24 April 2024

பெருவிய எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் இதழாளர். 2010ம் ஆண்டிற்கான இலக்கிய நோபெல் பரிசினை வென்ற Mario Vargas Llosa எழுதிய “ Why literature? – The pre mature obituary of the book ” கட்டுரையின் தமிழாக்கம்.


இது எனக்கு அடிக்கடி நிகழ்கிறது. புத்தக சந்தையிலோ, புத்தகக் கடைகளிலோ நாகரீக மனிதர்கள் என்னை அணுகி என் கையெழுத்தைக் கேட்கிறார்கள். இது என் மனைவிக்கு, என் மகளுக்கு, அல்லது என் அம்மாவிற்கு என்று விளக்கம் சொல்கிறார்கள். அவர்கள் இலக்கியத்தின் மீது ஆர்வம் மிக்கவர்கள் என்று சொல்லும்போது உடனடியாக நான் கேட்பேன். உங்களுக்கு இலக்கியங்களின் மீது ஆர்வமில்லையா? என்று அதற்கான பதில்கள் அனேகமாக ஒரே விதமாகத்தானிருக்கும். நிச்சயமாக எனக்கும் இலக்கியத்தின் மீது ஆர்வம் உண்டு. ஆனால், நான் மிகுந்த வேலைப் பளுவோடு அலைந்து கொண்டிருப்பவன். இத்தகைய பதில்களை நான் எண்ணற்ற முறை கேட்டிருக்கிறேன். இந்த மனிதர்களைப் போன்ற ஆயிரக் கணக்கான மனிதர்கள் செய்வதற்கு எத்தனையோ முக்கியமான வேலைகள் இருக்கின்றன. அவர்கள் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் இருக்கின்றன. பொறுப்புகள் இருக்கின்றன. அதனை விட்டு விட்டு மணிக்கணக்காக ஒரு நாவலைப் படிப்பதையோ, ஒரு கவிதைப் புத்தகத்தில் மூழ்குவதையோ, ஒரு இலக்கியக் கட்டுரையைப் படிப்பதிலோ, தங்கள் மதிப்பு மிக்க நேரத்தை விரயம் செய்ய விரும்புவதில்லை.

இந்த நிலை எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கிறது. உதாரணமாக ஸ்பெயினில் மிகச் சமீபமாக எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் பாதிக்கும் மேலான அந்த நாட்டு மக்கள் நாவல்களைப் படித்ததே இல்லையாம். மேலும், படித்தவர்களில் 6.2 சதவீத ஆண்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்பதும் மீதி பெண்கள் என்பதும் தெரியவரும்போது இந்த விகிதாச்சாரம் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. நான் அந்தப் பெண்களைக் குறித்து பெருமகிழ்வு கொள்கிறேன். அதே சமயம் அந்த ஆண்களைக் குறித்து வருத்தமாக இருக்கிறது.அந்த லட்சக்கணக்கான மனிதர்கள் படிக்கலாம் ஆனால் அவர்கள் படிக்கவே கூடாது என்ற முடிவிலிருக்கிறார்கள்.

வாசித்தலின் இன்ப உணர்வை அவர்கள் அனுபவிக்காதது குறித்து மட்டுமே எனக்குப் பரிதாபமாக இருக்கிறது என்றில்லை. இலக்கியமற்ற சமூகம், இலக்கியத்தைச் சாகடிக்கிற ஒரு சமூகம், இலக்கியத்தைப் புறந்தள்ளுகிற ஒரு சமூகம் தனிமனித வாழ்வு மற்றும் சமூக வாழ்வின் எல்லைகள் சமூகத்தோடு சேர்ந்து வாழ விரும்பாத ஒரு மரபை உருவாக்கிவிடும். அந்த சமூகம் மதரீதியான காட்டுமிராண்டித்தனத்திற்கு அடிமைப்பட்டு; அதன் சுதந்திரம் இடருக்குள்ளாகிவிடும்.

நான் படிப்பது அல்லது இலக்கியம் என்பது ஒரு விலையுயர்ந்த பொழுது போக்கு என்பதற்கு எதிராக நான் சில வாதங்களை மேற்கொள்ள விரும்புகிறேன். அதனை மனித மனதை அலைபாய விடாமல் ஒரு சமூகத்தில் கட்டமைக்கும், நவீன சுதந்திரமான சமூகத்தை நோக்கிச் செல்லும், அடிப்படையான அத்தியாவசியமான செய்கையைச் செய்ய விழையும் மனித மனங்களுக்கு ஆதரவாகப் பேச விரும்புகிறேன்.

அறிவு அதன் புதிய தளங்களுக்கு நம்மை இட்டுச் செல்லும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இயற்கை கடந்த வியப்பூட்டும் எல்லைகளுக்கு நம்மை இட்டுச் செல்லும் விஞ்ஞானத்திற்கு மிக்க நன்றி. தொடர்ச்சியாகச் சிந்தனை மரபைக் கூறுகளாகப் பிரித்து இணைக்கும் அதன் போக்குகளுக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கலாச்சாரப் புதுமை வருங்காலத்தைச் சிறப்படையச் செய்யும். நிச்சயமாக,, தனித்துவமான அந்த தன்மை பல வளர்ச்சிகளைக் கொண்டு வரும். இது ஆழ்ந்த தேடலுக்கும், பரந்த தெரிதலுக்கும் அனுமதிக்கிறது.

அதன் எதிர்மறையான செயல் என்ன வென்றால் அது பொதுப் புத்திசாலித்தனங்களையும், கலாச்சாரப் பண்பின் கூறுகளையும் புறந்தள்ளி ஆண்களையும், பெண்களையும் வெளித் தள்ளி, தொடர்பு கொள்ள வைத்து சமூகம் பற்றிய புரிதல்களை வளர்த்து, நுட்பவியலாளர்களைத் தவிர்க்கிறது. அறிவார்ந்த சிறப்புத்தன்மையானது தனித்தன்மையான மொழியையும், கமுக்கமான குறியீட்டையும் எதிர்நோக்குகிறது. தகவல்கள் அதி தெளிவுடன் பகுதி பகுதிகளாகப் பிரித்தளிக்கப் படுகிறது. இந்தப் பகுதிகளாகப் பிரிக்கப்படுவது குறித்தும், பாகங்களாக இணைக்கப் படுவது குறித்தும் பழைய பழமொழி ஒன்று எச்சரிக்கிறது. இலை பற்றியோ கிளை பற்றியோ நீங்கள் அதிக நேரம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க வேண்டாம். அது மரத்தின் ஒரு பகுதி என்பதை நீங்கள் மறக்க நேரும். மரம் பற்றி ஆழமாகச் சிந்தித்தால் மரம் கானகத்தின் ஒரு பகுதி என்பதை மறந்துவிட நேரும். காடு பற்றிய விழிப்பு என்பது ஒரு பொது உணர்வு.தன் சொந்தம் என்ற உணர்வு. அது சமூகத்தோடு இணைகிறது. அது ஆன்மா ஒன்றே அறியத்தக்கதும் நிலைபேறுடையதும் என்ற கோட்பாடுடையவர்களிடமிருந்தும் காக்கிறது. இத்தகைய கோட்பாடுடையவர்கள் இந்த பிரமையையும், பிதற்றலான மனநிலையையும் உருவாக்குகிறார்கள். இயற்கைக்கு மாறாக வன்மம், போர், இனப் படுகொலைகள் இத்தகைய மனிதர்களிடமிருந்தே துவங்குகிறது.

