28 March 2024

புழக்கடையில் ஆங்காங்கு இடைவெளி விட்டு வெயில் காய்ந்து கொண்டிருந்தது. வேப்ப மரம் தண்னென்று நிழலும் தந்து குப்பையாக சருகுகளையும் வாரியிறைத்துக் கொண்டிருந்தது.

அப்போது, ஒரு வருடத்திற்கு முன் அடித்த கோபி நிறப் பூச்சினை அங்கும் இங்குமாக உதிர்த்து பாசி படர்ந்திருந்த காம்ப்பவுண்ட் சுவரின் அந்தப் பக்கத்தில் இருந்து ஒரு குரல் கரகரப்பாக ஒலித்தது.

“அது இன்னா, அவளையே நம்பினு கீற, அவ தான் இரண்டு நாளா இம்ஃபர்மேஷன் கொடுக்காம வேலைக்கு வராமயே கீறாளே, இம்மாம் பாத்திரத்த தொலக்கி, ஊடு கூட்டி தொட்ச்சு, நாளிக்கிம் வரலன்னா, துணி தொவச்சி நீ இன்னும் எவ்ளோ வேலை செய்யனும், நா வோண்ணா இன்னிக்கு பாத்ரம் தொலக்கி தரவா?” பட்டம்மாளின் கேள்விக்கு புன்னகையையே பதிலாகத் தந்த திவ்யா, புழக்கடையில் கிடந்த மிச்ச பாத்திரங்களை தேய்த்தபடியே பட்டம்மா குரலில் பொறாமையுடன் குறிப்பிட்ட அவளை, அது தான் சுசி என்ற சுசீலாவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள். பட்டம்மாள் அடுத்த வீட்டில் வேலை பார்ப்பவள். பல லருடங்களாக சுசி இவள் வீட்டில் வேலை செய்வதால் அவளுக்கு இங்கு கிடைக்கக் கூடிய சலுகைகளையும் அனுகூலங்களையும் எண்ணி எண்ணி மாய்ந்து தொடர்ந்து அவள் மேல் பொறமை கொள்ளக் கூடியவள்.

பட்டம்மாள் சொன்னது போல அப்படியெல்லாம் சாதாரணமாக சுசியை விட்டு விட முடியாது. இருபது வருடங்களாக திவ்யாவின் வீட்டில் தொடர்ந்து வேலை பார்ப்பவள். முன்பு அப்பா இருந்த போதில் இருந்து வேலை பார்த்தவள். பத்து வருடங்களுக்குப் பிறகு அப்பா இல்லாமலாகி அம்மா மட்டும் இருந்த போதும் வேலை பார்த்தவள். திவ்யாவுக்கு திருமணமாகி பத்து வருட இடைவெளியில் இரு குழந்தைகள் பிறந்தபோதும், அவள் அண்ணனுக்கும் திருமணமாகி அவன் மனைவியுடன் டெல்லியில் செட்டில் ஆகி விட்ட காலத்திலும், திவ்யா இடமாற்றம் காரணமாக சென்னைக்கு அம்மா வீட்டிற்கே குடி வந்த இந்த பத்து வருடங்களும் பின்னர் கடைசியாக அம்மா போன பின்பும் பத்து வருடங்களாக வேலை செய்பவளை சொல்லாமல் இரண்டு நாட்களாக வேலைக்கு வரவில்லை என்ற காரணத்திற்காக, வேலையை விட்டு நீக்குவதோ, இல்லை வேறு ஒருவரை வேலைக்கு வைப்பதோ சாத்தியமான ஒன்றில்லை.

