25 April 2024

 ன்றைய சமூகமும்,  ஊடகமும் எவ்வாறு இருக்கிறது  என்பதை நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் சில சம்பவங்களின் வழியாகவே  உற்று நோக்கி உணரலாம். 

அரசியல்,  மதம் என்ற மாபெரும் கூறுகளை விரிவாகப் பேசும் நாம் அதைத் தாண்டிய இதர பிரச்சனைகளைப் புறக்கணித்து விடுகிறோம். அதாவது எது சுதந்திரம்,  எது மொழி, எது உறவு, எது பெண்ணியம் என்பது சார்ந்த தெளிவான சிந்தனையோட்டமில்லை. ஊடக அதீத பயன்பாடு விதியின்கீழ் அரசியல், மதம் சார்ந்து கண்ணுக்குத் தெரியாத எதிரியின் மேல் அம்புகள் தொடுப்பது பலருக்கும் எளிதாக இருக்கின்றது.ஆனால் கண்ணுக்குத் தெரிகின்ற, மிக அருகே  அரங்கேறிக் கொண்டிருக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்பதில் பெரும்பாலானோர் துணிச்சலோ, பெரிய ஆர்வமோ காட்டுவதில்லை. 

எண்பதுகளில் வீட்டுக்கு தொலைபேசி என்பதே பெருங்கனவாகப்  பார்க்கப்பட்டது. இந்தியாவில் கணிப்பொறியின் ஆதிக்கமானது, தன் அசுர ஆக்டோபஸ் கால்களை  வணிகம், பொருளாதாரம், திரைப்படம், கல்வி,  ஊடகம்  என அனைத்திலும் பதித்தது. கணிப்பொறி இல்லையேல் ஒன்றுமே இல்லை என்ற இயந்திரமாய நிலையை ஏற்கனவே எட்டி இருந்த காலத்தில்  கொரோனா பெருநதொற்றுத்  தாக்கமானது அதீதப்பெருவீக்க இணைய நுகர்வு எனும் படுகுழிக்குள் எல்லா வயதினரையும் தள்ளி விட்டது. குறிப்பாக இளைய சமூகத்தை இணையத்திற்கு அடிமையாக்கி, முன்பின்னறியாத மனச்சிக்கல்களுக்கும் வித்திட்டுவிட்டது எனலாம். 

எது சமூகக்கோபம்? நாம் அடிக்கடி செல்லக்கூடிய ரேஷன் கடையில், 20 கிராம் குறைவாக உணவுப் பொருளை ஊழியர் கொடுக்கிறார். எனில் அதை தட்டிக் கேட்க ஒருவர் முன்வரும்போது அவரை நாம் நமது மகிழ்ச்சியான சூழலுக்கு இடையூறாக, பொதுவெளியில் நெளியும் சங்கடநிலையைத் தோற்றுவிப்பவராகக்  கருதுகிறோம். நாகரீகம் எனும் பெயரில் நியாயத்திற்கு  ஆதரவாகப் பேச யாரும் முன் வருவதில்லை.

இவ்வாறு அருகில் நடக்கக்கூடிய எதற்கும் அமைதியும், தொலைவில் இருந்து உருவாகும் பாதிப்பு அல்லது மாற்றங்களுக்கு அடிப்படை மூலகாரணிகள் பற்றி ஒன்றுமே தெரியாமலே,  நடக்கக்கூடிய ஆபத்துகளுக்கு சுயசிந்தனையின்றி உடனடியாக எதிர்வினைகளும் கிளம்புகின்றன. எதிலும் ஆழமான,  முழுமையான, தீர்க்கமான சிந்தனை இல்லாமல் மேம்போக்காக, தட்டையாக  பெரும்பான்மையை ஆதரித்துப் பேசுவது அல்லது எதிராகப் பேசுவது என்று இரு துருவங்களில் மட்டுமே  அமர்ந்து கொண்டு,  கவன ஈர்ப்பு செய்யக்கூடிய ஒரு தன்மையை இன்று ஊடகங்களில் பொதுவாக நாம் காண நேரிடுகிறது.

