18 April 2024

ரவின் ரகசியங்களை அப்படியே மூடிவிட்டு வெளிச்சத்தைப் பரப்பி புது நாளைத் துவக்கியது சூரியன். தன் மீது தவழும் மலர்களை அசைத்தும், இசைத்தும் அழகாய் நகரும் ஓடை போல அவள் விழிகளில் வெளிச்சம் ஒளிர்ந்தது. அவளிருந்த அறையின் வெளிர் நிற பச்சைப் பெயிண்ட் ஒரு பூங்காவின் பசுமையை ஒத்திருந்தது. அந்த அறையின் ஒரு மூலையில் ஜன்னலிருந்தது. ஜன்னலின் வழியே பல நூற்றாண்டு மொழிகளைக் கொண்டு பூவோடு உரையாடும் காற்றின் ஓசை உள் நுழைந்தது. அந்தக் காற்று இன்பாவின் கேசத்தையும் பூவெனத் தொட்டு ஸ்பரிசித்தது. 

கண்விழித்ததும் ஜன்னலின் முன் நின்று அந்தக் காலையின் புத்துணர்ச்சியை உள்வாங்கியபடியே ரகசியாவைப் பார்த்து புன்னகைத்தாள் இன்பா. இளவரசியின் கன்னங்களைப் போல பிங்க் நிறத்தில் இருந்த விரல்களால் கண்களைத் தேய்த்துக் கொண்டாள். “குட் மார்னிங் ரகசியா” என்றாள். ரகசியாவின் மூக்கு பனித்துளி படர்ந்த சிறு மலை முகடு  போலிருந்தது. பின் இன்பா கரடியின் தோலைப் போல புசுபுசுவென இருந்த காலணிகளை அணிந்து கொண்டு பாத்ரூமுக்குள் சென்றாள். முகம் கழுவிவிட்டு, துண்டில் முகத்தைத் துடைக்கும் போது யாரோ அவள் கழுத்தை நசுக்குவது போல உணர்ந்தாள். அம்மா என்று கத்த முயன்று, முடியாமல் திணறினாள். சில நொடிகள் கடந்ததும், அது அவளுடைய பயம் என்பதை உணர்ந்து பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள். சற்று நேரம் மெத்தையில் அமர்ந்தாள். பின் ஐன்னலின் அருகே நின்றாள், அடுத்த வீட்டு மரத்திலிருந்த செண்பகப் பூவின் வாசனையை அவள் நாசிக்கு அனுப்பியது காற்று. தனிமை அவளைப் பயமுறுத்துவதாக ரகசியாவிடம் சொன்னாள். “பாப்பா பால் குடிக்க வா“ என்று குணா அழைக்க, “ரகசியா இரு, நான் கீழ போய் பால் குடிச்சிட்டு வரேன், அப்புறமா நம்ம விளையாடலாம்” எனச் சொல்லிவி அங்கிருந்து வெளியேறினாள்.

 ரகசியா , இன்பாவைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். பார்ப்பதற்கு பார்பி பொம்மை போல் இருக்கும் இன்பாவிற்குப் பதிமூன்று வயது. இன்பாவின் சிரிப்பு எப்போதாவது ஒளிரும் வால் நட்சத்திரம் போல உடனே மறைந்திடும். தாயை இழந்த  வலியுடன் வாழும் துயர் இன்பாவிற்கு இருந்தது. அவள் அப்பா குணா, வங்கி மேலாளர், எனவே பணியிடத்திலிருந்து கிளம்புவதற்கே இரவாகிவிடும். தன் மகளுக்குத் தேவையானதை வாங்கித் தந்து, குணா பார்த்துக் கொண்டபோதும், ஒரு கோடைக்காலத்தில் மரநிழலைத் தேடும் நாடோடியாய் அவள் இழந்த தாயின் பாசத்திற்காக ஏங்கினாள்.  பார்ப்பதற்கு இயல்பான குழந்தை போலத் தெரிந்தாலும், அவளுள் மன அழுத்தம் நிறைந்திருந்தது. தானே வளரும் செடி துணிவின் அடையாளமாக் காட்டப்பட்ட போதும், ஈரம் தேடும் வேரின் விரல்கள், விரக்தியின் வறட்சி அடைந்திருக்குமல்லவா?

