2 December 2023

மராவதி வீட்டின் பூசை அறையையும் தாண்டி, சாம்பிராணி வாசத்தில் வீடே மணக்கிறது. காலை எழுந்தவுடன் குளித்து, பூசை அறை சுத்தம் செய்து; கடவுளுக்குத் துளியூண்டாவது தன் கையால் செய்த இனிப்பு படைத்து தீபாராதனை காட்டாமல் அன்றைய தினம் அமராவதிக்கு விடியாது. அவளைப் பொறுத்த வரை பிரார்த்தனை என்று எதுவுமிருக்காது என்றாலும் பூமியின் சுழற்சியினால் தான் விடிகிறது என்றில்லாமல், சூரிய உதயத்தினால் தான் விடிகிறது என்று சொல்லிக் கொள்வதைப் போல இன்றைய விடியல் என் பூசையிலிருந்து தொடங்கியது என்பதாய் இருக்கும். அவள் பூசை அறையில் ‘சுக்லாம் பரதரம்’ சொல்லி தீபாராதனை முடிப்பதற்குள் அடுக்களையில் சிந்திய சர்க்கரையில் தன் வயிறு நிறைத்திருக்கும் பிள்ளையார் எறும்பு. அது தானே உண்மையும் கூட, எங்கும் நிறைந்தவன் தான் கடவுள் அவரவர் உள்ளிலும் குடியிருப்பான் அதை உணர்ந்தவர்கள் தான் குறைவு.

அமராவதியின் அம்மா சத்யஜோதியோ இவருக்கு நேரெதிர், தனக்கென்று தனிப் பூசை அறையெல்லாம் தேவையில்லை, நினைத்த இடத்தில் அமர்ந்து கொள்வார். அன்று பன்னிரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்த காலத்திலிருந்து இன்று இதோ தனிமையில் இருக்கும் போதும் காலைக்கடன் முடித்த கையோடு அகம் புறம் சுத்தம் செய்து கொண்டு வள்ளலாரின் அகவல் படிக்க அமர்ந்து விடுவார். படிக்க மனமில்லா நாட்களில் சத்தமாக

‘ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்’

என்று மட்டுமே பாடி தன் இருப்பை உறுதி செய்து கொண்டிருப்பார். இன்றும் அறையிலிருந்து ஜோதி ஓசை கசிகிறது.

“பாப்பா கிளம்பிட்டாளே மா பிரசாந்த் இன்னும் வரலையா?” பவித்ராவிடம் கேட்டுக் கொண்டே சாமி அறையை விட்டு வெளியே வந்தாள் அமராவதி.

“இன்னிக்கி அவன் அம்மாவ ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போகணுமாம், ஜோ-வ என்னையே ஸ்கூல்ல விட்டுட்டு போக சொல்லிட்டான்” என்று பதில் சொல்லிக் கொண்டே சாமி அறை வாசலிலேயே நின்று சாம்பிராணி மணத்தை உள் வாங்கி விட்டு கைப்பை எடுக்க தன் அறைக்கு ஓடினாள் பவித்ரா.

“இந்த ஒரு வேலைய தான் செய்றாரு அதையும் ஒழுங்கா செய்ய மாட்டாராம்மா….?

அவுங்க அம்மாவ ஆஸ்பத்திரிக்கு அழைச்சிக்கிட்டு போக வீட்ல வேற ஆளுங்களே இல்ல பாரு… “என்று மகளிடம் கூறிக்கொண்டே லவ் பேர்ட்ஸ்க்கு தண்ணீர் மாற்றி வைத்து அளவாக அதற்கான உணவும் வைத்து கூண்டைக் கவனமாகப் பூட்டி, “உறவே வேணாம் ஒரேயடியா தலைய முழுகிட்டு வான்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குற உனக்கென்ன தலையெழுத்து இப்படியெல்லாம் அட்ஜெஸ்ட் பண்ணி வாழனும்னு”

“ஆரம்பிச்சிட்டியா… என் லைப் நான் பாத்துக்குறேன். இப்ப எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆயிடுச்சி கிளம்புறேன்.”