எது சுதந்திரம்? கொரோனா தொற்றுக் காலத்தில் கல்வியை சமன் செய்வதற்காக வழங்கப்பட்ட  அலைபேசி ஒவ்வொரு சிறு பிஞ்சு கையிலும் நஞ்சாகியிருக்கிறது.ஒரு சிறுமி டிக்டாக் செயலியில் யாரோ நடித்த திரைப்படங்களுக்கு எந்தெந்த நடிகைகளோ கொடுத்த பாவங்களுக்கு வாயை மட்டும் அசைத்து, அது ஒரு திறமை என்ற பெயரில் ஏகப்பட்ட லைக்குகள் வாங்கி குவிக்கிறார். அவர் ஒரு பெரும் செலிபிரிட்டி என்று பிரபலமாகிறார் அவரை ஒருவர் பேட்டி எடுக்கிறார் இன்னொருவர் அதே பெண்ணைக் குறை சொல்லி காணொளி வெளியிடுகிறார். Viral, Troll என  ஊடகமானது ஒரு பிழையை சாதனையாக்கி, உருப்பெருக்கி கொண்டு விளம்பரப்படுத்தி, அவற்றை மேலும் பலர் செய்யத் தூண்டுகிறோம் என்று உணராமல் செயல்படுகின்ற மெத்தனப்போக்கு பரவலாகிவிட்டது. 

ஒரு பெண்ணாக,  ஊடகவியலாளராக, சமூகத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய உளவியல் ஆலோசகராக  நான் எப்பொழுதும் வலியுறுத்திச்  சொல்வது தயைகூர்ந்து  18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அலைபேசியை அளவுக்குமீறிய பயன்பாட்டிற்குக் கொடுக்காதீர்கள். அலைபேசியைக்  கொடுப்பது மட்டுமல்ல உங்களின் புகழ், செல்வாக்கு, சமூக அடையாளம் சார்ந்து நீங்கள் அவர்களுக்கான உலகை உருவாக்கியும் கொடுக்காதீர்கள்.அது அக்குழந்தைகளின் சுயத்தின் மேல் நம் வாசனையை மறைமுகமாகத் தெளிப்பதேயாகும். அவர்களுக்கான உலகை அவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்.. 

ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ அவர்களை  விளம்பரப்படுத்துவதோ, வெளிப்படுத்துவதற்கோ  உரிமை நிச்சயம் பெற்றோர் ஆனாலும் அவர்களுக்கு இல்லை என்பேன்.  அவர்களின் திறன்முகத்தை அவர்களாக முயற்சிகளை மேற்கொண்டு அவர்களே செய்யட்டும். விழுந்து,  எழுந்து நடைபழகும் குழந்தையே என்றும் தனித்துவமாய் நேரியவழியில் நாளை சமூகத்தில் நடக்கும்.அவர்களின் பாதைகளில் சிவப்பு கம்பளங்களை நீங்கள் விரிக்க வேண்டாம் அவர்கள் இன்று குழந்தைகள் விளையாடட்டும்,  உரியவற்றை மட்டும் படிக்கட்டும்.தகுதியும், திறமையும்,  உழைப்பும் இருந்தால் தானாகவே  காலம் அவர்களுக்குப் பூக்கம்பளமே விரிக்கும். இவ்வாறான தெளிவு பெரியவர்களான நமக்கே இல்லாதபோதுதான் புராண காலத்தின் உதாரணங்களை எடுத்துக்காட்டி எச்சரிக்க வேண்டிவருகிறது. மகாபாரதத்து துரோணாச்சாரியார், திருதராஷ்டிரன் கதாபாத்திரங்கள் மூலம் தன் வாரிசுக்கு வாய்ப்பை, வசதியை,  வருங்காலத்தை, அந்தஸ்தை, அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற பரபரப்பின் விளைவுகளை, கண்மூடித்தனமான பாசத்தின் அறவழுவலை உணர்ந்து திருத்திக்கொள்ளலாம்.  ஒரு பெரிய அரியணையை இன்றே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற அதே திரேதாயுதக் காலத்தின் மனநிலையில்தான் இன்று  நம்மில் பலரும் இருக்கிறோம் என்பது நவீன, ஊடக வளர்ச்சியின் மறுக்கமுடியாத மாபெரும் சறுக்கலே.”அவர்களை உங்களைப்போல ஆக்கி விடாதீர்கள்” என்ற கலீல் ஜிப்ரானின் உயர்மானிட சிந்தை ஏட்டளவில் மட்டுமே உள்ளது வேதனை.

