20 April 2024

கொத்துக்கொத்தாக, அழகாக தொடுத்த மலர்சரம்போல பாந்தமாக துளிர்த்திருந்த கருவேப்பிலையைக் அலசி; கடுகும், கடலைப்பருப்பும் தாளித்து, சிவந்திருந்த எண்ணெய் சட்டியில் உருவிப்போட்டு , சாரணியை வைத்துக்கிண்டவும் சடசடவென சத்தத்துடன் பொரிந்து விநோதினி மேல் எண்ணெய் லேசாக தெறித்தது.

ஏண்டி தம்பிக்கோட்டை சிறுக்கி ! கருவேப்பிலையை தாளிச்சா தண்ணிய சுத்தமா உதறிட்டு தாளிக்கத் தெரியாதாடி உனக்கு?. கல்யாணம் ஆகி மாமாங்கம் ஆகுது. வாயப்பாரு வைக்கோல் போர் மாதிரி வளர்த்து வச்சிருக்கா. ஒருவேளையும்  உருப்படியா செய்யத் தெரியாது” என ஆங்காரமாக கத்ததொடங்கியது வாழம்பாள் ஆத்தா. விநோதினியின் மாமியாரோட மாமியார்.

விநோதினி லேசாக திரும்பி வாழாம்பாளைப் பார்த்து விட்டு  ‘வயசு தொண்ணூறு ஆகுது;  கண்ணு கொஞ்சவாவது மங்கிருக்கா பாரு. சனியன்! அடுப்படிக்கு எதுக்க கட்டிலப்போட்டு படுத்துக்க வேண்டியது; எதை செஞ்சாலும் நொட்ட சொல்றது’ என முணு முணுத்தபடி ஊறவைத்திருந்த குடப்புளியை நன்கு கெட்டியாக கரைத்து எண்ணெய் சட்டியில் ஊற்றி; இரவு புளிசாதம் கிண்டுவதற்காக புளிக்காய்சல் தயாரிக்க ஆரம்பித்தாள்.

மணி மூன்றாகிவிட்டது. வெயில் வேங்கை புலியின் பாய்ச்சலிலிருந்து தணிந்து இரைமுடித்த விலங்கென பதவுசாக மாறிக்கொண்டிருந்தது. விநோதினி இரண்டு படி பானையை அடுப்பில் வைத்து;பச்சரியை களைந்து பானையில் போட்டவளுக்கு, அரிசியின் மீது வீசிய மணல் வாசனை அள்ளித்திங்க தூண்டியது. படக்கென ஒருபிடி அரிசியை வாயில் போட்டு மென்றவள். நைசாக திரும்பி வாழாம்பாளைப்பார்த்தாள். நல்லவேளை கிழவி திரும்பிப்படுத்திருந்தது. இல்லையேல், அரிசியை வாயில் போட்டதற்கு காச் மூச்சென கத்தத்தொடங்கிவிடும்.

அக்கா எதுக்குக்கா போனடிச்சி சீக்கிரம் வரச்சொன்னீங்க ?.  சீக்கிரம் சொல்லுங்க. எதுக்க உமாக்கா வீட்ல மாவு மில்லுக்கு போகச் சொன்னாங்க; நீங்க போன் பண்ணீங்களேன்னு ஒளிஞ்சி ஒளிஞ்சி வர்றேன்கா”  என சொல்லிக்கொண்டே புடவை மடிப்பை இழுத்து இடுப்பில் சொருகியபடி; முற்றத்தில் இறங்கி பாத்திரங்களை விளக்க முற்படுபவளை பார்த்து சிரித்தபடியே,

