மூடுபனி


பிரேமும் கிரிஜாவும் முதல் முறை கலவியில் ஆவேசமாக ஈடுபட்டு முடித்தார்கள். லயிப்பில் நீடித்து சற்று மயக்கமாக இருந்து விடவே, விலகிக் கொள்வதில் தாமதம் நீடித்தது. கிரிஜா முத்தம் கொடுத்துக் கொள்ள விழைவு காட்ட, சற்று மந்தமாக துவங்கிய அது தன்னுடைய அசலான வீரியத்தை துவங்கியதும் அவர்கள் மீண்டும் விறுவிறுப்படைந்தார்கள். உடல்கள் விலகாத நிலையில் இரண்டாம் முறை துவங்கி, முன்னைக்காட்டிலும் நிதானமாமாக ஒருவர் மற்றவரில் இருந்து கிடைக்கிற அனுபவத்தை எடுத்துக் கொண்டார்கள். பிரேம் கிரிஜாவை கிரிஜா பிரேமை தின்றது இருவருக்குமே தெளிவு. உடைகளை அணிந்து கொண்டு ஒரு வார்த்தை சொல்லாமல், கிரிஜா வெளியேறிப் போனாள். சற்று ஏமாற்றமாக இருக்கிறதா? என்ன எதிர்பார்க்கிறேன்? அவனுக்கு புரியவில்லை. படுக்கையில் இருந்து எழுந்து சன்னல் திரையை விலக்கி கண்ணாடியை இழுத்தான். அவள் தன்னுடைய ஸ்கூட்டியில் புறப்பட்டு செல்வதைப் பார்க்க முடிந்தது.

சடுதியில் நனைவது போல அறிந்தான். இல்லை, அது காற்றுதான். சுற்றிலுமுள்ள இடங்களின் திவலைகளைக் கொண்டிருந்தது. நல்ல மழை பெய்திருக்க வேண்டும். வெளியே சாயந்திரம் மொத்தமும் இருளுக்கு நழுவிக் கொண்டிருந்தது. கிரிஜா மழை பெய்து கொண்டிருந்தாலும் கிளம்பிப் போயிருப்பாள். போகும் இடங்களில் மழையாக இருக்கலாம். போவதற்குள் மழை துவங்கி நனைப்பதாகவும் இருக்கும்.

கண்ணூருக்கு செல்கிற சாலை என்றார்கள். சன்னலுக்கு அந்தப்பக்கம் வெள்ளமாக தெரிந்தது. வாகனங்கள் தங்கள் வேகத்துக்கு ஏற்ப நீரை நிறுத்திக் காட்டின. சாலைக்கு மறுபுறம் இருக்கிற தோட்டங்களில் பணிப்புகையும் கருமையும் ஒருங்கே இருந்தன. பிரேம் சன்னலை மூடி, உள்ளங்கைகளை தேய்த்து விட்டுக் கொண்டு படுக்கையில் மல்லாந்தான். ரேஸ் விட்டது போல பறந்து கொண்டிருக்கிற எண்ணங்களை தொகுக்க முனைவதற்குள் தூக்கம் சொருகியது. உல்லாசம் கொள்ள வேண்டிய ஒரு அறைதான். ப்ரோடியுசர் மீட்டிங் அமைந்து விட்டதால்  இயக்குனரின் வருகை ரத்து. அவருக்காக போட்ட அறை. இல்லையென்றால் ஒரு அசிஸ் இவ்வளவு பெரிய ரெசார்ட்டில் தங்கியிருக்க முடியாது. கிரிஜா கூட வந்து போயிருக்க மாட்டாள்.

அவளை அவன் ஒரு லொக்கேஷன் பார்க்க போனபோது சந்தித்தான். 

படத்தின் இசை அமைப்பாளராக அறியப்பட்டிருந்த கிரீஷ் ஒரு கதை விவாதத்தின் போது தற்செயலாக இருந்ததில் தனது வீட்டைப் பார்க்கிறீர்களா என்று இயக்குனரை அழைத்தான். கதைப்படி அந்த வீட்டில் நடைபெறும் சில விநோதங்களுக்கு கிராபிக்ஸ் பண்ண வேண்டும். இயக்குனர் அனுப்பி வைக்க, கிரி வீட்டை சுற்றிக் காட்டினான். இதற்கு எல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்கிற அலுப்புடன் கிரியுடன் சுற்றி வந்த பிரேம், கிரிஜா வந்து சேர்ந்ததும் நல்ல உத்வேகம் பெற்றான். அவள் பேசும்போது அவளுடைய கண்களில் பார்த்தான். மேலும் தொடர்பு கொள்ளுவதற்கு கிரி கிரிஜாவின் எண்ணைக் கொடுத்தது தற்செயல் தான். அவ்வப்போது வெகு தீவிரமான பாவனையுடன், வெகு சாதாரணமான சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்ததில் ஒருநாள் அவளுக்கு தெரிந்து விட்டது.

