- பிரவாகம்
சரிவர ஞாபகம் இல்லை
பிரிந்த கணமும் நினைவில் இல்லை
இறுதிச் சந்திப்பின் இடமும் நினைவில்லை
சந்திப்புக் காரணமும்…
ஒன்று மட்டும் தெளிவாய் மிகத் தெளிவாய்
நினைவிருக்கிறது…
பொறியியல் படிப்பை
பாதியில் நிறுத்திக் கொள்வதாய்
அவன் சொன்னது…
படிப்பு ஏறவில்லை என்பதாலல்ல
பொருளாதாரப் பிரச்னை இருந்தாலும்
காரணம் அதுவல்ல
நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது
அவன் பேசுவது அவ்வளவு எளிதாய்
பிடிபடாமலானது
தேகமெல்லாம் சமுத்திர மயமாய் அவன்..
திடீரென கல்லூரி வருகை
மாயமானது
அப்போது சரியாய் கேட்டுக் கொள்ளவில்லை
போகுமுன் எங்களிடம் நிச்சயம் ஏதோ
சொல்லித்தானிருப்பான்…
தேர்வு வந்தது
சொல்லப் போனால் நாங்கள் எவருமே
அவன் இருப்பு இல்லாததை
அவ்வளவாய் பொருப்படுத்தவில்லை
` ஓரிரண்டாண்டுகள் அவ்வப்போது எங்களிடையே
அவன் பேச்சு வரும்
இப்படியே….. நாட்களின் வேக நழுவல்
ஒரு நாள் செய்தித்தாளில்
பளீரென அவன் முகம்..
நேற்று என்கௌண்டருக்குள்ளாகி…
அதன் பக்கத்திலேயே ஒரு செய்தி-..
ஒரு மெடிகோ காணாமல் போய் விட்டான்.
- எதிர் கட்சியில் அமர்ந்த கவிஞன்
யுத்தம் முடிந்து விட்டது
சிப்பாய்கள் உறங்கி விட்டனர்
வெற்றி சாதித்து விட்டோமென
மக்கள் பரவசத்தில் மூழ்கியுள்ளனர்
விழுந்தும் எழுந்தும் நடந்தவர்கள்
கொடிகளை உயர்த்திக் கோஷமிட்டபடி
லாப நஷ்டங்களுக்குப் பழகி விட்டவர்கள்
கனவுகளில் மிதந்தபடி…
அடி வாங்கியவர்களைப் புறம் தள்ளியபடி
பிழைக்கத் தெரிந்தவர்கள்
பூச்செண்டுகள் வாங்கிக் குவிக்கிறார்கள்
தோரணங்கள் கட்டியபடி
ஊரெங்கும் அலைந்த கவிஞனுக்கு
நள்ளிரவில் பசியான பசி
எவரிடம் அணுகினாலும்
பரிசுக் கோலாகலத்தில் மூழ்கி
ஒருவரேனும் திரும்பிப் பார்த்தபாடில்லை
சிதறிய நாட்குறிப்புப் பக்கங்களை
பொறுக்கிக் கொண்டு
குதிரைகள் தப்பித்துச் சென்ற
லாயம் அருகில் ராத்திரியைக் கழித்தான்
கண்ணாடி உடைந்த கைக் கடியாரத்தை
முத்தமிட்டபடி…
யுத்தத்திற்கு முன் வாசித்துக் காட்டிய
வாசகங்களை ஒரு முறை
வாசித்துக் கொண்டான்
எதிரிகளை அழித்த பின்பும்
அதே கவிதை அவசியமானதற்காக
மறுபடியும்
எதிர் கட்சியில் அமர்ந்து கொண்டான்.
தெலுங்கு மூலம் : ஆஷா ராஜூ.
தமிழில்: சாந்தா தத்
மிகவும் அருமையான கவிதை வாழ்த்துகள்