துர்கா ! அப்பறமா பாத்திரம் விளக்கலாம். இங்க வா! முதல்ல அங்க மேசை மேல எடுத்து வச்சிருக்கிற பட்டுப்புடவையையும் ஜாக்கெட்டையும் இஸ்திரிப்போட கொடுத்திட்டு வா. ஒரு மணி நேரத்துல வேணுமின்னு சொல்லு.” என்றவளைப் பார்த்து எங்கக்கா போறீங்க? வெளியூரா? காலையில வேலைக்கு வந்தப்ப சொல்லவே இல்லை. அப்பாடி!  இந்த அய்யனாரு இப்பயாவது கண்ணு தொறந்தாரே; நானும் பத்து வருசமா இந்த வீட்ல வேலைப்பார்க்கிறேன். ஒரு விஷேசத்துக்கூட உங்கள அனுப்பாது உங்க மாமியாரு. பெரிய மருமக செகப்பு தோலா இருக்குன்னு அத தானே அனுப்பும். எனக்கே உங்களப்பார்த்தா பாவமா இருக்குங்க அக்கா. பொழுதானைக்கும் அடுப்படியில கிடந்து நோகறீங்க;  ஒரு நல்லது கெட்டதுக்கு கூட வெளி உலகத்துக்கு போகறதில்லை. நீங்க  சந்தோஷமா போயிட்டு வாங்கக்கா.” என்று உண்மையிலேயே உள்ளன்போடு கூறுபவளைப்பார்த்து புன்னகைத்தாள் விநோதினி. 

துர்கா சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. சேகருக்கு நிறைய இடங்களில் தேடியும் பெண்ணே கிடைக்காததால் தான்; நிறம் குறைச்சலாக, அதிகம் படிக்காத தன்னை இந்த வீட்டுக்கு இரண்டாவது மருமகளாக தேர்ந்தெடுத்தார்களோ என்ற சந்தேகம் விநோதினிக்கும் அவ்வப்போது வருவதுண்டு. 

எந்த பெரிய மனிதர்கள் வீட்டிற்கு வந்தாலும், விநோதினிதான் காபி போடுவாள். ஆனால், அதை அவர்களிடம் கொண்டு போய் கொடுப்பது அவளது பெரிய ஓர்படியார் நிவேதாவாக இருக்கும். எத்தனை விருந்தாளிகள் வந்தாலும் சமைப்பது விநோதினியாக இருக்கும். இவள் அத்தனை சிரமப்பட்டு சமைத்து வைத்திருப்பதை எடுத்து அனைவருக்கும் பரிமாறுவது நிவேதாவாக இருக்கும்.

கல்யாண வீடுகள், விஷேச வீடுகள் அனைத்திற்குமே மாமியாரும் நிவேதாவும் தான் சென்று வருவார்கள். அத்தகைய சமயங்களில் அவர்களுக்கு தோதாக வீட்டு வேலையையும், மாடுகளையும்; குழந்தைகளையும், வாழாம்பாள் ஆத்தாவையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என சாக்கு சொல்வார்கள். அவர்களிடம் ஒன்றுமே சொல்ல முடியாது. தன் கணவன் சேகர் அனைவருக்கும் எடுப்பார் கைப்பிள்ளை’ எனத்தெரிந்து கொண்டு முடிந்தவரை அமைதியாகவே இருப்பாள் விநோதினி.

“சத்தம் போட்டுச்சொல்லாத துர்கா. இது யாருக்காதுலையாவது விழுந்தா உன் சீட்டை கிழிச்சிருவாங்க. பெண்ணுக்கு பெண்தான் முதல் எதிரி. ஆண்கள் ஆணாதிக்கமா இருக்காங்களோ இல்லையோ தெரியல. ஆனால், ஆணாதிக்க மனப்பான்மையுள்ள பெண்கள் தான் பெண்கள அதிகமா கொடுமைபடுத்துறாங்க. அவுங்க தான் ஆண்கள் இந்த வேலைகளை செய்யணும்; இதெல்லாம் செய்யக்கூடாதுன்னு பாகுபாடு பார்க்கிறது. அவுங்க வளர்க்கிற ஆண்குழந்தைகள் அதே ஆணாதிக்க மனப்பான்மையோடு வளருதுங்க;  அதே மாதிரி பெண்கள் தான் மத்த பெண்களை ரொம்ப கீழ்தரமா பேசறதும் , உருவக்கேலி பண்றதும். பெண்களோட வளர்ச்சி சில ஆணாதிக்க மனப்பான்மையுள்ள பெண்களுக்கே பிடிக்கறதில்லை தெரியுமா?. சரி விடு!  நம்ம வேலைக்கு வருவோம். தலைக்கு மேல அத்தனை வேலைக்கிடக்குது.

