பாம்பின் கால்


பெண்ணின் நெருக்கத்தில் காமத்தின் கொந்தளிப்பு ஆணுக்குமட்டுமான சாபமா !”

மழை நாட்களில் ஜன்னலோர பேருந்துப் பயணங்கள் அலாதியான இன்பம் கூட்டுபவை. எனக்குக் குளிரும் ஈரமும் ஆகாது என்றாலும் மழைப் பயணங்கள் பறத்தலின் பரவசத்தை அள்ளித்தருபவை. அதிலும் தெப்பலாக நனைந்த அழகிய பெண்ணொருத்தியின் அருகாமையில் பயணம் என்பது மடிமேல் சொர்க்கம்தான்.

நான் பயணித்த பேருந்தில் ஒரு நிறுத்தத்தில் அவசரமாய் ஓடி வந்து ஏறிய பெண் என் அருகில் இருந்த இருவருக்கான இருக்கையில் நான் ஜன்னலோரம்  ஒதுங்கிக் கொண்டு இடம் விட அதில் தொப்பென்று உட்கார்ந்தாள். கூட்ட நெரிசலில் தனக்கு உட்கார இடம் கிடைத்த மகிழ்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவள் அப்படி விச்சிராந்தையாக உட்கார்ந்தவுடன் எனக்குள் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அவள் உட்கார்ந்த நொடி முதல் தான் மழையில்லாத சமயம் வீட்டிலிருந்து கிளம்பியதாகவும் மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்து திடீரென்று மழை வலுத்துப் பெய்ததில் தான் தெப்பலாக நனைந்து விட்டதாகவும் என்னிடம் சொன்னாள்.

அதைத் தொடர்ந்து அவள் ஏதேதோ பேச ஆரம்பித்து விடாமல் பேசிக்கொண்டு வந்தாள். இடி மின்னலுடன்  பெய்த மழையில் அவள் பேசுவது எதுவும் சரியாக எனக்குக்  கேட்கவில்லை. என் காதுகளுக்குக் கூர்மை குறைவு அதனால்தான் என்று நான் சமாதானம் செய்துக்கொண்டேன்.

ஆனால் என் கண்களின் கள்ள மேய்ச்சலை சாதுர்யமாய் மறைத்துக்கொண்டு அவளின் ஈரமான உடலை மொய்க்க ஆரம்பித்திருந்தேன். ஆஹா என் கண்களுக்குத்தான் எவ்வளவு  அபார கூர்மை என்று என்னைப் பாராட்டிக்கொள்ள மறக்கவில்லை . 

அவள் உடலின் மீது முத்துத்துளிகளாய் மொட்டு கட்டியிருந்த மழைத்துளிகள்……. அவைகளில் தெரிந்த அவளது மெல்லிய  தோலின் கண்ணாடி பளபளப்பு  என்னை நெட்டுயிர்க்கச்செய்தது.

எவனுக்கு வாய்த்ததோ இந்தப் பளிங்குச்சிலை என்று நான் வாய் பிளந்து லஜ்ஜையின்றி அவளை முழுவதுமாக  இரசிக்க ஆரம்பித்திருந்தேன் .

அவள் விடாமல் எதையோ சொல்லிக்கொண்டு வந்தாள்.

அந்தப் பேருந்தின் நெரிசலில் நான் ஒதுங்கி அவளுக்கு இடம் கொடுத்ததற்கு நன்றி பாராட்டுவதாகத்தான் என்று அவள் பேச்சை நான் எடுத்துக்கொண்டேன்

அவளின் உடைகளில் இருந்த ஈரம் பட்டு அந்த இரண்டு பேர் அமரும் சீட் நனைந்து நீர் வழிய ஆரம்பித்தது.

எனக்கென்னவோ அவளிடமிருந்து காற்று குளிர்ந்து வருவதாகப்பட்டது. இது அசௌகரியமாக படாத அருமை எப்படி நேர்ந்ததுஎனக்கு குளிரும் மழையும் அலர்ஜிஆனால் இந்தப்  பெண்ணும் மழை நனைத்த அவளின் குளிர் உடலும் ஒரு வெப்பத்தைக் கிளப்பியது பெரும் அதிசயம். 

