செக்குமாடு?


“கையில விளக்கு புடிச்சிகிட்டு இருட்டுல நடந்தா, பத்து தப்படிக்கு வரைக்கும்தான் என்னா இருக்குதுன்னு தெரியும். வெளக்கு அணைஞ்சு போச்சின்னு வைய்யி.. அதுக்கப்புறம்? அட வெளக்கு வெளிச்சம் தாண்டி அங்காண்ட இருக்கறது காத்தா கருப்பான்னு கண்டு பிடிக்க முடியுமா? மோடுபள்ளந்தான் தெரியுமா? முடியாதில்ல? சீர்திருத்தம் கீர்திருத்தம்லாம் வெளக்கு மாதிரிதானப்பு.. பத்து தப்படி வரைக்கும்தான் கண்ணுக்கு தெரியும். நல்லது மா….திரி தெரியும். ஆனா நெஜமாவே நல்லது தானான்னு கண்டுபுடிக்கிறது ரொம்ப செரமம். அந்த வழியிலே ரொம்ப தொலைவு போன பின்னாடி, நம்ம சக்தியெல்லாம் தீர்ந்த பின்னாடி அங்க போவ வழியில்லன்னு கண்டா…., என்னா பண்ண முடியும் சொல்லு??” ராமசாமி நீட்டி முழங்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை பேச்சில் இடைவெளி எடுக்கும்போதும் அவர் தனது தலையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக திருப்பி பார்வை வட்டத்துக்குள் விழுவோர் அனைவரையும் இழுத்து அவரது பேச்சுக்குள் பொதிய வைக்க முயன்று கொண்டிருந்தார். நின்று கொண்டு, பொறுத்தி நிற்க வைக்கப்பட்ட மைக்கில் பேசியதால் இரண்டு கைகளையும் மூடியும் திறந்தும், நீட்டியும் ஆட்டியும் பேச சௌகர்யமாக இருந்தது.

ராமசாமி பேச்சுக்கு அவர் முகத்துக்கு நேராக யாரும் எதிர்பேச்சு பேசுவதில்லை. ஆனால் அவர்களுக்குள் அவர் இல்லாத நேரத்தில் பாதிபேர் இப்படியும் மீதிபேர் அப்படியுமாக பிரிந்து காரசாரமாக விவாதித்துக் கொள்வார்கள்.

ராமசாமியின் சிந்தனைகள் மேம்போக்கானவையா, அன்றி ஆழமானவையா என்பது அன்றுவரை யாராலும் தீர்மானமாக கணிக்க முடியாத ஒன்று. மேலோட்டமாக பார்த்தால் அவர் பேச்சு பைத்தியக்காரனின் உளறல்களாகவும், காலத்துக்கு ஒவ்வாததையெல்லாம் எங்கிருந்துதான் யோசிக்கிறாரோ எனவும் தோன்றும். தனிமையில் அமர்ந்து யோசித்தால் “அவர் சொல்வது சரிதானோ?” என்று எண்ணத் தோன்றும். அப்படி தோன்றினாலும் அதனை வெளிப்படையாக அவர்களால் ஒத்துக் கொண்டுவிட முடியாது. “அது சரிதானோ” என்று மட்டும் யாராகிலும் பொது வெளியில் உரக்க யோசித்துவிட்டால் கூட அவர்களை விநோதமாக பார்த்து முறைக்க உலகம் தயங்காது. அப்படித்தான் அவர் போன மாதம் கொளுத்திப் போட்ட ஒரு விஷயம் வெகுநாட்களுக்கு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. மத்திம வயது தாண்டிவிட்ட பேரன் பேத்தி எடுத்துவிட்ட பலருக்கும் அவர் சொல்வது சரிதான் போலவும் இப்போது வாலிபத்தில் அடியெடுத்து வைத்திருந்த பலருக்கும் “என்ன பைத்தியக்காரத்தனமான பேச்சு” என்பது போலவும் இருந்தது. அதிலும் ஒரு இளம் வயதுப் பெண் வெகுண்டெழுந்து வார்த்தைகள் வராமல் தவித்து கோபத்தில் உதடுகள் நடுங்க “ஸச் அன் இடியாட்டிக் திங்கிங்!” என்று ஆத்தித்துடன் வார்த்தைகளை துப்பிவிட்டு எழுந்து வெளியே சென்றே விட்டாள்.

சகுந்தலா அன்று அங்கு புது வருகை. இந்த க்ளப் விஷயங்கள் அவளுக்கு முற்றிலும் புதிது. இதற்குமுன் இது போன்ற க்ளப் வகையறாக்களுக்கு அவள் போனதில்லை. அங்கு எப்படி பேசுவார்கள் என்பது அவளறியாதது. ஆனால் இந்த வியாழக்கிழமைக்கு அவளது வட்டத்து நண்பர்கள் குழாம் ஆவலாக காத்திருந்ததையும், அதற்கு மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமைகளில் ராமசாமியின் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் தான் காரணம் என்பதையும் அவள் பேச்சுவாக்கில் அறிந்திருந்தாள். அவரின் முந்தைய பேச்சுக்களின் சாரத்தை கேட்டு அவளுக்கும் அவரை பார்க்க வேண்டும் எனவும், அவருடைய பேச்சுக்களை கேட்க வேண்டும் எனவும் ஆவல் தோன்றியிருந்தது.

அந்த இளம் பெண் உரக்க அவரை திட்டிவிட்டு வெளிநடப்பு செய்தபோது கூட உதட்டை பிதுக்கி புருவங்களை உயர்த்தி பரிதாபகரமாக முகத்தை வைத்துக்கொண்டு கைகளை விரித்து விண்ணுலகில் வாழும் தேவர்களை சாட்சிக்கு அழைத்து அவள் போன திசையை வணங்கியபடி, “பார்த்தீங்களா மக்களே” என்பதாக அவர் சைகையில் காண்பித்து செய்த கோணங்கி சேஷ்டையில் அரங்கமே இரகசிய சிரிப்பில் அதிர்ந்தது.

அன்றைய பேச்சு பிற்போக்குத்தனங்களை பழைய பழக்க வழக்கங்களை பற்றியது. தலைப்பு “முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல!!” என்பது. பெரும்பாலானோர் வாட்ஸப்பில் அரதப்பழசாகி வந்தவற்றை கக்கி சோகையான கைதட்டல்களை வாங்கிக் கொண்டிருக்க ஆவலே உருவாக பலர் ராமசாமியின் முறைக்காக காத்திருந்தனர். சாதாரணமான தலைப்புகளிலேயே பழயதை பரிந்து பேசி வெளுத்து வாங்குபவர் அவர். இது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல அல்லவா?