நம் காலத்து விஞ்ஞானமோ, தொழில் நுட்பமோ நம்மை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைக்க வாய்ப்பில்லை. அதாவது அறிவின் பரந்த எல்லை, வளர்ச்சி அடைதலின் வேகம் இவை இரண்டும் அதன் தனிப்பட்ட தன்மைகளுக்கே நம்மை இட்டுச் செல்கிறது.

ஆனால் இலக்கியம் என்பது அது ஈடுபாடு கொள்ளும் அளவிற்கு அது மனித மனங்களின் கூறு. அது தன்னை உணர்ந்து கொள்ளவும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் ஒருவர் எந்தத் துறையிலிருந்தாலும், அவர் வாழ்வின் திட்டங்கள் அவரது நிலவியல் மற்றும் கலாச்சாரம் எப்படியிருந்தாலும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைச் சொந்த அனுபவமாக மாற்றுகிறது. வரலாற்றினை நோக்கித் திரும்பவைக்கிறது. செர்வாண்டிஸ், தாந்தே, ஷேக்ஸ்பியர் படிப்பவர்களை நாம் ஒருவரை ஒருவர் நேரம் கடந்தும், காலம் கடந்தும் புரிந்து கொள்ள முடியும். நாம் அனைவரும் ஓர் இனம் , இனக்குழு என்று உணர முடியும். ஏனெனில் இந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் நாம் மனித உணர்வைப் பரிமாறிக் கொள்ள முடியும், நம்மைப் பிரிக்கும் சக்திகளிடமிருந்து ஒருமித்த நிலையை அடைய முடியும்.

இலக்கியம் தவிர வேறெதுவும், நம்மை மத ரீதியாக, அரசியல் ரீதியாக, முட்டாள்தனமான முன் கருத்துள்ள ரீதியாக, நம்மைப் பிரிக்க நினைக்கும் சக்திகளிடமிருந்து நம்மைப் பிரிக்க முடியாது . ஆண்களும், பெண்களும், தேசங்களும், எல்லா இடங்களும் சமம்..

இலக்கியம் தவிர வேறெதுவும் இன, கலாச்சார வித்தியாசங்களைப் போதிக்கவியலாது. வழிவழி வந்த மானுட வாழ்வைப் போதிக்கவியலாது. இத்தகைய வேறுபாடுகள்தான் மனித வாழ்வின் பன்முகத் தன்மை கொண்ட கலைகள். நல்ல இலக்கியத்தை வாசிப்பது ஓர் ஆனந்த அனுபவம். அதோடு, நாம் எங்கு, எப்படி வாழ்கிறோம், மனித வாழ்வின் ஒற்றுமை, ஒழுங்கின்மை ; நம் செயல்கள், நம் கனவு, நம் தனிமை மற்றும் நாம் நம் வாழ்வில் கொண்டிருக்கும் தொடர்பு, பொது வாழ்வில் நாம் கொண்டிருக்கும் படிமம். நம் விழிப்பின் ரகசிய இளைப்பாறுதல்கள்.

இந்த மறுப்பிற்குட்பட்ட உண்மைகள். Isaiah berlin அழைப்பது போல் மனிதக் கூறுகளின் தொகுப்பு. இன்றைய உலகில் இந்த ஒன்று படுத்துதல் மனித மனங்கள் பற்றிய அறிவை இலக்கியங்களில் மட்டுமே கண்டடைய முடியும்.மனித இயக்கத்தின் பிற பிறிவுகளான தத்துவம், வரலாறு, சமூக அறிவியல் எல்லாவற்றையும் விட ஒன்றிணைத்தல் தன்மையை அது கொண்டிருக்கிறது. இதுதான் முறையான ஒன்றை வடிவமைக்கிறது. ஒன்று பட்டதாக உருவாக்குகிறது.

மனிதக் குலம் புற்றுநோய் போல உள்வட்டம், வெளி வட்டம் என்று அறிவின் எல்லைகளுக்குள் அடைக்கப் பட்டிருக்கிறது என்பது மட்டுமில்லாமல் பல்கிப் பெருகும் மொழித்திறனற்ற தொழில் நுட்ப அறிவால் தனிமைப் படுத்தப்பட்டவர்களாக ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள். சில விமர்சகர்களும், கருத்தியல் வாதிகளும் இலக்கியத்தை விஞ்ஞானமாக்க முயல்கிறார்கள். அது ஒரு நாளும் சாத்தியமாகாது. ஏனெனில் புனைவு என்பது தனி மனித அனுபவங்களால் மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை. அது மனிதக் குலத்தின் மூலமாகச் செழுமை அடைகிறது. அதை நிராகரிக்கவோ, கணக்கில் கொள்ளாமலிருக்கவோ அதனை முன் வைப்பு திட்டங்கள் எதன் மூலமும் கணக்கில் வராமல் காணாமற் போகச் செய்துவிட முடியாது.

பிராஸ்ட் கணித்தது இதுதான். முழு வாழ்வு தெளிவுபெற்றதும் ஒளிவற்றதாகிறது. அது இலக்கியத்தில்தான் வீழ்கிறது. அவர் அதிகப்படுத்திச் சொல்லவில்லை. அவர் வாழ்வைக் குறித்த அன்பைத் தெரிவிக்கிறார். அவர் முன்னெடுத்துச் சொல்வது என்னவெனில், இலக்கியத்தின் விளைவு வாழ்வு முழுமையாகப் புரிந்து கொள்ளப்படுவதும், முழுமையாக வாழ்வதும் ஆகும். அதோடு அந்த வாழ்க்கை வாழ்வது மட்டுமல்ல பகிர்ந்து கொள்ளப் படுவதும் ஆகும்.

சகோதர ரீதியான தொடர்புகளை இலக்கியம் மனிதர்களிடையே ஏற்படுத்துகிறது. அவர்களை உள்ளே நுழையவைத்து, பொது நோக்கம் கொண்ட குழுவாக மாற்றுகிறது. சென்றடைய வேண்டிய குறிக்கோளுக்கிடையேயான அனைத்துத் தடைகளையும் அகற்றுகிறது.

இலக்கியப் படைப்புகள் வடிவம் காண்பிக்கவியலாத எழுத்தாளனின் ஆத்மா. எழுத்தாளனின் தெளிவான மனநிலையும், தெளிவற்ற மன நிலையும் கூட்டாகக் கொள்ளும் உறவு. எழுத்தாளனைச் சுற்றி இயங்கும் உலகோடு அவன் கொள்ளும் உணர்திறன். எழுத்தாளனின் உணர்வெழுச்சி இவற்றோடு கவிஞனோ, எழுத்தாளரோ வார்த்தைகளைக் கொண்டு போராடுகிறார்கள். மெல்ல மெல்ல இணக்கமான தாளலயத்துடன் கூடிய படைப்பை அடைகிறார்கள்.