மனைவி விளையாட்டாக குளித்த தலை முடியை என் முன்னால் கவிழ்த்து நிமிர்த்திக், அதிலிருந்து தெறிக்கும் பூந்தூறலான நீர்த்திவளைகள் எனக்குக் கடும் குளிராய் இருப்பதாக அவளைத்  தள்ளிப் போகச்சொல்லி சலித்துக்கொள்ளும் எனக்கு, இந்தக் குளிர்வெப்பம் ஒரு பரவசமாய் இருந்தது. 

நான் அவள் பேசுவது எதையும் காதில் வாங்காமல் மையமான ஒரு சிரிப்பை முகத்தில் ஒட்டியபடி பயணித்தேன்.

என் மனம் கண்ட படிக்கு அவளை இரசிக்க ஆரம்பித்ததின் அடையாளமாய் என் தொடைகள் இறுகின.  எனக்கு இந்த அவஸ்த்தை இன்பமாக இருப்பதை அவள் அறிந்து விடுவாளா என்ற சந்தேகம் அடிக்கடி எழுந்தது.

நான் அவள் முகத்தை உற்றுப்பார்த்து நிச்சயப்படுத்திக் கொண்டேன்அப்படி எந்த விபரீதமும் அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லைஅவளின் இயல்பு மாறா அந்தப் பேச்சு பயணம் முழுவதும் தொடர்ந்தது ஒரு சௌகர்யமாக இருந்தது.

அவள் முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த முடி இழைகளை மெல்ல ஒதுக்க முயற்சித்துத் தோற்ற அவளின் தோல்விகள் எனக்கு பெரிய பரிதாபத்தை கொடுத்தன. 

அவளுக்கு உதவ எத்தனித்த என் விரல்களை அடக்க பெரிய பிராயத்தனங்கள் செய்ய வேண்டியிருந்ததுஅவள் அடிக்கடி என்னைத் திரும்பிப்பார்த்து அவள் பேசுவதை நான் கேட்கிறேனா என்பதை நிச்சயபடுத்திக் கொள்வது போல இருந்தது

நான் அவள் அறியா வண்ணம் ஓரக்கண்ணால் சேலை விலகியிருந்த அவளது இடுப்பின் வெளிர் சிவப்பில் என்னை இழக்க ஆரம்பித்திருந்தேன். என் கண்கள் காமத்தின்பால் வசப்பட்ட மயக்கத்தில் லேசாக மூடி மூடித்திறந்தது

பேருந்துப்பயணத்தில் கிளரும் காமம் தணிக்க எங்காவது வகுப்புகள் எடுக்கப்படுகிறதா என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் யோசிக்க ஆரம்பித்தேன்.

பெண்ணின் நெருக்கத்தில் காமத்தின் கொந்தளிப்பு ஆணுக்கு மட்டுமான சாபமா என்ற கேள்வியும் என்னைக் குடைந்தது. 

அதே சமயம்  ஈரச்சேலை இறுகிப்பிடித்திருந்த அவளது தொடைகளின் வனப்பும் அவை அவள் கால்களின் உள் சொருகி நினைவுப்படுத்திய அவளது அந்தரங்க உருப்பின் பரிணாமம் என் மனதில் காட்சியாக  விரியும் அபாயத்தை கட்டுப்படுத்த நான் சட்டென்று நகர்ந்து அவளைத் திரும்பி உற்றுப் பார்த்தேன். 

அதே சமயம் அவளும் என்னைத் திரும்பிப்பார்த்தாள். எங்கள் கண்கள் நொடிக்கும் குறைவான நேரம் சந்தித்து மீண்டன. அவள் உதடுகளில் சிரிப்பு மாதிரி ஒரு விரிப்பு ஒட்டியிருந்தது. அவள் முகம் சோர்ந்து கண்களில் மெல்லிய சோகம் ஒரு நலுங்கிய கீற்றாக ஒளிர்ந்தது . சோகம் ஒளிரும் கண்கள்தான் எவ்வளவு அழகிய வலியை சுமக்கின்றன என்று நான் சிலாகித்து இரசித்துக்கொண்டிருந்த சமயம் எனக்குள் இன்னொரு புரிதலும் மின்னல் மாதிரி தெறித்து அடங்கியது .

