
முகம்
அவள் வழக்கம் போல் காலையில் எழுந்து அலுவலகம் செல்வதற்காக அவசர அவசரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த போது ஒரு தட்டைக் கழுவி அது நிற்கும் நிலைத்தாங்கியில் வைத்தாள். எப்போதும் அப்படி வைக்கும் போது ஒரு முறை அவள் தன் முகத்தைப் பார்த்துக்கொள்வாள். அன்றும் அவள் முகத்தைப் பார்த்த போது அவளது முகம் தெரியவில்லை. அதற்குப் பதிலாக அவள் இதுவரைக் காணாத ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது. அவளுக்குத் தன் கண்களை நம்பமுடியவில்லை. தூக்கமின்மைக் காரணமாக ஏதோ கனவில் இருப்பதாக எண்ணிக்கொண்டு தன் வேலையை முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பினாள்.
வழக்கம் போல் ஏறும் பேருந்தில் ஏறி அலுவலகம் வந்து சேர்ந்தாள். அன்று அவள் சீக்கிரம் வந்துவிட்டாள். கழிப்பறைக்குச் சென்று ஒரு முறை கண்ணாடி பார்க்கலாம் என்று போனாள். அவள் முகம் அல்லாமல் வீட்டில் இருந்த அந்தத் தட்டில் பார்த்த வேறொரு பெண்ணின் முகம்தான் தெரிந்தது. அவளுக்கு முதல் முறையாக அச்சமாக இருந்தது. யாரிடம் இதைப் பற்றிச் சொல்ல முடியும் என எண்ணிக் கொண்டு அமைதியாக தன் இருக்கையில் வந்து அமர்ந்துவிட்டாள். அன்று முழுவதும் அச்சமாகவும் எதுவுமே பிடிக்காமலும் இருந்தது. மேலாளர் அவளுக்குக் கொடுத்த வேலைகளைப் பட்டும்படாமல் செய்து முடித்தாள். தனக்கு ஏதோ ஒரு மனப்பிரம்மை ஏற்பட்டிருப்பது போல் முடிவு செய்துகொண்டாள். இரண்டு நாட்கள் விடுமுறை கேட்டாள். மேலாளரும் உடனே அவளுக்கு விடுப்புக் கொடுத்துவிட்டார்.
வீட்டிற்கு வந்த பின்தான் தனியாக இருக்கப் பயமாக இருந்தது. உடனடியாகத் தான் வளர்ந்த அனாதை ஆசிரமத்திற்குச் சென்றாள். அங்கேயே இரண்டு நாட்கள் தங்கிக் கொள்ளலாம் என நினைத்தாள். அங்கே அவளை வளர்த்த ஆசிரமத்தின் தாளாளர் அன்புடன் வரவேற்றார். அவளுக்கு ஏனோ மனம் கலங்கி இருப்பதைப் புரிந்துகொண்டு அங்கிருக்கும் நிலைமைகளைக் கூறி அவளை அங்கிருந்த சில வேலைகளைச் செய்யச் சொன்னார். அவளும் அதனை ஆர்வத்துடன் ஏற்று அந்த வேலைகளில் மூழ்கினாள். அவள் எப்போதும் தங்கும் அறையில் அன்று தங்கிக் கொள்ள தாளாளர் சொல்லிவிட்டுச் சென்றார்.
இரவு அந்த அறைக்குப் போனாள். அந்த அறையில் அவள் வைத்துவிட்டுப் போன சிறிய கண்ணாடி இருந்தது. ஆர்வத்துடன் அதன் முன் சென்று நின்றாள். அதிலும் அவள் முகத்தைக் காண முடியவில்லை. தட்டில் கண்ட அதே பெண்ணின் முகம்தான் தெரிந்தது. அவளுக்கு வெறுத்துப் போனது. இதற்கு எப்படியாவது தீர்வு காண்பது என முடிவு செய்து கொண்டு வேலை செய்த களைப்பில் உறங்கிப் போனாள். இரவு திடீரென்று முழிப்பு வந்தது. எங்கே இருக்கிறோம் என்பது அவளுக்குப் புரியவில்லை. எழுந்து அமர்ந்தாள். அவளை அறியாமல் அந்தக் கண்ணாடியின் எதிரில் போய் நின்றாள். அந்தப் பெண்ணின் முகம் தெரிந்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. தான் அழாமல் எப்படி கண்ணீர் வருகிறது என்று அவளுக்குப் புரியவில்லை. அவள் மீண்டும் கண்ணாடியில் பார்த்தாள். அந்த முகம் பேசியது. இதே ஆசிரமத்தில்தான் தானும் இருந்ததாகவும் தன்னை ஒருவன் கொன்றுவிட்டதாகவும் அது யாருக்கும் தெரியாது என்றும் அவள் எப்படியாவது அவனைப் பழிவாங்கவேண்டும் என்றும் அந்த முகம் அவளிடம் சொன்னது. அவள் உறைந்து போனாள். அவளுக்கு நடப்பது கனவா நனவா என்று புரியவில்லை. அவள் அங்கிருந்து விலகி படுக்கைக்கு வந்தாள்.