அத்தையோட அண்ணன் சென்னையில இருக்கார்ல்ல, அவரோட பையனுக்கு நாளைக்கு சென்னையில நிச்சயதார்த்தம். பெரிய அக்காதான் போக வேண்டி இருந்தது. அவுங்களுக்கு தீடீர்ன்னு ஒரே வயித்துப்போக்கு, வாந்தி.  அதுதான் நாங்க போறோம். நேத்து அத்தை  மாமாவும் சென்னைக்கு போயிட்டாங்க. இன்னைக்கு எட்டு மணி பஸ்சுக்கு நாங்க கிளம்பறோம் துர்கா.

சாதம் வடிச்சி, புளிக்காய்சல் போட்டு கிளறி புளிசாதம் செய்து வச்சிட்டு கிளம்பறேன். நாளைக்கு இரவு அங்கேர்ந்து கிளம்பி இங்க வந்துடுவோம். நாளைக்கு ஒரு நாள் நீ சீக்கரமா வந்து பொறுப்பா வீட்டப் பார்த்துக்க. நாளான்னைக்கு ஓடி வந்துருவேன் சரியா!”  என்றவளைப் பார்த்து தலையாட்டியபடியே மேசை மேலிருந்த குங்கும வர்ணப் பட்டுப்புடவையை இஸ்திரிப் போடுவதற்காக கையிலெடுத்துக் கொண்டு நகர்ந்தாள் துர்கா.

வயிற்றுப்போக்குக் காரணமாக நிவேதா புளிசாதம் சாப்பிட முடியாயாதாகையால்,  அவளுக்கு கஞ்சி சாதம் வைத்தவள்., தனக்கும் கஞ்சி சாதமே வைத்துக்கொண்டாள். பேருந்தில் போகும் போது தண்ணீர் தாகமெடுக்கும் என்று எண்ணிக்கொண்டு தண்ணீர் நிறைய ஊற்றி, விநோதினிக்கும் கஞ்சி சாதமே தயார் செய்து வைத்துக்கொண்டாள்.

மணி கிடுகிடுவென ஓடத்தொடங்கியது. கடையிலிருந்து விரைவாக வீடு திரும்பிய சேகர் அவனுக்கும், யுகேந்திரனுக்கும் தேவையான உடைகளை எடுத்து பெட்டியில் வைத்துக்கொண்டிருந்தான். ஒருநாள் பயணமாக இருந்தாலும் யுகேந்திரனுக்கும்,சுவாதிக்கும் தேவையான வாந்தி மருந்து, காய்சல் மருந்து முதலியவைகளை தனியாக ஒரு பையில் எடுத்து வைத்துக்கொண்டே “விநோதினி !  விநோதினி !!  யுகேந்திரனுக்கு ஆறு வயசாகுது. சுவாதி பாப்பாக்கு இரண்டு வயசாகுதுல்ல?  இரண்டு பேருக்கும் காய்சல் மருந்து தனிதனியா எடுத்து வைக்கணுமா? இல்ல, ஒரே மருந்து கொடுத்துக்கலாமா” எனக்கேட்ட சேகரிடம் “அதெல்லாம் நான் வந்து எடுத்து வைத்துக்கொள்கிறேன். நீங்க உங்களுடைய ஆடைகளை மட்டும் எடுத்து பெட்டியில் வச்சிட்டு, மாட்டுக்கு இன்னைக்கு மட்டும் தண்ணிய காட்டிடுங்க. நேரமாச்சி நான் கிளம்பணும்” என்றபடியே அறைக்குள் நுழைந்தாள் விநோதினி.

“ஏங்க நான் சன்னலோரம் உட்கார்ந்துக்கறேன். எனக்கு வேடிக்கை பார்த்துட்டே வர்றது ரொம்ப பிடிக்குங்க. அதுவும் இளையராஜா பாட்டுக்கேட்டுக்கிட்டே வேடிக்கை பார்த்துட்டு வர்றது எவ்வளவு நல்லாருக்கும் தெரியுமா? போகிற வழியில ’மசாலா சுண்டல்’ வித்தா வாங்கித் தர்றீங்களா? வீட்டுல எப்படி செய்தாலும் அந்த வாசனை, ருசி வரவே மாட்டேங்குது.” என்றவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே “அடிப்போடி இங்க எட்டு மணிக்கு பேருந்துல ஏறுனா; காலைல ஆறு மணிக்கு தான் சென்னை போவோம். வழியில ஒண்ணுமே இருக்காது. பேருந்து போற சத்தம் மட்டும் தான் கேக்கும். நீயும் வெளில போனதே இல்லை. நீ சென்னையில வந்து என்ன கேக்கறீயோ,  எது வேணாலும் வாங்கித்தர்றேன் வா” என புன்னகையுடன், காதலுடன் சொன்னவனின் கன்னத்தில் ஆழமாக முத்தமொன்றை வைத்துவிட்டு துணிமணிகளை எடுத்து வைக்கத் தொடங்கினாள் விநோதினி.

