நாய்க்குட்டியின் செல்லம்மா


செல்லம்மாவின் அப்பாவும் அம்மாவும் காலையில் வேலைக்குக் கிளம்பும் போதே, யாரோ ஒரு நம்பிக்கையான மனிதரிடம் சொல்வதைப் போலவே “செல்லம்மாவப் பத்திரமா பாத்துக்க; வீட்டுக்குப் பின்னாடி போகப் போறா; முழுச்சிட்டே இரு!” படுத்துக் கிடக்கும் நாயிடம் சொல்லி விட்டு போவார்கள். அவ்வப்போது தங்கை வீட்டுக்கு விருந்தாளியாகப் போகும் நான் இப்படியான காட்சிகளைக் கவனித்திருக்கிறேன். ஆண் குழந்தைக்காகத் தவமாய் தவமிருந்த போதும் மாறிப் பிறந்த பெண் குழந்தைதான் இந்தச் செல்லம்மா. இரண்டாவதும் மகனே வேண்டும் என்று ஆசைப்பட்ட அவளது அப்பா, இவள் இல்லாமல் இல்லை என்ற அளவுக்கு மாறிப் போயிருக்கிறார் இப்போது. பேசத் தொடங்கியதும் அவள் உச்சரித்த முதல் வார்த்தையே ‘அப்பா’ என்றால் எந்த அப்பன்தான் தோற்றுப் போகாமலிருபபான்? தனது அம்மாவே மகளாகப் பிறந்திருப்பதாகப் பெருமைப் பட்டுக்கொள்வார் இப்போதெல்லாம். அவர் காலையில் வேலைக்குக் கிளம்பும் போதெல்லாம் வண்டியின் சாவியையும் செல்போனையும் அவளாகவே எடுத்து வந்து கொடுக்க ஆரம்பித்தாள். அது அவளது அன்றாட வேலையாகவும் மாறியிருக்கிறது இப்போது. அதுமட்டுமல்ல, குடும்பமாய் உட்கார்ந்து சாப்பிடும் ஒவ்வொரு முறையும் அப்பனுக்கு மட்டுமே தட்டுத் தடுமாறி எழுந்து போய் தன் பிஞ்சுக் கைகளால் சோறு ஊட்டுவாள். இப்படியான அவளின் தன்னியல்பான  பாசத்தால் அப்பனை முழுவதும் வென்று விட்டிருந்தாள்.  இதையெல்லாம் செய்யும் போது அவளுக்கு வயது இரண்டரை அல்லது மூன்று இருக்கும்.

செல்லம்மாவின் அண்ணன் செழியனுக்கு ஆறு வயது. அவன் பள்ளிக் கூடம் போய் விடுவான். எனவே வீட்டில் செல்லம்மாவும் அவளது ஆயாவும் அந்த நாயுமே இருப்பார்கள். அந்த நாய், கிட்டத்தட்ட ஒரு சிங்கத்தின் அளவு இருக்கும். வெள்ளை நிறத்தில் இருக்கும் அதன் மீதுள்ள கருப்பு கலப்பால். உலக வரைப் படத்தில் உள்ள பல நாடுகளை நினைவுப்படுத்தும். அது விலை கொடுத்து வாங்கி வரப்பட்டதோ, அல்லது பெரிய உடலமைப்பு கொண்ட இனத்தைச் சேர்ந்ததோ கிடையாது. வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாள்கள் மாட்டுக்கறி எடுத்து தின்னும் செல்லம்மா வீட்டில் வளருவதால் கறியும் சோறும் கணக்கில்லாமல் தின்று வளர்ந்த சராசரி நாய்தான் அது. அதனுடன் பிறந்த மற்ற மூன்று குட்டிகளுள் ஒன்று, அடுத்தத் தெருவில் உள்ள பாய் வீட்டில் இருக்கிறது. ஆனால், அது இதன் சகோதரன் என்று இதற்கும் தெரியாது அந்தப் பாய் வீட்டு நாய்க்கும் தெரியாது. மற்ற இரண்டு பெண் குட்டிகளையும் யாரும் வளர்க்கத் தயாராய் இல்லை. அதில் ஒன்றைத் தெருவில் உள்ள நாய்கள் கடித்து கொலை செய்து விட்டன. மற்றொன்று எங்கே என்றே தெரியவில்லை. இவர்களது அம்மா நாய், அந்தக் கபஸ்த்தான் பக்கம் எப்போதும் யாரிடமாவது அடிப்பட்டு மிதிப்பட்டு கத்திக் கொண்டே இருக்கும். செல்லம்மாவின் வீட்டுப் பக்கம் எப்போதாவது வரும். தன் மகனை அது அடையாளம் வைத்திருக்கும். நாக்கால் நக்கும்; ஊளையிடுவது போலக் கத்தும். மகனுடன் அது எதையோ விசாரித்து விட்டு கிளம்பும். நமது வீட்டு நாய்க்கு அதுதானே அம்மா என்ற நன்றியால், அது வரும் போதெல்லாம் செல்லம்மாவின் அப்பா அதற்கும் கொஞ்சம் சோறு போடுவார். அவைகள் ஒன்றாக ஒரு குடும்பமாக வாழ நாம் எப்போது அனுமதித்தோம்? ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் குழந்தைகளை அவ்வப்போது பார்த்து விட்டு வரும் பெற்றோரைப் போல அந்த அம்மா நாய் வருவதாக நினைத்துக் கொள்வேன்.

