18 April 2024

ண்பா,
நம் பிசகிய இரவுகள்
இவ்வளவு ஊர்களுக்கிடையே
இவ்வளவு மனிதர்களுக்கிடையே
மிகச்சரியாக சிக்கிவிடுகிறது.
என் வீட்டு மொட்டைமாடி
குன்றின் மேல் தனித்து நிற்கிறேன்.
நண்பா,
துன்பங்கள் மனமழிந்த இரவுகளில்
நட்சத்திரங்களை நறுமணமூட்ட
ஒரு பீஃப் பெப்பர் ப்ரை போதும்
ஈச்சனாரியோ,
மலுமிச்சம்பட்டியோ,
ராமகிருஷ்ணாவோ,
கணபதியோ,
வழக்கமாக செல்லும் ஞானக்கூடம்
ஏதாவது ஒன்றிலிருந்து
ஒரு போத்தல் பிடித்து வா…
நண்பா,
உலகின் மிகச்சிறந்த ஞானக்கூடம்
நமக்கு இவைதானே?
இப்-போதைக்கு
என்னிடம் கொஞ்சம் இசைஞானி இருக்கிறார்
நண்பா, உன்னிடம் காலிக் கோப்பைகள்
ஏதேனும் உள்ளதா?


ன்னை முத்தமிட
நூறு பாடல்கள் போதுமென்கிறாய்
என்னை முத்தமிட
நூறு சொற்கள்கூட போதுமென்கிறாய்
என்னை முத்தமிட
ஒரு எமோஜி போதுமென்கிறாய்
என்னை முத்தமிட
ஒரு பார்வைகூட போதுமென்கிறாய்

கார்முகி
நான் வாழ்வின் கொண்டாட்டங்களை
வெகுவாக கொண்டாடி தீர்ப்பவன்
ஆதலால் என்னை முத்தமிட
நிச்சயம் உன் உதடு வேண்டும்.


மிக நீண்ட வரிசையில் நின்று பெற்றதை
ஒரே டம்ளரில்
இருவரும் பங்கிட்டுக் குடித்திருக்கிறோம்
கண்டும் காணாத இரவொன்றில்
நமக்கிடையே திறந்து வைக்கப்பட்டிருந்த
பீஃப் வருவலை பங்கிட்டு உரையாடிருக்கிறோம்
மனங்கசந்து தளும்பி தளும்பி
ஒரே பாடலை திரும்பத் திரும்ப கேட்டுருக்கிறோம்
ஊர் பழகிய ஊரடங்கிற்கு
சாவு பழகிடும் இயல்பில்
‘நலம்தானே?’
என்றனுப்பும் உன் குறுஞ்செய்திக்கு
முடங்கிக் கிடக்கும் சொந்த உடலில் இருந்து
நலம்..தான்… என்று சொல்வது
எவ்வளவு களைப்பாக இருக்கிறது


மக்கிடையே பேச
மணிக்கணக்கில் சொற்கள் இருக்கிறது
நமக்கிடையே கண்கள் கூச
மிகவும் மங்கலாக இரவு இருக்கிறது
ஆனாலும்
‘மிஸ் யூ’ என்பதன் கொடுமைகள்
எந்தத் தளர்வுகளையும் கொண்டிருப்பதில்லை
பற்றி எரியும் இக்கொரோனா கோடைக்கு
சமாதான தனல் பற்றிக் கொண்டிருப்பதில்லை
கண்ணுக்கெட்டிய தூரங்களில்
அன்பின் விசும்பலோடு காத்திருக்கிறேன்
நினைவின் பறவைகளை
உன் தனிமையின் பிசாசுகளோடு பறக்கவிடுகிறேன்
கூடுமானவரை
வெறும் லெமன் ஜூஸ்சோடு முடியும் என் மாலைகள்
ஊரடங்கை சமாளிக்க
சலித்துவிடாத பியரோடு
உற்சாகத்தின் நிழலில்
மாஸ்க்கோடு காத்திருக்கிறேன்
உருமாறிய கொரோனாவிற்கும்
உன் மெசேஜ் பொங்கி வழியும் வாட்ஸ்அப்-பிற்கும்
கொரோனா தேவியின் அருளோடு
சானிடைஸ் செய்தபடி


ண்ட்ரியாவின் குரல் போல்
ஒரு கனவு வருவதாக
இந்த எளிய ரசிகனுக்கு
ஒரு கனவு வந்தது.

ஒரு மலைப்பிரதேசத்தில்
மல்லாந்து படுத்தபடி
பொங்கி வழியும் பாடலோடு
தொலைவிலிருக்கும் சொர்க்கத்தை திறந்துகொண்டிருக்கிறேன்.

துண்டாகும்
பட்டர் பிஸ்கட்டின் கைகளை
பிடித்துக்கொண்டே லயிக்கிறேன்.
கொண்டாடும்
டீ’க்களின் சின்னஞ்சிறு செவிகளின் வழியே லயிக்கிறேன்.

கொட்டிக் கவிழ்க்கப்பட்டிருந்த ஆச்சரியங்களோடு
சுடர்விடும் ரம்மிய குரலுக்கு
காய்ச்சிய குரல் என்றும்
ஏறிய பாடலுடன் ஊற்றெடுத்து வருவதற்கு
ஆண்ட்ராய்டு குயில் என்றும்
அருகிருக்கும் பாடலோடு
அந்தரத்தில் லயித்தாடுகிறேன் நான்.

இந்த இரவு
ஆண்ட்ரியாவோடு தான் இருக்கிறது.


காதலுக்கு தாக்குபிடிக்க முடியாத
ஓ மனமே!