இன்பா மாடிப் படிகளில் துள்ளித் துள்ளி ஏறி வந்தாள். பால் குடித்ததைத் தன் வெள்ளை பார்டர் உதடுகளால் உறுதிப்படுத்தியவள், “ஐன்னலருகே சென்று உன்கிட்ட நான் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் ரகசியா” என்றாள். “ நேத்து ஸ்கூல்ல ராம் கீதாவோட சட்டைல இங்க் ஊத்திட்டான், அவ மிஸ் கிட்ட சொல்லி கொடுத்து அவனுக்கு நல்ல அடி விழுந்துச்சு” என்று சொன்னாள். “செல்வி அக்கா சொன்னாங்க இன்னிக்குப் பாட்டு சொல்லித் தர மீனா மிஸ் வரலையாம்மா, நாம ரொம்ப நேரம் பேசலாம்.. ஜாலி” என்றாள். ரகசியாவின்  கண்களில்   குதூகலம் தெரிந்தது. இன்பா வீட்டில் இருக்கும் தோட்ட வேலைகளைக் கவனிக்க சிங்காரமும், சமையல் வேலையை கவனிக்க அவன் மனைவி செல்வியும் இருந்தனர். செல்வி சிவப்பாக பார்க்க கலையாக இருப்பாள்.  தன்னை அலங்கரித்துக் கொள்ள அதிக நேரம் செலவிடுவாள். இதனால் சிங்காரத்துக்கும், செல்விக்கும் அடிக்கடி சண்டை வரும்.அவள் வயது முப்பதைக்  கடந்த போதும், மேனியை பொலிவுடன் பராமரித்தாள். சிங்காரம் முதிர்ந்த தோற்றத்துடனும், வெள்ளை தாடியுடன் இருப்பான். 

இன்பா பிங்க் நிற மேஜை மீது ஒரு வெள்ளைத் தாளில் சில கோடுகளை வரைந்த படி இருந்தாள். அடிக்கடி பென்சிலால் தன் சுருட்டை முடியை இன்னும் கொஞ்சம் சுருட்டி விட்டுக் கொண்டாள். அவள் வரைந்த கோடுகளுக்குள் ஒரு ஆணின் வடிவம் தெரிந்தது பின் பேனாவால் அந்த கோடுகளில் மேலும் கீழுமாக அதை அடித்து அடித்து சிரித்தாள். “ கீழிருந்து  சிங்காரம் எதற்கோ செல்வியைத் திட்டும் சத்தம் கேட்க, ஜன்னலில் எட்டிப் பார்த்து,  ரகசியா சிங்காரத்தப் பாரு உங்க வீட்டு டாலி டாக் மாதிரி செல்விக்கா கிட்ட வல்லு வல்லுன்னு கத்திக்கிட்டே இருக்காரு” என்றாள். ரகசியாவும் சிரித்தபடியே அதைக் கேட்டாள். பின் இன்பா தனக்குப் பிடித்த பபுள்ஸ் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து வட்டவட்டமாக குமிழிகளை ஊதினாள், அது ரகசியாவின் முகத்தில் பட இன்பா சிரித்தாள். வெவ்வேறு வீடுகளில் இருந்த போதும் ரகசியாவை உற்ற தோழியாக நினைத்தாள் இன்பா.