“மம்மி வேர் இஸ் டாட்?”

பெரியவர்களின் ஒவ்வொரு அசைவையும் பிள்ளைகள் கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள் நாம் தான் அதைக் கவனிக்கத் தவறுகிறோம்.

”ஸ்கூலுக்கு டைம் ஆயிடுச்சி ஜோ… ஆன் தி வே கால் பண்ணி பேசு” என்று ஜோதியை அழைத்துக் கொண்டு பவித்ரா வாசல் கதவைத் திறப்பதற்கும்; அழைப்பு மணியில் நித்யா கை வைப்பதற்கும் விநாடி முள் வித்தியாசமே..

“ஹாய் ஜோ … குட் மார்னிங்…!”

“குட் மார்னிங் ஆன்ட்டி!”

“என்னக்கா சீக்கிரம் கிளம்பிட்டீங்க போல ?” என்று கேட்ட நித்யாவிற்கு அழகிய புன்னகை ஒன்றைப் பதிலாகத் தந்துவிட்டு…

“ம்மா சிஸ்டர் வந்துட்டாங்க பாரு.கதவ சாத்திக்க” என்று சொல்லிக் கொண்டே கார் சாவி இருப்பதை உறுதி செய்து கொண்டு எதிரில் வருபவருக்கும்‌ புன்னகை ஒன்றைச் சிந்திய படி சென்றாள் பவித்ரா.

வாசல் வந்த அமராவதி கதவைத் தாழிட்டுக் கொண்டே “என்ன நித்யா இன்னிக்கி சீக்கிரம் வந்துட்ட..? அம்மா இன்னும் டிபன் சாப்டலையே..”

“நேத்து பாட்டி தான் சீக்கிரம் வர சொன்னாங்க ம்மா… நடக்கனுமாம். பூங்காவிற்கு அழைச்சிக்கிட்டு போக சொன்னாங்க.”

“ரூம் விட்டு வெளிய வரமாட்டாங்க. நீ வந்ததுல இருந்து நல்ல முன்னேற்றம் தான். நாங்க எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் கேக்க மாட்டாங்க. உன் பேச்சை கேக்குறாங்கன்னா அதிசயம் தான் ம்மா”

“பாட்டிக்கு தொண்ணூறு வயசுன்னு சொன்னா யாரும் நம்ப கூட மாட்டேங்கிறாங்கம்மா . நானும் இந்த அஞ்சு வருசமா பார்த்த பேஷன்ட்லயே இவங்கள தான் தி பெஸ்ட்ன்னு சொல்லுவேன். ஆறு மாசமா தான் இங்க வந்துட்டு இருக்கேன். இருந்தாலும், ரொம்ப வருசம் பழகுன மாதிரி கோவாப்ரேட்டிவா இருக்காங்க ம்மா..‌”

”வயசுல அவ்ளோ கோவப்படுவாங்க தெரியுமா? எங்களுக்கெல்லாம் அம்மானாலே பயம் தான்.. எப்போ சுத்த சைவ சன்மார்க்க சங்கத்துல சேர்ந்தாங்களோ; அப்போ இருந்து தான் இந்த அமைதி..”

“நீங்க எல்லாம் நான்-வெஜ் சாப்டுறீங்களேம்மா.? ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”

“அதெல்லாம் அவங்கவுங்க இஷ்டம். புடிச்சா சாப்டுங்க. வேணாமா, விட்டுடுங்கன்னு தான் சொல்வாங்க..”

“சரிம்மா, பாட்டிக்கு டிரஸ் சேஞ் பண்ணி கூட்டிட்டு வரேன். அதுக்குள்ள அவங்க சாப்பாடு ரெடி பண்ணி குடுங்க.”

நித்யா அறை கதவை திறந்ததும் ‘ஜோதி ஜோதி’ ஓசையை சத்யஜோதி சத்தமில்லாமல் விழுங்கினார்.