அந்தக் கண்ணாடியில் தெரிந்த அந்தப் பெண்ணின் அழுகுரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. அவளால் தூங்கவே முடியவில்லை. விடிந்ததும் இதைப் பற்றி ஆசிரமத்தின் தாளாளரிடம் சொன்னாள். அவள் உடனடியாக ஒரு பெண் மனநோய் மருத்துவரைச் சந்தித்து ஆலோசிக்க வேண்டும் என்று அவளை அழைத்துச் சென்றார். அந்தப் பெண் மருத்துவர் அவளிடம் பொறுமையாக நடந்ததைக் கேட்டறிந்தார். அவளுக்குத் தூக்க மாத்திரைக் கொடுத்து இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னார். அவளும் அன்று தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு தூங்கிவிட்டாள்.
இரவு முந்தைய நாள் விழித்த நேரத்திலேயே விழிப்பு வந்தது. அதே போல் எழுந்து கண்ணாடி முன் வந்து நின்றாள். மீண்டும் அந்த முகம் அவளிடம் தான் கேட்டதை அவள் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியது. இப்போது அந்த முகத்தில் கண்ணீர் இல்லை. கோபம் இருந்தது. அவளை எச்சரிக்கும் விதத்தில் பேசியது. அவள் தன் கோரிக்கையை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று சொன்னது. அவள் அமைதியாக வந்து படுத்துக் கொண்டாள். அவளுக்குத் துக்கமாக இருந்தது. ஏன் இப்படி தன் வாழ்க்கையில் நடக்கிறது என்று நினைத்து அழத்தொடங்கினாள். மீண்டும் தாளாளரிடம் சொன்னாள். உடனடியாக அவளை அதே மனநோய் மருத்துவரிடம் அவர் அழைத்துச் சென்றார்.
மனவசியத்திற்கு ஆட்படுத்தி அவளை அந்த மருத்துவர் சோதித்தார். அப்போது கண்ணாடியில் தெரிந்த பெண் பேசியதை அப்படியே சொன்னாள். அந்த மருத்துவர் கண்ணாடியில் தெரிந்த பெண் பற்றி விசாரித்தார். அவள் வாழ்வைக் குறித்த பல தகவல்களை அவள் சொன்னாள். அவளைக் கொன்றவன் குறித்த பல விவரங்களை அவள் சொன்னாள். அவனை எப்படியும் தேடிப் பிடித்து தேவையானதைச் செய்வதாக மனநோய் மருத்துவர் உறுதி அளித்து அவளிடமிருந்து கண்ணாடிப் பெண் விலகிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவனைப் பழிவாங்கினால் மட்டுமே விலக முடியும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள் அவள்.
மனநோய் மருத்துவர் அவளிடம் சில மாத்திரைகளைக் கொடுத்து அவற்றை எடுத்துக் கொள்ளும் படிச் சொல்லி அனுப்பிவிட்டார். அந்தக் கண்ணாடிப் பெண் சொன்ன தகவல்களைக் காவல்துறையில் தனக்குத் தெரிந்த அதிகாரியிடம் அந்தப் பெண் மருத்துவர் சொன்னார். அவரும் ஒரு வாரத்தில் விசாரித்துப் பார்த்துவிட்டு அந்த ஆசிரமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் திடீரென்று பல நாட்களாகக் காணாமல் போன தகவல் மட்டுமே கிடைத்திருப்பதாகச் சொன்னார். அவளுடன் இருந்தவன் யார் என்பது தெரியவில்லை என்றும் அவனைத் தேடிக் கண்டுபிடிக்கப் போவதாகவும் கூறினார்.