மறுநாள் காலையில்  “ரகசியா நீ மட்டும் ஜாலியா வீட்ல இருக்கே, நான் மட்டும் ஸ்கூல் போகனுமா?” என்றாள் இன்பா. ரகசியா பதில் சொல்லாததால், கொஞ்ச நேரம் ஜன்னல் வழியே கீழே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது  செல்வி தன் தலையை சீவிக் கொண்டிருக்க, அவள் முன் நின்றான் எலக்டிரிசியன் ரமேஷ். அவனைப் பார்த்ததும் இன்பாவின் முகம் மாறியது. செல்வி “எப்படா வந்த?” என்றதும் “இன்பா ரூம் டியூப் லைட்ட மாத்தச் சொல்லி குணா சார் சொன்னாரு அதான் வந்தேன்” என்றான். “சரி முடிச்சுட்டு கிச்சனுக்கு வா, ரவா கிச்சடி செய்யறேன்” எனச் சொன்னாள். “என்னது கிஸ்ஸா” என்று அவள் புடவையை இழுத்தான். அவள் முகம் சிவந்தது. அதே சமயம் சிங்காரம்   உள்ளிருந்து வெளியே வர, அவன் வேகமாக வீட்டுக்குள் சென்றான். “அவன் கூட உனக்கு என்ன வெட்டிப் பேச்சு” என்று செல்வியைத் திட்டினான் சிங்காரம். 

பின் ரகசியாவைப் பார்த்து “ இவன் உங்க வீட்டுக்கும் வருவான் தான…இவன்  கிட்ட நீ ஜாக்கிரதையா இரு, நீ ஏன் இப்படி மழைல நனைஞ்சிருக்க” என்றாள். தன் ஸ்கூல் டைரியில் எதையோ எழுதி எடுத்து வைத்தாள்.”சரி ஸ்கூல் வேன் வந்துடும், நான் போறேன். நான் வர வரைக்கும் நீ சமத்தா இரு” என்று ரகசியாவிடம் சொல்லிவிட்டு கீழே சென்றாள். கிச்சனில் செல்வியும், ரமேஷும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு ரகசியா வேகமாக வாசலை நோக்கி நடந்தாள். கேட் அருகே சென்றதும் திரும்பி “ ரகசியா பை, மிஸ் யூ” என்று சொன்னாள்.

மேலே இன்பாவின் அறைக்கு சென்ற ரமேஷ் அவளின் மெத்தை மீது படுத்து கொண்டான். மேஜை மீதிருந்த இன்பாவின் புகைப்படத்தைப் பார்த்து,  “இந்தப் புள்ள இப்பவே இத்தன அம்சமா இருக்கு இன்னும் பெருசானா செம அழகாயிருப்பா” என நினைத்துக் கொண்டான். மெத்தை மீது ஏறி டியூப்லைட்டைக் கழட்டி கீழே வைத்தான். தான் கொண்டு வந்த புது டியுப் லைட்டை மாற்ற முயற்சி செய்தான், அதன் நுனியில் இருக்கும் கம்பி சரியாக பொருந்தாததால், இரண்டு டியூப் லைட்டுகளையும் எடுத்துக்கொண்டு திரும்பியவன் மீண்டும் இன்பாவின் புகைப்படத்தை பார்த்து நின்றான். அப்போது அந்த அறைக்குள் வந்த செல்வி “அதுல என்ன பாக்குற” என்றாள். “நேத்து கூட ஒரு செம படம் பார்த்தேன், அதெல்லாம் பண்ணிப் பார்க்க ஆளில்லை. இந்த புள்ள வயசு தான் அந்த குட்டிக்கு கூட” என்று கண்ணடித்தான்.  “எங்க ஓனருக்கு தெரிஞ்சது நீ செத்த” என்றாள்.” உங்க ஓனர நீ சரி பண்ணிட மாட்டியா என்ன? நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தா எதை வேணா ஓகே பண்ணலாம்” என்றான். “வேலை முடிஞ்சுதா இல்லையா?” என்று கீழிருந்து சிங்காரத்தின் குரல் கேட்க இருவரும் ட்யூப் லைட்டுகளை எடுத்துக் கொண்டு வெளியேறினார்கள். 

