20 April 2024

 


  • உரையாடல் மற்றும் பதிவு :  கவிஞர் மனுஷி

உரையாடலில் ஆமினாவின் வாழ்கைத் துணைவர் உமர் மற்றும் சகோதரர் செல்வம் இன்குலாப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  • கவிஞர் இன்குலாபைப் பொறுத்தவரை அவர் ஒரு போராளிக் கவிஞர். அரசியல் கவிஞர். தமிழ்ச் சமூகத்தின் வாசகர்கள் அப்படித்தான் மதிப்பிடுவார்கள். ஒரு மகளாக இன்குலாபை எவ்வாறு மதிப்பீடு செய்வீர்கள்?

ஆமினா: எங்க அப்பா எல்லா அப்பாவையும் போலவே எங்களது தேவைகளை நிறைவேற்றி வைத்தார். அப்பாவுடைய பார்வையினால்தான் நான் இந்த நிலைமையில் இருக்கேன் என்று சொல்வேன். சில சமயங்களில் சுயமாக முடிவெடுக்க முடிந்தது. படிக்கிற காலத்திலும் சரி எந்த ஸ்கூலில் படிக்கணும் என்பதை நான்தான் முடிவு பண்ணேன். பிறந்ததில் இருந்தே எனக்கு என்ன தேவையோ அதை நானே முடிவெடுத்துக்கற சுதந்திரத்தை அப்பா எனக்கு கொடுத்தார். ராயப்பேட்டையில் ஒரு ஸ்கூலில் ஐந்தாவது வரை படித்தேன். அது முடிஞ்ச பிறகு ஆறாவது படிக்கணும் என்றபோது கான்வென்ட் ஸ்கூலா இல்ல மிஷனரி ஸ்கூலா என்று வரும்போது நான் மிஷனரி ஸ்கூல்தான் போவேன் என்று சொன்னேன். அப்பாவும் சேர்த்துவிட்டார். பன்னிரண்டாம் வகுப்பு வரை அங்க தான் படிச்சேன். அதன் பிறகு கல்லூரி சேரும்போதும் என் விருப்பம் தான். இப்படி கல்வியாக இருக்கட்டும் வேற எந்த விஷயமா இருக்கட்டும் அப்பா என் சுதந்திரத்திற்கே விட்டுட்டார் . எப்படி கவிதையில் அவர் விடுதலையை நேசித்தாரோ அப்படி தான் எனக்கான ஸ்பேசையும் விடுதலை உணர்வையும் கொடுத்தார்.

  • கவிஞர் இன்குலாப் தன்னுடைய படைப்புகளில் பேசிய அரசியலையும் விடுதலையையும் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் கடைப் பிடிக்க இயன்றதா ?

ஆமினா: அப்பா எப்போதுமே எழுத்தில் ஒன்றும் வாழ்க்கையில் ஒன்றுமாக இருந்தது இல்லை. சொல்லியவண்ணம்தான் வாழ்ந்தார். அதனால் குடும்பத்துக்குள் நிறைய போராட்டம் இருக்கும். குடும்பத்தில் அம்மா கிட்ட இருந்து எப்போதும் எதிர்ப்பு கிளம்பும். அப்பாவுடைய சித்தாந்தங்களில்  ஈர்ப்பாகி, எங்கே அப்பா மாதிரி ஆகிடுவேனோ என அம்மா பயந்தாங்க. ஒரு பருவம் வந்த பிறகு அம்மா என்னை ஸ்டாப் பண்ண ஆரம்பிச்சாங்க. இன்னும் சொல்லப்போனால் என்னைத் திசை திருப்ப ஆரம்பிச்சாங்க. படிப்புல எப்பவும் கவனமாதான் இருப்பேன். ஆனாலும் அம்மாவுக்கு உள்ளூர பயம் இருந்துட்டே இருக்கும். பெண் பிள்ளையா இருக்கா. அப்பா மாதிரி பையைத் தூக்கிட்டுக் கிளம்பிடுவாளோ என்று பயந்துட்டே இருப்பாங்க. அப்பா அதிலும்கூட தெளிவா இருந்தார். அவளுக்கு என்ன விருப்பமோ அதைச் செய்யட்டும் என்று சொல்லிட்டார். நான் பிறக்கறதுக்கு முன்பிருந்தே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் போராட்டம் இருக்கத்தான் செய்தது. அம்மாவுடைய வளர்ப்பு குழல் எப்படினா குடும்பம் திருமணம் இப்படித்தான். கல்யாணத்துக்குப் பிறகு சென்னை வந்ததும் அப்பா மூலமா தோழர்கள் கவிஞர்கள் எல்லாம் பழக்கம் ஆனாங்க. அதன் பிறகுதான் இப்படியும் ஒரு உலகம் இருக்குனு அம்மாவுக்குத் தெரியும் அப்பாவுடைய சித்தாந்தங்களால் அம்மாவும் பின்னாடி நிறைய சீர்திருத்தம் ஆகியிருக்காங்க. அம்மாவும் ரொம்பவும் ஆர்தடக்ஸ் கிடையாது. கொஞ்சம் நம்பிக்கை உண்டு. அவ்வளவுதான்.

  • அப்பா மாதிரி ஆகணும் என உங்களுக்கு எண்ணம் இருந்ததா?

ஆமினா: ஆமாம். நிச்சயமா இருந்தது. அது எனக்கு அப்பா அறிமுகப்படுத்திய புத்தகங்கள் அப்படி. எல்லாரும்  சிட்னி ஷெல்டன் படிக்கிற காலத்தில் நான் மக்சிம் கார்க்கியும் சேகுவேராவும் படிச்சேன்.  அப்பா எனக்குப் பரிந்துரை பண்ண புத்தகம்  என்று பார்த்தால்  தீண்டாத வசந்தம், சிலுவையில் தொங்கும் சாத்தான், வேர்கள் இப்படியான புத்தகங்கள். என்னுடைய கல்லூரிக் காலத்திலும் எல்லாரும் கதாநாயகர்கள் பற்றிப் பேசும்போது அந்த மாதிரியான டிஸ்கஷன்களில் நான் கலந்துக்க மாட்டேன். இமேஜ் வொர்ஷிப், வழிபாடு இப்படியான விஷயங்களிலும் நான் ஈடுபடல. அதுக்கு அப்பாவுடைய சித்தாந்தங்களின் தாக்கம் தான் காரணம். இந்த தெளிவை அப்பாதான் கொடுத்தார். திருமணம் பற்றி பேச்சு வரும் போது கூட அவங்கவங்க விருப்பப்படிதான் திருமணம் பண்ணிக்கனும் என்று சொல்லிட்டார். யாரை விருப்பப்படுறீங்களோ அவங்களையே கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சுதந்திரம் கொடுத்தார். நான் சொந்தத்தில்தான் திருமணம் பண்ணிக்கிட்டேன். ஆனால் என் விருப்பத்தின்பேரில்தான் என் திருமணமும் நடந்தது. அதுக்குக் காரணமும் அப்பா தான். அவருடைய கடைசிகாலம் வரைக்குமே அப்படித்தான் இருந்தார். அவருடைய கொள்கையில் எப்போதும் அவர் முரண்படல. வீட்டுல பிரச்சினை ஏதும் வந்தால் அம்மாவை கன்வின்ஸ் பண்ணுவாங்க. அம்மா கன்வின்ஸ் ஆகல என்றால் ஒருகட்டத்தில் நான் இப்படித்தான் என்று சொல்லிடுவார்.