அவளுக்கு மனநோய் பீடித்திருப்பதாக அலுவலகத்தில் செய்தி பரவிவிட்டது. அவளுக்கு ஒரு மாதம் விடுமுறை அளித்து ஓய்வு எடுத்து வரும் படி சொல்லிவிட்டார்கள். அவளும் ஆசிரமத்திலேயே தங்கிவிட்டாள். அவளுடன் மற்றொரு பெண்ணும் தங்கிக் கொள்ள ஏற்பாடானது. இரவு தீடீரென்று அவள் எழுந்து அமர்ந்து அழுவதும் ஓலமிடுவதும் எல்லோருக்கும் அச்சத்தைக் கொடுத்தது. ஆனால் அவளுக்குக் காலையில் எதுவும் நினைவில் இல்லாமல் போனது. உடன் தங்கியிருந்த பெண் பெரும் அச்சத்திற்கு ஆளானாள். அதனால் அவளை மனநோய் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
இரவு நேரத்தில் இவள் படும்பாடு அந்த மருத்துவமனையில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதனால் இரவில் ஓர் ஆண் மருத்துவரை அவள் இருக்கும் வார்டில் நியமிக்கலாம் என முடிவானது. அன்று இரவு அவள் வழக்கம் போல் எழுந்து அமர்ந்து ஓலமிட்டு அழுதாள். அவளைச் சமாதானப்படுத்த அங்கு அந்த ஆண் மருத்துவர் வந்தார். அவரைக் கண்டவுடன் அவளுக்கு வெறி பிடித்தது போலாயிற்று. தன் அருகில் இருந்த பூட்டை எடுத்து அவருடைய தலையை நோக்கி வீசி எறிந்தாள். அவர் பலத்த காயமடைந்து மயக்கமானார். உடனே அவள் ஓடிவந்து அவரைப் பலமாக மிதித்தாள். அவளைக் கட்டுப்படுத்த முடியாமல் செவிலியர்கள் பெரும் கூச்சலிட்டனர். மற்ற அலுவலர்கள் வந்து அவளைக் கட்டிப் போட்டனர். அந்த மருத்துவரை முதலுதவி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
பெண் மனநோய் மருத்துவர் மீண்டும் அவளை மனவசியத்திற்கு ஆட்படுத்தினார். ஏன் அந்த ஆண் மருத்துவர் மீது அவள் தாக்குதல் நடத்தினாள் என்று கேட்டார். அவன்தான் தன்னைக் கொன்றவன் என்றும் அவனைக் கொல்லாமல் அங்கிருந்து போகப் போவதில்லை என்றும் சொன்னாள். எப்போது அவளை அவர் கொலை செய்தார் என்ற தகவல்களை அவளிடம் மீண்டும் மீண்டும் கேட்டார் மருத்துவர். அவள் அந்த ஆசிரமத்தில் இருந்த போது ஒரு நாள் உடல் நலமின்றி மருத்துவமனைக்குச் சென்றதாகவும் அந்த மருத்துவமனையில் அவன் மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும் சொன்னாள்.
அதன் பின் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதாகவும் கூறினாள். அவன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள உறுதி கூறியதாகவும் அதை நம்பி அவளும் காத்திருந்ததாகவும் சொன்னாள். ஒரு நாள் தன்னை ஒரு மலை வாசஸ்தலத்துக்கு அவன் அழைத்துப் போனதாகவும் அங்கு அவன் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்றும் அவளைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் கூறியதாகவும் தெரிவித்தாள். அவள் பிடிவாதம் பிடித்ததால் அங்கிருந்த மலை உச்சியிலிருந்து அவளை அவன் தள்ளிக் கொன்றுவிட்டதாகவும் கூறினாள்.
அதன் பின் அவள் எதுவும் பேசாமல் உறங்கிப் போனாள். காவல்துறை அதிகாரியை வரவழைத்து இந்தத் தகவல்களை உறுதி செய்யும் படி அந்தப் பெண் மனநோய் மருத்துவர் சொன்னார். சில நாட்களில் அந்தக் காவல்துறை அதிகாரி மலை உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பல பெண்களின் பட்டியலைக் கொண்டு வந்தார். அதில் எந்தப் பெண் கொலை செய்யப்பட்டாள் என அறிய முடியாத நிலை இருப்பதைத் தெரிவித்தார். அவளிடம் காட்டி எந்தப் பெண் என அடையாளம் காணலாம் எனவும் கூறினார்.
