20 January 2025
SP Saritha Jo

“மாலினி மாலினி” என்ற அம்மா ராகிணியின் குரல் கேட்டு அமைதியாகி விட்டாள்.  மாலினி மட்டுமல்ல அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாலினியின் நண்பர்களுக்கும் கூடத்தான் . மாலினி ஒவ்வொரு வாரமும் விடுமுறையின் போது வீட்டின் முன் உள்ள வேப்ப மர நிழலில் நண்பர்களுடன் விளையாடுவாள். விளையாட்டுகளுக்கு இடையே சண்டைகள் சமாதானம் என்று அந்த நாள் முழுவதும் ஆரவாரமாக இருப்பார்கள். ராகிணிக்கு அவர்கள் கத்துவது பிடிக்கவே பிடிக்காது. அடிக்கடி வீட்டிற்குள் இருந்து “மாலினி மாலினி” என்று கூப்பாடு போட்டுக் கொண்டே இருப்பார். அப்படி அழைக்கும் கூப்பிடும்  குரலை வைத்தே அவர் என்ன சொல்கிறார் என்பது மாலினிக்கு புரிந்து விடும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னுடைய அம்மா அழைக்கும் விதத்திலேயே கோபமா மகிழ்ச்சியா என்று தெரிந்துவிடும்.

சீக்கிரம் உள்ளே வந்துவிடு. உங்களுடைய சத்தம் எனக்கு கோபத்தை வரவழைக்கிறது. என்று சொல்லாமல் சொல்லியதாக மாலினி உணர்ந்து கொண்டாள்.

“சரி நாளைக்கு விளையாடலாம் எங்க அம்மா கூப்பிடுகிறாங்க” என்று கூறி, மண்ணில் கட்டிக் கொண்டிருந்த கோபுரத்தில் இருந்து கைகளை உதறி தன்னுடைய பாவாடையில் துடைத்துக் கொண்டாள். அவளோடு விளையாடிக் கொண்டிருந்த ரோஜாவும் கிருஷ்ணனும் கூட கைகளில் இருந்த மண்ணைத் தட்டி விட்டபடி கிளம்பினார்கள். மாலினி பூனையைப் போல் மெதுவாக வீட்டிற்குள் அடி மேல் அடி வைத்து நுழைந்தாள். ராகிணி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். மாலினியைப் பார்த்தவுடன் “கைகால் கழுவிட்டு வந்து ஹோம் ஒர்க் முடி. லீவு விட்டாப் போதுமே ஒரே ஆட்டம் பாட்டம் கத்தல் நிம்மதியா ஒரு நாள் டிவி பாக்க முடியுதா?

ஞாயிற்றுக் கிழமை எதுக்கு லீவு விட்டுத் தொலைகிறார்களோ! எப்படித்தான் பள்ளிக்கூடத்தில் அத்தனை பேரை வச்சு மேய்க்குறாங்களோ” என்று சலித்துக் கொண்டார் ராகிணி.

கை கால் முகம் கழுவி விட்டு அம்மாவின் அருகில்  அமர்ந்து நோட்டுப் புத்தகங்களை எடுத்து வைத்துப் படிக்க ஆரம்பித்தாள் மாலினி.

அந்த நேரம் அவள் நோட்டின் மீது ஒரு கட்டெறும்பு ஏறியது.

“நானும் உன்ன மாதிரி பிறந்து இருந்தால். ஜாலியா இருக்கலாம். நீ கத்துனா உன்ன யாரு கேக்க மாட்டாங்க இல்லையா?” என்று எறும்பைப் பார்த்துக் கேட்டாள் மாலினி.

அதைக் கவனித்த  ராகிணி மாலினியின் அருகில் வந்து “அதுக்கு இல்லடா, ரொம்ப சத்தம் போட்டா எனக்கு ரொம்ப தலை வலிக்குது அதுதான்” என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

மாலினி எழுந்து சென்று அம்மாவைப் பின்புறம் கட்டிக்கொண்டு “சாரி அம்மா இனிமேல் நாங்கள் சத்தம் போடாமல் விளையாடறோம்” என்றாள்.

