Latest

ரத்னா வெங்கட் கவிதைகள்


விழுங்கிப் புதைத்து
தடுமாறாது
நிமிர்வதற்கும்

விரும்பி நிழலாக உழல்வதா
இல்லை
நிமித்தமுணர்ந்து
நிர்த்தாட்சண்யம் பார்க்கவோ யாசிக்கவோ இன்றி
விலகிப் புறமிட்டு நடப்பதாவென
முடிவெடுப்பதற்குமிடையே
கல்ப கோடி கணங்கள்
கலக்கத்தில் கழிய

கடப்பதென்னும் வித்தை பயில இன்னும் எத்தனை முறை
சாம்பலிலிருந்து உயிர்க்க?

குதூகலங்கள் வடிந்து
வெற்றுப் பார்வையை
சந்திக்கும் திராணியின்றி
முகம் வெளுத்த சுயம்
ஆடியில் பதுங்குகையில்
ஏதோ ஒரு இயலாமையின்
பிரதிபலிப்பை மட்டுமே
நேரடியாக
நோக்க வேண்டியிருக்கிறது

எதை இழந்து எதைப் பெற?
அருகருகே அமர்ந்திருக்கிற
நிழலும் நிஜமும்
உளச் சலனத்தின்
வெம்மையறியாது
கதைத்துக் கொண்டிருக்க

ஆரம்பமும் முடிவுமற்ற
ஒரு சுழலை
உருவாக்கிய சுவடு மறைக்க
நகக்கண்களை ஆராய்கிறதான
பாவனையில்
விழி சிமிட்டி
உள்ளிழுத்து விழுங்கிப் புதைத்து…


நிழல் வீழ்ந்து கீறல் விழுந்த
கண்ணாடியில்
நிஜம் நின்று முகம் திருத்தும்
பொழுதுகளில்
வண்ணங்கள் குழம்பி
பிம்பம் கலகலத்து
சிதறி இறைந்திட
எதிரொலிக்கும் ஓசை
நானா? நான்தானா? நானேதானா?

துருவங்களின் மாற்றத்தில்
உறைகின்ற கதிரும்
உலர் பனியின் சுவடும்
கரைகின்ற நீலமும்
கரை தொடா அலையும்
முயக்கமற்றுக் கிடக்க
முணுமுணுக்கும் கீழ்ஸ்தாயியில்
நீயா? நீதானா? நீயேதானா?


தா சர்வ காலமும்
நினைவில் வதைக்கிறது
அக்கரையின் பசுமைகள்
திரை மறைத்த விழிகள்
வெற்றுச் சூனியத்தை
வெறித்தாலும்

குறும்பாடுகள்
தாண்டிக் குதிக்கிற
புல் வெளியென்பது
தோற்றப்பிழையென
அறுதியிட்டுக் கூறும்
அறிவின் நோக்கங்களை
கொடுஞ் சொல் வீசிக்
குலையறுக்கிறது
மென்னகை மாறாப் பிறழ்வு

கானல் இறங்கி இறங்கி
கரித்த கண்ணிமைகள்
நேசம் வதையெனக்
கனவில் கண்டுணர்ந்ததை
புனைவென வரைந்து தள்ள
விரல்களைப் பணித்திட
சிரமேற் கொண்டு
படிமக் கவிதையாக்கி
தொகுக்கிறது
ஒத்துழையாத மனது

நூற்றோடு ஒன்று
ஆயிரத்தோடு மற்றொன்று
லட்சத்தோடு பிறிதொன்று
என ஒதுக்கப்பட்டதை
எனதானது என்று பார்க்கையில்

இலக்கியத்தைப் புறந்தள்ளி
முன்னே ஏகுகிறது உணர்வு
மண்டியிடுகிறது மொழி
வல்லூறுகளுக்கென விதிக்கப்பட்ட
வானத்தினடியில்
பட்டாம் பூச்சிகளும்
சிறகை விரிக்கத்தான் செய்கிறது