எது புத்துருவாக்கம்?   Creativity  என்பது என்ன என்பதே இன்று சரியான  புரிதலுக்குள் இல்லை.மிகவும் சிரமமாக செய்யக்கூடியதும், பயிற்சி பெற்று காலம் காலமாக ஆன்மாவை அதில் செலுத்தி நமக்கு கைவரப்பெறுவதுமே கலை என்று அன்று சொல்வோம். ஆனால் இன்று திரைப்படப்பாடலுக்கு வாயசைத்து விட்டால் மட்டுமே போதுமென சுருங்கிப்போய்விட்டது. நடிப்பு என்பதும் கலையே. ஆனாலும் அது மட்டுமே கலையாகாது இல்லையா. மேலும் இளமையான, துடிப்பான ஓரளவு தோற்றப்பொலிவு கொண்டவர் எவரும் எளிதாக நான்கு முறை வாயசைத்து வைரல் ஆகிவிடுவது என்ன அபூர்வமா? கொண்டாடுவதற்கான கலையம்சம் பொருந்திய புத்துருவாக்கமெனும்  கிரியேட்டிவிட்டி குறைந்து விட்டதா அல்லது அதை இத்தகைய செயலிக்களின் ஆதிக்கம் குறைக்கிறதா, மறைக்கிறதா என்பது அவசியம் சிந்திக்கவேண்டியவொன்றே.

சமூக ஊடகங்கள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது,  மனிதர்களை புத்துருவாக்க சிந்தனைகளிலிருந்து தடுத்து நிறுத்தி, அற்பமான அண்டை வீட்டாரின்  அந்தரங்கங்களைச் சுற்றியே மனத்தை இருத்திவிடுகிறது.அவற்றையே  விவாதிப்பது  என்று சில்லறை  மகிழ்ச்சி தேடும் நிலையை எங்கும் காண்கிறோம். சமீபத்தில், ஐம்பத்து ஏழு வயதான ஒரு நடிகர் தன் மனைவியிடம் முறையான விவாகரத்துப் பெற்றபின்,  இருபத்தி மூன்று வயது பெண்ணைத் திருமணம் செய்தார். அவரவர் வாழ்வின் நெருக்கடிகளை முறையாக சமாளிக்க இயலாத மனிதர்கள் இங்கே இராமபிரான்களாக இணையத்தில் அவதாரம் எடுத்து விமர்சிக்கிறார்கள். இப்படியான தனிமனித உறவுகளின் கதை பேசும்,  வக்கிரமான விளம்பரக் கலாச்சாரத்தில் இருக்கிறோம்.இதற்கு யார் முடிவு கட்டுவது? யார் எங்கே எப்படி கட்டுப்பாடு செய்வது?  கேள்விகள் முதலில் பிறக்கட்டும். 

எது மொழி? ஒரு சமூகத்தின், இனத்தின்,  உணர்வின் கால அடையாளம் மொழி. தாய்மொழியைக் காப்போம் என்று யார் சொல்கிறார்கள்,  ஊடக மொழியின் சிதைவு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எந்த காலகட்டத்தில் என்ன காரணிகளால் ஏற்பட்டது என்ற பொருளில் துல்லியமான தரவுகள் சேர்த்து ஒரு  ஆய்வுக்கட்டுரையினை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். நமது வாழ்வியலின் அடிப்படை மொழியுரிமை குறித்த தெளிவான விழிப்புணர்வு நிச்சயம் இந்த ஊடகப் பெருவெள்ளத்தின் அதீதப் பயன்பாட்டில் அகப்பட்டு சிதைந்து கொண்டிருக்கும் சமூகத்திற்கு இனியேனும் ஏற்பட விழைகிறேன். 