திவ்யாவின் இரண்டு பிள்ளைகள் வளர்ந்ததிலும் சுசிக்கு பங்கு உண்டு. அனிருத் கொலுசுச் சத்தம் கேட்டால் கைக்குழந்தையாக இருக்கும் போது எழுந்து விடுவான் என்ற காரணத்திற்காக வரும்போதே அவள் ஆசை ஆசையாக அணிந்திருக்கும் முத்துக்கள் நிறைந்து ஒலிக்கும் ஜிலேபி கொலுசை வாசலிலேயே கழட்டி பைக்குள் போட்டுக் கொண்டு விடுவாள். அவன் வளர்ந்த பின் சுசியை மரியாதை இல்லாமல் பேசும் தருணங்களில் இந்த விஷயத்தை திவ்யாவிடம் சொல்லிச் சொல்லி அங்கலாய்ப்பாள். ஆனால் அதில் ஏக்கம் மட்டுமே தொனிக்கும். தர்ஷினிக்கு இது வேறு மாதிரியில் நடைபெறும். அவள் எப்படி குழந்தையாக இருக்க சொல்லோ சுசி மடியில் இட்டு ஆட்டினால் மட்டுமே தூங்குவாள். சுசி கையால் மட்டுமே க்ரைப் வாட்டர் குடிப்பாள் போன்றவை முடிந்த வரைக்கும் மீள் நடிப்பு உருவாக்கம் செய்து காட்டப்படும். குழந்தைகள் வழக்கம் போல இவற்றை அலட்சியம் செய்பவர்கள். ஆதலால், இத்தனை அங்கலாய்ப்பு நாடகத்தின் ஒற்றைப் பார்வையாளர் திவ்யா மட்டுமே.

பட்டம்மாள் சொன்னதற்கு மாறாக திவ்யா சுசிக்கு என்னவாகி இருக்கும் என்று சிந்திக்கத் தொடங்கி இருந்தாள். சுசி சொல்லாமல் வேலைக்கு லீவு போடும் வகையினைச் சார்ந்தவள் அல்ல. அதிகாரமாக முன்கூட்டியே சொல்லி விட்டு, இல்லை முன்சொல்ல முடியவில்லை என்றால் கூட காலை ஆறு மணிக்கே அலைபேசியில் அழைத்து சொல்லி விட்டு தான் உடல் நிலை சரியில்லை என்றாலும் லீவு போடுவாள். அதிலும் இப்போது அவளது ஒரே மகளுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பூ வைத்து விட்டுப் போனதில் இருந்து இன்னும் சரியாக, நேரம் தப்பாமல், நாள் தப்பாமல் வேலைக்கு வரத் தொடங்கி இருந்தாள். பின் என்ன, திவ்யாவிடம் ஐம்பதாயிரம் கடன் கேட்டிருக்கிறாள் மகள் கல்யாண செலவிற்காக. வராமல் இருந்து திவ்யா இல்லை என்று சொல்லி விட்டால் பணத்தினை எப்படி ஏற்பாடு செய்வது என்ற பயமும் ஒரு காரணம். திவ்யா அவ்வப்போது திட்டினாலும் இது மாதிரி முக்கிய காரணங்களுக்கு எப்படியாவது பணம் தந்து விடுவாள். சம்பளத்தில் சிறிது சிறிதாக பிடித்துக் கொண்டும் விடுவாள்.

திவ்யா பக்கத்து வீட்டு வேலைக்காரி உடன் பேசிக் கொண்டு இருந்த அன்றிலிருந்து நான்காவது நாள், சுசி வேலைக்கு வந்தாள். கால்களை சற்றே அகல விரித்து, ஏதோ தொடையில் கட்டி வந்து நடக்க முடியாமல் நடப்பது போல் நடந்து வந்தாள்.