செயற்கையான வாழ்வு என்பது நிச்சயம் கற்பனையானது. சிலருக்கு அந்த வாழ்வு எப்போதும் மொழிச் சொற்றொடர்களானது. ஏனெனில், உண்மையான வாழ்வு அவர்களுக்கு அமையப் பெறவில்லை. அந்த வாழ்வை அவர்கள் கோரவும் இல்லை. இலக்கியம் தனிமனித வாழ்விலிருந்து தன்னைக் கட்டமைத்துக் கொள்வதில்லை. அது எப்போது நிலைபேற்றை அடைகிறது என்றால் அதனை மற்றவர்கள் சுவீகரித்துக் கொண்டு, பொது வாழ்வின் ஓர் அங்கமாக அது மாறும்போதுதான் இலக்கியம் என்பது நன்றிக்குரியதாகவும், வாழ்வினைப் பகிர்ந்து கொள்வதுமாகிறது.

மொழியின் தன்மையில் இலக்கியம் தன் முதல் விளைவைக் காண்பிக்கிறது. ஓர் இனம் இலக்கிய வடிவைக் கைக்கொள்ளாமலிருந்தால் அது தன்னைப் பற்றிய துல்லியமற்ற தோற்றத்தைக் காண்பிக்க மறுப்பதாகும். செழுமையான அர்த்த வேறுபாட்டைக் காண்பிக்காமலும், குறைந்தபட்சத் தொடர்புகளுடனும் இருந்தால் அந்த மொழியின் வார்த்தைகள் இலக்கிய வடிவம் அடைவதே சிறப்பான ஒன்றாகும். இலக்கியம் படிக்காமலும், இலக்கியம் பற்றி அறியாமலும் ஒரு சமூகம் இருக்குமானால் அது பேசத் திறனற்ற, கேட்கச் செவியற்ற ஒன்றாகிவிடும். அடிப்படைக் கூறுகளில்லாததால் அந்த மொழி தொடர்பு கொள்ளுதலில் நிறையப் பிரச்சினையைச் சந்திக்கும். அது தனிப்பட்ட மனிதருக்கும் பொருந்தும். ஒரு மனிதன் இலக்கியத்தை வாசிக்காதவனாகவோ, கொஞ்சமாக வாசிப்பவனாகவோ அல்லது குப்பைகளை வாசிப்பவனாகவோ இருந்தால், அடிப்படைக் கொள்கையற்ற அந்த மனிதன் நிறையப் பேசலாம் ஆனால் அவனால் குறைவாகத்தான் புரிய வைக்க முடியும். ஏனெனில் அவனது மொழிப்புலமையின் போதாமை அவன் தன்னை வெளிப்படுத்தமுடியாத ஒன்றாகிவிடுகிறது.

இது வார்த்தைக் குறைபாடு மட்டுமல்ல. சிந்தனை மற்றும் புத்திசாலித்தனக் குறைபாடும் கூட. ஏனெனில் நம் சூழல்களிலிருந்து நம்மை வெளிப்படுத்தும் வார்த்தைகள் தாண்டிய வெளிப்பாடு நம்மிடம் இல்லாததுதான். நாம் எப்படி ஆழமாகச் சிந்திப்பது., அடி நாதமாகச் சிந்திப்பது என்பதை இலக்கியத்தின் மூலமே கற்றுக் கொள்ள முடியும். நல்ல இலக்கியத்திலிருந்து மட்டுமே முடியும்.

கலையின் எந்த வடிவங்களையும் விடத் தொடர்புகொள்ளுதல் என்ற மொழியைக் கலையாக்குவது இலக்கியம் மட்டுமே. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஒருவரின் செறிவான மொழிப்பிரயோக வெளிப்பாடு என்பது ஒரு திட்டத்தை வெளிப்படுத்தப் போதுமான மொழி. ஒவ்வொரு உணர்வையும் வெளிப்படுத்தும் சிந்தனை. கற்பிக்க, பயில, தொடர்பு கொள்ள, கற்பனை வளப்படுத்த, கனவு காண இப்படி எல்லா இடங்களிலும் மொழி தவறாகப் பயன்படுத்த நேரிடலாம். சொற்கள் அர்த்தமற்று ஒலிக்கலாம். இத்தகைய செயல்கள் மொழியிலிருந்தே புறக்கணிக்கப் படலாம். மொழி இலக்கிய வடிவமாகும்போது நாம் இலக்கியத்திற்கு நன்றியுடையவர்களாகிறோம். ஓர் உன்னதமான, பரிசுத்தமான, உயரங்களை அடைகிறோம். மனித மனதின் சந்தோஷப் பரிமாற்றங்களை அது அதிகரிக்கிறது.

இலக்கியம் காதல், இச்சை, காமம் மற்றும் இன்ன பிற நாட்டங்களோடு கூடி ஆதிக்கம் செலுத்துகிறது. இலக்கியமில்லாமல் காமம் இல்லை. காதலும் காதலின்பமும் பலவீனமாகும். சுவையற்றும், பலனற்றும் போகும். இலக்கிய ரீதியான அதி புனைவுகள் அளிக்கும் எச்சிறப்பும் இல்லாமல் போகும். இதைச் சொல்வது மிகைப் படுத்தப் பட்ட ஒன்றாக இருக்கலாம். ஒரு தம்பதிகள் இலக்கியம் படிப்பவர்கள் புலனின்ப மனமகிழ்வு கொள்ளுதலையும், அதன் அனுபவத்தையும் இலக்கியம் படிக்காத, தினசரி தொடர் தொலைக்காட்சிக்கு அடிமைப்பட்டுப் போன அடி முட்டாள் மனிதர்களை விட அதிகமாக உணர முடியும். முட்டாள்களின் உலகில் காமம் என்பது எப்படி விலங்குகள் தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொள்கின்றனவோ அப்படித்தான்.

கேட்பொலி அல்லது காணொளி ஊடகங்கள் இலக்கியத்தை இடமாற்றம் செய்து மனிதக் குலத்திற்கு மொழியாலான அற்புதமான சாத்தியங்களை அளிக்கும் முயற்சியில் இருந்தாலும் அவை காட்சியை முன்னிலைப்படுத்தி மொழியைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன. ஆதியிலிருந்த அந்த மொழியே ஊடகங்களின் பிரதான மொழியாகிவிடுகிறது. வாய்வழியாகக் கருத்தைச் சொல்லப் பயன்படும் மொழியாக மட்டுமே இருந்துவிடுகிறது. எழுதப்படும் போது அந்த மொழி அளிக்கும் பரிமாணங்களை அளிக்கத் தவறிவிடுகிறது. ஒரு திரைப்படத்தையோ அல்லது தொலைக்காட்சி நிகழ்வையோ இலக்கிய ரீதியாக வரையறுக்க வேண்டுமென்றால் நளினமான மொழியில் அலுப்பூட்டுகிறது என்றுவிடலாம். இந்தக் காரணங்களால் வானொலி அல்லது தொலைக்காட்சியில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் மக்களின் கவனத்தைப் பெறாமல் போய் விடுகிறது. என்னைப் பொறுத்தவரையில் நான் அறிந்தவரையில் இதற்கு விதி விலக்காக இருக்கும் ஒரே நிகழ்வு நிகழ்ச்சிகள். BERNARD PIVOT –ன் நிகழ்ச்சிகள் மட்டுமே.

இந்தச் சிந்தனைதான் இலக்கியம் மட்டுமே மொழிக்கு முழுமையான அறிவையும் மேதாவித்தனத்தையும் அளிக்கும் என்று தோன்றுகிறது.ஆனால் அதன் விதி அத்தகைய புத்தகங்களைச் சார்ந்திருக்கிறது. இயந்திரத்தனமாக உருவாக்கப் படும் இலக்கியங்கள் அந்த வரிசையில் சேராது.