மகனை, செல்லம்மாவின் வீடு தத்தெடுத்துக் கொண்டது போல், அந்த அம்மா நாய், அந்த மேட்டுத் தெருவையே தத்தெடுத்துக் கொண்டிருந்தது. வீட்டுக்குப் பின்னால், தெரு நாய்கள் அவ்வப்போது ஊரைக் கூட்டும் அளவுக்கு சண்டைகள் போடும். அந்தச் சண்டைகளில் மற்ற நாய்களிடம் சிக்கி இருக்கும் தன் அம்மாவை மீட்க எப்போதும் எங்கிருந்தாலும் ஓடி விடும் செல்லம்மா வீட்டு நாய். உருவத்தில் மிகப் பெரியதாகவும் வனப்பாகவும் வளர்ந்துள்ள இந்த நாயைக் கண்ட மாத்திரத்தில் அங்கிருக்கும் அத்தனைத் தெரு நாய்களும் ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடிக்கும். மகனிடம் தோற்று விட்டு ஓடும் சக நாய்களைத் தன் மொழியில் கொஞ்சம் நேரம் திட்டி விட்டு சண்டையில் தான் வென்று விட்டதாக அறிவித்து அதன் வேலையைப் பார்க்க போய் விடும்.

அது மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலும் இஸ்லாமியர்கள் வாழும் மலையடிவாரப் பகுதி. குன்றுகளால் ஆன அந்த மலையில் புல் கூட இருக்காது. மழை பெய்யும் காலத்தில் மட்டுமே பசுமை நிறத்தைக் கொஞ்சம் போர்த்திக் கொள்ளும். வேலூர் கோட்டையைக் கட்ட அந்த மலையில் இருந்துதான் கற்களை எடுத்தார்கள் என்று மலையேறும் எவரும் சொல்லி விடுவர். கோட்டையின் கட்டுமானத்திற்குச் செதுக்கப்பட்டு பயனற்றுப் போன உடைந்த பல கற்பாறைகள் மலை மீது இன்னும் இருப்பதைப் பார்க்கலாம். அந்த கற்களின் வடிவங்களும் கோட்டையில் உள்ள கட்டிட அமைப்புகளும் ஒத்திருப்பதும் கோட்டைக்கு மிக அருகில் இருக்கும் ஒரே மலை அதுதான் என்பதுமே போதுமான சான்று. அந்த மலைதான் கோட்டையின் மிச்சம் என்று.

அதுமட்டுமின்றி அந்த மலை மீது கோட்டையின் பாணியில் சில கட்டிடங்களும் இருக்கின்றன. மரங்களற்ற அந்த மலையிலிருந்து உணவுக்காகக் கீழே இறங்கும் குரங்குகள், வீடுகளுக்குள் புகுந்து வேண்டியதைத் தின்று விடும்; அட்டகாசம் செய்யும். அப்படி வரும் குரங்குகளுக்கு ஒரே எதிரி செல்லம்மா வீட்டு நாய்தான். வெளியாட்கள் யார் வந்தாலும் அதனிடம் பதில் சொல்லி விட்டுதான் நுழையவே முடியும். அது கடிக்காது. ஆனால் பயங்காட்டும். நாய்களும் நாடு பிடிக்கும் தெரியுமா உங்களுக்கு? மற்ற தெருவில் உள்ள நாய்களைத் தம் தெருவுக்குள் அனுமதிப்பதில்லை அவை. நம்மை விட தெருவின் எல்லையை எப்போதும் நினைவில் வைத்திருப்பவை அவைகள்தான். நமக்குதானே அது தெரு? அவைகளுக்கு அது வீடு. இல்லை நாடு. பழைய சோறு கிடைக்கும் நாடு. பட்டினி நிறைந்த வறுமை நாடு. அவைகளின் நாடுகளில் எப்போதும் சண்டைகள் ஓய்வதே இல்லை.