அவருக்கு முன்பு பேசியவர் அந்த காலத்தில் நடந்த பால்யவிவாகம் பற்றியும் பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி, வேலை வாய்ப்பு பற்றியும் விலாவாரியாக பேசிக் கொண்டிருந்தார். சாதீய அடக்கு முறைகள் குறித்த விஷயங்களும் விவாதப் பொருளாக இருந்தன. அந்த காலப் பெண்களின் உணர்வுகளை குத்தகைக்கு எடுத்து அதற்கு நவீன வடிவம் கொடுத்து கண்ணீர் மல்க  ஒருவர் பேசிய விஷயங்களை கேட்கையில், அனைவருக்கும் ராமசாமி இதற்கெல்லாம் எப்படி கவுன்ட்டர் கொடுக்க போகிறார் எனக் கேட்கதான் ஆவல் கூடிற்று.

ராமசாமி ஏறிவந்து மைக்கின் முன்பு நின்று கொண்டார். கீழ் உதடு வழக்கம்போல பிதுங்கி நின்றது. கைவிரல்களை மட்டும் கோர்த்தவாறு சபைக்கு ஒரு வணக்கம் போட்டார். “மதிப்பிற்குரிய சபைத் தலைவர் அவர்களே!”  எனத்தொடங்கி அவர் பேசியதைத் தான் முதல் சில வரிகளில் கண்டோம். “அதெல்லாம் சரிதான் சார். பால்யவிவாகத்தை எப்படி நியாயப்படுத்துவீங்கோ? பெண்களுக்கு எதிரான எவ்வளவு பெரிய கொடுமை அது?” என்று சபைத்தலைவரே ஆவலை கட்டுப்படுத்த முடியாமல் கேட்டுவிட்டார்.

“சொல்றேன் சொல்றேன். அந்த காலத்துல பொண் குழந்தைகளுக்கு எட்டு வயசிலே கல்யாணம் செஞ்சு வச்சாங்க. ஆனா தாம்பத்யத்துல ஈடுபடுத்தல. எட்டு வயசிலேர்ந்து அந்த பொண்ணு அவ புகுந்த வீட்டிலே ஓடியாடி வளர்வா. அந்த குடும்பத்து பழக்கவழக்கங்களை கத்துக்குவா. அந்த குடும்பத்து ஜனங்கள் மனப்போக்கும் புரிபட்டுரும். அவங்களுக்கும் ஒரு பெண் குழந்தை பட்டாம்பூச்சி மாதிரி வீட்டிலே வளைய வர்றது மனசுக்கு இதமா இருக்கும். பெத்த பாசத்த விடவும் வளர்த்தபாசத்துக்கு வலிமை அதிகம் தெரியுமோ? அப்படி அந்த குடும்பத்து வழக்கங்களை எல்லாம் மூத்த தலைமுறை கிட்டேர்ந்து எந்த எதிர்ப்புணர்வும், ஈகோவும் இல்லாம ஆர்வமா கத்துக்குவா அந்த பொண்ணு. கூட்டுக் குடும்பமா இருந்தா அவளை மாதிரியே கல்யாணம் பண்ணிட்டு வந்த ஓரகத்திகளோட விளையாடி பழகி சகோதரிகள் போல வளருவா. சின்ன வயசுலேர்ந்து அந்த வீட்டுல ஒன்றி வளர்றப்போ மனஸ்தாபங்கள் மனவேறுபாடுகள் அதிகமா வராது. வளர்த்த மாமியா மாமனாரை கடேசி காலத்துல அம்மா அப்பா போல பாசமாக பார்த்துக்குவா.  குடும்பம்ங்கற அமைப்பு ஒடைஞ்சிடாம பரந்து விரிஞ்சி நிக்கும். நாற்றாங்காலை நாப்பத்தியஞ்சாம் நாளுக்குள்ளே புடுங்கி நட்டாத்தானே வேர்பிடிச்சி வளரும்? இப்போ என்னடான்னா வெள்ளாம வெளஞ்ச பின்னாடிதான் புடுங்கி நட்டுவப்பேன்றாங்க.. அதுங்க புருஷன் கூட சேர்ந்து வாழவே கஷ்டப்படுதுங்கோ. எங்கேர்ந்து மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார் கூடலாம் அட்ஜஸ்டு பண்ணிட்டு வாழ்றது?

குடும்பம்ங்கற அமைப்பு செதைஞ்சதாலதான் இன்னிக்கு டே கேர் பிஸினஸ் கொடிகட்டி பறக்குது. ஓல்ட் ஏஜ் ஹோம்ஸ் வீதிக்கு ஒண்ணு இருக்குது. வர்க்கிங் உமன் ஹாஸ்டல், மேன்ஷன்னு, ஓட்டலுங்க, எத்தினி எத்தினி பிஸினஸ் தெரியுதா?? எல்லாம் இந்த ஒத்த விஷயத்துனால. நான் கும்மோணத்துல அண்டர் கிராஜுவேட் படிச்சப்போ மூணு வருஷம் எங்க மாமா வீட்டுலே தங்கிதான் படிச்சேன். என்ன மாதிரியே என் கூட ஒண்ணுவிட்ட பெரியப்பா மகனும், இன்னூரு மாமா புள்ளையும் கூட அங்கியேதான் தங்கி படிச்சோம். இந்த காலத்துல…. அந்த மாதிரி… ஒரு ஒறவுக்காரங்க வூட்டிலே மூணு தடிப்பசங்க வருஷக்கணக்கா வேணாங்க… ஒரு பத்து நாளு தங்கிற முடியுமா?? இன்னைக்கு எம்பையன் சென்னையிலே படிக்க ஹாஸ்டல், அப்புறம் வேலை பார்க்கையிலே பேயிங் கெஸ்டு அகாமடேஷன். தண்ணி கூட காசப்பூ…

