடினேன்.
“ அவருக்கும் உனக்கும் என்னடி?” என் தோழிகள் கேட்டார்கள்.
“ அவரது நெஞ்சினில் பூக்கும் குரலிப்பூவடி நான் ” என்றேன்.
என் தோழிகள் முத்துசிந்துவதென சிரித்து, “அவர் கையையும் காலையும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவையடி நீ” என்றார்கள். இதைச் சொல்லிக் கேட்கையில் என் காது மடல்கள் நாணின.
ஆற்றொழுக்கான எங்கள் பயணத்தில் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறுக்கீடானது. என்றைக்கு அப்படியொரு சட்டம் பேசும் பொருளானதோ அதன்பிறகு என் பெயரை அவர் உச்சரிக்க மறந்திருந்தார். எந்நேரமும் டெல்லி, டெல்லி என்றே இருந்தவர். ஒருநாள் அவரிடம் கோபமாக கேட்டேன். “நீங்கள் என்னைக் காதலிக்கிறீங்களா, இல்லை டெல்லியைக் காதலிக்கிறீங்களா?’
அவர் நின்று நிதானமாக என்னைப் பார்த்தார். என்னைப் பார்த்தல் என்பது என் கண்களைப் பார்ப்பதாக இருந்தது.
“ என்னை ஏமாத்திடுவீங்களோனு பயமா இருக்கு சூரி?”
“ எனக்கும் கூட அப்படித்தான் இருக்கு. டெல்லி என்னை ஏமாற்றி விடுமோனு”
அன்றைய தினம் என்னிடம் அவர் சரியாக முகம் கொடுத்துப் பேசிடவில்லை. அவரது பார்வை, கவனம், ஏக்கமெல்லாம் டெல்லியின் மீதிருந்தது.
ஞானசூரி காணாமல் போன செய்தி பல்கலைக்கழகத்திற்குள் பேசும் பொருளானது. அவரைத் தேடி பலரும் மொழிப் புலத்திற்கு வருவதாக இருந்தார்கள். ஒருநாள் ஒரு வட்டிக்கடைக்காரர் வந்தார். அவரது கையில் ஞானசூரியின் கடவுச்சீட்டு இருந்தது. அதைக் காட்டியபடி இதை அடமானம் வைத்து தேர்வுக்கட்டணத்திற்காக இருபதாயிரம் ரூபாய் கடன்வாங்கியதாகவும் இதுநாள் வரை வட்டித் தரப்படவில்லை எனவும் சொன்னார். “இதெல்லாம் உனக்குத் தெரியுமா?”, எனக் கேட்பதைப் போல என் தோழிகள் என்னைப் பார்த்தார்கள். நான் மடந்தையாக உதடுகளைச் சுழித்தேன்.
ஞானசூரியின் முகநூல் பக்கம் முடமாகி இருந்தது. கடைசியாக அவர் இடுகை செய்த ‘விரைவில் ஒரு நற்செய்தி’ என்கிற பதிவுடன் நின்றிருந்தது. அப்பதிவுக்கு அறுபத்தேழு விருப்பங்கள் விழுந்திருந்தன. ஒன்றிரண்டு பேர் கருத்து பதிவிட்டிருந்தார்கள். அவரது முகநூலின் உள்பெட்டிக்குத் தொடர்ந்து நான் கேள்விகள் அனுப்புவதாக இருந்தேன். “எங்கே இருக்கீங்க சூரி?”
என் தோழிகள் புலனம் வழியே அவரது புகைப்படத்தைப் பதிவேற்றி இவர் கொஞ்ச நாட்களாகக் காணவில்லையெனவும் இவரை எங்கேயேனும் பார்க்க நேர்ந்தால் தகவல் தெரிவிக்கும்படியும் பதிவிட்டார்கள்.
