20 April 2024

மிர்தசரஸ் நகரத்திலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்ட சிறப்பு ரயில் எட்டு மணி நேரங்களுக்குப் பிறகு முகல்புராவை அடைந்தது. வழியில் பல பயணிகள் கொல்லப்பட்டனர், சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன, சிலர் எங்கே தொலைந்து போயினர் என்று கடவுளுக்கே வெளிச்சம்.

அகதிகள் முகாமில் கடும் குளிரால் சில்லிட்டிருந்த வெற்றுத் தரையில், காலை பத்து மணிக்கு சிராஜுதின் கண் முழித்த போது, தன்னைச் சுற்றி அலைமோதும் கடலாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சுழல்வதைக் கண்டார். அவரிடம் கொஞ்சமாக மீதமிருந்த சிந்தினைத் திறனும் அவரை கைவிட்டது. நீண்ட நேரம் இருண்ட வானை வெறித்துப் பார்த்தார். மிகவும் கூச்சலாக இருந்த போதிலும் எவ்வித ஒலியும் அவர் செவிகளை அடையவில்லை. அவரை இந்நிலையில் காணும் எவரும் அவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியுள்ளதாக நினைக்கக்கூடும். ஆனால் அப்படி இல்லை. அவர் முற்றிலும் உணர்ச்சிகளற்றவராக இருந்தார். எங்கோ சூனியத்தில் நிலைத்திருந்தார்.

அவர் மந்தமான வானத்தை வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்த போது சூரியனைத் தழுவிய கண்கள் வழியே அவர் உயிரின் ஒவ்வொரு இழையிலும் ஒளி ஊடுருவியது. திடீரென சுயநினைவுக்குத் திரும்பினார். கொள்ளை, தீ, மக்கள் நெரிசல், புகைவண்டி நிலையம், துப்பாக்கிச் சூடு, இரவு, சகினா…ஒன்றன் பின் ஒன்றாக சில காட்சிகள் அவர் மனதில் வலம் வந்தன.

சிராஜுதின் திடுக்கிட்டு எழுந்தார். எல்லையற்ற கடலாக தன்னைச் சூழ்ந்திருந்த மனிதர்களைப் பிளந்து கொண்டு பேய் பிடித்தவன் போல நடந்தார்.

முழுதாக மூன்று மணி நேரம், ‘சகினா! சகினா!’ என்று அழைத்தபடி அந்த முகாம் முழுவதும் துருவித் துருவித் தேடியும் அவரது பதின்மவயது மகளைப் பற்றி எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. காதைப் பிளக்கும் சத்தங்களால் அந்தப் பகுதி நிறைந்திருந்தது. ஒருவர் தனது குழந்தையை, மற்றொருவர் தன் அம்மாவை, வேறொருவர் தனது மனைவியை, மகளை என்று ஒவ்வொருவரும் தேடிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் சிராஜுதின் தேடுவதைக் கைவிட்டு, அதீத களைப்பில் தரையில் ஒருபுறமாக வீழ்ந்தார். எந்தத் தருணத்தில் சகினா அவரிடமிருந்து பிரிந்தாள் என்பதை நினைவில் கொண்டுவர முயன்றார். ஆனால் அவர் நினைவுபடுத்திக் கொள்ள எடுத்த ஒவ்வொரு முயற்சியின் கடைசியில், அவர் மனைவியின் சிதைந்த உடலும் பிதுங்கிய குடலும் மனக்கண்ணில் தெரிய, அதற்கு மேல் அவரால் ஒன்றும் சிந்திக்க இயலவில்லை.

சகினாவின் அம்மா இறந்திருந்தார். சிராஜுதினின் கண் முன்னே இறந்திருந்தார். ஆனால் சகினா எங்கே? சகினாவின் அம்மா இறக்கும் தருவாயிலும், “என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சகினாவை அழைத்துக் கொண்டு ஓடுங்கள்!” என வலியுறுத்தியிருந்தார்.