“குட் மார்னிங் பாட்டி! ராத்திரி நல்லா தூங்குனீங்களா? இன்னும் சாப்டாம இருக்கீங்களே பசிக்கலையா?”

மெதுவாகத் தலையைத் திருப்பி அவள் முகம் பார்த்து, “இப்படி ரெண்டு கேள்வி கேட்டா எதுக்கு நான் முதல்ல பதில் சொல்லனும் சொல்லு…”

“அச்சச்சோ மன்னிச்சிடுங்க !மன்னிச்சிடுங்க! முதல்ல நல்லா தூங்குனீங்களா? சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டே தேங்காய் எண்ணெய் சிறிது உள்ளங்கையில் விட்டு உச்சந்தலையில் வைத்து லேசாக வருடி விட்டாள்.

’வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று சொல்லி விட்டு அமைதியாக இருந்தார்.

மிக மெதுவாகச் சொன்னாலும் வாஞ்சையுடன் கவனித்துக் கொள்ளும் நித்யாவிற்கு அவரை தொட்டுத் தூக்கி, உள்ளங்கை பிடித்து நடக்க உதவுவதாலோ என்னவோ அவரின் உடல் மொழியுடன் மன ஓட்டத்தையும் சரியாகக் கணிக்க முடியும். இங்கு உணவுக்கான தட்டுப்பாடு இருக்க வாய்ப்பில்லை. உணர்வுக்கானது! என்று புரிந்து கொள்கிறாள்.

“பவித்ரா அக்காவ நெனச்சி கவலைப்பட்றீங்களா பாட்டி ?”

‘புதியது பழையது என்று அதுவது வாய்த் திகழ் அருட்பெருஞ்ஜோதி ! ’ என்று மட்டும் முணுமுணுத்தார்.

நித்யாவிற்கு என்ன சொல்வது என்று குழப்பமானது… நல்லவேளை காலை உணவுடன் அமராவதி அம்மா அறைக்குள் வந்தார்.

“அம்மா குமரனுக்கு பேரன் பொறந்து இருக்கானாம். இப்பத்தான் பவானிட்ட இருந்து ஃபோன் வந்தது… உன்னைய பாக்கனும். உன்ட்ட வந்து ஆசீர்வாதம் வாங்கனும்னு பிரியப்படுறானாம்.. என்ன சொல்ல.?”

சத்யஜோதி அமைதியாக இருந்தது பார்த்த அமராவதி அம்மா, ”நான் சொன்னது கேட்டுச்சா…” என்று மீண்டும் சத்தமாகச் சொன்னார்.

“மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே”

சத்யஜோதி மனதில் இந்த வரிகள் நினைவுக்கு வர மனதைச் சாந்தப்படுத்திக் கொண்டே…

“இப்ப வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்….”

“நீ கொள்ளு பேரனோட சேர்த்து பாக்கனும்னு நெனக்கிறியா.?” சத்யஜோதி பதில் ஒன்றும் பேசவில்லை.

“நித்யா நீ டிபன குடும்மா” என்று அவள் கையில் சாப்பாடு தட்டை தந்து விட்டு.. ஹாலில் கைப்பேசி அழைப்பைக் கேட்டு அமராவதி அங்கிருந்து நகர்ந்தாள்.

“நித்யா உனக்கு கல்யாணம் ஆயிடிச்சாம்மா? ”

கடந்த ஆறு மாதத்தில் கேட்காத கேள்வி. என்ன சொல்வது என்று தெரியாமல் சட்டென்று தடுமாறினாள் நித்யா. தற்காலிகமாக உரையாடலைத் தள்ளி வைக்க நினைத்து நாம பார்க்ல போய் பேசலாம் பாட்டி. இப்போ சாப்டுங்க என்று உணவை ஊட்டி விட்டதும், அவருக்கான மாத்திரை எடுக்கத் திரும்பும் சாக்கில் தளும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். சத்யஜோதி அதைக் கவனிக்கத் தவறவில்லை.