“என்னாச்சு சுசி? ஏன் ஒரு மாதிரியா நடக்கிற? ஏன் அஞ்சு நாளா வேலைக்கு வரலை? உன் இஷ்டத்துக்கு வராம இருப்பியா? ஒரு போன் பண்ணக் கூட நேரம் இல்லையா?” என்ற திவ்யாவின் தொடர் கேள்விகளுக்கு, ஒரே பதிலாய், “வந்துச்சு, எப்படின்னு தெரியலை? இப்ப பூடுச்சு, எதுக்குன்னே தெரியலை”, என்றாள் சுசி. என்ன, தத்துவம்லாம் பின்றீங்க மேடம் என்று நக்கலாய் கேட்ட திவ்யாவிடம், “ஏழு மாசமா வயித்துல இருந்துக்குது, எப்ப வந்தது ஒரு அடையாளமும் தெர்ல, சுகரு வந்தததுல இருந்து மாசமானா வந்துச்சா, வரலியா நான் ஒண்ணும் கண்டுக்கறதே கெடயாது, அந்தாள் என்னிக்காவது வந்து போதையிலே மேல உளுந்திருப்பான் போலக்கீது, நான் எதக் கண்டேன், பெரிபாளயத்தம்மா, என்ன என்னவோ நடந்து பூடுச்சு. இதோ வவுத்துல வந்துட்ச்சாம், அரகொறயா வளந்துச்சாம், அப்பறம் அபார்சனும் ஆய்டுச்சாம், இப்படி வளர்ந்தா ஒண்ணியும் தேறாதுன்னு சுத்தப்படுத்தி வுட்றோம்னு டாக்டருங்க சொல்லி வயித்த கயுவி அனுப்பி உட்டானுங்க கெவுருமென்டு ஆசுபத்ரி டாக்டருங்கோ. நாஞ்சொல்றது, நான் நடக்குறது உனுக்கு கிண்டலாக் கீது இல்ல, இருக்காது பின்ன, சிரி சிரி ஆத்தாவும் என்னெ அல்லாரும் பார்த்து சிரிக்கிறா மேரி தான வச்சு கீறா” என்று புலம்பித் தள்ளினாள் சுசி.

“அய்யய்யோ! இவ்ளோ கஷ்டப்பட்டியா? விடு இன்னும் ஒரு இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வந்திருக்கலாம்ல வேலைக்கு”, என்பதற்கு மேல் திவ்யா எதுவும் சுசியிடம் சொல்லவுமில்லை, கேட்கவுமில்லை. சுசி திவ்யாவின் குழந்தைகளின் துணிகளை சோப்புத் தண்ணீரில் ஊற வைக்கும் பொருட்டு கலர், வெள்ளை, கனமானது, கனமற்றது எனப் பிரித்து கத்திரிப்பூ நிற அரைஆள் உயர அழுக்குக் கூடையில் இருந்து எடுத்தாள்.

அந்தக் கருக்கலைப்புக்குப் பின் ஆன உடல்நிலை தேர்ச்சி சுசியிடம் தெளிவாகவே தெரிந்தது. இந்த இடைவெளியில் சித்ராவின், சுசியினுடைய ஒரே மகளின் திருமண நிச்சயம் கோவிலில் வைத்து நடந்தது. மாப்பிள்ளை அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர். இவர்கள் பொருளாதார நிலையினை விட அவர்கள் வீட்டு நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் சம்மந்தி அம்மா ஒரு மேனாமினுக்கி என்பது சுசியின் கணக்கு. ஒரு மாதம் கழித்த பின்னர் திருமணமும் நல்லபடியாகவே நடந்து முடிந்தது. தொடரும் சடங்கு சம்பிரதாயங்களுக்குப் பிறகு சித்ராவும் மாமியார் வீடான வியாசர்பாடிக்கு போய் விட்டாள். மகளின் பிரிவு சுசியை லேசாய் குழப்பமடையச் செய்து இருந்தது. அது அவ்வப்போதான அவளின் புலம்பல்களில் வெளிப்பட்டது. சம்மந்தி அம்மாவும் தான் புள்ளையப் பெத்தாங்கோ, வளத்தாங்கோ, கல்யாணம் மூய்ஞ்சோன்னே நம்ம புள்ளயவும் சேர்த்து அவங்களுக்கு இரண்டு புள்ளையாய்டுச்சு, நமக்கு உள்ள ஒண்ணும் பூட்ச்சு. இன்னா கணக்காத்தா உன்து, என்னவோ போ பவானி என பெரியபாளையம் ஆத்தாவிடம் சலித்துக் கொள்ளத் தொடங்கினாள் சுசி.