ஒரு நாள் காவல்துறையினரின் விசாரணைக்கு நான் அழைக்கப்பட்டேன். அவர்கள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் என் பெயரைச் சேர்த்திருந்தார்கள். நாங்கள் கைகோர்த்துக்கொண்டு உலாவிய கோவில், குளம், பூங்கா, நூலகம்… எல்லா இடங்களிலும் அவர் குறித்த கேள்விகள் இருந்தன. அவருக்கு நானும் எனக்கு அவரும் அனுப்பிய குறுந்தகவல்களை எடுத்து வைத்துகொண்டு காவல்துறையினர் கேட்ட புல்லுரை கேள்விகளால் என் அம்மா இரு காதுகளையும் இறுகப் பொத்திக்கொண்டு கத்தினாள். “இதையெல்லாம் காதுல கேட்கவா உன்னை நான் முனைவர்ப் படிப்புக்கு அனுப்பி வச்சேன்” தலையில் அடித்துக்கொண்டாள்.
“அவனிடம் எதையடி கண்டு மயங்கினாய்?” அம்மா அவரை அத்தனை திருத்தமாக அவனென்று விளித்தது, எனக்கு வலித்தது. அம்மாவின் கேள்விக்கு எதை நான் பதிலாகச் சொல்வேன். “அவரது மொழியறிவுதான்ம்ம்மா“
“அய்யோ, என் மகள் பேசுறதைப் பாருங்களே!” தலையைச் சுவரில் முட்டிக்கொண்டாள். அம்மாவின் பார்வையில் நான் வண்டுகள் மொய்த்த குவளை மலரென ஆகியிருந்தேன்.
ஒருநாள் இராசராசசோழன் சிலையின் காலடியில் அமர்ந்து கடல் கொண்டும், காலம் கொள்ளாத சோழனையும் ஞானசூரியையும் ஒருசேர நினைத்து கலங்கினேன். இன்னொரு நாள், பெரியகோவிலுக்கும் பின்புறம் துணங்கைக் கூத்து வீதியில் ஓர் ஆடுகளத்திற்குரிய மகளாக நின்றுத் தேடினேன். தேடியென்ன, அலைந்தென்ன, என் பார்வைக்கு யாரும் அவரைப் போல தெரிந்தார்களே தவிர அவராகத் தெரியவில்லை.
இத்தனை நாட்கள் அலைந்தும் அவருக்காக மெலிந்தும் அவர் மீது எனக்கேன் வெறுப்பு வரவில்லை?. என் மீதே எனக்குக் கோபம் வந்தது. அவரை நான் மறக்க நினைக்கையில் பச்சைப் பாம்பினது சூலின் முதிர்ச்சியைப் போன்று எனக்குள் அவர் வளர்ந்து வந்தார்.
ஒரு நாள் தோழிகள் எனக்கு ஆறுதல் சொல்ல வீட்டுக்கு வந்தார்கள். என் மெலிந்த உடலைப் பார்த்து இரங்கியவர்கள், “என்னடி ஆச்சு உனக்கு. அத்திப் பழத்தை ஏழு நண்டுகள் சிதைத்ததைப் போலிருக்காயே” என்றவாறு என் முகத்தைத் துழாவி, “இது என்னடி கன்னத்தில் காயம்?” எனக் கேட்டார்கள்.
“அவரது நகக்குறி. இதை நான் அவரது நினைவாக வச்சிருக்கேன். இந்தக் குறிக்குக் காரணமான நகம் என்னை அவருக்கு ஞாபகப்படுத்துமா?” எனக் கேட்டு வைத்தேன்.
“ அமிர்தா, அவரையே நினைச்சு உன்னை நீ வதைத்துக் கொள்ளாதே. அவர் எங்கேயும் போயிருக்கமாட்டார். அவரது கடவுச்சீட்டு அடமானமிருக்கு. அவரால வெளிநாட்டுக்கு விமானமேறி பறக்க முடியாது. அவர் படித்தப் பட்டச் சான்றுகள் பல்கலைக்கழகத்தில இருக்கு. அதில்லாமல் வேற பல்கலைக் கழகத்தில சேர முடியாது. கள்ளத்தோணியில பிறந்தகம் செல்ல வாய்ப்பில்லை. இரு நாடுகளும் கடலோரக் கண்காணிப்பத் தீவிரப்படுத்தியிருக்கு. நடந்தே கடலைக் கடக்க அவரொன்னும் சித்தரோ, ராமரோ அல்ல. அவர் ஏதிலி. எல்லையைத் தாண்டி வெளியே போக முடியாது. அப்படியே போனால் காவல்துறையினர் பிடிச்சிடுவாங்க.