சிறிது நேரம் அமைதி தன் விருப்பம் போல் அங்குமிங்கும் திரிந்தது. இருவரையும் பார்த்துப் பார்த்து குதித்தது. கண்ணும் காதும் மழைக்கு ஏங்கும் மண் போல மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தது.

நித்யா மாத்திரைகள் சிலவற்றைப் பொடித்துக் கரைத்து பாட்டி வாயில் ஊட்டி விட்டாள்.

இரண்டு மூன்று முறை தொண்டையில் சிக்கிக் கொண்ட மாத்திரை சத்யஜோதி மூச்சு விடவே சிரமமாகிப் போன காரணத்தால் அன்றிலிருந்து இப்படித் தான்.

சத்யஜோதி வலது கையில் தனக்கான கைத் தடியை எடுத்துக் கொண்டதும், இடது கையை நித்யா பிடித்துக் கொண்டு பூங்காவிற்குக் கிளம்பி விட்டார்கள்.

காலை வெயிலின் சூடு இதமாக இருந்தது .. கண் பரபரவென்று சுற்றும் முற்றும் பார்க்கக் காது காக்கா குருவி இருக்கும் இடத்தைக் கண்ணுக்கு அறிவித்தது. உலகில் எத்தனையோ ஜீவராசிகள் யாருக்காகவோ எதற்காகவோ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. வேரோடு சாய்ந்த மரத்துக்குப் பக்கத்தில் புதிய செடிகள் முளை விடத் தொடங்கியிருந்தது. வளர்ந்த மரமோ கிளை விட்டிருந்தது இயற்கை எப்போதும் இயற்கையாகவே தன்னை பாதுகாத்துக் கொள்ளும்.. சின்னஞ் சிறு ஜீவராசிகளும் அப்படித்தான் அது தனக்காகவே வாழ்ந்தாலும் எவருக்கேனும் உபயோகமாகவே இருக்கும்.

அனைத்தையும் உள் வாங்கிக் கொண்டு சற்று தொலைவில் பார்வை செல்ல அங்குச் சுத்தம் செய்பவர்கள் கூட்டிப் பெருக்கிக் கொண்டும் சில வயதான பெரியவர்கள் நடந்து கொண்டும், திடீர் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் மர இருக்கையில் அமர்ந்து கைப்பேசியில் பேசிக் கொண்டும் இருந்ததைப் பார்த்த சத்யஜோதிக்கு மீண்டும்,

“பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே” என்ற வரிகள் நினைவுக்கு வந்தது.

யாருமில்லாத இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ள வேண்டும் என்று நித்யாவிடம் சைகை செய்தார். இருவரும் அமர்ந்தனர்.

“உனக்கு வயசு எத்தினி ஆகுது?”

“எனக்கா பாட்டி.. நாப்பது ஆகப் போகுது.”

“ஆம்பள துணை இல்லாமயா இருக்க ?”

நேரடியான கேள்வியால் ஒரு கணம் தடுமாறித் தான் போகிறாள் நித்யா. தன்னை சுதாரித்துக் கொண்டு, “தேவைப்படலை பாட்டி… நாம ஒருத்தர விரும்பிட்டு, அவர் இல்லைன்னு ஆயிடுச்சி… ”

சற்று அமைதியாக இருந்து விட்டு “வேற யாரையும் மனசு ஏத்துக்கல பாட்டி, இப்டியே இருந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

‘தனிப்பெருங்கருணை’என்று கண் மூடி பிரார்த்தனை செய்து கொண்டார் சத்யஜோதி.

“சரி, உன் இஷ்டம் போலயே இரு..”

இப்போது இதில் என்ன புரிந்து கொண்டார் என்று நித்யாவிற்கு புரியவில்லை. அந்தக் காலத்து மனுஷி புத்திமதி சொல்லிச் சங்கடப்படுத்துவாரோ என்று தான் நினைத்ததற்கு நேர் மாறாகப் பேசியது நித்யாவிற்கு ஆச்சரியமாகவும் இருந்தது.

சத்யஜோதி சிந்தனையில் ஆழ்ந்தார்..

