நட்சத்திரக்கோட்டை

 

08

நட்சத்திரக் கோட்டை

 

 

மல்ல நடை..மயில் நடை..குரக்கு நடை..மன நடை.. என அனைத்துவகை நடையிலும் தொடர்கிரது அவர்கள் பயணம்

பாதுகாப்பு வீரர்கள் முன்னும் பின்னும் தொடர, ஸ்ரீரங்கப்பட்டிணத்திலிருந்து

தொடங்கியது  அவர்தம் பயணம்

நான்கு குதிரைகள் பூட்டிய பெரிய தொரு சாரட் வண்டியில் கம்பீரமாய்,,மைசூர் மன்னன்,…அவனருகே பிரியத்துக்குரிய ராணி..

பின் வரிசையில் மந்திரி பூர்ணய்யா…மற்றும் பிரான்ஸ் தேசத்தின் கட்டிட வடிவமைப்பாளர்கள் மிசே அரியபுத்திரி..மிசே நடேசன் –

சிந்து..பார்..அதோ தெரியும் கோபுரம் தான் பூர்னய்யவின் மேல்கோட்டை.. சரிதானே பூர்னய்யா..

-மன்னர் அறியாததா…

சன்னராயப்பட்டனத்திலிருந்து பார்த்தாலே தெரிகிரது பார்சரவணப் பெலகொலா..சிந்து அறிவாயா..இது சமணம் எனும் மதத்துக்கார்ரின் புனிதஸ்தலம்

-இதோ..வந்துவிட்டதே ஹாசனா..ஏழைகளின் குளிர்ப்பிரதேசம்.

-சுல்தான் ஹாசனாவின் சிறப்பு அறிவீர்களா.இங்கிருக்கும் ஹசனாம்பா ஆலயம்  தீபஒளித் திருநாள் மட்டுமே திறக்கப்படும்..மேலும்  அன்றைக்கு ஏற்றப்படும் அணையாவிளக்கு என்றைக்கும் அணைவதே இல்லை

-அடடா..ஆச்சர்யம் தான் இல்லையா மிசே அரியபுத்திரி..மிசே நடேசன்

பசுஞ்செடிகளில் வெண்மேகக் குவியலாய்  ரோபோஸ்டோ காபி மலர்கள் சுகந்தத்தில் தோற்குமே சந்தனமல்லியும்..ஓங்கி உயர்ந்து வானளந்த  ஓக் மரங்களில் பிணைந்திணைந்த மிளகுகொடிக் காதலியர்… பசியமிளகுச் சரங்களில் அழகின் சிரிப்பு

-சர்தார்..பட்டத்தரசி பக்கத்தில் இருந்தால் கவிஞன் அவதாரமும் எடுத்துவிடுகிரீர்கள்..-குறும்பாய்ப் புன்னகைத்தார் பூர்ணய்யா

நாணத்தில் தலை கவிழ்ந்தாள் ராணி..

மொழி புரியா விருந்தினர்களுக்கு பசுமை வழிப் பாதை மிகவும் பிடித்திருந்தது.

-கவிஞனாய் மாறவில்லையென்றால் தான் ஆச்சர்யம் ..பூர்ணய்யா.’.கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் மாந்தர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’…அறிவீர்கள் தானே..

ரோபஸ்டா மலர்கள் பூக்கத்  தொடங்கிவிட்டன..கமுகோடு காதல் சொல்லி இழைந்துப்  பிணைந்த  குறுமிளகுச் சரங்களில் பச்சை முத்துக்கள்..

-மன்னரைக் கட்டுப்படுத்தாதீர்கள் மந்திரியாரே….. மனம் இலேசான இறகு

விரைவானக் காற்று..மகிழ்ச்சி இருக்குமிடத்தில் நங்கூரமிடும் அடக்கப்பட்ட நல்மனமே மகிழ்ச்சியைக் கொண்டு வரும்

 

-உத்தரவு மகாராணி…அரசவைக் கவிஞர் ஒருவரின் பணி பறிபோய்விடுமோ என்ற ராஜாங்க கவலைதான் அரசியாரே…!

-காற்றின் எதிர்திசையில் செல்வதில்லை மலர்களின் நறுமணமும் சந்தன வாசமும் வாசப்புகையும்கூட அப்படித்தான்.ஆனால் நல்மன அறிஞனின் புகழ் பரவும் எட்டுத்திக்கும்…நறுமணப்புகை..நற்சந்தனம் ஆகியவை மறைந்து போகும்..குறையாமல் மிளிரும் நல்லொழுக்க நறுமணம் உயர்வுற்றோர் இருக்குமிடம் வரை பரவும்…இல்லையா மந்திரியாரே…!

 

பாலுபேட்டை சாலையெங்கும் பசுமை,,நுரைத்துக்கொண்டோடினாள் காவிரியின் சகோதரி ஹேமாவதி..