அவளிடம் மனநோய் மருத்துவர் அந்தப் பட்டியலில் இருந்த பெண்களின் படங்களைக் காட்டினார். அதை வாங்கிப் பார்த்தவள் அந்தப் பட்டியலில் தான் கண்ணாடியில் பார்க்கும் பெண்ணின் முகம் இல்லை என்று திருப்பிக் கொடுத்துவிட்டாள். அந்த மலை உச்சியிலிருந்து கீழே விழக்கூடிய பள்ளத்தாக்கில் மீண்டும் காவல்துறை ஏதாவது உடல்கள் உள்ளனவா எனத் தேடத் தொடங்கியது. அப்போது ஓர் எலும்புக்கூடு கிடைத்தது. அதனைத் தடயவியல் சோதனைக்கு உட்படுத்திய போது அது பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு பெண்ணின் எலும்புக்கூடு என்று முடிவு கிடைத்தது.
அந்த எலும்புக்கூட்டின் வரைபடத்தைக் கொண்டு ஒரு பெண்ணின் முகத்தை வரைந்து அதை எடுத்துக் கொண்டு வந்து அந்தக் காவல்துறை அதிகாரி அவளிடம் காட்டினார். அந்தப் பெண்ணின் முகத்தைத்தான் எப்போதும் கண்ணாடியில் பார்ப்பதாக அவள் சொன்னாள். பெண் மனநோய் மருத்துவர் அந்த ஆண் மருத்துவரின் பரம்பரை தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினார். அவருடைய கொள்ளு தாத்தாவும் மருத்துவராக இருந்தது தெரியவந்தது. அவரைக் குறித்த தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை.
காயத்திலிருந்து குணமாகியிருந்த அந்த ஆண் மருத்துவரிடம் அவருடைய கொள்ளு தாத்தாவுடைய தகவல்களைச் சேகரித்து வருமாறு பெண் மனநோய் மருத்துவர் சொன்னார். அவரும் தன் சொந்த ஊருக்குச் சென்று கொள்ளு தாத்தா குறித்தத் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினார். தன் பழைய பெட்டிகளை எல்லாம் திறந்து அதில் இருப்பதை ஆராயத் தொடங்கினார். எதுவும் உருப்படியாகத் தேறவில்லை. அதனால் அங்கிருந்து அவருடைய பூர்வீகக் கிராமத்திற்குச் சென்றார். அங்கு அவருடைய கொள்ளு தாத்தாவின் பாழடைந்த ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டிற்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கப் போனார்.
அந்த வீட்டில் தாத்தாவுடைய மனைவியின் படம் செல்லரித்துப் போயிருந்தது. அங்கு ஒரு மேஜையும் இருந்தது. அதில் இருந்த பக்கவாட்டு அறையைத் திறந்து பார்த்தார் மருத்துவர். அதில் ஒரு பழைய நாட்குறிப்பு இருந்தது. அதை எடுத்துப் பார்த்த மருத்துவர் அதிலிருந்து கீழே விழுந்த படத்தை எடுத்துப் பார்த்தார். அதில் ஒரு பெண்ணின் படம் இருந்தது. அது காவல்துறை அதிகாரி கொண்டு வந்த பெண்ணின் படம்தான் என்று அவருக்குப் புரிந்தது. அந்த நாட்குறிப்பைப் புரட்டினார். ஆண்டின் இறுதி நாளில் நீண்ட பதிவு இருந்தது. அதைப் படித்தார்.
அவளை அழைத்துக் கொண்டு மலை உச்சிக்குப் போனேன். அவளிடம் என் வாழ்வைக் குறித்துக் கூறினேன். என்னால் அவளைத் திருமணம் செய்ய முடியாது என்பதைத் தெரிவித்தேன். அவள் மிகவும் கோபமுற்றாள். அழுதாள். ஆனால் கடைசியில் என்னை வெளி உலகம் அவதூறு செய்யும் படி பழிவாங்கப் போவதாகக் கூறினாள். நான் மன்றாடினேன். அவள் ஏற்கவில்லை. ஆத்திரம் தலைக்கேறியது. அவளை அப்படியே பிடித்துத் தள்ளிவிட்டேன். அவள் கீழே விழவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவள் கீழே விழுந்து இறந்து போவாள் என எதிர்பார்க்கவில்லை. அவள் இறந்து போனதை அறிந்தவுடன் அங்கிருந்து ஓடி ஊருக்கு வந்துவிட்டேன். வீட்டிலேயே பதுங்கி இருந்துவிட்டேன். பின் வேறு ஊருக்குச் சென்று வழக்கம் போல் பணியைத் தொடங்கினேன். இன்று வரை அவள் நினைவு வாட்டிக் கொண்டிருக்கிறது.