இதுதான் பில்கேட்ஸை என்னிடம் கொண்டு வந்தது. அவர் மாண்ட்ரீல் வந்த போது ராயல் ஸ்பானிஷ் அகாடமிக்கு வருகை தந்தார். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எங்களோடு இணைந்து சில திட்டங்களை மேற்கொள்ள முயன்றது. அவற்றையெல்லாம் விட, பில்கேட்ஸ் அகாடமி உறுப்பினர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி மைக்ரோசாஃப்ட்வேரிலிருந்து F1 என்ற உரு அழிக்கப்பட மாட்டாது என்பதுதான். அந்த வாக்குறுதி இது ஐந்து கண்டங்களில் வாழும் நானூறு மில்லியன் ஸ்பானிஷ் பேசுபவர்களைப் பெருமூச்சுவிட வைத்தது. ஏனெனில் மின் வெளியிலிருந்து அந்த எழுத்துக்களை அகற்றுவது என்பது பாரம்பரியம் மிக்க ஒன்றை அகற்றுவது போலாகும். ஸ்பானிய மொழிக்கு உகந்த சலுகையை வழங்கிய பில்கேட்ஸ் அகாடமி கட்டிடத்தைக் கூடத் தாண்டாமல் திரண்டிருந்த பத்திரிக்கையாளர்களிடம் தான் இறப்பதற்கு முன்னால் செய்ய நினைத்திருப்பதாக ஒன்றைச் சொன்னார். காகிதங்களின் செயல்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது பின் புத்தகங்களை ஒழிப்பது என்பதே அது.

அவரது எண்ணப்படி புத்தகங்கள் காலக்கிரமத்தில் அழிக்கப்பட வேண்டியவை. கணினிகளின் திரைகள், காகிதங்கள் இப்போது செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யும் என்று வாதிட்டார்.அதோடு சாந்தப்படுத்தும் விதமாக, கணினிகள் மிகச் சிறியவை. எளிதில் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடிபவை. அதோடு செய்திகளை , புத்தகங்களை மின்னணு ஊடகங்களின் வழியே வெளியிடும்போது அது காகிதங்களின் தேவையைக் குறைத்து, கானகங்களின் அழிவை மட்டுப்படுத்துகிறது. காகிதத் தொழிற்சாலைகளை அது மாற்றும் என்றார். மக்கள் கணிப்பொறியில் படிக்கத் துவங்குவார்கள். அப்படித் துவங்கும்போது சுற்றுப்புறச் சூழலின் பசுமை நமக்குத் தெரியும் என்றார்..

நான், அவரது சிற்றுரையின்போது உடனிருக்கவில்லை. நான் இருந்திருந்தால் என்னையும் சக ஆட்களையும் வேலையற்றவர்களின் வரிசையில் நிற்க வைக்கும். அவரது பேச்சிற்கான எதிர்வினையைக் காட்டியிருப்பேன். அதோடு அவரது கணிப்பை வன்மையாக எதிர்த்திருப்பேன். கணினியின் திரை, புத்தகங்கள் தரும் அனைத்துவிதமான பயன்களையும் தந்து விடுமா? படிப்பவர்களின் புலனின்ப அனுபவத்தையும், ஆன்மீக அனுபவத்தையும் புத்தகங்கள் படிக்காத, தொலைக்காட்சி தொடர்களால் முட்டாள்களாக்கப்பட்ட மனிதர்களைவிடவும் அதிகமாக உணர முடியும். கேட்பொலி அல்லது காணொளி ஊடகங்கள் இலக்கியத்தை இடமாற்றம் செய்து மனிதர்களுக்கு மொழியாலான அற்புதமான சாத்தியங்களை அளிக்கும் முயற்சிகளில் இருந்தாலும், கேட்பொலி காணொளி ஊடகங்கள் காட்சியை முன்னிலைப்படுத்தி மொழியைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன. ஆதியிலிருந்த அந்த மொழிதான் ஊடகங்களின் பிரதான மொழியாகிவிடுகிறது. வாய் மொழியாக ஒரு கருத்தைச் சொல்லப் பயன்படும் மொழியாக மட்டுமே அது இருந்துவிடுகிறது. எழுதப்படும்போது அளிக்கும் பரிமாணங்களை அளிக்கத் தவறிவிடுகிறது. ஒரு திரைப்படத்தையோ, தொலைக்காட்சி நிகழ்வையோ நாம் இலக்கிய ரீதியாக வரையறுக்க வேண்டுமென்றால் நளினமான மொழியில் அலுப்புத்தட்டுகிறது என்றுவிடலாம். இத்தகைய காரணங்களால் வானொலி அல்லது தொலைக்காட்சியின் தொடர்கள் அலுப்புத்தட்டிவிடுகின்றன. நான் அறிந்த வரையில் இதற்கு விதி விலக்காக இருக்கும் ஒரே நிகழ்வு BERNARD PIVOT-ன் நிகழ்ச்சிகள் மட்டுமே.

இந்தச் சிந்தனைதான் இலக்கியம் மட்டுமே மொழிக்கு முழுமையான அறிவையும் மேதாவித்தனத்தையும் அளிக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் அதன் விதி புத்தகங்களைச் சார்ந்திருக்கிறது. இயந்திரத்தனமாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் அந்த வரிசையில் சேராது.

எனக்கு அப்படியொன்றும் தோன்றவில்லை. புதிய தொழில் நுட்பங்கள் குறிப்பாக இணைய தளங்கள் தகவல் தொடர்பில் எத்தகைய பங்காற்றுகிறது என்று என் வேலையிலேயே அறிந்திருக்கிறேன். ஆனால், இத்தகைய தொழில் நுட்பம் காகிதங்களின் பயன்பாட்டிற்கான ஒரு மாற்று என்பதையோ, இலக்கியத்தைப் படிப்பதற்கான தளம் என்பதையோ நான் நம்பவில்லை. அது ஓர் எட்டிப்பிடிக்க முடியாத வேறுபாடு. என்னால் அதனைக் கடக்க முடியாது.

நான் செயல்பாடுகள் இல்லாத, வரலாற்றுக் கூறுகள் இல்லாத வாசிப்பை ஒப்புக் கொள்ள மாட்டேன், ஒருவர் தகவல் தொடர்பையோ, தகவல் குறிப்பையோ கணினியின் திரையில் பார்ப்பதும், கனவுகளும் வார்த்தைகளை அனுபவித்தலின் இன்பமும், நெருக்க உணர்வும், மனக்குவிப்பும் புத்தகத்தைப் படிப்பது போன்ற மனநிறைவை கூட்டாகத் தராது.