– ஓங்கி வளர்ந்த ‘ஓக்’ மரங்களின் உச்சியில் தேனடைச் சுவைத்து பாட்டுப் பட்டிமண்டபம் நடத்தும் வனப்புள் குழு…பழுப்புநிற காஃபிப்பழங்களின் வாசம் தூக்கல்தானெனச் சான்றளிக்கும் பழந்தின்னி வவ்வால் கூட்டம்…மென்மேகம் தவழ்ந்து விளையாடும் தூரத்து தொடர்ச்சி மலைக்கு யாரும் ..தீ வைக்காத வரை குளுமையும் அழகுமாய்க் குடகு

– நாம் இப்போது இருப்பது சக்லேஷ்பூர். அதிக குளிரும் இல்லை அதிக வெயிலும் இல்லை . விருந்தினர்களுகேற்ர ஏற்ற சீதோஷ்ணம்…. திருப்திதானே மிசே நடேசன்…

பாருங்கள் எங்கள் கானக காட்சிகளை..

வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்

 மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்..-இந்த மேலைத் தொடர் கானகம்  கானுயிர்களைக் காக்கும் ஆதித்தாய்..

அரசி சிந்து மன்னரைப் பார்ததவள் பின் அவர் விரல் நீட்டிய த் திசையை நோக்குகிறாள்:

வசியம் செய்கிறது பசியம் நிறைந்த  பச்சைமாமலை…!

பொதுக்’ கென விழுந்து துள்ளுகிறது காட்டெருமையின் இளம்புதியக்கன்று நாவால் வருடி முத்தித்து சுத்திக்கும் தாய்ப்பாசம்… எருமைக்கும் தன் கன்று பொன்கன்று

ஓரக்கண்ணால் நேரம்பார்த்து வட்டமிடுமொரு வரிப்புலி…

தன்பலமறியா ஆனைக்கூட்டம் வலசை யேகும் வனம் தாண்டியும்…

இறந்த மானைக் குதறி கடித்து சுவைக்கும் நரிகளுடன் ஓநாய்களும். ..சிறுத்தையொன்று ஒதுங்கி ஓய்வெடுக்க  மிச்ச நிணத்துக்குக்கு தாவி நெருக்கும் கொடுங்கழுகும்…

வானரமும் மந்தியும் குலவும் மரம் நோக்கி ஊறுமொரு மலைப்பாம்பு.

யாவும் நீரருந்த  எவ்விதப் பாகுபாடுமின்றி ஓடும் நதி.

-எங்கள் தேசத்தில் வேலியோரப் பலாக்கனி நாடிவரும்வேழங்கள்..தவறியும் மிதிப்பதில்லை..நெளிந்து மறையும் நாகங்களை…மேயவரும் கிராம விலங்குகள் அனைத்தையும் கொல்வதில்லை பசி கொண்ட  சிறுத்தையோ புலியோ

-உண்மை மிசே திப்பு..இயற்கையின் துலாக்கோலில் நியாய முள் பக்கம் சாய்வதே இல்லை

-ஆஹா..மிகச்சரி மிகச்சரி..மிசே அரியபுத்திரி.

கருங்கல்லும், சுண்ணாம்பும்  வெல்லப்பாகும் வண்டி வண்டியாய் வந்து சேர… கம்பீரமாய் எழுந்து நிற்கிறது. கோட்டை திப்புவின் தேவைக்கேற்ப… கனவுகள் விரிந்து கருங்கல் கட்டடமாய் மலர்கிறது. எட்டு திசைகளுக்கும் காவல் அரணாய் குன்றின் உச்சியில் ஒளிர்கிறது அந்த எண்கோண நட்சத்திரக் கோட்டை…

வாய்ப்பே இல்லை…இந்த வடிவத்தில் ஒரு கோட்டை அமைப்பினைக் கண்டிருக்க எவருக்குமே வாய்ப்பில்லை…சிறிய குன்றின் மீது கம்பீரமாய் வீற்றிருக்கும்  எண்கோண(Octagonal design) நட்சத்திர வடிவ கோட்டை

எண்கோண வடிவக் கோட்டையில் எட்டு திசைகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது….அந்த கோபுரத்தின் உள்ளாக ஒரு வீரன் ஓய்வெடுக்கும் படியாக கட்டப்பட்டுள்ளது எளிய போர்வீரனின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் திப்புவின் பெரிய மனம்…கோட்டைக்குள் நான்கு  திசைகளில் ஆயுதக் கிடங்கு…. கோட்டைக்கு எட்டு முனைகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அவர்களுக்குப் பக்கத்திலேயே பீரங்கி பிடஸ்டன் சோல்ஜர்கள் ஓய்வெடுக்க வசதியாய் ஒரு சிற்றறை.

கோட்டைக்கு உள்ளேயே வீரர்கள் தங்குமிடம் நீர்த் தேவைக்காக கிணறு.