“ பிரேம் ! “

“ ஷூட்டிங் எல்லாம் இப்ப நடக்கறதுக்கு சான்சே இல்லையாமே? கிரி சிரிக்கிறான். நீ உங்க டைரக்டர் சொல்லி தான் பேசறியா? இல்ல நீயா ஏதாவது பேசி வைக்கறியா? “

“ நானும் பியுச்சர்ல ஒரு இயக்குனர் ஆகப்போறவன் தானே? “

“ ஆர்வக் கோளாறா? “

“ ம் “

மறுபக்கம் ஒரு கணம் மெளனமாக இருந்த இடைவெளி இவனை செலுத்தியது. முகம் சிவக்க “ உங்க கூட பேசறது எனக்குப் பிடிக்கும். அதான் ! “ என்றான். செல்லை அப்போதே முடித்திருக்க வேண்டும். ஆனால் அவனால் முடியவில்லை.

அவள் கேட்டாள். “ என்ன எதுக்கு பிடிக்கும் ? “

“ சும்மா ! “

“ புரியல பிரேம். சும்மான்னா? “

“ சும்மான்னா சும்மா தான் ! “

“ நான் நெனச்ச அளவு நீ நல்ல பையன் இல்லன்னு நெனைக்கறேன். போன வை ! “

அவன் பயந்து போய் இனிமேல் அவள் பக்கம் திரும்புவதில்லை என்கிற சங்கல்பத்துடன் கிரி தோள்களின் மீது கையைப் போட்டுக் கொண்டாலும் சில நாட்களுக்கு அப்புறம் அவள் விடவில்லை.

ஒரு ஆளுக்கு இன்னொரு ஆள பிடிக்கும். அதில என்ன பொல்லாப்பு? நீ எதுக்கு கண்ணாமூச்சி ஆடறே? அதுக்கு மட்டும் பதில சொல்லு. லவ்வு, கிவ்வு பண்றியா? “

“ அதெல்லாம் இல்ல. பண்ணா தப்பா? “

“ ஏய் “

“ பாத்தேன். அந்த நிமிஷமே நான் காலி. எனக்கே தெரியல. திரும்ப திரும்ப நெனச்சுகிட்டே இருக்கேன். “

“ தப்பும்மா ! “

“ தெரியும். நீங்க உங்க பாட்டுக்கு இருங்க. என் கற்பனைய தடுக்க உங்களுக்கு ரைட்ஸ் கெடையாது. “

“ எப்டி ? எப்டி ? “

ஒரே ஒரு ரிக்வெஸ்ட். அந்த ஸ்பெக்ஸ் உங்களுக்கு நல்லாவே இல்ல. தூக்கி கடாசிடுங்க. “

அப்புறம், அப்புறம் அவள் அவனுக்கு பல முறையும் செக்ஸ் என்பது வாழ்வில் ஏன் முக்கியமானது இல்லை என்பதை போதித்தாள். அவள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை என்றாள். உடம்புகளில் இருந்து வெளியே வருவது மிகவும் முக்கியம். நான் எனது உடலை சீ நாயே என்று வெளியே நிறுத்துவது வழக்கம் என்றாள். “ உனக்கு தெரியுமா பிரேம்? வீட்ல ஆளுங்க இல்லாதப்ப எல்லாம் நான் துணியில்லாம தான் இருப்பேன். நிக்கறது, நடக்கறது, படிக்கறது, சமைக்கறது எல்லாமே அம்மணம் தான் ! “ அவள் பெருமையாக சொல்லி முடிப்பதற்குள், “ அந்த மாதிரி டைம்ல நான் வீட்டுக்கு வரேனே ! “ என்று சொல்லி விட்டது அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

அவளாக வந்து பேசுவது நின்று போயிருந்தது. ஓரிருமுறை நம்பர் போட்டு பார்த்தான். எடுக்கவில்லை.

அது டிஸ்கஷன் நேரம். மனது செல்லவில்லை.