செல்வம்:  போராட்டம்தான் என் வாழ்க்கையின் நியதி என்று அடிக்கடி சொல்வார். அவர் எதுக்காகப் போராடுறார் என்பது அம்மாவுக்குப்  புரிய கொஞ்ச காலம் ஆச்சு, ஏனென்றால் அவங்க வளர்ந்த சூழல் அப்படி. பெண்கள் உடனேலாம் மாறிட மாட்டாங்க. அப்படி மாறினாலும் உறவுகள் எல்லாம் என்ன குடும்பமே இப்படி இருக்கு என்று பேசுவாங்க. போகப் போக அம்மாவும் கொஞ்சம் மாறிட்டாங்க. அப்பாவும் சில கூட்டங்களுக்கு அம்மாவைக் கூட்டிட்டுப் போனாங்க.

  • உங்களுடைய குழந்தைப் பருவத்தில் அப்பாவுடன் கூட்டங்களுக்குப் போயிருக்கீங்களா ?

ஆமினா : சின்ன வயசுல அப்பா கூட அவர் கலந்துக்கற கூட்டங்களுக்குக் கூட்டிட்டுப் போவார்.

செல்வம்: போபால் விஷவாயு விபத்துக்கு  எதிர்ப்பு தெரிவிக்கறதுக்காக சென்னையில்  ஒரு கூட்டம் நடந்தது. அப்போ பாப்பாவைக்  கூட்டிட்டு தான் போனார்.

ஆமினா:  82இல் தான் நான் பிறந்தேன்.  85இல் தான் அந்த விபத்து நடந்தது. அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு போராட்டம் நடத்தணும்னு முடிவு பண்ணப்ப அதுக்குக் காவல்துறை அனுமதி வழங்கல. அந்த முறை தோழர்கள் மூலமா குடும்பத்துடன் .  அந்தப் போராட்டத்துக்குப் போகணும்னு  அப்பா சொன்னார். அப்போ என்னைக் கூட்டிட்டுப் போனார். அங்க போனது பற்றி எனக்கு ஏதும் ஞாபகம் இல்லை.  பேராசிரியர் சரஸ்வதி ராஜேந்திரன் என்னைப் பார்க்கும்போதெல்லாம்  சொல்வார். போபால் விஷ வாயு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் எல்லாரையும்  விட முன்னாடி நின்னு ஓங்கிய குரலில் கோஷம் போட்டது நீ தான்னு. அப்போ இருக்கா? இன்குலாபுக்கு வாரிசு வந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டோம்னு சொல்வார்.

செல்வம்: வானம் வேண்டும் பூமி வேண்டும்  நாங்கள் வாழ தூய்மையான காற்று வேண்டும் என்று கோஷம் போட்டார்கள்.

 ஆமினா:  சின்ன வயசுல தோழாகளுடைய  நிறைய கூட்டங்களுக்கு நான் போயிருக்கேன் . ஈரோடு, பெங்களூர் சித்தூர், கன்னியாகுமரி இங்கலாம்  அப்பா அழைச்சிட்டு போயிருக்கார். கூட்டங்களுக்குப் போகணும் என்று சொல்லும்போதெல்லாம் வீட்டுல பெரிய கலவரமே வரும். பிறகு அம்மா போனாங்க.கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்கிட்டாங்க. இதைக் கூட பாலையில் ஒரு சுனை என்ற புத்தகத்துல ஒரு கதையில் சொல்லியிருப்பார். அம்மாவும் எப்படி  கன்வின்ஸ் ஆகுறாங்க என்பது அந்தக் கதையில தெளிவா சொல்லியிருப்பார். அதுக்கு முக்கியமான காரணம் பிவிஎஸ் மாமா தான்.

செல்வம்:  எப்போதுமே வீட்டுக்கு தோழர்கள் வருவாங்க. நாங்க சின்ன வயசா இருக்கும்போது வாடகை வீட்டில் தான் இருந்தோம். ஒரு ரூம் இருக்கும். ஒரு ஹால் இருக்கும். அப்புறம் ஒரு சமையல்கட்டு. அவ்ளோதான். அம்மா கிராமத்தில் இருந்து வந்தவங்க தானே. அதனால் அந்நியர்கள் யாரும் வந்தால் அப்படியே ஒதுங்கியே இருப்பாங்க.

  • கீழக்கரை கொஞ்சம் முற்போக்கான சிந்தனைகள் கொண்ட ஊர் தானே?

ஆமினா: அப்படியெல்லாம் சொல்லிட முடியாது. நான் இப்போ ஊருக்குப்  போனால் கூட சில சிக்கல்கள் இருக்கும்.

  • அப்பாவுடைய கொள்கைகளால் உறவுகளுக்குள்  என்ன மாதிரியான சிக்கல்கள் வந்தன? அப்பாவால் தான் இப்படி ஆகிவிட்டது என வருத்தங்கள் உங்களுக்கு இருக்கா ?

ஆமினா: ஊருக்குலாம் போனால் கல்யாண வீடுகளில் உங்க அப்பாவைக் கொஞ்சம் எதுவும் பேசாமல் இருக்க சொல்லுமா. கல்யாணம் நல்லபடியா நடக்கணும். இங்கலாம் சண்டை போட்டுட வேண்டாம் என்பார்கள், அப்பாகிட்ட சொன்னால், அப்பா சிரித்துக் கொண்டே, அப்ப எதுக்குமா என்னைக் கூப்பிட்டாங்க என்று சொல்லுவார்.

செல்வம்: அப்பாவுடைய கொள்கை அப்படித்தானே. சில சமயம் தலையில் தொப்பி போட சொல்வாங்க. அப்பா மாட்டேன்னு சொல்வார். வி.பி.சிங்கெல்லாம் போடலையாப்பா அதுமாதிரி போட்டுக்கோ என்பார்கள். அவர் ஒதுங்கி போய்விடுவார்.