எது உறவு? ஒரு உறவு  பெரும்சிக்கலுக்கு ஆளான பிறகுதான் “ஐயோ, இவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கிறதா” என்று ஆண் தீர்க்க விழைகிறான். ஆனால் அது கண்கெட்டபின் சூரியவணக்கமாகி விடுகிறது  பெண்களைப் பொருத்தவரையில் சிறிய அளவில் பிரச்சனைகள் இருக்கும்போதே பேச வேண்டும், எச்சரிக்க வேண்டும், தன்னோடு நேரம் செலுத்த வேண்டும் என்ற விருப்பத்தில் இருக்கிறார்கள்.அவர்கள் இயல்பிலேயே உளவியல் சார்ந்த உணர்வுகள் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிவியல் சொல்கிறது.அதையே உலகப்புகழ் பெற்ற “Men are from mars Women are from venus ” எனும் உறவுகளுக்கான வழிகாட்டு நூலில் John grey அவர்கள் “he fixes only if it breaks” என்று குறிப்பிடுகிறார். 

டிக் டாக் எனும்  செயலியில் ஒரு திருமணமான பெண்,  அதிக நேரம் செலவிட்டு திரைப்படநடிகையாகும் ஆசையில் குடும்பத்தை விட்டு விலகிச் செல்ல, கணவர் அவரைக் கொலை செய்து விட்டார் என்று ஒரு சம்பவத்தை  நாம் படிக்கிறோம்.பொதுவாக அடிப்படைப் பொருளாதார வசதிகளை செய்து கொடுத்துவிடும் ஆண்கள் நான் சரியாகத்தான் இருக்கின்றேன் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறான். நான் அந்த டிக்டாக் அடிமைப் பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், உறவுகளில் skill என்பதற்கும் behaviour என்பதற்கும் வேறுபாடு தெரியாததன் விளைவு இது. சம்பாதிக்கக் கூடியவன் நல்லவனாகதான் இருப்பான் என்பது ஒரு தவறான புரிதல். இதுவேதான் பெண்களுக்கும் நேர்கிறது நன்றாக சமைக்கக்கூடிய ஒரு பெண் நல்லவளாகத்தான் இருப்பாள் என்று ஆண்களும் அதே பார்வையில் இருக்கிறார்கள்.

 இவ்வாறான தவறான புரிதலின் வழியாக நம் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அவர்களின் skill எனும் திறமையை சார்ந்து முதலில் ஈர்க்கப்படுகிறோம். பிறகு அவர்களின் குணநலன் அல்லது நடத்தை என்று சொல்லக்கூடிய behaviour இன் சில எதிர்மறையான,  பொருந்தாத அல்லது நமக்கு ஒவ்வாத விஷயங்களைக் கண்முன்னே காண நேரும்போது அதிர்ச்சி அடைந்து உறவுகளில் பின் வாங்குகிறோம் சண்டையிடுகிறோம். பிறகு விவாகரத்துகள் கூடிக்கொண்டு போகின்றன. நமது skill காரணமாக இருபாலினரும் பெருமையாக சரியாகத்தான் இருக்கிறோம் என்ற போலிநம்பிக்கையின்  மிதப்பில் மாறவே மறுக்கிறோம். நடத்தைகளில் சிறுமாற்றம் செய்யக்கூடத் தயாராக இல்லாமல் உறவுகளை இழக்கிறோம் என்பதை உணரவேண்டும். 

