26 April 2024

 எட்டி உதைத்த வேகத்தில் நான்கடி தள்ளி விழுந்தான் பாத்துமா.  சுற்றிலும் இருந்த கும்பல் ‘ஹோ’ வென பச்சாதாபப்பட்டது.  ஆனாலும் தடுக்க ஆளில்லை.  எனக்கென்ன என்ற மனோபாவமும், ஏன் வம்பு என்ற பயமும் பலர் முகத்தில் பிரதிபலித்தது.

பாத்துமா, பாத்மா, சிலசமயம் ‘யேய்’ என்று அழைக்கப்படும் பாத்துமாவின் வயது அந்த சமயம் ஒரு எழுபதாவது இருக்கும்.  இதுகூட நான் சிறுவயதில் இருந்து அவனை பார்த்ததால் வந்த கணிப்புதான்.  பாத்துமாவை அவர் என்று சொல்வது எங்கள் யார் மனதிலும் படியவேயில்லை. பாத்துமா என்றால் அவ’ன்’ தான். இது மாறவேயில்லாத அதிசயம் என்னவென்று புரியவில்லை. சிறுவயதில் நான் பார்த்த அதே முகம், அதே வலிமையான உடல் கொஞ்சமும் மாறாத அந்த பார்வை.

என் சிறுவயதில் சாப்பிட மறுக்கும் வேளைகளில் எங்களை பயமுறுத்த அம்மாக்கள் எடுக்கும் ஆயுதம் அவன். அப்போதெல்லாம் தெருவின் ஓரிடத்தில் இரவு வேளைகளில் பெண்களின் மாநாடு நடக்கும். கொஞ்சம் வசதியான ரிட்டயர்ட் முன்சீப்பின் வாசல்தான் அது. எப்படியும் ஐந்து ஆறு பேருக்கு குறையாமல் கூடிவிடுவார்கள். தவிர்க்கமுடியா கூட்டம் அது. முன்சீப் மனைவிதான் தலைமை. மற்றவர்கள் வந்தமர பேச்சு ஆரம்பிக்கும். எப்படி, எதில் ஆரம்பம் ஆகுமோ தெரியாது. அன்றைய நிகழ்வுகள், பக்கத்து டூரிங்டாக்கீஸில் ஓடும் படம், இன்னபிற அம்சங்கள் கலந்து விளையாடும்.  தொலைக்காட்சிகள் பெருகாத காலம். அப்போது சிறுவர்கள் நாங்கள் வந்து சுற்றிலும் அமர, எங்களுக்கு தட்டில் பிசைந்த சாதமும், சொம்பில் தண்ணீருமாய் அவர்கள் தயாராக இருப்பார்கள். பேச்சு சுவாரசியத்தில் கிட்டத்தட்ட ஒருமணி நேரமாய் சிறுக சிறுக ஊட்டுவார்கள்.

சிறுவர்கள் நாங்கள் தனியே அவர்களின் பின்புறமாய் அமர்ந்து விளையாடுவோம். யாருடைய அம்மாவுக்கு பேச்சில் இடைவெளி விழுகிறதோ அந்த பையனுக்கு அழைப்பு வரும். ஓடி ஒரு வாய் வாங்கிக்கொண்டு வந்து தொடருவோம். யாராவது போகவில்லையென்றால் ,

“ அந்த பாத்மாவ கூப்பிடவா “ என்ற குரல் வர, நடுங்கிப்போய் வாங்கிக்கொள்வோம். கிட்டத்தட்ட பேயை மிஞ்சிய பயம் அது. பெண்கள் மாநாட்டின் நடுவே ஒருதடவை கிடைத்த தகவல், ‘கொலை பண்ணிட்டு ஓடி வந்த மலையூர் மம்பட்டியான்தான் இந்த பாத்மா’ என்பது.  மலையூர் மம்பட்டியான் திரைப்படம் வந்து சக்கைபோடு போட்ட காலம் அது.  பின்னர் ஒரு காலம் யோசிக்கும்போது ஐம்பதுகளில் இறந்துபோன மம்பட்டியான் எப்படி வந்திருக்க முடியும் என்ற லாஜிக் இடித்தது. ஆனாலும் பயம் பயம்தானே.

நான் ஒரு சமயம் ஐஸ் விளையாட்டின்போது, ஒளிந்துகொள்ள இடம் தேடி அலைந்தேன். அப்போது எங்கள் விளையாட்டு எல்லை என்பது அளவிடமுடியாதது. எங்கு வேண்டுமென்றாலும் போகலாம். ஒளியலாம். ஆனால் இப்போது யோசிக்கும்போது ஒரு மர்மமான நூலால் பிணைத்ததுபோல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்தான் நாங்கள் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது புரிகிறது. நான் அந்த பிள்ளையார் கோயிலை மறைவிடமாக தேர்ந்தெடுத்தேன். இந்த முறை நான் ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயம். பெரும்பாலும் இந்த பழைய கோயிலில் தேடுவதையோ, ஒளிவதையோ சிறுவர்கள் விரும்புவதில்லை. பாத்துமாவின் தூங்குமிடம் அது. ஆனால் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற வெறியும், பாத்துமா சற்றுநேரம்முன் தூரமாய் நடந்து செல்வதையும் பார்த்ததால் தைரியமாக அந்த முடிவை எடுத்தேன்.