 

இடத்தேர்வில் தான் பளிச்சிடுகிறது திப்புவின் திறனும் புத்தியும்.

பெங்களூர் மங்களூர் நெடுஞ்சாலையில், மிகச் சரியான மையத்தில்,சமவெளிப்பகுதியில் இருந்து மலைவனப்பாதை தொடங்குமிடத்தில் அமைந்திருக்கும். இக்கோட்டையில் இருந்து குடகு,தர்மஸ்தலா,உடுப்பி,சிருங்கேரி,சரவணபெலகோலா,பேளூர்,ஹளபீடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டணம் மைசூரை என எட்டுத் திசைகளையும் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

-மிசே…. தங்கள் கைவண்ணம் அங்கு கண்டேன். கல்வண்ணம் இங்கு கண்டேன்..உங்களுக்கு என்ன கொடுத்தாலும் தகும். என்ன வேண்டும் கேளுங்கள்!

– மிசே திப்பு… மெர்சி …வாசமற்ற கனிகொடாத அழகான மலர் செயலற்றவரின் அருமையானப் பேச்சு…செயல்படுவோரின் சிறந்த பேச்சு கனிதரும் அழகிய வாசமுள்ள மலர்…பயனற்ற வார்த்தைகளால்  புனையப்பட்ட ஆயிரம் கவிதைகளை விட  பயனுடைய ஒரு கவிவரி அமைதியை நல்கும்

-ஆஹா…எமது தேசத்து விருந்தினரும் கவிமொழியில் களமாடுவது பெரு மகிழ்வு..

– மிசே திப்பு….. வழக்கமாய் இந்தியக் கிணறுகளோ குளங்களோ சதுரமாகவோ, வட்டமாகவோ அமைந்திருக்கும்.

-உண்மை! மிகச்சரி

-ஆனால் கோட்டைக்குள் ஒரு குளம் வெட்ட விழைகிறேன். நாற்புறத்திலிருந்தும் வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சதுரமல்ல.

-பின்..? என்ன ஒரு புதிர்..

-புதிரல்ல… மிசே ஆசை பற்றி அல்லலுற்றேன்! இந்தக்குளம் என் தேவனாகிய கிறிஸ்து ராஜனை நினைவூட்டும் வகையில் அமைத்திருக்கிறேன்.

 

+

-இதுபோன்ற சிலுவையின் வடிவமைப்பில். தங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறேன்.

-படைப்பாளிகளுக்கு சிந்தனை முடக்கம் ஏற்படலாகாது. வடிவ திருப்தி அவசியம்! மட்டுமின்றி இது புதுமையாகவும் உள்ளதே!திருச்சிராப்பள்ளி  அருகே திரு வெள்ளரையில் ஸ்வஸ்திக் வடிவக் கிணறு குறித்து செவி வழிச் செய்தியாய் அறிந்திருக்கிறேன். எனவே தங்கள் விருப்பம்போல் வடிவமைக்கலாம். எனக்கிருக்கும் வேண்டுதல் ஒன்றுதான்… எந்த நிலையிலும் என் வீரர்கள் உணவுக்கும் நீருக்கும் அல்லலோ இன்னலோ படலாகாது. அவ்வளவே!

-அதற்கெல்லாம் அவசியமே இருக்காது மிசே திப்பு…! விரைவில் கோட்டையைப் பூரணமாக்கி உங்கள் வசம் ஒப்படைப்பேன். ஆமாம்…. கோட்டைக்கு ஏதும் பெயருண்டா…

-ஏனில்லாமல்… நட்சத்திரக் கோட்டை என்பதே சிறப்பாகத் தான் உள்ளது. உண்மையில் நான் கட்டிய கோட்டைகளில் இது நட்சத்திரக் கோட்டைதான்.

ஆனாலும்… பனிப் புகை சூழ்ந்த கோட்டையின் அழகு ரம்யமிக்கது ரமணீயமானது.பெருகி வளரும் பகைப் புகையை இந்த பனிப்புகை கோட்டை காக்குமென நம்புகிறேன்.

என் தேச மொழியான கன்னடத்திலும், அருகேயுள்ள மலையாள தேசத்தின் கவின் மலையாளத்தில் ‘மஞ்சு’ வெனில் ‘பனிப்புகை’ எனில் இஃது மஞ்சுராபாத்….என்றே அழைக்கப்படவேண்டும்

ஆம்… இன்று முதல் இது என் பிரியத்துக்குரிய மஞ்சுராபாத் கோட்டை.

– ஆம்…மஞ்சுராபாத் கோட்டையை உருவாக்கியப் பெருமை தெற்கின் புலி யென்று புகழப்பட்ட திப்புவுக்கே சேரும்.

 

-புத்தியை செலவிட்ட தங்களை விடவோ பொருள் செலவு செய்த  எனக்கு புகழ்!

ம்ஹூம்…எல்லாப் புகழும் இறைவனுக்கே…!


. அடுத்த பகுதி -09 

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page