சகினா அவருடன்தான் இருந்தாள். இருவரும் வெறுங்காலுடன் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவளுடைய துப்பட்டா நழுவியது. அவர் அதை எடுக்க நின்ற போது, “அப்பா, அதை விடுங்கள்!” என்று கத்தினாள். ஆனாலும் அதை அவர் எடுத்துவிட்டார். இவற்றை இப்போது நினைத்துக் கொண்டதும், கண்கள் தன்னிச்சையாக மேலங்கியின் புடைத்திருந்த பையை நோக்கிப் போனது. கைவிட்டு அந்தத் துணியை எடுத்தார். அது அதே துப்பட்டாதான், அதிலொன்றும் சந்தேகமில்லை. ஆனால் சகினா எங்கே?

சிராஜுதின் மூளையை கசக்கிக் கொண்டார். ஆனால் அவருடைய சோர்ந்த மனம் குழப்பம் கொண்டது. புகைவண்டி நிலையத்திற்கு அவளை அழைத்து வந்தாரா? பயணத்தின் போது அவளும் கூட இருந்தாளா ? கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பலவந்தமாக ரயிலை நிறுத்தி உள்ளே புகுந்த போது அவர் மயங்கி விழுந்தாரா? அப்போது அவர்கள் அவளைத் தூக்கிச் சென்றார்களா?

அவருடைய மனம் கேள்விகளால் கொந்தளித்தது, ஆனால் பதில்கள்தான் இல்லை. அவருக்கு அனுதாபம் தேவைப்பட்டது. ஆனால் அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கும் அதுவே தேவையாக இருந்தது. அவர் கதறி அழ நினைத்தார், ஆனால் முடியவில்லை, அவருடைய கண்ணீர் உலர்ந்திருந்தது.

ஆறு தினங்களுக்குப் பின் அதிலிருந்து சற்று மீண்டிருந்த சிராஜுதின், அவருக்கு உதவ முன்வந்த சிலரை சந்தித்தார். அவர்கள் பாரவண்டி (லாரி) ஒன்றும் சில துப்பாக்கிகளும் வைத்திருந்த எட்டு இளைஞர்கள். அவர்களை மனதார வாழ்த்தி சகினாவைப் பற்றி விளக்கமாகக் கூறினார். “அவள் சிவந்த நிறத்துடன் மிக அழகாக இருப்பாள், சாயலில் என்னைப் போலில்லாமல் அவள் அம்மாவை கொண்டவள். பெரிய கண்களும் கருங்கூந்தலும் உடைய அவளுக்கு சுமார் பதினேழு வயதிருக்கும். அவள் வலது கன்னத்தில் பெரிய மச்சம் இருக்கும். என் ஒரே மகள் அவள். தயவு செய்து அவளைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக!”.

அவள் உயிருடன் இருக்கும் பட்சத்தில் சிராஜுதினுடன் சில தினங்களுக்குள் நிச்சயமாக சேர்த்து வைப்பதாக அத்தொண்டர்கள் வாக்களித்தனர்.

அந்த இளைஞர்கள் எல்லாவிதத்திலும் முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அமிர்தசரஸ் நகரத்திற்குச் சென்றனர். அங்கே பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என நிறைய பேரை மீட்டு பாதுகாப்பாக வைத்தனர். பத்து நாட்கள் கழிந்த பின்னும் சகினாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர்களுடைய மீட்புப்பணியில் ஒருநாள் அமிர்தசரஸை நோக்கி அதே லாரியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சூர்ஹட் சாலைக்கு அருகே ஒரு பெண் மிகவும் களைத்த நிலையில் நடந்து போவதைப் பார்த்தனர். பாரவண்டியின் சத்தம் கேட்டு திடுக்கிட்ட அவள், பீதி அடைந்து ஓடினாள். அந்த இளைஞர்கள் வண்டியை நிறுத்திவிட்டு அவள் பின்னால் ஓடினர். பிறகு வயல் ஒன்றில் அவளை எட்டி பிடித்தனர். அவள் மிகவும் அழகாக இருந்தாள், அவள் வலது கன்னத்தில் பெரிய கருப்பு மச்சம் இருந்தது.

“பயப்படாதே” என்று அவர்களில் ஒருவன் அவளை சமாதானப்படுத்த முயன்றான். “நீ சகினாவா?”

