18 April 2024

ன்றைய தினம் எப்போதும் போல் சாதாரணமாகத் தான் விடிந்தது. கவட்டை மரத்திலிருந்து முதல் காகம் கரையத் தொடங்கியது முதல், வீட்டில் செவலை கூவத் தொடங்கியது முதல், இருள் சிவந்து வானம் வெளிர்ந்தது முதல் கூனி முற்றம் பெருக்கி சாணி கரைத்துத் தெளித்து அவளின் அதே கம்பிக் கோலமிட்டது முதல், கிழம் பீடியை இழுத்தபடியே சென்று குருவன் கடையிலிருந்து தூக்கில் காப்பியும் உளுந்த வடையும் வாங்கி வந்தது முதல் அன்றைய தினம் எல்லாமே சாதாரணமாகவேதான் நடந்து  கொண்டிருந்தது. நொடியன் இல்லாததைப் பற்றியோ, அவனுக்கு நேர்ந்ததைப் பற்றியோ அங்கிருந்த யாருக்கும் எந்தக் கவலையுமே இல்லை. என்னைத் தவிர… 

அவனை நினைத்து நேற்றிலிருந்து அன்ன ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் என்னையும் இதுவரை யாரும் கவனித்ததாய்த் தோன்றவில்லை. கவனித்தாலும் பெரிதாய் என்ன செய்துவிடப் போகிறார்கள்? வாயைத் திறந்தும், வயிற்றைத் தடவியும் பார்த்து, அதையும் இதையும் அரைத்து ஊற்றுவர், மிஞ்சிப் போனால் ஒரு மருத்துவரை அழைத்து வந்து ஊசி போடுவர். மனதின் வலிக்கு உடலுக்கு மருத்துவம் பார்த்தால் தீர்ந்துவிடுமா என்ன? மனது என்றா கூறினேன்? ஆம் மனதுதான். நீங்கள் சிரிப்பது புரிகிறது. ஏதோ மனிதரைப் போல மனது, வலி என்றெல்லாம் புலம்புவது உங்களுக்கு விசித்திரமாகத்தான் இருக்கும். இந்தக் கூனிக்கும் கிழத்துக்கும் கூட அப்படித்தான்

ஆடுகள் என்றாலே அறுக்கத்தான் என்றெண்ணி வளர்ப்பவர்கள், எங்களது மனம், ஆசை, விருப்பம் போன்றவற்றையெல்லாம் பற்றி யோசிக்கப் போவதில்லை. என்ன செய்வது, குட்டியாயிருக்கையில் இவர்கள் என்னைத் தூக்கிக் கொஞ்சுவதையும் நான் அவர்களிடம் பாசம் காட்டுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைவதையும் என் மீது அக்கறை காட்டி வளர்ப்பதையும் பார்த்து அவர்களுக்கும் என் மீது பாசம்தான் என்று நம்பிவிட்டேன். ஏதோ நானும் அவர்களின் பிள்ளை என்பதுபோல். என்ன செய்வது ஆறறிவு பெற்ற மனிதர்களை நம்பிச் சாவதுதான் எங்களைப் போன்ற ஐந்தறிவு ஜீவன்கள் பெற்ற சாபம் போலும்.

நொடியனும் என்னைப் போல் கிழத்தையும் கூனியையும் நம்பிக் கெட்ட பலிஆடுதான். என்னை விட, இங்கிருக்கும் மற்ற ஆடுகளையும் விட மிகுந்த பாசத்தோடு, சகல வசதிகளோடு வளர்க்கப் பட்டவன்தான் அவன். நொண்டிக் கிடா என்பதாலும் மெலிந்த தேகமுடையதாலும் அவனைக் கூடுதல் கவனத்தோடு பார்த்துக் கொள்வர். கூடுமானவரையில் கிழத்தின் கட்டிலருகிலேதான் கட்டி வைத்திருப்பார். தினமும் குளிப்பாட்டி அந்தக் கவட்டை மரத்தின் கீழிருக்கும் நொண்டிக் கருப்பனிடம் அழைத்துச் சென்று வணங்கி விபூதியிட்டு அழைத்து வருவார். பட்டியிலிருக்கும் எல்லோருக்கும் பொறாமையாகத்தானிருக்கும். ஆனால் அவனிடமிருக்கும் என்னவென்று சொல்ல முடியாத ஏதோவொன்று எனக்குப் பிடித்துப் போய்விட்டது.