ஆண் மருத்துவர் அந்த நாட்குறிப்பை எடுத்துக்கொண்டு தன் ஊருக்குக் கிளம்பினார். மருத்துவமனையை அடைந்தார். இரவுப் பணியை மேற்கொள்வதாகப் பெண் மனநோய் மருத்துவரிடம் சொன்னார். அவள் இருக்கும் அறைக்குப் போகும் போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பினார்.
இரவு அவள் அறைக்குப் போனார். அவள் முழித்துக் கொண்டு அவருடைய வரவுக்காகக் காத்திருந்தாள். அவள் அமைதியாக அவரைப் பார்த்தாள். அவளிடம் தான் செய்தது மிகப்பெரிய தவறு. தன்னை மன்னித்துவிடவேண்டும் என்று சொன்னார். அவள் ஏளனமாகச் சிரித்தாள். அவரை, தான் பழிவாங்கவேண்டும் என்றாள். அவளை மீண்டும் அந்த மலை உச்சிக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார். அவள் உடனடியாகக் கிளம்பினாள்.
இருவரும் காரில் அந்த மலை வாசஸ்தலத்திற்குக் கிளம்பி அந்த மலையின் உச்சிக்கு வந்தடைந்தார்கள். அந்த மருத்துவர் அவளிடம் தான் அவளைக் கொன்றது போல் அவளும் தன்னைக் கொல்லத்தான் அங்கு அழைத்து வந்திருப்பதாகச் சொன்னார். அவள் சிரித்தாள். அவள் வெறிபிடித்தவள் போல் அவரைப் பிடித்துத் தள்ள ஓடிவந்தாள். அவர் நகர்ந்து கொண்டார். அவள் கல் தடுக்கி பள்ளத்தாக்கில் பாய்ந்தாள்.
ஆண் மருத்துவர் காரை எடுத்துக் கொண்டுக் கிளம்பி மருத்துவமனைக்கு வந்தார். அந்த நாட்குறிப்பை எடுத்தார்.
அவளை மீண்டும் சந்தித்தேன். அவளுக்குக் கோபம் தணியவில்லை. என்னைக் கொல்ல வந்தாள். சரியான நேரத்தில் நகர்ந்துகொண்டதால் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்துவிட்டாள் என எழுதிவிட்டு என்னை ஒரு நாள் அவள் மன்னிப்பாள் என முடித்தார்.
காலையில் பெண் மனநோய் மருத்துவர் அந்த ஆண் மருத்துவர் இருந்த அறைக்கு வந்தார். அவர் மயங்கி தன் இருக்கையில் சரிந்திருந்தார். அவரைச் சோதித்த போது அவர் இறந்து சில மணிநேரங்கள் ஆகிவிட்டது தெரிந்தது. உடனே அவளுடைய அறைக்கு விரைந்து வந்தார் பெண் மனநோய் மருத்துவர். அவள் எழுந்து அமர்ந்தாள். தான் வீட்டுக்குப் போகவேண்டும் என்றாள். அவள் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கச் சொன்னார். தன் முகம் மிகவும் வயதாகிவிட்டது போல் தெரிவதாகச் சொல்லி கண்ணாடியைத் திருப்பிக் கொடுத்தாள். அன்று இரவு நன்றாகத் தூங்கியதாகச் சொன்னாள்.
ஆசிரியர்
-
தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.
'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.
பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.
தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.
இதுவரை.
சிறுகதை2023.04.24முகம்
குறுங்கதை2022.11.26முபீன் சாதிகாவின் நான்கு குறுங்கதைகள்
கதைகள் சிறப்பிதழ்2022.08.01முபீன் சாதிகாவின் இரண்டு குறுங்கதைகள்
நூலாசிரியரின் உலக ஞானமும் வாசிப்பனுபவமும் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது சிறப்பான நடை.. கதையின் முடிவு தந்த அதிர்ச்சீ கதைக்கு வேறொரு அர்த்தம் தந்துவிட்டது
Excellent