2 December 2023

சுற்றிலும் கடல். நடுவில் அந்தத் தீவு. அங்கே ஒரு இடத்திலும் உப்பு நீர் இல்லை. தோண்டுகிற இடமெல்லாம் தித்திக்கும் சுவை நீர் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. அங்கே விதைப்பதுமில்லை. அறுவடை செய்யப்படுவதுமில்லை. அங்குள்ள ஆப்பிள் மரங்கள் காய்த்துக் கொண்டே இருந்தன. அங்குள்ள தென்றல் விடாமல் வீசிக் கொண்டே இருந்தது. வெயில் தன் சுபாவம் மறந்து இதமாய் தழுவிக் கொண்டிருந்தது. அன்பூ தன்னந்தனியளாய் ஏகாந்தமாய் அந்தத் தீவில் வாழ்ந்து வந்து கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் அன்பு தன் மீதே காதல் வயப்பட்டது. பிறபாடு, அன்பு தன்னிலிருந்து கருணையை உயிர்த்தெழச் செய்து, அதனோடு நேசம் கொண்டிருக்கத் துவங்கியது. அன்பும், கருணையும் காதலில் ஓர்மை கொண்டு திளைத்திருந்தார்கள்.

ஆதியில் அங்கே அன்பு மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தாள். பிற்பாடு அங்கே பிழைப்பின் நிமித்தம் வந்தேறிகளாகக் கோபம், பேராசை, பொறாமை, போட்டி, வன்முறை, பேதம், துவேசம், சடங்கு, சம்பிரதாயம், உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை, வெறி, பொய்மை, வன்முறை, ஆச்சாரம், பேதைமை, அறியாமை, ஆற்றாமை, பணம், அந்தஸ்து எல்லாம் ஒவ்வொன்றாய் வந்து குடியேறத் துவங்கின.

அவை ஒவ்வொன்றாய் வரவர அந்தத் தீவில் உள்ள நன்னீர் படிப்படியாய் உப்பு நீராக மாறத் துவங்கியது. அன்பு எல்லோரிடமும் சேர்ந்து பழகவே யத்தனித்தாள். ஆனால், மற்றவற்றிற்கு அன்பின் மீது அச்சம். அவள் யாரோடு சேர்கிறாளோ அவர்களின் சுயத்தை அழித்து, அவர்களையும் அன்பாகவே மாற்றி விடுகிற ரஸவாதகாரி என நினைத்து மற்றவை எல்லாம் அவள் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ள துவங்கின.

அன்பூ -வின் வீட்டுக் கிணற்றில் மட்டும் தித்திக்கும் தேன் நீர் இப்போதும் ஊறிக் கொண்டிருந்தது. நம்முடைய கிணறுகளில் எல்லாம் உப்பு நீர் தான் சுரக்கின்றன. இது அன்பின் சூழ்ச்சி. அன்பும், கருணையும் சேர்ந்து கொண்டு நமக்கெதிராக செய்கிற சூது இது என்று மற்றவையாவும் எண்ணத் துவங்கின. அதனால், அவையாவும் தனிக்குழுக்களாகச் சேர்ந்து கொண்டு, அன்பையும், கருணையையும் ஒதுக்கியே வைத்திருந்தன.

அன்பூ -வின் வீட்டில் இருந்த கிணற்றை, அத்தனையும் சேர்ந்து அபகரித்துக் கொள்ளத் திட்டம் தீட்டி, அந்த இடத்திலிருந்து தங்கள் இடத்திற்கு அவற்றை இடமாற்றம் செய்யும்படி நிர்ப்பந்தித்தன. அன்பூ மறுப்பேதும் சொல்லாமல், கருணையோடு சேர்ந்து கொண்டு, அவர்களின் விருப்பத்திற்குத் தலைசாய்த்தாள்.

அன்பூ அதன் கிணற்றை அவர்களுக்காக விட்டுத் தந்து விட்டுச் சென்ற மறுகணம் அந்தக் கிணற்றில் உள்ள தண்ணீர் யாவும் உப்பு நீராக மாறி விட்டது.

உப்பு நீராய் அவர்கள் வைத்திருந்த கிணறுகளில் உள்ள நீரை அன்பூ ஸ்பரிசித்ததும், அந்த நீர் யாவும் சுவை நீராக மாறிப் போயின. அவற்றை அருந்துகையில் அவை பசியும் தீர்ந்து போகச் செய்கிறதாய் இருந்தன.

இதனை அறிந்த அனைத்தும் மறுபடி தங்கள் தங்கள் பகுதிகளுக்கே வந்தவர்களாய், அன்பூவை மறுபடி அது கருணையோடு சேர்ந்து வாசம் செய்த பழைய குடிலுக்கே சென்று விடும்படி நிர்ப்பந்தித்தன.

அப்போதும் அன்பூ எதற்கும் சம்மதம் கொள்கிற மனநிலையாய் மீண்டும் தன்னுடைய பழைய குடிலுக்கே கருணையோடு சேர்ந்து திரும்பிச் சென்றது. சென்றதும் வழக்கம் போல அங்கே இருந்த கிணற்றில் ஊறிய உப்பு நீர் மறுபடி நன்னீராகிப் போனது.

இவர்களின் கிணறுகள் உப்பு நீரைச் சுரக்கத் துவங்கியது.

அன்பூ ஒரு. மாயக்காரி என்று அத்தனையும் தீர்மானமாய் நினைக்கத் துவங்கின.