நீங்களே சொல்லுங்கோ.. உங்க பொண்ண நீங்க படிக்க வைக்கிறீங்க.. அதும்படிச்சி வேலைக்கு போகுது. ஒரு இருவத்தியஞ்சி முப்பது வயசுக்கு மேலே கல்யாணம் பண்ணி குடுக்கறீங்க. அதுவரைக்கும் தன் தேவையெல்லாம் தானே பார்த்துகிட்டு சுதந்திரமா வளர்ந்த பொண்ணுக்கு யாரோட துணை தேவை? தனியா இருக்கிறதே பழகிப் போயிடுது. அதுவும் நெறைய்ய குடும்பத்துல பொண்ணுங்க சம்பாதிச்சு குடும்பத்தியே உசத்திபுடறாங்க. இங்க ஒரு குடும்பத்தை ஓரளவுக்கு தூக்கி நிறுத்தி அப்பாடான்னு மூச்சுவிடற சமயத்துல அந்த புராஜக்டுலேர்ந்து டபாக்குனு தூக்கிட்டு.. உடனே இன்னோரு பெரிய்ய புராஜக்ட்டுல போட்டுர்றீங்க. இந்த இடத்துலதான் சோதன தொடங்கும். இதுக்கப்புறம், தான் உருவாக்குன பொறந்த வீடு அந்நியமா பூடும். கட்டிகிட்டு போன வீட்ல பெரிய மரியாத கெடைக்காது. சம்பாதிக்கிற மிஷினாதான் பார்ப்பாங்க.. இந்த மாமனார் மாமியார கூட வச்சிக்கவும் முடியாது. தூக்கி எறியவும் முடியாது. எவ்வ-ள-வ்வு ஸ்டெரஸ்ஸூ பாவம்??

“அதுசரி… பொண்ணுங்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேணாமா? அது இல்லாததுனாலதான வரதட்சணை கொடும நடந்தது ஒரு காலத்துல? இப்போ அந்த பிரச்சனல்லாம் எக்ஸ்டிங்க்டு ஆயிடுச்சி பார்த்தீங்கள்ல?? அதுக்குலாம் பொண்ணுங்க படிச்சி வேலைக்கு போயி சம்பாரிக்கறதுதான காரணம்?”

அப்படியா? அந்த காலத்துல பொண்ணுங்களை பெத்தவங்க கல்யாணத்தப்போ, அப்புறம் வருஷத்துக்கு நாலஞ்சு தடவையின்னு சீர்செனத்தி செய்தாங்க. இப்போ பொண்ணுங்க ஆயுசு பூ…..ரா சம்பாதிச்சி கொட்டி வரதட்சினை செலுத்தராங்க. எங்க… இப்பக்கூட சொத்துக் கணக்கு பார்க்காம பொண்ண மட்டும் பார்த்து கட்டிக்கிறவங்க இருக்காங்களா ..?? ஒண்ணு தெரிஞ்சிக்கோங்க.. மனிதர்களோட மனவிகாரங்களை அழிக்கவே முடியாது. அது ஒரு வடிவத்துலேர்ந்து இன்னொரு வடிவத்துக்கு மாறும். அவ்ளோதான்…

அது சரி… மாமியார் கொடும, நாத்தனார் கொடும இதெல்லாம்..

அதுக்கு பதிலாதான் இப்போ டீம்லீடர் கொடும, ப்ராஜக்டு மேனேஜர் கொடுமன்னு இருக்குதே.. வீட்டவுட்டு வெளில கால எடுத்து வச்சா அங்க மட்டும் பிரச்சனைங்க கொஞ்சமாவா இருக்குது??

சரி சாமி.. அதுக்குதான் சம்பளம் குடுத்துர்றாங்க இல்ல??

தம்பி… கூட்டி கழிச்சி பாருங்க.. கணக்கு சரிய்ய்ய்யா வந்துரும்.

தம்பி…. ஒரு வூட்டிலே இருக்கிறவங்க ஜெனிட்டிக்ஸ் பிரகாரம் அவங்களுக்கு என்ன காரம், எவ்ளோ உப்பு, எம்மாம் எண்ணெய், எம்மாம் வெண்ணை ங்கறதெல்லாம் யோசிச்சிதான் ஒவ்வொரு வூட்டிலேயும் வத்தல், வடாம், ஊறுகாய், அப்பளம் போட்டு வச்சாங்க. ஒடம்பு சரியில்லையா? ஓமக்கஞ்சி குடி… ருசி படியிலையா? நாரத்தை ஊறுகாய் நக்கு, புள்ள பொறந்துச்சா? மருந்து கொழம்பு ஊத்து… இந்த ஃபார்முலாவெல்லாம் மாத்தி எண்ணெய் பலகாரம்னாவே கொழுப்புன்னு உருவேத்திதான் இன்னைக்கு விதம் விதமா பிஸ்கட்டும், பேக்கரி பொருட்களும் மார்கெட் பண்றாங்க. உனக்கும் எனக்கும் ஒரே காரமும் உப்பும் ஆவுமா தம்பி? எனக்கு வாயு ஒடம்பு.. ஒனக்கு பித்தம். நம்ப ரெண்டு பேரும் ஒரே காண்டீன்ல வருஷக்கணக்கா திங்கறோம். சம்பாதிச்சதை எல்லாம் காலம் போன காலத்துல ஆஸ்ப்பத்திரில கொண்ட கொட்டுறோம். தம்பி… முன்னால ரிட்டயர்மன்ட் வயசிலயாச்சும் சொந்த ஊர்ல போயி செட்டில் ஆனோம். இப்போ ஆசுபத்திரி பக்கமா இருக்கான்னு பார்த்துதான் வீட்டயே முடிவு பண்றோம். இதான் தம்பி நெலம…

அது சரி சார்.. அப்போ உங்க சுயநலத்துக்காக நாங்க அடுப்படியிலே வெந்து சாவனுமா?? – ஒரு சிறுசு கேட்டது.

தாயி… அடுப்புல வெந்தா நோய் வராது தாயி. நாள் பூரா ஏசியிலே உக்காந்துருக்க பாரு?? அதுதான் நோய் ஆவும்..

அதுக்கோசரம்? நீங்கள்லாம் எங்களை மரியாதையில்லாம பேசுவீங்க? எங்க திறமையை கொறைச்சு மதிப்பிட்டு நீங்க மட்டம்தட்டுவீங்க… நாங்க குனிஞ்சி குனிஞ்சி போய்கினே இருக்கனுமா??