கோயில் என்பது ஒரு பழைய சுண்ணாம்பு கட்டிடம். அதன் வாசல் மூடுவதேயில்லை.  இருதிறப்பு கொண்ட ஒரு கதவு. நேராக பிள்ளையார் சிலை. கட்டிடத்தை சுற்றி எப்போதோ காம்பவுண்ட் சுவர் இருந்திருக்கலாம். இப்போதோ வெறும் இடிபாடுகள்தான். ‘ஆ’வென்று வளர்ந்த ஒரு புளியமரம் உண்டு.  காசுவைத்து கோலி விளையாடுவதும், சில சமயம் சீட்டாட்டமும் அந்த மரத்தடியில் நடக்கும்.  இதனாலேயே இது மற்றவர்களால் ஒதுக்கப்பட்ட இடமாக ஆகிவிட்டது. பிள்ளையாரும் தனியாகவே எப்போதும் இருப்பார். ஏதேனும் பரீட்சை சமயங்களில் மட்டும் நாங்கள் ஒரு கற்பூரம் ஏற்றி கும்பிட்டுவிட்டு செல்ல அந்த கோயிலை நாடுவோம். பூஜைகள் கிடையாது. அதனாலேயே பாத்துமாவின் இருப்பிடமாக பல ஆண்டுகாலமாக அது இருந்தது.

நான் மெதுவாக அந்த கதவைத்திறந்து உள்ளே பதுங்கிக்கொண்டேன். அந்த கதவின் சிறு துளை வழியே வெளியே பார்க்கமுடியும். என் நண்பர்கள் அங்கே சுற்றிச்சுற்றி தேடுவது கண்டு பரவசமாகியது. இன்று கண்டிப்பாக ஜெயித்து விடுவேனென்று தோன்றியது.  கொஞ்ச நேரம் போயிருக்கும். நண்பர்கள் கண்ணில் படவில்லையாதலால் தைரியமாக வெளியே வர எத்தனித்து கதவைதிறக்க , வாசலில் படுத்திருந்த  அந்த உருவத்தை பார்த்ததும் ஜிலீர் என்று ஒரு பய பந்து எகிறி நெஞ்சில் அடைத்தது. முழுமையாக வாசலை அடைத்து படுத்திருந்தான் பாத்துமா.

எனக்கு கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வந்தது. வாழ்வின் மாயகணங்களில் மாட்டிக்கொண்ட மிரட்சி ஏற்பட்டது. அப்படியே மெதுவாக பின் நகர்ந்து கதவின் பின் பதுங்கிக்கொண்டேன். எவ்வளவு நேரமோ தெரியவில்லை. விளையாட்டு மும்முரத்தில் சாப்பிடக்கூட போகாமல் இருப்பது பழகிய விஷயம் என்பதால் இப்போதைக்கு வீட்டிலும் தேடப்போவதில்லை. முழுமையான பயத்தின் பிடியில் நடுங்கி அப்படியே இருந்தேன்.

“ஹா….ஹா……ஈவ்வ்…அக்க்”….என்று ஒரு கூக்குரல் எதிரொலிக்க, முதல் தடவையாக பாத்துமாவின் குரல் கேட்டு அதிர்ந்துபோனேன். இதுதான் இவன் குரலா. கடவுளே என்னை அவன் கண்டுபிடித்து, சாப்பிட தயாராகிறானோ. மெதுவாக எட்டிப்பார்த்தேன் அவன் இன்னமும் நகர்ந்து முழுதாக அடைத்துக்கொண்டு படுத்திருந்தான். என்னை கவனிக்கவில்லை. கிழிந்த ஒரு வேட்டி, எப்போதும் அணியும் காக்கி நிற கிழிந்த சட்டை. அவனுக்கு தீபாவளிக்கு என்று சிலர் இதை எடுத்துக்குடுப்பார்கள். அதை எப்போது போடுகிறானோ அதிலிருந்து மாற்றும்வரை அவன் கழட்டுவதே இல்லை.