 அவளின் அந்த நைந்த சிரிப்பில் எனக்குப் புரியும்படி ஒரு சிறிய வலிய தகவல் பொதிந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. அல்லது நான் அப்படி புரிந்துக் கொண்டேன் என்று நினைக்கிறேன். எது எப்படி ஆனாலும் எனக்குள் ஏற்பட்ட கொந்தளிப்பு போல அல்லாமல் எனது அருகாமை அவளுக்குள்ளும் சில அவஸ்த்தைகளை ஏற்படுத்தியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம் . அல்லது அதே போன்ற நெகிழ்வை அவளும் உணர்ந்திருக்கலாம். அவளுள் நிகழும் அவஸ்த்தையைக் கடக்கவே அவள் விடாமல் என்னுடன் பேசிக் கொண்டு வந்திருக்கிறாள். இப்படிப் பேசிக்கொண்டிருப்பதின் மூலம் என்னை வரம்பு மீறாத கட்டுக்குள் வைக்கும் தந்திரமும் இருக்கலாம். அல்லது அவள்  தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவான முகாந்திரத்தில் இந்த பேச்சு அவளுக்கு உதவியிருக்கலாம் . ஒரு தீர்க்கமான தெளிவு எனக்குள் ஏற்பட்டது. தவிர்க்க முடியாத நெருக்கடிகளில் சிக்கும் ஆணும் பெண்ணும் ஒன்றே என்னும் புரிதல் எனக்குள் நிகழ்ந்த நொடி மிகவும் அற்புதமானது. 

இப்பொழுதும் மழை வலுத்துப் பெய்துக் கொண்டிருந்தது.  மழைச் சத்தம் ஜோவென்று பேரிரைச்சலாக என் காதுகளை அடைத்ததுஆனாலும் அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் துல்லியமாய் என் காதுகளில் விழுந்தனநான் அவற்றை உற்சாகத்துடன் கேட்க ஆரம்பித்தேன்என் மனதில் புயல் ஓய்ந்தது. அவள் இருக்கையில் சற்றே சரிந்து சௌகர்யமாய் உட்கார்ந்து பேச ஆரம்பித்திருந்தாள். நான் உற்சாகமாய் அவள் பேசுவதை கேட்க ஆரம்பித்தேன் . மழை நாளின் சாபம் வரமாகியது.


  Painting Courtesy :  Anzuman Rahman

Average Rating

5 Star
100%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “ பாம்பின் கால்

  1. மிகவும் அற்புதமான எழுத்து முதலில் இருந்து கடைசி வரையில் வழுக்கிக் கொண்டு போகிறது. நானே அந்தப் பெண்ணுடன் அந்தப் பேருந்தில் பயணிப்பது போலவும் உணர்ந்தேன். பெண் காமம் நம் இலக்கிய உலகில் விரித்து எழுதப் படுவதில்லை. அது பாவம் என்றாகி விட்டது. ஆண் இயங்குபவனாகவும், பெண் இயக்கப் படுபவளாகவும் மட்டுமே அறியப் படுகிறது. இதில் பெண் எதையும் துய்ப்பதில்லை என்றே காலங்காலமாக நமக்குக் கற்பிக்கப் பட்டிருக்கிறது. எனவே ஆணின் பார்வையில் தென்படும் காமம் அவளுக்கு மிக சாதாரணமாகப் படுகிறதோ? அதை சிறப்பு என்று கூட மற்றவர்கள் எடுத்துக் கொள்கிறார்களோ என்னவோ..

  2. கதையை வாசித்து அது குறித்து விரிவாக எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கதைக் குறித்து கலகம் இணைய இதழில் நான் கருத்து வழங்கியுள்ள வீடியோவும் வெளிவந்துள்ளது. நேரமிருக்கும்பொழுது பாருங்கள். நன்றியும் அன்பும் 🙏🏻💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page