Latest

நதி ஏந்தி வந்தவள்!


ரு நதியை
இப்படி
கைகளில்
ஏந்தி வருவாயென
சற்றும்
எதிர்பார்க்கவில்லை நான்.

நினைத்துப் பார்த்தால்
முற்றிலும்
வியப்பாக இருக்கிறது.

சிறிதளவும்
நம்ப முடியவில்லை.

எவ்வளவு தொலைவு.
எத்தனை இருள் வனங்கள்
எத்தனை உயர் மலைகள்.
எவ்வளவு மேடு பள்ளங்கள்.

துளி நீரும்
சிந்தாமல் சிதறாமல்
ஒரு நீண்ட நதியை
ஒரு கனத்த நீர்மையை
எப்படி
கைகளில் ?


ந்தி வர முடிந்தது
உன்னால்?

எத்தனை மேடுகளில்
எத்தனை பள்ளங்களில்
உன் பாதங்கள்
இடறி இருக்கும்.
தடுமாறி இருக்கும்.
கால் விரல்கள்
பாறைகளில்
காயம் பட்டிருக்கும்.
சிறிய
ரத்தக் கசிவுகள் கூட
ஏற்பட்டிருக்கலாம்.

ஒரு பூனைக்குட்டி போல்
ஒரு அணில் குஞ்சு போல்
ஒரு சிட்டுக் குருவி போல்
உன் உள்ளங்கைகளுக்குள்
பத்திரமாக
உட்கார்ந்து வந்திருக்கும்
நதியைப் பார்த்தாலும்
ஆச்சரியமாகவே இருக்கிறது.

பயண வழியில்
ஏதேனும்
ஒரு மர நிழலில்
ஒரு புல் தரையில்
சற்றே
நதியை
இறக்கி வைத்து
இளைப்பாறினாயா?


ரும் வழியில்
இருவருக்கும்
பசிக்கவே இல்லையா?

நீயாவது
ஒரு துளி
நதிநீரை
பருகி
பசியாறி இருக்கலாம்.

நீண்ட வழி நடையில்
பசித்த நதிக்கு
என்ன உணவு அளித்தாய்?

கனிகளா?
இலைகளா?
இல்லை
உன் உள்ளங்கை
வெதுவெதுப்பையே
நதி
உணவாக
உட்கொண்டதா?

நதி ஏந்தி வந்த
உன்னிடம்
இப்படி கேட்க
என்னிடம்
எத்தனையோ கேள்விகள்
இருந்தன.


ல்லா வினாக்குறிகளையும்
சங்கிலி போல் பிணைத்து
ஒற்றைக் கேள்வியாக்கி
உன் முன்வைத்தேன்.

இந்த நதியை
எனக்காக
உன் காதல் தகிக்கும்
கைகளில்
ஏந்தி வர வேண்டும்
என்ற எண்ணம்
உனக்கு
எப்படி தோன்றியது?

என்னைப் பார்க்க
வரும்போது
என்ன பரிசு
எடுத்து வருவாய்
என்று கேட்டாயே
நினைவிருக்கிறதா உனக்கு
என்றாய்.

இருக்கிறது
என்றேன்.

அந்தப் பரிசு
அதற்கு முன்
எந்த காதலனும்
கேட்காததாய்
எந்தக் காதலியும்
தராததாக
இருக்க வேண்டும்
என்றாயே
அது நினைவிருக்கிறதா


சில யுகங்கள்
தாமதமானால்
நீ பேசிய சொற்கள்
மறந்து விடுமா?
நீ உதிர்த்த
ஒவ்வொரு சொல்லும்
பிறவிகள்
சில கடந்தும்
என் உயிருக்குள்
பனிப்பாறைப்
படிமங்களாக
உறைந்து கிடக்கின்றன
என்றேன்.

இந்த யுகம்
இல்லை எனினும்
இப்பிறவி
இல்லை எனினும்
ஏதோ ஒரு யுகத்தில்
ஏதோ ஒரு பிறவியில்
உன்னைப்
பார்க்க வரும்போது
உனக்குப் பரிசாக
என்ன கொண்டு வருவேன்
என்று அன்று
நான் அனுப்பிய
ஒரு மின்னஞ்சலை
இன்னும் கூட
நீ பார்க்கவில்லை
என்றாய் ஆதங்கமாய்.


லது கை
சுட்டு விரல் நக நுனியின்
கடவுச்சொல்லை
இடது கை
பெருவிரலின்
நக நுனியில்
அவசரமாக உரசி
புறங்கைத் திரையின்
மறை உரு
மின்னஞ்சல் பெட்டியை
அவசரமாகத்
திறந்தேன்.