அந்த மலையடிவாரப் பகுதிக்கு மட்டுமல்ல, அந்த மலைக்குமே செல்லம்மா வீட்டு நாய்தான் ராஜா. மலைகளில் மேய வரும் பாய்மார்கள் வீட்டு ஆடுகளைக் கூட்டாகச் சேர்ந்து வேட்டையாடித் தின்பது அங்கிருக்கும் தெரு நாய்களின் வினோதமான பழக்கம். அவைகளை அங்கிருந்தவர்கள் மலை நாய்கள் என்று சொல்வார்கள். மாதத்திற்கு ஒரு ஆட்டையாவது காணவில்லை என்று உரிமையாளர்கள் மலைகளில் தேடுவார்கள். ஆடுகளை வேட்டையாட வரும் மலை நாய்களைச் செல்லம்மா வீட்டு நாய் விரட்டுவதால், அந்தப் பகுதியில் உள்ள பாய்மார்கள் மத்தியிலும் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்தது. பணம் கட்டி சூதாடும் அந்தப் பகுதி இளைஞர்களாலும் கஞ்சா அடிக்க வரும் சமூக விரோதிகளாலும் பகலெல்லாம் அந்த மலையின் புதர்களிலும் பாறை மறைவுகளிலும் கூட்டம் இருக்கும். அந்தப் பகுதிப் பெண்கள், இயற்கை உபாதைகளுக்காக ஒதுங்கவே கூச்சமும் பயமும் கொள்வார்கள். இந்தப் பயத்தின் காரணமாகவே செல்லம்மாவைத் தனியாக விட்டு விட்டு வேலைக்குப் போகும் அவளது அம்மாவும் அப்பாவும் நாயிடம் அவளைப் பார்த்துக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டு போகிறார்கள்.

செல்லம்மாவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது அந்த நாய்க்கு அவ்வளவு எளிதான வேலை  இல்லை. வேலை முடிந்து அவர்கள் வர மாலை ஆகும். அதுவரை செல்லமாமாவை அவளது ஆயாதான் பார்த்துக் கொள்கிறார் என்றாலும், ஆயாவை விடப் பல மடங்கு விழிப்பாக இருந்து பார்த்துக் கொள்வது அந்த நாய்தான். அவள் வீட்டை விட்டு வெளியே விளையாடப் போனால் அவளுக்கு முன்னால் போய் அந்த இடத்தில் நின்று‌ காவல் காக்கும். வீட்டுக்கான எல்லை எதுவென்றும் வீட்டைத் தாண்டும் எல்லை எதுவென்றும் அந்த நாய்க்கும் தெரியும். அதை ஏமாற்றி விட்டு ஓர் அடிக் கூட அவளால் நகர முடியாது. அப்படியே ஆயா தூங்கும் நேரத்தில் செல்லம்மா வீட்டுக்குப் பின்னால் போக முயன்றால், நாய் அவளது ஆடையைக் கவ்விப் பிடித்து விடும். மூன்று‌ வயது செல்லமாமாவால் அந்த நாயின் பிடியை மீறி முன்னேறவே முடியாது.

அவள் சிறுநீர் கழிக்கப் போனாலும், கூடவே போய் அவள் வரும் வரை அங்கேயே இருந்து, அவளை முன்னால் நடக்க விட்டு அவள் பின்னால் நடந்து வரும். அவள் அழுதாலும் அடித்தாலும் தன் கண்காணிப்பை மட்டும் அது கைவிடுவதே கிடையாது. அவளை நகர விடாமல் அவளிடம் அடி வாங்கியபடி தடுக்கும் அந்தச் செயலை ஒவ்வொரு பகலிலும் பார்க்க முடியும். சத்தத்தைக் கேட்டு எழுந்து வரும் ஆயா, அவளைத் தூக்கிக் கொண்டு போவார். மற்றபடி வீட்டில் எல்லாரும் இருக்கும் போது அது செல்லம்மாவைக் கண்டு கொள்ளாது. அப்போதுதான் தூங்கும்.

