போற்று பெண்ணை

வாசிப்பதற்கு தேவை1 நிமிடங்கள், 25 நொடிகள்

எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா
அரையடிக்கு)

வீடுகளே கோயிலென்று வினைக ளாற்றி
விதைத்தனரே யெங்குமன்பை வீரப் பெண்கள்.
மாடெனுஞ்செல் வந்தேடி மதிம யங்கா
மங்கையரும் மாண்பதனைப் போற்றிக் காத்துக்
கேடதனைப் பரிசாகப் பெற்ற போதும்
கேள்வியெதும் கேட்காமல் பொறுத்தே நின்றார்
நாடெதுவும் நங்கையர்க்குப் பெரிதாய்ச் செய்ய
நற்பலனும் கிடைக்கவில்லை இதுநாள் மட்டும்.

ஆதிமங்கை இயற்கைநெறி தொழுது பூமி
அத்தனையும் பேணிநிதம் அணைத்துக் காத்து
நீதிநெறி மாறாமல் நிலையாய் வாழ்ந்து
நிம்மதியைத் தனக்குள்ளே தேடி வாழ்ந்தாள்
பாதையதைத் தெளிவாகத் தெரிவு செய்துப்
பண்புடனே பாங்காக வாழ்ந்து காட்டி
சோதனையைத் தெய்வத்தின் துணையால் வென்று
சொர்க்கமதைப் புவியினிலே படைத்துக் கொண்டாள்.

தன்னலமே யில்லாத  அன்பை எங்கும்
தடையின்றிப் பகிர்ந்தளிக்கும் பெண்ணின் தாய்மை
இன்னல்பல தாங்கிநின்றும் ஏற்றங் கொண்டு
இல்லறத்தை உயர்த்தவவள் படும்பா டெல்லாம்
மின்னலென மறைந்துவிடும் மகவைக் கண்டால்
மீண்டுமவள் பிறந்திடுவாள் சேயைக் காக்க.
அன்னையவள் பெருமையினைச் சொல்வ தற்கே
அவனியிலே சொற்களில்லை அறிவீர் தானே.

ஆதலினால் கல்விதனைக் கண்ணாய்க் கொண்டு
அனைத்துயிரின் துன்பத்தை அழகாயப் போக்கி
மேதினியில் மகிழ்வோடு வாழ்வ தற்கு
மேன்மையுடன் பெண்ணினத்தைப் பாது காத்துப்
பாதியெனக் கொண்டிடுவீர் இன்ப துன்பம்
பாகுபாடு தேவையில்லை யினிமேல் பாரில்.
பேதங்கள் களைந்தவாழ்வில் நிறைவு பெற்று
பேரின்பம் பெறநாளும் போற்றுப் பெண்ணை.


– மதுரா

எழுதியவர்

மதுரா

புனைப்பெயர் மதுரா. இயற்பெயர் தேன்மொழி ராஜகோபால். சொல் எனும் வெண்புறா, பெண் பறவைகளின் மரம் என்ற இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. பிராயசித்தம் என்ற சிறுகதை தொகுப்பும் வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். இவரது படைப்புகள் வெகுஜன பத்திரிகைகள், மின்னிதழ்கள், இணைய இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *