
பரிசும் தண்டனையும்
“ஏன் சரண், இப்படிப் பாடப் புத்தகமும் படிக்காமல், கதை புத்தகமும் படிக்காமல், அப்படியே ‘ஃப்ரீ ஃபயர்’ ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டும், ‘பி.டி.எஸ்.’ பாடல்களை ‘யூட்யூப்’ மூலமாகக் கேட்டுக் கொண்டும் மட்டும் காலத்தை ஓட்டினால் வாழ்க்கை என்னவாகும் என்று யோசிக்கவே மாட்டாயா. பத்து வயது வரைக்கும் தான் நீ குழந்தை. இப்போது உனக்குப் பதிமூன்று வயது. பெரிய பையனாகி விட்டாய் என்பதை எப்போது உணர்வாய்”, என, குமார் தன் ஒரே மகனிடம், இந்த இரண்டு வருடங்களாகத் தான் வழக்கமாகச் சொல்லும் அதே அக்கறை, அன்பு என்ற சாயங்களில் தோய்த்த அறிவுரை எனும் அஸ்திரத்தை வீசினான்.
சரண், “படிக்கிறேன், அப்பா”, என்றான்.
“ஆமாம். இப்படிச் சொல்கிறாயே தவிர அதைச் செயல்படுத்துவதில்லை. நான் ஏற்கனவே சொன்னது தான். வாழ்விடம் நீ பரிசுகளைக் கேட்டால் அது பரிசுகளைத் தந்து அவற்றால் உன்னை வழி நடத்தும். இல்லை தண்டனைகள் மூலம் தான் ‘நான் செயலூக்கம் கொள்வேன்’ என மானசீகமாக நீ நம்பினால் அது தான் உனக்குத் தொடர்ந்து கிடைக்கும்.”
‘இதற்கெல்லாம் எந்த பதிலும் சரியானது இல்லை’, என்பதை அனுபவத்தில் உணர்ந்த சரண் எதுவும் பேசாமல் தன் தந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சரி, நீ தான் ‘டிஜிட்டல்’ யுகத்தைச் சேர்ந்தவன் ஆயிற்றே என ‘அமேசான் கிண்டில்’ வாங்கிக் கொடுத்தால், அதிலும் எதுவும் படிக்க மறுக்கிறாய். அட, ஒரு ‘காமிக்ஸ்’ கூடப் படிக்க விரும்பாத ஒரு பையனை என்ன செய்வது.”
சரண், இது மாதிரியான தருணங்களைச் சமாளிக்க என, மழுங்கிப் போன ஒரு சுய-மாயப் பார்வையைத் தன் முகத்தில் கொண்டு வரப் பழகியிருந்தான். அந்தக் கவசத்தையே தற்போதும் அணிந்திருந்தான்.
“படித்தால் பரிசு என அறிவித்திருந்தேன். நீ படித்து முடிக்கும் புத்தகத்தின் விலை என்னவோ அதை அப்படியே உன் சேமிப்பு உண்டியலுக்குத் தந்து விடுவேன் எனச் சொல்லியிருந்தேன். அப்படியும் நீ தூண்டப்படவில்லை. எனவே எனக்கு வேறு வழியில்லாமல் இந்த தண்டனையை உனக்குத் தர வேண்டி வருகிறது.”
சரணின் முக பாவம் இப்போது சற்றே பயந்த மாதிரி மாறியது. அது நடிப்பா இல்லை நிஜமா என உடனடியாக எதுவும் சொல்ல முடியவில்லை.
“இந்த வார இறுதியின் இரண்டு நாட்களும், என் சிறிய நூலக அறையில் உன்னை வைத்துப் பூட்டி விடப் போகிறேன். வேளை தவறாது உனக்கு உணவு கிடைக்கும். அந்த அறையை ஒட்டியே இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் குளியலறை மற்றும் கழிப்பறைகளை நீ உபயோகப்படுத்திக் கொள்ளலாம். புத்தகங்கள் தவிர வேறு எதுவும் உனக்குக் கிடைக்காது. ஏதாவது அவசர நெருக்கடி என்றால் ஒழிய நீ வெளியே வரவே கூடாது. பார்க்கலாம் நீ என்ன செய்கிறாய் என. உன் கைகள் சலிப்புடன் நடுங்கிய படியே ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வாசித்து விடாதா என்ன”.
சரண் இப்போது கதறத் தொடங்கினான், “அப்பா, அப்பா, வேண்டாம் அப்பா, நான் படிக்கிறேன்.”
“அதற்குத் தான் உனக்கு இந்த இரண்டு நாள் ராஜ ‘ஜெயில்’ வாழ்க்கை என் கண்ணே. ‘ஜாலி’யாகப் படி.”
நூலக அறைக்குள் தன் மகனை விட்டுக் கதவைச் சாத்தி விட்டு வந்து அமர்ந்தான் குமார். ‘ஏதாவது தவறு செய்கிறோமோ’, என யோசித்துப் பார்த்து, ‘அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே, இது சும்மா ஒரு அதிர்ச்சி வைத்தியம் தானே’, எனச் சமாதானம் கொண்டான்.