ஒருவேளை இக்கூற்றுக் காகிதங்களோடும், புத்தகங்களோடும் கூடிய நேரடியான அனுபவமின்மையின் போதாமை காரணமாக வந்திருக்கலாம். நான் இணையத்தில் செய்திகளைத் தேடும்போது அடையும் உற்சாகத்தை ஒரு போதும் GONGURA – வின் கவிதைகளைப் படிப்பதற்கோ, ONETTI –யின் நாவல்களைப் படிப்பதற்கோ, PAZ-ன் கட்டுரையைப் படிப்பதற்கோ கணினியின் திரைப் பக்கம் செல்வதில்லை. புத்தகமாகப் படிப்பதும், இணையத்தில் பார்ப்பதும் ஒன்றல்ல. நான் சமாதானமாகலாம். ஆனால் உணர்வைப் புரியவைக்க முடியாது. புத்தகங்களின் மாற்றத்தால் இலக்கியம் நோய்மை அடையும். இலக்கியம் என்ற பதம் மறையவே மறையாது. நாம் தூரத்திலிருந்து இலக்கியத்தை நோக்கும்போது எப்படித் தெரியும் என்றால் தினசரி தொலைக்காட்சி தொடரில் வரும் அழுகுணிக் காட்சிகள் Sophocles மற்றும் Shakespeare –ரிலிருந்து எடுக்கப் பட்டது என்று தோன்றும்.

இலக்கியம் தேசங்களின் வாழ்வில் மிக முக்கியமான அங்கம் என்று சொல்வதற்கு இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. அது அல்லாமல் விமர்சன மனம். அதுதான் வரலாற்று மாற்றங்களுக்கான உந்து சக்தி. சுதந்திரத்திற்கான காவலன்.

இலக்கியம் தங்களிடம் மிகையாக இருப்பதைக் கொண்டு மகிழ்வோடு வாழ்பவர்களுக்கு எதையும் சொல்வதில்லை. இருப்பதைக் கொண்டு யாரெல்லாம் இப்போது வாழ்க்கையை வாழ்கிறார்களோ அவர்களுக்கானது. இலக்கியம் கலகக்காரர்களின் உத்வேகம். இலக்கியத்தைச் சரணாலயமாக அடைபவர்கள் ஒரு நாளும் மகிழ்ச்சியற்றோ, நிறைவற்றோ போகப் போவதில்லை. Mancha ஒல்லியான குதிரையோடு மேற்கொள்ளும் பயணம். ஆடுகளின் மேய்ச்சல் நிலத்தில் உலவும் குழப்பமான கருணைமிக்கவன். திமிங்கிலத்தின் முதுகில் பயணம் செய்து கடலைக் கடக்கும் ahab, விஷமருந்தும் emma bovary, பூச்சியாகும் gregor samsa இவர்களெல்லாம் நம் தடைகளை அகற்றுவதற்காகக் கண்டறியப்பட்டவர்கள். தவறான, அழுத்தமான, நியாயமற்ற வாழ்வின் மனிதர்கள். வாழ்வு நம்மை ஒரே மனிதனாக வைத்திருக்கிறது. நாம் பல மனிதர்களாக மாற விரும்பினாலும் பல்வேறு விருப்பங்களை நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய, பல்வேறு ஆர்வ வேட்கைகளை அமைதியாக கைக் கொள்ள வேண்டியிருக்க வேண்டியிருக்கிறது.

இலக்கியம் உயிர்த்துடிப்பைச் சாந்தப்படுத்தும். கடினமான வாழ்வைச் சுருக்கும். ஆனால் இந்த வியக்கத்தக்கத் தொங்கல் நிலையை அகற்றி இலக்கியம் தன் மாயத் தோற்றம் மூலமாக இலக்கியத்தின் மறுபக்கத்திற்குக் கொண்டு செல்கிறது. நாம் கால நேரமற்ற ஒரு பிரதேசத்தின் குடிமகன்களாகிறோம். இந்த வகையில்தான் இலக்கியம் இரவா புகழுடையதாகிறது. நாம் முன்பைவிட செறிவுமிக்கவர்களாக, முனைப்பு மிக்கவர்களாக இரக்கமுடையவர்களாக, துலக்க மிக்கவர்களாக நம் வழக்கமான கட்டுப் படுத்தப் பட்ட வாழ்விலிருந்து மாறுகிறோம். நாம் ஒரு புத்தகத்தை மூடி, இலக்கியப் புனைவிலிருந்து இயல்பான வாழ்விற்குத் திரும்பிவரும் போது நாம் எப்பேர்ப்பட்ட ஓர் அற்புதமான உலகத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறோம் என்பது விளங்கும். நாம் சற்றுமுன் இருந்த என்ன ஓர் அதிருப்தி நமக்காகக் காத்திருக்கிறது. உடனடியான மாறுதல்களை நாம் உணர்கிறோம், என்றும்.

War and peace, Remembrance of things past நாவல்களைப் படிக்கும் யாரும் எப்படி தாங்கள் ஏமாற்றப் பட்டு விட்டதாக உணரக்கூடும்? அந்தப் புனைவிலிருந்து அற்பமான எல்லை விவரணைகள் கொண்ட,வாழ்வின் எல்லைகள் செல்வதை தடுக்கும் பொய்கள் எங்கும் காத்திருக்கும்,.ஒவ்வொரு அடியிலும் காத்திருக்கும். நம் மருட்சியை அழிக்கும். இவற்றையெல்லாம் விடக் கலாச்சாரத் தொடர்பை நீட்டிக்க வேண்டிய, மொழியைச் செழுமைப் படுத்தக் கூடிய பெரும் பங்களிப்பை இலக்கியம் நமக்கு நினைவுபடுத்துகிறது. பல விஷயங்களில் அது இத்தகைய நோக்கமற்றும் இருக்கிறது. மோசமாக உருவாக்கப் பட்ட இந்த உலகில், எதிர்மறையாகப் பாசாங்கு செய்பவர்கள், அதிகாரமுடையவர்கள். அதிர்ஷ்டமானவர்கள் உண்மைக்கு மாறாகும்போது வார்த்தைகள் மெருகூட்டப்படுகின்றன. அவை உலகம் கட்டமைக்கப் பட்டிருப்பது போல நம் கற்பனையையும், மொழியையும் உருவாக்கும். சுதந்திரமான குடியரசு நாடுகளின் மக்கள் இதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்வது முக்கியம். விமர்சனங்கள் தொடர்ச்சியாக இவற்றைப் பரிசீலனை செய்து நாம் அந்த வார்த்தையைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். அது மேன்மேலும் முடியாத முயற்சி.

இன்னும் சொல்ல வேண்டுமானால் இலக்கியம் ஆட்சிய எதிர்ப்பை வழங்கக் கூடியது. ஏனெனில் அதன் நுண்ணிய வாசிப்பு, ஒழுங்கீனமில்லாத, அவர்களால் வேண்டப்படாத உலகை, பேராலயங்களும், ஆட்சியாளர்களும் கட்டுப்படுத்தியிருக்கும் உலகை, இலக்கியம் உடனடியாகத் தகர்த்து கலகம் செய்து, இணைத்து புரட்சியை உருவாக்குகிறது.

சமூக அரசியலில் இலக்கியம், கவிதை அல்லது நாடகம் ஏற்படுத்தும் விளைவை நாம் நேரடியாகப் பார்க்க முடியாது. ஏனெனில் அவை திரளாகப் படிக்கப் பட்டு திரளாக உணரப்படுவதில்லை. அவை தனி நபர்களால் படைக்கப் பட்டு தனிநபர்களால் படிக்கப்படுகிறது.