ஆமினா:  இந்த மாதிரி சமயத்தில் உறவினர்கள் சண்டைலாம் போட்டிருக்காங்க. அப்பாவைப் புறக்கணிப்புப் பண்ணாங்க.  அதையெல்லாம்  இல்லைன்னு சொல்ல  முடியாது. அப்பா யாரையும் ஒதுக்கல. எல்லாருடனும் ஒரு சுமூகமான உறவுதான் வச்சிருந்தார். அதனால பெருசா வருத்தம்னு எதுவும் இல்ல

  • அப்பாவுடைய கொள்கைகளால் மற்ற குழந்தைகள்போல நமது குழந்தைப் பருவம் அமையலையே என்ற வருத்தம்  இருந்திருக்கிறதா?

ஆமினா: நல்ல வேலையாக அப்படி நான்  வளரலையே என்று சந்தோஷப்படுறேன்.  அம்மாவும் கூட பெண் பிள்ளை நல்லா படிக்கணும் என்பதில் தெளிவா இருந்தாங்க. நான் படிக்காததை எல்லாம்  நீ படிக்க வேணும் என்று சொல்வாங்க. அப்பாவும் அம்மாவும் ஒத்துப் போனது இந்த விஷயத்தில்தான்.

  • அப்பாவுடைய எழுத்துக்களை எல்லாம் அம்மா வாசித்திருக்காங்களா?

ஆமினா: அம்மாவுக்கு அப்பா வாசித்துக்காட்டுவார். வீட்டுல எது எழுதினாலுமேஎங்களிடம் வாசித்துக் காட்டுவார்.

செல்வம்:  அம்மாவுக்கு மார்க்சிய சிந்தனைகள் எல்லாம் சில சமயம் எடுத்தவுடனே  புரியாது. அம்மாவுக்குப் புரியற மாதிரி . அப்பா எடுத்துச் சொல்வார்.

  • உங்கள் சகோதரர்களுக்கு எப்போதாவது அப்பாவுடைய  கொள்கையினால் நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. இந்த வாழ்க்கை கிடைக்காமல் போய்விட்டது என்று நினைத்து வருத்தம் ஏற்பட்டதுண்டா ?

ஆமினா: அண்ணன்லாம் படிக்கிற போது அப்பா தீவிரமான போராட்டத்தில் இருந்தார். அதிகமா வீட்டுல இருக்க  மாட்டார். நான் படிக்கிற காலத்திலும் அவர் அதிகம் வீட்டில் இருக்கமாட்டார். நானேதான் படிச்சுக்குவேன். நான் வீட்டில் படிப்பது. பள்ளியில் படிப்பிப்பது  இது மட்டும்தான். அம்மாவையும் அதிகம் தொந்தரவு பண்ண மாட்டேன். நான் படிச்சுட்டேதான் இருப்பேன். அண்ணன்களைப் பொறுத்தவரை ஒருகட்டத்திற்கு மேல் நாங்க படிக்க மாட்டோம் சுயதொழில் பண்ண போறோம்னு சொல்லிட்டாங்க. அதை எதிர்க்கல. அதனால் அப்பா மேல் யாருக்கும் வருத்தம் எதுவும் இல்லை.  சின்ன அண்ணன் காலேஜ் லெக்சரரா இருக்கார்.  இவர், பாரதி உயர்நிலைப் பள்ளியில் நூலகராகவும் மேற்பார்வையாளராகவும் இருக்கிறார்.

  • பொதுவாக சமூகப் போராட்டம் , சமூக மாற்றம் என்று செயல்படுகிறபோது. குடும்பத்திற்குள் போதிய அங்கீகாரமும் ஆதரவும் கிடைப்பதில்லை. அதை முழுமையாக குடும்ப அமைப்பிற்குள் செயல்படுத்துவதிலும் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. கவிஞர் இன்குலாபை எப்படி எதிர்கொண்டீர்கள்?

ஆமினா: என்னைப் பொறுத்தவரை அப்பாவைக் குறித்து, அவரது போராட்டங்கள் குறித்து நான் வருத்தப்பட்டது இல்லை. அப்பா இப்படி  இருந்ததால் இதெல்லாம் கிடைக்காமல் போயிடுச்சே என்று நினைத்ததேயில்லை. ஏனெனில் அந்தளவு சுதந்திரம் கொடுத்து வளர்த்தார். பன்னிரண்டாம் வகுப்பில் நான் எதிர்பார்த்த அளவு மார்க் எனக்கு கிடைக்கல. எனக்கு சயின்ஸ் ரொம்ப பிடிக்கும். சயின்ஸ்ல பெரிய ஆளா வரணும்னு ஆசை. காலேஜில பி.எஸ்.சி சேர்ந்து படிக்க ஆரம்பிச்சிட்டேன். மெடிக்கல் கிடைச்சால்  கிடைக்குது. கிடைக்கல என்றால் எதுல கிடைக்குதோ அதை நல்லா படிப்போம்னு இருந்தேன். அதுல நான் பெரிய ஆளாகி வந்துடுவேன்னு எனக்கு நம்பிக்கை இருந்தது. இப்படி யோசிச்சுதான் காலேஜ் சேர்ந்தேன். அப்படி படிச்சுட்டு இருக்கும்போதுதான் தமிழறிஞர்  கோட்டாவில் எம்.பி.பி.எஸ். கிடைச்சது.  சீட் செலக்க்ஷன் அப்போகூட அப்பா என்கூட இல்லை. அமெரிக்காவுக்குப் பயணம் போயிட்டாங்க. அப்பாவுக்குத் தகவலே தெரியாது. பார்ம் பூர்த்தி பண்ணி போட்ட கையோடு அமெரிக்கா போய்ட்டாங்க. செலக்ஷன் புராசஸ், கவுன்சிலிங் அப்போலாம் என்கூட இருந்தது பா செயப்பிரகாசம் மாமா தான். காலேஜில் பீஸ் கட்டி அட்மிஷன்  பண்ணி சேர்த்து விட்டதும் அவங்க தான். அதனால் அப்பாவுடைய சித்தாந்தங்களால் வாழ்க்கையில் இதை இழந்துட்டேன்னு சொல்ல ஒண்ணுமே இல்ல. என்னுடைய கல்வியிலும் சரி, என்னை இந்த சமுகத்தில் நிலை நிறுத்திக் கொள்வதிலும் சரி அப்படி எதுவும் ஆகல. படிப்பு முடிஞ்சதும் வேலைக்குப் போகும்போதும் அதிலும் அப்பா தலையிடல. அரசு வேலைக்குப் போகணுமா என்ன பண்ணணும் என்பதை நீயே முடிவு பண்ணிக்கோ என்று சொல்லிட்டார். ஆனா அப்பாவுக்கு ஒரு ஆசை என்ன என்றால் நான் எம்.டி., முடிச்சிருப்பதால், அரசு கல்லூரியில் பேராசிரியராக போகணும், பேராசிரியர் பணியில்தான் மாணவர்களை நீ உருவாக்க முடியும் என்று சொன்னார். எனக்கு ஏற்பட்ட சில தனிப்பட்ட அனுபவங்களாலும் என்னுடைய சில கொள்கைகளாலும் அரசு கல்லூரிகளில் வேலை பார்க்க முடியாது என்று சொல்லிட்டேன். அரசு கல்லூரியாக இருக்கட்டும் அல்லது தனியார் கல்லூரியாக இருக்கட்டும். என்னால் தனியாக சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதைச் சொன்னேன். அரசாங்க வேலை என்றால் ட்ரான்ஸ்பர்க்காக அப்பாவிடமோ அல்லது அப்பாவுடைய தோழர்களிடமோ போய் நிற்கக் கூடாது. அப்படி ஒரு சூழலை உருவாக்கிடக் கூடாது என்று தெளிவாக இருந்தேன்.  பொருளாதார ரீதியாக கொஞ்சம் கஷ்டம் இருந்தால் கூட அதையெல்லாம் அவர் சமாளிச்சுட்டார். இப்போ அவரவர்கள் சுயமாக தனித்தனியாக வாழ்க்கை நடத்துவது போல இருக்கு.