எது பெண்ணியம்? அருவி குளியல் – உடை சுதந்திரம் என்ற பேசுபொருள் சில நாட்களுக்குமுன்பு முகநூலை ஆட்டிப்படைத்தது.உண்மையான முற்போக்கான பெண் தனது உடல் பாகங்களை காட்சிப் பொருளாக்க மாட்டாள். பொதுவெளியில் பகிர்ந்தால் காமம் பொங்கி ஆண்கள் கொண்டாடுவார்கள் அல்லது கலாச்சாரக் காவலர்கள் /பெண்கள் கழுவி ஊற்றி விடுவார்கள் என்று தெரிந்தே செய்வது பெண்ணுரிமையா.

தனது அறிவு, சிந்தனை, செயல்கள் இவற்றால் எதிர்பார்க்கும் அங்கீகாரம் கிடைக்காத உள்ஏக்கம்,  தனக்கென தன் உடலை அருமை ஆஹா என கொஞ்சிக் குலவ சரியான ஆள் அமையாத சுயக்காம வலி, தன்னம்பிக்கை குறைவானவர்களின் கவனஈர்ப்பு மனநோயின் அறிகுறி இவையே இவ்வாறு தோன்ற வைக்கிறது என்பது உலகம் ஒப்புக்கொண்ட அறிவியல் சொல்லும் உளவியல் . மேலும் நான் காட்டினாலும்  யாருக்கும் எந்த காம உணர்வும் வரக்கூடாது என்கிறார்களா இல்லை வரட்டும் என்கிறார்களா..இரண்டில் எதுவானாலும் அடுத்தவர் அந்தரங்க உணர்வுகளை சீண்டும் வேலைதானே இது. ஒரு இளம்பெண் மார்பகங்களைத் திறந்து காட்டுவதன் நோக்கம்தான் என்ன. முதலில் அதை யோசியுங்கள். அழகு என்று சொல்ல வேண்டுமா இல்லை சொல்லக்கூடாதா. என்னதான் அவரின் எதிர்பார்ப்பு. 

உங்களது அழகு என்று காட்டுகிறீர்களா அல்லது அது உணர்வைத்தூண்டுவது இல்லை அதில் ஒன்றுமில்லை என்கிறீர்களா..அது எப்படி அடுத்தவர் மனநிலையை தொல்லை /கிளர்ச்சி செய்யாது என்று  நீங்களாக முடிவு செய்து கொள்வீர்கள்?  எனில் இது பெண்ணாதிக்கம்தானே. 

ஒரு பெண்ணின் நிர்வாணம் ஆரோக்யமான  ஆணைக் கிளர்ச்சி அடையச் செய்யவில்லை என்றால்தான் கோளாறு (Ubnormal).அப்போது அடுத்த தலைமுறையே உருவாக வாய்ப்பு இல்லை. ஈர்ப்பு ஏற்படாமல் போனால் அது குறைபாடு என்பது அறிவியல், உயிரியல், வேதியியல் படித்தவர்களுக்கு மட்டுமல்ல பாமரர்களுக்கும் தெரியும். இருவரும் சமமான, வெவ்வேறு தன்மைகொண்ட கூறுகள் என்றிருக்க ஆண்கள்  பெண் போல நடக்க வேண்டும் என்று நினைப்பார்களா?  இல்லை. ஏனெனில் ஆண் என்பதில் ஆண் நிறைவாக இருக்கிறான்.

எனவே, “ஆம்பள சட்ட இல்லாம நிக்குறான் அவன யாரும் ஒண்ணுமே சொல்வது இல்லை ” என்பது அபத்தம்.பொதுவெளி அரைநிர்வாணக்குளியல் எப்படி  பாலின சமத்துவமாகும். ஆண் என்பது ஒன்றும் பெண்கள் அடைய வேண்டிய இலக்கு அல்லவே. அவளே ஒரு சக்தியின் அற்புதம்தானே. 

