நேற்றிரவு நீருக்கடியில் விழுந்திருக்கும் அந்த சிவப்புநிற ஒளியை நான் பார்த்திருக்கத் தேவையில்லை.
சிவப்புநிறம் அபாயத்தை உணர்த்துகிறது
அபாயத்தின் குரல் அதனிடமிருந்து கேட்கிறது .
நீர்க்கரையிலிருந்து காய்ந்த கருவேலமுட்களின் கிளைகளை இழுத்துப்போகிறாள் தூய்மைப்படுத்துபவள்.
இன்று நுங்குகள் வாங்கப் புறப்பட வேண்டும்.
கரையோரம் நிற்கிற பனைமரத்தில்
நுங்குகள் காய்த்திருக்கின்றன
மரநிழல் நீரில் கலங்கல் பாரித்திருக்கிறது
நுங்குகள் வாங்கப் புறப்பட வேண்டும்.
இப்போது
இந்தப் பனைமரத்திலிருந்து யார் எனக்கு நுங்குகள் பறித்துத் தரப்போகிறார்கள்
நீலச் சிறகு பறவை
நிலத்திலிருந்து மின்சாரக் கம்பிக்குப் பறந்து அமர்கிறது
பிறகு நிலத்திலிறங்கி சில நடைகள்
எலுமிச்சை வண்ணப் பட்டுப்பூச்சிகளிரண்டு
மிதிவண்டியின் மிதிகளாகச் சுழன்றுபோகின்றன.
காகம் தோட்டவேலியின் நடுகல்லிலமர்ந்து
ஒருகண் பார்த்தது.
வெளிர்நீல வீட்டிற்குப் பறந்துபோய்
சுற்றுச்சுவரிலமர்கிறது.
காகம் நான்
வெளிர்நீல வீடு
நடுவில் பயனற்று நிற்கும் பனை
அபாயத்தின் குரல்
நீருக்கடியில் மறைந்துபோயிருந்தது.
சிவப்பு அழிந்து
காய்ப்பு நிழல் மிதக்கிறது.
நுங்குகளும் வேண்டாம் .
இந்த வேடிக்கைகளும் வேண்டாம்.
உச்சிவெயிலில் வெளியில் போகக்கூடாதாம்
இதுவே அபாயத்தின் குரல்.
எழுதியவர்
இதுவரை.
- கவிதை18 October 2021அபாயத்தின் குரல்
அருமையான கவிதை வாழ்த்துகள்