  • கவிஞர்  இன்குலாபைத் தேடி காவல் துறையினர் நள்ளிரவில் வந்தெல்லாம் கதவைத் தட்டி விசாரணை என்று அழைத்துப் போயிருக்கிறார்களா? அப்படியான தருணங்களில் எப்படி இருப்பீர்கள்?

செல்வம்:  ஆமாம். அப்படி வந்து நள்ளிரவில் விசாரிப்பார்கள் அப்போ பாப்பா ரொம்ப சின்ன பொண்ணு.  இப்போ ராஜீவ் காந்தி சென்னைக்கு வருகிறார் என்றால் தமிழகத்தில் இப்படியான  போராட்டம் பண்ணக் கூடிய தோழர்களை  விசாரணைன்னு கூட்டிட்டுப் போயிடுவாங்க, குறிப்பா வெள்ளிக்கிழமை  இரவுதான் வந்து கூட்டிட்டுப் போவாங்க . ஏனென்றால் அப்போதான் சனி ஞாயிறு விடுமுறை. பெயில் கிடைக்காது. ஒருமுறை அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அப்போதான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு வந்து வீட்டில் இருக்கோம். நாலு போலீஸ்காரர்கள் வந்து கதவைத் தட்டினார்கள். கமிஷனர் ஆபிசிலிருந்து வருகிறோம். சாதாரண விசாரணைதான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அப்பா வந்துட்டார். சரி நான் போய்  பார்த்துட்டு வந்துடறேன் என்று சொல்லிக் கிளம்பினார். நான் அப்பாவுடைய  தோழர்களுக்கு போன் பண்ணி தகவல் சொல்லிட்டேன். அவர்கள் விவரம் கேட்டுக் கொண்டு, பன்னிரண்டு மணிக்குள் அவன் வந்துடணும். வரலை என்றால் போராட்டம் பண்ணுவோம் என்று சொல்லிவிட்டார்கள். அப்புறம் ஒரு மணி போல அனுப்பி விட்டார்கள். நாங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது எங்களை அவர் தனியா போகச் சொல்லி அனுப்பிட்டார். அவர் கொஞ்சம் தலைமறைவான வாழ்கைதான் வாழ்ந்துட்டு இருந்தார்.

ஆமினா: திடீர்  திடீர்னு அரஸ்ட் பண்றாங்களே என்ற கவலை இருக்கத்தான் செய்யும்.

 

  • இன்குலாபை விசாரிக்க வருகிறபோது குடும்பத்தில் உள்ளவர்களை ஏதேனும் விசாரணை செய்திருக்கிறார்களா?

ஆமினா: இல்லை எனக்குத் தெரிந்து எங்களை ஏதும் விசாரணை செய்தது இல்லை. விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றதும் இல்லை.

செல்வம்:  நான் சிறு வயதாக இருந்தபோது  இன்குலாப் யார் என அடையாளம்  காட்டச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். வீட்டில் ஒரு குடும்பப் புகைப்படம் இருந்தது.அப்போ தங்கச்சி பிறக்கல. தம்பி அப்பா பக்கத்தில் இருப்பார். நான் அம்மா பக்கத்தில் இருப்பேன். அந்தப் புகைப்படத்தைப் பார்த்து ஓ இவர்தான் இன்குலாப்பா என்று அடையாளம் பார்த்துக் கொண்டார்கள்.

ஆமினா: ஒருமுறை சம்மன் கொடுக்க  ஊரப்பாக்கத்துக்கு  ஒரு போலீஸ்காரர் வந்தார். ரொம்ப தூரம் அலைஞ்சு அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்தார். அவரை  உட்கார வைத்துத் தண்ணிலாம் கொடுத்து, காபிலாம் போட்டு கொடுத்தவுடன் வந்தவர், இவ்ளோ நல்லவரா இருக்கீங்க. உங்களுக்கு  எதுக்குச் சம்மன் கொடுக்கறாங்க என்று கேட்டாராம். அப்பா அப்படித்தான்.

  • அப்பாவுடைய கொள்கைகள் உங்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்தது என்று சொல்கிறீர்கள், அதேசமயம் முழுமையாக உங்களது நெறிகளை விட்டுவிட முடியாதபடியும் இருக்கீங்க. இப்போ இந்த  இரண்டுக்கும் இரண்டுக்கும் நடுவில் இருப்பது சிரமமாக இல்லையா ?

ஆமினா: குடும்ப அமைப்புக்குள் மாட்டிக்கொண்ட கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. நினைச்ச இடத்துக்கு நினைச்ச நேரத்தில் போக முடியாது. கணவர் நல்லா புரிந்து கொள்கிறவர் என்றாலும் கூட நாமே  கமிட்டட் ஆகிடறோம் குடும்பத்துக்குள்.

  • இன்குலாப்புடைய  குடும்பத்தில் இருந்து  இலக்கிய வாரிசு எதுவும் உருவாகவில்லையே?

ஆமினா: அப்பா மாதிரி ஆக முடியுமா  என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை  காலப்போக்கில் இந்த நிலைமை மாறலாம்.