இத்தகைய காரணத்தால் துல்லியமாக வரையறுக்கப் பட்ட முறை இவை கடினமானது மட்டுமல்ல முடியாததும் கூட மேலும் இலக்கியப் படிப்பின் சமூக விளைவு சற்று அழகியல் சார்ந்ததாகும். Harriet beecher stowe-வால் எழுதப் பட்ட ஒரு சுமாரான நாவல், தீர்க்கமான விழிப்புணர்வில் பங்களித்து சமூக அரசியல் மாற்றங்களை அமெரிக்க அடிமைகள் கொடுமைக்கு எதிராக உருவாக்கியது. உண்மை என்னவென்றால் இலக்கியத்தின் விளைவுகளை அடையாளம் காண்பிக்கவோ, குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டவோ முடியாதபடிக்கு அவை உருவமற்றிருக்கும். முக்கியமான விஷயமென்னவென்றால் இந்த விளைவுகள் எந்தக் குடிமகன்களுக்கு இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியதோ அவர்களின் சுய தன்மை அந்தப் புத்தகங்களால் உருவாக்கப்பட்டது.

நல்ல இலக்கியம் மனிதர்களின் திருப்தியின்மையை மாற்றும். அதே சமயம் நிஜத்தில் நடுநிலை மதிப்பீட்டு ஆற்றலுடைய, மத கட்டுப்பாடுகளுக்கு ஆளாகாத மனப்பாங்கை வாழ்வை நோக்கி வளர்க்கும்.இதை இன்னும் சொல்ல வேண்டுமானால் இலக்கியம் மனிதர்களைச் சந்தோஷமற்றவர்களாக மாற்றுகிறது. திருப்தியின்மையோடு வாழவைக்கிறது. திருப்தியற்று வாழ்ந்து வாழ்தல் போர்க்களமாகி அர்த்தமற்ற போர்கள் குறித்த கண்டனங்களைக் கொண்டு கடைசியில் எல்லாவற்றையும் இழக்கப் போகிறோம் என்று தெரிந்தும் இவை அனைத்தையுமே உண்மைதான். இன்னொன்றும் உண்மை சாதாரண அழுக்கடைந்த வாழ்விற்கெதிராக கலகம் செய்ய வேண்டும் என்றும், நாம் இன்றும் நாகரீக முதிர்ச்சியற்ற நிலையில்தான் இருக்கிறோம். வரலாறு அறிவியலும் தொழில்நுட்பமும் இன்னும் முன்னேறவில்லை. மனித உரிமைகள் அங்கீகரிக்கப் படவில்லை. சுதந்திரம் காலாவதியாகிவிடக்கூடாது.இத்தகைய எண்ணங்களெல்லாம் திருப்தியின்மை காரணமாக நிகழ்கிறது. அறை கூவல்களாக, தாங்கவியலாததாகவோ உணரப்பட்டதாகவோ, வாழ்க்கை நிதானமாக இருக்கிறது. இத்தகைய மெய்யான கருத்து வாழ்வை ஏளனம் செய்கிறது. வாழ்வுத் தேடுதலைத் துவங்கி வேறுவகை நாவல்களைப் படிக்க வைக்கிறது. இலக்கியம் மிகப்பெரிய தூண்டுகோல்.

நாம் வரலாற்றின் அற்புதமான மறு வடிவு எப்படி நிகழ்ந்திருக்கிறது என்று பார்க்கலாம். இலக்கியம் இல்லாத உலகைக் கற்பனை செய்யலாம்.மனித இனம் கவிதையையோ நாவல்களையோ படித்திருக்கவில்லை. இது போன்ற உருமாற்றம் அடையாத நாகரீகம். மிகக் குறைந்த வார்த்தைகளைக் கொண்டு புலம்பலும், குரங்குகள் போன்ற அங்கச் சேஷ்டைகளும் வார்த்தைகளை விட மிக மேலோங்கியிருந்த காலத்தில் சில பெயரடைச் சொற்கள் நீடித்திருக்கவில்லை. அந்தப் பெயரடைச் சொற்களாவன க்விஸோட், காஃப்காயிஸம், கலகக்கார, ஆர்வேலிய, கொடூரமான போன்றவை காணவில்லை. இவை அனைத்தும் இலக்கியத்தைச் சுட்டும் வார்த்தைகள். நிச்சயமாக நாம் இன்னும் ஞானமற்றவர்கள். அடக்குமுறைக்கும் அடங்கிப்போவதற்கும் தயாராக இருக்கும் சாட்சியங்கள். நாச்சுவைக்கு அலையும் மட்டுமீறிய அத்துமீறல் கொண்ட இருகால் விலங்குகள். வலியைக் கட்டாயமாக ஏற்பவர்கள். ஆனால் நாம் ஒன்றைப் பார்க்க கற்றுக் கொள்ளவில்லை. இத்தகைய அளவு கடந்த எல்லை மீறிய பழக்கவழக்கங்கள் நம் கலாச்சார எல்லைக்குள் வரவில்லை. அடிப்படியான மனிதக் குணம் நாம் நம்மால் கண்டுபிடிக்க முடிந்த நம் அல்ல. அவை kafka. rabalais, orwell, de sade ,sacher-masoch நமக்கு உணர்த்தியவை.

டான் க்விஸோட் நாவலில் லா மாஞ்சா கதாபாத்திரம் அறிமுகமானதும் ஊதாரித்தனமான கனவில் ஆளும் அவனை நகைச்சுவையாளனாகக் காண்பார்கள். மற்றெல்லா கதாபாத்திரங்களையும் விட.

இன்று நாம் cabellaro de la triste figura ராட்சச காற்றாடிகளைப் பார்க்க வற்புறுத்தப் படும்போது அவர் அதைப் பார்ப்பது முட்டாள்தனமாகத் தோன்றலாம்.ஆனால் அது பேரன்பின் வடிவம்.அஊ இவ்வுலகின் வறுமையை அகற்றும் நம்பிக்கை.நம் எதிர்பார்ப்பு மிக்க கருத்தி9யல் அல்லது கருத்தியல் கோட்பாடு. படைப்புணர்வுக்குப் புறம்பாகவே உணரப்படுகிறது. அவர்கள் எப்படியோ அப்படி அல்லாமல், அவர்களுக்கான மதிப்போ, மரியாதையோ அல்லாமல் கதையின் முக்கிய கதாபாத்திரம் புதிய அவதாரமாகி இயக்கக்கூடிய செர்வாண்டீஸின் மேதைமை. அதேபோல சிறிய அளவிலான பிடிவாதம் கொண்ட பெண் கதாபாத்திரமாக எம்மா பூவரியைச் சொல்லலாம் அவர் உற்சாகமான வாழ்வை ஆடம்பரமாக வாழ விரும்பியதை நாவல் வழியே அறிய முடிகிறது. விட்டில் பூச்சியைப் போல அவள் ஜுவாலையின் அருகே பறந்து எரிந்து போகிறாள்.

மிகச் சிறந்த இலக்கிய எழுத்தாளர்களின் சிறந்த கண்டுபிடிப்பு நம் நிலையிலிருந்து நாம் நம்மைப் பற்றி அறியாத உன்னதச் சூழலைக் காணும் கண்களைத் திறப்பது. அவர்கள் மனித வாழ்வின் படு பாதாளங்களை உணரக்கூடிய அனுபவம் பெறக்கூடிய சூழலை உருவாக்குகிறார்கள்.