கொஞ்சம் தைரியம் வந்து, மெதுவாக நகர்ந்து அவனை தாண்டலாமாவென யோசிக்க அவன் சட்டென்று முழித்து என்னை பார்த்தான். எனக்கு சப்தநாடியும் ஒடுங்கியது.  மெதுவாக எழுந்தான். கொஞ்சம் இருந்த தைரியமும் என்னை விட்டுப்போக, உயிர்பயம் பிரவாகமெடுக்க மிக வேகமாக அவனை ஒதுக்கித்தள்ளிவிட்டு ஓடினேன். அவன் மீது மோதிய வேகத்தில் அவன் சற்று விழுவதுபோல் நகர்ந்து சமாளித்து உட்கார்ந்தான். நான் வேகமாக ஓடி காம்பவுண்டின் வாசலில் நின்று பார்த்தேன். அவன் அந்த புளியமரத்தையே உறுத்து பார்த்துக்கொண்டிருந்தான்.

“போடா… பாத்துமா….” என்று அழுகை கலந்த குரலில் சத்தமிட்டேன். அவன் என்னை கவனித்து திரும்ப, ஒரே ஓட்டமாக ஓடி வீட்டுக்கு வந்து விழுந்தவனுக்கு இரண்டு நாட்களாக நல்ல காய்ச்சல்.

சிலநாட்கள் நான் அந்த கோயில் பக்கம் போகவோ, பாத்துமாவை பற்றி நினைப்பதையோ தவிர்த்தேன். ஒருசில நாள் கழித்து எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றான் பாத்துமா. நான் வேகமாக ஓடி உள்ளறையில் ஒண்டப்போக, அப்பா என்னை பார்த்து சிரித்தார்,

“என்னடா… ஐஸ் விளையாட்டா….?”

“வந்து…. இல்லப்பா… அந்த பாத்துமா… வெளிய”

“ஹாஹா… நீயுமாடா பயப்படற”

“உங்களுக்கு பயம் இல்லியா?”

அப்பா என்னை அழைத்து மடியில் அமர்த்தி அணைத்துக்கொண்டார்.

“குழந்தைகள பயமுறுத்த அவன் பேரை மத்தவங்க சொல்வாங்க… அவன் என்னைக்காவது உங்களை பயப்படுத்தியிருக்கானா…?”

“வந்து … இல்ல… ஆனா அவன் பேசறதேயில்லையே…முறைப்புதான்”

அப்பா என்னை கூட்டிக்கொண்டு வாசலுக்கு வந்தார். நான் கிட்டத்தட்ட கசாப்புகடைக்கு போகும் ஒரு ஆடுபோல் தரையை தேய்த்து இழுத்தபடி அவர் பின் சென்றேன். திண்ணையில் என்னுடன் அமர்ந்தார்.  பாத்துமா அவரை பார்க்காமல் எங்கள் வீட்டு ஓடுகளை எண்ணுவதுபோல் பார்த்துக்கொண்டிருந்தான்.  இரவு தூங்கும்போது ஓட்டை பிரித்து இறங்கி என்னை தூக்கிச்சென்று சாப்பிட யோசிக்கிறானென்று தோன்றியது.

“இந்தா…  இங்க பாத்மா வந்திருக்கான்… வந்து என்னன்னு பாரு” என்றார் அப்பா. அவர் ‘இந்தா’  என்று கூப்பிட்டது அம்மாவை. அம்மாவின் பெயர் சொல்லி அவர் அழைத்து நான் பார்த்ததேயில்லை.

“வேலையா இருக்கேன்… அங்க பாருங்க… புஷ்பா அக்கா வீட்டு செவுத்தில விறகுகட்டு சாச்சியிருக்கு. அவனை பொளந்து போடசொல்லுங்க..” என்று அம்மா உள்ளிருந்து குரல் கொடுத்தார்.

விறகு கட்டு என்பது அப்போதெல்லாம் வீதிவீதியாக விற்று வருவார்கள். வடக்கு மலைக்கு போய் காய்ந்த மரங்களாய் பார்த்து வெட்டுவார்கள். அடிப்புறம் கெட்டியான கட்டைகள், நடுநடுவே சிறுகட்டைகள், முனை நெருங்க நெருங்க குறுகி வருவதுபோல் அடுக்கி கட்டுபோடுவார்கள். கட்டுவதற்கும் கயிறு கிடையாது. காய்ந்த நார்போல இருக்கும் அது. அதுவும் மரங்களில் இருந்து பிரித்தெடுத்தார்போல் இருக்கும். அதை தலையில் சுமந்து கைதொடாமல், விழாமல், கும்பலாக கதைத்தபடி, பெண்கள் நடையாகவே ஐந்தாறு மைல் தூரம் நடந்து வந்து விற்பார்கள். பத்து ரூபாய் முதல், இருபது ரூபாய் வரை கட்டுக்களை பொறுத்து விலை. தெருவில், பேரம் பேசாமல் வாங்க மாட்டார்கள்.