பேருந்து புறப்படத்தயாராக நின்றது. கண்டக்டரிடம் டிக்கெட் கொடுத்ததும் சீட்டை சரிபார்த்து சேகரையும்,யுகேந்திரனையும் பேருந்தின் பின்பகுதியிலும்; விநோதினியை பேருந்தின் முன்பகுதியிலும் அமரவைத்தார் கண்டக்டர். சுவாதி விநோதினியின் மடியில் அமர்ந்து கொண்டது. விநோதினியின் அருகில் அந்த ஊரின் கிறிஸ்துவ பள்ளியின் தாளாளர் ஏஞ்சலின் சிஸ்டர் அமர்ந்திருந்தார். யுகேந்திரன் அந்தப்பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தான்.

ஒருவழியாக பேருந்து கிளம்பியது.  ‘அப்பாடா’  என சீட்டில் சாய்ந்துக்கொண்டு, சுவாதியையும் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு எல்லாம் சரியாக எடுத்து வைத்திருக்கிறோமாவென யோசித்துப் பார்த்தாள் விநோதினி. எல்லாம் சரியாக இருப்பதாகப்பட்டது. குழந்தைக்கு சிறுநீர் போகாமல் இருக்க, ‘டயாப்பர்’  போட்டோமா என சந்தேகம் வர, கவுனை தூக்கி கையை வைத்துப்பார்த்தாள் விநோதினி. டயாப்பர் போடப்பட்டிருந்தது. ‘அப்பாடா இனி தூங்கலாம்’  என நினைத்துக்கொண்டே, புடவையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள். குளிரெடுக்க ஆரம்பித்திருந்தது. இவளது சன்னல்கள் மூடியிருந்தாலும் முன் சீட்டில் திறந்து வைத்திருந்த சன்னல்களின் வழியாக பனிக்காற்று வேகமாக வீச ஆரம்பித்தது. மூன்று மணிநேரம் சென்றிருக்கும். தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென விழிப்பு வந்தது.

விநோதினி இதுவரை பேருந்தில், இரவில் இவ்வளவு தூரம் பயணித்ததே இல்லை.கணவன் இல்லாமல் தனியாக உட்காந்திருந்தது வேறு, ஏதோ ஒரு மாதிரி இருந்தது . பயணம் கொள்ளும் அவசரத்தில் எடுத்து வைத்திருந்த கஞ்சிசாதத்தை தண்ணீரில் கரைத்து குடித்து விட்டு வந்திருந்தாள். அது வயிற்றை உப்பிக்கொண்டது. விநோதினிக்கு இரவு பயணங்களில் தண்ணீர் பொருட்கள் சாப்பிடக் கூடாதெனத் தெரிந்திருக்கவில்லை. நேரமாகி விட்டக்காரணத்தில் அவசரத்தில் அவள் சிறுநீர் கழிக்கவும் மறந்துவிட்டு வந்திருந்தாள். பத்தாததற்கு பேருந்தின் குளிர்காற்றும் சேர்த்துக் கொண்டு, விநோதினிக்கு சிறுநீர் கழிக்க வேண்டுமென உணர்வு வந்தது. திரும்பி கணவனை எட்டிப்பார்த்தாள். விளக்கணைக்கப்பட்ட பேருந்தில் அவன் இருக்குமிடமே தெரியவில்லை. விநோதினிக்கு இப்படியான பிரச்சனை இதுவரை ஏற்பட்டதே இல்லை. அவளது பிறந்த வீடு இருபது கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே இருப்பதால் அவளுக்கு இந்த பிரச்சினை புதிது. 

“சிஸ்டர்! இந்த பஸ் எப்ப சென்னைக்கு போகும்.  தெரியுமா ?” என பாதி தூக்கத்திலிருந்த ஏஞ்சலின் சிஸ்டரைக் கேட்டாள் விநோதினி.