கடந்த
இரண்டு பிறவி
மின்னஞ்சல்களில்
குப்பையாய்
குவிந்து
மலையாய்க் கிடந்த
விளம்பர அஞ்சல்களின்
புதர்களுக்குள்
புகுந்து புகுந்து
மூன்றாம் பிறவியின்
மின்னஞ்சல் பெட்டியை
வேகமாய்த் திறந்தேன்.

தேடிப் பிடித்தேன்
நீ குறிப்பிட்ட
பார்க்கத் தவறிய
மின்னஞ்சலை.


ன்னைப் பார்க்க
நான் வரும் யுகத்தில்
வானுக்கும் பூமிக்கும்
இடையே ஓடும்
ஒரு தீராக்காதலின்
அமுத நதியை
என் கைகளில்
ஏந்தி வருவேன்
முதல் பரிசாக.

என் நரம்புகளில்
மகர யாழ் மீட்டிய
என் ரத்த நாளங்களில்
குடமுழா அதிர்ந்த
மூன்று ஜென்மங்களுக்கு
முந்தைய
உன் சொற்களை
வாசித்து
அதிர்ந்தேன்.

முப்பிறவி
குற்ற உணர்ச்சியில்
வெட்கித் தலைகுனிந்து
இப்பிறவியின்
உன்னிடம்
மன்னிப்பைக் கோரி
மன்றாடினேன்.

ஆனாலும் உனக்கு
நான் ஒரு
தண்டனை தருவேன்
அருகில் வா
என்றாய்.


நான்
உன்னருகில்
வந்தேன்.

புன்னகைத்தபடி
ஏந்தி வந்த
பெரு நதியை
மென்மையாக
ஒரு சொட்டும்
சிந்தாமல்
என் கரங்களுக்குள்
நீ கை மாற்றினாய்.

நம்
உள்ளங்கைகளின்
மெல்லிய பிணைப்பில்
சில யுகமாக
குளிர்ந்து கிடந்த நதி
சூடாகத் தொடங்கியது
பிறவித் தொடரின்
பேரன்பாக.

கைகளின் பிணைப்பில்
உடல் தழுவி
இதயங்கள் இணைய
யுக தாகம்
தணிக்கும்
ஒரு
நெடும் பிறவி
முத்தத்தை
மூர்க்கமாக
இடத்தொடங்கின
நம் இதழ்கள்.


கர யாழின்
நரம்பிசையாகவும்
குடமுழாவின்
தாள அதிர்வுகளாகவும்
ஏறுமுக
ஒலி அளவில்
ஒலிக்க தொடங்கிற்று
நம்
ராட்சச முத்தத்தின்
ஒற்றை
இசை வடிவம்.

யூட்யூபில்
இன்று
பதிவாகும்
இந்த
முத்த இசை ஆல்பம்
எத்தனை மில்லியன்
பார்வைகளைப்
பெற்றுள்ளது
எத்தனை
பகிர்வுகளைப்
பெற்றுள்ளது
என்பதை
இன்னும்
சில பிறவிகள்
கழித்து வந்து
எட்டிப் பார்ப்போமா
என் பேரன்பே!?


 

Author

  • கவிஞர், எழுத்தாளர் மற்றும் இயக்குநராக புகழ்பெற்றவர் எஸ்,ராஜகுமாரன். இவரின் தந்தையார் கவிஞர் வயலூர் கோ.சண்முகம் தமிழக அரசால் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்ட தமிழறிஞர். எஸ்.ராஜகுமாரன் பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்கள் இயற்றியுள்ளார். விகடன் பிரசுரம் வெளியீடாக வெளிவந்துள்ள '27 இந்திய சித்தர்கள்', 'ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர்', ‘மலைவாழ் சித்தர்கள்' ஆகிய நூல்கள் பரவலான வாசக வரவேற்பைப் பெற்று விற்பனையில் சாதனை படைத்தவை. - 27-இ சுடலைமாடன் தெரு திருநெல்வேலி டவுண்' என்ற எழுத்தாளர் தி.க.சி. குறித்த ஆவணப்படம், 'லாவணி' என்னும் நாட்டுப்புற இசைக்கலையை குறித்த ஆவணப்படம் ஆகியவை பாராட்டுகளையும், சில விருதுகளையும் வென்றவை. கலைஞரின் சிறுகதைகளை கலைஞர் தொலைக்காட்சிக்காக தொடராக இயக்கி உள்ளார். அண்மையில் வெளியான ஆவணப்படம் 'ஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர்'. ஆதரவற்ற மக்கள் குறித்த தனியாக யாருமில்லை' என்ற ஆவணப்படமும் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கே குறித்த கவிதைப் பயணம்' என்ற ஆவணப்படமும் இப்போது இயக்கி வருகிறார். ஓமந்தூராரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை The Premier எனும் பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார். இவரின் சமீபத்தில் நூல் நதியில் விளையாடி கொடியில் தலை சீவி- கட்டுரைத் தொகுப்பு

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “நதி ஏந்தி வந்தவள்!

Comments are closed.