Latest

கார்குழலி கவிதைகள்


 • மழையின் ஆயிரம் கைகள்

 

நேற்று பெய்த மழைக்குப்

பல்லாயிரம் கைகள்.

முகத்தில் அறைந்து சென்றது ஒன்று,

கதவை ஓங்கி அடித்தது இன்னொன்று,

இடியின் ஓசையை நிலத்தில் இறக்கி

மனம் பதைக்க வைத்தது மற்றொன்று.

சில நூறு கைகள் ஒன்று சேர்ந்து

கூரையைப் பிய்த்து வீசின,

சாலையில் பள்ளம் பறித்தன,

மரங்களை வேரோடு கெல்லி எறிந்தன,

வாகனங்களைக் குப்புற கவிழ்த்து

தேங்கி நிற்கும் நீருக்குள்

நடந்து செல்வோரின் கால்களை

இழுத்துச் சென்றன.

ஊரெங்கும் தமுக்கடித்து

வருகையைச் சொல்லி அனுப்பும்

பாசக்கார பங்காளி,

அழைப்பின்றி வந்த எதிரியாக

பயத்தை ஊட்டியது.

இருளோடு ஜோடி சேர்ந்து

கூர் கத்தி ஏந்தும்

வஞ்சகனாக மிரட்டியது.

மிரண்டோடி வீடு வந்து

கதவடைத்துக் கிடந்தேன்.

விடியலின் கிரணங்கள்

நிலத்தை எழுப்பிய வேளையில்

இலையின் நுனியில் வழிந்தோடி

முகம் தொட்ட துளியில் உணர்ந்தேன்

பால் மணக்கும் குழந்தையின் தொடுகை.

 

 

 • பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு நாள்

 

தாழிட்ட அறைக்குள்

மூர்ச்சையடைந்த ஒருவனுக்காகப்

பெருநகரத்தின் நெரிசலில்

உயிர்வளியைத் தேடி

அலைகிறான் மற்றொருவன்.

தாழப் பறந்து

தலை தொடும் காகம்

பயத்தின் வலியைக் கூட்டுகிறது.

முடிவில்லாத ஒரு நாளில்

சுழல்விளக்குக் கட்டியத்தோடு

சாலையில் பாயும்

ஆம்புலன்ஸ்களின் அணிவகுப்பு.

நிரம்பி வழியும்

மருத்துவமனை குப்பைத் தொட்டியின்

கவிச்சத்தில் முட்டுகிறது மூச்சு.

அலைபேசி புலனக் குழுக்களில்

சொற்களின் வடிவில்

விழுந்து கிடக்கும்

கற்பூர ஓமக் கிராம்புப்

பொட்டணத்தை முகர்ந்ததும்

பலூனாக விரியும் நுரையீரல்.

மெல்ல வானில் மிதக்கையில்

கீழே இருக்கும் மருத்துவமனை

முதலில் கிராம்பாகி

பிறகு ஓமமாகச் சிறுத்துக்

கற்பூரமாகக் காற்றில் கரைகிறது.

சுவாசத்தை நிறைக்கும்

முடிவற்ற நறுமணத்தின் சுழலில்

தட்டாமாலை சுற்றியபடியே

அண்டப் பெருவெளியின்

வாசலில் தடுக்கி விழுபவனை

அணைக்கும் கரங்களைத்

தேடும் அல்லலுற்ற மனம்.

 

 

 • வாழ்வின் போக்கு

 

பிரச்சனை மறு கன்னத்தைத்

திருப்புவதில் இல்லை.

எதற்காகக் காட்டுகிறோம் என

அறியாதவர்களின் மத்தியில் இருப்பது குறித்த ஆற்றாமை.

பொழியும் மழையையும் மீனையும்

தன்னுள்ளே இருத்திக் கொள்ளும் ஆறு

சுழல் விழுங்கிய பின்னும்

பொங்கியெழுந்து ஓடுவதைப்போல

மென்றும் விழுங்கியும்

கடந்துபோகும் அன்றாட வாழ்வு.

தன்னுள்ளே நீந்திக் கொண்டிருக்கும்

மீனைப் பற்றிய

சிந்தனையே இல்லை ஆற்றுக்கு.

நீரின் ஓட்டத்தை எதிர்த்து

எழுந்து நிற்கும் மலையின்

அமிழ்ந்து கிடக்கும் அடியைத்தான்

உரசியும் அரித்தும் உருமாற்றுகிறது.


 

Author

 • கார்குழலி தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் எழுதும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய இதழ்களிலும் அச்சு இதழ்களிலும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன.

Average Rating

5 Star
100%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

6 thoughts on “கார்குழலி கவிதைகள்

 1. என்ன ஒரு கற்பனை வளம்!! அழகிய கவிதை நடையுடன் சேர்ந்து மனதைக் கவர்ந்திழுக்கிறது. கவிதாயினி கார்குழலி அவர்களுக்கு என மனமார்ந்த பாராட்டுக்கள்💐💐

  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ப்ரீத்தி.

 2. சொற்களின் வேக வீச்சு, மனிதம், இயற்கையின் மீது தணியாத காதல் பொங்கும் கவிதைகள்

  எஸ் வி வேணுகோபாலன்

  1. கவிதைகளைப் படித்து உங்கள் கருத்தையும் தெரிவித்தமைக்கு நன்றி

 3. உங்கள் மூன்று கவிதைகளும் முக்கனி போல் இனித்தன. என் இதயபூர்வமான பாராட்டுக்கள்

Comments are closed.