  • சடங்கு முறைகளை ஒட்டுமொத்தமாகஎதிர்த்தவர் கவிஞர் இன்குலாப்.  உங்களுடைய திருமணம் சடங்குமுறை  திருமணமா அல்லது சீர்திருத்த திருமணமா?

ஆமினா: இல்லை . அப்படி நடக்கல. பெரிய அண்ணன் திருமணத்தின் போதும் இந்த ஜமாத்தையோ ஆலின்சாவையோ அழைக்க மாட்டேன் என்று சொல்லிட்டார். வீட்டுப் பெரியவரை வைத்துத்தான் திருமணம் பண்ணணும் என்று சொல்லிட்டார். சீர்திருத்த திருமணம்தான். இரண்டாவது அண்ணாவுக்கு வீரமணி அய்யா தலைமையில் சுயமரியாதை திருமணம்தான் பண்ணாங்க. அம்மாவும் பெருசா எதிர்ப்பு  தெரிவிக்கல. அப்பாவுடன் சேர்ந்துதான் செய்தாங்க. அண்ணா உறவுமுறைக்குள்  திருமணம் பண்ணிக்க மாட்டேன் என்பதில் உறுதியா இருந்தார். அண்ணன் முதலில் ஆதரவற்ற பெண்ணைத்தான்திருமணம் பண்ணிக்கணும் என்றுசொன்னார். அதிலும் கொஞ்சம் சிக்கல் இருந்தது. ஆதரவற்றோர் இல்லங்களில் விசாரித்தபோது நீங்க முஸ்லீமா இருக்கீங்க அதனால் பெண் தர மாட்டோம்னு சொல்லிட்டாங்க. அதன் பிறகு திராவிடர் கழகத்தில் அப்பாவுடைய ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர்தான் பிறகு ஏற்பாடு பண்ணிக்கொடுத்தார். அம்மாவும் அப்பாவும் போய் பார்த்து முடிவு பண்ணாங்க.திருமணத்தைப் பொறுத்தவரை அப்பா என்ன சொல்றாங்களோ அதன்படி நடக்கணுமுன்னு தான் அம்மாவும் சொல்வாங்க. என்னுடய திருமணமும் சடங்கு முறையில நடக்கல. தலையில் முக்காடு போடும் பழக்கம் எனக்கு இல்லை. ஆண்  தனியா பெண் தனியா உட்கார வைத்தெல்லாம் திருமணம் பண்ணல. ஊருக்குப் போனாலுமே கூட தலையில்  முக்காடு இல்லாமல் போவதற்குகாகத்தான் திட்டு வாங்குவேன். அதேபோல தெருவில் நடந்து போகும்போது கூட இங்கே நடப்பது  போல கேஷுவலா தான் போவேன்.  ஆண்கள் வந்தால் ஒதுங்கி நடப்பது எல்லாம் கிடையாது. ஆண் நடந்து வராங்க ஒதுங்கி நடக்க மாட்டியா எனத் திட்டுவார்கள். அதனாலே கீழக்கரைக்குப் போவதென்றால் கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்யும். அவங்க இப்படி சொல்வதால் எதிர்ப்பெல்லாம் தெரிவிக்க மாட்டேன்.  ஏனென்றால் எப்போதாவதுதான் ஊரில்  உள்ள உறவுக்காரங்களை பார்க்கப் போறோம். இதுல எதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுகிட்டு என்று அமைதியா போய்டுவேன். என்னுடைய திருமணத்தைக் கூட பொதுவான ஒரு நபரை வைத்துப் பண்ணலாம் என்று சொன்னேன். அப்போ  அப்துல் ரகுமான் அய்யா தலைமையில் எந்தவொரு சடங்கும் இல்லாமல் திருமணம் நடந்தது. திருமணத்தைப் பதிவு பண்ணிக்கொண்டோம். பொதுவாவே  இந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. செய்தது இல்லை.

செல்வம்:  பெயர் வைக்கும்போதே கூ ட  ஜமாத்தில் செல்வம் என்ற பெயரை  ஒத்துக்கொள்ளவில்லை.  செல்வம் என்ற பெயரில்தான் நான் போடுவேன் என்று சொன்னேன். பிறகு ஒரு கட்டத்தில் ஒத்துக்கொண்டார்கள்.

  • தொழுகைகள் செய்வது உண்டா?

ஆமினா: தொழுகையெல்லாம் பண்ண மாட்டேன்.

  • பொதுவாகவே மத அடிப்படைவாதக் கருத்துகள் எல்லாம் பெண்களின் மீதுதான் தமது அதிகாரத்தைச் செலுத்துகின்றன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஆமினா: நிச்சயமாக மனிதநேயத்தை மீறிப் போகுற ஒன்றாகத்தான் இதைப்பார்க்கிறேன்.  மதமோ மதத்துக்கான அடையாளமோ எங்கெல்லாம் முன்னிறுத்தப்படுதோஅங்கெல்லாம் மனிதநேயம் முற்றிலுமாகஅழிந்து போகுது. எல்லா மதத்திலும் பார்த்தால் பெண்கள் மீதுதான் இந்தக் திணிப்பு அதிகமாக இருக்கிறது. நான் மருத்துவராக இருப்பதனால் என்னிடம்  வருகிறவர்களில் பர்தா அணிகிற பெண்களுக்கு நிறைய கோளாறுகள் இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம்  நாம விளக்கிச் சொன்னாலும் கூட இந்த அடையாளம் எங்களுக்குத் தேவை  என்று அவர்கள் தங்களுக்குத் தாங்களே திணித்துக் கொள்கிறார்கள். பர்தா என்பது ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் உதாரணமா சொல்றேன். மற்ற  மதங்களிலும் அவர்களுடைய மத அடையாளங்களை பெண்கள் மீது திணித்துக்கொண்டுதான் இருக்காங்க. மத அடையாளங்களைத் திணிப்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. மனிதம் நிலைக்கணும். மனிதம் தழைக்கணும். அப்பா சொல்வதுபோல, மதம் என் தோள்மேல் கைபோட்டு வரும் வரை நான் அதை ஏற்றுக் கொள்வேன். என் தோள் மேல் உட்கார்ந்து என்னை அழுத்தும்போது அதை நிச்சயமாக எதிர்ப்பேன் என்று சொல்வார். அது மதத்துக்கு மட்டுமல்ல,  நம்  மீது திணிக்கப்படுகிற எல்லாவற்றுக்கும்  பொருந்தும்.

  • அப்பாவின் மீது கருத்தியல் ரீதியாக எதுவும் விமர்சனங்கள் உண்டா உங்களுக்கு?