“மாதா….! கோச்சுக்காதம்மா.. தப்புதான். இல்லேங்கல. இந்த முட்டாப்பசங்க பொண்ணுங்களோட அருமை தெரியாம நடத்துனதோட நடந்துகிட்டதோட விளைவுகளைதான் இன்னைக்கு அனுபவிக்கிறோம். ஒரு வீட்டுல ஒரு பொண்ணுக்கு நடக்கிற அவமானம் தனிமனுஷப் பிரச்சினை கெடையாது. அது சமூகப் பிரச்சினை. அதை அப்படிதான் டீல் பண்ணியிருக்கனும். இப்போ… தும்ப விட்டுட்டு வால புடிக்க ட்ரை பண்ணிட்டு இருக்கிறோம். இது சமுதாய வளர்ச்சினு பீத்திக்க வேற செய்றோம். வெளங்கிடும்…!!”

இந்த பேச்சு நடந்து கிட்டதட்ட ஒரு மாதமாக ஏதேதோ ரூபங்களில் அதன் சாரம் சகுந்தலாவை தொடர்ந்து கொண்டே இருந்தது. ஏதேதோ எண்ணங்கள் மனதை குத்தி ரணமாக்கிக் கொண்டே இருந்தன. அவ்வப்போது ஒரு பழைய நினைவு இடையிட்டு அதன் இடைவெளியில் ராமசாமியின் பேச்சு மின்னல்வெட்டாய் ஒளி பரப்ப முயன்று மின்வெட்டாய் நிலைகுலையச் செய்து கொண்டிருந்தது. ஒரு கிளப் பேச்சுக்கு தான் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது அவசியந்தானா என தனக்குத் தானே அறிவுறுத்தி தன் சிந்தனா போக்கினை மாற்ற செய்த பிரயத்தனங்கள் பலனளிக்கவில்லை. உண்மை சுட்டது. எழுந்து சென்று கண்ணாடியில் தன் முகத்தினை பார்த்தாள். கண்ணோரத்திலும் நெற்றியிலும் இருந்த சுருக்கங்களும், கன்னக்கதுப்புக்கு கீழே தளர்வுற்றிருந்த சதைப்பகுதியும், அவளின் அதீத மெனக்கெடல்களை தாண்டி அவள் வயதை பிரத்தியட்சமாக காண்பித்தன.

மேலோட்டமாக பார்த்தால் தற்சமயம் தன் வாழ்க்கையும் மனமும் ஒரு நிதானத்துக்கு வந்துவிட்டது போலத்தான் தெரிகிறது. ஆனால் மனதின் அடி ஆழத்தில் தனித்துவிடப்பட்ட உணர்வு நிரந்தரமாக தங்கி இருப்பதுதான் உண்மை.

அன்று ராமசாமியின் உரையை கேட்டுக் கொண்டிருந்த போது அவர் சொன்னவற்றுக்குள் தன்னை ஏன் பொருத்தி பார்த்தோம் என வேதனையாக இருந்தது. அதைவிட அந்த மேடையின் வலப்புறம் அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான முகங்களில் அந்த நிமிடம் தன் ஆராய்ச்சியின், சிந்தனையின் நாயகனாக இருந்த ரவியின் முகம் பிரத்யட்சமாக கண்ணில் பட்டதுதான் உச்சபட்ச சோதனை.

யாரை இனி எப்போதும் கண்களில் காணவே கூடாது என்று, யாருடைய கண்ணில் பட்டுவிடவே கூடாதென்று தமிழ்நாட்டு பக்கமே எட்டிப்பாராமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தாளோ அந்த ரவி. அவளுடைய முந்நாள் கணவன். கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு பின்பு பார்த்தாலும் அந்த கூட்டத்திலும் அதே வசீகரத்துடனும் கம்பீரத்துடனும் எளிதில் அடையாளம் காணும்படியாக அமர்ந்திருந்த ரவிச்சந்திரன்.

விவாகரத்தாகும் வரையில், விவாகரத்துக்கான சட்ட பூர்வாங்க நடவடிக்கைகள் நடக்கும் வரையிலும் கூட அவர்களுக்கு, குறைந்த பட்சமாக அவளுக்கு விவாகம் ரத்தாகிவிடும் என்கிற முழு நம்பிக்கை இருந்ததில்லை. இருவருக்கும் பொதுவாக இருந்த நண்பர்கள் வட்டத்தில் அப்படித்தான் அவன் பிம்பத்தை கட்டமைத்து வைத்திருந்தான். வழக்கமான குழப்பங்கள் அவனை அலைக்கழித்தன. ஒரு நேரம் உன்னை பிரிந்து போக விடமாட்டேன் என்று மிரட்டுவான். ஒருநேரம் என்னை பிரிந்து உன்னால் போக முடியாது என பிதற்றுவான். ஒரு கம்பீரமான ஆண்மகனை பைத்தியக்காரனாக மாற்றும் சக்தியை மனைவி என்கிற சமூக அங்கீகாரம் மட்டுமல்லாமல் அவளுடைய தனிப்பட்ட குணாதிசயங்களின் பால் அவனுக்கிருந்த மரியாதையும் அவர்களுக்கிடையேயான உடல் ரீதியிலான ஈர்ப்பும் அவளுக்கு வழங்கியிருந்தன. கடைசி நொடி வரை அவன் ஏதாவது செய்து தன் மனதை மாற்றிவிடுவான் என்றும் தன்னை போக விட்டுவிட மாட்டான் என்றும் அவள் நம்பினாள். அவனோடு வாழும் முடிவை தான் எடுப்பதற்குரிய காரணங்களை நிச்சயம் அவன் உருவாக்குவான் என்றும், தான் எதிர்ப்பார்க்கும் சில வாக்குறுதிகளை தந்து தன் கோபங்களை, பிடிவாதங்களை கரைப்பான் எனவும் காத்திருந்தாள்.