கணவர் குடும்பத்தில் மூத்தாருக்கு எட்டு பிள்ளைகள். தங்களுக்கு மூன்று குழந்தைகளுடன் ஒரே தொழில். ஒரே கூரையின் கீழ் கூட்டுக் குடும்ப வாழ்க்கை சீராகச் செல்ல, மூத்தாரின் மரணம் குடும்பத்தைப் புரட்டிப் போட்டது. அண்ணியின் தலைமையில் ஊர் மெச்ச கூட்டுக் குடும்பமாகவே தொடர; அண்ணிக்கு எல்லாமுமாக இருந்த கணவர், அண்ணியின் கடைசி குழந்தை குமரன் பிறக்கவும் காரணமாக இருந்தது தெரிந்த தினத்தில் தான் சத்யஜோதி தன்னையே சன்மார்க்கச் சங்கத்தில் ஒப்படைத்துக் கொண்டார்.

ஒப்பற்ற பெரும் தயவுடைய அறிவே பூரண இன்பமாம். ஒருவர் சுயமாக முடிவெடுக்கும் பட்சத்தில் அது தீர்க்கமாகவும் சரியானதாகவும் தான் இருக்கும். சில சமயம் தவறாகவே இருந்தால் கூட அது அவர்களே எடுத்த தீர்மானம். ஆதலால், எதிர் விளைவுகளைச் சந்திக்க மனம் பக்குவப்பட்டு விடும். அதுவும் பெண்கள் அவர்கள் மனதார விரும்பினாலன்றி எந்த ஆண்களுடனும் தன்னை முழுமையாக ஒப்படைக்கத் துணிவதில்லை. இனி தன் வாழ்வில் ஆண் தேவையில்லை என்று நினைத்த கணத்தில் குடும்பத்திலிருந்து வெளியேறி விடுவதாலோ, வேறு ஒரு துணை தேடுவதிலோ மீண்டும் அந்த ஆணிடமிருந்து இதே போல் நிகழ்வு நடக்காது என்று எந்த உத்தரவாதம் இல்லாத சூழலில்; தன்னை சுற்றி ஆன்மீக வலையைப் பின்னிக் கொண்டாள் சத்யஜோதி. உலகில் ஒவ்வொரு உயிரும் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தனக்கென ஒரு நியாயம் கற்பிக்கத் தயங்க மாட்டார்கள். தன் நியாயப் படி வாழ்க்கையில் இனி எல்லாம் சிவனே என்று அவர் விருப்பம் போல் இருக்கும் காரணத்தினால் தான் நித்யாவிற்கு அப்படியான பதில் தர முடிந்தது.

ஆனால் நித்யாவோ பேத்தி பவித்ராவை போல கணவருடன் மனஸ்தாபம் கொண்டு தனித்து இருப்பதாக நினைத்துக் கொண்டார் போல என்று மௌனமாக இருந்தாள்.

இருவரும் அதற்கு மேல் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. வீட்டிற்கு வந்து எப்போதும் போல் மாலை வரை உடன் இருந்து விட்டு நித்யா கிளம்பி விட்டாள்.

இரவு உறங்கும் முன் சற்று நேரம் அகவல் படிப்பது சத்யஜோதியின் வழக்கம்..

“பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே
சமரச சத்தியச் சபையி னடம்புரி
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே
சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே”

இதற்கு மேல் தொடர முடியவில்லை.. ஹாலில் ஒரே சத்தமாக இருந்தது. மாப்பிள்ளை பிரசாந்த் வந்து இருப்பான் போல “நான் டாடி கூடத் தான் இருப்பேன்.” ஜோ, பெருங் குரலெடுத்து அழுது கொண்டு இருந்தாள்.

அமராவதி அதட்டலாக “அந்த வீட்டுக்கு போனா உன்னை யாரும் சரியா பாத்துக்க மாட்டாங்க. பேசாம அம்மா கூடவே இரு.”

“நீ கொஞ்சம் சும்மா இரும்மா ..”

“பிரசாந்த்! நீ ஜோவ அழைச்சிக்கிட்டு கிளம்பு. என் முடிவ நாளைக்கு சொல்றேன்.”