“பாத்மா… அந்தா பாரு… வெட்டிப்போடு” என்றார் அப்பா.

பாத்துமா அவரை கவனிக்கவேயில்லை. அப்படியே ஓடுகளையே பார்த்துக்கொண்டிருந்தான்.  சிறிது நேரம் போய் ஏதோ சுவிட்ச் போட்டாற்போல் நடந்துசென்று அந்த விறகு கட்டை வெகு எளிதாக தோளில் தூக்கி வந்து எங்கள் வாசலில் போட்டான். தொபீரென்று விழுந்த கட்டு புழுதி பரப்பி வீழ்ந்தது. எப்படியும் சரியான கனம் இருக்கும். அவன் திரும்பி அந்த கோடாரியை எடுக்கும்போதுதான் அதை கவனித்தேன். மிகச்சரியான கனமான கோடாரி. அதை தூக்கி அந்த விறகை கட்டியிருந்த நார்களை படபடவென்று வெட்டினான். பின் அதில் மெல்லிதான சுள்ளிகளை தனியே தூக்கிப்போட்டான். கனமான விறகுகள் தனியே பிரித்துவைத்தான். ஒரு அரைமணி நேரம் அவனது கோடாரியின் விளையாட்டை ரசித்துப்பார்த்தேன். அனைத்தையும் பிளந்து முடித்து, வியர்வை வழிய அப்படியே உட்கார்ந்தான். இது தெருவில் தினப்படி நடக்கும் செயல்தான் என்ற போதிலும் பாத்துமா வரும் பக்கமே நாங்கள் தலைகாட்டுவதில்லையாதலால் அன்று அப்பாவின் தைரியத்தில் முழுமையாக கண்டு ரசித்தேன்.

“இப்ப பாரு…இந்த காசை அவன்ட்ட குடு…” என்று அப்பா ஒரு ரூபாய் நாணயத்தை என்னிடம் தந்தார்.

“போப்பா… என்னால முடியாது” என்று அவர் மடியில் குறுகி படுத்துக்கொண்டேன். அவர் சிரித்தபடி “இந்தா பாத்மா… வங்கிக்கோ” என்றார்.

ஆனால் அவன் சட்டைபண்ணவேயில்லை. உள்ளிருந்து அம்மா வந்தார்.

“அய்ய… அவன் என்னிக்கு காசு வாங்கியிருக்கான்… ஆளப்பாரு…” என்றபடி வந்தவரின் கையில் ஒரு தட்டு நிறைய குழம்புடன் பிசைந்த சாதம் இருந்தது.

அதை அவனிடம் எடுத்து போக அவன் கோடாரியுடன் எடுத்து வந்திருந்த தட்டில் அதை வாங்கி, ருசித்து கொஞ்சம் கொஞ்சமாக சிந்தாமல் சாப்பிட்டு முடித்தான். பின் அம்மா தண்ணீர் தர அந்த தட்டை கழுவிவிட்டு, அதிலேயே தண்ணீர் வாங்கி குடித்தான். அதன்பின் அவன் நிற்கவேயில்லை.  சரியான வேகத்தில் நடந்து சென்றேவிட்டான்.

அப்பா என்னை பார்த்து சிரித்தார்.

“இதான் பாத்மா….”

“புரிலபா….”

“இவன் யாருன்னே தெரியாதுபா… நான் விபரம் தெரிஞ்சு பாக்கறேன். மனநிலை சரியில்ல போல. எங்கருந்து வந்தான் ..என்ன ஏது தெரியாது. ஆனா வேலை செய்துட்டு அதுக்கு கூலியா சாப்பாடு வாங்கி சாப்ட்டு போயிடுவான். யாருக்கும் எந்த தொந்தரவும் இல்ல…ரொம்ப நல்லவன்.”

“ஆனா பாத்மா பேசி நான் பாத்ததேயில்லயே….”

“நானே இத்தனை வருஷத்தில் அவன் குரலை கேட்டது இல்லபா”

நான் கேட்ருக்கேனே என்று என் மனதில் நினைத்துக்கொண்டேன். அது எனக்கு அப்போது ஒரு பெருமையாகவும் இருந்தது.

அதன்பின் அவனைபற்றி என் எண்ணம் மாறிப்போனது. பசங்களுடன் விளையாடும்போது  பந்து கோயிலுக்குள் சென்றாலோ, அல்லது பாத்துமாவின் அருகாமையில் செல்லும் சமயங்களிலோ நானே மிக தைரியமாக சென்று என் தைரியத்தை அவர்கள் முன் பறைசாற்றிக்கொண்டேன்.

பின் வந்த ஆண்டுகளில் அவன் ஒரு பொருட்படுத்தப்படாத பொருளாகவே மனதில் இருந்தது.  கோயிலில் இருந்த புளிய மரத்துக்கும், அவனுக்கும் எனக்கு வேறுபாடு தெரியவில்லை. கல்லூரி முடிந்து பணியில் சேர்ந்த ஒரு காலத்தில் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் என அழைப்பு வந்திருந்தது.

