Latest

கஜகேசரி யோகம்


தொழில் வாழ்க்கை
குடும்ப வாழ்க்கை
சிரமதிசையில் இருப்பதால்
மூவாயிரம் ரூபாய் புரட்டிக் கொண்டு
பிரபல ஜோதிடர் ஒருவரைப்
பார்க்கச் சென்றேன்

எப்பொழுதும் குறித்த நேரத்திற்குச்
செல்லும் பழக்கமில்லாத நான்
அன்று மாலை 4:15க்கு
கால் மணி நேரம்
முன்னதாகவே சென்றுவிட்டேன்
அன்று ஞாயிற்றுக்கிழமை
4 1/2 — 6 ராகு காலம்
என்பது மட்டும் முன்னரே சென்றதற்குக்
காரணமல்ல

மூன்று மணி நேர
காத்திருப்பிற்குப் பின்
என்னை அழைத்தார்கள்

ஜோதிடருக்கு வணக்கம் சொல்லிவிட்டு
நான் எழுதிய புத்தகம் ஒன்றை
அவரிடம் கொடுத்தேன்
நல்லது என்றபடி
வாங்கி வைத்துக் கொண்டார்

என் ஜாதகத்தை எடுத்துக்கொடுத்தேன்
எட்டு நொடிகளில்
என் ஜாதகக் கட்டத¢தைப் பார்த்துவிட்டு
ஜாதகத்தை என்னிடமே
திருப்பிக் கொடுத்துவிட்டார்

நான் அமைதியாக
அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

சோவியை உருட்டியவர்
பின் பலன் சொல்லத் தொடங்கினார்

கும்ப லக்னம்
கும்பம் அது கைத்தொடல் என்றார்
குடத்தில் இட்ட விளக்கு என்று பொருளும் சொன்னார்.

மூன்றில் தனித்த குரு
அந்தணன் தனித்து நின்றால்
மெத்த அவதியுண்டு அவனியிலே என்றார்.

நான்காம் இடத்தில் – சுக ஸ்தானத்தில் – செவ்வாய், கேது
பாவம் என்றார்
எனக்குக் கவலை கூடியது

ஐந்தில் சனி
லக்னாதிபதி வலுத்து இருப்பதால்
பெரிய ஆள் என்ற நினைப்பு இருக்கும்

ஆறில் சந்திரன், சூரியன்
ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில்
ஆறாம் இடத்திற்குரிய சந்திரன் ஆட்சிபெற்றதால்
நாகர்கோயிலிருந்து காஷ்மீர் வரை
எதிரிகள் நிறைந்து இருப்பார்கள்.

ஏழில் புதன் சுக்கிரன்
புதன் பரவாயில்லை
அதனால்தான் உங்களுக்கு
எழுத்து, புத்தகமெல்லாம்.
ஆனால் கலைக்காரகன்
சுக்கிரன் பகைவீட்டில்

பத்தில் ஒரு பாவியாவது
இருக்கவேண்டும் என்பது போல
ராகு என்றார்

சற்று நிம்மதியடைந்த
நேரத்தில்
பத்தில் ராகு இருந்தால்
சாண் ஏறினால்
முழம் சறுக்கும் என்றார்
எழுத்து, புத்தகத்தையெல்லாம் விட்டுவிட்டு
செக்கு எண்ணெய் வியாபாரம்
செய்திருந்தால்
இந்நேரம் கோடீஸ்வரன் ஆகி இருப்பீர்கள் என்றார்

எண்ணெய்யும் வழுக்குமே ஐயா
என்று சொல்ல வந்த நான்
அமைதியாக இருந்துகொண்டேன்

அப்போது அவருக்கு தாகமெடுத்ததால்
மாஸ்க்கை கழட்டிவிட்டு
தண்ணீர் அருந்தினார்

இதுதான் சாக்கென்று
ஐயா,
கஜ கேசரி யோகம்
இருக்கிறதே என்றேன்

அண்ணாந்து தண்ணி குடித்துக் கொண்டிருந்தவர்
பட்டென்று என்னைப் பார்த்து
நீ என்ன அரசனா
கஜகேசரி யோகத்தை வைத்துக்கொண்டு
என்ன செய்யப் போகிறாய்
ஆயிரம் யானைகளுக்கு மத்தியில்
வாழ்கிற ஒற்றைச் சிங்கம் – அதுதான் கஜகேசரி யோகப் பலன்
எதிரிகள் இருப்பானேன்
பின்னர் அவர்களை ஒழிப்பானேன்
அது ஒரு அவ யோகம்

எனக்கு அடுத்து என்ன கேட்பதென்று
புரியவில்லை
இருந்தாலும் விடாது
அம்சத்தில் சுக்கிரன் உச்சமாக இருக்கிறதே
நான் சினிமாவுக்கு முயலலாம்தானே என்றேன்
அது ஒரு டம்மி பீஸ் என்றார்.
சுக்கிரன் இருக்கக் கூடாத இடம்
ஏழும் பத்தும்தான் என்று ஒரு பாடலுடன் சொன்னார்
பின் கடக ராசியெல்லாம் ரூல் அவுட் ஆகி
ரொம்ப நாளாயிற்று சார் என்றார்

கிளம்பும் நேரம் வந்துவிட்டது
என்று தெரிந்ததும்
கடைசியாக ஒன்றைக் கேட்டு விடுவோம்
என்று நினைத்து
ஐயா,
லக்னம், குரு, சனி
வர்க்கோத்தமம்
ஆகியிருக்கிறதே என்றேன்

வர்க்கோத்தமத்தை வைத்து
வறுத்தா திங்கப் போகிறாய்
என்பது போல் அமைதியாகப் பார்த்தார்

என் நிலையை விட
அவர் நிலை
எனக்குச் சங்கடமாக இருந்தது

பாவம்
அவரிடம் என் ஜாதகத்தை
காட்டியிருக்க வேண்டாமோ என்று நினைத்துக் கொண்டேன்

இரு கை கூப்பி
நன்றி சொல்லிவிட்டு எழுந்தேன்

வேண்டுமானால்
நீங்கள் பயன்படுத்தும்
சோப்பை மாற்றிப் பாருங்களேன் என்றார்

ஆஃப்பரில் கிடைத்ததென்று
முந்தா நாள் நான் வாங்கி வந்த
பன்னிரெண்டு சோப்புகளை
என்ன செய்வதென்ற
யோசனையுடன் எழுந்து நடக்கத் துவங்கினேன்.