ஆமினா: அப்பாவின் மேல் பொதுவா எந்த விமர்சனமும் இல்லை. ஆனால் பெண்ணை மட்டும் படிக்க வச்சீங்க. பசங்களை  படிக்க வைக்கல என்று கேட்பேன். அப்பா  வருத்தப்பட்டு சொன்னது என்னவென்றால், நான் படிக்க வைக்கல என்று எப்படிமா சொல்ல முடியும் அவங்க படிக்கலையே  என்று சொன்னார். அப்பா ஷாகுல் ஹமீதாகவும் கவிஞர் இன்குலாபாகவும் என்ன கடமையைச் செய்யணுமோ அதைச் சரியாதான் செய்தார். கடமையிலிருந்து அவர் தவறியதில்லை . இந்தச் சித்தாந்தங்கள் இல்லாத அப்பா எப்படி இருப்பார் என அப்பாவுடைய இறப்புக்குப் பிறகு நான் யோசித்துப் பார்த்திருக்கேன். ஆனால் அப்படி புதுசா எதுவும் தெரியல. எப்படி இருந்தாலுமே இப்படித்தான் வாழ்ந்திருப்பார். மாற்றி யோசிக்கத் தெரியல.  அப்பா ரொம்பவே கோவம் சொல்லியிருக்கார். எடுத்தெறிந்து பேசுவார்என்றெல்லாம் சொல்லியிருக்கார். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மாறிப் போய்ட்டார் என அம்மா சொல்வார். கடைசி ஐந்து வருடத்தில் அப்பா கோவப்பட்டு நான்  பார்த்ததே இல்லை. யாரா இருந்தாலும்  உதவி என்று கேட்டால் உடனே போய் செய்வார் அப்பா. தனக்கு மிஞ்சிதான் தானம் என்று இருக்க மாட்டார். தனக்கு மிஞ்சல என்றாலும் கொடுக்கணும் என்பார். எனக்கும் அதுல ரொம்ப உடன்பாடுதான். அப்பாவுடைய குணமே ஒரு போராட்ட குணம்தான். அப்பா மட்டுமில்ல. எங்க தாத்தாவுமே ஒரு சீர்திருத்தவாதியா தான்  இருந்திருக்கார். அடிப்படைவாதியா இருக்கல, அவரும் கூட (தாத்தா) வைத்தியம்  தான் பார்த்திருக்கார். ஒரு கட்டத்தில் கீழக்கரை பக்கத்துல ஆலந்துரை விட்டு வெளியேறி, உத்திரகோச மங்கை என்னும் பகுதியில் இஸ்லாமியர்கள் மிகக் குறைவாக உள்ள பகுதியில் போய்தான் மருத்துவம் பார்த்திருக்காங்க. அதுவும் சீர்திருத்த காரணங்களுக்குக்காகத்தான் என்று அப்பா சொன்னார். இறை நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதும் தாத்தா மதப்பற்றாளராக இருக்கவில்லை.

  • பள்ளிக் காலத்திலும் சரி, கல்லூரிக் காலத்திலும் சரி. கவிஞர் இன்குலாபின் மகள் என்ற கண்ணோட்டத்துடன் அணுகி இருக்கிறார்களா?

ஆமினா: அப்படி இல்லை. நானும் சொல்லிக்  கொண்டது இல்லை. அப்பாவைத்  தெரியும். ஆனால் கவிஞராக இல்லை.  ஒரு தமிழ்ப் பேராசிரியரின் மகள் என்ற அ அளவில் தெரியும். தமிழாசிரியர்களுக்குவேண்டுமானால் கவிஞர் இன்குலாப் தெரிந்திருக்கும்.அப்பாவுடைய  இறப்பின்போது பலதரப்பட்ட மக்கள்  வந்தாங்க. எனக்கு அறிமுகமாகாதவங்க நிறைய பேர் இருந்தாங்க.

  • அப்பாவுடைய நட்பு வட்டம் குறித்துச்சொல்லுங்களேன்…

செல்வம்: அப்பாவுக்கு நண்பர்கள் தான்  அதிகம். எப்போதும் நண்பர்களோடு தான்  இருப்பார். அப்பா அதிகமா சம்பாதிக்கல. ஆனால் நண்பர்களை நிறைய சம்பாதித்து  வைத்திருந்தார்.

ஆமினா: அப்பாவுடைய நண்பர்களில்  அப்பாவை ரொம்பவும் பண்படுத்தியது என்று பார்த்தால் பி.வி.எஸ். மாமா தான். அவரும் இப்ப இல்லை. ரொம்ப வருத்தமா இருக்கு. ஒருத்தர் இல்லாமல்  இனொருத்தர் இருக்க முடியாதுன்னு  நினைச்சு இரண்டு பேரும் தங்களது பயணத்தை முடிச்சுக்கிட்டாங்களா என்று தெரியவில்லை.

செல்வம்: பி.வி.எஸ். மாமாவைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப அதிசயமா இருக்கும் மற்ற நண்பர்கள் எல்லாரும்  வருவாங்க, பேசுவாங்க. ஆனால் இவர் தான் குடும்பப் பின்னணியில் இருந்து நட்பா  இருந்தார். வீட்டுக்கு வந்தவுடன் ஒருநாள் அம்மா முருங்கை கீரை ஆய்ந்து கொண்டு  இருந்தார். இவரும் கூட உட்கார்ந்து கீரை ஆய்ந்து கொடுத்தார். அப்பா வந்து பார்த்துட்டு என்ன தோழர் நீங்க போய் கீரை ஆய்ந்து கொண்டு இருக்கீங்க என்று கேட்டதும் உட்காருங்க தோழர் நான் முக்கியமான வேலையில் இருக்கேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அம்மா அப்போ உடம்பு முடியாமல் இருந்தார். நாளைக்கே சகோதரியை கூட்டிட்டுப்  போய் மருத்துவமனையில் காட்டுங்க நானும் வரேன். நம்ம மார்க்சியத்தை கொஞ்சம் நிறுத்தி வைங்க என்று  சொன்னார். கம்யுனிசத்தை முதலில் பெண்கள் கிட்ட இருந்து தொடங்கணும் தோழர் என்பார். மார்க்சியத்தையும் கம்யூனிசத்தையும் முதலில் நம்ம பெண்கள் கிட்ட பேசணும் அப்புறம்தான் போராட்டத்துக்கு போகணும் என்று சொன்னார். அதேபோல வீட்டுக்கு வரும்போதெல்லாம் அப்பாவைச்  சாப்டியா என்று கூட கேட்க மாட்டார்.  வீட்டில் உள்ள பெண்கள் முதலில் கூடிய அரசுப் பள்ளிகள் இருந்தால் அதில் சாப்டாங்களா என்றுதான் கேட்பார்.  ஏனெனில் மற்றவர்கள் எல்லாம் சாப்பிட்டு  முடித்த பிறகு மிச்சம் எவ்வளவு இருக்கோ  அதைத்தான் சாப்பிடுவாங்க. அதனால் பெண்கள் முதலில் சாப்பிட்டாங்களா என்று பார்க்கணும் என்று சொல்வார். இப்படி பல விஷயங்களில் அப்பாவை நிறைய மாற்றினார்.  பி.வி.எஸ். மாமா தவிரவும் நிறைய பேர் இருக்காங்க. தமிழன்பன், பா. செயப்பிரகாசம் இப்படி எழுத்தாளர்கள் நெருங்கிய நண்பர்களா இருக்காங்க.