மலை மீது சீட்டு ஆடவும் கஞ்சா அடிக்கவும் வரும் அந்தச் சமூக விரோதிகளைக் கண்டால், துரத்திக் கொண்டு ஓடும். அவர்கள் அந்த நாயைத் தங்களது பகைவன் என்றே நினைத்தார்கள். அவர்களின் நடமாட்டத்தை அவ்வப்போது அந்தப் பகுதிக்கே காட்டிக் கொடுப்பதாலும் அவர்களைக் கண்டாலே குரைப்பதாலும் அவர்கள் நாயைப் பகையாகவே பார்த்தார்கள். அது உண்மையும் கூட. ஒரு நாள் மாலை வேளையில், தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட வாசலில் வந்து விழுந்தது நாய். செல்லம்மாவைப் பார்த்தபடியே கடைசியாக ஊளையிட்டு தலையைச் சாய்த்தது. அது செத்த பிறகே அதற்குப் பெயர் வைத்தார்கள் “செல்லம்மா நாய்(செல்லம்மாவின் நாய்)”  என்று. உண்மையில் அது குட்டியாக இருந்த போதிலிருந்தே அதனுடையதுதான் செல்லம்மா.


– பாரத் தமிழ், வேலூர்.

 

ஆசிரியர்

பாரத் தமிழ்
M.Phil பட்டம் பெற்று தற்போது வரலாற்று ஆய்வு மாணவராக Phd படித்துக்கொண்டிருக்கிறார். குழந்தைகள் நல ஆர்வலராகவும் செயல்படுகிறார். சிறுகதை, கவிதைகளை எழுதுவதில் ஆர்வமுடைய பாரத் தமிழின் கவிதைத் தொகுப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Average Rating

5 Star
78%
4 Star
22%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

13 thoughts on “நாய்க்குட்டியின் செல்லம்மா

 1. உருவம் வேறானாலும் ஆன்மா என்பது ஒன்றுதான்…. அது மனிதன் என்றாலும், விலங்கினம் என்றாலும் ஒன்றுதான்… அன்பும் பாதுகாப்பும் தருகின்ற தாயுள்ளம்… அந்த நாயின் உள்ளம்…. கதைக்கு வலு சேர்க்கிறது…..

 2. அருமையான சிறுகதை. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. அப்படி கடவுள் இருந்து என்னிடம் வரம் கேட்டால் சற்றும் யோசிக்காமல் நாய்களுக்காகவே வரம் கேட்பேன்.

  1. மனிதர்களை விட நாய்கள் நல்குணமும் -நன்றியும் விசுவாசம் மிக்கவர்கள் . சிறப்பான கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

 3. அருமை அண்ணா ஒவ்வொரு சேரிகளிளும் ஒரு செல்லம்மா நாய் இருக்கும் ….. பழைய நினைவுகளை நியாபக படுத்துகிறது …. நமக்குதானே அது தெரு அதுக்கு வீடுதானே …..

  1. அருமையான கதை…
   வாழ்த்துகள் தோழர்…

   உண்மையில் சமூக விரோதிகளை எதிர்க்கும் துணிவு நாய்களைத் தவிர எந்த மனிதருக்கும் இல்லை…

   துணிவில்லாத நாமெல்லாம் பிழைக்கத்தெரிந்த மனிதர்கள்…..

   செல்லம்மாவின் அப்பா குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள் தோழர்….

 4. சிறப்பு ங்க தோழர்

  குறிப்பாக மொழி நடை சிறப்பாக வந்துள்ளது…..

 5. இந்த கதை,எனது பத்தாம் வகுப்பில், தமிழ் பாட புத்தகத்தில் , உரைநடைப் பகுதியில் வாசித்த கதைகளை நினைவு படுத்தும் விதமாகவும் அருமையாகவும் உள்ளது 👍👍👍

 6. தோழர் உங்களுடைய சிறுகதையை படித்தேன். கதையின் இடத்தையும் கதையின் மாந்தர்களையும் நான் முன்பே பார்திருப்பதால் படிக்க படிக்க அந்த இடங்களும் மனிதர்களும் கண் முன்னே நகர்கின்றனர்(திரைப்பட காட்சியை போல). செல்லம்மாவின் நாயின்மீது எனக்கு அன்பும் அதன் இறுதி வரியில் வலியையும் தந்தது. நாய் எளிய மனிதர்களின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான பங்கினை கொண்டுள்ளது🤍. மனிதர்களை விட நாய்கள் தான் எவ்வளவு அழகானவை ❤️

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page