என்னப்பா, எங்கே இருக்கிறாய் என்பது போல சிவதாசன் சார் ஒருமுறை அவனைக் கேட்டார்.

அவர்கள் எடுக்கப் போகிற கதையின் ஹீரோ முற்பிறப்பில் இருந்து வருகிறவன். இந்தப் பிறப்பில் இருக்கிற காதலியை தேடி வந்திருக்கிறான். அவள் எப்படிப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்பதை இயக்குனரால் சொல்ல முடியவில்லை. அவர்கள் காதலிக்கப் போவது திண்ணம் அல்லவா? அப்படி தான் நடக்கும் என்பதை பார்வையாளர்களும் அறிவார்கள் அல்லவா? திரைக்கதை ஒரு சவாலாக இருக்க வேண்டும் என்றார் சிவதாசன். அவன் சமூகத்தின் கீழ் மட்டத்திலும், அவள் ரிச்சாகவும் இருப்பின் நல்ல காட்சிகளை அமைக்க முடியும் என்பது எவர் கிரீன் பார்முலா. பலரையும் ஒரு விதமாக திருப்தி பண்ணி விடலாம். எல்லாவற்றிற்கும் முன்னால், அவள் யார்? எப்படிப்பட்டவள்?

அவள் பெயர் பூர்ணிமா என்றார் இயக்குனர்.

அவளுடைய அப்பா ஒரு பிளே பாய் என்றார் சிவ தாசன். அம்மா இல்லாத பெண் என்றார். தனிமையில் வளர்ந்த குழந்தை என்றார். வெறுமையை விரட்டுவதற்கு குடியைக் கற்றுக் கொண்டாள் என்றார். கும்பலில் இருந்த சாரதி அதை மூர்க்கமாக மறுத்தான். படித்த, பண்புள்ள ஒரு பெண் குடிகாரியாக இருப்பதாவது ? தனது சிஷ்யன் நல்ல கேள்வியை கேட்டு ஸ்க்ரிப்ட் ரைட்டரை மடக்குகிறான் என்பதான பெருமை இயக்குனருக்கு இருக்கவே சிவ தாசன் பல்வேறு உள்ளூர் உலக சினிமாக்களுக்கு சென்று வந்து விளக்கியது விரயமாக உதிர்ந்து கொண்டிருந்தது. பொதுவாக இந்த மாதிரி காரியத்தில் எல்லாம் எத்திக்ஸ் அவசியமில்லை, படம் முடிவதற்கு முன்னேயே நாம் அவளைத் திருத்தி விடலாம் என்கிற நகைச்சுவையும் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சில இயக்குனர்கள் சில கைத்தடிகளிடம் அடிமைப்பட்டு விடுவார்கள். ஒரு புள்ளியில் இருந்து துவங்குகிற கதையை சொல்லி பழகி, அவன் அதற்கு லாஜிக்காக முட்டுக் கொடுப்பதில் அகம் மகிழ்ந்து விடுவார்கள்.அப்புறம் யாரேனும் மாற்றி சொல்லும்போது அவனுடைய சம்மதம் வேண்டும். அவன் ஊமைக் குசும்பனாக சபையில் சிரித்து வைத்து விட்டு, தனிமையில் இயக்குனரைக் கொத்துவான். அறசீற்றம் சிணுங்குவான். சிவ தாசன் இப்படி நாசமாக சீரழிகிற பலபேரைப் பார்த்தவர். சரி, பூர்ணிமா எப்படிப்பட்டவள் என்பதை நீங்களே சொல்லலாம் என்று அவர் காத்திருந்தார்.

ஒருநாள் சாரதி முழங்கினான். 

ஸ்க்ரிப்ட் ரைட்டர் எட்டு அடி பாய்ந்தால் நான் பதினாறு அடி என்று குறிப்பிட்டான். கதாநாயகி தினம் தினம் வேட்டையாடுகிறாள். ஒரு மனிதனைக் கொண்டு வருகிறாள். அவனை கண்டம் துண்டமாக வெட்டி சமைத்து சாப்பிடுகிறாள் என்றான். அவளுடைய அப்பாவிற்கும் நர மாமிசம் கொடுக்கப்படுகிறது. அப்படி ஒருநாள் கொண்டு வந்த ஹீரோவை பணிந்து அவள் எப்படித் திருந்தி அவனைக் காதலிக்கிறாள் என்பதுதான் கதை.