  • தளம் நேர்காணல் ஒன்றில் அரக பள்ளிகளில் என் பிள்ளைகளைப் படிக்க வைத்து விட்டேன் என்கிற வருத்தம் அவர்களுக்கு இருக்கலாம் என்று சொல்ல இருந்தார். அப்படியான வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?

ஆமினா: அரசுப் பள்ளியில் போதிய  அளவுக்குத் தரமான கல்வியைக் கொடுப்பதில்லை என்கிற வருத்தம் அப்பாவுக்கும் இருந்தது. எங்களுக்கும் இருக்கு.

  • உங்களுடைய குழந்தைகளை நீங்கள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் என்பது போன்ற கொள்கை எதுவும் இருக்கிறதா?

ஆமினா: அப்பாவுடைய இந்தக் கருத்தில்  கொஞ்சம் எனக்கு முரண்பட்ட கருத்து உண்டு. ஏனென்றால் நடைமுறை சிக்கல்கள் இருக்கு. என் பையனிடம் நீ தமிழ் படிச்சே ஆகணும் என்று சொல்வேன். ஆனால் அவன் தமிழ் ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொல்வான். அவனுக்கு ஆர்வம் வர வைக்க முயற்சி செய்கிறோம். வீட்டில் தமிழில்தான் பேசணும் என்பதை  எப்போதும் வலியுறுத்துவேன்.

செல்வம்: நல்ல தரமான கல்வியை வழங்கக்  கூடிய அரசுப் பள்ளிகள் இருந்தால் குழந்தைகளைச் சேர்த்து படிக்க வைப்பதில்  எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. ஆனால் அப்படியான சூழல் இங்கு இல்லை என்பதுதான் உண்மை.

ஆமினா: நல்ல புகழ் பெற்ற பெரிய பள்ளியில்தான் படிக்க வைக்கணும் என்று எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை. எங்க படிச்சாலும் நல்லா படிக்கணும். கல்வி என்பது கற்றுக் கொள்வதற்குத் தானே. கல்வி என்பது அறிவு சார்ந்தது. அதைத் தாய்மொழியில் படிக்கும்போது  இன்னும் எளிதாக இருக்கும். நமக்கு நிறைய நம்பிக்கையும் தைரியமும் வரும்.  என் பையனிடம் நான் சொல்வது எங்க படிச்சாலும் நல்லா படிச்சா நல்ல  எதிர்காலம்  இருக்கும். படிப்பது என்பது அறிவை வளர்த்துக் கொள்வதற்காகத்தான். மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறுவதற்காக அல்ல. இதை எப்போதும் மனதில் வைத்துக் கொள் என்பேன்.

  • இன்குலாபுடைய போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல எதுவும் திட்டம் இருக்கிறதா ?

ஆமினா: அப்பாவுடன் எல்லாம் முடிஞ்சு  போச்சு என்று எதுவும் இல்லை. அப்பா அடிக்கடி சொல்வது.. நாம் நமது சித்தாந்தங்களை எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்போம். விருப்பமானதை அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் எனபதுதான்.  மனிதத்தையும் மனிதநேயத்தையும்  எப்போதும் கடைபிடிப்போம் என்பதில் நானும் உறுதியா இருக்கேன். முடிந்த  அளவுக்குப் பிறருக்கு உதவி செய்வது, யாரையும் காயப்படுத்தாமல் இருப்பது  என்பதுதான் என்னுடைய கொள்கை.

  • எந்த மாதிரியான போராட்டங்கள் மூலமா இந்தப் இந்தக் கொள்கையை முன்னெடுக்கமுடியும் என நினைக்கிறீர்கள்?

ஆமினா: பெரிய அளவில் திட்டமெல்லாம்  எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொருத்தரிடமும் போய் இப்படி இருங்க என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. போதனை செய்ய முடியாது. பிரச்சாரம் செய்ய முடியாது. அதைக்  கேட்கிற நிலையிலும் யாரும் இல்லை. நம்ம வாழ்கையில் ஒரு முன்மாதிரியாக நமது  செயல்கள் மூலமா வாழ்ந்து காட்டணும்.  நம்மைப் பார்த்து சிலர் மாறலாம். வீதிக்கு வந்து போராட்டம் செய்வதெல்லாம் என்னுடைய சூழலில் சாத்தியமில்லை. அப்பா விட்ட பணிகளையும் போராட்டங்களையும் எப்படிச் செய்யலாம் என்றால் தொடர்ந்து வாசிப்பது, எழுதுவது இதைச் செய்தாலே போதும். எழுத்து மூலமாகக் கொண்டு வர முடியும். களப்பணி எனக்கு இப்போதைக்குச் சாத்தியமில்லை.

  • நீங்கள் எழுதுவீர்களா ?

ஆமினா: இல்லை . இதுவரை நான் எழுதி எதுவும் வெளியானதில்லை. ஆனால் சில கவிதைகள் எழுதி அப்பாவிடம் காட்டி  இருக்கேன். நல்லா இருக்கு. இன்னும் நல்லா எழுதலாம் என்று சொல்லி இருக்கார். நான் எது எழுதினாலும் அப்பாவிடம்  முதலில் காட்டி கருத்து கேட்பேன். அவரும்  சரியான விமர்சனத்தைச் சொல்வார். முதன்முதலாக இந்தத் தளம் இதழுக்காக அப்பா பற்றி நான் எழுதியதுதான்  அப்பாவின் பார்வைக்குப்  போகாமல் வெளியாகுப் போகுது. எழுத்துப் பூர்வமா சொல்ல முடிந்ததைச் சொல்லிடணும். அப்பாவின் கொள்கைகளில் நான் ரொம்பவும் நம்புவது கல்வியறிவின் மூலமாகத்தான் விடுதலையைப் பெற முடியும். பாடத்திட்டங்களில் . இருப்பதெல்லாம் அதிகாரத்துக்குச் சார்பான கல்வியறிவு. விடுதலைக்கான கல்வியறிவு இல்லை. எப்போது இந்தப் பாடத்திட்டங்களில் விடுதலைக்கான கல்வியறிவினைப் புகட்டுகிறோமோ அதற்காகச் செயல்படுகிறோமோ  அதுவே பெரிய போராட்டம் தான்.