“என்ன இப்படி கேக்கறீங்க ? பஸ் இப்பதான் கிளம்பி மூணுமணிநேரம் ஆகுது. இன்னும் ஐந்து மணிநேரம் இருக்குங்க. என்ன விசயங்க ? ஏன் கேக்கறீங்க” என்ற ஏஞ்சலின் சிஸ்டரிடம்.

“அவசரமா பாத்ரூம் போகணும் சிஸ்டர். வயிறு உப்பிட்டு வருது” என்றாள் விநோதினி.

“புரியுதும்மா.  நான் வேலை விசயமா வாரத்துல இரண்டு தடவை சென்னை வர்றேன். என்னைக்கு நான் கிளம்பறேனோ அன்னைக்கு மதியத்திலிருந்தே தண்ணீர் ஆகாரமோ, தண்ணீரோ குடிக்கமாட்டேன். எவ்வளவு தாகமெடுத்தாலும் உதட்டை நனைச்சிப்பேன். அப்படியே பஸ் எங்கையாவது நின்றாலும், ஒரு வெட்டவெளியில நிப்பாட்டுவாங்க தனியா இறங்கிப்போய் சிறுநீர் கழிச்சிட்டு வர ரொம்ப அவதியாகிடும். சில நேரங்கள்ல்ல இந்த பிரச்சினைனால கண்ணீரே வந்துடும். அதுனால, வயசாக வயசாக என்னால சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாம; சென்னை வரும்போது பெரியவர்கள் பயன்படுத்துற டயாப்பர் போட்டுட்டு தாம்மா வர்றேன். கொஞ்சம் பொறுதுக்கோம்மா” என சொல்லிவிட்டு நிறுத்தியிருந்த தூக்கத்தை தொடர ஆரம்பித்தார் ஏஞ்சலின் சிஸ்டர்.

பேசிக்கொண்டிருக்கும் போதுக்கூடத்தெரியவில்லை. பேச்சு சுவாரஸ்யத்தில் உடலின் பிரச்சினை முதன்மையாக தோன்றவில்லை. அமைதியாக இருந்ததும் உடனே சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற அவஸ்தை மீண்டும் தொடங்கியது. அவளால் சமாளிக்க முடியவில்லை. அடிவயிறு மிக கனமாக உப்பிக்கொண்டு,  சுறுக் சுறுக்கென குத்த ஆரம்பித்தது. மயக்கம் வந்துவிடும் போல் இருந்தது. பேருந்து வேகமெடுக்க ஆரம்பித்து, குளிர்காற்று வேமாக வேகமாக விநோதினிக்கு அவஸ்தை கூடியது.

என்ன செய்வதென்றே தெரியவில்லை. இவளது மொபைல் போனும் சேகரிடமே மாட்டிக்கொண்டது. சத்தம் போட்டு கூப்பிடலாம் எனில், இத்தனை பேருக்கு நடுவில் பேருந்தை நிப்பாட்டி நடுக்காட்டில் தான் சிறுநீர் கழிக்கப்போகிறோம் என அறிவிப்பது மிக அவமானமாகப்பட்டது அவளுக்கு. தொடையை இறுக்கி, வயிற்றை எக்கிப்பிடித்துக்கொண்டு சுவாதியை அடிவயிற்றில் அழுத்தி வைத்துக்கொண்டு பயந்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் விநோதினி.

அவளுக்கு நேரம் ஆக ஆக பயம் அதிகரித்தது. பேருந்து ஏதாவது கல்லில் ஏறி இறங்கினால் கூட புடவையில் சிறுநீர் கழித்துவிடுவோம் என பதற்றமாகியது. சன்னல் வழியாக பார்க்கும் பொழுதெல்லாம் ஏதேனும் ஒரு ஆண் சர்வ சாதாரணமாக ரோட்டோரத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டிப்பது வேறு ’இவளுக்கு பெண்ணாக பிறந்துவிட்டோமே’ என கழிவிரக்கத்தை ஏற்படுத்தியது. உடையில் சிறுநீர் பிரிந்து எந்நேரத்தில் அவமானப்படபோகிறோம் என பதட்டம் உருவானது. 