ஹல்மெட் இல்லாமல்
100 கிலோ மீட்டர் வேகத்தில்
லாரியை முந்திச் செல்லும் போது
கொஞ்சம் பொறுமை பழகு!

நள்ளிரவின் துல்லியம்
‘Keypad’ சத்தங்களையே
களேபரங்கள் ஆக்கிவிடும்
கொஞ்சம் முத்தமிடாமல் இரு!

குரல்களால் கட்டி அணைத்துக்கொண்டிருக்கும்
இரு போன்களும்
எப்போதும் ‘mute’ல் இருப்பதாக
சரிப் பார்த்துக்கொள்!

அற்புதங்கள் சிரிக்கும்
பதுங்கு குழியிலிருந்து
மகிழ்ச்சியன் முயலை பறக்கவிடுவதற்கு முன்பு
இது இரவா? நண்பகலா? நினைவில் கொள்!

கிறங்கடிக்கும் நறுமணம் பொங்கும் பாடலோடு
இளையராஜாவைப் போல திளைக்கும்
ஓ மனமே!
உன் குரல் உனக்கு மட்டுமே
இளையராஜாவைப் போல கேட்டுமென உணர்!


சுமாரான நல்லவர்கள்
குவிந்துகிடக்கும் நம்பிக்கையில்
மிஞ்சியிருக்கும் கருணையோடு
முதலில் சுமாரான கெட்டவர்களாகதான் இருக்கிறார்கள்

சுமாரான கெட்டவர்கள்
குளிர்ச்சியான சொற்களை கொண்டு
அன்பின் கசப்பிலிருந்து மாறாமல்
எப்போதும் சுமாரான நல்லவர்களாக இருப்பதில்லை

நீதியின் நிமித்தம் துன்பப்படுபவர்கள்
நதியில் மூழ்கிவிடாத ஒரு கூழாங்கல்போல
நல்லவர்களாகவே இருந்துவிடுகிறார்கள்

விடைகொடுத்து கொல்லும் கெட்டவர்கள்
கொடிய பாவிகளின் மாயக்கரம் பற்றி
திட்டமிட்ட ஆயிரம் துன்பங்களை
பலநூறு வாக்குறுதிகளைக் கொண்டு
நம்பிக்கையின் சிலநேரம் நல்லவர்களாகவோ,
நம்பிக்கையின் சிலநேரம் சுமாரான நல்லவர்களாகவோ,
நம்பிக்கையின் சிலநேரம் சுமாரான கெட்டவர்களாகவோ,
நம்பிக்கையின் சிலநேரம் கொடிய பாவிகளாகவோ இருக்கிறார்கள்

நானிருப்பது
சுமாரான நம்பிக்கையில்
இப்போது நீங்களிருப்பது
எந்த நம்பிக்கையின் சிலநேரம்?


ப்போதெல்லாம்
நேசத்தின் கேளிக்கைகள்
தனியாக காத்திருப்பது வழக்கமாகிவிட்டது
இப்போதெல்லாம்
நீந்திச் சேரவேண்டிய
மறுகரைகள் உடைந்துவிடுகிறது.

இப்போதெல்லாம்
சொற்களின் குவியல்
அன்பு குறித்த பிரசங்கம்போல
கவனிக்கப்படாமல் அழிந்துவிடுகிறது
இப்போதெல்லாம்
நிரூபிக்க வேண்டிய காரணங்கள்
நிகழாமலே முடிந்துவிடுகிறது.

உன் இருப்பின் இயல்பை
உன் பிரிவின் பெரும்பான்மையை
கராராக எழுத பழகிவிட்டிருக்கிறேன்

மனச்சிக்கலை கையாள தெரியாத எனக்கு
மகிழ்ச்சின் முகக்கவசம் பூசிக்கொள்கிறேன்
குறைந்தபட்சம் மனம் உடையும் இரவுகளில்
சாரமுள்ள இரண்டுவரி படித்துக்கொள்கிறேன்.

நிறைவேறாத காதலை
முதல் காமத்தின் தீண்டலை
மறதியின் மறதி கொண்டு எழுதுகிறேன்
பொய்யின் சவுக்கடியை
துண்டிக்கப்பட்ட நறுமணங்களை
நினைவின் சௌர்கயம் கொண்டு எழுதுகிறேன்.

பற்றி எரியும் உன் குரலையும்
மூச்சித்திணற முத்தமிடும்
உன் ‘ம்’களையும்
என்னைப்பொறுத்தவரை
என் எல்லா முடிவும்
ஒரு நற்செய்தியாக
ஒரு நம்பிக்கையாக
முடிவற்று நீளும்படி உன் காதலால்
முளைத்துவிடுகிறது
என் கைகளில் ஆறாம் விரல்.


வியாழக்கிழமை தோறும்
வாட்ஸ்அப்-ல் வலம்வரும் சாய்பாபாவை
வாரம் முழுவதும் ஒளித்துவைக்க
உங்களுக்கு எப்படித்தான் மனம் வந்தது.

பின்னணியில்
அனிருத்தை அலறவிட்டபடி
பட்டர் பிஸ்கட்டின் ரம்மியம் பூக்க
அவரிடம்
ஒரு தேனீர் அருந்தலாமா என்றேன்.

மொபைலை கீழே வைத்துவிட்டு
பட்டர் பிஸ்கட்டை எடுத்துக்கொண்டவர்
ப்ளக் பாயிண்ட் எங்கு இருக்கிறது என்று கேட்டார்.

அவர் இன்னும்
ஒரு வாரக் காலம் ஓய்ந்தமர வேண்டுமல்லவா?


 

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x