ஆனால் அவ்வாறு நிகழவில்லை. அவன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டான். தன் முயற்சிகளை கைவிட்டு விட்டான். அவள் போகிறதானால் போகட்டும் என விட்டுவிட்டான். அவளாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்றுவிட்டான். முட்டாள்… அப்படித்தான் அன்று அவள் நினைத்தாள். ஆனால் யார் முட்டாள் என்பது புரிய அவளுக்கு புரிய அதிக காலம் தேவைப்படவில்லை. முதலில் அதற்கும் அவன் மீதுதான் கோபம் வந்தது. ஆனால் காலப்போக்கில் தான் செய்யத் தவறிய சமரசங்களும், தவறவிட்ட சந்தர்ப்பங்களும் அவளுக்கு புரியத்தொடங்கின. ஒரு விவாகரத்துக்கு உரிய, போதிய காரணங்கள் ஏதுமின்றியே ஒரு சூதாட்டம் போல அவள் பயன்படுத்திய இருமுனை கத்தி தன்னையும் பதம் பார்த்துவிட்டதை உணர்ந்தபோது தவித்துப் போனாள். ஓங்காரத்துடன் கொக்கரிப்பது மட்டுமல்ல அகங்காரம். அமைதியாக இருந்துவிடக் கூட அதே அகங்காரம்தான் காரணமாக இருக்குமென்பதும், ஆத்திரத்துக்கு மட்டுமல்லாமல் அழுகைக்கும், அந்த அழுகையை கூட பிறர் காணாமல் தனிமையில் சிந்த வைப்பதும் கூட அகங்காரத்தின் ஒரு முகம்தான் என்பதும் அவளுக்கு புரியத்தான் வெகுநாட்கள் ஆனது.

ஒரு முறிந்த உறவோடு சேர்ந்து முறிவது இரு நபர்களின் முதுகெலும்பும்தான். அதுவரை இருக்கும் தன்னம்பிக்கை ஒரு உறவு கைநழுவிப் போகும்போது தவிடுபொடியாகிவிடுகிறது. தன்னை உதற கிடைத்த காரணங்களிடையே தன்னை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய காரணங்கள் எதுவும் இல்லாமல் போய்விடுகிற காயங்கள் அத்தனை எளிதில் ஆறுவதில்லை.

அவன் வேறு பெண்ணை மணக்கப் போவதாக செய்தி கிடைத்தபோது ஏகப்பட்ட உளைச்சல்கள். “அந்த பெண் தன்னை விட அழகாக, ஒப்பீட்டளவில் எல்லா வகையிலும் தன்னை விட உயர்வாக இருப்பாளோ? அவளை மணந்தவுடன் தனக்காக, தன்னை தக்க வைப்பதற்காக பட்ட கஷ்டங்கள் யாவும் வியர்த்தம் என்று நினைக்க தோன்றுமோ அவனுக்கு?” என்று அல்லாட்டமாக இருந்தது. ஆனால் அவை எதையும் விட அவள் மனதில் தோன்றியதோர் எண்ணம் தான் அவளை ஊரை விட்டு விரட்டியடித்தது. “ஒருவேளை, அவன் அடுத்த பெண்ணோடு சேர்ந்து அழகாக குடித்தனம் நடத்தினால், முதல் கல்யாணம் முறிந்துப் போனதில் அவனுக்கு பங்கே இல்லை என்றாகிவிடுமே” என்று பயந்தாள்.

சில வாரங்கள் நத்தை போல ஊர்ந்த பின்பு மாலை வேளையில் அவள் வழக்கமாக அருந்தும் காபிக்காக வழக்கமில்லாத வழக்கமாக ஆபீஸ் அருகே இருக்கும் சிறிய ஹோட்டலில் தன் சக பணியாளர்களுடன் காத்திருந்தாள். அப்போது வெள்ளை வேஷ்டி சட்டையுடன் தலையை கழுத்து மட்டத்திலிருந்து சற்றே முன்தள்ளியவாறு  கீழுதட்டை பிதுக்கிக் கொண்டு உள் நுழைந்து அமர இருக்கைக்காக கண்களால் துழாவிய உருவத்தை கண்டதும், அவளுடன் வந்திருந்தவர்கள் இளைஞனாயிருந்த சுதாகர் “சார்…. ராமசாமி சார்….. இங்கே வாங்க!” என்று அவள் ஆட்சேபம் தெரிவிக்கும் முன்பாக கூவி அழைத்து விட்டான்.

ராமசாமிக்கு இந்த குழுவினரோடு அதிகம் பரிச்சயம் இல்லை. ஆனால் அடிக்கடி கண்ணில் படுகிற முகங்கள் என்கிற அளவுக்கு ஆண்கள் இருவரையும் அவருக்கு தெரிந்திருந்தது. இடம் கிடைத்தால் போதுமென வந்த இடத்தில் அவலும் கிடைத்தால் மறுப்பானேன் என அமர்ந்து கொண்டார். இவர்களை போல விசிறிகள் அவர் வாயை கிளறுவதற்காகவே அவரை அடிக்கடி அழைப்பதுண்டு. இதுபோன்ற தனிப்பட்ட விவாதங்களில் அவர் சொல்லுகின்ற நியாயங்களே ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். ஆனால் அதை பொதுவெளியில் ஏற்றுக் கொள்பவர்கள் குறைவு.

“ஹல்லோ சார். என் பேரு சந்தோஷ். இவங்க சகுந்தலா. எங்க சீனியர் ஆபீசர். இவரு ராஜகோபாலன். இவரும் ரொம்ப சீனியர்தான். நாங்க ________ பேங்க்ல வேலை செய்யறோம். சகுந்தலா மேடம் ஆபீஸுக்கும் இந்த ஊருக்கும் புதுசு. போன மாசம் உங்க பேச்சு ஏ ஒன்! என்று சொல்லிக் கொண்டே போனான்.

அதற்குள் அவர்கள் மூவருக்கும் காபி வந்துவிட தன் காபியை முந்திக் கொண்டு ராமசாமிக்கு தந்துவிட்டு இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லி சந்தோஷ் ஆர்டர் செய்தான். ராமசாமி அதனை உபசாரமாக மறுத்து சங்கடப்படுத்தாமல் சிரித்தவாறு பெருந்தன்மையாக அவனது உபசரணையை ஏற்றுக் கொண்டது அவர் மீது சகுந்தலாவுக்கு மரியாதை தோன்ற மற்றுமோர் காரணமானது. ஆனாலும் வெகு போராடி மீட்ட மன அமைதி குலையும் வண்ணம் பேச்சு போய்விடக் கூடாதே என்னும் ஜாக்கிரதை உணர்வோடு மௌனமாக காபியை அருந்தலானாள்.