ஆரம்பத்தில் அவன் உடல்வாகை எண்ணி யாரிடமும் ஒட்ட மாட்டான். என்னிடமும்தான். தேடிப் போய் அவனிடம் விளையாடுவதில் எனக்கு அவ்வளவு பிரியம். பட்டியிலிருக்கும் மற்ற ஆடுகளுக்கு அதில் விருப்பமில்லாதபோதும் எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. கிழத்துக்கும் நொடியனை அடுத்து பட்டியில் மிக விருப்பமான ஆடு என்றால் அது நான்தான். அடிக்கடி என்னை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சுவார். எனக்கு அழகி எனப் பெயர் வைத்ததும் அவர்தான். நான் செய்யும் குறும்புகளை ரொம்பவும் ரசிப்பார். பட்டியிலிருக்கும் மற்ற ஆடுகள் என்னை முட்டினாலோ, கீழே தள்ளிவிட்டாலோ கிழத்துக்கு அப்படி கோபம் வந்துவிடும். நானும் அதையெல்லாம் பார்த்து அவரது மகளாகவே மாறிப்போனேன்.

அவர் தரும் செல்லத்தைப் பார்த்து நானும் அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தேன். அதைவிட ஒருபடி மேலே நொடியன் மேல். அவனும்தான். நாளாக ஆக அவனுக்கும் என்னை ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. அவனைத் தவிர பட்டியின் பிற ஆடுகளுடன் நேரம் செலவிடுவதைத் தவிர்த்துவிட்டேன். கடைசி வரை அவனுடனே இருந்துவிட வேண்டும் போலிருந்தது. எங்களுக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது. மனிதர்களைப் போல சாதி, மதம், அந்தஸ்து, பிடிவாதம் போன்ற எந்தப் பிரச்சனையும் இல்லை எங்களுக்கு. இருவரும் ஒரே பட்டியில் வளரும் வெள்ளாடுகள். தவிர கிழத்துக்கும் கூனிக்கும் மிகவும் விருப்பமான ஆடுகளும் கூட. அதனால் நாங்கள் சேர்வதில் எந்தத் தடையும் வந்துவிடப் போவதில்லை என்பதில் இருவரும் தீர்க்கமாயிருந்தோம். எங்கள் நம்பிக்கை எங்கள் மேல் மட்டுமிருந்திருக்க வேண்டும். எங்களை வளர்த்த காரணத்திற்காக மட்டுமே இந்த மனிதர்களையும் சேர்த்து நம்பியது எங்கள் தவறுதான்

எங்களது மகிழ்ச்சி அவர்களை உறுத்தியிருக்குமோ என்னமோ! கிழம் எங்களிருவரையும் தனித்தனியே கட்டிப்போட ஆரம்பித்தார். சமயங்களில் இருவரும் பார்த்துக் கொள்ளக்கூட முடியாதபடி மறைவாய்க் கட்டிப் போட்டுவிடுவார். அவனுடனே இருந்து பழகியாதால், அவனுடனேதான் இருக்கப் போவதாய் நம்பிவிட்டிருந்தபடியால் அந்தப் பிரிவை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மனவலியால் அடிவயிற்றிலிருந்து கத்தும் போதெல்லாம் ஏதோ பருவக் கோளாறால் உடற்தேவைக்காகக் கத்துவதாய் நினைத்து கிழம் திட்டும், சமயங்களில் கையில் கிடைக்கும் முருங்கைக் கொப்பினால் அடியும் விழும்.

என்ன செய்துவிட முடியும் வாயில்லாத எங்களால்மனிதராகப் பிறந்திருந்தால் கூட எங்கள் விருப்பத்தை வாய்திறந்து கூறியிருக்க முடியும். அவர்கள் எங்கள் மீது காட்டும் வன்முறையை கூடுமான வரையில் அவர்களுக்கு புரிய வைத்திருக்க முடியும். வளர்த்தவர்கள் மேல் பாசமிருந்ததால் எங்களுக்கு வலிப்பதைக் கூட அவர்களிடம் தெரியப்படுத்த முடியாத, வாயில்லாத, பாவப்பட்ட ஆடுகளாகிப் போனோமே.. அவனாலும் வேறென்ன செய்துவிட முடியும் இந்த மனித வன்முறையை எதிர்த்துப் போராட வலுவில்லாத நொண்டி ஆடு