இதன் பிறகான சில நாட்களில் அதாவது சித்ராவின் திருமண பரபரப்புகள் அடங்கிய நிலையில் சுசியிடம் கொஞ்சங் கொஞ்சமாய் ஏற்பட்ட சின்னச் சின்ன மாற்றங்களை திவ்யா கவனிக்க ஆரம்பித்தாள். அதாவது, பெரும்போக்காய் போகக் கூடிய, எதையும் அவ்வளவாக கவனிக்காத திவ்யா கூட கவனிக்காமல் கடக்க முடியாத விதமாய் அவை இருந்தது தான்.
எப்போதும் நேர்த்தியாய் உடை உடுத்தும் சுசியின் உடைகள் தற்போது அழுக்கு நெடி வீசின. இன்றைக்கு குளித்தாளோ என்னமோ, இல்லை பல நாட்களாய் குளிக்காமல் இருக்கிறாளோ யார் கண்டது. பேசாமலே இருப்பது, பேசும் போது இடைநில்லாமல் சதாப்தி போல பேசுவது, புருசங்காரனை அவன் இவன் என்பது. அதில் இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது அவள் தனக்குத் தானே பேசத் தொடங்கியது தான். முதலில் முணுமுணுப்பாகத் தொடங்கியது, பின்னர் உரக்க, எதிரில் யாரோ இருக்கிறார்கள் போன்ற கனிந்த உரையாடலாக மாறத் தொடங்கியது. அதில் கையை நீட்டி நீட்டிப் பேசும் உடல்மொழி வேறு. சண்டையிடுவது போல, முறையிடுவது போல.

சுசி வீட்டிற்கு வெளியே பாத்திரம் தேய்க்கும் போது சமையல் அறையில் நிற்க நேர்ந்து விடும். சில நேரம் திவ்யா விரும்பி சமையலறைப் பொழுதுகளை நீட்டித்துக் கொள்வாள். கேட்கும் விஷயம் வித விதமாக அமைவதும் ஒரு காரணம். சரி ஒட்டுக் கேட்பதில் என்ன தவறு? என மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு கேட்டால், ‘அய்யே, அல்லாத்தையும் கொட்டி உட்ட பொறவு கத்தினு கீற ‘,

‘நேத்து உங்கப்பாரு உன்னப் பத்தி கேட்டாரங் காட்டியும், நீ ஏன் அவருப் பத்தி பேசினாலே மூஞ்சி திருப்புற’,

‘உங்கக்காக்காரி நம்ம வூட்டுக்கு வரதே கெடயாது செல்லம், இன்னாவோ புருசனோடயே பொறந்து வளந்தா மாதிரியே அங்கியே குந்திகனு கீறா’, அந்தாளு என்னிக்கு குடிக்காம ஊட்டுக்கு வந்து கீறாரு? தெரியாதுங்காட்டியும் உனுக்கு?

போன்ற உரையாடல்கள் கேட்கத் தொடங்கிய வேளையில் திவ்யா லேசாக அதிரத் துவங்கினாள் .

லேசாகப் பயம் துளிர் விட ஆரம்பித்தது. அப்படித் தொடங்கிய பயம், நெஞ்சைப் பிராண்டிய, தாங்க முடியாத ஒரு நாளில் யார்ட்ட பேசுறீங்க? என்றதற்கு சுசி நந்துட்ட என்றாள். யாரு நந்து ? அங்க பாரு என்று காம்ப்வுண்டை சுட்டினாள் சுசி, காம்ப்பவுண்ட் சுவரை நோக்கி திரும்பிய திவ்யா பார்க்க அங்கு யாருமில்லை, சுசி அவ்விடத்தைப் பார்த்து விட்டு சூள் கொட்டினாள், “போய்ட்டியா ஷனினே, திவ்யாம்மா உனுக்கு சித்தி மேரி. மருவாதி, எஸ்பெக்ட்டு அல்லாத்தையும் உதுத்துட்டு சுத்தற போலக்கீது” என்றாள். உண்மையில், கடவுள் சத்தியமா, பெரியபாளையத்து பவானி சாட்சியாக அங்கு யாருமில்லை. விருக்கென்று வீட்டினுள் நுழைந்து விட்டாள் திவ்யா. இடது கால் சுட்டு விரல் பின்வாசல் நிலையில் நச்சென்று இடி பட்டது. வலி ஒரு கணம் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. இருக்கிற இழவு பத்தாதுன்னு இது வேறயா.