“என்னடி சொல்ற? நான் ஒருத்தி கரடி மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன். முடிவே பண்ணிட்டியா…. ” என்று அமராவதி தன் பேச்சை மீறி அங்கு என்னவோ நடக்கிறது என்று ஆத்திரத்தில் தவிக்க தொடங்கினாள். “அப்பா ஊர்ல இல்லாத நேரத்துல எதாச்சும் ஏடா கூடமா செஞ்சி வைக்காத யோசிச்சு முடிவெடு பவித்ரா.”

“ம்மா சத்தம் போட்டு ஊர கூட்டாத. ஜோ அவங்க அப்பா வேணும்னு சொல்றா. ரெண்டு பேரும் லண்டனுக்கு மூவ் பண்ணிடலாம்னு இருக்கோம். அப்பா கிட்ட நான் பேசிக்கிறேன் நீ பேசாம போய் தூங்கு.”

அமராவதி வாயடைத்து செய்வதறியாது தன் அறைக்கு சென்று எக்ஸ்போர்ட் பிசினஸில் கொடி கட்டி பறக்கும் கணவர், இன்று எந்த நாட்டில் மீட்டிங்கில் இருக்கிறாரோ பார்க்கலாம் என்று அவரது டைரி குறிப்பை எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

பவித்ராவின் முடிவைக் கேட்டு சத்யஜோதி சற்றே நிம்மதியடைந்தார்… அவருக்கு அந்த இரவு அமைதியாக இருந்தது.

‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!’

நேரம் தெரியவில்லை. ஆனால் சத்யஜோதி கண் திறவாமல் முணுமுணுத்த வண்ணம் இருந்தார்.. நெற்றியில் யாரோ கை வைத்தது போல உணர்ந்தும், கண் விழிக்க மனமில்லை..

என்றோ சிவனிடம் தஞ்சமடைந்த சத்யஜோதிக்கு நீண்ட ஓய்வு தேவைப்பட, போதும் என்று மனதில் நினைத்த கணம் கண்களை இருள் சூழ்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை இழப்பது தெரிந்தது. ‘இப்பவும் என்னை மன்னிக்க மாட்டாயா? என்னை ஏற்றுக் கொள்ளேன் சக்தி..’ பல முறை கேட்டு பரிச்சயமான குரல் ஆத்ம சாந்தியடையாமல் தனக்காக காத்திருக்கும் கணவரின் ஆன்மாவிடம் தன்னை இணைத்துக் கொள்ள மனம் ஒப்பவில்லை. சத்யஜோதி மெல்ல சிவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னிலிருந்து முழுவதுமாக வெளியேறி இருளில் தன்னை பொதிந்து கொண்டாள்.

நித்யா படபடப்பாக ஓடி வந்தாள் “ஏம்மா நேத்து நல்லா இருந்தாங்களேம்மா என்னாச்சு..?”

“நீ தான் பார்த்து சொல்லும்மா. காலையில இருந்து பாட்டு சத்தமே கேக்கலைன்னு வந்து பார்த்தேன். அசையாம இருந்தாங்க. கை காலெல்லாம் ஜில்லுனு இருக்கே. எங்களுக்கு ஒன்னும் புரியல.” அமராவதி படபடப்பு குறையாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.

நித்யாக்கு பல்ஸ் பார்த்ததுமே புரிந்தது உறக்கத்திலேயே ஆவி பிரிந்திருக்கிறது என்று. “இல்லம்மா தூக்கத்துலேயே உயிர் பிரிஞ்சிருக்கு… எங்க டாக்டருக்கு ஃபோன் பண்ணி வர சொல்றேன். அவர் தான் கன்பார்ம் பண்ணனும்.” நித்யா கைப்பேசியில் யாருடனோ பேச ஆரம்பித்தாள்.