“இனிமேலு நாங்க சத்தம் போடாம விளையாடுவோம் நீங்களும் சத்தம் போடாம விளையாடனும் சரியா?” என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார் ராகிணி. அங்கு கேஸ் சிலிண்டரின் பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த கரப்பான் பூச்சியைப் பார்த்து பேசிக்கொண்டு இருந்தாள் மாலினி.

அன்றிரவு தூங்கிக் கொண்டிருந்த ராகிணியை யாரோ தட்டி எழுப்புவது போல் இருந்தது கண்விழித்துப் பார்த்தார். அவருடைய உயரத்திற்கே ஒரு கரப்பான் பூச்சி நின்று கொண்டிருந்தது. பயந்து போய் திருதிருவென்று விழித்தார். ராகிணியிடம் “பயப்படாதே என்னோடு வா” என்று அழைத்தது அந்தக் கரப்பான்பூச்சி. ராகிணி மெதுவாக கரப்பான் பூச்சியோடு நடந்து சென்றார். அது சமையல் அறைக்குள் இருந்த ஒரு சின்ன சந்திற்குள் நுழைந்தது கரப்பான் பூச்சி தன்னுடைய உயரத்தில் இல்லை, தான்தான் கரப்பான்பூச்சி உயரத்துக்கு மாறி விட்டோம் என்று அப்போதுதான் ராகிணிக்குப் புரிந்தது.

அந்தச் சின்ன சந்திற்குள் சென்றபோது நூற்றுக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன.

சில கரப்பான்பூச்சிகள் ஏதோ  மும்மரமாக வேலைகளைச் செய்து கொண்டு இருந்தன.சில கரப்பான்பூச்சிகள் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தன. அங்கு இருந்த குட்டிக் கரப்பான் பூச்சிகள் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தன. ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் விளையாடிக் கொண்டிருந்தன.

“பாருங்கள் பார்ப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குட்டிக் கர்ப்பான் பூச்சிகள் விளையாடுவதைப் பார்த்து தனது முன் கால்களைத் தூக்கி  தட்டி  கூறியது ராகிணியை அழைத்து வந்த கரப்பான் பூச்சி. ராகிணிக்கு சத்தம் காதைப் பிளந்தது. அங்கிருந்த கரப்பான் பூச்சிகள் அந்தச் சத்தத்தைப் பொருட்படுத்தவே இல்லை.  அவைகள் தனது முன்னங் கால்களைத் தூக்கி தட்டியபடியே குட்டிக் கரப்பான்பூச்சிகளை உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தன.

திடீரென ஒரு எறும்பு ஒன்று ராகிணியின் கையைப் பிடித்து இழுத்தது. எறும்பின் உயரத்துக்கு மாறிவிட்டாள் ராகிணி.  பக்கத்தில் எறும்புகள் இருக்கும் மற்றொரு சிறிய பொந்துக்குள்  ராகிணியை அழைத்துச் சென்றது  எறும்பு. அங்கு தனித்தனியாக அறைகள் இருந்தன. ஒவ்வொரு அறையிலும் எறும்புகள் வேலை செய்து கொண்டிருந்தன. அங்கு குட்டிக் குட்டி எறும்புகள் விளையாடிக் கொண்டும் சத்தம் போட்டுக் கொண்டும் இருந்தன. “பாருங்கள் இந்தக் குழந்தைகளின் சத்தம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது” என்றது ராகிணியை அழைத்துக் வந்த எறும்பு கூறியது. ராகிணிக்கு காது வலித்தது. “ஐயோ என்ன விடு நான் போகிறேன்” என்ற சத்தம் கேட்டு ராகிணியைத் தட்டி எழுப்பினாள் மாலினி.