ஆனால் சந்தோஷ் விடுவதாக இல்லை. அவன் ஓர் அதிகப்பிரசங்கி என மனதின் ஒரு கூறு ஆத்திரப்பட்டாலும் அவளால் முழுமையாக இந்த சூழ்நிலையை தவிர்க்க, வெறுக்க முடியவில்லை. “சார்… நிஜமாலுமே பெண்கள் படிக்கிறது, வேலைக்குப் போறது, இதெல்லாம் தப்புங்கறீங்களா? இல்ல, எல்லாம் பிரசங்கத்துக்கு மட்டும்தானா? சாருக்கு பொண்ணுங்க இருக்காங்களா?” என்று கேட்டு வைத்தான்.

அவர் சிரித்துக் கொண்டே “மொள்ள மொள்ள தம்பி!! ஒவ்வொண்ணா கேள்வி கேட்கனும்” என்றார் சிரித்துக் கொண்டே. சந்தோஷ் சிறிது வெட்கமாக சிரித்துக் கொண்டான். “தம்பி என்னை பேட்டி காண்றாப்பிலே தெரியுது…!” என்றார். புன்னகை பளீரிட்டது.

சகுந்தலாவுக்கு விரைந்து அவ்விடத்தை விட்டு அகன்றுவிட மனம் துடித்தது. ஆனால் நினைப்புக்கு எதிராக உடல் ஆணியடித்தாற்போல நகர மறுத்தது.

“சொல்லுங்க சார். ப்ளீஸ்!!” என்று தன் ஆவலை மறைக்காமல் ராஜகோபலனும் வற்புறுத்தினார்.

“எனக்கு இரண்டு பொண்ணுங்க. ஒரு பையன். முத பொண்ணு டெல்லியிலே வேலை பாக்கிறா.. இரண்டாவது பெண்ணும் பையனும் அவங்கவங்க குடும்பத்தோட அமெரிக்காவிலேயும் கனடாவிலேயும் செட்டில் ஆயிட்டாங்க”.

மேடையிலே இம்மாம்பேச்சு பேசுறீங்களே… உபதேசம்லாம் ஊருக்கு மட்டும்தானா? உங்களுக்கில்லியா? ன்னு நீங்க கேட்க வர்றது புரியுது. அதுல பாருங்க. இந்த பக்கம் போவாதீங்க. பள்ளம் இருக்குன்னு மத்தவங்களுக்கு எச்சரிக்க பண்ணனும்னா அவன் அந்த பள்ளத்துல உழுவாததான் இருக்கனுமா என்ன? உழுந்து எழுந்தவன் எச்சரிக்கை பண்ணினா, “இவரு மட்டும் சந்தோஷமா உழுந்து உழுந்து எந்துக்குவாரு. நாம உழுந்தா என்னவாம்?” னா கேட்பீங்க? உழுந்து எழுந்தவனுக்குதான பள்ளத்தோட ஆழமும் ஆபத்தும் கரெக்டா தெரியும்?

“அதுல பாருங்க… எம்புள்ளைங்களுக்கு புள்ளை பொறந்தா ஆயா வேலை பார்க்க எம் பொண்டாட்டிதான் போனா. ஆனா அவளுக்கு ஒரு தேவைன்னு வந்தப்போ பணம் அனுப்பினதோட கடமை முடிஞ்சிட்டதா நெனைச்சு இந்த பசங்க ஒதுங்கிட்டதுங்க”.

“ஒரு முறை இதுக்கு உடம்பு ரொம்ப சுகமில்லாம பூட்டுது. ரெண்டு நாள் தாண்டுமான்னு கெடந்தா.  பையனையும் பொண்ணையும் வந்து பார்த்துட்டு போங்கோன்னா பையன் மட்டும் வந்தான். அவன் வந்த நேரம் இதுக்கு உடம்பு தேறிட்டுது. தனியா அழைச்சிட்டு போயி, “இது மாதிரி சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம் என்னை இவ்ளோ தூரம் வரவழைக்கனுமா??” ன்னு கேட்கறான். பெத்தவ பிழைச்சு எழுந்ததை பத்தின சந்தோஷத்தை விட நாளைக்கு ஊருக்கு போன பிறகு அவளுக்கு எதுனா ஆயிடிச்சின்னா, திரும்ப லொங்கு லொங்குன்னு ஓடியாரனுமேங்கற எரிச்சல்தான் அவம்பேச்சுல தெரிஞ்சது. யாருகண்டா.. அப்படி ஆயிருந்தா திரும்ப வந்திருப்பானோ.. இல்ல எலக்ட்ரிக்கல் க்ரமட்டோரியத்துல குடுத்துருங்கன்னிருப்பானோ..?!!” பெருமூச்சு வெளிப்பட்டது.

“இங்க நம்ம ஃபிரண்டோட பொண்டாட்டி பெட்ரிடனா இருக்காங்க. ஃபிரண்டு போன வருஷம் திடுதிப்புனு செத்து பூட்டாரு. இந்த அம்மாவை பார்த்துகிட்டிருந்த நர்ஸு ரெண்டு நாளு காய்ச்சல்னு வரல. பெத்த பொண்ணுங்க கல்யாணமாகி வேற வேற எடத்துல செட்டில் ஆய்ட்டாங்க. மருமவளுக்கு பார்க்க இஷ்டமில்ல. மவன்தான் ரெண்டு நாளும் டயபர் மாத்துனானாம். போனவாரம் நானும் என் சம்சாரமும் பார்க்க போனப்ப அந்தம்மா ஒரே அழுகை. என்னா சொல்றது பாவம்??” மற்றும் ஒர் பெருமூச்சுடன் தொடர்ந்தார். சாவப்போற நேரத்துல சங்கரா போடறதுன்னு கேள்வி பட்டிருக்கேன். அதுல சங்கராங்கறது நாம தான்னு தோணுதுங்க. நம்மளையும் நாம உபாசிக்கனும் இல்லையா? நம்மளை நாமே உபாசிக்கதான் சமூகம்ங்கற கட்டமைப்பை உருவாக்கி வச்சிருந்தாங்களோ? ஒரு குடும்பத்துக்காக சோறு சமைக்கிறதும், ஆரோக்கியம் பேணுறதும், குழந்தைகளை பெத்துக்கறதும், அவங்களை சமூக பொறுப்போட வளர்க்கிறதும் முக்கியமான கடமைங்க. அதை செய்கிற பொம்பளைங்களை மதிக்கனும். அத்த விட்டுட்டு மதிப்பை தேடி அவங்களை வெளியிலே அலைய வச்சுட்டோம். இப்போ எல்லாத்தையும் தேடி நாமளே வெளியிலே அலையும்படி ஆகிப்போச்சி. சிவன்ட்ட கோவிச்சுகிட்டு சக்தி பிரிஞ்சி போறாப்புல… ஹூம்ம்ம்… என்னா பண்ண முடியும்??

