Latest

சங்க்ராம் ஜெனா- ஒடியா கவிதைகள்


  • நாடோடி

இங்கு, அங்கு, எங்கும்
நாடோடியின் பயணம் முடிவதேயில்லை.
சாலையின் இரு புறமும்
நதிகளைப் பார்க்கிறான்,
மலைகளை, வயல்களை, காடுகளை,
கிராமங்களை, மரநிழலை,
பகலில்
இரவில் நட்சத்திர ஒளியையும்
நடக்கும் போது, சாலை நீளும் போது
காலம் தொடரும் போது,
தனிமையில்
சிலசமயம் உறவினர்கள் கீழே விழுந்தும்
நிலத்தில் ஊன்றிய
மரங்கள், வீடுகளைப் போல்.
ஆனால் சக்கரங்கள் சுழல்கின்றன
புதிய முகங்களைப் பார்க்க,
புதியவர்களை,
உறவில் புதிய அத்தியாயங்களை.
கூட இருப்பது
தொடுகைக்கு
சாலைபோல் நினைவு
பனியின் இடையில்
சூர்ய உதயம் முதல் அஸ்தமனம் வரை
உன் இருப்பின்மையை
நான் சுமந்து கொண்டிருப்பது போல
இந்த வாழ்விலும், பிறகும்.


  • புலி

எனக்கு மூன்று வயது இருக்கும்போது
நான் உன்னை என் பாடப்புத்தகத்தில் பார்த்தேன்.
கண்கள் சிவந்திருக்க, வாய் திறந்திருக்க
மூன்றுமுறை பார்வை தவறிப் போனபின்புதான்
நான் உன்னை நேரடியாகப் பார்க்க முடிந்தது.

எனக்கு ஒன்பது வயது இருக்கும் போது
நந்தன்டகன் மிருகக் காட்சி சாலையில்
உன்னைப் பார்த்தேன்.
இரும்புவேலிக்கு வெளியிலிருந்து
பார்வையாளர்கள் மீது அலட்சியப் பார்வையுடன்
ஒரு சிறு மரத்தடி நிழலில்
நீ தூங்கிக் கொண்டிருந்தாய்.

என் அப்பாவின் கைகளைப்பற்றிக்கொண்டு
நான் உன்னைப் பார்த்தேன்.

பல ஆண்டுகள் கடந்து விட்டன.
நான் ஐம்பதுகளின் மத்தியில்
இருந்தபோது ஒரு சர்க்கஸில்
காலரியில் உட்கார்ந்து கொண்டு
என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு
உன்னை பார்த்தேன்
கட்டக்கில் மகாநதியின் கரையில்.

உன் நிறம் மினுங்கவில்லை
உன் வாயைத் திறந்த போது
சில பற்களைப் பார்க்க முடிந்தது
உன் கண்கள் களையிழந்திருந்தன.

பணிவான மாணவனைப் போல
உன் தலைவனின் கைத்தடியின் ஆணைக்கு
இணங்கி நடந்தாய்

கூட்டத்தின் கைதட்டலுக்கு
நீ தலையைக் குனிந்தாய்
உன் கண்களில் மினுக்கம் இல்லை
எங்களைப் போல நீ ஆகிவிட்டாயா?


  • குறி

குறியில்லாமல் ஏதாவது இடம் உண்டா?
சூரிய அஸ்மனத்திற்குப் பின் வானில்
மழைக்குப் பிறகு பூமியில்
துக்கத்திற்குப் பின் இதயத்தில்
வழிபாட்டிற்குப் பின் சிலையில்
புணர்ச்சிக்குப் பின் உடம்பில்.

குறியை அழிக்க முடிகிறதா?
அழித்தபின் மறைகிறதா?
இந்திரனின் குறி
அகல்யாவின் உடம்பில் ஆனது
கடம்பா மரத்தின் விளைவை
யமுனா கைக்கொண்டது
என் கவிதைகளின் பக்கங்களில்
உன் ரேகைக்குறி இருப்பது போல்.
மோதிரத்திற்காக சகுந்தலை தேடல்
பயனுள்ளது போல்
நதியில்
மீன்களின் கூட்டத்தில்
அரச சபையில்
யாரோடையதன் நகத்தை
சந்திரசேனா தேடியவகையில்,
ராதாவின் உடம்பில்
பல்குறிகள்…..

குறிகள் ஆன்மீகத்தின்
அயர்ச்சியில்லாமல்
நாம் குறிகளைத் தேடி எப்போதும்
காதலிப்பது முதல்
மரணத்தைச் சந்திப்பது வரை.


ஒடியா: சங்க்ராம் ஜெனா

தமிழில்: சுப்ரபாரதிமணியன்

 

Authors

  • சங்ராம் ஜெனா, ஒடியாவில் ஐந்து கவிதைத் தொகுப்புகளையும், ஆங்கிலத்தில் மூன்று கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகள் Indian Literature, Kavya Bharati, New English Review, Bangladesh, Modern Poetry in Translation, Snowy Egret, The Text, Indefinite Space , California Quarterly போன்ற இதழ்களில் வெளியாகி உள்ளன. இவரது கவிதைகள் இந்தியா மற்றும் சர்வதேச தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி (நேஷனல் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்) விருது மற்றும் கவிதைக்கான பானுஜி ராவ் விருது உட்பட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். ஒடியாவில் நிஷாந்த் மற்றும் ஆங்கிலத்தில் மார்காசியா ஆகிய இரண்டு இலக்கிய இதழ்களின் ஆசிரியராகவும் உள்ளார்.

  • சுப்ரபாரதிமணியன் (ஆர்.பி.சுப்ரமணியன், 25 அக்டோபர் 1955, திருப்பூர்) தமிழக தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பலதளங்களிலும் முப்பது வருடங்களாக எழுதி வருபவர். அனைவராலும் அறியப்பட்டவர். இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது, தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண்களைச் சுரண்டும் சுமங்கலி திட்ட ஒழிப்பு, நொய்யலை பாதுகாத்தல் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவர். இவர் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடாத்திவருபவர். திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுபவர். தொலை பேசித்துறையில் உதவிக் கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். இவரது 25 சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஹங்கேரி மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.