நன்றாக எடுத்து கட்டியிருந்தார்கள். அதே பிள்ளையார்தான். ஆனால் அந்த சிறு சுண்ணாம்பு கட்டிடம் மாறி, டைல்ஸ் ஒட்டி கர்ப்பகிருகமாக ஆகியிருந்தது. அதைச்சுற்றி ஒரு சிறு மண்டபம். மண்டபம் கட்ட இடைஞ்சலாக இருந்ததாக அந்த புளியமரத்தை வெட்டி  காம்பவுண்டின் ஓரமாக போட்டிருந்தார்கள். ஓரளவு விற்றது போக ஒரு பெரிய துண்டு பிளக்கப்படாமல், முழுதாக இருந்தது. அக்னி குண்டத்தின் தேவைக்காக என்று அம்மா சொன்னார். நான் மனதார கும்பிட்டுவிட்டு அந்த கர்ப்பகிருக கதவை தொட்டுப்பார்த்தேன். சின்ன வயது ஞாபகம் வந்து கிளர்ச்சியூட்டியது. அந்த பழைய கதவு இப்போது என்னவாகியிருக்கும் என்று தோன்றியது.

வெளியே வர, அந்த பிளக்கப்படாத அடிமரத்தின் மேல் சாய்ந்தபடி படுத்திருந்த நபரை பார்க்க திகீரென்றது. அடர்முடி, தாடி மீசையுடன் பார்த்து பழகிய அந்த முகம் இப்போது முழுமையாக மழித்து, மொட்டையடித்து..

“அம்மா… அது..?”

“ஆமாண்டா, நம்ம பாத்மாதான்…”

“அட… வயசாயிடுச்சு போல… அடையாளமே தெரில”

“காலம்தான் போவுது… அவன் அப்படியேதான் இருக்கான். முன்னபோல விறகு பொளக்கற வேலை இல்ல… யாராவது மூட்டை தூக்க, கனமா பொருள் தூக்க கூப்டுவாங்க…போய் செய்துட்டு சாப்டுவான்..”

“அட பாவமே… வயசாச்சே… ஏதாவது உதவி செய்யலாமில்ல.. ஏன் இன்னும் வேலை வாங்கறீங்க….”

“உனக்கு தெரியுது… ஊருக்கும் தெரியுது… ஆனா அவன் மாறலியே..”

“கோயில் கட்டிட்டா எங்க போவான்… என்ன பண்ணுவான்…”

“அதான் பிரச்சினை… கோயிலுக்கு பூசாரி போட்டாச்சு… அவர், இவன் இருக்கவே கூடாதுன்றார்.. ஊரே இவன் பக்கம் பேசுது.  இவன் சாமிபுள்ளன்னு. அதான் அந்த ஓரமா இருக்கட்டும்னு விட்டுட்டாங்க.”

இப்போது பாத்துமாவை பார்க்க ஒரு ஞானிபோல் தோன்றியது. என்ன மனிதன் இவன். எதன் பொருட்டு இந்த ஊருக்கு வந்து இப்படி உழைத்து சாப்பிடுகிறான். அதிசயமாக இருந்தது.

அதன்பின் இருநாட்கள் வெகு விமரிசையாக ஓடியது. ஆட்டம் பாட்டம் என களைகட்டியது ஊர்.  ஆர்கெஸ்ட்ரா, வண்ண மயமான விளக்குகள், ராட்டினங்கள் என ஜெகஜோதியாக இருந்தது. மீண்டும் சிறுவயதில் போய்,  இதெல்லாம் விளையாட ஆவல் ஏற்பட்டது.


மறுநாள் கும்பாபிஷேகம், நான் அதிகாலை எழுந்து தயாரானேன். அம்மா வேகமாக வந்தார்.

“என்னம்மா… பரபரன்னு இருக்க…”

“அதை ஏன் கேட்கற போ… சாமிக்கு செஞ்சி வச்சிருந்த தங்க நகையில ஒண்ணு காணோமாம்.”

“அய்ய… என்ன இது “

“ பெரிசா இல்லடா… பிள்ளையார் கையில் வைக்கிறாபோல சின்னதா கோடாரி, தாமரை ரெண்டும் தங்கத்தில் செஞ்சிருக்காங்க… அது கோடாரி காணோம்னு ஒரே களேபரம் அங்க…..”

“ஏதோ தோடு…. செயினுனா சரி… கோடாரியேவா….?”

“சமைஞ்சபுள்ள கணக்கா இங்கயே இருந்து கேட்டுட்டு இரு…. போய் பாக்கலாமில்ல…. ஆளப்பாரு” என்று அம்மா சத்தமிட, சட்டென்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.