ஆரம்பத்தில் வெறும் திக்கென்று இருந்த திவ்யாவிற்கு. பின் சில நேரங்களில் படபடப்பாக இருந்தாலும் ஒரு விதமாக பழக்கமாகி விட்டது. காலையில் எட்டு மணிக்கு அலுவலகம் கிளம்பி விடும் கணவரை சபித்தாள். கொஞ்சம் லேட்டா போவக்கூடாதா, நெதமும் இந்தப் பைத்தியத்தையும் அது பேசற பேயையும் தனியா சமாளிக்க வேண்டி இருக்கு. மனதிற்குள் தான் இதை எல்லாம் பேசிக் கொள்ள வேண்டிய நிலை. வெளியே பேசினால், கணவன் இராகவன் திவ்யாவுக்கே பைத்தியப் பட்டம் கட்டி விடுவான்.

பட்டப் பகலில் பேய்ப் படம் பார்ப்பது போன்ற நிலை தான் அவளுக்கு. யாருமே இல்லாத டீக்கடையில் சுசி ஆற்றிக் கொண்டிருந்த டீயை எப்பவும் தனியாகச் சுடச் சுட குடிக்க வேண்டிய இடத்தில் திவ்யா இருந்தாள். அவளையே அடிக்கடி கண்ணாடியில் பார்த்துப் பாவத்த என்றாள். பின்பு இது ஒட்டுவாரொட்டி போல, நானும் தனியே பேசுறேனே எனத் திடுக்கிட்டு கண்ணாடி பார்த்துப் பேசுவதை பெருமுயற்சி செய்து நிறுத்தினாள்.

சுசி பின்னாடி வேலை செய்கையில் புழக்கடை பக்கம் செல்வதை அறவே நிறுத்த முயன்றாள். ஆனாலும், அது முடிகிற காரியமா என்ன? புழக்கடை மட்டுமே அவ்வீட்டினில் எக்கோடையிலும் சில்லென்று மரநிழலும், அங்கங்கு ‘சுள்ளென்று’ வெயில் அடிக்கும் இடமும். இச்சூழலை அனுபவிக்க அவ்வப்போது சில பல சம்பாஷணைகளை கேட்க வேண்டியதாகத்தான் இருக்கும்.

இந்த வழமையான வழமையும் ஒரு நாள் உடைந்தது. ‘நந்து, நீ மாமாவாண்ட பேசாம அவரு மூஞ்சியவே உத்து உத்துப் பாத்துகினே இருந்தன்னா உன்னய பத்தி அவரு இன்னா நெனப்பாரு, பொண்ணு குட்த்துருக்கோம், அந்த கவனம் வோணாமா’ ‘நீ மறந்துட்டப் போலக்குது’, உடனே திவ்யாவுக்கு திக்கென்றது, அய்யய்யோ அப்ப மாமான்னு இன்னொரு பேய் சேர்ந்துருக்கா, ஒன்னையே தாங்க முடியலை, இன்னும் எத்தனை சேருமோ தெரியலையே. இந்த சுசி முண்ட நம்ம வீட்டு புழக்கடைய பேய்ப்பண்ணை ஆக்கி வச்சிருவா போலருக்கே. அதன் பின் கழிவறை செல்லும் தருணங்களில் நந்து மற்றும் மாமா பேய்களிடம் ஸ்கூலில் வாத்திச்சிகளிடம் உச்சா போக பர்மிஷன் கேட்கும் மாணவிகளைப் போல் அனுமதி கேட்டு விட்டே செல்வாள். அவை அனுமதி மறுத்தால் போகாமல் இருந்து விடுவாயா என்ற மனசாட்சியின் கேள்விக்கு, பாவம் அதுங்க பேயிங்க, அதுகளுக்கு மனசத்தனம் வராது என அவற்றுக்கு வக்காலத்து வாங்குவாள்.

திடீரென திவ்யாவுக்கு ஒன்று உறுத்தியது. சுசி பேய்களுடன் பேசுகிறாள். சரி, ஆனால் பேய்க்கான திரைப்படங்களில் வரும் எந்த சிறப்பு சேட்டைகளும் சுசி இல்லாத வேறு எந்த நேரத்திலும், இரவிலும் கூட, நிகழ்வதாக எந்த அறிகுறியும் தெரியவில்லையே என்பது தான் அது..