அன்பூவிற்கு கொடுக்க மட்டுமே தெரிந்திருக்கிறது. கொடுப்பதே அவளின் பெறுதலாக இருந்தது. அவளுக்கு எதுவுமே தேவையிருக்கவில்லை. எதுவுமே இல்லாமல் எல்லாமும் அவளுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. அவளுக்குப் பசிப்பதுமில்லை. தவிப்பதுமில்லை. வலிப்பதுமில்லை. பரவசமாய், மகிழ்வாய் சிலிர்த்திருக்கிற அகமாய் அவள் தன்னை, தன்னையறியாமலேயே சிருட்டித்துக் கொண்டிருந்தாள். அவள் குன்றையறியாதிருந்தாள். இறைத்தன்மையாயிருந்தாள். காமத்தன்மையற்ற காதலாயிருந்தாள். தான் பெறும் இன்பம் இந்தத் தீவும் பெறக்கடவுவதாகத் தினமும் இரவு படுக்கச் செல்கையில் மனதில் பாராயணம் செய்து கொண்டு படுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

பிரபஞ்சமெங்கும் உயிரினங்கள் அன்பால் நிறைந்து ததும்ப வேண்டும் என்கிற எண்ணம் அவளை நிறைத்திருந்தது. தினமும் அவர்களோடு தன்னை சேர்த்துக் கொள்ளும்படி அவள் கேட்டுக் கொண்டே இருந்தாள். அவை செவிமடுக்கவே இல்லை. காலங்கள் உருண்டோடின. அவை தங்கள் தங்கள் வழிகளிலேயே அன்பூவிடமிருந்து விலகி வெகுதூரம் இப்போது வந்திருந்தன.

ஒரு நாள் திடீரெனச் சுனாமி அந்தத் தீவைச் சூழ்ந்து கொண்டது. ஆழிப்பேரலை ஆர்ப்பரிக்கத் துவங்கியது. நீர் மட்டம் கொஞ்சங்கொஞ்சமாய் அந்தத் தீவை மூழ்கடிக்கிற ரௌத்திரத்தோடு, உயர்ந்து கொண்டே வந்தது. பிரபஞ்சம் விண்டு கொள்கிற மாதிரி இடியோசை வெடித்துக் கொண்டு வந்து விழுந்தது. அத்தனையும் அதிர்ந்து போய் தங்கள் தங்கள் படகுகளில் ஏறி வேறு உயரமான தீவு நோக்கிச் சென்று, தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்துப் புறப்பட்டன.

அன்பூ எதையும், எப்போதும் சேர்த்து வைத்துக் கொள்கிறதில்லை. அதனால் இந்தத் தருணத்தில் உயரமான தீவு நோக்கிச் செல்லக் கூட அவளிடம் படகொன்றும் இருக்கவில்லை.

அன்பூ புறப்பட்டுச் செல்கிற ஒவ்வொன்றிடமும் தன்னையும் உடன் அழைத்துச் செல்லும்படி இறைஞ்சினாள். எதுவும் செவிமடுக்கவில்லை. அவளை உடன் அழைத்துச் சென்றால், நாமும் தம்மிடம் இருக்கிற எல்லாவற்றையும் பிறருக்குக் கொடுத்து விட்டு ஒன்றுமில்லாதவராகி விடுவோம் என அஞ்சி அன்பூவை விட்டு விட்டு தாங்கள் மட்டும் வேறிடம் நோக்கி, தங்கள் தங்கள் படகுகளில் ஏறிச் செல்ல ஆரம்பித்தன.

இப்போது அன்பும், கருணையும் அந்தத் தீவில் தனித்து விடப்பட்டிருந்தன.

அவையாவும் சென்ற சிறிது நேரத்தில் சுனாமியின் வேகம் பன்மடங்கு அதிகரித்தது. கடலெங்கும் சுழல் எழுந்தது. அந்த நீர்ச்சுழிகளில் சிக்கி அத்தனை படகுகளும் நொடியில் மூழ்கிப் போனது.

உடனே அந்தத் தீவெங்கும் ஆலங்கட்டி அடைமழை கொட்டத் துவங்கியது. செடிகள் வாடாமலர்களைப் பூக்கத் துவங்கின. அவற்றின் வாசம் சாசுவதத்தன்மையோடு, அந்தத் தீவை நிறைக்கத் துவங்கின.

இப்போது மறுபடி அந்தத் தீவெங்கும் உள்ள சுனைகளில் சுவை நீர் பொங்கிப் பிரவகிக்கத் துவங்கியது. ஓர்மை கொண்டிருக்கும் அன்பும், கருணையும், கவலையற்று முன் போல அந்தத் தீவில் காதல் செழிக்க வாழத் துவங்கின.


 

எழுதியவர்

தி.குலசேகர்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ரசாயனம் பட்டப்படிப்பு மற்றும் ஜனர்னலிசம் பயின்றவர் தி.குலசேகர். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் திரைப்படத்துறையில் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.ஏஃப்.டி, வசந்த், ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இதுவரை இவரின் 90 புத்தகங்கள் அன்னம், சந்தியா, ஆழி, ராஜ்மோகன் , புலம், பன்முக மேடை, போதிவனம், யுனைடெட் இந்தியா புக் ஹவுஸ் போன்ற பதிப்பகங்களில் மூலம் வெளிவந்து இருக்கிறது. டி.வி.ஆர் நினைவு இலக்கிய விருது, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது, புதியபார்வை -நீலமலை தமிழ்ச் சங்கம் விருது, ஜேஸி விருது, பெங்காலியில் சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, இப்போது சௌமா விருது போன்ற அங்கீகாரங்கள் பெற்று இருக்கிறார். இரண்டு குறும் படங்களை இயக்கியதோடு திரைப்பட இயக்குநராகவும் வலம் வர ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x