இவ்வளவு சோதனையிலும் ஒரே ஒரு ஆதரவென்றால் நானிருக்கும் இதே பட்டியில்தான் நொடியனும் இருக்கிறான், அடி, உதை வாங்கிய போதும் அவ்வப்போது நான் எழுப்பும் சத்தத்திற்கு பதில் சத்தம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பது மட்டும்தான். ஆனால் அந்த ஆதரவையும் நாசமாக்க வந்தது ஒரு அரக்கஞாயிறு. நொண்டிக் கருப்பனுக்கு நொண்டி ஆட்டைப் பலியிடுவதாய் வேண்டிக் கொண்டாராம் இந்தக் கூறுகெட்ட கிழம். அதுதான் அந்தக் கோயில் மரபாம். மண்ணாங்கட்டி. சென்ற வருடம் கூனி காமாலையில் படுத்தபோது கிழம் வேண்டிக் கொண்டாராம். நொடியனைப் பலியிடுவதாய். சம்பந்தப்பட்டவர்களின் விருப்பமோ சம்மதமோ இல்லாமல் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி முடிவெடுப்பதற்கு வளர்த்தவர்களுக்கு மட்டுமல்ல, அந்த நொண்டிக் கருப்பனுக்கும்தான் என்ன உரிமை இருக்கிறது? இதற்குத்தான் இத்தனை ஆசையாய் ஊட்டி ஊட்டி வளர்த்தாரா? இன்று இந்த இழப்பில் நான் சம்மந்தப் பட்டிருப்பதால் புலம்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரையில் எத்தனையோ தடவை கையில் காசில்லாமல் இதே பட்டியிலிருக்கும் ஆடுகளை எங்கள் கண்முன்னே வெட்டிக் கறியாக்கி காசு பார்த்திருக்கிறார். வளர்த்த கடனுக்காக எத்தனையோ ஆடுகள் அவர் காட்டிய இடத்தில் கழுத்தை நீட்டி தங்கள் ஆசை, விருப்பம், கனவு எல்லாவற்றையும் முடித்துக் கொண்ட போது எனக்கு விளங்கவில்லை. என்னைப் போலவே வெட்டுப்பட்ட அந்த ஆடுகளை எண்ணி ஒவ்வொருமுறையும் பட்டியிலிருக்கும் ஏதோ ஒரு ஆடு துடித்திருக்கும் என்று இன்றுதான் புரிகிறது.

காலையிலேயே வந்து நொடியனைக் குளிப்பாட்டி, நொண்டிக் கருப்பனிடம் அழைத்துச் சென்றவர்கள் அவனுக்கு மாலை அணிவித்து, திலகமிட்டு மரியாதை செய்தனர். மனிதர்களது மரியாதைகளின் மதிப்பும் நோக்கமும் ஆடுகளுக்கு அறுபட்ட பின்புதான் தெரிய வருகிறது. ஆனால் நேற்று நொடியனுக்கு முன்பே எனக்குத் தெரிந்துவிட்டது. தான் உயிரில்லாத ஒரு கல்லுக்கு கொடுத்த வாக்கிற்கு பயந்து ஒரு உயிரின் வாழ்வையும் கனவையும் அழிக்கப் போகிறோம் எனும் குற்ற உணர்வு எதுவுமின்றி தன் ஆசைப் பிராணி நொடியனைக் கொல்ல ஆயத்தமானார் கிழம். கூனி அந்த முருங்கைக் குலையை நீட்ட, அந்த நொடியிலும் அவளைப் பாசமாய்ப் பார்த்தபடி கழுத்தை நீட்டியபடி குலையைக் கவ்வ முயன்ற நொடியன் கழுத்தை குறி வைத்தபடி வெட்டறிவாளை ஓங்கினார் கிழம். இந்த இழிபிறவிகளை நம்பிக் கழுத்தை நீட்டும் ஆடுகளுக்கு அவர்களது கஷ்டத்தைச் சொல்லி அழும் வாய்ப்பு கூட கிடைக்கப் போவதில்லை, நொடியனைப் போல் அறுபட்டதும் துடிதுடித்து இறப்பது மட்டுமே செய்யமுடியும்.