ஞாபகத்தில் இருக்கும் கடவுளையெல்லாம் வேண்டத் தொடங்கினாள். ‘காடந்தேத்தி அய்யனாருக்கு’ கிடா வெட்டுவதாக வேண்டிக்கொண்டாள். மயக்கம் வருவது போலிருந்தது. ஒருவழியாக ஏதோ ஒரு நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. சேகர் எழுந்து வந்து, இவளை டீக்குடிக்க அழைத்தான். சமாளித்துக்கொண்டு, சுவாதியைத் தூக்கிக் கொண்டு எழுந்து படிகளில் இறங்கியவளுக்கு கட்டுப்பாடு மீறி சிறுநீர் பிரிந்தது. பின்னால் இறங்கிய சேகரிடம் சுவாதி பாப்பா பாத்ரூம் போயிருச்சிங்க; பாவம் குளிருதுல்ல பச்சப்புள்ள என்ன செய்யும்? அதான், உடையிலேயே போயிருச்சி; பாருங்க ! என் உடையும் நனைஞ்சிட்டு” என்றபடி டீக்கடையை நோக்கிச்சென்றாள் விநோதினி.


 

எழுதியவர்

தேவிலிங்கம்
தேவிலிங்கம்
வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.

பல்வேறு அச்சு / இணைய இதழ்களிலும் கவிதைகளை எழுதி வருபவர். ‘நெய்தல்நறுவீ’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Subscribe
Notify of
guest

3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
பிரபாகரன் ஆத்தூர்
பிரபாகரன் ஆத்தூர்
1 year ago

நல்ல கரு. கதை விவரிப்பும் நல்லா வந்திருக்கு

Yamuna
Yamuna
1 year ago

வட்டத்தை தாண்டி எழுதி இருக்கீங்கனு சொல்லி இருந்தீங்க . கதை எழுதுபவர் ஒரு வட்டம் போட்டுக் கொள்ளலாமா?. மற்றபடி கதை நல்லாருக்கு. பெருசா யாரும் சொல்லாத பெண் நிலை பேசி இருக்கீங்க. கதை எழுதும் போது எழுதப்படும் வாக்கிய அமைப்புல கவனம் செலுத்தலாம்.

கண்ணன்
1 year ago

பெயர்: வாதை
ஆசிரியர்: தேவிலிங்கம்
பிரிவு: சிறுகதை
இதழ்: கலகம் இணைய இதழ்

பெண்களின் வலியைப் பேசும் சிறுகதை.
மாநிறமாக இருக்கும் வினோதினிக்கு குடும்பத்தில் எப்போதும் முக்கியத்துவம் குறைவு. சிவப்புத் தோலுடன் இருக்கும் முதல் மருமகளுக்கே எப்போதும் முதல் மரியாதை.
சமைப்பது இவளாயிருந்தாலும், பரிமாறுவது முதல் மருமகள். எல்லா விசேஷங்களுக்கும் சிவப்புத் தோலுக்கே வெற்றி.
ஆணாதிக்க மனோபாவம் கொண்ட பெண்கள், தங்களைப் போன்றே தங்களின் ஆண் பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்பது நுண்ணிய பார்வை.
சென்னைக்கு பேருந்தில் பயணம் செய்யவேண்டிய வினோதினியின் அவஸ்தை நமக்கும் தொற்றுகிறது. கதையின் முடிவு இருபாலருக்கும் பொருந்தும்.
ஆணாதிக்க சமூகத்தில், ஒரு பெண் தனது அவஸ்தையைச் சொன்னாலும் அதற்குத் தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகமே. பெரும்பாலான நேரங்களில் தன்னை ஒடுங்கிக் கொள்வதுபோல், தனது அவஸ்தைகளையும் அடக்கிக் கொள்ள வேண்டிய அவலநிலையே நிதர்சனம்.
பல கழிப்பறைகளில் பெண்களுக்கு இரு மடங்கு கட்டணம். வயதானவர்களும், நோயாளிகளும் இத்தகைய அவஸ்தையுடன் தான் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.
ஆசிரியர் உரையாடல்களை எழுதும் போது சற்றே கவனம் செலுத்த வேண்டும்.
சிறப்பான வாசிப்பு அனுபவம். ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

You cannot copy content of this page
3
0
Would love your thoughts, please comment.x
()
x