நாம் போர்ஹேயின் எழுத்துக்களை BORGESIAN என்று குறிப்பிடும் போது அந்தச் சொல் உடனடியாக செப்பிடுவித்தைபோல் இயங்கி வாழ்விலிருந்து மனதைப் பிரித்து நம்மை அற்புதமான உலகத்துக்குக் கொண்டு செல்கிறது.எளிதில் மாற்றிக் கொள்ள முடியாத நுட்ப மயமான நம் மன அமைப்பு எப்போதும் வட்டச் சுழல்களாகவும், குறியீடுகளாகவும் அல்லது புதிர்களாகவும் இருக்கின்றன. அதன் தனித்தன்மை நமக்குத் தெரியாததல்ல. ஏனெனில் நம்மால் உள்மனக் கிடப்பின் ஆசைகளையும் நம்மைப் பற்றி நமக்குத் தெரிந்த உள்ளார்ந்த உண்மைகளையும் வடிவமைத்துக் கொள்ள முடியும்.

காஃப்காவின் கதைகள் பற்றிய kafkaque என்ற பதம் நம் மனதில் வரும்போது பழங்காலத்து கேமராக்களின் நீண்ட குழல் விளக்கு வெளிச்சம் சட்டென நம் மீது தெரிப்பதை உணர்கிறோம். எந்த நேரமும் நாம் மிரட்டப் பட்டுக் கொண்டிருக்கிறோம், அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம், பாதுகாத்துக்கொள்ள முடியாத தனி ஆளாக நிற்கிறோம். கொடுங்கோன்மையான ஓர் இயந்திரம் வலிமையோடு நம்மை நசுக்குகிறது, வேதனையான, வாழ்வை இந்த நவீன உலகத்தில் தருகிறது. அதிகாரம் செலுத்தும் ஆட்கள் நிமிர்ந்து நிற்கும் காட்சிகளும், சகித்துக் கொள்ள முடியாத பேராலயங்கள், மூச்சுத்திணறவைக்கும் அதிகார வர்க்கம்.

சிறுகதைகளோ நாவல்களோ இல்லாமல் வேதனையுற்ற, பிராக்கை சேர்ந்த ஒரு யூதன் ஜெர்மானிய மொழியில் எழுதிக் கொண்டு வாழ்வதற்கான இடத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்திருக்க முடியாது. இயலாமையற்ற, தனிமைப்படுத்தப் பட்ட ஒருவரின் உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அடக்குமுறைக்குட்பட்ட, குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டப்பட்ட, தழுவிக்கொண்ட எல்லா அதிகாரங்களையும் அடித்து நொறுக்கி, அழித்து எந்தத் தோழமையும் இல்லாமல் முகம் காட்டாமல். செய்திருக்க முடியாது.

ORWELLIAN-என்ற ஜார்ஜ் ஆர்வேலின் எழுத்துக்களைக் குறிக்கும் பதம் kafkaque –வின் மாமன் மகள்/மகன் என்று சொல்லலாம்.அது கடும் துயரங்களுக்கெதிரான உளக் கிளர்த்தலை, அபத்தங்களுக்கெதிராக தூண்டுகிறது. இருபதாம் நூற்றாண்டின் சர்வாதிகார ஆட்சியாளர்களையும், அவர்களின் சமூகத்திற்கெதிரான கட்டுப்பாடுகளையும், ஆன்மாவிற்கெதிரான அடக்குமுறைகளையும் எதிர்க்கிறது.

1984-நாவலில் நிலப் பிரபுத்துவத்தின் அடிமையான மனிதர்களைப் பற்றி பதற்றமாக எழுதுகிறார். அந்த நிலப்பிரபுக்களின் வலுவான, தொடர்ச்சியான பயங்கரவாதம், அதற்கான தொழில் நுட்பங்களோடு தேன் கூட்டில் பொய்க்கும் ஈக்களைப் போல மனிதக் குலத்தைத் தன்னிச்சையாகப் புத்தி உணர்வு இல்லாத சூழல் உருவாக்கியிருந்தார்கள்.

கொடுங்கோலான இந்த உலகத்தில் மொழி அதிகாரத்திற்குக் கீழ் படிகிறது.அது தலைப்புச் செய்தியாக உருமாறுகிறது.ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளையும் அது தவிர்த்து அடிமையாக்குகிறது. 1984-ன் கெட்ட முன்னறிவிப்பு இன்னும் கடந்து போய்விட வில்லை. ஒரே ஆட்சிக்குழு சார்ந்த கம்யூனிசம் ஜெர்மனியில் பாசிசமாகச் சென்றதையும், அதே வேகத்தில் கியூபா, கொரியா, சைனா என்று கிளை பிரிவதையும் காணும் போது ஆபத்து என்பது முடிவான ஒன்றல்ல. ORWELLIAN என்ற வார்த்தை ஆபத்தைக் குறிக்கும் சொல்லாகவே இருந்து நம்மைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

இலக்கியம் எதார்த்தமின்மையானது.இலக்கியத்தில் பொய்கள் எல்லாமே நிறைந்திருக்கும் ஆனால் மனித இயல்புகள் நோக்கிய வாகனம் இலக்கியம்.உண்மை என்னவென்றால் நம்மைப் பற்றி நாம் காணும் தோற்றம் அல்லது உருவகம், உண்மையில் பெருமை கொள்ளும் வண்ணம் இருக்காது. சில சமயம் நாவல்களிலிருந்தோ, கவிதைகளிலிருந்தோ நம்மை நாமே மிக மோசமானவராகக் கண்ணாடி போலக் காணலாம். இது எப்போது நிகழும் என்றால் அதிபயங்கரமான காமலீலைகள் பற்றிய DE-SADE –யின் நாவல்களைப் படிக்கும்போதோ, காமத்தில் கடித்துக் குதறிச் சபிக்கப்பட்டு அமைதி கொள்ளும் SACHER-MASOCH, BATAILLE புத்தகங்களைப் படிக்கும் போது வரும். அதை நாம் காணும் போது வலியச் சென்று தாக்கும் முரட்டுக் குணமுள்ளதாகவும், வெல்ல முடியாததாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருக்கிறது. இந்த மோசமான பக்கங்கள் ரத்தமல்ல. வெறுப்பு. காதலின் எதிர்மறையான சித்திரவதைகள். ஆச்சர்யமான ஒன்று என்ன வென்றால் இந்தச் சித்திரவதைகளும் அச்சங்களும் நமக்குப் புதிதல்ல. ஒரு துளி அன்பு. ஆழம் காண முடியாத மனித மனங்களில் இது மாற்றங்களைக் கொள்ள இது மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறது.மனித மனச் சரிவுகளில் அதன் நிழலில் வாழ்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டாட ஒரு நல்ல தருணத்திற்காகக் காத்திருக்கிறது. அது தன் கட்டுப்படுத்தும் ஆவலை அமல்படுத்துகிறது.அது பகுத்தறிவு வாதத்தையும், ஒருங்கிணையும் குழுக்களையும் ஏன் வாழ்வையே கூட அழிக்கிறது.இது அறிவியல் அல்ல. இது இலக்கியம். இது அடர்ந்த மண் இருளில் புகுந்து செல்கிறது. இது இலக்கியம் இதுதான் இதனைக் கண்டறிந்திருக்கிறது. இலக்கியமில்லாத உலகம் இத்தகைய ஆழங்களில் குருடாகத்தான் இருக்கும். நாம் அவசரமாக பார்த்தறிய வேண்டிய ஆழம் இது.