வார இறுதியில் நடக்க இருக்கும் தன் தோழியின் மகளின் பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு வெளியூர் சென்றிருக்கும் அவன் அம்மா திரும்பி வருவதற்குள் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் தன் மகனுக்கு நிகழ்ந்து விடாதா என்ன என ஒரு நம்பிக்கை அவனுக்கு. அது வெள்ளிக்கிழமை சாயங்காலம். தன் மனைவி தொலைபேசியில் அழைத்த போது இந்த விஷயத்தைச் சொன்னான்.
“பார்த்து, பையனை பயமுறுத்தி விடாதீர்கள்”, என்றாள் அவன் மனைவி.
வெள்ளி இரவு தனக்குத் தரப்பட்ட உணவைச் சரியாகச் சாப்பிடாமல் கோபத்தில் கொஞ்சம் நேரம் அழுது விட்டுப் பிறகு தூங்கி விட்டான் சரண். அடுத்த நாள் காலை அவனுக்குத் தரப்பட்ட உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டிருந்தான். எந்தப் புத்தகத்தையும் தொட்டுப் பார்க்கக் கூட இல்லை. தன் தந்தையிடம் கெஞ்சிப் பார்த்தான், கொஞ்சிப் பார்த்தான். ம்ஹூம். குமார் மசிவதாக இல்லை.
சனிக்கிழமை மதிய உணவிற்குப் பிறகு சரண் படுத்துத் தூங்கிவிட்டதைக் கவனித்த குமார், தன் மகன் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை எப்படியும் தொடங்கி விடுவான் எனக் கொஞ்சமேனும் தான் கொண்டிருந்த நம்பிக்கையைக் கைவிடத் தொடங்கினான்.
ஆனால் சாயங்காலம் தேநீர் வேளையில் அறைக்குள் எட்டிப் பார்த்த போது, தன் மகன் கையில் புத்தகம் இருந்ததைக் கண்டு தான் அடைந்த அதிர்ச்சியை விட அவன் கையிலிருந்த புத்தகத்தைக் கண்டு அடைந்த அதிர்ச்சி தான் அதிகமாக இருந்தது. அவன் வாசித்துக் கொண்டிருந்தது – “எ டே ஃபெர்மென்டட் இன் டைம்’ – ‘காலத்தில் நொதித்த ஒரு தினம்’ என்ற ஆங்கிலப் புத்தகம். அது கவிதையா, கதையா, கட்டுரையா என வகைப் படுத்த முடியாத, ‘ஹெடோனிசம்’ ஒரு முக்கிய இழையாக ஓடும், மறைத்து வைக்கப்பட்ட நுட்பமான தத்துவ விசாரங்கள் பொதிந்த ஒரு குறுங்காவியம்.
அது அவன் வயதுக்கான புத்தகம் இல்லை. இருக்கும் கதை புத்தகங்களையெல்லாம் விடுத்து அவன் இதை ஏன் தேர்ந்தெடுத்தான். ஒருவேளை அதன் வசீகரமான முன்னட்டைப் படம் காரணமாக இருக்குமோ. ஒரு மணற்கடிகாரம் – அதற்குள் மணலுக்குப் பதில் சிவப்பு வைன் சொட்டுவது போன்ற ஓவியம் மற்றும் ஒளிப்படம் கலந்த முன்னட்டை வடிவமைப்பு கொண்டது அந்தப் புத்தகம்.
‘சரி, எதையாவது படிக்கிறான். அவன் ஆங்கிலச் சொல்லகராதியாவது விரிவுபடும். அந்த விதத்தில் இந்த தண்டனை ஒரு பரிசு தான்’, எனக் குமார் எண்ணிக் கொண்டான்.
ஞாயிறு முழுவதும் சரண் ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்து அதன் ஏதாவது ஒரு பக்கத்தை வாசித்துக் கொண்டிருந்ததை அவ்வப்போது கவனிக்க முடிந்தது. இப்படியே அன்று ஐந்து அல்லது ஆறு புத்தகங்களையாவது சரண் புரட்டிப் பார்த்திருப்பான் போலத் தெரிந்தது. பரிசோதனை, வெற்றி போலத் தான் தெரிந்தது.
ஞாயிறு சாயங்காலம், குமார், தன் மனைவி வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பு, சரண் இருந்த அறையின் கதவைத் திறந்து அவனுக்கு விடுதலை அளித்தான். வெளியே வந்த சரண் முகத்தில் இருந்த உணர்ச்சி, கோபமா, அதிர்ச்சியா, குறும்பா என எளிதாகச் சொல்ல இயலாதபடி இருந்தது.
“என்ன, அப்பா மேல் கோபமா”.
“நீங்களும் நன்றாகத் தான் எழுதுகிறீர்கள் அப்பா”.
“என்ன சொல்கிறாய். என் புத்தகமா? நான் எழுதிய எதைப் படித்தாய்?”.
“2001 வருடத்தின் உங்கள் நாட்குறிப்புத் தொகுப்பு. சரி, நான் விளையாடப் போகிறேன். அம்மா வந்தால் கூப்பிடுங்கள்”, எனத் தன் மாறாத முகபாவத்துடன் உடனே வெளியேறினான் சரண்.
‘என் பழைய நாட்குறிப்புப் புத்தகங்கள் என் நூலகத்திலா ஒளிந்து கிடக்கின்றன’. குமார், சொல்ல வார்த்தை இல்லாமல் திகைத்துப் போய் செய்வதறியாது அப்படியே தன் இருக்கையில் அமர்ந்தான்.
Average Rating