யாரைப் பார்த்து நாம் காப்பி அடிப்போம்?   நம்மை விட உயர்வானவர்கள் என்று நாம் நினைப்பவர்களைப் பார்த்துதானே. நம்மை விட உயர்வானவர் ஆண் என்று நினைக்கும் தன்னம்பிக்கை குறைவான பெண்தான் உடை, நடை, முடி, குடி, சிகரெட், கஞ்சா., கழட்டிக் காட்டுவது என்று  ஆண்களோடு போட்டி போடுவார்கள். செயல், சிந்தனை வழியாக ஒன்றும் செய்ய இயலாத வெளிப்பாடு இது.விலங்குகள் போல் கண்டவர்களோடு உறவு கொண்டு திரிந்த மனிதனை நாகரீகம் கொடுத்து மேம்படுத்தியது உடையும்,  காதலும, கல்வியும்தான் என்பதை மறந்து விடக்கூடாது. 

அன்று கச்சை அணியாத பெண்களை எவரும் கேவலமாகப் பேசவில்லை என்பது  உண்மைதான். ஆனால் இன்று போல் பெண்களுக்கு கல்வியும், மதிப்பும் உரிமைகளும்  சமூகத்தில் இருந்ததா?  இல்லைதானே. அடிமைகளாக, போகப்பொருளாகத்தானே இருந்தார்கள். மீண்டும் அந்த நிலைக்கு போகும் முயற்சியே இது. 

உடை சுதந்திரத்தின்படி பெண்களின் உடல் எளிதில் கிடைக்கும் காட்சிப் பொருளாகிவிட்ட வட அமெரிக்கா போன்ற ஐரோப்பிய  மேலைநாடுகளில்தான் ஆசிய நாடுகளைக் காட்டிலும் பன்மடங்கு  மார்பகப் புற்றுநோய் பரவல் உள்ளது எனபது நிரூபிக்கப்பட்ட உண்மை. அங்கேதான், பெண்கள் பெரும்பாலும் தாய்ப்பால் கொடுப்பதில்லை.உறவு,பந்தம், நம்பிக்கை எதுவும் வலுவாக இல்லை.குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து 15-30 வயதுக்குள் மனநல சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள் என்பதை உலக சுகாதார நிறுவனம் (WHO ) உறுதிப்படுத்துகிறது.

காட்சிப்பொருளாக போகப்பொருளாகப் பார்க்கப்படுவோம் என்று தெரிந்தே நடிக்க வரும் நடிகர் / நடிகைகளில் கூட நெடுங்காலம் மக்கள் மனதில் மரியாதையோடு நின்றவர்கள், நிற்பவர்கள் உடலழகை மட்டுமே நம்பி இருந்தவர்கள் இல்லை என்பதை உணருங்கள். பிறகு எல்லோரும் என்னைத் தவறாகப் பேசுகிறார்கள் என்று ஆண்கள் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கலாமே என்பது பெண்ணியமல்ல கட்டற்ற இணைய சுதந்திரம் தந்த தந்திரம்.

இதன் தொடர்ச்சியாக, நாளை உங்கள் கணவர்/காதலரின் அலுவலகத்தில், குழந்தையின் பள்ளியில் உங்கள் மார்பகமே பேசுபொருளாகிவிடக்கூடும். ஒன்றுமேயில்லை என்று இன்று நீங்கள் சொல்லும் ஒன்றைப் பற்றி ஊரே பேசுவதைத்தானே அந்த அருவிப்பெண்ணும், உள்ளாடை அணியமாட்டேன் என்ற பெண்ணும் செய்திருக்கிறார்கள். கடைசியில் ஒருநாள் எனக்கு யாருமேயில்லை என்னைப் புரிந்துகொள்ள  எவருமில்லை என்று மனஉளைச்சலில் வீழுவும் வாய்ப்புகள் இவர்களுக்கு அதிகம். .ஒரு ஊடகமும், மிதமிஞ்சிய data -வும் கையில் இருக்கிறது என்ற தகுதியை மட்டும் கொண்டு,  எல்லோருமே நினைத்ததைப் பேசி சமூகத்தை மாற்றும் தகுதி தமக்கு வந்துவிட்டதென்று,  எதையேனும் பகிர்வது  சமூக பொறுப்புணர்வற்ற, அடுத்த தலைமுறைகளின் நலமான எதிர்காலம் குறித்த சிந்தனையற்ற போக்கையே காட்டுகிறது. 