காட்டுமிராண்டித்தனமான, நாகரீகமில்லாத, கூர்மையான, உண்மையைத் தவிர்க்கும் பக்குவமுறாத பேச்சும் நகைப்பிற்கிடமான பேரார்வம், ஒழுங்கமைதியற்ற காதல் இந்த உலகம் இலக்கியமற்று இருக்குமானால் இத்தகைய கொடுங்கனவைத்தான் காண வேண்டியிருக்கும். அது திருச்சபைகளின் கட்டுப்பாட்டுப் பண்போடு மனிதத்தன்மை ஆட்சிக்கு வர வேண்டும் அந்த வகையில் இது புலனுணர்ச்சிக்கு அடிமையான உலகு. அடிப்படை உணர்வுகள் வாழ்வை வாழ்வதற்கான பொதுப் பண்புகளை உருவாக்கி வைத்திருக்கிறது. போராட வைத்திருக்கிறது. காரணமின்றிப் பயம். உடல் ரீதியான திருப்தி. உத்வேகங்களுக்கு இங்கு இடமில்லை. தினசரிப் பாடுகளை நசுக்கும் அன்றாட வாழ்வு.மோசமான அபத்தங்களின் நிழலில் அமைந்திருக்கிறது மனித வாழ்வு.இப்போது எப்படி இருந்ததோ எப்போதும் அப்படியே இருக்கும்.யாரும் எதுவும் அதை மாற்றிவிட முடியாது.

ஒருவர் அப்படியொரு உலகத்தைக் கற்பனை செய்து துணியில் சித்திரமாக வரைய ஒரு சிறிய மாந்திரீகச் சமயப் பற்றுள்ள கூட்டுக் குழுவினர் நவீனத்துவத்திற்குச் சற்று பின் தூரத்தில் வாழ்கிறார்கள். லத்தீன் அமெரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்பிரிக்காவில் வாழ்கிறார்கள். ஆனால், எனக்கு வேறுசில தோல்விகள் பற்றிய எண்ணங்கள் உண்டு. நான் வளர்ச்சிக்குறையைப் பறியல்லாமல் அந்த வளர்ச்சி பற்றிய முடிவுகள் குறித்து எச்சரித்து வந்திருக்கிறேன். தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாம் கெஞ்சும் நிலையிலிருக்கிறது.நாம் எதிர்கால உலகத்தைப் புத்தகமில்லாத, கணினியின் திரைகளாகவும், ஒலிப்பான்களாகவும் கற்பனை செய்யலாம் அல்லது இலக்கியம் என்பது ஒரு ரசவாதமான, வழக்கில்லாத இயற்பியல் யுகத்தில், வாழும் மித மிஞ்சிய உணர்வுடையவர்களால் நாகரீகம் கல்லறைக்குப் போய் விட்ட சமூகத்தில். நான் பயப்படுகிறேன் இந்த செயலியல் உலகில் அதன் செல்வவளத்தை விட, அதன் உயர்வாழ்க்கை தரத்தைவிட அதன் விஞ்ஞானப் புரட்சி ஆழ்ந்த நாகரீகமற்ற வேண்டா வெறுப்பாக விலகிச் செல்லும் மனிதக் குலம் இலக்கியமற்ற காலத்தில் சுய அறிவின்றி தன்னிச்சையாக இயங்கி தங்கள் சுதந்திரத்தை துறக்கும்.

கொடூரமான கோரமான கற்பனை உலகிலிருந்து திரும்ப வருவது முடியவே முடியாதது. கதையின் முடிவோ, வரலாற்றின் முடிவோ, எழுதி முடிக்கப்படவோ அனுமானிக்கப் படவோ இல்லை.நாம் நம் முயற்சிகளாலும் தொலைநோக்கு ஆற்றல்களாலும் சார்ந்து வாழ்கிறோம். நாம் நம் கனவுகளை வலுவிழக்கச் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென்றால் நம் திருப்தியின்மை காணாமல்போக வேண்டுமென்றால் நம் உணர்ச்சிவயப்படும் நிலை நாகரீகமாக இருக்க வேண்டுமென்றால் நமக்குப் பேசவும். நடுக்கமில்லாமலிருக்கவும் கற்றுக் கொடுக்கும் நம் சுதந்திரத்தை வலுவற்றதாக்கும். நாம் உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும். நாம் படிக்க வேண்டும்.

 


தமிழில் : ஜெகநாத் நடராஜன். 

 

குறிப்பு :

தனுமையின் இக்கணம் : – படைப்பிலக்கிய மொழியாக்கக் கட்டுரைகள் நூலில் இடம்பெற்ற இக்கட்டுரை திரு.ஜெகநாத நடராஜனின் அனுமதியுடன் ’கலகம் – கலை இலக்கிய அரசியல்’ இணைய இதழில் வெளியிடப்படுகிறது.

 

நூல் விபரம் :

  • தனுமையின் இக்கணம் : – படைப்பிலக்கிய மொழியாக்கக் கட்டுரைகள்
  • தொகுப்பாசிரியர் : எஸ்.வாசுதேவன்
  • வெளியீடு : பாதரசம் வெளியீடு
  • விலை : ₹ 250
  • நூலைப் பெற :  https://www.panuval.com/

நன்றி : பாதரசம் வெளியீடு | திரு. ஜெகநாத் நடராஜன் | திரு. சரோ லாமா | திரு. எஸ்.வாசுதேவன்


 

 

எழுதியவர்

ஜெகநாத் நடராஜன்
ஜெகநாத் நடராஜன்
எழுத்தாளர் பாலகுமாரனிடம் அவரது எழுத்து மற்றும் திரைப்படப் பணிகளில் உதவியாளராக இருந்தவர். இயக்குநர்கள் ஜே.டி. ஜெரி, வஸந்த், ஒளிப்பதிவாளர் ஜீவா மற்றும் கௌரவ் நாராயணன் ஆகியோருடன் திரைத்துறையில் பணியாற்றியவர். தமிழின் முதல் தினசரி தொடரான சக்தியை எழுதியவர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைகாட்சிகளில் பல தொடர்கள் எழுதியவர். கார்லோஸ்புயண்ட்ஸின் ஔரா இவரால் மொழிபெயர்க்கப் பட்டு கோணங்கி மற்றும் கௌதம சித்தார்த்தனால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற ஆல்பிரட் ஹிட்ச்காக் - த் ரூபா நேர்காணல் இவரது மொழிபெயர்ப்பில் அம்ருதாவில் தொடராக வந்து புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இவரது குறுநாவல் தொகுப்பு ’வேண்டுதல்’ எழுத்து வெளியீடாகவும். உலக சினிமா ஆளுமைகளின் நேர்காணல்கள் “இருளில் ததும்பும் பேரொளி” இவரின் மொழிபெயர்ப்பில் புலம் வெளியீடாகவும் வந்துள்ளது. . ‘நீண்ட மழைக்காலம்’ எனும் தலைப்பில் இவரின் சிறுகதைத் தொகுப்பு மற்றும் ‘கீர்த்தனைகளின் வரலாறு’ என்ற கர்நாடக இசை பற்றிய புத்தகம் புலம் வெளியீடாக வந்திருக்கிறது.

இவர் தனக்கு உலக இலக்கியங்களின் மீது தனக்கு ஆர்வமூட்டியவராக சி.மோகனைக் குறிப்பிடுகிறார்
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x