திடீரென ஓர் அமைதி சூழ்ந்தது. நால்வரும் அவரவர் உலகில் அமிழ்ந்து சுயவிசாரம் செய்து கொண்டிருந்தனர்.

“சரி சார். அதுக்காக இப்போ லேடீஸ படிக்காதீங்க, வேலைக்கு போவாதீங்கன்னு சொல்ல முடியுமா? அது ப்ராக்டிக்கலா சாத்தியம் இல்லேல்லியா??” சந்தோஷ் கேட்டான். “அதோட ஒருத்தர் சம்பளத்திலே குடித்தனம் நடத்துறதெல்லாம் இந்த காலத்துல சாத்தியமா??”

“ஆமாம் தம்பி. இனிமே அப்டி சொல்ல முடியாதுதான்”. உடனே ஒப்புக் கொண்டார். ஏன்னா நாம புலி வால புடிச்சிப்புட்டோம். அதுலேர்ந்து நமக்கு விடுதலை அத்தனை சுலுவா கெடைச்சிடுமா? ஆனா தம்பி….. நாம ஒண்ணை திரும்ப அடையனும்னா, இழந்துட்டதோட அருமையை முதல்ல தெரிஞ்சிக்கனும். தப்பு நடந்து போச்சுங்கறத முதல்ல ஒத்துக்கிடனும். பொம்பளைங்களை குறை சொல்றதை நிப்பாட்டிட்டு அவங்களுக்கு வீட்டுல நிம்மதியா இருக்குறமாதிரி சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தரனும். பொம்பளைங்களை சக மனுஷியா பாக்குறதை நிறுத்திட்டு அவங்களை தெய்வமா கொண்டாடனும். கொண்டாடுற இடத்துல தெய்வம் இருந்துதான தீரனும்? எல்லாத்தையும் சட்டம்போட்டோ சீர்திருத்தம் பண்ணியோ மாத்த முடியாது.

தம்பி சம்பளத்தை பத்தி பேசுனீங்கள்லியா? அவங்க வீட்ல இருந்து செய்கிற, கவனிச்சுக்கிற பொறுப்புகளுக்கு மதிப்பு போட்டு பாருங்க!! அதனால நடக்குற நன்மைகளுக்கு விலை போட முடியுமா உங்களால??

ராணி தேனீய கூட்டுக்குள்ள வச்சி மத்த தேனீங்க பாதுகாக்குதே… தேனெடுத்துட்டு வந்து சம்பாதனை செய்யற, கூட்ட காபந்து பண்ற தேனீக்களுக்கு மதிப்பா? இல்லே கூட்டிலேயே இருக்கிற ராணி தேனீக்கு மதிப்பா? அப்படிதான்.. ஆம்பளைங்க எவ்ளோ சம்பாதிச்சாலும் எம்மாம் உசரத்துக்கு போனாலும் வீட்டுல இருக்கிற பொம்பளைக்குதான் மதிப்பு குடுக்கனும். அவளை பொக்கிஷமா மதிக்கனும்.

பெரும்பாலும் பேசாமல் அமைதியை காக்கும் ராஜகோபாலன் திடீரென ஒரு கேள்வி கேட்டார்.

“சீர்திருத்தம் இல்லேன்னா ஜாதி ஒழிப்பு சாத்தியமுங்களா?? தீண்டாமை ஒழிஞ்சதுல்லாம் பெரிய விஷயமில்ல??”

“தீண்டாமை ஒழிஞ்சிருச்சிங்கறீங்களா?”

“இல்லேங்கறீங்களா??”

“ஐயா….! முன்னே கவுருமன்ட்டு பள்ளிக் கூடத்துல இந்த தீண்டாமை கொடும இருஞ்ச்சி. அதை ஒழிக்கனுமின்னு போராடினாங்க. என்ன ஆச்சி?? இந்த பள்ளிக் கூடத்துல இவுங்களே படிச்சிக்கட்டும். உங்களுக்கு “அவங்க” வர முடியாத பள்ளிக் கூடத்த தனியா தந்துடறேன்னு சொல்லி காசு கட்டி படிக்கிற ஸ்கூலா தொறந்தாங்க. அப்புறம் புலிய பார்த்து பூனை சூடு போட்டுகின கதையா நாமளும் நம்ம புள்ளைங்களை கஷ்டப்பட்டு பணங்கட்டி படிக்க வெச்சா அதோட காஸ்ட்லியா ஃபீஸ் கட்டி படிக்க வைக்க சிபிஎஸ்ஸி, ஐஸிஎஸ்ஈ, இன்ட்டர்நேஷனல் ஸ்கூல் இன்னும் எத்தன? எப்படியும் அந்த இடைவெளி அப்டியே தானுங்களே இருக்கு??

அப்போ ரெட்டை கிளாஸ் முறை டீக்கடையிலே இருந்திச்சி. இப்போ கடையவே ரெட்டை ஆக்கிப்புட்டாங்கள்ல?? இதோ… இந்த கடையிலே வந்து பணக்காரன் காபி குடிப்பானா?? இல்ல, நம்மள மாதிரி மாச சம்பளக்காரன் தினமும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல காபி குடிக்க முடியுமா?

அத்தல்லாம் உடுங்க. கோவில் க்யூவ் கூட பணங்கட்டுற சாதிக்கு தனி லைனு. பணங்குடுக்காத சாதிக்கு தனி லைனு தானுங்களே??
இதே கதை தானேங்க ஆஸுப்பத்திக்கும்??

இதுலாம் நவீன தீண்டாமை இல்லீங்களா?
தீண்டாமை ஒழியலங்க. தீண்டாமை மட்டும் இல்ல. ஒரு சமூகத்துல இருக்கிற எந்த பிரச்சனையா இருந்தாலும் அதை ஒழிக்கறது சாத்தியமில்லைங்க. அதெல்லாம் மனுஷ மனசோட வக்கிரங்கள். Negative power, அல்லது energy ன்னு சொல்லலாம். Energy can never be destroyed. It can only be changed from one form to another. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. படிச்சதில்ல?? அதுனாலதான் மாற்றம் ஒன்றே மாறாதது சொன்னாங்க.