கண் விழித்த ராகிணிக்கு எதிரே மாலினி நின்று கொண்டிருந்தாள்.

” என்ன ஆச்சும்மா?” என்று கேட்டாள்.  ராகிணி  கண்களைத் தேய்த்து திறந்து பார்த்தார்.

அப்போதுதான் தான் கண்டது கனவு என்று ராகிணிக்குத் தெரிந்தது. “ஒன்னும் இல்லடா கண்ணா. ஒரு கனவு” என்று கூறிவிட்டு ராகிணி மாலினியைக் கட்டி அணைத்து தூங்கினார்.

அடுத்த நாள் பள்ளி முடிந்து மாலினி மிகவும் சோகமாக வந்து கொண்டிருந்தாள். வீட்டிற்கு வந்தவுடன் கண்கள் சிவந்து இருந்ததைப் பார்த்த ராகிணி “என்ன ஆச்சு மாலினி?” என்று கேட்டார்.

“நான் எப்பப் பாத்தாலும் பேசிக்கிட்டே இருக்கேன்னு எங்க மிஸ் என்னைத் திட்டிட்டாங்க”

“நீ ஏன் பேசிக்கிட்டே இருக்கே?”

“நான் பிரேக் நேரத்திலையும் லஞ்ச் நேரத்திலையும் தான் பேசுறேன். அதுக்குக் கூடத் திட்டுறாங்க அம்மா. பிரண்ட்ஸோட எப்பத் தான் பேசுறது? என்று கேட்டாள் மாலினி.

இந்தக் குழந்தைங்க எப்போது  பேசுவார்கள்? எங்கே  கத்துவார்ள்? அவர்களுக்கு அப்படி ஒரு இடம் எங்க தான் இருக்குது? என்று யோசித்தார் ராகிணி. தான் சிறுவயதாக இருந்த போது பள்ளியிலும் வீட்டிலும் இதே போல் கத்தாதே ஓடாதே விளையாடதே என்று வீட்டில் பெற்றோரும் பள்ளியில் ஆசிரியரும் கூறியது நினைவுக்கு வந்தது.

“அம்மா ரோஜா வந்துட்டா. நான் விளையாடப் போலாமா?  சத்தம் போடம விளையாடறோம் அம்மா” என்று அமைதியாகச் சொல்லிக் கொண்டே அடி எடுத்து வைத்தாள்  மாலினி. அப்போது சுவற்றின் ஓரத்தில் ஒரு கட்டெறும்பு சென்றதைப் பார்த்தவுடன்

“மாலினி இனிமேல் நீங்கள் சத்தம் போட்டு விளையாடுங்க” என்று சொல்லிவிட்டு

எறும்பைப் பார்த்து சிரித்தார் ராகிணி.


 

எழுதியவர்

சரிதா ஜோ
சரிதா ஜோ
ஈரோடு மாவட்டத்தை சார்ந்த சரிதாஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலைப் பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கருப்பு பட்டை பெற்றவர்.

கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் தன் பயணத்தை தொடங்கிய இவர், சிறார் இலக்கிய எழுத்தாளராக இதுவரை எழுதியுள்ள நூல்கள்

சிறார் சிறுகதை தொகுப்புகள் :
நீல மரமும் தங்க இறக்கைகளும்,
கனவுக்குள் ஒரு கண்ணாம்மூச்சி,
கிளியோடு பறந்த ரோகிணி,
யார் தாத்தா நீங்க?,
சின்ன வாத்தியார்.

சிறார் நாவல்கள் :
மந்திரக் கிலுகிலுப்பை,
நிழலைத் திருடிய பூதம்,
பேயாவது பிசாசாவது,
கடலுக்கடியில் மர்மம்,
சரசுவதிக்கு என்ன ஆச்சு?,
வண்ணங்களின் அதிசயம் (வெளியீடு : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ).
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x