நான்கு தெரு சேர்ந்து காசு போட்டு கட்டிய சிறு கோயில் என்றாலும், ஓரளவு சம்பாதித்த மனிதர்கள் இணைந்து நல்லவிதமாய் செய்திருந்தார்கள். பெரிய மனிதர்களின் அன்பளிப்பும் ஓரளவு வந்திருந்தது.  எல்லாம் நல்லபடியாக முடியும் சமயத்தில் இந்த குழறுபடி வர, கொஞ்சம் கலக்கமாக இருந்தது. கோயிலை நெருங்க நெருங்க சத்தம் அதிகமாக கேட்டது.

“நான் சொன்னா யார் கேட்கறீங்க….” என்று பூசாரி கத்திக்கொண்டிருந்தார்.

“இத பாருங்க சாமி… நேத்து நைட்டு எல்லாத்தையும் எண்ணி உங்ககிட்ட கொடுத்தாச்சு… நீங்க தொலைச்சிட்டு இங்க வந்து அலப்பரை பண்றீங்களா…” என்று ராமசாமி பதிலுக்கு குரல் கொடுத்தார்.

“அப்போ, என்னை திருடன்றீங்களா…. வாய் அழுகிப்போகும் .. பாத்து பேசுங்க” என்று பதட்டமாக கத்தினார் பூசாரி. அவருக்கு கால்கள் நடுங்குவதை கண்டேன்.

“உங்கள யாருங்க சொன்னா… எங்க வச்சீங்க… பதட்டப்படாம யோசிங்க” என்று சண்முகம் அண்ணாச்சி சமாதானத்துக்கு வந்தார்.

“தோ பாருங்க… ராத்திரி முடிஞ்சி போக ஒரு மணி ஆச்சு. இதோ இங்கதான் இந்த இரும்பு பொட்டில வச்சு பூட்டினேன். கதவை பூட்டினேன். காலை வந்து எடுக்க… காணோம்.” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

“அதிசயம்தான்… காக்கா தூக்கிட்டு போயிருக்கும்னு நினைக்கிறேன்” என்றார் ராமசாமி.

“ யோவ்… ராமு கிண்டலை நிறுத்து… அய்யா… நீங்க போனதும் வேற யாராவது வந்தாங்களா….” என்றார் சண்முகம்.

“யாரும் வரல. ஆனா கனவு வந்தது. கணேசன் கனவில் வந்து சுத்தமா வைங்கடான்னார்….” என்று பூசாரி பேச…

“ஏன் கோயில்ல சுத்தத்துக்கு என்ன குறச்சல்… என்ன பரிகாரம் பன்ணணுமாம்”

“தோ… அந்த பீடையை இங்கவே வச்சிருந்தா சாமி எப்படி நிம்மதியா உட்காரும்..?” என்று பூசாரி கை காட்ட, எல்லோரும் திரும்பி பார்த்தார்கள். அங்கே பாத்துமா அந்த அடிமரக்கட்டையில் கால்போட்டு தூங்கிக்கொண்டிருந்தான்.

“அட பாவத்த… ஏன்யா… உனக்கு அநியாயமா தெரில… இந்த கோயில் இன்னும் பத்திரமா இருக்குன்னா அந்த பாத்மாவாலதான். காவல் தெய்வம்யா அவன்.” என்றார் ராமசாமி.

“உங்களுக்கு வேலை செய்ய ஆள் தேவைன்னு சொல்றீங்க ராமு. ஆனா சாமிக்கு இதெல்லாம் தேவையில்ல… அதுக்கு சுத்தம்தான் முக்கியம். அது பீடை..”

“மரியாதை கெட்ரும் பாத்துக்க…. ஏதோ பூஜை பண்றியேன்னு மரியாதை தரேன். கெடுத்துக்காதே… ஏன் கோயில் சும்மா கிடந்தப்போ வந்து ஒரு சின்ன பூஜை பண்ணிருக்கியா… அட ஒரு கற்பூரமாவது காட்டிருக்கியா… இப்ப வந்து ஆடற” என்று கத்தினார் ராமசாமி.

“இப்பவும் நான் வரல… வந்து மொய் வச்சு கூப்டீங்க… வந்தேன். செஞ்சா ஊருக்கு நல்லது.. எனக்கென்ன… நான் சாமிகிட்ட பேசிக்கறேன்” என்றார் பூசாரி.

வடக்குதெரு ராகவன் இருவரையும் அடக்கினார். “ விடுங்க…  இப்ப என்ன … கோடாரி வேணும். அவ்ளோதானே.. எவ்ளோ ஆகும்னு சொல்லுங்க… இப்பவே தரேன். செய்திடுங்க… நல்ல காரியம் நடக்கும்போது ஏதோ திருஷ்டினு போயிடுங்க….”