இதோ இந்தக் கவட்டை மரத்தின் கீழ் கல்லாய் நிற்கும் நொண்டிக் கருப்பனின் பேர் சொல்லி எங்கள் கனவுகளை ஒரே வெட்டாய் வெட்டி வீசிய கிழம், எந்த ஒரு குற்றவுணர்வுமின்றி நடமாடிக் கொண்டிருக்கிறார். அவர் ஆசையாய் வளர்த்த நொடியனுக்கு முருங்கைக் குலை நீட்டி அறிவாள் ஓங்கும் போது கூடத் தோன்றவில்லையா அவருக்கு? இத்தனை நாளும் வளர்த்த பாசம் ஒரு நொடி கூடவா கண்முன் வராமல் போயிருக்கும்? என் கண்முன்னே இந்தப் பாவத்தைச் செய்த பிறகும் கூட அதை எண்ணி ஒரு நொடி கூடவா வருந்தாமலிருக்க முடியும்? கழுத்தறுபடப் போகும் நிலையில் நொடியன் என்னவெல்லாம் நினைத்திருப்பானோ? என்னைப் பற்றியும் நினைத்திருப்பானோ? இல்லை ஆசையாய் வளர்த்தவரது குரூர குணத்தை எண்ணி வேதனைப்பட்டிருப்பானா? வெட்டுண்டபோது வலியால் துடித்திருப்பானேஎதுவும் இவர்கள் மனத்தில் உறுத்தப் போவதில்லை

எதிர்க்கும் பலமில்லாத ஊனமான ஆட்டை வீழ்த்தியதில் இந்தக் கிழத்துக்கு அப்படியொரு மகிழ்ச்சியா? அந்த நொண்டிப் பலியை ஏற்றுக் கொண்டுதான் இந்த 75வயதுக் கிழத்துக்கு நல்லது செய்யப் போகிறாரா இந்த நொண்டிக் கருப்பன்?

நொடியனைக் கொன்றதோடு நில்லாமல், அடுத்த பாவத்திற்கும் தயாராகிவிட்டார் கிழம். கடந்த 2, 3  நாட்களாய் கத்திக் கொண்டிருந்த எனக்கு இணை சேர்க்க ஆஜானுபாகுவான ஒரு கிடாயை அழைத்து வந்து கட்டி வைத்திருக்கிறார். பேரம் பேச வரும் மனிதர்களின் தொடுதலல்ல, அவர்களின் பார்வையைக் கூட அருவருப்பாய் பார்க்கக் கூடிய எனக்கு விருப்பமேயில்லாத ஒரு இணையை கூட்டி வந்து அது எனது தேவைக்கென வாதிடுவோரை என்னவென்பது?

என் அடிவயிற்றிலிருந்து எழுந்த குரலானது நொடியனைப் பிரிந்த துக்கத்தில் எழுந்தது. மனத்தேவைக்கும் உடல்தேவைக்குமான வேறுபாடறியாத உங்களிடம் வாயிருந்தாலுமே கூட என்னால் சொல்லிப் புரிய வைப்பது இயாலாத ஒன்றுதான். தன்னால் ஏற்றுக் கொள்ளவே இயலாதவை நிகழும் போது அதைத் தவிர்க்கவேண்டி மனிதர்களைப் போல் தற்கொலை செய்து கொள்ளும் குடுப்பனை கூட ஆடுகளுக்கு இல்லாமல் போய்விட்டது. வளர்ப்பது வெறும் ஆடல்ல, ஓர் உயிர் என்பதைப் வளர்ப்பவர்கள் புரிந்து கொள்ளும் வரை வளர்த்தவர்களின் மகிழ்ச்சிக்காக வளர்த்தவர்களாலே வெட்டப்படுவதும், இணை சேர்வதுமே எங்களைப் போன்ற ஆடுகளின் சாபம் போலும். பிடித்தோ பிடிக்காமலோ என் விருப்பமில்லாமலே நீங்கள் செய்து வைக்கப் போகும் கேவலத்தை அனுபவித்துச் சாவதைத் தவிர வேறெந்த வழியுமில்லாத இந்த அழகியின் அழுகை, உங்கள் அடுத்த வேண்டுலின் போது நினைவுக்கு வரட்டும்


 

எழுதியவர்

ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
விருதுநகரைச் சார்ந்த ராஜேஷ் ராதாகிருஷ்ணன், பொறியியல் பட்டதாரி. தற்போது ஆந்திர பிரதேசத்தில் பணிபுரிகிறார். “கருப்பட்டி மிட்டாய்” எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி இருக்கிறது.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Viji
Viji
1 year ago

Nice

Karthick
Karthick
1 year ago

Nice story brother …..

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x