சிவ தாசனால் பாவம் சிரிக்கக் கூட முடியவில்லை. என்றாலும் இறுதியில் அவரை சரணடைய வேண்டியிருந்தது.

ஒரு சார்லி சாப்ளின் படம். ஒரு கோடீஸ்வரன் இரவானால் சார்லியை பிக் அப் பண்ணி விட்டு இரவெல்லாம் கொஞ்சிக் குலாவி விட்டு மறுநாள் காலையில் நீ யாரென்று கேட்பான் அல்லவா? பாரில் இருந்து நீர்க்குடமாக தளும்பி வருகிற பூர்ணிமா பாருக்கு வெளியே நிற்கிற ஹீரோவை கார் ஓட்ட சொல்லி அழைக்கிறாள். வீட்டுக்குப் போனதும் போதையில் காரை லாக் செய்து விட்டு சென்று விடுகிறாள். இரவு முழுக்க காரில் பொழுதைக் கழிக்கிறான் அவன். காலையில் பூர்ணிமா ஓடி வந்து காரில் ஏறுகிறாள். ஹீரோவைப் பார்த்து நீ யார் என்கிறாள். பிறகு ஒரு கோணலான சமாதானத்துக்கு அப்புறம் அவன் தான் காரை ஓட்டுகிறான். அவளுடைய தந்தைக்கு ஒரு அவுசாரியுடன் கல்யாணம். உடனடியாக தடுத்து நிறுத்தியாக வேண்டும். பயணத்தில் உண்டாகிற மன மாற்றத்தால் அவள் தன்னுடைய தந்தையின் திருமணத்தை நிறுத்தவில்லை. திரும்பி வரும்போது ஹீரோவுடன் காதலும் உண்டாகி விடுகிறது.

“ சிவதாசன் சார். ஒண்ணு கேக்கணும். இதெல்லாம் நடக்கக் கூடியது தானா? கதைக்காக கம்பி கட்டறோம். அவ்வளவு தானே? “

தன்னுடைய கதை ஒன்றை உங்களிடம் சொல்ல வேண்டும் என்கிற வேண்டுகோளை வைத்த பிறகுதான் பிரேம் இதைக் கேட்டான். அவர் சும்மா சிரித்து வைத்தார்.

பிரேம் கேரளாவுக்கு வந்து சேர்ந்து மழை தாங்காமல் கதவை பூட்டிக் கொண்டு தூங்கும்போது கிரிஜாவின் போன் வந்தது. எங்கே இருக்கிறாய் என்று விசாரித்தாள். கண்டிப்பாக இப்படி வந்து காரியத்தை முடித்து விட்டுப் போவாள் என்பதை துளியும் எதிர்பார்க்கவில்லை. அவனிடம் அவள் பேசினது மிக சுருக்கமானவை. அதில் முக்கியமானது ஒன்று மட்டுமே. அது நான் எப்படி இருக்கிறேன் என்பது. கண்களில் லென்ஸ் போட்டிருக்கிறாள். இனிமேல் கண்ணாடி கிடையாது.

மழை அடர்ந்து பொழிந்து கொண்டிருந்தது. 

முறைப்படி இரண்டு பீர் பாட்டில்கள் வாங்கியிருக்க வேண்டும். வெள்ளாப்பமும் மாட்டுக்கறியும் ஆர்டர் செய்தது சாப்பிட்டு இருக்க வேண்டும். அவன் மொத்த விஷயத்தையும் துறந்து கிறங்கித் தூங்கினான். மறுநாள் கிரிஷ் தாலி கட்டுவதற்கு முன்பு கல்யாண மண்டபத்தை சேர முடிந்தது. கொஞ்ச நேரத்தில் கிரிஜா தனது புருஷனுடன், இரண்டு பையன்களுடன் குடும்ப போட்டோவை எடுத்துக் கொள்ளும்போது முன் வரிசையில் அமர்ந்து புன்னகை செய்து பார்த்தான்.

அவள் கவனித்ததாக தெரியவில்லை.

கிளம்பும்போது விடை பெற அருகில் போன போது நாயே என்றுவிட்டு நழுவி சென்றாள்.

சென்னைக்கு திரும்பிய அன்றே தேடி சென்று சிவதாசனைப் பார்த்தான்.

“ ஒரு கதை அப்டி மங்கலா இருக்கு சார் ! இன்னும் கொஞ்சம் தான். உங்ககிட்ட பேசணும் ! “


 

ஆசிரியர்

மணி எம் கே மணி

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page