  •  இன்குலாப் கருத்தோட்டம் கடைசிவரை  எப்படி இருந்தது எனக் கூற இயலுமா?

ஆமினா: அப்பாவுடைய சித்தாந்தங்களில் ஒரு மாற்றம் உருவானது எனக்குத் தெரியும். ஆரம்பத்தில் திராவிட கழகத்தில் ஈடுபாடு இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஈடுபாடு கொண்டு இருந்து, பிறகு கீழ் வெண்மணி சம்பவத்துக்குப் பிறகு நக்சல்பாரி இயக்கத்துல  ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் பிறகு ஈழப்போராட்டம் வரையிலுமே அப்பா ஆயுதப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். ஈழப்போரட்டத்துக்குப் பிறகு ஆயுதப் போராட்டம் ஏன் வெற்றி பெறவில்லை என்பது குறித்து சுயவிமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டார். எனக்குத் தெரிந்து கடைசி வரை ஆயுதப்  போராட்டம் தேவையில்லை என்று எந்த இடத்திலும் அப்பா சொல்லல. ஆனால் அதில் விமர்சனங்கள் தேவை என்ற நிலைப்பாட்டை அப்பா எடுத்தார். சுயவிமர்சனம் அவசியம் தேவை என்று  நினைத்தார். விடுதலைப் புலிகள் அமைப்பினையும் விமர்சனங்களோடுதான் அணுகினார். அதேபோல அப்பா  சொல்வது, உனனை ஒருத்தன் அடித்துக்  கொண்டே இருந்தால் எவ்வளவு நாள் வாங்கிட்டே இருப்ப. திருப்பிக் கொடுக்க மாட்டியா என்பார். ஊடகங்களில்  நக்சல்பாரிகள் பற்றி வருகிற செய்திகளை எல்லாம் விமர்சிப்பார். முடியாமல்  இருப்பவர்களை எல்லாம்  நக்சல்பாரிகள் என்று அரஸ்ட் செய்வதெல்லாம் விமர்சிப்பார். போராட்டம் எப்போ வருகிறது அவன் தலைமேல் ஏறி உட்கார்ந்து அழுத்தும்போதுதான்.  தலைமேல் ஏறி உட்கார்ந்து அழுத்தும்போது எப்படி சும்மா இருக்க முடியும்.  மலைவாழ் மக்கள் போராடுகிறார்கள், அவர்களை மாவோயிஸ்டுகள் என்று அடையாளப்படுத்துறாங்க என்றால், ஆக்கிரமிக்கிறீங்க. அதனால் அவங்க போராட வேண்டியிருக்கு என்பார்.  ஆயுதப் போராட்டத்தின் மீதான விமர்சனம் எப்போதும் தேவை என்று அப்பா நினைத்தார். ஆனால் கம்யூனிச சித்தாந்தங்களில் உள்ள தோழர்கள் சிலர் சுயவிமர்சனம் செய்துகொள்ளவில்லை என்கிற வருத்தம் அப்பாவுக்கு இருந்தது.

  • இன்குலாபின் நினைவாக செயல்படுத்த ஏதேனும் திட்டங்கள் உள்ளதா?

ஆமினா:  அப்பாவுடைய  நினைவாக  அப்பா பயன்படுத்திய புத்தகங்களை வைத்து ஒரு  நூலகம் தொடங்கலாம் என்று ஒரு எண்ணம் இருக்கு. அதற்கான ஏற்பாடுகளைச் செய்யனும். இரங்கல் கூட்டத்திலும் அதற்கான அறிவிப்பைச் செய்யணும்.  இது தொடர்பாக தோழர்களிடம் சில ஆலோசனைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கேன். அப்பாவைப் பற்றிய வெப்சைட்  எதுவும் இல்லை,  ஒரு தோழர் அதைக் குறிப்பிட்டு  ஒரு ஃபோரம் போல வைக்கலாம் என்று சொன்னார். அதுவும் எண்ணம் இருக்கு.   நாலகம் அமைப்பதற்கான நிதி, கூடுதலான புத்தகங்கள் மேலும் நூலகம் அமைப்பதற்குத் தேவையான வசதிகள் என்னென்ன தேவையோ அதையெல்லாம் செய்யணும். அதேபோல அப்பா பயன்படுத்திய புத்தகங்கள், பொருட்கள், கைப்பிரதி இவற்றை வைத்து நினைவு இல்லம் ஒன்றும் அமைக்கணும். நூலகம் மட்டும் எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது போல  இருக்கணும். அப்பா அடிக்கடி சொல்வது என்னவென்றால் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும் ஆனால் தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு இடம் கிடைக்காது என்று. அதனால் கலை இலக்கிய பண்பாட்டுக் கழகமாவும் இருக்கணும், தலித் மக்களுக்கு கல்வியறிவு ஊட்டுவதற்கான இடமாகவும்  இருக்கணும் என்று சொல்வார். நூலகத்தை  ஒரு படிப்பகமாக மட்டுமல்லாமல் மாலை நேரப் பள்ளியாகவும் பயன்படுத்தலாம் என ஒரு திட்டம் இருக்கு. அதேபோலகலந்துரையாடல்கள் நடத்துவதற்கான இடமாகவும் அதைப் பயன்படுத்திக்கலாம். இன்னொன்று அப்பாவுடைய பிறந்தநாள்  மற்றும் நினைவு ஒட்டி கவிதை அரங்கம், அறக்கட்டளைப் பொழிவுகள் ஆகியவற்றை நடத்தணும்.


குறிப்பு
2016- ஆம் ஆண்டு   அக்டோபரில் வெளியான தளம் – கலை இலக்கிய இதழில் ( தளம்: 3  இதழ் : 16 அக்  -டிச 2016)  வெளியான கவிஞர் இன்குலாப்பின் மகள் ஆமினா உடனான உரையாடல் வெளியாகி இருந்தது.  அந்த உரையாடலை  கலகம் இணைய இதழில் மறுவெளியீடு செய்வதில் மகிழ்கிறோம். தளம் இதழின் ஆசிரியர் பாரவி அவர்களிடம் உரிய அனுமதிப் பெற்றே இந்த பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது.
  • நன்றி : தளம் – கலை இலக்கிய இதழ் ஆசிரியர் பாரவி மற்றும் கவிஞர் மனுஷி.

 

 

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x