இதில்லாம கடவுச்சீட்டை நம்பிக் கடன் கொடுத்தவர் அவரை ஆள் வைத்து ஊர், ஊராத் தேடுறார். நாங்கள் சொந்தக்காரங்க மூலமாகத் தேடி வர்றோம். ஒரு வாரமாவே பத்திரிகையில அவரப் பத்திதான் செய்தி. எப்படியும் உனக்கு அவர் கிடைச்சிடுவாரு” என்றவாறு என்னைத் தேற்றினார்கள். நான் மெல்ல சமாதானமடைந்தேன். என் தோழிகள் என்னை மேலும் தேற்றும் விதமாக கடைத் தெருவுக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஒரு தெருவில் ஒரு கட்டுவிச்சி நெற்றியில் பெரிய பட்டையிட்டுக்கொண்டு சோழிகள் உருட்டிக்கொண்டிருந்தாள். என் தோழிகள் அவளிடம் என் கையை நீட்டச்சொல்லி பணித்தார்கள். நானும் நீட்டினேன். அவள் என் ரேகையைப் பார்த்தாள். அவளது குலதெய்வத்தை நெஞ்சுருகப் பாடி கண்களை இறுக மூடி, சோழிகளைக் கண்களுக்குக் கொடுத்துக் குலுக்கி உருட்டினாள். சோழிகள் முத்துகளாக விழுந்தன. சோழிகளை அள்ளி கைக்குள் குலுக்கிக்கொண்டு சொன்னாள், “தாயி, கிரகம் சரியில்ல. பத்து வருசமா இந்தக் கிரகம் பிடிச்சு ஆட்டுது. அஞ்சு வருசம் முடிஞ்சிருச்சு. இன்னும் அஞ்சு வருசமிருக்கு. இந்த அஞ்சு வருசம் முடிஞ்சதும் நீ நினைக்கிறது நடக்கும். ஆசைப்பட்டது கைக்கூடும்” என்றவள், மடிக்குள் கையை விட்டு திருநீற்றை அள்ளி என் நெற்றியில் பூசி வாய்க்குள் ஒரு கீற்று உதறினாள்.
நான் எழுந்து என்னைச் சுற்றிலும் ஒரு பார்வைப் பார்த்து திசைகளுக்குள் அவரைத் தேடினேன். என்னைப் போலவே ஒரு பசு அதன் இணையைத் தேடிக்கொண்டிருந்தது.
– அண்டனூர் சுரா
எழுதியவர்
-
அண்டனூர் சுரா, (பிறப்பு 1983) என அழைக்கப்படும் சு.இராஜமாணிக்கம் தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார்.
வெளியிட்ட நூல்கள் -
சிறுகதைத் தொகுப்புகள் : மழைக்குப் பிறகான பொழுது (2014),திற (2015), ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை (2016), பிராணநிறக் கனவு (2018), எண்வலிச்சாலை (2020), எத்திசைச் செலினும் (2020), தடுக்கை (2021), குரலி (2024)
கட்டுரைத் தொகுப்புகள்: முட்டாள்களின் கீழ் உலகம் (2015),அழிபசி தீர்த்தல் (2019), சொல்லேர் (2021)
புதினங்கள் : முத்தன்பள்ளம் (2017), கொங்கை (2018), அப்பல்லோ (2019), தீவாந்தரம் (2022), அன்னமழகி (2022).
விருதுகள்
தமிழக அரசின் விருது (திற சிறுகதைத் தொகுப்பு), என்சிபிஎச் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது, இலங்கை உதயணன் விருது உள்ளிட்ட ஐந்து விருதுகள் (முத்தன்பள்ளம்), இலண்டனிலிருந்து வெளிவரும் புதினம் இதழ் வழங்கிய பரிசு, கவிதை உறவு விருது, படைப்பு விருது, தமிழக அரசின் விருது (பிராண நிறக்கதவு, சிறந்த நூல்), எழுத்து தமிழிலக்கிய அமைப்பு விருது (அன்னமழகி) உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.