சுசி வர்ற நேரம் மட்டும் தான் பேய் வர்ற நேரம் போலிருந்தது. இந்த பிரச்சனை முற்றிக் கொண்டே போனது. திவ்யா தன் மீதே சந்தேகம் கொள்ள ஆரம்பித்தாள். உடைகளை கிழித்துக் கொள்வோமோ எனப் பயந்து அணிந்து இருக்கும் புடவையைத் தொடுவதைக் கூட தடக்கென்று நிறுத்தி விடுவாள்.

இப்போதெல்லாம் அந்த நந்து வரும் நேரம் அந்த காம்ப்பவுண்டின் பக்கமே திரும்பாமல், பின்னால் யாரோ உற்றுப் பார்க்கும் உணர்வில் நடக்கத் தொடங்கினாள் திவ்யா.

ரொம்ப நாளைக்கு பிறகு, சில மாதங்களுக்குப் பின் ஒரு நாள் சுசி “திவ்யாம்மா ஒரு காப்பி குடேன்“ என்றபடி துவைக்கும் கல்லில் உட்கார்ந்தாள். ”ஒரு வருஷமாச்சு நந்து போய்” என்றாள். எச்சில் முழுங்கியபடி திவ்யா “யார் நந்து?” என்றாள். “அந்த வவுத்துலயே சரியா வளர்ச்சி இல்லன்னு அழிச்சானுகளே டாக்டருங்கோ, அந்த சின்னக் குட்டி. என் இரண்டாவது மவ தான்.“

“அப்ப அது பையன் இல்லயா? நந்துன்ற பேரப் பார்த்தா” இழுத்தபடி கேட்கும் போதே திவ்யா பயத்துடன் சுசி முகத்தைப் பார்த்த படி தான் கேள்வி எழுப்பினாள். ஆனால், ஏனோ சுசி சமாதானமாகவே, ”இல்ல இல்ல பொண்ணு, ‘நந்தினி’ன்னு பேர் வச்சிருக்கேன்.”

”ஒரு நாள் கெழமை வுட மாட்டா, நெதம் நான் சோறு போடாம அவளுக்கு எதுவும் எறங்காது, அவ்ளோ பாசம், அல்லா நாளும் எங்கூடவே நிப்பா, என்னிக்காவது சித்து புருசன் வந்தா அவரு மொகத்த உத்து உத்துப் பார்ப்பா, அவங்கப்பனுக்கும் இதுன்னா உசுரு, சித்ரா கண்ணாலம் ஆகிப் போனப் பிறகு இவ தான் எனக்கு எல்லாமே” என்றபடி சுசி காம்ப்பவுன்டை சுட்டிக் காட்டினாள். காட்டிய இடத்தினை திவ்யா ஆவலும் பயமுமாகப் பார்க்க, திரு திருவென விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது ஒரு காக்கைக் குஞ்சு. ஸாரி, ஸாரி நந்து என்ற நந்தினி.


  • தேவசீமா

எழுதியவர்

தேவசீமா
தேவசீமா
குளித்தலையில் பிறந்தவர். தஞ்சையப் பூர்வீகமாகக் கொண்டவர். பூர்வீகத்தைக் கிள்ளித் துளி வாயில் போட்டுக்கொள்வதை இனிய சடங்காக மேற்கொள்பவர். பிரபஞ்சத்தின் நடு மையத்தில் எண்ண விதைகளைத் தூவி விட்டு கனிகளாக கதைகள் விழுமெனக் கை நீட்டிக் காத்திருப்பவர்.
இவர் எழுதிய ’வைன் என்பது குறியீடல்ல’, ‘நீயேதான் நிதானன்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rani M
Rani M
1 year ago

நல்லாயிருக்கு பிரியா மா❣️

வேதா
வேதா
7 months ago

வாழ்த்துகள் மீண்டும் இது போன்று படைப்புகளை எங்களுக்கு வழங்குவீர்கள் என்று நம்பிக்கையுடம் காத்திருக்கின்றோம். மென்மேலும் வளர எனது நல்வாழ்த்துகள்

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x