அங்கிருந்து ரகசியா வீட்டினுள் நுழைந்தான் ரமேஷ் மாடியிலிருந்த மோட்டாரை ரிப்பேர் செய்து முடித்து பால்கனியில் நின்றபடி  செல்வியின் வீட்டை நோட்டமிட்டான்.  அங்கிருந்த கூடைத் தூரியில் அமர்ந்தவன்,  ரகசியாவைக் கவனித்தான். பளிங்கு போலிருந்த அவள் அருகே சென்றான், அவள் வயலெட் பூக்கள் போட்ட  கவுன் அணிந்திருந்தாள். “வெரி ஹாட்” என்று கூறி அவளின் கன்னத்தைத் தடவினான்.  அவளைச் சாக்கடை சூழ்வது போலிருந்தது. அப்போது “இங்க ஒரு ஸ்விட்ச் போர்ட்  மாத்தனும்” என்ற குரல் கேட்க, கீழே சென்றான்.

அன்று மாலை இன்பா அறைக்குள் வந்ததும் ஜன்னலின் வெளியே பார்ததபடி “ரகசியா என்ன பண்ற, ஏன் டல்லா இருக்க? அந்த ரமேஷ் உன்னை ஏதாவது பண்ணானா? அவன் ரொம்ப மோசமானவன், அவன எனக்கு சுத்தமா பிடிக்காது” என்றாள். முன்பொரு நாள் செல்வி அக்கா வீட்டுக்கு விளையாடப் போன போது, அவன் இன்பாவின் பிராக் ஜிப் திறந்திருப்பதாகச் சொல்லி, அதைப் போடுவது போல கையை இடுப்பினருகே கொண்டு போக, விடுங்க என்று சொல்லி ஓடி வந்ததாக ரகசியாவிடம் சொல்லியிருந்தாள் இன்பா. மொட்டவிழ்காத மலர்களைக் கசக்கி பார்க்கும் இந்த இச்சைக்காரர்களுக்குத் தான் எத்தனை கொடூரம் நிறைந்த மனது. பல நாட்கள், குணா வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வருவதாலும், வார இறுதியில் தியான வகுப்புகளுக்கும், கிளப் மீட்டிங்களுக்கும் செல்வதாலும், இன்பாவின் கவலைகள் அவளிடமே தங்கி விட்டன.

இன்பாவும், ரகசியாவும் தனித்திருக்கும் நேரங்களில் இன்பாவின் அம்மா அவளுக்கு சொன்ன அம்மன் கதைகளை நிறையச் சொல்லிக் கொண்டிருப்பாள் இன்பா. துர்க்கை எப்படி மகிஷாசுரனை வதம் செயதாள் என்று விவரிக்கும்போது துர்க்கையின் கோபத்தை இன்பாவின் கண்களில் பார்த்திருக்கிறாள் ரகசியா.  மகிஷாசூரன் மகா கெட்டவன் அவனை அழிக்க தான் பார்வதியின் வடிவாய் துர்க்கை  தோன்றியதாகவும் சொல்வாள். அப்போது “மகிஷாசூரனை எனக்கு பிடிக்காது அவன் ரொம்ப மோசமானவன்.  நான் தூங்கும் போது கெட்டவங்க எல்லாரும் தினம் தினம் என் கனவுல வராங்க என்ன கஷ்டப்படுத்தறாங்க” என்று அழுவாள். ரகசியாவிற்கு  அதைக் கேட்கவே மிகவும் பாவமாக இருக்கும்.

அடுத்த நாள் பள்ளிக்குச் செல்லத் தயாராகி, தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்த இன்பா, அடுத்த தோசை வாங்க கிச்சனுக்குள் சென்றாள். ரமேஷ் சிம்னியில் எதையோ கழட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். சிம்னியிலிருந்து  கழட்டிய ஒரு ஸ்க்ரூ இன்பாவின் கால் அருகே விழுந்தது.