“அப்போ என்ன தப்பு எங்க நடந்தாலும் கண்டுக்காம உட்ரனுங்கறீங்களா?” சகுந்தலா தன்னை மீறி கேட்டுவிட்டாள். “நமக்கு எதிரா நடக்கிற அநியாயங்களை கண்டும் காணாம விட்டுடனுங்கறீங்களா? அவங்க புழுவை போல நம்மள நடத்தினா அதையும் அமைதியா கடந்து போயிடனுங்கறீங்களா?” உணர்ச்சி வேகத்தில், அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் அவள் தேகம் நடுங்கியது. கையில் பிடித்திருந்த பீங்கான் காபி கோப்பையும், அவளது கீழ் உதடு நடுக்கமும் அவளை மற்றவர்களுக்கு காட்டிக் கொடுத்தது.

ஒரு விநாடி அவளை உற்றுப்பார்தார். “அப்படி இல்லேம்மா. ஆனா தப்பை தட்டிக் கேட்கிற முறைய மாத்தனுங்கறேன்.”

“அம்மா என்னவாயிருக்கீங்க?” என்று விநயமாக கேட்டார்.

“அவங்க டிராஃப்ட்ஸ்மென் சார்”, என்றான் சந்தோஷ்.

“ஓ…!” என்றார் மெச்சுதலாக. அம்மாடி… ப்ரொட்டிராக்டர் வச்சி படம் வரைவீங்கள்லியா?

“ம். வரைவோம்” என்றாள் அசுவரஸ்யமாக. அவர் அவளை அம்மாடி என்றழைத்ததை அவள் ரசிக்கவில்லை.

“அதுல, ஆரம்பப்புள்ளியிலேர்ந்து முப்பது டிகிரில வைக்கிற புள்ளிக்கும், முப்பத்தஞ்சியிலே வைக்கிற புள்ளிக்கும் அதிக தூரம் இருக்காது மேடம்.” அங்கே மேடம் என்ற இடத்தில் அவர் கொடுத்த அழுத்தம் அவர் தன்னுடைய எண்ணப் போக்கினை கண்டுபிடித்துவிட்டதை காட்டியதோ என சங்கடப்பட்டாள்.

“அதுவே ஒரு மைல் தூரத்துக்கு அப்பால போனா…..?? பல மைல் தொலைவுக்கு அப்பால போனா…..? வித்தியாசம் அஞ்சி டிகிரிதான். ஆனா டெஸ்டினேஷன் தூரத்தை பொருத்து அதோட முக்கியத்துவம் மாறும் இல்லையா?” இந்த முறை அவள் சங்கடத்தை உணர்ந்தாற்போல அம்மா என்றோ மேடம் என்றோ விளிக்காமல் மொட்டையாகவே முடித்தார்.

“லாங் டர்ம் ரிலேஷன்ஷிப்ல பிரச்சினைகள் வர்றப்போ, அதை கையாள்ற விதத்துல, எதிர்ப்பு தெரிவிக்கிற விதத்துல சின்ன மாற்றம் செய்து பார்க்கலாமில்ல?” என்று முடித்தார்.

அன்று திரும்ப ஆபீசுக்கு வந்தபோது மூவரும் சிந்தனை வயப்பட்டவர்களாக அமைதியுடன் இருந்தனர்.

அன்று மாலை அவளை சந்தித்து பேச பிரவீன் வந்திருந்தான். பிரவீன் அவளது ஃபேஸ் புக் நண்பன். ஃபேஸ் புக்கில் அறிமுகமான நட்பு சமீபகாலமாக நெருக்கமாக மாறி வருகிறது. சில மாதங்களாக திருமணம் நாம் ஒருவரையொருவர் மணந்து கொண்டால் என்ன என கேட்க ஆரம்பித்திருக்கிறான். இந்த பேச்சு எழுந்ததிலிருந்து அவன் மீது அவளுக்கு ஆர்வம் குறைந்து அவநம்பிக்கையும், ஒருவிதமான அமைதியின்மையும் தோன்றத் தொடங்கியிருந்தது. இன்று மனம் குழம்பியிருந்த நிலையில் அவனுடைய கேள்விக்கான பதிலை உடனடியாக சொல்லாமல் இரண்டு நாள் கழித்து முடிவாக சொல்வதாக தள்ளிப் போட்டாள்.

இரண்டு நாட்கள் கழித்து கல்யாணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். நிதானமாக யோசித்ததில் கல்யாணம் ஒரு விலங்கு என அவளுக்கு உறுதிப்பட்டிருந்தது. தன் மீது ஆதிக்கம் செலுத்தும் உரிமையை ஒரு ஆணுக்கு வழங்க அவள் விரும்பவில்லை.

ராஜகோபாலன் அவரது மனைவி தார்க்கோல் போட, தனது மகளுக்கு வந்த வெளிநாட்டு வரனை எப்படியாவது பேசி முடித்துவிடுமாறு அவரது நண்பரிடம் ஃபோன் மேல் ஃபோன் போட்டு மன்றாடிக் கொண்டிருந்தார்.

சந்தோஷ் அவனது இரண்டரை வயது மகளுக்கு நகரின் முக்கிய சிபிஎஸ்ஸி பள்ளியின் எல்கேஜி அட்மிஷனுக்கான விண்ணப்பக் கடிதத்தை வாங்குவதற்காக விடிகாலை குளிரில் க்யூவில் கழுத்தில் கட்டிய மஃப்ளர் மற்றும் ஃபிளாஸ்க்கில் இரண்டு காபியுடன் நின்று கொண்டிருந்தான். நேற்றிரவு இவன் பேசியதையெல்லாம் கேட்ட பிறகு அவனுடைய மனைவி நொட்டை விட்டுக் கொண்டு சொன்னது நினைவில் ஒலித்தது.

“அல்லாம் பள்ளத்துல உழுந்து எழுந்த பிறகு பிரசங்கம் பண்ணிக்கலாம். இப்போ போய் அப்ளிக்கேஷன் வாங்கற வழிய பாருங்க!!”


 

Average Rating

5 Star
100%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “செக்குமாடு?

  1. Wow! அருமை!! வரிகளை படுக்கும்போது கதையோடு நாமும் ஒரு பாத்திரமாகும் ஒரு ஈர்ப்பு!! எழுத்து சித்தர் பாலா நினைவுக்கு வருகிறார்!!

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page