அவள் பயத்தில் வெலவெலத்திருந்தாள். பதில் ஒன்றும் சொல்லவில்லை. அந்த இளைஞர்கள் அவளை மென்மையாக சமாதானப்படுத்தினர். பிறகே அவள் பயம் தணிந்தது, தான் சிராஜூதீனின் மகள் சகினா என்பதை ஒத்துக் கொண்டாள்.

இளைஞர்கள் அவளை உற்சாகப்படுத்த முனைந்தனர். அவளுக்கு உணவும் பாலும் அளித்து வண்டியில் ஏற உதவி செய்தனர். துப்பட்டா இல்லாததால் அவள் தன் கைகளால் மார்புகளை மறைக்க முயன்று தோல்வி கண்டாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்களில் ஒருவன், தன் மேலங்கியை கழட்டிக் கொடுத்தான்.

பல நாட்கள் ஆனபோதும் சிராஜுதீனுக்கு சகினாவைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பகலில் பல்வேறு முகாம்களுக்கும் அலுவலகங்களுக்கும் சுற்றி அலைந்த போதும், தொலைந்த மகளை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் உயிரோடு இருக்கும் பட்சத்தில் தன்னோடு சேர்த்து வைப்பதாக சொன்ன தொண்டர்கள் அவளை கண்டுபிடிப்பதில் வெற்றி பெற வேண்டும் என்று இரவுகளில் பிரார்த்தனை செய்தார்.

ஒருநாள் முகாமிற்குள் அந்த இளைஞர்களை பார்த்தார். அவர்கள் பாரவண்டியின் உள்ளே உட்கார்ந்திருந்தனர். வண்டி புறப்படத் தயாராக இருந்தது. சிராஜூதீன் விரைந்து சென்று, “என் சகினாவை கண்டுபிடித்தீர்களா?” என்று அவர்களிடம் கேட்டார்.

“ஓ, நாங்கள் கண்டுபிடிக்கிறோம், நாங்கள் கண்டுபிடிக்கிறோம்” என்று அவர்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள். வண்டியும் புறப்பட்டுவிட்டது.

இந்த இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும் என்று சிராஜூதீன் மீண்டும் பிரார்த்தனை செய்தார். அது அவர் மனதை இலகுவாக்கியது.

அன்று மாலை அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் ஒரே அமளியாக இருந்தது. நான்கு ஆட்கள் ஒரு பெண்ணை தூக்குப்படுக்கையில் தூக்கிக் கொண்டு வந்தனர். அதைப் பற்றி அவர் விசாரித்தபோது அவள் ரயில் தண்டவாளத்தில் மயக்கமாக கிடந்ததாகத் தெரியவந்தது. அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். மருத்துவ ஊழியரிடம் அப்பெண்ணை ஒப்படைத்த பிறகு அந்த ஆட்கள் சென்று விட்டனர்.

சிராஜூதீன் சற்று நேரம் ஒரு மரத் தூணில் சாய்ந்தபடி அந்த இடத்திற்கு வெளியே காத்திருந்தார். பிறகு மெதுவாக உள்ளே நடந்தார். தூக்குப்படுக்கையின் மீது கிடத்தப்பட்டிருந்த அந்த சடலத்தைத் தவிர அந்த அறையில் எவருமில்லை. தயங்கியபடி அதை நோக்கி மெதுவாக நடந்தார்.

திடீரென அந்த அறையில் ஒளியூட்டப்பட்டது. இறந்த பெண்ணின் வெளுத்த முகத்தில் மின்னும் அந்த பெரிய மச்சத்தைக் கண்டதும், “சகினா!”என்று அலறினார்.

அந்த அறையின் விளக்கைப் போட்ட மருத்துவர் “என்ன ஆயிற்று?” என்று வினவினார்.

“நான்.. ஐயா.. நான் இவள் தகப்பன்!” கரகரத்த குரலில் கூறினார்.

அந்த மருத்துவர் தூக்குப்படுக்கையில் கிடத்தியிருந்த அந்த சடலத்தை மேலோட்டமாக பார்த்தார். .நாடி பிடித்துப் பார்த்துக் கொண்டே, ஜன்னலை சுட்டிக் காட்டி, “அதைத் திற” என சிராஜுதினிடம் சொன்னார்.