“அது தப்பு… முதல் கோணல் சரியாகாது….” என்றார் பூசாரி.

“அதுக்கு இப்ப என்னதான் பண்றது ?” என்று குழம்பினார் அண்ணாச்சி

“அவனை கூப்ட்டு விசாரிங்க… சொல்லமாட்டான்… தூரதள்ளுங்க அவனை… சரியாகும்.”

கும்பலில் இருந்த சுந்தரம் வெகுவேகமாக எழுந்து பாத்துமாவை நெருங்கினான். அவனை சட்டையை பிடித்து தூக்கினான். நன்றாக தூங்கிக்கொண்டிருந்த பாத்துமா திடுக்கிட்டு எழுந்தான். ஒன்றும் புரியாமல் அனைவரையும் திருதிருவென்று பார்த்தான். கும்பலின் மத்தியில் பாத்துமாவை இழுத்துவந்த சுந்தரம் அவனை கீழே தள்ளினான்.

“எங்கடா வச்சிருக்க அந்த நகையை….” என்று ஆவேசமாய் கேட்டான் சுந்தரம். பாத்துமா அந்த கும்பலையே வெறிக்க பாத்துக்கொண்டிருந்தான்.

“அட கடவுளே… அவனுக்கு நீ கேட்கறதுகூட புரியாதுபா” என்றார் சண்முகம்.

“அவனுக்கு நகையெல்லாம் எதுக்குபா… பாவம்யா அவன்…” என்று கும்பலில் குரல் எழுந்தது. பூசாரி அனைவரையும் பார்த்து கையமர்த்தினார்.

“நான் சொல்றது உங்களுக்கு புரியலை. சாமி முதல் நாளே கண்ணு காட்டிருக்கு. இவனுக்கு இத்தனை நாள் வேலை குடுத்தீங்க… இடம் சாமி குடுத்தது. இப்போ அதெல்லாம் போகபோகுது. அது தெரிஞ்சுகிட்டு கடைசியா ஆட்டய போட்டு காலம் தள்ளிடலாம்னு இவனுக்கு தோணிருக்கு… அதான் இவன் மத்தத எடுக்காம இவனுக்கு தெரிஞ்ச கோடாரியவே தூக்கிருக்கான். எப்படியும் ஆறுபவுன் தேறும்… போதாதா கிழவனுக்கு….அதையே எடுக்க நம்ம கையில் மாட்டிருக்கான்… அதான் பகவானின் திருவிளையாடல்…” என்று சொல்லிக்கொண்டே போக, இது எதுவும் புரியாமல் பாத்துமா திரும்பி நடக்க முயல …

சுந்தரம் எட்டி உதைத்த வேகத்தில் நான்கடி தள்ளி விழுந்தான் பாத்துமா.  சுற்றிலும் இருந்த கும்பல் ‘ஹோ’ வென பச்சாதாபப்பட்டது.  ஆனாலும் தடுக்க ஆளில்லை.  எனக்கென்ன என்ற மனோபாவமும், ஏன் வம்பு என்ற பயமும் பலர் முகத்தில் பிரதிபலித்தது.

“வாய திறக்கறானா பாருங்க… நம்மள மனிசனாவே மதிக்கறதில்ல…” என்று கத்தினார் பூசாரி.

“யோவ்.. அநியாயம் பண்ணாதீங்கடா… அவனை அடிக்கறது சாமியவே அடிக்கற மாதிரி” என்று தடுக்க வந்தார் சண்முகம்.

“என்னைவிட சாமிய உனக்கு தெரியுமா வோய்…. கொஞ்சம் அமைதியா இருங்க…உண்மை வெளிவரும் பாருங்க….” என்று பூசாரியின் குரலுக்கு சுந்தரம் உசுப்பேறி… பாத்துமாவை சட்டைகாலரை பிடித்து தூக்கினான். அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். தடுமாறி விழுந்த பாத்துமா சுந்தரத்தை வெறித்து பார்த்தான்.

“என்னடா முறைக்கிற…” என்று கேட்டபடி சுந்தரம் நெருங்க, யாரும் எதிர்பாராத வகையில்  அவனை வேகமாக தள்ளிவிட்ட பாத்துமா, வேகமாக ஓடி அவனுடைய கோடாரியை தூக்கினான்.