இவ்வாறான பதிவுகளை ஆதரிக்கும் பலரும் சுயசிந்தனையற்று,  ஒரு இளம் பெண், நிர்வாணத்தை ஆதரித்துப் பேசுகிறார் என்று பாலினவறட்சியில்தான் ஆதரிக்கிறார்களே தவிர தன் மனைவி, காதலி,தோழி,  சகோதரி, மகள் நிர்வாணம் பழகிக் கொள்ளுங்கள் என்றால் அவர்களின் நிர்வாணப்படத்தை பகிர்கிறேன் என்றால் செருப்பில்தான் அடிப்பார்கள்.மனநலக் காப்பகத்தில் சேர்ப்பார்கள் அல்லது  திருத்த முடியாது என்று  விட்டுவிலகி விடுவார்கள். இப்படியாக,  ஊடகதளங்களில் ஒரு கருத்தியலுக்கு ஆதரவாகவும், யதார்த்த வாழ்வில் அதற்கு முரணான நடைமுறைகளைக் கடைபிடித்தும் போலிமைத் (hypocrisy) தலைமுறையாக இச்சமூகம் மாறி வருவது மிகப்பெரிய மனச்சிக்கல்களை உருவாக்கும். 

 பழமையின் எல்லாக் கூறுகளையும் அப்படியே இன்றும் ஏற்க முடியாதுதான்.     ஆனால்,  ஒரேடியாக ஒதுக்கிவிடலாகாது.சீர்தூக்கி அவசியமானவற்றை அவசியம் கடைபிடிக்கவேண்டும். விக்ரம் திரைப்படத்தின் வசனம் உணர்த்தும் ‘மீண்டும் குரங்குக்கு மாற முயற்சிக்கும்’ தலைகீழ் சிந்தனைகளைப் புறந்தள்ள வேண்டும்

என் பார்வையில், சமூக ஊடகவழியாக  மதம், அரசியல் என்ற இருபெருங்கூறுகளை நம் கண்ணில் நிறைப்பதன் வழியாக மறைமுகமாக, இதர முக்கியத்துவம் வாய்ந்த கூறுகளான ஊடக சுதந்திரம், பெண்ணியம், மொழிகாப்பு,முற்போக்கு, குழந்தை வளர்ப்பு ஆகியவற்றின் மீதான கவனம்  தடுக்கப்படுகிறது அல்லது திசை திருப்பப்படுகிறது. சிந்தனையூக்கம் இல்லாத ஊடகங்களின் அதீத பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை,  சவால்களை  இந்தச் சமூகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, அவரவர் வாழ்க்கையில் நாம் எதை முக்கியத்துவம் என்று எண்ணுகிறோம், எது, எவ்வளவு தேவை என ஆராய்ந்து முதலில் மாற்றங்களை நம்மிடம் இருந்து துவங்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால்,  உண்மையான சமூக, ஊடக நலன் விரும்பிகளுக்கு பூமர், க்ரஞ்ச், பிற்போக்கு எனும் பட்டங்கள்கூட வழங்கப்படலாம். அவற்றைக் குறுநகையோடு வாங்கிக்கொண்டே தொடர்ந்து அதீதத்தின் அபாய  எச்சரிக்கையை வலியுறுத்தியும் ஆகவேண்டிய விளிம்புநிலையில்தான் இருக்கிறோம். பேசித் தீர்க்க விழைவோம்.


 

எழுதியவர்

அன்புத்தோழி ஜெயஸ்ரீ
அன்புத்தோழி ஜெயஸ்ரீ
கவிஞர், ஊடகவியலாளர், உளவியல் ஆலோசகர்
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x