தூக்குப்படுக்கையிலிருந்த சகினாவின் உடல் மிக லேசாக அசைந்தது. உயிரற்ற கைகளால் தன் இடுப்பின் முடிச்சை மெதுவாக அவிழ்த்து *சல்வாரை கீழிறக்கினாள்.

“அவள் உயிரோடு இருக்கிறாள்! என் மகள் உயிரோடு இருக்கிறாள்” முதியவரான சிராஜுதின் மிகுந்த மகிழ்ச்சியில் கத்தினார்.

அதிர்ச்சியில் உறைந்து நின்றார் மருத்துவர்.


 *சல்வார் – பெண்கள் அணியும் காற்சட்டை 
  • சாதத் ஹுஸன் மண்ட்டோ
    தமிழில்: ஜான்ஸி ராணி

சாதத் ஹுஸன் மண்ட்டோ 1912-ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி பஞ்சாப் மாகாணம் லூதியானா மாவட்டம் சாம்ராலா வட்டாரத்தின் பாப்ரோடி கிராமத்தில் பிறந்தவர். காஷ்மீர் முஸ்லிம் குடும்பத்தைச் சார்ந்த இவரது தந்தை அதிகாரத் தோரணையோடு வாழ்ந்தவர். தாயோ மிகவும் இளகிய மனம் படைத்தவர். இரண்டு முரண்பட்ட சக்திகளுக்கிடையில் சிக்கி உருப்பெற்றவர் தான் மண்ட்டோ. உருது இலக்கியத்தில் முத்திரை பதித்த மண்ட்டோ மெட்ரிக் தேர்வில் உருது மொழிப் பாடத்தில் தேர்ச்சியடையவில்லை என்பது வேடிக்கையான உண்மையாகும். ஆங்கிலத்தில் வெளி வந்த ரஷ்ய, ஃபிரெஞ்சு இலக்கியங்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு செகாவ், மாக்சிம் கார்க்கி, விக்டர் ஹியூகோ, ஆஸ்கர் ஓயில்ட் ஆகியோரின் புதினங்களால் கவரப்பட்டார்.

அவரது தொடக்க கால இலக்கியப் பணியானது மொழி பெயர்ப்பாகவே அமைந்தது. 1936-ம் ஆண்டு இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். பேச்சு மொழி பஞ்சாபி என்றாலும் இலக்கியத்தை கடைசி வரை உருது மொழியிலேயே படைத்தார். இந்திய – பாகிஸ்தான் பிரிவினையும் அதையொட்டி நடந்த மரணங்களும் பாலியல் வன்கொடுமைகளும் மண்ட்டோவைத் துடிக்க வைத்தன.

22 சிறுகதைத் தொகுப்புகள், ஒரு‍ நாவல், 3 கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். 1936-ல் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மண்ட்டோ கி. அப்சானே’ வெளியானது. 1954, மார்ச் 15 இல் அங்கிள் சாம்க்கு‍ மண்ட்டோ கடிதம் என்ற உரைநடை இலக்கியத்தை எழுதினார்.

1955 – ஜனவரி 18ம் நாள் தனது 42வது வயதில் லாகூரில் மரணமடைந்தார்.

எழுதியவர்

ஜான்ஸி ராணி
உளவியல் ஆலோசனையில் முதுநிலை பட்டம் படித்தவர். மனநலம், வாழ்வியல், வணிகம், மெட்டாஃபிஸிக்ஸ் என பல்வேறு தலைப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகள் தமிழின் முன்னணி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் வெளியாகியுள்ளன.

தஞ்சாவூரில் பிறந்த இவர் தற்போது கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் சென்னையில் வசிக்கிறார்.
இவரின் நூல்கள் :

"ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்" - கவிதைத் தொகுப்பு - வாசகசாலை பதிப்பகம் - 2019

"ஒரு வாழ்க்கை சில சிதறல்கள்" அராபிய பெண்ணியச் சிறுகதைகள் - மொழிபெயர்ப்பு - எதிர் வெளியீடு - 2021
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x