அவன் கீழே குனிந்து  ஸ்கிரூவை எடுக்கும் சாக்கில் தெரியாமல் படுவது போல  இன்பாவின் காலைத் தொட்டான். அவளுக்கு அவன் கை பட்டது கரப்பான் பூச்சி ஊர்ந்தது போலிருந்தது உடனே அங்கிருந்து வெளியே ஓடிச் சென்று ரகசியாவிடம் நடந்ததைச் சொன்னாள். “ உடனே அப்பா கிட்ட சொல்லு” என்று ரகசியா சொல்வதாய் உணர்ந்தாள் இன்பா.  அவள் குணாவின் அறைக்குச் சென்றாள்.

 குணா யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார். அவர் இவளைப் பார்த்த உடன் தொலைபேசியை வைத்துவிட்டு “நான் இரண்டு நாளைக்கு வேலை விஷயமாக வெளி ஊருக்கு போறேன், அதுவரை நம்ம செல்லம்மா பாட்டி உன்னை பார்த்துக்குவாங்க” என்று சொல்ல, இன்பாவிற்கு தனியே இருக்கும் பயம் தொற்றிக் கொண்டது. இன்பாவின் சிறிய கண்களுக்கு முன்  செல்லம்மா பாட்டியின் உடல் சிறியதாக தெரிந்தது. பின் கொசுவம் வைத்து கட்டியிருந்த புடவையுடன் அந்தப் பாட்டி மெல்ல நடந்து இன்பாவின் கன்னத்தைத் தொட்டு “சாப்டியா” எனக் கேட்டார்.” சாப்பிட்டேன்” என்று சொன்னாள். பின் வெளியே ஸ்கூல் வேன் ஹாரன் அடிக்க, தன் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வேனை நோக்கிச் சென்றாள்.

குணா ஊருக்குச் சென்று இரண்டாவது நாள் காலை பல பேர் பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டு கண் விழித்தாள் இன்பா. அவள் ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்ததும் சிறு திரளான மக்கள் கூட்டம் நிற்பதைக் கண்டாள். “ரகசியா  இங்க பாரு எங்க வீட்டு முன்னாடி எவ்வளவு பேர் இருக்காங்கன்னு, இரு நான் கீழே போய் என்னன்னு பார்த்துட்டு வரேன்” என்று சொல்லி கீழே ஓடினாள். அந்தக் கூட்டத்தில் ஊடுருவி சென்று உள்ளே பார்த்ததும், மண்டையில் ரத்தம் வழிய இறந்து கிடந்தான் ரமேஷ். என்ன நடந்தது என்று எல்லோரும் விசாரித்துக் கொண்டிருக்க, செல்வி அழுதபடி இருந்தாள். சிங்காரத்தைக் காணவில்லை. போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் கேட்டதும் கூட்டம் சற்று விலகியது.

இன்பா அவள் அறையின் ஜன்னலருகே ஓடிச் சென்று “ரகசியா மகிஷாசூரனுக்கு வெறி கூடிப் போச்சு அதனால துர்கை அவனைக் கொன்னுட்டாள், வானத்துல இருந்து கீழ தள்ளி விட்டு கொன்னுட்டாள்” எனச் சொல்லி சத்தமாகச் சிரித்தாள். ரகசியா அசைவற்றிருந்தாள். இன்பா பாத்ரூமுக்குள் சென்று பல் துலக்க ஆரம்பித்தாள், மீண்டும் அவள் கழுத்தை நோக்கி இரு கைகள் வருவதை கண்ணாடியில் கவனித்தாள். உடனே முகத்தைக் கழுவி விட்டு வெளியே வந்தாள். தன் அம்மா இறந்ததிலிருந்து தனக்குப் பாதுகாப்பு இல்லை  என்ற எண்ணம் அவளுக்கு மனப்பிறழ்வை ஏற்படுத்தியிருந்தது. 