அமராவதி யாரை அழைப்பது என்ன செய்வது என்பதறியாமல் திகைத்து நின்றிருக்க. கணவர் சவுத் ஆப்பிரிக்காவிலிருந்து நாளை மும்பைக்கு வருவதாக நேற்றே டைரியை பார்த்து தெரிந்து கொண்டதால், எப்படியும் தொடர்பு எல்லைக்கு அப்பால் தான் இருப்பார். பேசி புண்ணியம் இல்லை. இனி வரும் போது வரட்டும் மேற்கொண்டு இங்கு ஆக வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டியது தான் என்று, தன் அறையில் இருக்கும் அம்மாவின் மருத்துவச் சான்றிதழ் எடுத்து வர விரைந்தார்.

பவித்ரா பிரசாந்த்க்கு ஃபோன் போட்டு விபரம் சொல்ல வீடு பரபரப்பானது.

இரண்டு மணி நேரத்தில் சத்யஜோதியை தும்பைப் பூவாய் மலர்த்தி தலைமாட்டில் அவருக்குப் பிடித்த ஜோதி பிரகாசமாகச் சுடர் விடத் தொடங்கியது.

சொந்தங்கள் எல்லாரையும் மதியத்திற்குள் வரச் சொல்லி தகவல் சொல்லப்பட்டது.

டாக்டரும் நித்யாவும் சத்யஜோதி உடலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அவசர ஊர்தி வரச் சொல்லி ஆவண முன் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தார்கள்.

அமராவதி அம்மாவின் அருகிலேயே உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தாள். தம்பி இருவரும் அமெரிக்காவிலிருந்து உடனே வர முடியாத சூழ்நிலை. இதை எப்போதோ உணர்ந்து தன் முழு உடலையும் குடும்பத்தார் சம்மதத்துடன் என்றோ அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் தருவதாகத் தன்னை ஒப்படைத்திருந்தார் சத்யஜோதி.

பெரியம்மா பிள்ளைகள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள்.. “கடைசி கடைசின்னு குமரன் வந்து பாக்கனும்னு ஆசை பட்டான். மூஞ்சிலேயே முழிக்காம போய்ட்டியே சித்தி..”

பவித்ராவிற்கு சற்று குழப்பமாகவே இருந்தது. இப்போ எதுக்கு குமரன் மாமாமாவ பத்தி மட்டுமே பேசுறாங்க என்று.. தாத்தா இறந்த போதும் குமரன் மாமா தான் கொள்ளி வைத்ததாகவும், அதில் பெரிய பிரச்சினையாகி; அதன் பின்னர் சொத்துக்கள் பிரிக்கப்பட்டு இரண்டு குடும்பமும் பிரிந்தது என்று தெரியும். இன்று பெரிய பாட்டி குடும்பத்திலிருந்து ஒன்பது பிள்ளைகளும் பேரன் பேத்திகளுடன் வந்திருந்து இழுத்துப் போட்டு வேலை செய்வதைப் பார்த்து பவித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை.

கூட்டத்தில் ஒரு பெரியவர் சத்யஜோதி அருகே நின்று சத்தமாகவே சொன்னார் “கடைசி வரைக்கும் வாய் திறக்காம சிவனேன்னு உன் காலத்த முடிச்சிக்கிட்டியே அக்கா. நீ தெய்வம்” என்றவாறு காலை தொட்டு வணங்கி “யாராச்சும் அகவல் எடுத்து படிங்கம்மா” என்றார்.

பவித்ராவிற்கு சில விஷயங்கள் புரிந்தும் புரியாமல், பாட்டிக்குப் பிடித்த அருட்பெருஞ்ஜோதி அகவல் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள்.

அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்

அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி….

எழுதியவர்

குடந்தை அனிதா
தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் பிறந்து, தற்போது ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் வசித்து வரும் குடந்தை அனிதாவின் இயற்பெயர் அனிதா பாபு. ’கவிதையும் கற்று மற’ மற்றும் ’நினைவுக் குமிழிகள்’ ஆகிய இவரின் கவிதை தொகுப்புகளை ’புஸ்தகா’- டிஜிட்டல் மீடியா வெளியிட்டுள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x