கும்பல் வெலவெலத்துப்போனது. கொஞ்சம் தள்ளி நின்றது. ஒரு நெருப்பு வட்டத்தில் நிற்பதுபோல நின்றான் பாத்துமா. அவனை முதல் முறையாக பெரியவர்கள் பயமாய் பார்ப்பதை கண்டேன். எப்படியும் ஒரு பத்துபதினைந்துகிலோவுக்கு மேல் தேறும் அந்த கோடாரி. அதை அந்த எழுபது வயது பாத்துமா தலைக்குமேல் தூக்கினான்.  அந்த அடிமரத்தை ஓங்கி அடிக்க, அது இரண்டு துண்டாக சிதறி விழுந்தது.  கிட்டத்தட்ட இரண்டுமூன்று மணி நேரம் பிளந்தால் ஓரளவு பிளக்கக்கூடிய மரம். சிதறிய வேகத்துக்கு கூட்டம் பிரம்மிப்பாய் பார்த்துக்கொண்டிருந்தது.

“ஹோ…ஹோ….யே……ஏஏஏ…..” என்று கத்தியபடி கோயிலைவிட்டு ஓடினான் பாத்துமா. கோயிலின் மதிலை தாண்டிய கொஞ்ச தூரத்தில் விழுந்தவன் அப்படியே கிடந்தான்.

“அட படுபாவிகளா… உங்க பைத்தியக்காரத்தனத்துக்கு இந்த புள்ளதானா கிடைச்சது… “ என்று கதறியபடி வந்த சிவகாமி பாட்டி பாத்துமாவை தூக்கி தன் மடியில் வைத்து எழுப்பினாள். அவன் நன்றாக மயங்கிவிட்டான் போல. முழிக்கவேயில்லை.

“அதிசயம்… அதிசயம்… இங்க பாருங்க… கோடாரி கிடைச்சிட்டது…பீடை போக சாமி கண் தொறந்திடுச்சு…” என்று கத்தினார் பூசாரி.

எல்லோரும் ஓடிப்போய் பார்க்க, அந்த இரும்பு பெட்டியின் திறந்த கதவின் அடிப்பாகத்தில், ஒரு தகடு பெயர்ந்து இருக்க, அதன் உள்புறமாய் போய் மாட்டிக்கொண்டிருந்தது அந்த சின்ன தங்க கோடாரி.

அன்று கும்பாபிஷேகம் முடிந்தது. அடுத்த இருநாட்கள் பெரும்பாலும் வந்த கூட்டம், வெளிவந்து மயங்கியே இருந்த பாத்துமாவை பார்க்காமல் போகவில்லை.

கோயிலைவிட பாத்துமாவை சுற்றி அதிகம் கூட்டம் இருப்பதை நான் கண்டேன். இரண்டாம் நாள் முடிவில் கண் திறக்காமலும், ஒரு வாய் தண்ணீர்கூட அருந்தாமலும் பாத்துமா இறந்துபோனான். ஊரே கூடி அவனுக்கு மரியாதை செய்தது. தங்கள் குடும்ப பிள்ளைபோல அவனை நல்லமுறையில் அடக்கம் செய்தார்கள். அவனது கோடாரியை கோயில் தேவைக்கு என்று பூசாரி எடுத்துக்கொண்டாராம்.

“ சுந்தரம் பாத்துமாவை அடிச்சிருக்ககூடாதில்லமா…..”

“அடிக்கலைனாலும், அவன் ரோஷக்காரண்டா… இந்த நன்றிகெட்ட ஜனங்களை மறுபடி பார்க்கவேகூடாதுன்னு கண்ணு திறக்காமயே போனான் பாரு.”

“அவனுக்கு ஏன் அவ்வளவு கோபம், பாத்துமா மேல….?”

“ஏன் கோபம்… அதெல்லாமில்ல… பூசாரி பொண்ணு பின்னால  அந்த சுந்தரம் பய சுத்தறான். அவன் வீரத்தை அந்த கிழவங்கிட்ட காட்டி, பூசாரிய தாஜா பண்றானாம்” என்றார் அம்மா.


கதை & ஓவியம் : அப்பு சிவா

Subscribe
Notify of
guest

4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
G Kulasekaran
G Kulasekaran
2 years ago

Nice

Krishna prakash
2 years ago

பாத்துமா…
கண்ணிற்கு தெரிந்தும்
அகம் அறியாத கடவுள்..
நாம் நிறைய பேரை இது போல் தான் இழக்கின்றோம்… கதாசிரியர்
*அப்பு சிவா*. ஓர் மூன்றாம் பிறை….
வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

ஜெயா சிங்காரவேலு
ஜெயா சிங்காரவேலு
2 years ago

பாத்துமா போல் எத்தனையோ ஜீவன்ங்கள் இருக்கிறார்கள். மனம் பிழர்ந்து போனாலும், உழைத்து வாழும் ஜீவன். அருமையான கதை. வாழ்த்துகள்.

பிரவீணா தங்கராஜ்
பிரவீணா தங்கராஜ்
2 years ago

எழுத்து நடை அபாரம். சூப்பர்

You cannot copy content of this page
4
0
Would love your thoughts, please comment.x
()
x