இன்ஸ்பெக்டர் குணாவிடம் போனில் பேசிவிட்டு செல்லம்மா பாட்டியின் அருகில் வந்தார்.” என்ன நடந்துச்சு பாட்டி?” என்று கேட்டார். “நான் வந்து ரெண்டு நாள் தான் ஆச்சு, எனக்கு ஒன்னும் தெரியாது சார்” என்று சொன்னாள் பாட்டி. “நீங்க குணாவுக்கு எப்படி சொந்தம்?” என்று கேட்டார்.”நான் குணாவோட சித்தி சார்” என்று பாட்டி சொன்னாள். “சரி, குணாவோட பொண்ணு பேர் என்ன?” என்று கேட்டார். “அவ பேரு இன்பா சார்” என்றாள்.” குணாவோட மனைவி இறந்து எத்தனை வருஷம் ஆச்சு?” என்றார். “ஒரு வருஷம் ஆச்சு சார்” என்றாள் பாட்டி. “எப்படி இறந்தாங்கன்னு சொல்ல முடியுமா?” என்றார். “திடீர்னு ஒருநாள் ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டா” என்றாள் பாட்டி.   “இப்ப இன்பா எங்க இருக்கா?” எனக் கேட்டார். “மேல அவளோடு ரூம்ல தான் இருக்கா” என்றாள் பாட்டி.

கான்ஸ்டபிள்களை கீழே இருக்கச் சொல்லிவிட்டு இன்பாவின் அறைக்குச்  சென்றார் இன்ஸ்பெக்டர். அங்கே “நீ என்கிட்ட உண்மைய சொல்லு” என்று எதிர் வீட்டைப் பார்த்து பேசிக்  கொண்டிருந்தாள் இன்பா. அங்கு மனிதர்கள் யாரும் தென்படவில்லை. இன்ஸ்பெக்டர் “இன்பா” என்று அழைத்ததும் அவள் ஓடிச் சென்று பாத்ரூமுக்குள் கதவை சாத்திக் கொண்டாள். “ இன்பா கதவைத் திற… நீ யார் கூட பேசிட்டிருந்த” என எத்தனை முறை கேட்டும் அவள் கதவை திறப்பதாக இல்லை.

கீழே வந்த இன்ஸ்பெக்டர் சிங்காரத்திடம் “குழந்தைக்கு என்ன பிரச்சனை?” என்று விசாரித்தார். “அவங்க அம்மா இறந்ததிலிருந்து அவளுக்கு ஏதோ மனநோய் இருக்குன்னு குணா சார் என்கிட்ட சொன்னாரு. அவ யாரு கூடயும் பேச மாட்டா. அந்த ரூம்ல இருக்க ஜன்னல்ட நின்னு தனியா பேசுவா. குணா சார் அவள டாக்டர்ட கூட்டிட்டு போயும் அவ பேசறத நிறுத்தல. சில சமயம் நைட்டு நேரத்துல கூட பேசிட்டிருப்பா சார்” என்றான் சிங்காரம். 

இன்ஸ்பெக்டருக்கு இன்பா ஜன்னல் அருகே நின்று பேசுவதால் அருகில் இருக்கும் வீட்டில் யாராவது இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் எழுந்தது. உடனே அவர் எதிர் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினார். கதவைத் திறந்தான் கந்தசாமி. “இந்த வீடு யாரோடது நீங்க யாரு?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். “ஐயா என் பேரு கந்தசாமி, நான் இருபது வருஷமா இந்த வீட்ல வேலை செய்யறங்க. வீட்டு ஓனர் ஜெயராஜ் ரிட்டயர்ட் மிலிட்டரி ஆபீஸர் , இப்ப அவர் பொண்ணோட பூனேயில் இருக்காரு. இப்போதைக்கு நான் மட்டும் தான் இந்த வீட்டில் தங்கியிருக்கங்க” என்று சொன்னான்.இன்ஸ்பெக்டர் “பக்கத்து வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கும் ரமேஷை  உனக்கு தெரியுமா?” என்று கேட்டார். “நம்ம வீட்டுலயும் எலக்ட்ரிக் வேலை செய்வான்,நேத்திக்கு முந்தைய நாள், இங்க வந்து தண்ணி மோட்டார் ரிப்பேர் செஞ்சாங்க ஐயா” என்று சொன்னான் கந்தசாமி. இன்ஸ்பெக்டர் மோட்டார் இருக்கும் இடத்தை  பார்ப்பதாக சொல்லிவிட்டு மேலே சென்றார். மேலே இரு படுக்கை அறைகள் இருந்தன, இரண்டுக்கும் மத்தியில் ஒரு பெரிய பால்கனி இருந்தது. அந்த பால்கனியில் நடுவே ஒரு கூடை தூரி மாட்டப்பட்டிருந்தது. அதன் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் ஒரு பதினைந்து வயதுப் பெண்ணின் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. பேபி  பிங்க் நிற தேகத்துடன், அழகான அகண்ட விழிகளுடன் தோளில் விழும் கூந்தலுடன், வயலட் நிற பூக்களுடன் கூடிய கவுன் அணிந்தபடி அந்த ஓவியம் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. தொலைவில் இருந்து பார்க்க நிஜமாய் ஒரு பெண் நிற்பது போல மிகவும் கச்சிதமாக வரையப்பட்டிருந்தது. சந்தேகப்படும் படி எந்த ஆட்களோ, பொருட்களோ இல்லாததால் இன்ஸ்பெக்டர் கந்தசாமியிடம் விடைபெற்றுக் கிளம்பினார்.

