இருகோடமைந்த நிலை
யாதொன்றையும்
அந்த மென்னிறகின் தொடுதலுணர்வாய்
தனக்கெனவே இருத்திக்கொள்ள
துஞ்சிய சுமையெனவே
என்னிருப்பின் ஏகாந்தம்
உரைக்கையில் உள்ளது
பின்னுற வைக்கும் என்னில்
எவ்வித துலவியமும்
சமன்செய்யாத
இருகோடமைந்த நிலை!
பூவுடனான புணர்தலில்
பூச்சியின் உயிர் பிறிதல் போல
என்னுணர்வின் மடிந்த சில
ஊசி மிடறேனும் – எனக்கென
பிரத்தியேகப்படாத குவலையில்
மாற்றம் செய்வேன் அன்று
அந்த மென்னிறகாய்
இருகோடமைந்த நிலையில்!
ஏதுப்போலி!
புரிதலின் புணர்வில்தான்
புளங்காகிதங்கள் புலம்பெயர்ந்து
அர்த்தமற்றுப்போகிறது
புளங்காகிதமற்று
இருதலையுள்ள பறவையாய்
எத்தனை தனிமையை
அந்த ரணத்திற்கு ஒப்புக்கொடுத்து
நகர்ந்திருப்பாய்
மனச் சமவெளியில்
யாதொன்றும் ஆயத்தப்படாத
பிறழ்சின் ஓரணியில்
பயனற்ற ரணங்களும்
காற்றறைகளின் விசைக்காற்றில்
விரையமாகத மூச்சுக்காற்றும்
பரிவேடம் கொள்கையில்
பற்றுக்கோட்டில் விலகிய
அடையாளத்தை தான்
அவ்வப்போது ஆய்வு கொள்கிறது
என் வெளிப்பகட்டின்
ஒப்புமைப்படாத ஏதுப்போலி !
இங்கனம் நான்!
இறந்த பின்னும்
இங்கனம் நான்
வாழ்தலுக்கான விருப்பத்தோடு
மீண்டும் மனுசியாக விரும்பவில்லை
புதைப்பதற்கு இறுதியாய்
இங்கனம் என் நகராமைக்கு
அறுக்கப்பட்ட உள்ளங்கையோடும்
உள்ளங்காலோடும் குருதிவழிய
என்னருகில் தூவிவிட்ட எள்ளை
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன் !
இன்னும் வேர்கள்
படரத்தொடரவில்லை
என்னிலிருந்து
துளிர்விடும் நகலுக்கு!
கிளைந்தோடாது
தோல்மேல் படரும்
நின்று வளராத துகிற்கொடிகளில்
அந்த இழிச்சொற்களின்
மிகுதியால் படிந்த உப்புண்டு
இப்படியான ஒருத்தியாய்
என்னின்னொரு நகலுக்கு
எனக்கோ என் நகலுக்கோ
வேரோ காலோ
முளைத்தோ படரவோ ஆரம்பித்தால்
இந்த வாச வனம்தனில்
என் ஆசையும் கொஞ்சம்
வாழ்ந்துக் கொள்ளும்
மீண்டும் இங்கனம் நானெனும்
நானான மனுசியாய் !
எழுதியவர்
இதுவரை.
- கவிதை18 October 2021ராகினி முருகேசன் கவிதைகள்
எழுத்தியக்க ஆற்றலை இம்மியளவும் பிசகாது உணர்வில் தூண்டும் உன்னத படைப்பு
வாழ்த்துக்கள்
மகிழ்வும் நன்றிகளும்
Osam
Thank you sago
அருமையான எண்ணங்களின் வரிகள்.. வாழ்த்துக்கள்..
மகிழ்வும் நன்றிகளும் அண்ணா