கிச்சனில் ஒரு மூலையில் தன் புடவை முந்தானையை வாயில் வைத்து அடைத்து அழுது கொண்டிருந்தாள் செல்வி. ரமேஷின் இறப்பு மூலம் அவளுக்கும் ரமேஷுக்கும் இருந்த உறவு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சம் அவளிடம் மேலோங்கியிருந்தது. முந்தைய நாள் சிங்காரம் குணா வீட்டுக்கு  உறங்கப் போன பின், ரமேஷைத் தன்னை பார்க்க வரச் சொல்லியிருந்தாள் செல்வி. அவன்  இன்பாவின் அறைச் சுவற்றின் மீது ஏறியதை  செல்வி அறியவில்லை. அவன் எப்படி இறந்தான் , சிங்காரம் தான் இதற்குக் காரணமா என்று நினைத்தாள். ஆனால் சிங்காரத்தின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. 

இன்பா அவள் அறையின் அருகே இருந்த பால்கனிக் கதவைத் திறந்து  ரகசியாவிடம் பேசினாள். “ரகசியா எனக்குத் தெரியும் நேத்து ரமேஷ் என்ன கனவுல துரத்தினான், அப்ப நான்  மொட்டை மாடிக்கு ஓடினேன். அவன் என் கழுத்த பிடிச்சதும், நீதான அவன கீழ தள்ளி விடச் சொன்ன… உண்மையைச் சொல்லு நீதான துர்க்கை” என்றாள். இன்பாவிற்கு திடீரென சூறாவளிக் காற்று ஆம் என்ற சத்தத்துடன் ரகசியாவின் தலையை அசைப்பது போலத் தெரிந்தது. அதே சமயம், அந்த அரக்கனின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அரவணைக்கப் படாத  இன்பாவின் உணர்வுகளுக்காக வருந்தி, அவள் ரகசியங்களை பாதுகாப்பதற்காக அமைதியாய் கைகளைக் கட்டிக் கொண்டு எதிர் வீட்டுச் சுவரில் ஓவியமாக நின்றிருந்தாள் ரகசியா!!


 

எழுதியவர்

மலர்விழி
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அமிர்தம் சூர்யா

புதிய கதை சொல்லல் . அரூபத்தை பயன்படுத்தி உளவியல் ரீதியாய், உள் ஆற்றலை வெளிப்படுத்தி ஒரு கொலை யை தற்காப்பு கருதி ஒரு சிறுமி நிகழ்த்தியதைஎழுதியுள்ளார். பாராட்டுக்கள்

Kumaran L
Kumaran L
1 year ago

எழுத்துலகில் மேலும் பல உயரங்களை அடைய “ரகசியா” பாதை அமைத்திருக்கிறாள்… பயணங்கள் புதுப் பாதையை அமைக்கட்டும். வாழ்த்துகள் தோழமையே…💐💐💐

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x